Statcounter

Monday, December 16, 2019

யாகாவாராயினும் நாகாக்க!


யாகாவாராயினும் நாகாக்க!

”கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.”, என்று கூறப்படுகிறது. திருக்குறள் என்ன சொல்கிறது? சுருங்கச் சொன்னால், பிறர் மனம் புண்படும்படியான தீயசொற்களைக் கூறாமல், தனக்கும் பிறர்க்கும் தன் செயல்களால் தீங்கிழைக்காமல், அன்போடும் அறத்தொடும் மனிதன் வாழவேண்டும் என்று, எக்காலத்திற்கும் எந்நாட்டவருக்கும் ஏற்ற கருத்துக்களைத் திருக்குறள் கூறுகிறது. பிறர் மனம் புண்படும்படியான சொற்களைக் கூறுவது சொற்குற்றம் என்று அழைக்கப்படுகிறது. புறங்கூறுதல், பயனில சொல்லுதல், இன்னாச்சொல் கூறுதல் மற்றும் பொய்சொல்லுதல் ஆகிய நான்கும் சொற்குற்றங்களாகக் கருதப்படுகின்றன[1]. புறங்கூறாமை, பயனில சொல்லாமை, இனியவை கூறல், மற்றும் வாய்மை ஆகிய அதிகாரங்களில் சொற்குற்றங்களால் வரும் தீமைகளையும் அவற்றைத் தவிர்ப்பதால் வரும் நன்மைகளையும், வள்ளுவர் விளக்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறார். இந்த நான்கு அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்து வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

புறங்கூறுதல்
பொதுவாக எல்லா மதங்களிலும், நீதிநூல்களிலும் புறங்கூறுதலைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பஹாய் மதம், இஸ்லாமிய மதம், கிறித்துவ மதம், யூத மதம், மற்றும் புத்த மதம் ஆகிய மதங்கள், புறம்பேசுவதைப் பெருங்குற்றமாகவும் பாவமாகவும் கருதுகின்றன. புறங்கூறுதல் ஒருவனுடைய ஆத்மாவுக்குக் கேடு விளைவிப்பதாகவும் கடவுளின் கோபத்திற்குக் காரணமாகவும் அமையும் என்று பஹாய் மதம் கூறுகிறது[2]. ஒருவன் புறங்கூறினால், அது அவன் அவனுடைய இறந்த சகோதரனின் தசைகளைத் தின்பதைப் போன்றது என்று திருக்குர்ரான் கூறுகிறது[3]. புறங்கூறுதல் புத்த மதத்தின் எட்டு நெறிகளில்(The Eighfold Path) ஒன்றான நன்மொழி(Right Speech) என்பதற்கு முற்றிலும் மாறானது என்று  புத்த மதத்தின் நூல்கள் கூறுகின்றன[4]. ஓருவனுக்கு நேரே எதிர்நின்று, கருணையின்றிப் பேசினாலும் பேசலாம். ஆனால், அவன் இல்லாதபொழுது, பின்னர் விளையுந் தீமையை எண்ணிப் பார்க்காமல் புறங்கூறக் கூடாது (குறள் -  184). இந்தக் குறளில், “கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக.” என்ற குறள் நடையைப்போல், “சொல்லற்க” என்பது வள்ளுவரின் கட்டளையாகத் தோன்றுகிறது. ”ஒருவன் அறத்தைப் பற்றிப் பேசாமல் தீமைகளையே செய்தாலும், அவன் ஒருவரையும் பற்றிப் புறங்கூறமாட்டான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.”, என்று குறள் 181- இல் வள்ளுவர் கூறுகிறார்.  இவ்வாறு வள்ளுவர் கூறுவதால், தீமைகள் செய்தாலும் பரவாயில்லை; புறங்கூறாமல் இருந்தால் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வரக் கூடாது. புறங்கூறாமையை வலியுறுத்துவதற்காக இங்ஙனம் கூறியதாகப் பொருள்கொள்ள வேண்டும். அடுத்த குறளில், ”அறமல்லாத செயல்களைச் செய்வதைவிட, புறங்கூறுதல் கொடிய செயல்.”, என்று வள்ளுவர் கூறுகிறார். ஒருவனைக் காணாதபொழுது, அவனைப் பழித்துக்கூறி, அவனைக் கண்டபொழுது அவனோடு பொய்யாகச் சிரித்து மகிழ்தல், அறம் என்று ஒன்றுமில்லை என்று அழித்துக்கூறி அறமல்லாத செயல்களைச் செய்வதைவிடத் தீய செயலாகும் (குறள் – 182). முடிவாக, ”ஒருவனைக் காணாதபொழுது, அவனைப் பற்றி இகழ்ந்து பேசி, அவனைக் கண்டபொழுது, நல்லவன்போல் நடித்து வாழ்வதைவிடச் சாதல் அறநூல்கள் கூறும் நன்மைகளைத் தரும் (குறள் – 183).”, என்றும் வள்ளுவர் கூறுகிறார். இங்கு, புறங்கூறி வாழ்வதைவிடச் சாவதே மேல் என்று கூறி, வள்ளுவர் புறங்கூறாமையின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறார். ஒருவன் புறங்கூறினால் அவன் உடனே சாக வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தன்று. தன்னைத் திருத்திக்கொண்டு, மீண்டும் அவன் புறங்கூறாமல் இருக்க வேண்டும் என்பதுவே வள்ளுவரின் கருத்து என்பதற்குச் சான்றாக, குறள் 190 – இல், ”மற்றவர்களின் குற்றங்களைக் கண்டுபிடித்துப் புறங்கூறுபவர்கள், தம்மிடமுள்ள குற்றங்களையும் கண்டு உணர வல்லாராயின் புறங்கூறமாட்டார்கள். அவர்களின் உயிருக்குத் தீங்கு உண்டாகாது.” என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, புறங்கூறுபவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்தால், பிறர் தங்களைப் பற்றிப் புறம்போசுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, தங்கள் குற்றங்களையும் புறங்கூறுவதையும் திருத்திக்கொள்வார்கள் என்பது கருத்து.

கண்நின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.                            (குறள்- 184)

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.                        (குறள் -181)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.                         (குறள்-182)

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும்.                            (குறள் – 183)

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.                      (குறள் – 190)

பயனில சொல்லுதல்
”ஒருவன் தன்னுடைய நண்பர்களிடம் விரும்பத் தகாத செயல்களைச் செய்வது தீய செயல். பயனற்றவற்றைப் பலர்முன் ஒருவன் சொல்லுதல் அதைவிடத் தீய செயலாகும்.” என்று குறள் 192-இல் வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.  மற்றும், அறிவுடையவர்கள் பலரும் வெறுக்குமாறு பயனற்றவற்றைப் பேசுபவன் எல்லோராலும் இழிவாக எண்ணப்படுவான் என்றும், ஒருவன் பயனவற்றவற்றை விரிவாகப் பேசுவது அவன் நேர்மையில்லாதவன் என்பதை அறிவிக்கும் என்றும், ஒருவன் பலரிடம் பயனற்ற சொற்களைப் பேசினால், அது அவனை விரும்பத்தகாதவனாக்கி, அவனடைய வேண்டிய நன்மைகளை நீக்கும் என்றும், நற்பண்புடையவர்கள் பயனற்றவற்றைப் பேசினால், அவரது புகழும் சிறப்பும் அவரை விட்டு நீங்கும் என்ற கருத்துக்களும் குறளில் காணப்படுகின்றன (குறட்பாக்கள் 191, 193, 194,195). பயனில சொல்பவனை மனிதனாகவே கருதக்கூடாது என்றும் அவன் உள்ளீடு இல்லாத பதரைப் போன்றவன் என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் 196). மற்றும், சான்றோர்களும், அறிதற்கரியவற்றை ஆராயக்கூடிய அறிவுடையவர்களும், மனதில் மாசற்ற அறிவுடையவர்களும், பயனில்லாத சொற்களை தப்பித் தவறியோ அல்லது மறந்தோகூடப் பேச மாட்டர்கள் என்ற கருத்தையும் குறளில் காண்கிறோம் (குறட்பாக்கள் 197, 198 மற்றும் 199). முடிவாக, “பயனுள்ள சொற்களைச் சொல்லுக; பயனில்லாத சொற்களைச் சொல்லற்க.” என்பது வள்ளுவரின் அறிவுரை.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.                                   (குறள் – 191)

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.                              (குறள் – 192)

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் கத்து.                        (குறள் – 194)

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.                          (குறள் – 195)

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.                                          (குறள் – 196)

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.                            (குறள் – 197)

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.                                          (குறள் – 199)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.                             (குறள் – 200)

இன்றைய சூழ்நிலையில் பயனில சொல்லுதல் பல பரிமாணங்களில் நடைபெறுகிறது. மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சியால் (மின்னணுத் தொழில்நுட்பம் – Electronic Technology) கணினி மற்றும் அலைபேசி (அலைபேசி – mobile phone) ஆகியவற்றில் முகநூல் (முகநூல் -Facebook), புலனம் (புலனம் - WhatsApp), கீச்சகம் (கீச்சகம் - Tweeter) போன்ற செயலிகளின் (செயலி - Program) உதவியால் பயனில்லாதவற்றைப் படித்தும், எழுதியும், பேசியும் பலரும் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள். அமெரிக்காவில், இளைஞர்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் நான்கு மணிநேரம் அலைபேசியைப் பயன்படுத்துவதில் செலவழிக்கிறார்கள் என்று அண்மையில் நடைபெற்ற கருத்துக் கணிப்பு கூறுகிறது. இந்திய இளைஞர்களும் கணினி மற்றும் அலைபேசியில் முகநூல், புலனம், கீச்சகம் போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவதில் நேரத்தைச் செல்வழிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. கணினி மற்றும் அலைபேசி மட்டுமல்லாமல், பல ஒளியலை வரிசைகளில் (ஓளியலை வரிசை - Channels) ஒளிபரப்பப்படும் பயனற்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் அவற்றைப் பற்றிப் பேசுவதிலும் மக்கள் தங்கள் நேரத்தைச் செலவழிக்கிறார்கள். இவையனைத்துமே சொற்களின் வழியாக நடைபெறுவதால், இவையும் பயனில சொல்லுதல் என்ற சொற்குற்றத்தைச் சார்ந்தவையாகும்.

இன்னாச்சொல் கூறுதல்
பொறாமை, புலன்களின்மீதும் பொருள்களின்மீதும் அதிக ஆசை, சினம், மற்றும் இன்னாச்சொல் இவை நான்கையும் விலக்கி வாழ்வதே அறநெறிப்படி வாழும் வாழ்வாகும் என்று,

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.                                (குறள் – 35)

என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். கடுஞ்சொல், வன்சொல், தீயசொல் ஆகியவை இன்னாச்சொல் என்பதில் அடங்கும். இன்னாச்சொற்களைக் கூறுவது அறநெறிக்கு முரண்பட்டது மட்டுமல்லாமல், அது ஒருவனுக்குக் கேடு விளைவிக்கும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.  குறிப்பாக, ஒரு மன்னன் கடுஞ்சொற்களைக் கூறி, கண்ணோட்டம் இல்லாமல் ஆட்சி நடத்துவானானால் அவனுடைய பெருஞ்செல்வம் நீடிக்காமால் அப்பொழுதே கெடும் என்றும், ஒரு மன்னன் கடுஞ்சொல் கூறுவதும், குற்றங்களுக்கு அளவிற்கு மிஞ்சிய தண்டனை அளிப்பதும், அவனது பகையை வெல்லுதற்கேற்ற வலிமை என்னும் இரும்பைத் தேய்க்கும் அரம் என்றும் குறள் கூறுகிறது.

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும்.                                (குறள் - 566)

கடுமொழியும் கைகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.                              (குறள் – 567)

கடுஞ்சொல் கூறும் மன்னன் தன் செல்வத்தையும் வலிமையையும் இழப்பான் என்று கூறியதைப்போல், அவன் கடுஞ்சொல் கூறாதவனாக இருந்தால், அவன் நாட்டை ஏனைய நாடுகளைவிடச் சிறந்ததாக உலகம் புகழும் என்றும், அவன் இன்சொல்லோடு, மக்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து அன்பாக நாட்டைக் காத்தால், இவ்வுலகம் அவன் புகழைக் கூறுவது மட்டுமல்லாமல் அவன் எண்ணியபடி நடக்கும் என்றும் இன்சொல்லால் வரும் நன்மைகளையும் குறளில் காண்கிறோம்.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.                                 (குறள் – 386)

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.                            (குறள் – 387)

           திருக்குறளில், அரசியல் என்ற இயலில் கூறப்பட்டிருக்கும் கல்வி, கேள்வி, அறிவுடைமை போன்ற கருத்துக்கள் ஒரு மன்னனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஏற்ற கருத்துக்களாகும். அதுபோல் இன்னாச்சொற்களால் வரும் தீமையைப் பற்றிய குறட்பாக்களும், இன்சொல்லால் வரும் நன்மைகளைப் பற்றிக் கூறும் குறட்பாக்களும் அனைவருக்கும் ஏற்றவையாகும்.

தீயினால் சுட்ட புண் ஆறினாலும், அந்தப் புண்ணினால் ஏற்பட்ட வடு (தழும்பு) மறைவதில்லை. அதுபோல்,  கடுஞ்சொற்களால்  ஒருவன் மனம் புண்படுத்தப்பட்டால், அந்தப்புண் தீயினால் சுட்டதால் ஏற்பட்ட தழும்புபோல் எப்பொழுதும் ஆறுவதில்லை. அதனால், கடுஞ்சொற்களைக் கூறி ஒருவர் மனத்தையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.                                       (குறள் - 129)

இன்சொற்கள் இருக்கும்பொழுது, வன்சொற்களைப் பேசுவது, இனிய கனிகள் இருக்கும்பொழுது காய்களை உண்ணுவதுபோல் என்று ஒரு உவமையைக் கூறி (குறள் 100), பிறர் கூறும் இன்சொல்லால் தனக்கு இன்பம் பிறத்தலை அறிகின்றவன், பிறரிடத்து வன்சொற்களைப் பேசுவது ஏனோ (குறள் 99) என்று ஒரு கேள்வியையும் எழுப்பி, இன்னாச்சொல் கூறுவதைத் தவிர்க்குமாறு வள்ளுவர் அறிவுரை கூறுகிறார்.

         இனிய உளவாக இன்னாத கூறல்
         கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.                         (குறள் – 100)

          இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
         வன்சொல் வழங்கு வது.                                   (குறள் – 99)


பொய்பேசுதல்
பிற உயிர்களுக்கு எந்தத் தீமையும் பயவாத சொற்களைப் பேசுவது வாய்மை என்று வாய்மைக்கு வள்ளுவர் இலக்கணம் கூறுகிறார். பிறர்க்குக் குற்றமற்ற நன்மை (புரை தீர்ந்த நன்மை) பயக்குமானால் பொய்யான சொற்களையும் வாய்மையாகவே கருதலாம் என்றும் வள்ளுவர் கூறுகிறார். இந்த இரண்டு கருத்துக்களையும் சேர்த்துப் பார்த்தால், எது பொய்மை, எது வாய்மை என்பதில் குழப்பம் ஏற்படலாம். ஒருவன் பொய் சொன்னால் அந்தப் பொய்யை ஏன் சொல்கிறான் என்றும், அவன் சொல்கின்ற பொய்யால் ”புரை தீர்ந்த” நன்மை உண்டா இல்லையா என்பதும் அவனுக்குத் தெரியும். அவன் கூறும் பொய்யால், புரை தீர்ந்த நன்மை  உண்டாகும் என்று அவன் கருதினால், அவன் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் நெஞ்சு அவனை வருத்தாது. அதனால்தான், வள்ளுவர், “ஒருவன் தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் பிறர் அறியவில்லை என்று கருதிப் பொய் சொல்லக்கூடாது.  அங்ஙனம் பொய் கூறினால், பின்னர் அப்பொய்யே அவன் நெஞ்சைச் சுட்டு வருத்தும்.”, என்று கூறுகிறார். ”புரை தீர்ந்த நன்மை வரும் சூழ்நிலைகளில் கூறும் பொய்யை வாய்மையாகக் கருதலாம்.  மற்ற எல்லாச் சூழ்நிலைகளைலும் பொய் சொல்வது தவறு. பொய்சொன்னால் தன் நெஞ்சே தன்னைச் சுடும்.” என்பது வள்ளுவர் கருத்தாகத் தோன்றுகிறது.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.                                      (குறள் – 291)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.                                  (குறள் – 292)

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.                           (குறள் – 293)


இங்கு, “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.”, என்று உலகநாதர் என்பவர் இயற்றிய உலகநீதி என்ற நூலில் கூறியிருப்பதும், ”நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை” என்று கொன்றை வேந்தனில் அவ்வையார் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

பொய் சொல்லாமல் இருப்பது நல்லொழுக்கம் என்பது உலகறிந்த உண்மை. ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவானாயின், அவன் உலக மக்கள் அனைவரது உள்ளத்திலும் இடம்பெறும் சிறப்பைப் பெறுவான் (குறள் – 294). இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக காந்தி அடிகள் வாழ்ந்தது நினைவுகூரத் தக்கது. ஒருவன் பொய்யாமையை இடைவிடாது கடைப்பிடித்தால், அவன் வேறு அறங்களைச் செய்ய வேண்டியதில்லை. பிற அறங்களால் பெறக்கூடிய பயனை பொய்யாமையாலேயே அடையலாம் (குறள் – 297). முடிவாக, தான் மெய்யாக் கண்டவற்றுள் வாய்மையைவிட நல்லது வேறொன்றுமில்லை என்று தன்மைப் பன்மையில் அழுத்தம் திருத்தமாக வாய்மையின் பெருமையை வள்ளுவர் பறைசாற்றுகிறார்(குறள்- 300).

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.                                       (குறள் – 294)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.                                   (குறள் - 297)

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.                                             (குறள் - 300)


யாகாவாராயினும் நாகாக்க
அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில், “ ஒருவன் ஐம்பொறிகளில்  எவற்றையும் அடக்கிக் காவான் எனினும், வாய்ச்சொற்களை அடக்கிக் காத்தல் வேண்டும். அவன் அவ்வாறு செய்யாவிட்டால், தன் வாய்ச்சொற்களால் இழிவு உண்டாகித் துன்பம் அடைவான்.”, என்ற கருத்து குறளில் காணப்படுகிறது.

         யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
         சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.                  (குறள் – 127)

”நா” என்பது ”சொல்” என்பதைக் குறிக்கிறது. நாகாத்தல் என்பது, எதைச் சொல்லலாம் எதைச் சொல்லக்கூடாது என்பதை சிந்தித்து, சொல்லக்கூடாதை சொல்லாமல் தவிர்ப்பதைக் குறிக்கிறது. நாகாத்தல் செய்யாதவன் புறங்கூறுதல், பயனில சொல்லுதல், கடுஞ்சொல் கூறுதல் மற்றும் பொய்பேசுதல் ஆகிய சொற்குற்றங்களைச் செய்து, அவற்றால் வரும் துன்பங்களை அடைவான்.

சொற்குற்றம் வராமல் காப்பது எப்படி? சொல்லுக்கும் செயலுக்கும் மூலகாரணமாக அமைவது மனம். ஒருவனுடைய மனம் தூய்மையாக இருந்தால், அவனுடைய சொல்லும் செயலும் தூய்மையானவையாக இருக்கும். அவன் சொற்களில் குற்றங்கள் இருக்காது. அதாவது, அவன் புறங்கூறமாட்டான்; பயனில கூறமாட்டான்; இன்னாச்சொல் கூறமாட்டான்; பொய் பேசமாட்டான். அவனுடைய செயல்களிலும் தீமை இருக்காது.

அடுத்து, மனதை எப்படித் தூய்மையாக வைத்துக்கொள்வது என்ற கேள்வி எழுகிறது. வள்ளுவர் இந்தக் கேள்விக்கும் விடை அளிக்கிறார். நீரில் குளிப்பதால் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். அதுபோல், எபொழுதும் வாய்மையே பேசுவதால் மனதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும் என்பது வள்ளுவரின் கருத்து.

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.                             (குறள் – 298)

வாய்மையைக் கடைபிடிப்பவன் தான் சொல்லும் தீய சொற்களுக்கும், செய்யும் தீய செயல்களுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அதனால், அவன் பிறரால் இகழப்படுவதும், தீய செயல்களுக்குத் தண்டனை அடைவதும் உறுதி.  ஆகவே, காலப்போக்கில், தீய சொற்களைக் கூறுவதையும் தீய செயல்களைச் செய்வதையும் அவன் விட்டுவிடுவான்.

முடிவுரை
புறங்கூறுதல், பயனில சொல்லுதல், இன்னாச்சொல் கூறுதல், பொய்பேசுதல் ஆகிய நான்கும் சொற்குற்றங்கள் என்று கருதப்படுகின்றன. இந்த நான்கு சொற்குற்றங்களால் வரும் தீமைகளையும், அவற்றை விலக்குவதால் வரும் நன்மைகளையும், வள்ளுவர் புறங்கூறாமை, பயனில சொல்லாமை, இனியவை கூறல், வாய்மை என்ற அதிகாரங்களில் விளக்குகிறார். சொற்குற்றங்களுக்கும், தீயசெயல்களுக்கும் காரணம் மனதில் தூய்மையின்மை. எப்பொழுதும் வாய்மையே பேசுவதால் மனதில் உள்ள மாசுக்களை நீக்கி, சொற்குற்றங்களையும் தீயசெயல்களையும் செய்யாமல் வாழமுடியும் என்பது வள்ளுவரின் கருத்து.

துணைநூல்கள்
Smith, Peter. An Introduction to Baha’I Faith. Cambridge University Press, New York, NY 10013
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால். தமிழ்ச்சோலை, மதுரை 62502



[1] பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
    சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் (மணிமேகலை, ஆபுத்திரன் நாடு அடைத்த காதை: 127 -128)
[2]. Peter Smith. An Introduction to Baha’I Faith. Cambridge University Press, New York, NY 10013
[3]. Rafik Berjak(2006) “Backbiting”, The Quar’an: an Encyclopedia, Taylor & Francis
[4]. Jootla, Susan (1982). “Right Livelihood: The Noble Eightfold Path in the Working Life”


No comments:

Post a Comment