Statcounter

Friday, February 20, 2026

வள்ளுவர் பார்வையில் அறம்

 

வள்ளுவர் பார்வையில் அறம்

முனைவர் இர. பிரபாகரன்

முன்னுரை

பல்வேறு நாகரிகங்களில், சிந்தனையாளர்கள் ஓர் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதன் பொருள் என்ன என்பதை விளக்க முயன்றுள்ளனர். கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் (Aristotle 384 – 322 கி.மு), சுயக்கட்டுப்பாடு (self-control), நெஞ்சுரம் (courage) மற்றும் மிதவாதம் (moderation) போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் மூலம் நற்பண்பு வளர்க்கப்படுகிறது என்றும், இந்தக் குணங்கள் மனிதர்கள் சிறப்பாக வாழவும் செழிக்கவும் உதவுகின்றன என்றும் நம்பினார். ஜெர்மானியத் தத்துவஞானி இம்மேனுவெல் கான்ட் (Immanuvel Kant 1724-1804 கி.பி.), தனிப்பட்ட நன்மைக்காகவோ அல்லது தண்டனைக்கு அஞ்சியோ அல்லாமல், ஒரு செயல் சரியானது என்பதற்காகவே தனது கடமைகளைச் செய்வதில்தான் நற்பண்பு அடங்கியுள்ளது என்று வாதிட்டார். ரோமானிய தத்துவஞானியான மார்க்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius 161-180 கி.பி.), நற்பண்பு என்பது உள் ஒழுக்கம் (inner discipline), ஒருவரின் ஆசைகளின் மீதான கட்டுப்பாடு, மற்றும் துன்பத்தின் போதும் பகுத்தறிவின்படி வாழ்வது ஆகியவற்றைக் குறிக்கிறது என்று கற்பித்தார். சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸ் (Confucius 551 – 479 கி.மு.) அன்றாட உறவுகளில் நற்பண்புக்கு முக்கியத்துவம் அளித்து, கருணை, மரியாதை மற்றும் முறையான நடத்தை ஆகியவை சமூக நல்லிணக்கத்திற்கு அவசியமானவை என்று கருதினார். வைதிக மதத்தைச் சார்ந்த மனு என்பவர் மனுஸ்மிருதியில் கூறும் தர்மம் என்பது அனைவருக்கும் பொதுவானதன்று. அது ஒவ்வொரு குலத்துக்கும் வெவ்வேறு தர்மத்தைப் போதிக்கிறது.

திருக்குறளில் திருவள்ளுவர் கூறும் அறம் பற்றிய கருத்து, இந்தச் சிந்தனையாளர்களின் கருத்துகளுடன் சில ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், முக்கியமான வழிகளில் அவர்களிடமிருந்து வேறுபடுகிறது. அரிஸ்டாட்டிலைப் போலவே, வள்ளுவரும் தன்னடக்கம் நல்லொழுக்கம் ஆகியவை தேவை என்று கருதுகிறார்; கன்ஃபூசியஸைப் போலவே, வள்ளுவர் அன்பு, நட்பு, அருள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்; மேலும் மார்க்கஸ் அரேலியஸைப் போலவே, வள்ளுவர் அக ஒழுக்கம், மன வலிமை ஆகியவற்றை வலியுறுத்துகிறார். இருப்பினும், காண்டின் கடுமையான விதி அடிப்படையிலான ஒழுக்கவியல் அல்லது மதக் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைகளைப் போலன்றி, வள்ளுவர் அறத்தை அன்றாட வாழ்வில் வேரூன்றிய நல்லொழுக்காமாகக் கருதுகிறார். வள்ளுவரின் அறத்தைப் பற்றிய கருத்து மனு என்பவர் மனுஸ்மிருதியில் கூறும் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வள்ளுவர் மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுதான் அறம் என்று கூறுகிறார். வள்ளுவர் கூறும் அறம் உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்துக்கும் ஏற்றது. இக்கட்டுரை, வள்ளுவர் கூறும் அறம் என்னும் ஒழுக்க நெறியைப் பற்றியும், மனிதர்களின் நல்வாழ்கைக்கு அது எப்படிப் பயனுடையதாக உள்ளது என்பதையும்  விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

இல்வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகள்

இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில், இல்வாழ்க்கையில் இருப்பவன் தன் மனைவி, மக்கள், பெற்றோர் ஆகிய மூவர்க்கும் துணையாக இருக்க வேண்டும் என்றும், துறவிகள், வாழ்க்கையை அனுபவிக்க முடியாதவர்கள், வாழ்க்கைப் பாதையிலிருந்து தவறியவர்கள், இறந்த முன்னோர்கள், தெய்வம், விருந்தினர்கள், சுற்றத்தார் ஆகியயோருக்கும் துணையாக  இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.  அது மட்டுமல்லாமல் தன்னையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது இலவாழ்க்கையில் இருப்பவனின் கடமை என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

கற்பு நெறியிலிருந்து தவறினால் அது தன் கணவனுக்கும் தன் குடும்பத்துக்கும் தான் இழைக்கும் தீமை என்பதை உணர்ந்து,  மனைவி கற்பிற் சிறந்தவளாக, கணவனுக்கும் குடும்பத்திற்கும் ஏற்றவளாகக் குடும்பத்திற்குப் பெருமை சேர்ப்பவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் காண்கிறோம்.

தம் குழந்தைகளின் மழலைச் சொற்கள் குழலிசையையும் யாழிசையையும்விட இனிமையானது என்றும் அவர்களின் சிறுகை அளாவிய கூழ் அமிழ்திலும் இனியது என்றும் உணர்ந்து, அவர்களை அன்போடு அரவணைத்து, நல்ல முறையில் வளர்த்து, அவர்களை அவையில் முந்தி இருக்கச் செய்வது தந்தையின் கடமை என்பதும், குழந்தைகள் அறிவோடும் ஆற்றலோடும் சிறந்திருப்பதைக் காண்பவர்கள் அவர்களைப் பெற்ற தந்தை அத்தகைய சிறப்பான குழந்தைகளைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று வியக்கத்தக்க வகையில் அந்தக் குழந்தைகள் இருப்பது அவர்களின் கடமை என்பதும் மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் நாம் காணும் கருத்துகள்.

விருந்தினர்களைப் பேணி, இனிய சொற்கள் பேசி, நடுவுநிலைமையிலிருந்து தவறாமல், அடக்கத்தோடும், ஒழுக்கத்தோடும், பிறனில்விழையாமல், அழுக்காறுகளை நீக்கி, பொறுமையோடு, புறங்கூறாமல், பயனில்லாத சொற்களைப் பேசாமல், தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சி, மற்றவர்களும் தம்மைப் போன்றவர்கள் என்பதை மனத்தில்கொண்டு அவர்களுக்கு அவர்கள் வந்து கேட்காமலேயே உதவிகள் செய்து, இல்லையென்று இரப்போர்க்குக் கரவாமல் அவர்களிடமிடருந்து எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்து, புகழோடு வாழ்வது இல்வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமை என்று வள்ளுவர் கூறுகிறார். மேலும், தொடர்பில்லாதவர்கவளிடமும் பிற உயிரினங்களிடமும் பாசத்தோடும் பரிவோடும் இருந்து, புலால் உண்ணுவதைத் தவிர்த்து, பிறர் பொருளை விரும்பாமல், எவரிடமிருந்தும் எதையும் திருடாமல், திருட நினைக்காமல், வாய்மை பேசி, சினத்தைத் தவிர்த்து, எவருக்கும் எந்தத் தீமையும் செய்யாமல், எவ்வுயிரையும் கொல்லாமல் வாழ்வதும் இல்வாழ்க்கையில் இருப்பவனின் கடமை என்பதையும் திருக்குறளில் காண்கிறோம்.  

துறவியாக வாழ்பவர்களுக்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகள்

இல்வாழ்க்கை வாழ்பவர்களுக்குரிய கடமைகளில், குடும்ப வாழ்க்கைக்குத் தொடர்புள்ள ஒழுக்கங்களையும்,  ஈகை ஒப்புரவு ஆகிய ஒழுக்கங்களையும் தவிர மற்ற அனைத்தும் துறவிகளுக்கும் உரிய ஒழுக்கங்கள்தாம். மேலும், துறவியாக வாழ்பவர்கள், தமக்கு உற்ற துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு, எவ்வுயிர்க்கும் இன்னல் விளைவிக்கமல், தவத்தை மேற்கொண்டு, தகாத ஒழுக்கத்தைத் தவிர்த்து, வாழ்க்கையும் பொருளும்  நிலையில்லாதது என்பதை உணர்ந்து, மெய்ப்பொருளாகிய நிலயானபொருளை அறிந்து, பற்றுக்களை அறுத்துப் பிறவாத நிலையை அடைந்து இடையறாத இன்பம் அனுபவிப்பதைக் குறிக்கோளாகக்கொண்டு வாழ வேண்டும் என்பது வள்ளுவர் துறவிகளுக்குக் கூறும் ஒழுக்க நெறி.

 

அல்லவை நீக்கி நல்லவை செய்தல்

இல்வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும் துறவியாக வாழ்பவர்களுக்கும் வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளை ஆராய்ந்தால் அவை அனைத்தும் தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களையும் சொற்களையும் தவிர்த்துத் தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்வதும், சொற்களைப் பேசுவதும் வள்ளுவர் கூறும் ஒழுக்க நெறிகளின் மையப்பொருளாகத் தோன்றுகிறது. அவ்வாறு அல்லவை நீக்கி நல்லவை செய்ய வேண்டுமானல் மாசுகள் இல்லாமல் மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் அறிவுரை. மனத்தில் மாசுகள் இல்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்வதே அறம் என்றும் மற்றவை அனைத்தும் வெறும் ஆரவாரம் என்று அறத்துக்கு வரையறை அளிக்கிறார் வள்ளுவர். மனத்தில் மாசில்லாமல் இருப்பது அறம் என்று கூறும் வள்ளுவர், மாசுகள் எவை என்பதற்குச் சில உதாரணங்களையும் சுட்டிக் காட்டுகிறார். அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் ஆகிய நான்கும் மாசுகள் என்றும், மனத்தில் இவை நான்கும் இல்லாமல் இருப்பது அறம் என்றும் வள்ளுவர் விளக்கம் அளிக்கிறார்.

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
                                                     (குறள்  34)

 

      அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

      இழுக்கா இயன்றது அறம்.                  (குறள் 35)

 

மனிதன் செய்கிற செயல்களும் பேசுகிற சொற்களும் அவனுடைய மனநிலையின் பிரதிபலிப்பாகவே அமைகின்றன. மனத்தில் உருவாகும் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆசைகள்தான் அவனது நடத்தைக்கு அடித்தளமாக இருக்கின்றன. மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தால் செயல்களும் சொற்களும் நல்லவையாக அமையும்; மனம் குழப்பமடைந்தால் அதுவே தவறான செயல்களுக்கும் இன்னாச்சொற்களுக்கும் வழிவகுக்கும். ஆகவே, மனிதனின் வாழ்வை வழிநடத்துவது அவனுடைய மனமே ஆகும். ஒருவன் தன் மனத்திலிருந்து அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் முதலிய  மாசுகளை நீக்கிவிட்டால், அவனால் தன் செயல்களாலும் சொற்களாலும் தீமை செய்ய முடியாது என்பது வள்ளுவரின் கருத்து. உதாரணமாக, ஒருவன் இன்னாச்சொல் பேசாதவனாக இருந்தால், பொய்பேசுதல், புறங்கூறுதல், பயனில சொல்லுதல், கடுஞ்சொற்கள் கூறுதல் ஆகியவற்றால் தான் பிறருக்கு விளைவிக்கும் தீமைகளைத் தவிர்ப்பான். சினத்தால் ஒருவனின் இரத்த அழுத்தம் அதிகாமாகிறது. இரத்த அழுத்தம் அதிகமானால், இதயம், மூளை, சிறுநீரகம் முதலிய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஒருவன் சினம் கொண்டால், அது அவனுக்குத் தீமை விளைவிப்பது மட்டுமல்லாமல், சினத்தால் அவன் செய்யும் செயல்களும் சொல்லும் சொற்களும் பிறருக்குத் துன்பம் தரும். ஆகவே, சினத்தைத் தவிர்த்தால், அதனால் தனக்கும் பிறருக்கும் நேரிடும் துன்பங்களைத் தவிர்க்கலாம். அழுக்காறு அவா போன்ற மாசுகளால், பிறர் பொருளைக் கவர வேண்டும் என்ற எண்ணமும், பிறர் பொருளைத் திருடவும் நேரிடும். ஆகவே அழுக்காறைத் தவிர்த்தால், வெஃகுதல், களவு போன்ற செயல்களால் தனக்கும் பிறருக்கும் நேரிடும் துன்பங்களைத் தவிர்க்கலாம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலிய மாசுகளை மனத்திலிருந்து நீக்கி, மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால், அவற்றால் தனக்கும் பிறருக்கும் ஏற்படும் தீமைகளைத் தவிர்க்கலாம்.

 

மனத்தில் உள்ள மாசுகளை எப்படி நீக்குவது?

மனத்தில் உள்ள மாசுகளை நீக்குவதற்கு வள்ளுவர் ஓர் அறிவுரை கூறுகிறார். உடலை நீர் தூய்மைப் படுத்துவதுபோல் வாய்மை உள்ளத்தை தூய்மை செய்யும் என்பது வள்ளுவரின் அறிவுரை.

 

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
                (குறள் 298)

உள்ளதை உள்ளவாறு கூறுவது உண்மை. நாம் பேசும்பொழுது, நம்முடைய சொற்களால் மற்றவர்க்கு எந்தத் தீமையும் விளையாமல் இருக்குமானால் அது வாய்மை என்பது வள்ளுவர் வாய்மைக்குக் கூறும் இலக்கணம். உதாரணமாக, ஒருவனைக் கொலை செய்வதற்காக ஒரு கொலைகாரன் அவனைத் துரத்திக்கொண்டு  வரும்பொழுது அவன் உங்கள்  வீட்டில் தஞ்சம் அடைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனைத் துரத்திக்கொண்டுவந்த கொலைகாரன் உங்களிடத்தில் வந்து, ”இங்கு ஒருவன் வந்து உங்கள் வீட்டில் ஒளிந்துகொண்டிருக்கிறானா?” என்று கேட்டால், நீங்கள், “அவன் இங்கு வரவில்லை.” என்று சொன்னால், உங்கள் சொற்களால் எவருக்கும் எந்தத் தீங்குமில்லை. ஆகவே, அது வாய்மை.  நீங்கள், “ஆம். அவன் இங்குதான் இருக்கிறான்.”  என்று கூறினால் அது உண்மை. நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு கூறுவது உண்மை. மற்றவருக்கு  எந்தத் தீங்கும் விளைவிக்காத சொற்களைக் கூறுவது வாய்மை.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.                                               (குறள் 291)

உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு நீர் பயன்படுகிறது. ஆனால், உடல் தூய்மையாக இருக்க வேண்டுமானால் நாள்தோறும் நீரைப் பயன்படுத்திக் குளிக்க வேண்டும். அதுபோல், மனம் தூய்மையாக இருக்கவேண்டுமானால் எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் வாய்மை பேசவேண்டும். பயம், குற்ற உணர்ச்சி, தன்னையே ஏமாற்றிக்கொள்வது ஆகியவற்றிலிருந்து வாய்மை பேசும் பழக்கம் மனிதனை விடுவித்து, அவனுடடைய மனத்திற்கு அமைதியும் தெளிவும் அளிக்கிறது. வாய்மை பேசுவது பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதால் அது அகங்காரத்தைக் குறைத்து, ஒழுக்கத் தெளிவை வளர்க்கிறது. வாய்மை பேசுவது மனத்திலுள்ள முரண்பாடுகளை அகற்றி, எண்ணம்–சொல்–செயல் ஆகியவற்றிற்கு இடையே ஒற்றுமையை அளிப்பதால், வள்ளுவர் வாய்மை பேசுதல் மனத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்று கூறுகிறார். 

ஆகவே, மனிதன் எப்பொழுதும் வாய்மை பேசினால், அவன் மனந்தில் மாசுகள் இரா. மனத்தில் மாசுகள் இல்லையென்றால், மனிதன் தீய செயல்களைச் செய்ய மாட்டான்; தீய சொற்களைப் பேச மாட்டன். அதாவது செயலாலும் சொல்லாலும் எவருக்கும் தீங்கிழைக்க மாட்டான் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

 

மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், பிறருக்கு நன்மை செய்ய முடியுமா?

மனிதனின் உயிரும் உடலும் இணைந்து இயங்குகிறது என்றும் அன்பில்லாத மனிதன் தோலால் போர்த்தப்பட்ட எலும்பு மட்டுமே என்றும் அன்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.                    (குறள் 73)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.                     (குறள் 80)

உயிரோடு இருக்கும் எந்த மனிதனும் தோலால் போர்த்தப்பட்ட எலும்புக் கூடு மட்டுமல்ல. அன்பினால்தான் மனிதனின் உயிரும் உடலும் இயங்குகிறது என்று வள்ளுவர் கூறுவதிலிருந்து, உயிரோடு இருக்கும் ஒரு மனிதனிடத்தில் அன்பு என்ற பண்பு  இயல்பாகவே இருக்கிறது என்பது புலனாகிறது. ஆனால், அவனால் சில காரணங்களால் அதை வெளிப்படுத்த முடியவில்லை என்பது பெறப்படுகிறது. இயல்பாக உள்ள  அன்பு அவனுடைய, வளர்ப்புமுறை, சுற்றுச்சூழல், வாழ்க்கை அனுபவங்கள், மனதில் உள்ள சினம், அழுக்காறு, பேராசை போன்றவற்றால் தோன்றிய மாசுகளால் வெளிப்படுத்த முடியாமல் தடை செய்யப்படுகிறது. தூசு படிந்த கண்ணாடியால், அதன் முன் உள்ள பொருளைப் பிரதிபலிக்க முடியாததுபோல், ஒருவனின் மாசு படிந்த மனத்தால் அவனிடம் இயல்பாக உள்ள அன்பை அவனால் வெளிப்படுத்த முடியவில்லை. அந்த மாசுகள் நீங்கினால், அன்பை வெளிப்படுத்த முடியும்.

ஒருவன் தன் உறவினர், சுற்றத்தார் ஆகியோரிடம் காட்டும் பாசத்தை அன்பு என்றும் மற்றவர்களிடத்திலும் மற்ற உயிரினங்களிடதிலும் அவன் காட்டும் பாசம் கருணை ஆகியவற்றை அருள் என்றும் வள்ளுவர் வகுக்கிறார். மாசுகள் நீங்கி அன்பு வெளிப்பட்டால், ஒருவனுடைய இல்வாழ்க்கை சிறப்பாக அமையும். அதனால்தான் வள்ளுவர், “அன்பும் அறனுமுடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.” என்கிறார். ஆகவே,  அன்போடும் அறத்தோடும் கூடிய இல்வாழ்க்கையில் இருப்பவன், தன் மனைவி, மக்கள், பெற்றோர்  மற்றும் பிற உறவினர்கள், நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் ஆகியோரிடம் பரிவும் பாசமும் காட்டி அவர்களுக்கு  எவ்விதத் தீமையும் செய்யாமல் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களைக் காப்பாற்றுவான்; விருந்தோம்பல் தனது கடமை என்பதை உணர்ந்து இல்வாழ்க்கையில் இருப்பவன் அகமும் முகமும் மலர்ந்து செல்விருந்தோம்பி, வருவிருந்து பார்த்திருப்பான். மேலும், அன்பு விரிந்து நட்பாக மலர்ந்து“யாவரும் கேளிர்” என்ற மனிதநேயமாக மலர்கிறது என்பதும் வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
                     (குறள் 74)

வள்ளுவர் கூறுவதைப்போல், ஒருவனுடைய அன்பு நட்பாக வளர்ந்தால், ”உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.” என்ற குறளுக்கேற்ப அவன் தன் நண்பர்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காமல், அவர்களிடம் இன்சொல் பேசி அவர் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு நன்மைகளைச் செய்வான் என்று எதிர் பார்க்கலாம்.

அன்பு நட்பாக மலர்வதற்கும் அடுத்த நிலையில் அது அருளாக மாறுகிறது. அருளாக மாறுகின்ற பொழுது, எல்லா உயிர்களிடத்திலும் பரிவும் பாசமும் காட்டி, எவ்வுயிர்க்கும் எந்தத் தீமையும் செய்யாமல் நன்மைகளைச் செய்யும் இயல்பு தோன்றுகிறது. உதாரணமாக, பாரி முல்லைக்குத் தேரை கொழுகொம்பாக அளித்ததற்கும், பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததற்கும், அவர்கள் உள்ளத்தில் இருந்த அருள்தான் காரணம். ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.” என்று வள்ளுவர் கூறுவதும் அருள் உள்ளவன் செய்கின்ற செயலைத்தான் குறிக்கிறது. பாரியின் செயலும், பேகனின் செயலும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலும் பொருள் இருந்தால்தான் செய்ய முடியும்.

 

”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்” என்று தொடங்கும் பாடலில்[1] வள்ளலார்  ”நீரின்றி வாடிய பயிர்களைக் கண்ட போதும், பசியால் மேனி மெலிந்து வீடு தோறும் சென்றிரந்தும் பசி நீங்காது வருந்தும் வறியரைப் பார்த்தும், நோயினால் துன்புறுவோரைக் கண்ணெதிர் தோன்றக் காணிணும் மனம் மிக வருந்தி நொந்தேன்; ஒப்பற்ற மானமுடையராய் வறுமை எய்தினமையால் உள்ளம் உடைந்து மெலிந்தவர்களைக் கண்டு மெலிவுற்றேன்.”என்று கூறுகிறார்.  அவரிடத்தில் பொருள் இல்லாததால் வறியவர்களையும், நோயுற்றவர்களையும், வறுமையில் இருப்பவர்களையும் கண்டு வருத்தம் அடைய முடிந்ததே தவிர, அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை.  ஆகவே, அருள் இருந்தால் மட்டும் போதாது. பல நேரங்களில், பிறருக்கு உதவி செய்வதற்குப் பொருளும் வேண்டும். இந்தக் கருத்தை வள்ளுவர் மிக அழகாக ஒரு குறளில் கூறுகிறார். ”அருள் என்பது அன்பு பெற்ற குழந்தை. ஆனால், அந்தக் குழந்தை செழிப்பாக வளர்வதற்கு  செல்வம் என்ற  ஒரு வாளர்ப்புத் தாய் தேவை.”  என்று அந்தக் குறளுக்குப் பொருள். அந்தக் குறள்:

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.              (குறள் – 757)

 

அறத்தை வலியுறுத்துவதற்கு வள்ளுவர் கையாளும் உத்தி

நாம் ஒரு கருத்தைப் பிறரிடம் கூறும்பொழுது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினால், அதற்கு நான்கு அணுகுமுறைகளைப் பின்பற்றலாம். 1) அந்தக் கருத்தை அவர்களிடம் சமாதானமாகவும், விளக்கமாகவும் கூறலாம். 2) அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி அவர்கள் நடப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று கூறலாம். 3) அந்தக் கருத்தைப் பின்பற்றுவதற்கும் பின்பற்றாமல் இருப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை விவரமாகக் கூறலாம். 4)அந்தக் கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் - அதைப் பின்பற்றாமல் - இருப்பதனால் என்ன தீமைகள் வரலாம் என்று அவர்களிடம் கூறலாம். இந்த நான்கு அணுகுமுறைகளாலும் மற்றவர்களை நம் கருத்திற்கு இணங்கவைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த அணுகுமுறைகளுக்கு வடமொழியில் சாம தான பேத தண்டம் என்று பெயர். வள்ளுவர் அறத்தை வலியுறுத்துவதற்கு ”சாம தான பேத தண்டம்” என்ற உத்தியைப் பல அதிகாரங்களில் கையாளுகிறார். உதாரணமாக, அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில், குறட்பாக்கள் 34 மற்றும் 35ல் வள்ளுவர் அறத்தைப் பற்றிக் கூறி, அதைப் பின்பற்றுவதால் வரும் நன்மைகளை 31 ஆவது குறளில் கூறி நம்மை ஊக்குவித்து, அறத்தைப் பின்பற்றுவதற்கும் அறத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கும் இடையே உள்ள வேற்றுமையை 39 ஆவது  குறளில் கூறி, இறுதியாக 32 ஆவது குறளில் அறத்தைப் பின்பற்றாவிட்டல் வரும் தீமைகளை எடுத்துரைத்து நம்மை அச்சுறுத்தி, அறத்தைப் பின்பற்றுவதின் இன்றியமையாமையை  வலியுறுத்துகிறார். 

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.                               (குறள் 34)

 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.                       (குறள் 35)

 

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.                      (குறள் 31)

 

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.                            (குறள் 39)

 

 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.                    (குறள் 32)

 

”சாம தான பேத தண்டம்” என்னும் உத்தியைப் பல அதிகாரங்களில், பல இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார். உதாரணமாக, அன்புடைமை என்ற அதிகாரத்தில், 77ஆவது குறளில், “என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.” என்று கூறுகிறார். இங்கு அறத்தைத் தன்னிச்சையாக  இயங்கும் ஆற்றலாக வள்ளுவர் உருவகிக்கிறார் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும். அறம் ஒரு நல்லொழுக்க நெறி. அது தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றல் உடையது  அன்று.  சிலர் கூறுவதுபோல் அறம் ஒரு தெய்வமும் அன்று. இதுபோல் வள்ளுவர் அறத்தைத் தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றல்போல் சித்திரிக்கும் இடங்களில், அறத்தை வலியுறுத்துவதற்குப் பயன்படுத்தும் உத்தி என்று பொருள்கொள்வதே சிறந்ததாகத் தோன்றுகிறது. அதுபோல் பல இடங்களில் வள்ளுவர் “அறம் செய்க” என்று கூறுகிறார். ”அறம் செய்க” என்பதற்கு ”அறத்தைப் பின்பற்றுக” என்று பொருள்கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

 

முடிவுரை

வள்ளுவர் பார்வையில் “மனத்தில் மாசில்லாமல் இருப்பதுதான் அறம்.  மனத்தில்

மாசில்லவாவிட்டால் மனிதன் தன்னிடத்தில்  இயல்பாக உள்ள அன்பு என்னும் பண்பை வெளிப்படுத்த முடியும். அன்புள்ள ஒருவன் பாசத்தோடும் பரிவோடும் மனைவி, மக்கள், பெற்றோர், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கும், அவனை நம்பி வந்தவர்களுக்கும் துணையாக இருந்து நன்மைகளைச் செய்வான். நாளடைவில், அவன் நாடாமலேயே அவனுக்குப் பலருடைய நட்புக் கிடைக்கும். அடுத்த நிலையில், அவனுடைய அன்பு அருளாக மலர்ந்து, எவ்வுயிர்க்கும் தீமை செய்யாமல், அனைத்துயிர்களுக்கும் தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்வான்.   இதுவே வள்ளுவர் கூறும் அறம். வள்ளுவரின் அறத்தைப் பற்றிய கருத்து எந்நாட்டவர்க்கும் எக்காலத்துக்கும் ஏற்புடையது.

 

 

 

 

 

 

 



[1]. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

          வாடினேன் பசியினால் இளைத்தே

     வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

     நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

     ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.