கற்பொழுக்கம்
ஊர்மக்கள் எழுப்பிய அலரால், களவொழுக்கத்தில்
இருந்த காதலர்கள் தங்கள் பெற்றோர் தங்களுடைய திருமணத்திற்குச் சம்மதிப்பார்கள் என்று
எதிர்பார்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. அவர்களுடைய
திருமணம் இனிதே நடைபெற்றது. இனி
அவர்கள் எவருக்கும் தெரியாமல் இரவில் சந்திக்கத் தேவையில்லை. ஊரார் பேச்சைப் பற்றிக்
கவலைப்படத் தேவையில்லை.
தலைவன்
தலைவியைப் பிரிந்து போருக்குச் செல்லுதல்
திருமணமாகி
இரண்டு மாதங்களே ஆயின. அவர்கள் வாழும் நாட்டிற்கும்
மற்றொரு நாட்டிற்கும் இடையே போர் தொடங்கியது. இளைஞர்கள் எல்லோரும் போரில் கலந்துகொள்ள
வேண்டும் என்று அவர்கள் அரசன் அறிவித்தான். தலைவனும் அரசனுக்குத் துணையாகப் போர்புரிந்து,
தன் நாடு வெற்றிபெறத் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டுமென்பதில் ஆவலாக இருந்தான். ஆனால்,
தன் மனைவியைவிட்டுப் பிரிய வேண்டும் என்பதை நினைத்தால் அவனுக்கு மிகுந்த வருத்தமாக
இருந்தது. அவன் போருக்குச் செல்வதை அவனுடைய மனைவி சற்றும் விரும்பமாட்டாள் என்பதையும்
அவள் அளவு கடந்த வருத்தம் அடைவாள் என்பதையும் நினைத்து அவன் மனம் கலங்கினான். இருப்பினும்,
நாட்டிற்காகப் போராடுவது தன் தலையாய கடமை என்பதில் உறுதியாக இருந்தான். போருக்குச்
செல்வதற்கான ஏற்பாடுகளை அவன் தன் மனைவிக்குத் தெரியாமல் செய்துகொண்டிருந்தான்.
ஒருநாள் தலைவியின் தோழி வந்தாள். தலைவி
வருத்தத்தோடு இருப்பதைக் கண்ட அவள், “உனக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள்தான் ஆயின.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உன் முகத்தில் கவலையைக் காண்கிறேன். ஏன்? என்ன ஆயிற்று?”,
என்று கேட்டாள். அதற்குத் தலைவி, “போருக்குப் போவதற்குத் தேவையான ஏற்பாடுகளை என் கணவர்
எனக்குத் தெரியாமல் செய்துகொண்டிருகிறார். அவர் போருக்குப் போகப்போவது எனக்குத் தெரியாது
என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இன்னும் சில நாட்களில் என்னைவிட்டுப்
பிரிந்து சென்றுவிடுவார்.” என்று கூறினாள். ”முன்பெல்லாம் அவர் என்னைப் பார்த்தாலே
நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். இப்பொழுது, நாங்கள் கூடி மகிழ்ந்தாலும், அவர் என்னைவிட்டுப்
பிரிந்துபோகப்போகிறாரே என்பதை நினைத்து அஞ்சுகிறேன். என்னால்
பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாக அறிந்த என் கணவர், என்னைவிட்டுப்
பிரிவதால், ”“உன்னைப் பிரியேன்.”, என்று அவர் முன்பு சொல்லிய சொல்லை என்னால் நம்ப முடியவில்லை.”,
என்று வருத்தத்தோடு தலைவி தோழியிடம் கூறினாள். தலைவியின் மனநிலையைத் தோழி நன்கு உணர்ந்தாள்,
“நான் உன்னுடைய கணவரிடம் பேசுகிறேன். அவர் உன்னைவிட்டுப் பிரிந்தால், நீ மிகுந்த வருத்தம்
அடைவாய் என்றும், போருக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறேன். நீ கவலைப்படாதே.”, என்று
தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள். தான் கூறியபடியே, தோழி தலைவனைச் சந்தித்து, அவனைப்
போருக்குப் போக வேண்டாம் என்றும், அவன் போருக்குப் போனால், அவன் மனைவி மிகவும் வருந்துவாள்
என்றும் அவனிடம் கூறினாள். போருக்குசெல்வது தன்னுடைய தவிர்க்க முடியாத கடமை என்றும்
தான் விரைவில் திரும்பிவந்துவிடுவதாகவும் அவன் கூறினான். தலைவன் கூறியதைத் தோழி தலைவியிடம்
கூறினாள். அதற்குத் தலைவி, “என் கணவர், என்னைவிட்டுப் பிரிந்து போகப்போகிறேன் என்று
சொல்லுகின்ற அளவிற்குக் கொடியவராக இருப்பாரானால், அவர் திரும்பிவந்து என்னிடம் அன்பு காட்டுவர் என்ற ஆசையை விட்டுவிட வேண்டியதுதான்.”,
என்று அழுதுகொண்டே கூறினாள்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, தான் போருக்குப்
போகப்போவதைப் பற்றித் தலைவியிடம் கூற வேண்டும் என்று தலைவன் முடிவு செய்தான். அவன்
தலைவியிடம் வந்து, தான் போருக்குப் போவதைப் பற்றிக் கூற முயற்சி செய்தான். அவன் என்ன
சொல்லப் போகிறான் என்பதை உணர்ந்த தலைவி, “நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து செல்லவில்லை
என்ற செய்தி இருந்தால் அதை என்னிடம் சொல்லுங்கள்; அதை விட்டுவிட்டு, நான் பிரிந்து
சென்று விரைவில் திரும்பிவந்துவிடுவேன்.”, என்று கூற விரும்பினால், அதை நீங்கள் திரும்பிவரும்பொழுது
யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் சொல்லுங்கள்.”,
என்று கோபத்துடன் கூறினாள். மறுநாள், மனத்தில் கோபம் இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,
தலைவன் போருக்குச் செல்வதற்கு சம்மதம் அளித்து, அவள் அவனை வாழ்த்தி வழியனுப்பினாள்.
சில
நாட்கள் கழித்து, தோழி தலைவியைப் பார்க்க வந்தாள். தலைவி வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்து,
“கணவர் பிரிந்து செல்வதற்கு உடன்பட்டு, பிரிவால் வரும் துன்பத்தை நீக்கிப் பிரிவைப் பொறுத்துக்கொண்டு
உயிர் வாழ்பவர் பலர்.
உன் கணவர் போரில் வெற்றிபெற்று விரைவில் திரும்பிவருவார். நீ உன் மனத்தைத் தேற்றிக்கொள்;
வருந்தாதே!” என்று கூறித் தலைவிக்கு ஆறுதல் அளிக்க முயற்சி செய்தாள்.
தலைவன்
சென்று மேலும் சில நாட்களாயின. தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து அவளுக்கு ஆறுதலாக
ஏதாவது சொல்லலாம் என்ற நோக்கத்தோடு தோழி வந்தாள். தலைவி தனிமையில் அழுதுகொண்டு இருப்பதைக்
கண்ட தோழி, “ஏன் அழுகிறாய்? போர் விரைவில் முடிந்து, உன் கணவர் வெற்றியுடன் திரும்பிவருவார்.
மகிழ்ச்சியாக இரு!. அழாதே!” என்று கூறினாள். ”எனக்கு அவர்மீது உள்ள ஆசையை நான் மறைக்கத்தான் பார்க்கிறேன்.
ஆனால், எனக்கு அவர்மீது உள்ள காதலால் வரும் துன்பம், நீரை இறைக்கும்பொழுது ஊற்றிலிருந்து
நீர் பெருகுவதுபோல் மேலும் மேலும் பெருகுகிறது. ஆனால்,
என்னுடைய நாணத்தால், எனக்கு அவர்மீது உள்ள ஆசையைப் பற்றி எவரிடமும் சொல்ல முடியாமல்
இருக்கிறேன். என்னுடைய உயிர் நாணத்திற்கும் காமத்திற்கும் நடுவே சிக்கிக்கொண்டு தவிக்கிறது. காதலால்
வருகின்ற ஆசையாகிய கொடிய கடலைக் கடக்க முயற்சி செய்கிறேன்; ஆனால், கரைசேர முடியவில்லை.
அதனால் நான் இந்த நள்ளிரவில் அக்கடலில் தனியாக இருக்கிறேன். என்னுடைய
காமநோய் ஒரு கடலைப்போல் பரந்து கிடக்கிறது. ஆனால், அதைக் கடந்து செல்வதற்கான தோணி என்னிடம்
இல்லை. இந்த
இராப் பொழுது இரங்குதற்குரியது. அது எல்லோரையும் தூங்கவைத்துவிட்டு என்னை மட்டும் துணையாகக்
கொண்டுள்ளது.
நான் ஏன் அழுதுகொண்டிருக்கிறேன் என்று நீ கேட்கிறாயே? ஏன் தெரியுமா? என் காதலர் இருக்கும்
இடத்திற்கு என் உள்ளம் விரைந்து செல்கிறது. ஆனால், என் கண்களால் அவ்வாறு விரைந்துசென்று
அவரைக் காணமுடியவில்லை. அதனால்தான், என் கண்கள்
வெள்ளம்போல் கண்ணீரைச் சொரிந்து அதில் நீந்திக்கொண்டிருக்கின்றன. எனக்கு
அவரை இப்பொழுதே காணவேண்டும்போல் இருக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்று தேம்பித்தேம்பி
அழுதுகொண்டு தலைவி தோழியிடம் கூறினாள்.
“உன்
கணவர் விரைவில் திரும்பிவருவார் என்பதில் நீ உறுதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்
உன் கண்கள் அழா. நீ அழுவதற்கு நீதான் காரணம். உன் கண்கள் அல்ல. நீ ஏன் உன் கண்களைக்
குறை கூறுகிறாய்? சரி, சரி. கண்களைத் துடைத்துக்கொள்! அழாதே!”, என்று தோழி கூறினாள்.
”உனக்கு என் கண்களைப் பற்றித் தெரியாது. அவைதான் என்னுடைய துன்பத்திற்கெல்லாம் காரணம்.
இந்தக் கண்கள் அவரைக் காட்டியதால்தானே எனக்கு இந்தத் தீராத துன்பம் வந்துசேர்ந்தது.
அப்படி இருக்க, இப்போது இந்தக் கண்கள் அழுவது ஏன்? இந்தக்
கண்கள் அன்று திடீரென்று அவரை விரும்பிப் பார்த்து, காதலை வளர்த்து, இப்பொழுது அவரைக்
காணமுடியவில்லையே என்று அழுவது சிரிக்கத்தக்கதாக இருக்கிறது. கடலினும்
பெரிய காமநோயை உண்டாக்கிய எனது கண்கள் தூங்க முடியாமல் துன்பத்தை அனுபவிக்கின்றன. சிந்தித்துப்
பார்த்தால், எனக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக்கொண்டது
மிகவும் இனிமையானதுதான் என்று தோன்றுகிறது. அன்று
விரும்பி அவர்மீது ஆசைப்பட்டு அவரைக்கண்ட கண்கள் இன்று துன்பத்தை அனுபவித்து அனுபவித்துத்
தம்மிடம் உள்ள நீர் வற்றிப்போகட்டும்.”
என்று தலைவி தன் கண்களைப் பற்றித் தன் தோழியிடம் கூறினாள்.
தலைவி
தன் கண்களைப் பற்றி இதுவரை கூறியதைப் பொறுமையாகக் கேட்ட தோழி, “உன் கண்களால்தான் நீ
அவரைக் கண்டாய்; காதல் கொண்டாய்; திருமணம் செய்து கொண்டாய்; நீங்கள் இருவரும் இதுவரை
மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கை நடத்தினீர்கள். இப்பொழுது சிறிதுகாலம் பிரிந்திருக்கப்
போகிறீர்கள். நான் முன்பே கூறியதுபோல், இதுபோல், ஆடவர் அவ்வப்பொழுது போருக்காகவும்
பொருளுக்காகவும் சிலகாலம் பிரிந்து செல்வது இயற்கை. நீ இந்தப் பிரிவை பொறுத்துக்கொள்ள வேண்டும்.” என்று
அறிவுரை கூறினாள்.
”நாங்கள்
மற்ற கணவன் மனைவி போல் இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் அளவு கடந்த காதல் உடையவர்கள்.
நான் உனக்கு ஒன்று சொல்கிறேன், கேள். ஒரு நாள் நான் என் கணவரைத் தழுவிக்கொண்டு படுத்திருந்தபொழுது,
சிறிது ஒரு பக்கமாகத் தள்ளிப் படுத்தேன். உடனே, பசலை நோய் என்னை அள்ளிக்கொள்ளும் அளவிற்கு
உடல் முழுதும் பரவத் தொடங்கியது. போருக்காக
என்னுடைய கணவர் என்னைவிட்டுப் பிரிந்து, சிறிது தொலைவுதான் சென்றிருப்பார் என்றாலும்,
அதற்குள்ளாகவே இங்கே என் மேனியில் பசலை படரத் தொடங்கியது. இப்பொழுது,
என்னுடைய நிலை உனக்குப் புரிகிறதா? என்னால் எப்படி இந்தப் பிரிவைப் பொறுத்துக்கொள்ள
முடியும்?” தோழி, “எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிவிட்டேன். உன் கணவர் உன்னைவிட்டுப்
பிரிந்து போருக்குச் செல்வதற்கு நீ சம்மதம் அளித்தாய். நான் மீண்டும் சொல்கிறேன். அவர்
விரைவில் திரும்பிவருவார். இந்தப் பிரிவை எப்படிப் பொறுத்துக்கொள்வது என்று சிந்தித்துப்
பார். பொறுமையாக இரு. உன் உடலை கவனித்துக்கொள்.”, என்று அறிவுரை கூறி, தலைவியிடமிருந்து
விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள். ”என் கணவர் போருக்குச் செல்வதற்கு உடன்பட்ட
நான் இப்பொழுது என் உடலில் பசலை பரவியதை எவரிடம் போய்ச் சொல்வேன்?”
என்று தலைவி தன்னையே நொந்துகொண்டாள்.
தலைவன்
வரவுக்காகத் தலைவி காத்திருத்தல்
சில நட்களுக்குப் பிறகு, தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக,
தோழி வந்தாள். தலைவி ஓரளவிற்கு அமைதியாக இருப்பதைப் பார்த்து, அவள் மிகுந்த மகிழ்ச்சி
அடைந்தாள். “எப்படி இருக்கிறாய்” என்று தலைவியைப் பார்த்துக் கேட்டாள். அதற்குத் தலைவி,
“என் கணவர் என்னைவிட்டுப் பிரியாமல் இருந்தபொழுது, மாலைப்பொழுது துன்பம் செய்ததை நான்
அறிந்ததில்லை.
இந்தக் காமநோய் காலையில் முளைவிட்டு பகல்முழுதும் வளர்ந்து மாலையில் விரியும் தன்மையுடையது. மாலை
வேளைகளில்தான் அவரைவிட்டுப் பிரிந்திருப்பது அதிக துன்பத்தைத் தருகிறது. என்ன செய்வது?
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறுபெற்றவர் விதையில்லாத பழத்தைப்போல்
இடையறாத காம இன்பத்தை முழுமையாக அனுபவிப்பவராவார். காதலிப்பவர்க்கு
அவர் யாரைக் காதலிக்கிறாரோ அவர் அளிக்கும் அன்பு, உயிர்வாழும் மக்களுக்குத் தேவையான
மழை தேவையானபொழுது பெய்வது போல்வதாகும்.”, என்று
சற்று விரக்தியோடு பதில் அளித்தாள். ”உனக்கு
ஒன்று தெரியுமா? சில சம்யங்களில், எனக்குத் தும்மல் வருவதுபோல் தோன்றி அடங்கி விடுகின்றது.
ஆதலால், என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாது மறந்துவிடுகின்றார் என்று
தோன்றுகிறது.
என்னுடைய உள்ளத்தில் அவர் எப்போதும் இருக்கின்றாரே! அதுபோல் அவர் நெஞ்சத்தில் நான்
இருக்கின்றேனா? தெரியவில்லையே!. என்
கணவர் என்னைவிட்டுப் பிரிந்திருப்பதால் நாங்கள் கூடி இன்பமுறாவிட்டாலும், சில நாட்களில் என் கணவரை நான் கனவில் காண்கிறேன்.
அதனால்தான் என் உயிர் என்னைவிட்டுப் பிரியாமல் இருக்கிறது. நான்
தூங்கும்பொழுது, என் கனவில் வந்து, அவர் என் தோள்மீது படுத்திருப்பதுபோல் காண்கிறேன்.
ஆனால், விழித்தவுடன் அவர் என் செஞ்சுக்குள் விரைந்து புகுந்துகொள்கிறார். நான்
அவரைக் கனவில் கண்டால், அது அவரிடமிருந்து எனக்குத் தூது வந்ததுபோல் இருக்கிறது. அப்படிப்பட்ட
கனவிற்கு நான் எப்படி விருந்தளித்துப் பாராட்டப் போகிறேன்?”, என்று
தன் மனத்தில் தோன்றியவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் தலைவி தோழியிடம் சொல்லி முடித்துவிட்டாள்.
தலைவி கூறியதைக் கவனமாகக் கேட்ட தோழி, “நீ வருத்தமாக இருந்தாலும், உன் கணவரின் பிரிவை
நன்றாகச் சமாளிக்கிறாய்.”, என்று தலைவியைப் பாராட்டிவிட்டு தன் வீட்டுக்குச் சென்றாள்.
”மனமே! உன்னை வாழ்த்துகிறேன். நீ அடைந்த காம வேதனையைப்போல் அவர்
அடையாததால் அவர் விரைந்து வரவில்லை. அவர் வந்தபின் நீ அடையும் காம வேதனைகளை அவரிடம்
சொல்லிக்கொள்ளலாம், இப்போது, கடல்போல் உன்னுள் வளர்ந்துவிட்ட காம ஆசையை அடக்கிக் கொள்!”, என்று
தலைவி தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.
தலைவன் வராததால் தலைவி வருத்தம் மிகுதல்
போருக்குப் போன தலைவன் பலநாட்களுக்குப் பின்னரும் திரும்பி வரவில்லை.
தலைவி எப்படி இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ளத் தோழி ஆவலாக இருந்தாள். ஆகவே, அவள்
தலைவியைப் பார்க்க வந்தாள். தலைவி அழகிழந்து காணப்பட்டாள். ”பிரிவுத் துன்பத்தை உனக்குத்
தந்துவிட்டு, நெடுந்தூரம் சென்ற தலைவரை நினைத்து நீ அழுவதால், உன்னுடைய கண்கள் அழகிழந்து
காணப்படுகின்றன. முன்பெல்லாம் மலர்கள் உன் கண்களைக் கண்டு, அவற்றைப்போல் தாம் இல்லையே
என்று நாணின. இப்பொழுது உன் கண்கள் மலர்களைப்போல் தாம் இல்லையே என்று நாணுகின்றன. பசலை
நிறம் அடைந்து, கண்ணீர் வடிக்கும் உன் கண்கள், உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருப்பதை
பிறருக்குத் தெரியப்படுத்துகின்றன. உன்
கணவர் உன்னைப் பிரிந்திருப்பதால், முன்பு அழகாக இருந்த உன் தோள்கள் இப்பொழுது மெலிந்து,
அங்கிருந்த வளையல்கள் கழலுகின்றன.”, என்று தலைவியின் நிலையைக் கண்ட தோழி வருத்தத்தோடு
கூறினாள்.
தலைவியும் தன் நிலையை நன்கு உணர்ந்தாள். அவள் தன் நெஞ்சை நோக்கி, “நெஞ்சே! எனக்குத்
துன்பம் தரும் இந்தக் காமநோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றை, நீ ஆலோசித்துச் சொல்ல மாட்டாயோ? என்
தலைவர் என்மீது காதல் இல்லாதவராக இருக்கும்போது, நீ அவரை எண்ணியெண்ணி வருந்துவது பேதைமையாகும். நீ இங்கிருந்து
அவரை எண்ணி வருந்துவது ஏன்? இத்துன்பமான நோய்க்குக் காரணமான என் தலைவர் என்னை நினைத்து
இரங்குவதாகத் தெரியவில்லையே! நீ அவரைக்
காணச் செல்லும்போது, என் கண்களையும் அழைத்துக்கொண்டு செல். என் கண்கள் அவரைக் காண விரும்பி என்னைப் பிடுங்கித்
தின்னுகின்றன.”,
என்று கூறினாள்.
”நம் வேந்தன் விரைவில் போரில் வெற்றிபெற வேண்டும்; அவன் அவ்வாறு
வெற்றிபெற்றால், நாமும் (ஊர் சென்று) மனைவியோடு கூடி, மாலைப்பொழுதில் விருந்தை அனுபவிக்கலாம். என்
மனைவி என் பிரிவைத் தாங்க முடியாமல் மனமுடைந்து விட்டால், பின்னர் அவள் என்னை அடைவதால்
என்ன பயன்? அதற்கும் மேலாக, அவளோடு கலந்தாலும்தான் என்ன பயன்? ஒரு பயனுமில்லை.” என்று
தலைவன் எண்ணினான்.
தலைவன் விரும்பியதைப்போல் போர் முடிந்தது. தலைவனின் நாடு போரில்
வெற்றிபெற்றது. அந்த நல்ல செய்தியைத் தலைவி கேள்விப்பட்டாள், அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை. அந்த நல்ல செய்தியைக் கேட்ட தோழி தலைவியைப் பார்க்க வந்தாள். ”அவர் என்னைவிட்டுப்
பிரிந்து சென்ற நாட்களைச் சுவரிற் குறித்த குறிகளைத் தொட்டுத்தொட்டு எண்ணுவதால், என்
விரல்கள் தேய்ந்து போயின. அது மட்டுமல்லாமல், அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து
என் கண்களும் ஒளியிழந்து பூத்துப் போயின. இப்பொழுது
அவர் வரப்போகிறார். என்னைவிட்டுப் பிரிந்த என் கணவர் மிகுந்த ஆசையோடு வருவதை எண்ணி
என் மனம் (குரங்குபோல்) மரத்தின் கிளைக்குக் கிளை மேலும் மேலும் ஏறி அவர் வருவதைப்
பார்க்கத் துடிக்கிறது. என் கணவரை நான் என் கண்ணாரக் காணப்போகிறேன்; அவ்வாறு
கண்டபின் என் மெல்லிய தோளில் உள்ள பசலை உடனே நீங்கும். என்
கண்போன்ற கணவர் நீண்ட நாட்கள் கழித்து வருவதால், அவரோடு ஊடுவேனோ, அல்லது அவரைத் தழுவிக்கொள்வேனோ
அல்லது அவரைக் கூடுவேனோ? எதைச் செய்வேன் என்று தெரியவில்லை.” என்று
தோழியிடம் தலைவி பெருமகிழ்ச்சியோடு கூறினாள்.
தலைவனின்
வருகை
தலைவன்
வீடு வந்துசேர்ந்தான். அவனைக் கண்டதும் தலைவி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அதே சமயம்,
அவன் மீண்டும் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவானோ என்ற அச்சம் ஒரு பக்கம் அவளை
வருத்திகொண்டிருந்தது. அவள் தன் உள்ளத்தில் இருந்த அச்சத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல்
முகத்தில் மகிழ்ச்சியோடு தன் பணிகளில் கவனம் செலுத்தினாள். ஆனால், தன் மனைவி அவள் உள்ளத்தில் இருப்பதை மறைத்தாலும் அதையும் மீறி,
அவளுடைய மைதீட்டிய கண்கள் சொல்ல நினைக்கும் செய்தி ஒன்று இருப்பதை அவள் கணவன் உணர்ந்தான். ”கோக்கப்பட்ட
மணிகளுக்குள் இருந்து விளங்கித் தோன்றும் நூல்போல என் மனைவியின் அழகுக்குள்ளிருந்து
காணப்படும் குறிப்பு ஒன்று உண்டு”,
என்றும், ”அரும்பும் மொட்டினுள் அடங்கியிருக்கின்ற
மணத்தைப்போல், என் மனைவியின் புன்முறுவலின் உள்ளேயும் அடங்கியிருக்கும் குறிப்பு ஒன்று
உண்டு”,
என்றும் தான் உணர்வதாக மனைவியின் தோழியிடம் அவன் கூறினான். அதற்குத் தோழி, “இப்பொழுது
அவள் என்ன செய்தாள் பார்த்தீரா? ”அவள் தன்
வளையல்களைப் பார்த்தாள்; மெலிந்திருக்கும் தோள்களைப் பார்த்தாள்; இனியும் பிரிந்து
செல்வதானால், என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்ற நோக்கத்தோடு, தன் கால்களைப் பார்த்தாள். நீர்
அவளை விட்டுப் பிரிவதை அவள் விரும்பவில்லை என்பதைத்தான் அவள் குறிப்பால் உணர்த்துகிறாள்.”,
என்று தோழி அந்தக் கணவனுக்கு விளக்கினாள்.
தலைவியின்
ஊடல்
தலைவன்
வந்து சில நாட்களாயின. ஒரு நாள் தோழியும் தலைவியும் தனியாக இருந்தார்கள். அப்பொழுது
தோழி, ”உன் கணவர் வந்தவுடன் அவரோடு ஊடப் போகிறேன் என்று சொன்னாயே! என்ன ஆயிற்று? அவரைக்
கண்டவுடன் ஊடலை மறந்து உன் மனம் கூடலில் சென்றது போலிருக்கிறதே!”, என்று கூறித் தலைவியை
சற்று உரிமையோடு கிண்டல் செய்தாள். தலைவி வெட்கித் தலைகுனிந்து, ”என்ன செய்வது? பனையளவுக்குக்
காமம் இருந்தால் தினையளவுக்குக்கூட ஊடல் கூடாது என்று கேள்விப்பட்டதில்லையா? என்
கதையும் அது தான். நான் என் கணவருடன் ஊடவேண்டும் என்று நினைத்துச் சென்றேன். ஆனால்,
என் நெஞ்சம் அதை மறந்து கூடுவதற்குச் சென்றது. கண்ணிற்கு
மைதீட்டும்பொழுது மைதீட்டும் கோலைக் காணமுடியாத கண்போல, என் கணவரைக் கண்டவுடன் அவருடைய
குற்றங்களை என்னால் காண முடியவில்லை. நான் என் கணவரைக் காணும்பொழுது, அவர் தவறுகளைக்
காண்பதில்லை. ஆனால், அவரைக் காணாதபொழுது (என்னைவிட்டுப் பிரிந்திருக்கும்பொழுது) அவருடைய
தவறுகளைத் தவிர பிறவற்றைக் காண்பதில்லை. வெள்ளப்
பெருக்கெடுத்தோடும் ஆற்றில் குதித்தால் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் குதிப்பதைப்போல்,
ஊடல் கூடலில் முடியும் என்று தெரிந்திருந்தும் ஊடுவதால் என்ன பயன்?”
என்று தன்னுடைய ஊடல் செய்ய இயலாத நிலையைப் பற்றித் தோழியிடம் தலைவி கூறினாள். ”நீ சொல்வதெல்லாம்
சரி. இன்று அவர் உன்னைத் தழுவ வரும்பொழுது, நீ அவரைத் தழுவாமல் இருந்து ஊடல் செய்.
அவர் படும் துன்பத்தைச் சிறிது காண்போம். ஆனால்,
ஊடலை அதிக நேரம் நீடிக்காதே. கலவிக்குமுன் ஏற்படக்கூடிய ஊடல், உணவில் உப்பு அளவாக இருப்பதைப்போல்
அளவாக இருக்க வேண்டும். ஊடல் நீடித்தால் அது உணவில் உப்பு மிகுதியாக இருப்பதைப் போன்றது.”,
என்று தோழி தலைவிக்கு அறிவுரை கூறினாள்.
தலைவன்
தலைவியைக் காண வந்தான். தானும் தன் மனைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிப்பதை எண்ணி
மகிழ்ந்து, கணவன் மனைவி ஆகிய இணையர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் யாவரினும் தாம் இருவரும்
மிக்க காதலுடையவர்கள் என்ற கருத்தில், “யாரினும் காதலம்” என்று தலைவன் சொன்னவுடன்,
தன் கணவனுக்குக்குப் பல காதலியர் இருப்பதாகவும், “அவர்கள் அனைவருள்ளும் ”உன்னையே மிகுதியாகக்
காதலிக்கிறேன்” என்று அவன் கூறியதாகவும் எடுத்துகொண்டு, “யாரைக் காட்டிலும்? யாரைக்
காட்டிலும்?” என்று தலைவி ஊடத்தொடங்கிவிட்டாள். தலைவன்,
“இப்பிறவியில் நாம் பிரிய மாட்டோம்”, என்று சொன்னவுடன், ”மறுபிறவியில் நாம் பிரிவோம்”,
என்று அவன் சொன்னதாகக்கொண்டு அவள் கண்ணீர்விட்டு அழத்தொடங்கினாள். உன்னைவிட்டுப்
பிரிந்திருக்கும்பொழுது, “உன்னையே நினைத்துகொண்டிருந்தேன்.” என்று தலைவன் சொன்னவுடன்,
“மறந்தால்தானே நினைக்க முடியும். ஏன் என்னை மறந்தீர்?” என்று தலைவனைத் தழுவாமல் ஊடினாள். தலைவனுக்குத்
தும்மல் வந்தது. வழக்கம்போல் தலைவி அவனை ”நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினாள். ஆனால்,
உடனே, “யாரோ உம்மை நினைத்ததால்தான் உமக்குத் தும்மல் வந்தது. யார் நினைத்ததால் தும்மினீர்”,
என்று கேட்டுத் தலைவி அழுதாள். தலைவனுக்கு மீண்டும் ஒருமுறை தும்மல் வந்தது. தும்மினால்
தலவி அழுகிறாளே என்று நினைத்து அவன் தும்மலை அடக்க முயற்சி செய்தான். அதைப் பார்த்த
தலைவி, “வேறுயாரோ உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்கின்றீர்.”, என்று சொல்லி மீண்டும்
அழுதாள். இவ்வாறு
எதைச் செய்தாலும் தொடர்ந்து ஊடுகிறாளே என்று எண்ணி, இனிய சொற்களைப் பேசி, தலைவியின்
ஊடலைத் தலைவன் தணிக்க முயற்சி செய்தான். அப்பொழுது, தலைவி, “மற்ற பெண்கள் உம்மோடு ஊடும்பொழுது
இப்பாடித்தான் இனிய சொற்களைப் பேசி ஊடலைத் தீர்ப்பீரா?” என்று
சினந்து ஊடலைத் தொடர்ந்தாள். தலைவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னுடைய பேச்சும்
செயலும் தலைவிக்குக் கோபத்தை உண்டாக்குவதால், அவள் அழகை நினைத்து தலைவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது, “என் அழகை யாரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்?” என்று
கேட்டு மீண்டும் கோபமடைந்தாள்.
இவ்வாறு
ஊடல் சற்று நேரம் நீடித்தது. உணவில் உப்பைப்போல் ஊடல் அளவாக இருக்க வேண்டும் என்று
தோழி கூறியது தலைவியின் நினைவிற்கு வந்தது. இனியும் ஊடலைத் தொடரக்கூடாது என்று அவள்
முடிவு செய்தாள். அதே சமயம், அவளிடம் பணிவாகவும் அன்பாகவும் தலைவன் பேச முயற்சி செய்தான்,
தலைவியின் ஊடல் முடிந்ததைத் தலைவியின் முகத்திலிருந்து தலைவன் உணர்ந்தான். “நாம் தவறே
செய்யாத நிலையிலும், நாம் விரும்பும் காதலியின் மெல்லிய தோள்களைத் தழுவாமல் பிரிந்திருப்பதிலும்
இன்பம் தரக்கூடியது ஒன்று உண்டு.”,
என்று அந்த ஊடலுக்குப் பின் வரப்போகும் கூடலால் வரும் இன்பத்தை நினைத்து மகிழ்ந்தான்.
அதைத்தான்,
ஊடுதல்
காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்
கூடி
முயங்கப் பெறின். (குறள் – 1330)
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தவறிலர்
ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின்
ஆங்கொன்று உடைத்து. (குறள் – 1325)
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண்
உடைத்தால் புணர்வு. (குறள் – 1152)
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ
ரிடத்துண்மை யான். (குறள் – 1153)
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. (குறள் – 1156)
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. (குறள் – 1151)
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப்
பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். (குறள் – 1160)
மறைப்பேன்மன்
யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். (குறள் – 1161)
காமமும்
நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (குறள்
– 1163)
காமக்
கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். (குறள் – 1167)
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும்
இல். (குறள் – 1164)
மன்னுயிர்
எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. (குறள் – 1168)
உள்ளம்போன்று
உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். (குறள் – 1170)
கண்தாம் கலுழ்வ
தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. (குறள் – 1171)
கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து. (குறள்
– 1173)
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். (குறள்
– 1175)
ஓஒ இனிதே
எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. (குறள் – 1176)
உழந்துழந்
துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். (குறள் – 1177)
புல்லிக்
கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. (குறள் – 1187)
உவக்காண்எம்
காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. (குறள் – 1185)
நயந்தவர்க்கு
நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. (குறள் – 1181)
மாலைநோய்
செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். (குறள் – 1226)
காலை அரும்பிப்
பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். (குறள் – 1227)
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்
பெற்றாரே
காமத்துக் காழில் கனி. (குறள் – 1191)
வாழ்வார்க்கு
வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. (குறள் – 1192)
நினைப்பவர்
போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். (குறள் – 1203)
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஓ உளரே அவர். (குறள் – 1204)
நனவினால் நல்கா தவரை கனவினான்
காண்டலின் உண்டுஎன் உயிர். (குறள்
– 1213)
துஞ்சுங்கால்
தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. (குறள் – 1218)
காதலர் தூதொடு
வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. (குறள் – 1211)
உறாஅர்க்கு
உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. (குறள் – 1200)
சிறுமை
நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். (குறள் – 1231)
நயந்தவர்
நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். (குறள் – 1232)
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். (குறள்
– 1234)
நினைத்தொன்று
சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. (குறள் – 1241)
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு. (குறள்
– 1242)
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். (குறள்
– 1243)
கண்ணும்
கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. (குறள் – 1244)
வினைகலந்து
வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. (குறள் – 1268)
பெறின்என்னாம்
பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். (குறள் – 1270)
வாளற்றுப்
புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். (குறள் – 1261)
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறும்என் நெஞ்சு. (குறள்
– 1264)
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. (குறள்
– 1265)
கரப்பினுங்
கையிகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு. (குறள் – 1271)
மணியில்
திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. (குறள் – 1273)
முகைமொக்குள்
உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு. (குறள் – 1274)
தொடிநோக்கி
மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது. (குறள் – 1279)
தினைத்துணையும்
ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். (குறள் – 1282)
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. (குறள்
– 1284)
எழுதுங்கால்
கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து. (குறள் – 1285)
காணுங்கால்
காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. (குறள் – 1286)
உய்த்தல்
அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. (குறள் – 1287)
புல்லா திராஅப்
புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. (குறள் – 1301)
உப்பமைந்
தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். (குறள் – 1302)
யாரினும்
காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. (குறள் – 1314)
இம்மைப்
பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். (குறள் – 1315)
உள்ளினேன்
என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். (குறள் – 1316)
வழுத்தினாள்
தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. (குறள் – 1317)
தும்முச்
செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. (குறள் – 1318)
தன்னை
உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. (குறள் – 1319)
நினைத்திருந்து
நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. (குறள் – 1320)
தவறிலர்
ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து. (குறள் – 1325)