ஒத்ததறிவான்
உயிர்வாழ்வான்
ஒப்புரவு என்ற சொல் ஒவ்(வு), புரவு என்ற இருசொற்களின்
சேர்க்கையால் உருவாகிய ஒருசொல்[1]. ஒவ்வு
என்பதற்கு ஒத்திருத்தல் என்று பொருள். புரவு என்ற சொல்லுக்குப் பேணல் அல்லது வாழ்வித்தல்
என்று பொருள். ஆகவே, மக்கள் அனைவரும் ஒத்தவர்கள் என்று கருதி, அவர்களோடு தனது செல்வத்தைப்
பகிர்ந்து வாழ்தலையும், உலக நடையுடன் ஒத்து வாழ்தலையும் ஒப்புரவு என்ற சொல் குறிக்கிறது.
மற்றவர்களும் நம்மைப் போன்றவர்கள் என்ற புரிதலும் உணர்வும் இருந்தால், மற்றவர்களின்
துன்பம், துயரம், வறுமை ஆகியவை நம்முடைய துன்பம், துயரம், வறுமை ஆகியவற்றைப் போன்றவைதான்
என்ற எண்ணம் தோன்றும். அத்தகைய எண்ணம் நமது உள்ளத்தில் உறுதியானதாக இருந்தால், மற்றவர்களுக்கு
நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். அந்த எண்ணத்தின் தாக்கத்தால்,
உதவி செய்யும் முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம். உதவி செய்வதில் பலவகைகள் உள்ளன. அவற்றுள்,
ஈகையைப் பற்றியும் ஒப்புரவைப் பற்றியும் வள்ளுவர் திருக்குறளில் குறிப்பிடுகிறார்.
ஈகை வேறு. ஒப்புரவு வேறு. ஒரு ஏழை நம்மிடம் வந்து உணவோ அல்லது ஏதோ ஒரு பொருளோ வேண்டுமென்று
கேட்டால், அவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல், நம்மால் இயன்றதை அவனுக்குக் கொடுப்பது
ஈகை. எவரும் நம்மிடம் வந்து கேட்காமலேயே, மற்றவர்களும் நம்மை ஒத்தவர்கள் என்பதை உணர்ந்து
அவர்களுக்கு உதவி செய்வதைக் கடமையாகக் கருதி, கைம்மாறு எதையும் எதிர்பார்க்காமல் உதவி
செய்வது ஒப்புரவு. உதாரணமாக, பசி என்று நம்மிடம் வந்து கேட்பவனுக்கு உணவளிப்பது ஈகை.
நாம் வாழும் ஊரில், வறுமை காரணமாகப் பலர் உண்ண உணவில்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து
அவர்களுக்காக ஒரு அன்னசத்திரம் நடத்தினால் அது ஒப்புரவு. ஈகை என்ற தமிழ்ச் சொல்லுக்கு
இணையான ஆங்கிலச் சொல் Charity; ஒப்புரவு என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்
Philanthropy.
ஒத்ததை அறிந்தவனே உயிர்வாழ்பவன்
”பிறரும் நம்மைப் போன்றவர்கள்தான் என்பதை
உணர்ந்தவன்தான் உண்மையிலேயே உயிரோடு இருப்பவன். அந்த உணர்வு இல்லாதவன் உயிரோடு இருந்தாலும்
அவன் செத்தவனாகவே கருதப்படுவான்.” என்று வள்ளுவர் கூறுகிறார்.
ஒத்த
தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (குறள் – 214)
மக்கள் அனைவரும் ஒப்பானவர் என்ற கருத்தை
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தாம் இயற்றிய புறநானூற்றுப் பாடலில்[2] கூறியிருப்பது
இங்கு குறிப்பிடத் தக்கது. அந்த பாடலில், அவர்,
“தெளிந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் மற்றவர்களுக்கும் பொதுவானது
என்று எண்ணாமல், தானே ஆட்சி செய்யும் ஒருவர்க்கும், பகலும் இரவும் தூங்காமல், விரைந்து ஓடும் விலங்குகளை
வேட்டையாடுபவனுக்கும் உணவு ஒருபடி அளவுதான்; அவர்கள்
உடுப்பது இரண்டு ஆடைகள் தான். அதுபோல், மற்ற தேவைகளிலும்
இருவரும் ஒப்பானவரே ஆவர். ஆகவே, எவ்வளவு செல்வம் இருந்தாலும்
ஓரளவுக்கு மட்டுமே அதை அனுபவிக்க முடியும். அதனால், செல்வத்தினால்
ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு
அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால், அவன்
செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் அவன் இழந்தவனாவான்.”,
என்று கூறுகிறார்.
ஒப்புரவு மழையைப் போன்றது
ஒப்புரவு என்பது மழையைப் போன்றது. மக்களுக்கு
நீரை வழங்குவதைத் தன் கடமையாகக் கருதி, மேகம் மழை பொழிகிறது. அந்த மேகத்திற்கு உலக
மக்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறார்கள் என்று வள்ளுவர் கேட்கிறார். மக்கள் அனைவரும்
தன்னை ஒத்தவர்கள் என்று கருதி, அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு
ஒப்புரவு செய்பவனின் செயலும் அந்த மேகத்தின் செயலைப் போன்றதுதான் என்று வள்ளுவர் குறிப்பால்
உணர்த்துகிறார்.
கைம்மாறு
வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங்
கொல்லோ உலகு? (குறள் – 211)
முயற்சியால் வந்த செல்வத்தைப் பிறர்க்கு
அளித்தல்
ஒருவன் தன் முயற்சியால் பெற்ற செல்வம்
முழுதும் தகுதியுடையவர்களுக்குப் பலவகைகளிலும் உதவி செய்தற் பொருட்டே ஆகும் என்பது
வள்ளுவரின் கருத்து.
தாளாற்றித்
தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை
செய்தற் பொருட்டு. (குறள்
– 212)
தாள் என்ற சொல்லுக்கு முயற்சி என்றும்
வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம் என்றும் பொருள். ஒருவன் தன்னுடைய செல்வத்தைத் தகுதியுடையவர்களுடன்
பகிர்ந்துகொள்வதுதான் ஒப்புரவு என்பது வள்ளுவரின் கருத்து. அதனால்தான் அரசன் தன் குடிமக்களுக்குச்
செய்யும் உதவியை ஈகை என்றும் கொடை என்றும் மட்டுமே கூறி, ஒப்புரவு என்று வள்ளுவர் கூறாமல்
விட்டுவிட்டார். அரசனின் பொருளெல்லாம் மக்களின் பொருளாகையால் அவன் அவற்றைப் பிறருக்குக்
கொடுப்பது ஒப்புரவாகாது. அதுபோல், இக்காலத்தில ஆட்சியில் இருப்பவர்கள், மக்களின் செல்வத்தில்
ஒரு பகுதியை மக்களுடன் பகிர்ந்துகொள்வதும் ஒப்புரவு அன்று. தேர்தல் சமயங்களிலும், பொங்கல்
போன்ற விழாக்காலங்களிலும் வாக்காளர்களுக்குப்
பரிசு வழங்குவது ஒப்புரவு அன்று. அது ஒருவகைக் கையூட்டு, மற்றும், ஒப்புரவு செய்பவன்
தன் செல்வத்தைத் தகுதியுடையவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறியிருப்பதால்,
கோயில்களுக்குக் கொடுப்பதும், சாமியார்களுக்குக் கொடுப்பதும், பொருள் உள்ளவர்களுக்குக்
கொடுப்பதும், உழைக்க விருப்பமில்லாத சோம்பேறிகளுக்குக் கொடுப்பதும் ஒப்புரவு அல்ல என்பது
புலப்படுகிறது. ”பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்ற பழமொழி இங்கு நினைவுகூரத் தக்கது.
தேவநேயப் பாவாணர், தன்னுடைய உரையில் “தமிழைக் கெடுப்பவரும் தகுதியற்றவராவார்” என்று
கூறுகிறார். அது அவருடைய தீவிரத் தமிழ்ப்பற்றுக்கு ஒரு அடையாளமாகத் தோன்றுகிறது!
இந்தக் குறளுக்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில்
கல்யாணசுந்தரம்[3]
என்பவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மேலக்கருவேலங்குளம்
என்ற ஊரில் பிறந்தவர். இவர் தமிழ், வரலாறு மற்றும் நூலகவியல்(Library Science) ஆகிய
துறைகளில் பட்டம் பெற்று, முப்பத்தி ஐந்து ஆண்டுகள் நூலகராகப் (நூலகர் –
Librarian) பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நூலகராகப் பணியாற்றியபொழுது, உணவகங்களில்
உணவு பரிமாறுபவராகவும் பணிபுரிந்தார். உணவகங்களில் கிடைக்கும் வருமானத்தைத் தன் செலவுக்கு
வைத்துக்கொண்டு, நூலகராகப் பணிபுரிந்ததற்காகக் கிடைத்த வருமானத்தை ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளைகளுக்கு கொடுத்துப் பொதுநலத் தொண்டாற்றினார்.
இவ்வாறு அவர் கொடுத்தது 30,00,000 உரூபாய்கள். இவர் பெற்ற ஓய்வூதியமாகிய 10,00,000
உரூபாய்களையும் ஏழைகளுக்கு அளித்தார். இவருடைய சேவையைப் பாராட்டி ஒரு அமெரிக்க நிறுவனம்
இவருக்கு 30 கோடி உரூபாய்களைப் பரிசாகவும் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் (Man
of the Millennium)” என்ற பட்டமும் அளித்தது. அந்தத் தொகையை குழந்தைகள் நலனுக்கு அளித்து,
இவர் பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம்
(University of Cambridge), ”உலகிலேயே மிகவும் குறிப்பிடத் தக்க மனிதர்” என்ற பட்டம்
அளித்ததோடு மட்டுமல்லாமல், நூலகத்துறைக்கு நோபல் பரிசு என்ற ஒன்று இருந்தால், அதை பெறும்
தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது. புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இவரைத் தன்
தந்தையாகத் தத்தெடுத்துகொண்டு தன் வீட்டிலேயே தங்குமாறு கூறினார். இவர் அவருடைய அழைப்பை
ஏற்றுக்கொள்ளவில்லை. கல்யாணசுந்தரம் அவர்கள் மக்கள் அனைவரும் சமம் என்ற நோக்கத்தோடு,
ஏழைகளுக்குத் தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும் என்ற மனவுறுதியோடு, தன் உழைப்பால் பெற்ற
வருமானம், ஓய்வு ஊதியம், பரிசுத் தொகைகள் அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்து வேளாண்மை செய்த பெருமைக்குரிய
வள்ளல். இவர் வள்ளுவரின் குறளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்துவருகிறார்
என்றால் அது மிகையாகாது. இந்த உலகம் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சிந்தித்த,
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், “தனக்கென்று வாழாமல் பிறர்க்காக
வாழ்பவர்கள் இருப்பதால்தான்” என்ற முடிவுக்கு வந்தான்[4]. அவன்
முடிவு சரியானது என்பதற்கு, கல்யாணசுந்தரம் போன்றவர்கள் சான்று.
ஒப்புரவில் மூன்று வகைகள்
பல வகைகளில் ஒப்புரவு செய்யலாம்.
அவற்றுள் மூன்று விதமான ஒப்புரவுகளை வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஒன்று, பேரறிவாளனின்
ஒப்புரவு, மற்றொன்று, நயனுடையவனின் ஒப்புரவு, மற்றொன்று, பெருந்தகையாளனின் ஒப்புரவு.
பேரறிவாளனின் ஒப்புரவு: பேரறிவாளன்
என்பது மிகுந்த அறிவுடையவனைக் குறிக்கிறது. மிகுந்த அறிவுடையவனிடம் செல்வம் இருந்தால்
அவன் அந்த செல்வத்தைப் பலரோடு பலகாலம் பகிர்ந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் ஒப்புரவு செய்வான்.
அவன் ஒப்புரவு செய்வதை, ஊரில் உள்ளவர்கள் நீர் உண்ணும் குளத்திற்கு வள்ளுவர் ஒப்பிடுகிறார்.
உலகிலுள்ள உயிர்களை எல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவாளனின் செல்வம், ஊரில்
வாழ்பவர்கள் அனைவரும் நீர் உண்ணும் குளம் போன்றது. அந்தக் குளம் தன்னிடமுள்ள நீரை அனைவரோடும்
பகிர்ந்துகொள்வதைப்போல் பேரறிவாளன் தன் செல்வத்தைப் பகிர்ந்துகொள்வான். பேரறிவாளன்
செய்யும் ஒப்புரவு பலருக்கும் பலகாலம் பயன்படக்கூடியது.
ஊருணி
நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள்
– 215)
நயனுடையவனின் ஒப்புரவு: சிலருடைய
ஒப்புரவுப் பணிகள் பேரறிவாளர்களின் ஒப்புரவுப் பணிகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
உதாரணமாக, ஒருவன் மிகுந்த அன்புடையவனாக இருந்தால், “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”
என்பதற்கு இணங்க, அவன் பிறர்க்கு எதையும் கொடுக்கத் தயங்க மாட்டான். தன்னிடமுள்ள விலையுயர்ந்த
பொருளைக்கூட மற்றவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு அவனும் மகிழ்வான்.
அத்தகையவனிடம் செல்வம் இருந்தால், அது ஊர்நடுவில் உள்ள பழமரம் பழுத்ததைப் போன்றது என்கிறார்
வள்ளுவர். அந்த மரம் ஊர்நடுவில் இருப்பதால் அது அனைவருக்கும் பயன்படக்கூடிய மரம். அந்த
மரத்தின் உறுப்புக்களில் இனிமையானது அதிலுள்ள பழங்கள்தான். அந்தமரம் அதிலுள்ள பழங்களை
அனைவருக்கும் கொடுக்கிறது. பழத்தை உண்பவர்கள் பயனடைகிறார்கள். அதுபோல், மிகுந்த அன்புடையவர்களிடம்
செல்வம் இருந்தால் அவர்கள் தம் செல்வத்தை, அந்த மரம்போல் பலரும் மகிழும் வகையில் அவர்களுக்கு
அளித்து மகிழ்வார்கள். இத்தகைய ஒப்புரவு, பலருக்குச் சிலகாலம் மட்டுமே பயனளிக்கும்.
பயன்மரம்
உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (குறள் – 216)
பெருந்தகையாளனின் ஒப்புரவு: பெருந்தகையாளன்
என்ற சொல் பெருந்தன்மையுடையவன் என்பதைக் குறிக்கிறது. பெருந்தன்மையுடையவன் ஒப்புரவு
செய்வது மருந்துமரத்தைப் போன்றது என்கிறார் வள்ளுவர். ஒரு மரத்தினுடைய வேர், பட்டை,
காய், இலை, பூ, கனி போன்றவை எல்லாம் பிணிகளை நீக்குவதற்குப் பயன்படும் மருந்தாக இருக்குமானால்,
அவற்றை எல்லாம் மக்கள் வெகுவிரைவில் எடுத்துகொள்வார்கள். அந்த மரம் தன்னையே அனைவருக்கும்
அளித்து தன்னையே அழித்துக்கொள்வதுபோல், பெருந்தன்மையுடையவன் தன் செல்வத்தை எல்லாம்
பிறர்க்கு விரைவில் அளித்துவிடுவான். இது போன்ற ஒப்புரவு சிலருக்குச் சில காலம் மட்டுமே
பயனளிக்கும்.
மருந்தாகித்
தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
(குறள் – 217)
ஒப்புரவினால் ஒருவனுக்குப் பொருட்கேடு
வருமாயின், அக்கேட்டை ஒருவன் தன்னையே விற்றாவது கொள்ளத்தக்கதாகும் என்று,
ஒப்புரவி
னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
(குறள் – 220)
என்ற குறளில் கூறுகிறார். பெருந்தகையாளனின்
ஒப்புரவும் அத்தகையதே. ஒப்புரவினால் தன் வாழ்வுக்கே கேடு வருமானால், அவன் தன்னையே விற்றாவது
ஒப்புரவு செய்யத் தயங்க மாட்டான்.
தற்காலத்து ஒப்புரவுகள்
வள்ளுவர் கூறும் மூன்றுவகையான ஒப்புரவுகள்
தற்காலத்திலும் நடைபெறுகின்றன.
கடந்த நூற்றாண்டில், அமெரிக்காவில், ஆண்ட்ரு
கார்னெகி(Andrew Carnegie), ஜான் ராக்கஃபெல்லர் (John D. Rockefller) மற்றும் ஹென்றி
ஃபோர்டு (Henry Ford) போன்ற பெருஞ்செல்வந்தர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பல கோடிக்கணகான
டாலர் மதிப்புள்ள தங்கள் செல்வத்தை பல கல்வி நிறுவனங்களுக்கும், கலைக்கூடங்களுக்கும்,
ஏழைகளுக்கு உதவுவதற்கும், மருத்துவத்துறையில் ஆய்வு செய்வதற்கும் நன்கொடையாக அளித்துப் பொதுநலத் தொண்டாற்றியுள்ளனர்.
இந்த நூற்றாண்டிலும் இதுபோன்ற ஒப்புரவுச் செயல்கள்
தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. உதாரணமாக, பில் கேட்ஸ் (Bil Gates), மார்க் சக்கர்பர்க்
(Mark Zuckerburg), வாரென் பஃப்ஃபெட் (Warren Buffett), ஓப்ரா வின்ஃப்ரி (Opra
Winfrey) போன்றவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் அறக்கட்டளைகளை நிறுவி, பலகோடி டாலர்கள்
மதிப்புள்ள தங்கள் செல்வத்தை அந்த அறக்கட்டளைகளில் மூலதனமாக வைத்து அதிலிருந்துவரும்
வட்டியைத் தங்கள் பொதுநலப் பணிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். மூலதனம் குறையாமல் இருப்பதால்,
பலருக்கும் பலகாலம் நீர் உண்ணப் பயன்படும் ஊருணிபோல் உலகின் பலபகுதிகளில் உள்ள எண்ணற்ற
ஏழைமக்களின் கல்விக்கும், அவர்களின் உடல்நலத்திற்கும் இந்தப் பேரறிவாளர்களின் நற்பணி
என்றென்றும் தொடரும் எனபதில் ஐயமில்லை. இந்தியாவிலும், ஷிவ் நாடார் (Shiv Nadar), முகேஷ்
அம்பானி (Mukesh Ambani) மற்றும் பலரும் கோடிக்கணக்கான உரூபாய்களை தங்கள் அறக்கட்டளைகளில்
மூலதனமாக வைத்து அதிலிருந்துவரும் வட்டியை பொதுநலத்திற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது
குறிப்பிடத் தக்கது. ஆகவே, வள்ளுவர் கூறும் ஊருணிபோன்ற, பலருக்கும் பலகாலம் பயன்படும்
ஒப்புரவுகள் இன்றும் நடைபெற்றுவருகின்றன என்பது பெறப்படுகிறது.
ஊருணி பலகாலம் பலருக்கும் பயன்படக்கூடிய
ஒன்று. ஆனால், பழங்களைத் தரும் மரம் ஒரு குறிப்பிட்ட பருவத்தில்தான் பழுக்கும். அந்த மரத்தில் பழங்கள் இல்லையென்றால், பழங்களைப்
பெற விரும்புபவர்கள் மீண்டும் பழங்கள் தோன்றும்வரை காத்திருக்க வேண்டும். சில ஒப்புரவுகளும்
அதுபோன்றவைதான். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் தமிழ்நாடு அறக்கட்டளை என்ற
ஒரு அமைப்பை நிறுவி, அங்குள்ள தமிழர்களிடமிருந்து பணம் திரட்டி, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்
நூலகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதற்கும், அநாதைக் குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும்,
பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கும், ஏழை மகளிர்க்குத் தையற்தொழிலில்
பயிற்சி அளிப்பதற்கும் ஏற்பாடு செய்துவருகிறார்கள். கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளில்
பல கோடிக்கான டாலர்களைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பித் தமிழர்களுக்கு உதவிவருகிறார்கள்.
பணம் இருந்தால்தான் இந்த நிறுவனத்தால் உதவி செய்ய முடியும். பழமரம் பருவகாலத்தில்
பழமளிப்பதைப் போன்ற ஒப்புரவுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை ஒரு எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு
அறக்கட்டளையைப்போல் பலரிடமிருந்து பணம் திரட்டி அதை பொதுநலத் தொண்டுக்குப் பயன்படுத்தும்
நிறுவனங்கள் உலகெங்கும் உள்ளன. இவை அனைத்தும், பழமரம் பருவ காலத்தில் மட்டுமே உதவி
செய்வதைப்போல், பணம் இருந்தால்தான் உதவி செய்ய முடியும்.
அமெரிக்காவில் சில செல்வந்தர்கள், தங்கள்
செல்வத்தைத் தகுதியுடையவர்களுக்கும், தகுதியுடைய நிறுவனங்களுக்கும் தங்கள் வாழ்நாளிலேயே
பகிர்ந்தளிக்க விரும்பி “வாரி வழங்கி மறையும் அறக்கட்டளைகளை (Spend Down
Foundation)” நிறுவுகிறாரகள். உதாரணமாக, அமெரிக்காவில், சக் ஃபீனி (Chuck Feeney) என்பவர்
தன்னுடைய 800 கோடி டாலர் மதிப்புள்ள செல்வத்தை, அமெரிக்கா(United States of
America), ஆஸ்திரேலியா (Australia), வியட்நாம்(Vietnam), தென்னாப்பிரிக்கா (South
Africa), பெர்முயூடா(Bermuda), க்யூபா (Cuba) ஆகிய நாடுகளில், கல்வி, மருத்துவம், சுகாதாரம்,
போன்ற துறைகளில் செலவு செய்வதற்காக அட்லாண்டிக் ஃபிலாந்த்ராபீஸ் (Atlantic
Philanthropies) என்ற அறக்கட்டளையை[5] நிறுவித்
தன்னுடைய செல்வம் முழுதும் தகுதியுடையவர்களுக்கும் தகுதியுடைய நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளார்.
செல்வம் முழுதும் பிறர்க்கு அளித்த பிறகு, அவருடைய நிறுவனம் மூடப்படும். இதுபோல் வேறு
சிலரும், தங்கள் செல்வம் முழுவதையும் மற்றவர்களுக்கு விரைவாகப் பகிர்ந்தளிக்கும் நிறுவனங்களை
நிறுவியுள்ளனர். இவையெல்லாம், மருந்துமரம்போல் தன்னிடமுள்ள பொருளை விரைவாகப் பிறர்க்குக்
கொடுக்கும் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
ஒப்புரவு என்பது பெருஞ்செல்வந்தர்கள் மட்டுமே
செய்யக்கூடியது அன்று. தற்காலத்தில், செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), யுனைடெட் வே
(United Way), குட் வில் (Goodwill), சால்வேஷன் ஆர்மி (Salvation Army) போன்ற எண்ணற்ற
நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. மற்ற நாடுகளிலும் இது போன்ற நிறுவனங்கள் உள்ளன. அவை
ஒரு டாலர் அல்லது ஒரு உரூபாய் அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும். ஆகவே, அனைவரும் ஒப்புரவு
செய்யலாம்.
தற்காலத்தில் பணம், உணவு போன்றவற்றை அளிப்பது
மட்டுமல்லாமல், தன்னார்வத் தொண்டர்களாகத் தங்கள் நேரத்தைப் பொதுநலத் தொண்டுக்காகச்
செலவழிப்பதும், இறந்த பிறகு உடல் உறுப்புக்களை பிறர்க்கு அளிப்பதும், குருதியைத் தானம்
செய்வதும் ஒப்புரவாகவே கருதத் தக்கவையாகும்.
ஒப்புரவாளனும் வறுமையும்
ஒப்புரவு செய்யும் நல்லியல்பு உடையவன்
தனக்கொன்று இல்லாத பொழுது வறுமையைக் கண்டு வருந்துவதில்லை. பிறர்க்கு ஒப்புரவு செய்ய
இயலாத நிலைதான் அவனுக்கு வறுமையாகும்.
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. (குறள் – 219)
ஒப்புரவின் சிறப்பு
இவ்வாறு ஒப்புரவு செய்வதுபோன்ற நற்செயல்கள் விண்ணுலகத்திலும் இல்லை; மண்ணுலகத்திலும் இல்லை.” என்று கூறி ஒப்புரவு செய்பவர்களையும், செய்ய விரும்புபவர்களையும் வள்ளுவர் ஊக்குவிக்கிறார்.
புத்தேளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. (குறள் - 213)
முடிவுரை
உணவோ அல்லது ஒருபொருளோ தனக்குத் தேவை என்று
ஒருவன் நம்மிடம் வந்து கேட்ட பிறகு அவனுக்குக் கொடுப்பது ஈகை. அனைவரும் நம்மை ஒத்தவர்கள்
என்பதை உணர்ந்து, எவரும் நம்மிடம் வந்து கேட்காமலேயே அவர்களுக்குக் கொடுப்பது ஒப்புரவு.
ஒப்புரவு என்பது, எத்தகைய கைம்மாறும் கருதாமல் பெய்யும் மழையைப் போன்றது. பலவகைகளில்
ஒப்புரவு செய்யலாம். வள்ளுவர், மிகுந்த அறிவுடையவனின் ஒப்புரவை பலருக்கும் பலகாலம்
பயன்படும் ஊருணிக்கும், மிகுந்த அன்புடையவனின் ஒப்புரவை, இனிய கனிகளை பலருக்கும் பருவகாலத்தில்
மட்டுமே தரும் ஊர்நடுவில் உள்ள பழமரத்திற்கும், மிகுந்த பெருந்தன்மையுடையவனின் ஒப்புரவைத்
தன்னையே பிறர்க்கு அளித்து, சிலருக்குச் சிலகாலம் பயனளிக்கும் மருந்துமரத்திற்கும்
ஒப்பிடுகிறார். இதுபோன்ற ஒப்புரவுகள் தற்காலத்திலும் நடைபெறுகின்றன. தற்காலத்தில் செல்வந்தர்கள்
மட்டுமல்லாமல் அனைவரும் பங்குபெறும் வகையில் பல அறக்கட்டளைகள் உள்ளன. பசிக்கு உணவும்,
தேவைக்கேற்ற பொருளும் கொடுப்பது மட்டுமல்லாமல், தற்காலத்தில், தன்னார்வத் தொண்டர்களாகப்
பணியாற்றுவதில் தங்கள் நேரத்தைச் செலவழிப்பதும், இறந்த பிறகு, உடல் உறுப்புக்களை பிறர்க்கு
அளிப்பதும், குருதியைத் தானமாக அளிப்பதும் ஒப்புரவாகக் கருதத் தக்க செயல்களாகும். முடிவாக,
ஒப்புரவினால் தனக்குக் கேடு வந்தாலும் ஒப்புரவு செய்யத் தயங்கக் கூடாது என்ற கருத்தையும்
வள்ளுவர் வலியுறுத்துகிறார். இங்கு,
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளிர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
என்று
பாரதியார் கூறியது நினைவுகூரத் தக்கது.
துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய
திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர்,
ஞா. திருக்குறள்
– தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து
பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய
உரையும் (பகுதி 1). காவ்யா பதிப்பகம், சென்னை
________________. புறநானூறு மூலமும் எளிய
உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம், சென்னை
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால்
– அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502
[1].
வள்ளுவர் முப்பால் – அறத்துப்பால்
(உரையும் உரைவும்): தி. முருகரத்தனம், தமிழ்ச்சோலை, மதுரை 625021
[2]. புறநானூறு - 189