Statcounter

Friday, June 19, 2020

வாழ்க்கையில் வெற்றிக்கு வள்ளுவர் காட்டும் வழி

வாழ்க்கையில் வெற்றிக்கு வள்ளுவர் காட்டும் வழி

இவ்வுலகில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புகிறார்கள்.  இவ்வாறு பலரும் முன்னேற்றம், வளர்ச்சி, வெற்றி போன்றவற்றை விரும்புவதால், உளவியல் அறிஞர்களும் மற்றவர்களும் ‘சுய முன்னேற்றம்’ என்பதைப் பற்றி எண்ணற்ற நூல்களை எழுதிவருகிறார்கள்; சொற்பொழிவாற்றுகிறார்கள்; வகுப்புகள் நடத்துகிறார்கள். அமெரிக்காவில் சுய முன்னேற்றம் என்ற துறையைச் சார்ந்த நூல்கள், சொற்பொழிவுகள், வகுப்புகள் ஆகியவற்றால் ஆண்டு தோறும் வரும் வருவாய் ஏறத்தாழ 10 பில்லியன் டாலர் (70,000 கோடி உரூபாய்) என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.  சுய முன்னேற்றத்தைப் பற்றியும் சுய முன்னேற்றத்திற்குத் தேவையான உந்துதல் பற்றியும் நூற்றுக் கணக்கானவர்கள் ஆயிரக்கணக்கான நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். மற்ற மொழிகளிலும் சுய முன்னேற்றம் பற்றிய நூல்கள் வெளியிடுவதும், சொற்பொழிவாற்றுவதும், வகுப்புகள் நடத்துவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவரும் கூறியுள்ளார். இன்றைய அறிஞர்களின் கருத்துக்களுக்கும் வள்ளுவரின் கருத்துக்களுக்கும் மிகுந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் கூறும் அறிவுரைகளைத் தொகுத்து வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வாழ்க்கையில் வெற்றி என்றால் என்ன? பொதுவாக, மிகுந்த செல்வம், உயர்ந்த பதவி, சிறந்த புகழ் ஆகியவற்றைப் பெறுவது, சமுதாயத்தில் பிறரால் மதிக்கப்படுவது, பாராட்டப்படுவது போன்றவை நடைபெற்றால், ஒருவன் வாழ்க்கையில் வெற்றிபெற்றவனாகக் கருதப்படுகிறான். ஆனால், வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுவேறாக இருக்கலாம். உதாரணமாக, ஒருவன் மிகுந்த புகழ் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலில் ஈடுபட்டுத் தவறான முறையில் மிகுந்த செல்வம் சேகரித்துப் பலராலும் இகழப்பட்டால், அவன் தன்னை வெற்றி பெற்றவனாகக் கருதமாட்டான்.  அதுபோல், ஒருவன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு அரசியலில் ஈடுபட்டு, மிகுந்த புகழடைந்தாலும், அவன் பலமுறை தேர்தல்களில் தோல்வி அடைந்தால், அவன் தன்னை வெற்றி அடைந்தவனாகக் கருதமாட்டான்.  ஆகவே, ஒருவன் எதைத் தன்னுடைய வெற்றி என்று கருதுகிறானோ அதை அடைந்தால்தான் அவன் தன்னை வெற்றிபெற்றவனாகக் கருதுவான்.

வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்குமானால், அனைவரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கேற்ற பொதுவான வழிமுறைகள் உண்டா? ஸ்டீஃபென் கவ்வி(Stephen R. Covey, 1932 - 2012), சிக் சீக்ளர் (Zig Ziglar, 1926 - 2012), டோனி ராபின்ஸ் (Tony Robbins, 1960 - ), ஜேக் கேன்ஃபீல்டு (Jack Canefield, 1944 - ), டேல் கார்னிகி (Dale Carnegie, 1888 - 1955), நார்மன் வின்செண்ட் பீல்(Norman Vincent Peale, 1898 - 1993) போன்ற அறிஞர்கள், ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குச்  சில பொதுவான விதிகளைக் கூறுகின்றனர்.  மற்ற அறிஞர்களைப்போல், வள்ளுவரும், ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கேற்ற கருத்துக்களைக் கூறுகிறார். வள்ளுவர் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம்.

1.உயர்ந்த கனவு காணுங்கள் (Dream Big)

ஒருவன் எதை அடைய விரும்புகிறானோ அதை அவன் அடைந்தால்தான் அவன் தான் வெற்றி பெற்றதாகக் கருதுவான் என்பதால், ஒருவன் தன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் ஏதாவது ஒன்றை விரும்ப வேண்டும். அதாவது, வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்களுக்கு ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். அந்த இலட்சியம்தான் கனவு.  வெற்றிபெற வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஒரு இலட்சியம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, ஸ்டீஃபென் கவ்வி என்ற அறிஞர், “ உன்னுடைய கல்லறையில் என்ன பொறிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்.” என்று தன்னுடைய ”The 7 Habits of Highly Effective People”, என்ற நூலில் கூறுகிறார்.

 

ஓருவனுடைய கனவு நனவானால் அவன் வெற்றி பெற்றவனாகிறான். வள்ளுவர் கனவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் எண்ணம் என்றும், அந்த எண்ணம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நம்முடைய எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வெற்றியும் உயர்ந்தாக இருக்கும் என்பது வள்ளுவரின் கருத்து. இந்தக் கருத்தைக் கூறுவதற்கு வள்ளுவர் ஒரு அழகான உவமையைப் பயன்படுத்துகிறார். ஒரு நீர்நிலையில் உள்ள மலரின் நீளம் அங்குள்ள நீரின் ஆழத்தைப் பொருத்தது. நீரின் ஆழம் அதிகமாக அதிகமாக, மலரைத் தாங்கி நிற்கும் தண்டின் நீளம் நீண்டுகொண்டே இருக்கும். அதுபோல், மனிதர்களின் உள்ளத்தில் உள்ள எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த வெற்றியைப் பெறுவார்கள் அல்லது முன்னேறுவார்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.

        வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

         உள்ளத்து அனையது உயர்வு.                              (குறள் – 595)

 

ஒரு இலட்சியத்தை முன்வைத்து, அதை அடைந்து, பலரும் தங்கள் வாழ்க்கையில்  வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. 1987- ஆம் ஆண்டு, நடிகனாக வேண்டும் என்பதைத் தன் இலட்சியமாகக்கொண்டு ஒரு இளைஞன், கனடாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்(Hollywood) நகரத்திற்கு வந்தான். நடிகனாவதற்கான வாய்ப்புக்களைத் தேடிச் சில மாதங்கள் அலைந்தான். அவனுடைய முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இருந்தாலும், மனம் தளாராமல் வேலை தேடிக்கொண்டிருந்தான். ஒருநாள், 10 மில்லியன் டாலருக்குத் தன் பெயரில் ஒரு காசோலையை எழுதி, அதில் நவம்பர் 1995 – ஆம் ஆண்டு என்ற தியதியைக் குறிப்பிட்டு, ’திரைப்படத்தில் நடித்ததற்காக’ என்ற ஒரு குறிப்பையும் எழுதித் தன்னுடைய பணப்பையில் வைத்துகொண்டான். அதாவது, திரைப்பட நடிகனாகி, பத்து மில்லியன் சம்பாதிக்க வேண்டும் என்பது அவன் இலட்சியம். அடிக்கடி, அந்தக் காசோலையை எடுத்துப் பார்த்துத் தன் இலட்சியத்தை உறுதிப் படுத்திக்கொள்வதைத் தன் வழக்கமாகக் கொண்டான். அவனுடைய இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன முயற்சிகளை எடுக்க வேண்டுமோ அவற்றை எல்லாம் தவறாமல் செய்துவந்தான். 1995 – ஆம் ஆண்டு வந்தபொழுது, அவன் ஒரு சிறந்த திரைப்பட நடிகனாகி, அவன் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் 20 மில்லியன் டாலர் சம்பாதித்தான்! அந்த இளைஞன்தான் ஜிம் கேரி(Jim Carrey) என்ற நடிகன். அவன் இதுவரை ஐம்பதுக்கும் மேலான திரைப்படங்களிலும் 10 க்கும் மேலான தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சிகளிலும் நடித்து மகத்தான வெற்றி பெற்றிருக்கிறான் என்பது குறிப்பிடத் தக்கது.

 

1962- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ஜான் கென்னடி(John F. Kennedy, 1917 – 1963), ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, அற்கென்சா என்ற மாநிலத்திற்குச் சென்றார். அவர் அந்தப் பள்ளியில் இருந்த சில மாணவர்களைச் சந்தித்தார். அந்த மாணவர்களை, “நீங்கள் படித்து முடித்த பிறகு என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கென்னடி கேட்டார். அவர்கள், மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி, ஆசிரியர் என்றெல்லாம் தாங்கள் செய்ய விரும்பும் பணிகளைப் பற்றிக் கூறினார்கள். ஒரு மாணவன், “நான் உங்களைப்போல், இந்த நாட்டின் குடியரசுத் தலைவராகப் போகிறேன்”, என்று சொன்னான். அவன் சொல்லியதைக் கேட்டு மகிழ்ச்சியோடும் வியப்போடும் அவனைக் கென்னடி வாழ்த்தினார். அந்த மாணவன்தான் 1992 – ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம் கிளிண்டன் (William Jefferson Clinton, 1946 - ). இதுபோல் வேறுபலரும் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருந்து தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்குப் பல சான்றுகள் உள்ளன.

 

ஒரு இலட்சியத்தைத் தன் கனவாகக் கொள்வது மட்டும் போதாது. அந்தக் கனவு அல்லது எண்ணம் உயர்ந்ததாக இருப்பது மட்டுமல்லாமல் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். ஒரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்று நினைப்பவன் அந்த இலட்சியத்தில் உறுதியாக இருந்தால் அவன் எண்ணியவாறு அவனுடைய எண்ணம் நிறைவேறும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

        எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்.                          (குறள் – 666)

 

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் (A.P.J. Abdul J. Kalam, 1931 – 2015), ”கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களைத் தூங்க விடாமல் செய்வது.” என்று குறிப்பிடுகிறார். அதாவது, நம்முடைய இலட்சியம் அல்லது கனவு என்பதைப் பற்றி எப்பொழுதோ ஒருசமயம் எண்ணிப்பார்த்து, அதை அடைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து மகிழ்வதால் எந்தப் பயனும் இல்லை. நமது இலட்சியத்தை அடைய வேண்டுமானால் அதைப் பற்றிய சிந்தனையோடு எப்பொழுதும் இருந்து, அதை அடைவதற்கான செயல்களிலும் முயற்சிகளிலும் இடைவிடாமல் நாம் ஈடுபட வேண்டும். இதைத்தான் வள்ளுவர் ’உள்ளியது உள்ளல்’ என்று குறிப்பிடுகிறார்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

         உள்ளியது உள்ளப் பெறின்.                       (குறள் – 540)

 

இலட்சியம் உயர்ந்ததாக இருந்து, அதையே இடைவிடாமல் எண்ணி எண்ணிப் பார்த்து, அதற்கான செயல்களைத் தவறாமல் செய்தாலும், சில சமயங்களில் நாம் நினைத்தது நினைத்தவாறே நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உண்டு என்பதை வள்ளுவர் உணராதவர் அல்ல. நாம் நினைத்தது நினைத்தவாறே நடைபெறத் தவறினாலும், நம்முடைய முயற்சிகள் கண்டிப்பாகப் பலனளிக்கும் என்பதால் நாம் எண்ணியது நடக்காவிட்டாலும், அது நடந்ததைப் போலத்தான் என்கிறார் வள்ளுவர்.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

         தள்ளினும் தள்ளாமை நீர்த்து.                    (குறள் – 596)

 

கடந்த நூற்றண்டில் மார்டின் லூதர் கிங்(Rev. Martin Luther King Jr. 1929 – 1968) என்பவர் அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூக உரிமைகளுக்காகப் போராடினார். அவருடைய புகழ்பெற்ற சொற்பொழிவு ஒன்றில், “இந்த நாட்டில், ஒருநாள், என்னுடைய நான்கு குழந்தைகளைப் பற்றி மற்றவர்கள் முடிவெடுக்கும்பொழுது அவர்களுடைய நிறத்தைப் பற்றிக் கவலைப்படாமல், குணத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துப் பார்த்து முடிவெடுப்பார்கள் என்று நான் கனவு காண்கிறேன்.” என்று கூறினார். அவர் வாழ்ந்த காலத்தில், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வெள்ளையர்களுக்குச் சமமான உரிமைகள் இல்லை. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கறுப்பாக இருப்பதால் அவர்கள் மற்றவர்களைப்போல் சமவுரிமை இல்லாமல் பலவகைகளிலும் இழிவுபடுத்தப்பட்டார்கள்.  மார்டின் லூதர் கிங்குடைய போராட்டம் முழுமையாக வெற்றி பெறுவதற்கு முன்னரே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய போராட்டத்தின் விளைவாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டன. மார்ட்டின் லூதர் கிங் எண்ணியது எண்ணியவாறு நடைபெறாவிட்டாலும், அவருடைய முயற்சிகள் வீண்போகவில்லை. இது ‘தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்று வள்ளுவர் கூறுவதற்கு ஒரு உதாரணம்.

இன்னும் ஒரு உதாரணம். என்னுடைய தமையனார் ஒருவர் சிறுவயதிலிருந்தே இந்திய இராணுவத்தில் ஒரு தளபதியாக வேண்டும் என்று கனவு கண்டார். சிறு வயதிலேயே, அவர் ஃபிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தளபதியாக விளங்கிய நெப்போலியனைப்(Napoleon Bonaparte, 1769 – 1821) பற்றியும், நெப்போலியனின் பல வெற்றிகளைப் பற்றியும், சாதனைகளைப் பற்றியும் ஆர்வத்தோடு படித்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இரண்டு ஆண்டுகள் கல்லூரியில் படித்தார். அவருக்குக் கல்லூரிப் படிப்பைத் தொடர்வதில் அதிக ஆர்வமில்லை. எப்படியாவது இராணுவத்தில் சேர்ந்து தளபதியாக வேண்டும் என்பதைப் பற்றியே சிந்தித்துகொண்டிருந்தார். ஆனால், இராணுவத்தில், ஒரு அதிகாரியாகச் சேர்வது எப்படி என்று அவருக்கு வழிகாட்டக் கூடியவர்கள் எவரும் இல்லாதால், அவர் ஒரு கடைநிலை ஊழியராக இராணுவத்தில் சேர்ந்தார். பின்னர், அதிகாரியாகத் தேர்தெடுப்பதற்கான தேர்வு ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு, அந்தத் தேர்வில் கலந்துகொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், நேர்காணலில் தோல்வியுற்றார். அடுத்தமுறை தேர்விலும் நேர்காணலிலும் வெற்றிபெற்று, முதல்நிலை அதிகாரியாக(2nd Lieutenant) நியமிக்கப்பட்டார். பின்னர், தன்னுடைய கடின உழைப்பால் படிப்படியாகப் பல பதவி உயர்வுகளைப் (Lieutenant, Captain, Major, Lt. Colonel, Colonel) பெற்று, கடைசியாக பிரிகேடியாராகப் (Brigadier) பதவி ஏற்றார். அதற்கு அடுத்த பதவி மேஜர் ஜெனெரல் (Major General). சில காரணங்களினால், அவருக்கு மேஜர் ஜெனரலாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேஜர் ஜெனரல் பதவி ஒரு தளபதி பதவி. என்னுடைய தமையனார், அவர் விரும்பியதைப்போல் தளபதியாக முடியாவிட்டாலும், அந்தப் பதவியை எட்டிப்பிடிக்கும் நிலைக்கு முன்னேறினார். என்னுடைய தமையானாரின் வாழ்க்கையும், ’தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்று வள்ளுவர் கூறுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

2.இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள் (Set Goals)

வெற்றிக்கு முதலாவதாகத் தேவைப்படுவது இலக்குகள் (இலக்குகள் – Goals). ஒருவன் தான் நினைத்ததை சாதிப்பதற்குப் பல செயல்களைச் செய்ய வேண்டியதாக இருக்கும். அந்தச் செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு இலக்கு. அந்த இலக்குகள் எவை என்பதை அவன் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அந்த இலக்குகள் அனைத்தையும் அவன் முறைப்படி அடைந்தால் அவன் தன் இலட்சியத்தை அடையலாம். உதாரணமாக, ஒரு மாணவன் பள்ளியில் படிக்கும்பொழுது, தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று முடிவு செய்தால், அது அவன் இலட்சியம். அது அவனுடைய கனவு. அந்த இலட்சியத்தை அடைவதற்கு முன்னர், அவன் என்ன பாடங்கள் படிக்க வேண்டும், அவற்றில் எத்தனை மதிப்பெண்கள் பெறவேண்டும், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள் உண்டா, அந்தத் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும், எங்கே நடைபெறும், அந்தத் தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெறவேண்டும், போன்றவற்றை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இலக்குகளைத் தேர்ந்தெடுப்பது என்றால், அது ஒருவன் தன் இலட்சியத்தை அடைவதற்கு என்ன செயல்கள் செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதைக் குறிக்கிறது. ஒரு இலட்சியத்தை அடைவதற்குத் தேவையான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதின் இன்றியமையாமையைப் பற்றியும் அவற்றை எப்படித் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றியும் வள்ளுவர் பல குறட்பாக்களில் கூறுகிறார்.

 

ஒருவன் தன்னுடைய இலட்சியத்தை அடைவதற்குப் பல செயல்களைச் செய்ய வேண்டியதாக இருக்கும். சில செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டியதாகவும் இருக்கும். செய்யத் தகாத செயல்களைச் செய்தாலோ அல்லது செய்ய வேண்டிய செயல்களைச் செய்யத் தவறினாலோ அவன் தன் இலட்சியத்தை அடைய முடியாது என்கிறார் வள்ளுவர் (குறள் – 466). செய்ய வேண்டிய எந்தச் செயலையும் தொடங்குவதற்குமுன், நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தபின் தொடங்குக! அவ்வாறல்லாமல் முடிவு செய்தபின் அவற்றைப் பற்றிச் சிந்தித்துக்கொள்ளலாம் என்பது தவறு (குறள் – 467). தன்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டும் என்பதைத் நன்கு தீர்மானிக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதாக இந்தக் குறளுக்குப் பொருள்கொள்ளலாம். தெளிவில்லாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால், அதனால் வரும் இகழ்ச்சிக்கு அஞ்சுபவர்கள் தெளிவில்லாத செயல்களைச் செய்யத் தொடங்க மாட்டார்கள் (குறள் – 464). தான் செய்ய விரும்பும் செயல்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களோடு கூடிக் கலந்து ஆராய்ந்து தாமாகவும் சிந்தித்துச் செயல்படுபவர்களுக்குச் செய்வதற்கரிய செயல் எதுவுமில்லை (குறள் – 462). ஒரு செயலைத் தொடங்குமுன் அதனால் வரும் தீமைகளையும் நன்மைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, நன்மைகள் மிகுதியாக இருக்குமானல் அதைத் தொடங்குக (குறள் – 461).

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

         செய்யாமை யானும் கெடும்.                               (குறள் – 466) 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

         எண்ணுவம் என்பது இழுக்கு.                              (குறள் – 467) 

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

         ஏதப்பாடு அஞ்சு பவர்.                                      (குறள் – 464) 

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

         அரும்பொருள் யாதொன்றும் இல்.                         (குறள் – 462) 

         அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

         ஊதியமும் சூழ்ந்து செயல்.                                 (குறள் – 461)

 

3.திட்டமிடுங்கள் (Develop a Plan)

பதினெட்டாம் நூற்றாண்டில், பல துறைகளில் சாதனைகள் புரிந்து வெற்றிபெற்று, அமெரிக்காவில் புகழோடு விளங்கியவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்(Benjamin Franklin, 1706 - 1790) என்பவர். அவர் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவராக இருந்தார். திட்டமிடுவதின் இன்றியமையாமையை வலியுறுத்துவதற்காக, அவர் ”திட்டமிடத் தவறுபவர்கள் தோல்வி அடைவதற்குத்  திட்டமிடுகிறார்கள் ” என்று கூறியதாகக் கூறப்படுகிறது. ஒரு இலட்சியத்தை அடைய வேண்டுமானால் அந்த இலட்சியத்தைத் தன் கனவாகக் கொள்வதும், அந்த இலட்சியத்தை அடைவதற்கு எந்தெந்த செயல்களைச் செய்வது என்பதைப் பற்றி முடிவெடுப்பதும் மட்டும் போதாது. அந்தச் செயல்களை எப்படிச் செயலாற்ற வேண்டும், எப்பொழுது செயலாற்ற வேண்டும் என்பவற்றையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். திட்டமிடுவதைப் பற்றிக் கூறும்பொழுது, சிக் சீக்ளர்(zig Ziglar) என்பவர் தன்னுடைய “See you at the Top”, என்ற நூலில், ”எட்மண்ட் ஹிலரியும்(Edmund Hillary, 1919 - 2008) டென்சிங் நார்கேயும்(Tenzing Norgay, 1914 - 1986) ஒருநாள் திடீரென்று இமயத்தின் சிகரத்தில் தோற்றமளிக்கவில்லை. இமயத்தின் சிகரத்தை அடைவதற்கு என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும் என்பவற்றை ஆராய்ந்து, கவனமாகத் திட்டமிட்டுச் செயல்லாற்றியதால்தான் அவர்கள் இமயத்தின் சிகரத்தை அடைந்தார்கள்.” என்று கூறுகிறார்.

 

திட்டமிடுவதைப் பற்றி வள்ளுவர் பல குறட்பாக்களில் விரிவாகக் கூறுகிறார். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.  வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொள்ளும் செயல், உரிய இடம், ஆகிய ஐந்தையும் நன்கு ஆராய்ந்தறிந்த பிறகே கருதிய செயலை ஒருவன் செய்யத் தொடங்க வேண்டும் (குறள் – 675).

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.                                (குறள் – 675)

 

பொருளும் கருவியும்: ’பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என்றும் ”செய்க பொருளை” என்றும் கூறிப் பொருளின் இன்றியமையாமையை வள்ளுவர் வலியுறுத்துகிறார். மேலும் ‘பொருள்’ என்பதை ஆங்கிலத்தில் உள்ள ‘resources’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாகக் கருதினால், நிலவளம் (Land), மனித வளம் (Labor), மூலதனம் (Capital) ஆகியவை, பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையானவை என்று, பொருளாதாரத்துறையின் தந்தை என்று கருதப்படும் ஆடம் ஸ்மித் (Adam Smth, 1723 - 1790) என்பவர்  கூறிய பொருளாதாரக் கொள்கைக்கும் வள்ளுவரின் கருத்துக்கும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். போருக்குப் போவதாக இருந்தால் போர்க்கருவிகள் தேவை. ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி பொருட்களை உற்பத்தி செய்வதாக இருந்தால், பல இயந்திரங்கள் தேவைப்படலாம். இன்றைய சூழ்நிலையில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தொலைபேசி, கைப்பேசி, கணினி, போக்குவரத்துக்குத் தேவையான வாகனங்கள், எழுதுவதற்கும் படிப்பதற்கும் வேண்டிய கருவிகள் ஆகியவை எல்லாச் செயல்களுக்கும் தேவையான கருவிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வலியறிதல்: ஒரு மரக்கொம்பின் நுனியிலே ஏறியவர், ஊக்க மிகுதியால் மேலும் ஏற முயன்றால், அது அவருடைய உயிருக்கு முடிவை உண்டாக்கும் (குறள்- 476) என்றும், தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உள்ளக் கிளர்ச்சியால் ஒரு செயலை முயன்று, அதை முடிக்க முடியாமல் இடையிலே நொடிந்தவர் பலர் (குறள் – 473) என்றும் கூறி, ஒருவன், தான் செய்யக் கருதும் செயலுக்குத் தேவையான வலிமை, தன்னுடைய வலிமை, தனக்குப் போட்டியாக உள்ளவர்களின் வலிமை, தனக்குத் துணையாக இருப்பவர்களின் வலிமை ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்த பின்னர்தான் செயலைத் தொடங்க வேண்டும் (குறள் – 471) என்று வலியறிதலின் இன்றியமையாமையை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.                                  (குறள் – 476)

 

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.                               (குறள் – 473)

 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.                           (குறள் – 471)

 

இந்தக் குறட்பாக்களில் வள்ளுவர் கூறும் கருத்துக்கள் இன்றும் பயனுள்ளவை. பல பெரிய நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை செய்யத் தொடங்குவதற்குமுன் SWOT Analysis என்ற ஒரு ஆய்வை நடத்தி, அதன் முடிவு தமக்குச் சாதகமாக இருந்தால்தான் ஒரு திட்டத்தைத் தொடங்குகிறார்கள். SWOT Analysis என்ற ஆய்வில், S என்ற எழுத்து Strength (வலிமை), W என்ற எழுத்து Weakness (பலவீனம்), O என்ற எழுத்து Opportunity (வாய்ப்பு), T என்ற எழுத்து Threat (அஞ்சத் தக்க விளைவுகள்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.

காலமறிதல்: திட்டமிடும்பொழுது, வலியறிதலைப்போல் காலமறிதலும் தேவை. ஒரு செயலைத் தொடங்குவதற்கு ஏற்ற காலம் எது என்பதையும் சிந்திக்க வேண்டும். உதாரணமாக, நெப்போலியன் (Napoleon Bonaparte) பனிக்காலத்தில் உருசியாமீது போருக்குச் சென்றதால், அவனுடன் சென்ற 600,000 வீர்களில் 500,000 படைவீர்ர்கள் உருசியாவின் குளிர் தாங்க முடியாமலும், சரியான காலத்தில் உணவு கிடைக்காதால் பசியால் வாடியும் இறந்தனர். சரியான காலத்தில் போருக்குச் செல்லாததால், நெப்போலியனின் படையெடுப்பு வெற்றி அடையாமல் முடிவடைந்தது.

கோட்டான் காக்கையைவிட வலிமையான பறவை. ஆனால், கோட்டானுக்குப் பகலில் கண் தெரியாது. அதனால், பகலில் கோட்டானைக் காக்கை எளிதில் வெல்லும். அது போலத் தமது பகைவரை வெல்ல விரும்பும் மன்னர்கள் காலம் பார்த்துப் போரிட வாண்டும் என்கிறார் வள்ளுவர் (குறள் - 481). இந்த அறிவுரை, போருக்குச் செல்லும் மன்னனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். அனைவரும் தாங்கள் செய்ய விரும்பும் செயலைச் சரியான காலத்தில் செய்தால் சிறந்த பயனடைவார்கள் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. திட்டமிடும்பொழுது, காலத்தையும் மனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு வள்ளுவர் இன்னும் ஒரு கருத்தையும் குறிப்பிடுகிறார். ஒரு கொக்கு மீனைப் பிடிப்பதற்காக அங்கும் இங்கும் அலைவதில்லை. ஆற்றிலோ குளத்திலோ, கொக்கு ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கும். மீன் தன் அருகே வந்தவுடன், தன்னுடைய அலகால் விரைந்து குத்தி அந்த மீனைக் கொக்கு கவ்வும் (குறள் – 490). அதைப்போல், திட்டமிடும்பொழுது, ஒரு செயலைச் செய்வதற்குத் தக்க சமயம் எது என்பதையும் ஆராயவேண்டும்.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.                           (குறள் – 481)

 

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

குத்துஒக்க சீர்த்த இடத்து.                                  (குறள் – 490)

 

இடமறிதல்: திட்டமிடும்பொழுது காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய வள்ளுவர், ஒரு செயலைத் தொடங்குமுன் அதை எங்கு செய்ய வேண்டும் என்பதையும் ஆராய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.  ஒருவன் ஒரு செயலை செய்தற்குரிய காலத்தை ஆராய்ந்து அறிந்து, அதனைத் தகுந்த இடத்தில் செய்தால் அவன் உலகம் முழுவதையும் தானே ஆளக் கருதினாலும் அது அவனுக்குக் கைகூடும் என்று கூறி, காலம் இடம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்வதின் இன்றியமையாமையை வள்ளுவர் வலியுறுத்துகிறார் (குறள் – 484).

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்.                                   (குறள் – 484)

 

பகைவனை எதிர்த்துப் போருக்குச் செல்லும்பொழுது, அந்தப் பகைவன் எந்த இடத்தில் வலிமை குறைந்தவனாக இருக்கிறானோ, அங்கு அவனைத் தாக்குவதற்குத் தளபதிகள் திட்டமிடுவது வழக்கம். ஒருவன் ஒரு  தொழிற்சாலை ஆரம்பிக்க விரும்பினால், அவனுக்குத் தேவையான மூலப்பொருள்கள், தொழிலாளிகள், மூலதனம், அரசாங்கச் சலுகைகள் ஆகியவை எங்கு எளிதாகக் கிடைக்குமோ அங்குதான் தன்னுடைய தொழிற்சாலையை ஆரம்பிக்க விரும்புவான். உதாரணமாக, அமெரிக்காவில் விற்பனையாகும் பல பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்குக் காரணம், சீனாவில் குறைந்த ஊதியத்திற்குப் பணிபுரிவதற்குத் தொழிலாளிகள் எளிதில் கிடைக்கின்றனர். ஒரு மாணவனுக்குப் பல கல்லூரிகளில் இடம் கிடைத்தால், எந்தக் கல்லூரியில் படித்தால் தனக்குப் பெருமை, எங்கு பொருளுதவி கிடைக்கும், எந்தக் கல்லூரி புகழ்பெற்ற கல்லூரி, எந்தக் கல்லூரியில் படித்தால் தனக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றெல்லாம் ஆரய்வான். ஆகவே, பல சூழ்நிலைகளில், ஒரு செயலைச் செய்வதற்கு ஏற்ற இடத்தை முடிவு செய்ய வேண்டும் என்பது புலனாகிறது.

இடமறிதலின் முதன்மையைக் கூறுவதற்கு வள்ளுவர் ஒரு நல்ல உவமையைப் பயன்படுத்துகிறார். போர்க்களத்தில், வேலோடுகூடிய பகைவீரர்களைத் தன் கொம்பில் குத்திச் சுமந்துவரும் யானையின் கால்கள், அமிழும் சேற்றுநிலத்தில் அகப்பட்டால் அந்த யானையை ஒருநரி எளிதில் கொன்றுவிடும்(குறள் – 500). சேற்று நிலம் நரிக்குச் சாதகமாக இருப்பதால், நரியால் யானையை எளிதில் வெல்ல முடிகிறது. அதுபோல், எந்த இடத்தில் தன் தொழிலைத் தொடங்கினால், வெற்றிகரமாகச் செயல்பட முடியுமோ அந்த இடத்தில் ஒருவன் தன் தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது கருத்து.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.                                   (குறள் – 500)

 

ஆகவே, செயலைச் செய்வதற்குத் திட்டமிடும்பொழுது, அச்செயலுக்கேற்ற பொருள், கருவி, செயல், காலம், இடம் ஆகிய ஐந்தையும் ஆராய்ந்து திட்டமிட வேண்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

திட்டமிடும்பொழுது, மற்றும் ஒரு கருத்தையும் மனத்தில் கொள்ள வேண்டும். ஒரு இலட்சியத்தை அடைவதற்கு பல இலக்குகளை அடைய வேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்குப் பல செயல்களைச் செய்ய வேண்டியதாக இருக்கும். எல்லாச் செயல்களையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாது. அந்தச் செயல்களை எந்த வரிசையில் செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். அதாவது, சிலவற்றை முதலில் செய்ய வேண்டும், சில செயல்களைக் காலதாமதம் செய்து தொடங்கலாம். காலதாமதத்தோடு செய்யக்கூடியவற்றைக் காலதாமதம் செய்தும், விரைவில் செய்ய வேண்டியவற்றைக் காலதாமதம் இல்லாமலும் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் - 672).

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.                                (குறள் – 672)

 

இங்கு, ’தூங்குதல்’ என்பது ’உறங்குதல்’ என்பதைக் குறிக்காமல், ’காலதாமதம் செய்தல்’ என்பதைக் குறிக்கிறது.

வள்ளுவர் கூறுவதுபோல், செயல்களைச் செய்யும்பொழுது அவற்றை எப்படி வரிசைப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி, அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டுவைட் ஐசன்ஹோவர் (Dwight Eisenhower, 1890 - 1969) கூறியதாக ஒரு கருத்து(Eisenhower Principle) உள்ளது. அந்தக் கருத்துப்படி, பல செயல்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலையில், அந்தச் செயல்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். முதற்பிரிவில் அடங்கும் பணிகள்: முக்கியமானவை, அவசரமாகச் செய்ய வேண்டியவை; இரண்டாவது பிரிவில் அடங்கும் பணிகள்: முக்கியமாகச் செய்ய வேண்டியவை; ஆனால் அவசரமாகச் செய்யத் தேவையில்லை;  மூன்றாவது பிரிவில் அடங்கும் பணிகள்: முகியமானவை அல்ல; ஆனால் அவசரமாகச் செய்ய வேண்டியவை; நான்காவது பிரிவில் அடங்கும் பணிகள்: முக்கியமானவையும் அல்ல, அவசரமாகச் செய்ய வேண்டியவையும் அல்ல. இப்படிப் பணிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, முதல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பிரிவுகளில் உள்ள பணிகளை வரிசைப்படி செய்ய வேண்டும் என்பது ஐசன் ஹோவரின் கருத்து.

4.செயல்படுத்துங்கள் (Execute your Plans)

கனவு காணுதல், இலக்குகளைத் தேர்ந்தெடுத்தல், திட்டம் தீட்டுதல் ஆகியவை மிகவும் இன்றியமையாமைவை. ஆனால், கனவை நனவாக்குவதற்கு அவை மட்டும் போதா. தீட்டிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். திட்டத்தை செயல்படுத்தும்பொழுது விடாமுயற்சியோடு செயல்பட வேண்டும். திட்டங்களில் உள்ள செயல்களைப் பார்த்து, “இவை எல்லாம் செய்வதற்கு அரியவை.” என்று மனம் தளராமல் விடாமுயற்சியோடு  பணியாற்றினால், அந்த முயற்சி, அதற்கேற்ற பெருமையைத் தரும் (குறள் – 611). தெய்வ நம்பிக்கை உடையவர்கள் தாங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டு செயலாற்றியும், எண்ணியதுபோல் வெற்றி அடையாவிட்டாலும், அவர்கள் தங்கள் முயற்சிக்கேற்ற அளவில் பயனடைவார்கள் (குறள் – 619).

 

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.                          (குறள் – 611)

 

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.                        (குறள் – 619)

 

ஒரு செயலைச் செய்யும்பொழுது எதிர்பாராத இடையூறுகள் வருவது உலக இயற்கை. அத்தகைய இடையூறுகள்தான் ஊழ். ஆனால், தளர்ச்சியின்றி, சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவில்லாமல் முயல்கின்றவர் தம் செயலுக்கு இடையூறாக வரும் ஊழையும் வெல்வர் (குறள் – 620) என்பது வள்ளுவரின் கருத்து.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.                            (குறள் – 620)

 

சில சமயங்களில், விடாமுயற்சியோடு உழைக்கும்பொழுது, சில இடையூறுகளால் இடுக்கண் (துன்பம்) வருவது உலக இயற்கை. இன்பத்தை மட்டுமே விரும்பாமல், ஒரு செயலைச் செய்யும்பொழுது துன்பங்கள் வருவதை உலக இயற்கை என்று உணர்பவன் துன்பங்களைக் கண்டு துன்புறமாட்டான் (குறள் – 628). ஆங்கிலத்தில் Murphy’s Law  என்ற ஒரு நியதி உண்டு. அதைத் தமிழில் ”எவையெல்லாம் தவறாகக்கூடுமோ அவை தவறாகிவிடும்”, என்று மொழிபெயர்க்கலாம்.  இத்தகைய சிந்தனை இருந்தால், தவறுகள் நடைபெறும்பொழுது, துன்பப்படாமல், அந்தத் தவறுகளிலிருந்து எப்படி மீள்வது என்பது பற்றிய எண்ணங்கள் தோன்றும்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.                           (குறள் – 628)

 

எதிர்பார்த்தோ அல்லாது எதிர்பார்க்காமலோ இடுக்கண் வந்தால் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கும் வள்ளுவர் விடை அளிக்கிறார். இடையூறுகளால் துன்பம் வந்தால், அந்தத் துன்பத்தைக் கண்டு எள்ளி நகையாட வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு எதுவும் இல்லை என்று வள்ளுவர் அறிவுரை கூறுகிறார்(குறள் – 621).

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல்.                           (குறள் – 621)

 

இடுக்கண்களைக் கண்டு எள்ளி நகையாடுவது என்பது, துன்பங்களைக் கண்டு துன்பப்படாமல் அவற்றை எப்படி வெல்வது என்பதைப் பற்றி சிந்தித்து அவற்றை வெல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இது நடைமுறையில் பின்பற்றக்கூடிய அறிவுரையா என்ற சிந்தனை எழலாம். பல துன்பன்களையும் கண்டு மனம் தளராமல், விடாமுயற்சியோடு வெற்றிபெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், இடையூறுகளால் வரும் துன்பங்களை நம்மால் வெல்ல முடியும் என்று நம்மை ஊக்குவிக்கின்றன. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

அமெரிக்காவில் கடந்த நூற்றாண்டில் ஹெலன் கெல்லர் (Helen Keller, 1880 – 1968) என்ற பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தன் சிறுவதிலேயே, ஒரு நோயால் பாதிக்கப்பட்டு தன் கண்பார்வையும் காதுகேட்கும் தன்மையையும் இழந்தார். கண் பார்வை இல்லாமல், காது கேட்காமல் இருந்தாலும், அவர் கல்லூரிக்குச் சென்று இளங்கலைப் பட்டம் பெற்றார். இத்தகைய ஊனங்களோடு இருந்து கல்லூரியில் பட்டம்பெற்ற முதற் பெண்மணி ஹெலன் கெல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெலென் கெல்லர் ஒரு நூலாசிரியராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் மனிதாபிமானியாகவும் திகழ்ந்தார்.

கடந்த நூற்றாண்டில், ஜப்பானில் வாழ்ந்த ஒருவர், ஒரு சீருந்து ( சீருந்து – car) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கிச் சீருந்துகளை உற்பத்தி செய்வதைத் தன் இலட்சியமாக் கொண்டார். ஆனால், அவரிடம் அதற்குத் தேவையான பொருள்வசதி இல்லாததால், சீருந்துகளைப் பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றில் அவர் சில காலம் பணிபுரிந்தார். அந்தப் பணியில் கிடைத்த வருமானத்தைச் சேமித்து, ஒரு தொழிற்சாலையை நிறுவி, டயோட்டா (Toyota) நிறுவனம் உற்பத்தி செய்யும் சீருந்துகளுக்கு உதிரிப் பாகங்கள் (உதிரிப் பாகங்கள் – Spare Parts) உற்பத்தி செய்தார். தொழிலில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருந்த நேரத்தில், ஜப்பானில் தோன்றிய நிலநடுக்கத்தால் அவருடைய தொழிற்சாலை தரைமட்டம் ஆகியது. மனம் தளராமல், தன்னுடைய தொழிற்சாலையை மீண்டும் உருவாக்கி, அவர் தன் பணியைத் தொடர்ந்தபொழுது, இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கர்கள் வீசிய குண்டுகளின் தாக்கத்தால், அவருடைய தொழிற்சாலை மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கும் மனம் தளராமல், தன்னுடைய தொழிற்சாலையை மீண்டும் தொடங்கி, வெற்றிகரமாகப் பணிபுரிந்து, தான் பெற்ற வருமானத்தால் சீருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கி, மிக வெற்றிகரமாக சீருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். அவர்தான், பல்லாயிரக் கணக்கான சீருந்துகளைத் தயாரித்து உலகெங்கும் விற்பனை செய்யும் ஹாண்டா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உரிமையாளாரகத் திகழ்ந்த சோய்ச்சீரோ ஹாண்டா (Soichiro Honda, 1906 – 1981) என்பவர்.

ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs, 1955 – 2011), அவருடைய நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், வேறொரு நிறுவனத்தைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்தி, மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் தன் கணையத்தில் தோன்றிய புற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டார். இருப்பினும், ஐபேட்(iPad), ஐபாட்(iPod), ஐஃபோன்(iPhone) போன்ற பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரித்து மிகப்பெரிய சாதனைகள் புரிந்தார்.

கடந்த நூற்றாண்டில், அமெரிக்காவில் வில்மா ருடால்ஃப்(Wilma Rudolph, 1940 – 1994) என்ற பெண் தன்னுடைய தந்தைக்கு இருபதாவது குழந்தையாகப் பிறந்தார். அவர் ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் பந்தயங்களில் பதக்கங்களைப் பெறுவதைத் தன் இலட்சியமாக் கொண்டிருந்தார். ஆனால், இளம் வயதிலேயே அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், அவருடைய ஒருகால் ஊனமுற்றது. கால் ஊனமடைந்தாலும், அவர் தன் இலட்சியத்தில் உறுதியாக இருந்தார். ஊனத்தைச் சரிசெய்வதற்குத் தேவையான பல சிகிச்சைகளை இடைவிடாமல் பெற்றுக் குணமடைந்தார். பின்னர், அவர் எண்ணியபடியே, அவர் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.

கடந்த நூற்றாண்டில், தமிழ்நாட்டில் கோபுலு (கோபாலன், 1924 – 2015) என்பவர் தலைசிறந்த ஒவியராகத் திகழ்ந்தார். அவர் ஆனந்த விகடன் இதழ்களுக்கு ஓவியம் வரைந்து புகழ் பெற்றவர். எதிர்பாராதவிதமாக அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய வலது கையால் எதையும் செய்ய முடியாத நிலையை அடைந்தார். வலது கையால் ஒவியம் வரைய முடியாததால், இடது கையால் ஒவியம் வரையக் கற்றுக்கொண்டு. தன்னுடைய ஓவியம் வரையும் பணியைத் தொடர்ந்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison, 1847 – 1931) என்ற விஞ்ஞானி, பல தோல்விகளுக்குப் பிறகு மின்சார விளக்கைக் கண்டுபிடித்தார். ஸ்டீவன் ஹாக்கிங்(Stephen Hawking, 1942 – 2018) என்ற இங்கிலாந்தைச் சார்ந்த இயற்பியல் அறிஞர், தன்னுடைய கைகளும் கால்களும் செயலிழந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்து வெளியிட்டார். மேலும், “A Brief History of Time” என்ற மிகச் சிறந்த நூலை எழுதி அவர் அழியாப்புகழ் புகழ் பெற்றார்.

இவர்களைப்போல் பல இன்னல்களைக் கடந்து தங்கள் இலட்சியங்களை அடைந்து தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பலர். இவர்களைப் பற்றி ஒரு நூலே எழுதலாம். இவர்கள் அனைவரும் “இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.” என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து சாதனைபுரிந்து வெற்றிபெற்ற மாமனிதர்கள்.

5.வெற்றியைப் பகிர்ந்துகொள்ளுங்கள் (Share your Success)

அறிவு இருந்து என்ன பயன்? அறிவுடையவன் பிறர் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகக் கருத வேண்டும்  என்பது வள்ளுவரின் கருத்து(குறள் – 214). மனிதர்கள் அனைவரும் ஒத்தவர்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தவன்தான் உள்ளபடியே உயிர் வாழ்பவன் என்கிறார் வள்ளுவர். மனிதர்கள் அனைவரும் ஒத்தவர்கள் என்பதை உணராதவனை செத்தவனாகவே கருத வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்(குறள் – 214).

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.                 (குறள் – 315)

 

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.                       (குறள் – 214)

 

மற்றவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்ற உணர்வு இருந்தால், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தங்கள் வாழ்க்கையில் எண்ணிய எண்ணியாங்கு எய்தித் தங்கள் இலட்சியத்தை அடைந்தவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்க வேண்டும். கல்வியில் சிறந்தவர்கள் மற்றவர்களும் கல்வி கற்பதற்கும், கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் உதவி செய்ய வேண்டும். இசை, நாடகம், விளையாட்டு, அரசியல், தொழில், விஞ்ஞானம் போன்ற துறைகளிலும், வேறுதுறைகளிலும்  வெற்றிபெற்றவர்கள், தங்கள் இலட்சியங்களை அடைய வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு தங்கள் உதவிக் கரங்களை நீட்டி அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தனிமனிதனின் வெற்றி சமுதாயத்தின் வெற்றியாக மாறும். அவ்வாறு அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பது வள்ளுவரின் எண்ணமாக இருந்ததால்தான்,

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.                         (குறள் -399)

 

என்று அவர் கூறியுள்ளார், அதனால்தான் ”யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று திருமூலரும் கூறியுள்ளார்.

முடிவுரை

ஒருவன் தன் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று கருதினால், ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று விரும்ப வேண்டும். அது அவனுடைய இலட்சியம் அல்லது கனவு. அவன் அந்த இலட்சியத்தை அடைந்தால் - அவனுடைய கனவு நனவானால் – அவன் வெற்றி அடைந்தவனாகக் கருதப்படுவான். ஒருவனுடைய இலட்சியம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவனுடைய வெற்றியும் உயர்ந்ததாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார். அவன் தன்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். செய்ய வேண்டிய செயல்களைத் தீர்மானித்த பிறகு, அந்தச் செயல்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டும். திட்டமிடும்பொழுது, பொருள், கருவி, செயல், காலம், இடம் ஆகிய ஐந்தையும் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். திட்டமிட்ட பிறகு, விடாமுயற்சியோடு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். திட்டங்களைச் செயல்படுத்தும்பொழுது, இடையூறுகள் வரலாம். அந்த இடையூறுகளைக் கண்டு மனம் தளராமல் உழைக்க வேண்டும். உயர்ந்த இலட்சியம், இலட்சியத்தை அடைவதற்கான செயல்களைப் பற்றிய தெளிந்த சிந்தனை, சரியான திட்டம், விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பு ஆகியவை அனைத்தும் இருந்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஒருவன் தன் இலட்சியத்தை அடைவதில் வெற்றிபெற்றால் மற்றவர்களும் அவர்களுடைய இலட்சியத்தை அடைவதற்கு உதவி செய்ய வேண்டும். அவ்வாறு உதவி செய்தால், தனி மனிதனின் வெற்றியை சமுதாயத்தின் வெற்றியாக மாற்ற முடியும்.

 


Tuesday, June 9, 2020

வள்ளுவர் பார்வையில் புறநானூற்று இறைமாட்சி

வள்ளுவர் பார்வையில் புறநானூற்று இறைமாட்சி[1]

 

மனிதன் இவ்வுலகில் எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்து, வையத்து வாழ்வாங்கு வாழ வழி காட்டும் வாழ்வியல் நூல் திருக்குறள்.  வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுபாட்டையும் ஆராய்ந்து அவற்றிற்குகந்த அறிவுரைகளைத் திருவள்ளுவர் திருக்குறளில் வழங்குகிறார்.  இல்லறம், துறவறம் ஆகிய கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்று அறத்துப்பாலில் கூறப்பட்டிருக்கிறது.  அதுபோல், அரசர்களும் அமைச்சர்களும் எத்தகைய குணநலன்கள் உடையவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் எப்படிப் பணிபுரிய வேண்டும் என்ற கருத்துக்களை விளக்கமாகவும் தெளிவாகவும் வள்ளுவர் கூறியிருப்பதை பொருட்பாலில் அரசியல், அமைச்சியல் போன்ற பகுதிகளில் காணலாம்.  குறிப்பாக, “இறைமாட்சி” என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய குணநலன்களைக் குறிப்பிடுகிறார்.

 

அஞ்சாமையும், ஈகையும், அறிவும், ஊக்கமும் அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டும் (குறள் – 382). அரசன் தன் பணிகளைச் செய்வதில் காலம் தாழ்த்தாமல் செய்யும் ஆற்றலும், கல்வியும், மனத்திட்பமும் நீங்காமல் உடையவனாக இருக்க வேண்டும் (குறள் – 383). அறநெறிகளிலிருந்து தவறாமல், மற்றவர்களால் எவ்விதத் தீங்கும் நேராமல் தடுத்து, வீரத்திலிருந்து வழுவாமல் இருப்பவனே சிறந்த அரசன் (குறள் – 384). ஒரு மன்னன் மக்களால் காண்பதற்கு எளியவனாகவும், எவர் மாட்டும் கடுஞ்சொற்கள் பேசாதவனாகவும், இருப்பானானால் அவனது நாட்டை, மற்ற நாடுகளைவிடச் சிறந்ததாக உலகம் உயர்வாகப் பேசும் (குறள் – 386). இனிய சொற்களைக் கூறி, வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்து, மக்களைக் காப்பாற்றவல்ல அரசனக்கு, அவனுடைய சொல்லாற்றலாலேயே, இவ்வுலகமானது அவன் கருதுகின்ற அளவுக்கு அவனுடையதாக ஆகிவிடும் (குறள் – 387). நடுவுநிலையோடு ஆட்சிபுரிந்து மக்களைக் காப்பாற்றும் மன்னன் அவனுடைய குடிமக்களால் கடவுளென்று கருதப்படுவான் (குறள் – 388). தன் செவிகள் கசக்கும்படி, தன் குற்றங்களை அமைச்சர், மக்கள் முதலியோர் இடித்துக் கூறும்பொழுது, அவர்களுடைய சொற்களைப் பொறுமையோடு கேட்கக் கூடிய பண்புள்ள வேந்தனின் ஆட்சியின் கீழ் இவ்வுலகம் தங்கும் (குறள் – 389). நன்கொடை வழங்குதல், யாவரிடத்தும் அன்பாக இருத்தல், செங்கோல் செலுத்துதல், குடிமக்களைப் பாதுகாத்தல் ஆகிய நான்கு பண்புகளும் உடைய அரசன், பிற அரசர்க்கெல்லாம் ஒளிதரும் விளக்குப் போன்றவன் ஆவான் (குறள் – 390)

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.                             (குறள் – 382)

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு.                                 (குறள் – 383)

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.                                        (குறள் – 384)

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்                                  (குறள் – 386)

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.                            (குறள் – 387)

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.                           (குறள் – 388)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.                            (குறள் – 389)

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.                       (குறள் – 390)

தமிழகத்தின் பொற்காலம் என்று கருதப்படும் சங்க காலத்தில் (கி.மு. 500 - கி.பி. 200) வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைத் தவிர வேறு சிறப்பான சான்றுகள் இல்லை.  சங்க காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள் எத்தகைய குணநலன்கள் உடையவர்களாக இருந்தார்கள் என்றும், அவர்கள் ஆட்சி எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் அரிய கருத்துக்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. புறநானூற்றில் நாம் காணும் மன்னர்களின் குணநலன்களைத் திருக்குறளில் வள்ளுவர் கூறிய கருத்துக்களோடு ஒப்பிடுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இறைமாட்சி என்ற அதிகாரத்தில் மன்னனுக்குரிய பண்புகளை குறட்பாக்கள் 382, 383, 384, 386, 387, 388, 389 மற்றும் 390 ஆகியவற்றில் வள்ளுவர் கூறும் குணங்களை  ஐந்து பிரிவாகப் பிரிக்கலாம்.

1) அஞ்சாமை, துணிவுடைமை, ஊக்கம், தூங்காமை, மறனிழுக்காமை, மானம்

2) அறிவு, கல்வி

3) ஈகை, கொட, அளி

4) காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல்லன் அல்லாமை, இன்சொல் கூறல், செவிகைப்பச் சொற்பொறுத்தல்

5) அறவழி நிற்றல், முறைசெய்து காப்பாற்றுதல், செங்கோல் செலுத்துதல், குடியோம்பல்.

 

ஒவ்வொரு பிரிவில் உள்ள குணங்களும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையவை.  முதற் பிரிவில், ”தூங்காமை” என்ற சொல் ”காலம் தாழ்த்தாது விரைந்து செயல் படுதல்” என்றும், ”துணிவுடைமை” என்ற சொல் ”மனத்திட்பம்” என்றும் பொருள்படும். இந்தப் பிரிவில் உள்ள குணங்களெல்லாம் வீரத்தோடு போர்புரிந்து வெற்றி கண்ட மன்னர்களிடம் இருக்கக் கூடிய தொடர்புடைய குணங்களாகும்.  அடுத்த பிரிவில், இயற்கையாக உள்ள அறிவைப் பெருக்குவதற்குக் கல்வி பயன்படுவதால், அறிவும் கல்வியும் தொடர்புடையவை எனக் கருதலாம்.  மூன்றாவது பிரிவில் உள்ள ”அளி” என்ற சொல்லுக்கு “ அன்பு, அருள், இரக்கம்” என்று பொருள்.  மற்றும், இந்த அதிகாரத்தில் ஈகையும் கொடையும், “வேண்டுவர்க்கு வேண்டுவன கொடுத்தல்” என்ற ஒரே பொருளில் கூறப்பட்டிருப்பதாகப் பரிமேலழகர் விளக்கம் அளிக்கிறார்.  ஆகவே, அளி என்னும் குணம், ஈகைக்கும் கொடைக்கும் அடிப்படையாக இருப்பதால் இப்பிரிவில் உள்ள குணங்கள் மூன்றும் தொடர்புடையவையாகும்.  நான்காவது பிரிவில் காணப்படும் “செவிகைப்பச் சொற்பொறுத்தல்” என்னும் பண்பு, தான் விரும்பாதவற்றை ஒருவர் தன் காது கசக்குமாறு கூறினாலும் பொறுத்துக் கொள்வது என்று பொருள்படும். இப்பிரிவில் உள்ள நான்கு குணங்களும், ஒரு மன்னன் மற்றவர்களோடு பழகும்போது எப்படி நடந்து கொள்ளவெண்டும் என்பதை நேர்முகமாகவும் எதிர்மறையாகவும் கூறுவதால், இவை நான்கும் தொடர்புடைய குணங்களாகும்.  ஐந்தாவது பிரிவில் காணப்படும் ”முறைசெய்து காப்பாற்றுதல்” என்பதற்கு, நடுவு நிலைமையோடு நீதி வழங்கி மக்களைக் காப்பாற்றுதல் என்று பொருள்.  செங்கோல் செலுத்துவது என்பது நல்லாட்சி நடத்துவது என்ற கருத்துள்ள சொல். முறை செய்து காப்பாற்றுவதும் செங்கோல் செலுத்துவதும் அறத்தின் அடிப்படையில் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்படும் செயல்கள். இப்பிரிவில் தொகுக்கபட்டவைகளை குணநலன்கள் என்பதைவிட மன்னனின் செயல்முறைகள் என்பது பொருந்தும்.  இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய நல்லாட்சி முறை என்பது தெளிவு. 

 

இங்கு குறிப்பிட்ட குணநலன்களும் செயல்முறைகளும் புறநானூற்று மன்னர்களிடம் இருந்தன என்பதற்குப் புறநானூற்றில் பல சான்றுகள் உள்ளன.  அச்சான்றுகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

 

அஞ்சாமை, துணிவுடைமை, ஊக்கம், தூங்காமை, மறனிழுக்காமை, மானம்: சேரன் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற மன்னன் நிலத்தைப் போன்ற பொறுமையும், ஆகாயத்தைப் போல் பரந்த அறிவும் ஆராயும் திறனும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் திறமையும், குளிர்ந்த நீரைப் போல் அளியும் உடையவன் என்று முரஞ்சியூர் முடிநாகனார் என்ற புலவர் கூறுகிறார் (புறம் – 2).  சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் படை வலிமையையும் போர் புரியும் ஆற்றலையும் வியந்து பாராட்டி, அவனை எதிர்த்தவர்களின் நாட்டு மக்கள் “தாயில் தூவாக் குழவி போல் ஓவாது கூவும்” என்று பரணர் கூறுகிறார் (புறம் - 4).  சோழன் கரிகால் பெருவளத்தானின் வலிமையினாலும், போர் புரியும் ஆற்றலாலும் அவன் பகைவரை அழிப்பதை இரவும் பகலும் கருத்தாகக் கொண்டவன் என்றும், அவன் பகைவர்களின் நாட்டை தீயினால் அழித்து அந்நாட்டு மக்கள் கதறி அழும் வகையில் அங்குள்ள பொருட்களை கொள்ளை கொண்டான் என்றும் கருங்குழல் ஆதனார் பாடுகிறார் (புறம் - 7).  பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரத்தையும் வெற்றியையும் “வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய தண்டா ஈகைத் தகைமாண் குடுமி” என்று காரிகிழார் பாராட்டுகிறார் (புறம் - 6).  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்துப் போரிட்ட எழுவரை வென்று வாகை சூடியதை இடைக்குன்றூர் கிழார் , “நாடுகெழு திருவிற் பசும்பூண் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே” என்று புகழ்கிறார் (புறம் - 76).  மற்ற புலவர்களும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரத்தையும், போர் செய்யும் ஆற்றலையும் அவன் பெற்ற வெற்றிகளையும் புகழ்ந்தும் வியந்தும் பாடியுள்ளனர் (புறம் 18, 19, 23, 24, 25, 26,77, 78, 79, 371, 372).  இந்த மன்னர்களைப் போல், எதற்கும் அஞ்சாது, துணிவோடும் ஊக்கத்தோடும் காலம் தாழ்த்தாது செயல்பட்டுப் போர்க்களத்தில் பெரும் சாதனைகளைப் புரிந்த மன்னர்களைப் பற்றிய செய்திகளைப் புறநானூற்றில் பல பாடல்களில் காணலாம்.

 

    வெண்ணி என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனின் அம்பு சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்து, முதுகில் உண்டாக்கிய புண்ணால், அவன் வெட்கி, வடக்கிருந்து உயிர் துறந்தான் என்ற செய்தி புறநானூற்றுப் பாடல் 66-இல் காணப்படுகிறது.  மற்றும், சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானிடம் தோல்வியுற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது, பசியின் கொடுமையால் சிறைக்காவலரிடம் உணவு கேட்டான். அவர்கள் அவனுக்கு உணவு கொண்டு வருவதற்கு காலம் தாழ்த்தியதைக் கண்டு வெட்கப்பட்டு, தன்மானத்தால் உந்தப்பட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான் (புறம் - 74).  இந்தப் பாடல்கள் சங்க காலத் தமிழ் மன்னர்கள் மானம் மிகுந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக உள்ளன.

 

அறிவு, கல்வி:  உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறியதிலிருந்து (புறம் - 183) மன்னர்கள் கல்வியின் பயனை நன்கு அறிந்திருந்தனர் என்பது தெரிய வருகிறது. மற்றும், புறநானூற்றுப் பாடல்களை இயற்றிய 156 புலவர்களில் 13 பேர் அரசர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.  பாடல்களை இயற்றிய மன்னர்களின் பட்டியலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் சில சிற்றரசர்களும் இடம் பெற்றுள்ளனர்.  ஆகவே, மன்னர்கள் கல்வியின் சிறப்பை அறிந்திருந்தது மட்டுமல்லாமல் கல்வி கற்றவர்களாகவும் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அமைச்சர்களோடும் புலவர்களோடும் கலந்து ஆலோசித்து நல்லாட்சி செய்து மக்களைப் பாதுகாத்தார்கள் என்ற வரலாற்றுச் செய்திகளிலிருந்து, மன்னர்கள் அறிவுடையவர்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.

 

ஈகை, கொடை, அளி: “பெரிய கடலின் ஆழத்தையும், அகன்ற உலகத்தின் பரப்பையும், காற்று உலாவும் திசையையும், வெறுமையாக உள்ள ஆகாயத்தையும் அளந்து அறிய முடிந்தாலும் முடியும்; ஆனால் உன் அறிவு, அருள், கண்ணோட்டம் ஆகியவற்றை அளத்தல் அரிது” என்று குறுங்கோழியூர் கிழார், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் குணநலன்களைப் பாராட்டுகிறார் (புறம் - 20).  சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் காணச் சென்றால் அதிக நேரம் காத்திருக்காமல் பொன்னாலான தாமரை மலர்களைப் பெறுவாய் என்று கூறி ஆலத்தூர் கிழார் ஒரு பாணனை ஆற்றுப்படுத்துகிறார் (புறம் - 69).  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்,  தான் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி பெறாவிட்டால் தனக்கு “புரப்போர் புன்கண் கூற இரப்போர்க்கு ஈயா இன்மை” வந்தடையட்டும்  என்று சூளுரை கூறுகிறான் (புறம் - 72).  “அலத்தற் காலையாயினும் புரத்தல் வல்லன் (புறம் - 103)” என்று அதியமான் நெடுமான் அஞ்சியின் அளவற்ற ஈகையை அவ்வையார் பாடுகிறார். முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரியின் கொடைத்திறம் மழையை ஒத்தது என்று கபிலர் பாரியின் கொடையைப் புகழ்கிறார் (புறம் - 107).  “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய் அலன்” (புறம் - 134) என்று உறையூர் ஏணிச்சேறி முடமோசியார், ஆய் அண்டிரனின் வள்ளல் தன்மையை வியந்து பாடுகிறார். எண்ணற்ற தேர்களை மலையமான் திருமுடிக்காரி இரப்போர்க்கு அளித்த செய்தியை கபிலர் கூறுவதைப் புறநானூற்றுப் பாடல் 123-இல் காணலாம். மற்றும், மூவேந்தர்களின் அல்லது சிற்றரசர்களின்  ஈகைத் தன்மையை புறநானூற்றுப் பாடல்கள் “வரையா ஈகை”, ஒம்பா ஈகை”, ஆனா  ஈகை” என்ற சொற்றொடர்களால் பல பாடல்களில் குறிப்பிடுவதிலிருந்து, சங்க காலத்து மன்னர்கள்  ஈகையில் சிறந்தவர்களாக விளங்கினார்கள் என்பது நன்கு புலனாகிறது.

    காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல்லன் அல்லாமை, இன்சொல் கூறல், செவிகைப்பச்  சொற்பொறுத்தல்: “எம் அரசன் இருக்கும் ஆரவாரமான  மூதூரில்  அவ்வூருக்கு உரியவர் போல் காலம் பாராது நெருங்கி அவன் வீற்றிருக்கும் அரசவையில் தலை நிமிர்ந்து செல்வது எம் போன்ற இரவலர்க்கு எளிது “ என்று கூறும் சுவையான பாடலில் (புறம் - 54) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சேரமான் குட்டுவன் கோதை காட்சிக்கு எளியவனாக இருந்ததைக் குறிப்பிடுகிறார்.  ”ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாலின் நீர்த்துரை படும் பெருங் களிறு போல இனியை பெரும எமக்கே” என்று அவ்வையார் (புறம் - 94) கூறுவதிலிருந்து அதியமான் காட்சிக்கு எளியவனாகவும் இனியவனாகவும் இருந்ததாகத் தெரிகிறது.  சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இருந்த பகைமை, போராக மாறிய பொழுது, நெடுங்கிள்ளி போருக்குப் பயந்து தன் அரண்மனைக்குள் ஓளிந்து கொண்டிருந்தான். அவ்வமயம், கோவூர் கிழார் என்னும் புலவர் ” அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல், மறவை யாயின், போரொடு திறத்தல்;  அறவையும் மறவையும் அல்லையாகத்  திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்  நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே” என்று கூறும் பாடல்  (புறம் - 44) செவிகைப்பச் சொற்பொறுத்தலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

அறவழி நிற்றல், முறைசெய்து காப்பாற்றுதல், செங்கோல் செலுத்துதல், குடியோம்பல்: நால்வகைப் படைச் சிறப்புடையதாயினும்  பெருமை மிக்க அறநெறியை அடிப்படையாகக் கொள்வதே  அரசனுக்கு வெற்றியாகும் என்று மதுரை மருதன் இளநாகனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு அறிவுரை கூறியதிலிருந்து, அறவழி நிற்றல் அரசர்க்குரிய பண்பு என்று கருதப்பட்டதை அறிகிறோம் (புறம் - 55).  அதே புலவர், நடுவு நிலைமை தவறாமல் நீதி வழங்கி முறைசெய்து மக்களைக் காப்பாற்றுவதின் முக்கியத்துவத்தை, “ நமர் எனக் கோல்கோடாது பிறர் எனக் குணம் கொல்லாது ஞாயிற்றன்ன வெந்திறல் ஆண்மை” அரசனுக்குரிய பண்புகளில் ஒன்று என்றும் கூறுகிறார்.  மற்றொரு பாடலில், இடைக்காடனார் என்னும் புலவர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், “புலிபுறங் காக்கும் குருளை போல, மெலிவில் செங்கோல்” செலுத்தி மக்களைக் காத்ததாகக் கூறுகிறார் (புறம் - 42).  செங்கோல் செலுத்தும் அரசன் என்று மக்களால் கருதப்படுவது இன்றியமையாதது என்ற கருத்தைப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இயற்றிய பாடலிலும் காணலாம் (புறம் - 72).

 

மேலே குறிப்பிட்ட சான்றுகளிலிருந்து புறநானூற்றுக் காலத்து மன்னர்கள் வள்ளுவர் இறைமாட்சியில் கூறும் குணங்களையும் செயல்முறைகளயும் கடைப்பிடித்தவர்களாகவோ அல்லது அவை அனைத்தும் மன்னருக்கு உரிய ஒழுக்கம் என்று எண்ணி அவற்றைப் பின்பற்றி வாழ முயற்சி செய்தார்கள் என்றோ தெரிகிறது. இத்தனை நற்குணங்களும் அக்காலத்து மன்னர்களிடம் இருந்தாலும் அவர்களிடம் சில குறைகளும் இருந்தன. அக் குறைகளால் நேரிட்ட விளைவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

 

ஒற்றுமையின்மை: புறநானூறு காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் தங்கள் நாட்டைச் சிறப்பாக ஆண்டாலும், அவர்களிடத்தில் இருந்த பொறாமையினாலும், பகை உணர்வினாலும் தமிழகத்தில் எப்பொழுதும் போர்முரசு ஒலித்துக்கொண்டிருந்தது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (புறம் - 6, 15), சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி (புறம் - 4), கரிகால் வளவன் (புறம் - 7), சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (புறம் - 16), பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (புறம் - 23) போன்ற மன்னர்கள், தன் நாடு அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களைத் துன்புறுத்தியதையும், அவர்கள் நாட்டைத் தீக்கிரையாக்கியதோடு மட்டுமல்லாமல் பெரும் அழிவுகளை விளைவித்ததையும் புறநானூற்றில் பல பாடல்களில் காண்கிறோம்.  அக்காலத்து மன்னர்களிடையே, தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை மனப்பன்மை இல்லை.  தமிழர்கள் தமிழால் ஒன்றுபடவில்லை.

 

கொடைமடம்: புலவர்களுக்கும், பாணர்களுக்கும் மற்ற இரவலர்க்கும் அளவற்ற பொருட்களை மன்னர்கள் வாரி வழங்கினர். நாட்டினுடைய செல்வத்தைத் தன் சொந்த செல்வமாக அவர்கள் எண்ணியதாகத் தோன்றுகிறது.  இரவலர்க்குப் பொருள் வழங்குவது நற்செயலானலும் அச்செயல்கள் அவர்களின் நெடுங்கால நல்வாழ்வுக்கு வழி வகுத்ததாகத் தெரியவில்லை.  இரவலர்கள் இரவலர்களாகவே மன்னர்களையும் வள்ளல்களையும் நம்பி வாழ்ந்து வந்ததாகத் தோன்றுகிறது.  இத்தகைய “தேற்றா ஈகை”யால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கோ வழியில்லை. ”ஆற்றின் அளவறிந்து ஈக; அது பொருள் போற்றி வழங்கும் நெறி (குறள் - 477) என்னும் குறளுக்கேற்ப அக்காலத்து மன்னர்கள் செயல்பட்டதாகத் தோன்றவில்லை.

 

பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் இல்லை: “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு (குறள் - 385)” என்ற குறளில் அரசன் வருவாயைப் பெருக்கி, வளம் சேர்த்து, அதனைக் காத்து நறசெயல்களுக்குப் பகுத்தளிக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.  சங்காலத்து மன்னர்கள் வரி விதித்து நாட்டின் செல்வத்தைப் பெருக்கியதாகக் காண்கிறோம். போரில் வெற்றி பெற்றுப் பகைவர்களின் பொருளைத் தமதாக்கிக் கொண்டதாகக் காண்கிறோம்.  கரிகால் வளவன், பாண்டியன் முடத்திருமாறன் போன்ற ஒரு சில மன்னர்களைத் தவிர, மற்ற மன்னர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உண்டுபண்ணக் கூடிய திட்டங்களையோ அல்லது பொது மக்களின் நல்வாழ்விற்குத் தேவையான திட்டங்களயோ தீட்டிப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கித் தொழில், வணிகம் ஆகியவற்றை வளர்த்து நாட்டின் செல்வத்தைப் பெருக்கியதாகத் தெரியவில்லை.

 

ஆட்சித் திறன்: சங்க காலத்து மன்னர்கள் நல்லாட்சி நடத்தி மக்களைப் பாதுகாத்தாலும், போரில் அவர்கள் வென்ற நாடுகளில் தமது ஆட்சியை நிறுவி அந்த நாடுகளைத் தமது நாட்டோடு இணைத்துத் தமது நாட்டை அவர்கள் வலுப்படுத்தியதற்கான சான்றுகள் இலக்கியத்திலோ அல்லது வரலாற்றிலோ காணப்படவில்லை.

 

முடிவாக, வள்ளுவர் கூறும் குணநலன்கள் பலவும் சங்க காலத்து மன்னர்களிடம் காணப்பட்டாலும், ஒற்றுமையின்மை, கொடைமடம், பொருளாதார வளர்ச்சியில் அக்கறையின்மை, வென்ற நாடுகளை சரியான முறையில் ஆட்சி செய்யாத குறை, ஆகியவற்றால் பொருளாதார மற்றும் அரசியல் வலிமை குன்றி,  தமிழகத்தின் பொற்காலம் மறைந்து, களப்பிரர்களின் ஆட்சிக்காலம் என்று கருதப்படும் இருண்ட  காலம் தொடங்கியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.     

 

துணை நூல்கள்

பண்டாரத்தார் சதாசிவ. தமிழக வரலாற்று வரிசை -1. அமிழ்தம் பதிப்பகம், சென்னை - 600 017.

 பிள்ளை, ஒளவை சு. துரைசாமி. புறநானூறு பகுதி 1, 2. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 522, டி.டி.கே. சாலை, ஆள்வார்பேட்டை, சென்னை - 600 018.

பாவாணர். தேவநேய. திருக்குறள் தமிழ் மரபுரை. இந்து பப்ளிகேஷன்ஸ் 40, உஸ்மான் தெரு,  தி.நகர்,சென்னை  600 017.

முருகரத்தனம் முனைவர் தி. குறள் கூறும் இறைமாட்சி. மதுரைப் பல்கலைக் கழகம், மதுரை 625 021.



[1] 2010 – ஆம் ஆண்டு, கோயம்புத்தூரில்  நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இக்கட்டுரை வெளியிடப்பட்டது