Statcounter

Saturday, October 12, 2019

வள்ளுவத்தில் புதுமையும் புரட்சியும்


வள்ளுவத்தில் புதுமையும் புரட்சியும்

புதுமையும் புரட்சியும்
 இதுவரை அனுபவிக்காதது, காணாதது, கேள்விப்படாதது, முற்றிலும் புதியது புதுமை என்று கருதப்படுகிறது.  சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்க வழக்கங்கள் அல்லது கருத்துக்கள் ஆகியவற்றிற்கு மாறான கருத்துக்கள் புரட்சிகரமானவையாகக் கருதப்படுகின்றன.  இந்த வரையறை அடிப்படையில் பார்த்தால், திருக்குறளில் புதுமையான கருத்துக்களும்  புரட்சிகரமான கருத்துக்களும் உள்ளன என்பதை உணரமுடியும். 
                                                                                           
ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுவதைக் கண்ட ஐசக் நியூடன் (Isaac Newton) புவியின் ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார்.  அதற்கு முன்பு, “ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது?” என்று யாரும் சிந்திக்கவில்லை.  ஆகவே, ஐசக் நியூடனின் கருத்து  புதுமையான கருத்தாகக் கருதப்பட்டது. சில சமயங்களில், புதுமையான கருத்து  புரட்சிகரமானதாகவும்  இருக்கலாம். பதினாறாம் நூற்றாண்டுவரை,  இந்தப் பிரபஞ்சம், பூமியை மையமாகக்கொண்டு இயங்குகிறது என்ற கருத்து நிலவியது. விவிலியத்திலும் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது.  போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கலஸ் காப்பர்நிக்கஸ் (Nicolaus Coppernicus 1473 – 1543) என்ற விஞ்ஞானி,  தன்னுடைய நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்தப் பிரபஞ்சம் கதிரவனை மையமாகக் கொண்டுள்ளது (helio-centeric vs geo-centeric) என்ற முடிவுக்கு வந்தார்.  தன்னுடைய கருத்து, அக்காலத்தில் பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்துக்களுக்கும், விவிலியத்திற்கும் மாறானதாக இருப்பதை அவர் உணர்ந்தார்.  ஆகவே, தன்னுடைய புரட்சிகரமான கருத்தை வெளியிட்டால் அதற்கு எதிர்ப்பு இருக்கும் என்ற காரணத்தினால், தான் இறப்பதற்கு சில மாதங்களுக்குமுன் அதை ஒரு நூலாக வெளியிட்டு அவர் இறந்தார்.  காப்பர்நிக்கஸ் அவர்களுடைய கருத்து புதுமையானதாக மட்டுமல்லாமல் புரட்சிகரமானதாகவும் கருதப்பட்டது.

திருக்குறளில் புதுமை
தமிழில் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா என்று நான்கு வகையான பாடல்கள் உள்ளன.  அவற்றில் குறட்பா என்பது வெண்பாவின் ஒருவகையாகும்.  பலவகையான பாடல் வகைகள் இருந்தாலும், குறட்பாக்களினாலேயே இயற்றப்பட்ட முதல் நூல் திருக்குறள்.  இது ஒரு புதுமைதான்.

அறநெறியில் வாழ்வதையும், பொருள் சேர்ப்பதையும், கணவன் மனைவியாக வாழ்ந்து இல்லறத்தில் இன்பம் அனுபவிப்பதையும், தமிழர்கள் தங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களாகக் கருதினர்.  தமிழில் தோன்றிய நூல்களில், அறம், பொருள், இன்பம், ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய முதல் நூல் திருக்குறள் என்றால் அது மிகை ஆகாது.

தமிழ் இலக்கண மரபுப்படி, பாடப்படும் பொருள்களை அகம் புறம் என்று பிரிப்பது வழக்கம்.  காதலைப் பற்றிய பாடல்களை அகத்திணை என்றும் வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகளைப் பற்றிய பாடல்களைப் புறத்திணைப் பாடல்கள் என்றும் தொல்காப்பியம் பிரிக்கிறது.  திருக்குறளின் அறத்துப்பாலும் பொருட்பாலும் புறத்திணையில் அடங்கும்.  காமத்துப்பால் பாடல்கள் அகத்திணையைச் சார்ந்தவை.  ஆகவே, தமிழில் அகத்திணைப் பாடல்களும் புறத்திணைப் பாடல்களும் அடங்கிய முதல் நூல் திருக்குறள்.

திருவள்ளுவர் காலத்தில் மூன்று மதங்கள் இருந்தன.  அவை வைதீக மதம் (இன்றைய இந்து மதத்தின் முன்னோடி), புத்த மதம் மற்றும் சமண மதம். திருக்குறளில், இந்த மூன்று மதங்களையும் சார்ந்த கருத்துக்கள் உள்ளன; மூன்று மாதங்களுக்கும் மாறான கருத்துக்களும் உள்ளன.  அவர் காலத்தில் இருந்த மூன்று மதங்களிலிருந்தும் தனக்கேற்ற கருத்துக்களை  எடுத்துக்கொண்டு, அவற்றோடு தன்னுடைய சொந்தக் கருத்துக்களையும் சேர்த்துத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.  உதாரணமாக, முனைவர் காமாட்சி சீனிவாசன் என்ற அம்மையார் திருக்குறளில் உள்ள கருத்துக்களையும் வள்ளுவர் காலத்தில் இருந்த மதங்களைப் பற்றிய கருத்துக்களையும் ஆராய்ந்து, வள்ளுவர் எந்த மதத்தையும் சாராமல் திருக்குறளை எழுதியுள்ளார் என்ற தன் முடிவை, “குறள் கூறும் சமயம்என்ற நூலில் கூறுகிறார். திருக்குறள் முதன்முதலாக எழுதப்பட்ட மதச்சார்பற்ற நூல் என்பதும் திருக்குறளின் புதுமைக்கு மற்றுமொரு சான்றாகும்.

திருக்குறளில் புரட்சி
திருக்குறளில் உள்ள கருத்துக்கள் புதுமையானவையாக மட்டுமல்லாமல் புரட்சிகரமானவையாகவும் உள்ளன.

மக்கள் அனைவரும் பிறப்பினால் சமம்: வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஆரியர்களின் வருணாசிரமக் கொள்கை வேரூன்றத் தொடங்கியது.  வருணாசிரமக் கொள்கைப்படி, மனிதர்கள் நான்கு வகையானவர்கள்.  நான்கு வகை மனிதர்களில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள்.  அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் சத்திரியர்கள்.  சத்திரியர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் வைசியர்கள். கடைநிலை மனிதர்கள் சூத்திரர்கள்.  இந்த நான்குவகைப் பிரிவுகளும் பிறப்பினால் ஏற்படுபவை.  அதாவது, பிரமாணனுக்குப் பிறந்தவர்கள் பிராமணர்கள். பிராமணர்கள் சத்திரியர்களாக மாறமுடியாது. அதுபோல், சத்திரியர்கள் பிராமணர்களாக முடியாது.  பிறப்பினால் மக்கள் வேறுபடுகிறார்கள் என்ற கொள்கைதான் வருணாசிரமத்திற்கு அடிப்படை.  இந்தக் கொள்கை வேரூன்றத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த வள்ளுவர், பிறப்பினால் அனைவரும் சமம் என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.                                                        (குறள் – 972)
வள்ளுவர் கருத்துப்படி, பிறப்பினால் அனைவரும் சமம்.  ஆனால், அவரவர் செய்கின்ற தொழினால், தொழிலைச் செய்கின்ற திறமையினால், அவர்களுடைய சாதனைகளால்தான் மக்கள் வேறுபடுகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், மக்கள் பிறப்பினால் வேறுபடுகிறார்கள் என்ற நம்பிக்கை உடையவர்கள் பலர்.  ஆகவே, ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று வள்ளுவர் கூறியது ஒரு புரட்சிகரமான கருத்து.
உயர்வும் தாழ்வும்:பிறவியினால் தங்களைச் சிலர் உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் கருதினாலும், மேலானவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள் உண்மையிலே மேலானவர்களாக இல்லாமல் இருக்கலாம்; கீழானவர்களாகக் கருதப்படுபவர்கள் கீழானவர்களாக இல்லாமல் இருக்கலாம்.” என்று வள்ளுவர் கூறுகிறார்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.                                                                      (குறள் – 973)
மக்களிடையே காணப்படும் உயர்வு தாழ்வுக்கு உண்மையான காரணம் அவர்களுடைய ஒழுக்கம் என்பது வள்ளுவர் கருத்து.  ஒழுக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள்; ஒழுக்கம் இல்லாதவர்கள் பழிக்கு ஆளாவார்கள்.  ஆகவே, ஒழுக்கம் இல்லாதவர்கள் இழிந்தவர்கள். மனித இனத்தில் காணப்படும் உயர்வு தாழ்வுக்கு வள்ளுவர் காட்டும் காரணம் மிகவும் புரட்சிகரமானது.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.                                                           (குறள் – 137)

பகுத்தறிவு: மனிதன் ஆறறிவு பெற்றவன்.  காண்பவற்றையும், கேட்பவற்றையும், நுகர்பவற்றையும், தான் கற்பவற்றையும் ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை அறியக் கூடிய ஆற்றல்தான் ஆறாவது அறிவு.  அதுதான் பகுத்தறிவு என்று அழைக்கப்படுகிறது.  பகுத்தறிவைப் பயன்படுத்தி, பொருள்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு என்கிறார் வள்ளுவர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.                                                      (குறள் – 355)
இந்தப் பகுத்தறிவுதான் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம்.  அதுபோல், யார் எதைச் சொன்னாலும், அவர்கள் சொல்வதின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்வதுதான் உண்மையான அறிவு.  எப்படி விஞ்ஞானத்தின் மூலம் பொருள்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்கிறோமோ அதுபோல், பிறர் கூறும் கருத்துக்களின் உண்மையையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.                                       (குறள் – 423)
மதநம்பிக்கை உடையவர்கள் மதத்தலைவர்களின் கருத்துக்களையும், மதநூல்களையும் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்வதில்லை.  மதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மதங்கள் கூறும் சில கருத்துக்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கலாம். நம்பிக்கை அடிப்படையில் மதக்கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டாலும்,  பகுத்தறிவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி செய்து மூட நம்பிக்கைகளை விலக்கி, மெய்ஞ்ஞானத்தை வளர்ப்பதுதான் அறிவுடையவன் செய்ய வேண்டிய செயல்.  இன்றைய அரசியல் சூழ்நிலையில், அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகளையும் அவர்களுடைய சொற்களையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்பவர்கள் பலர்.  ஆகவே, மதம், அரசியல் மற்றும் எல்லாத்துறைகளிலும் மனிதன் பகுத்தறிவைப் பயன்படுத்தி, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது ஒரு புரட்சிகரமான கருத்து என்றால் அது மிகையாகாது.

இல்லறமே நல்லறம்: வைதீக மதத்திலும், அதற்குப் பின் தோன்றிய இந்து மதத்திலும், சமண மதத்திலும், புத்த மதத்திலும்  நான்கு வகையான வாழ்க்கை முறைகள் கூறப்படுகின்றன. அவை பிரமச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் என்று  அழைக்கப்படுகின்றன.  ஆனால், தமிழ் இலக்கியங்களில் இல்லறம் (கிரஹஸ்தம்) துறவறம் (சன்னியாசம்) ஆகிய இரண்டு வாழ்க்கை முறைகள் மட்டுமே அதிகமாக  குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  இல்லறம் என்பது ஆணும் பெண்னும் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாகக் குழந்தைகளோடும் உறவினர்களோடும் சுற்றத்தாரோடும் சேர்ந்து வாழ்ந்து, பொருள் சேர்த்து, இன்பம் அனுபவிப்பதைக் குறிக்கும்.  துறவறம் என்பது, உலக வாழ்க்கையை வெறுத்து, பற்றுக்களை அறுத்து, தவம் செய்து, வீடுபேறு அடையும் முயற்சியில் ஈடுபடும் வாழ்க்கை முறை.  துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறவில்லை. ஒருவன் துறவறத்தை மேற்கொள்ள விரும்பினால் மேற்கொள்ளலாமே தவிர, துவறம் இல்லறத்தைவிடச் சிறந்தது என்றோ, துறவறத்தை மேற்கொண்டால்தான் வீடுபேறு அடையலாம் என்றோ வள்ளுவர் கூறவில்லை.
வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.                                                           (குறள் – 342)

துறவறத்தைவிட இல்லறம் சிறந்தது; இல்லற வாழ்க்கையில் வாழ்வதைவிட ஒருவன் துறவறத்தை மேற்கொண்டு எதைப் பெறப்போகிறான்?” என்று வள்ளுவர் கேட்கிறார்.  அறநெறிகளிலிருந்து வழுவாது இல்லற வாழ்க்கை நடத்தி, மற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களுக்கும் (துறவிகளுக்கும்) ஆதரவாக இருப்பது, துறவிகளாக இருந்து தவம் செய்பவர்களின் தவத்தைவிட வலிமையானது என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்?                                                    (குறள் – 46)
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.                                        (குறள் – 48)
வள்ளுவருடைய கருத்துக்களை ஆராய்ந்து பார்த்தால், அவர் இவ்வுலக வாழ்க்கையையும் இல்லற வாழ்க்கையையும் மிகச் சிறப்பாகக் கருதுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.                                                  (குறள் – 50)
உலக வாழ்க்கையையும் இல்லற வாழ்க்கையையும் வள்ளுவர் சிறப்பாகக் கூறுவதைக் கண்ட ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஜெர்மானிய நாட்டைச் சார்ந்த, நோபல் பரிசு பெற்ற மருத்துவர், “இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றிய திருக்குறளில், வள்ளுவர் இவ்வுலக வாழ்க்கையை ஆதரிக்கும் கருத்துக்களைக் கூறுகிறார்.  இதுபோன்ற கருத்துக்களை வைதீக மதத்திலும், புத்த மதத்திலும் பகவத்கீதையிலும்  காணமுடியவில்லை.” என்று வியக்கிறார்.

முயற்சியின் சிறப்பு: மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் அவன் தன் சொந்த உழைப்பினால், முயற்சியினால்தான் முன்னேற முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவர் வள்ளுவர்.  எந்தவொரு செயலையும்  செய்வதற்குக் கடினமான செயல் என்று எண்ணி மனம் தளராமல் முயற்சி செய்தால், வெற்றி கிடைப்பது உறுதி என்று வள்ளுவர் நம்புகிறார்.  முயற்சியினால் செல்வம் வரும். முயற்சி இல்லையானல் வறுமைதான் வரும்.  ஒருவனுக்குத் தெய்வ நம்பிக்கை இருந்தால், தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஒரு காரியத்தைச் செய்தால், அவன் விரும்புவது  அவனுக்குக் கிடைப்பதற்கு தெய்வம் வழிசெய்யாவிட்டாலும்கூட, அவன் முயற்சிக்கு ஏற்ற பலனை அவன் அடைவான் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.                                                         (குறள் – 611)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.                                                         (குறள் – 616)

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.                                                      (குறள் – 619)

வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத, எதிர்பார்க்க முடியாத சில நிகழ்வுகள் சில சமயங்களில் நடைபெறுவது உண்டு.  அது உலக இயற்கை; அதுதான் உலக வாழ்க்கையின்  முறைமை. அதைத்தான் வள்ளுவர்ஊழ்என்று குறிப்பிடுகிறார்.  பொதுவாகஊழ்என்பதற்குவிதிஎன்று பலரும் பொருள் கூறுவார்கள். ஆனால்ஊழ்என்ற சொல்லுக்குமுறைமைஎன்ற பொருளும் உண்டு.  எதிர்பாராத செயல்கள் நடப்பது தான் உலக வாழ்க்கையின் முறைமை.  ஆகவே’ “ஊழ்என்ற சொல்லுக்குமுறைமைஎன்று பொருள்கொள்வதில் தவறில்லை.  நாம் ஒரு செயலைச் செய்ய முயற்சி செய்யும் பொழுது, நம்முடைய முயற்சியில் ஊழ் குறுக்கிடும் என்ற கருத்தை,
ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.                                                       (குறள் – 380)

என்ற குறளில் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.  ஊழ் வெல்லும் என்று அவர் கூறவில்லை. மனம் தளராமல், கடினமான முயற்சியுடன் பணியாற்றினால் ஊழையும் வெல்லலாம் என்ற கருத்தை,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.                                                         (குறள் – 620)
என்ற குறளில் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.  தெய்வ நம்பிக்கையைவிட மனித முயற்சியின் சிறப்பை வள்ளுவர் போற்றுவது புதுமையும் புரட்சியும் நிறைந்த கருத்து.
முயற்சி செய்யாமல், பிறரை நம்பி, இரந்து வாழவேண்டும் என்று இறைவன் எந்த மனிதனையும் படைக்கவில்லை.  அப்படி இறைவன் படைத்திருப்பானேயானால், அந்த இறைவன் இந்த உலகிற்கு வந்து பிச்சை எடுத்து அலைந்து திரிந்து அழிந்து போகட்டும் என்று வள்ளுவர் கூறுவது புரட்சிகரமான கருத்து என்பதில் ஐயமில்லை.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.                                                                 (குறள் – 1062)

தனிமனித வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், உலக வாழ்க்கையில் மனித சமுதாயம் காணும் குறைபாடுகளுக்கும் மனித சமுதாயம்தான் தன்னுடைய மனிதாபிமானத்தால், முயற்சியால் வழிகாண வேண்டும் என்று வள்ளுவர் கருதுவதாகத் தெரிகிறது. சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருப்பது உலக இயற்கை. வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி செய்து அவர்களின் நல்வாழ்விற்கு வழிவகுப்பது பொருளாதார வசதி உடையவர்களின் கடமை என்பது வள்ளுவரின் கருத்து. ஒருவன் பாடுபட்டுச் சேகரித்த பொருளெல்லாம் தகுந்தவர்களுக்குக் கொடுத்து உதவி செய்வதற்காகத்தான் என்று வள்ளுவர் உறுதியாகக் கூறியிருப்பதையும், அவ்வாறு செய்வதுதான் தலையான செயல் என்று அவர் கூறியிருப்பதையும் கீழ்வரும் குறட்பாக்களில் காணலாம்.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.                                          (குறள் – 212)

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.                                           (குறள் – 322)

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும்பொழுது, உதவி செய்பவர்கள் உதவி செய்வதனால் தனக்கு என்ன பயன் என்று கருதாமல் உதவி செய்ய வேண்டும். பொதுவாக, ”பிறருக்கு உதவி செய்வது ஒரு நற்செயல். அந்த நற்செயலை செய்வதனால் புண்ணியம் கிடைக்கும். ஆகவே, மேலுலகத்திற்குச் செல்லும் வாய்ப்பு உண்டு.” என்ற  நம்பிக்கை வள்ளுவர் காலத்தில் நிலவியது. அந்த நம்பிக்கை இன்றும் பலரிடையே உள்ளது.  ஆனால், மேலுலகம் இருக்கிறதோ இல்லையோ, அப்படியே இருந்தாலும், பிறருக்கு உதவி செய்வதனால் அங்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகுமோ என்ற சிந்தனைகளை நீக்கி, “மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்றுஎன்று வள்ளுவர் கூறுகிறார்.  கைம்மாறு கருதாமல் பெய்யும் மழைபோல் பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்று வள்ளுவர் கூறுவதும் புரட்சிகரமான கருத்துதான்.  பயன் கருதாது உதவி செய்வது மட்டுமல்லாமல், எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல், அறநெறியில் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்ற உறுதியுடன் அறநெறியைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தையும் திருக்குறளில் பல குறட்பாக்களில் காணலாம்.

இன்னா செய்யாமை: வள்ளுவருடைய இன்னா செய்யாமையைப் பற்றிய கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவை.  பொதுவாக, மனித சமுதாயத்தில்குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தில்பழி வாங்கும் மனப்பன்மை பல காலமாகவே மக்களிடையே இருந்து வருகிறது.  ஆனால், பிறருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பம்போல் கருதாவிட்டால், அறிவினால் என்ன பயன் என்று வள்ளுவர் கேட்கிறார்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.                                           (குறள் – 315)
உனக்கு யார் எதைச் செய்தால் நீ அதை விரும்பமாட்டாயோ அத்தகைய செயல்களை நீ பிறருக்குச் செய்யாதேஎன்பது சீனாவின் தத்துவஞானி கன்ஃபூசியஸின் பொன்மொழியாகக் கருதப்படுகிறது.  வள்ளுவர் கன்ஃபூசியஸின் கருத்துக்கும் மேலான ஒரு கருத்தைக் கூறுகிறார்.  அதாவது, தனக்குத் தீமை செய்தவர்கள் வெட்கப்படுமாறு அவர்களுக்கு ஒரு நன்மையைச் செய்து, அவர்கள் செய்த தீமையையும் தான் செய்த நன்மையையும் மறந்துவிட வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.                                                                 (குறள் – 314)
எக்காரணத்தை முன்னிட்டும், எப்பொழுதும், யாருக்கும் மனதால்கூடத் தீமை செய்யாமல் இருப்பதுவே சிறந்தது என்பது வள்ளுவரின் பொன்மொழி.  சொல்லும் செயலும் சிந்தனையின் அடிப்படையில் தோன்றுவதால், மனதில் தீமை இல்லாவிட்டால், பிறரைச் சொல்லாலும் செயலாலும் துன்புறுத்த முடியாது என்ற கருத்து
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.                                                     (குறள் – 317)
என்ற குறளில் காணப்படுகிறது.

திருக்குறளில் வள்ளுவர் கூறும் பல அரிய புரட்சிகரமான கருத்துக்களுள் இன்னா செய்யாமை மிகவும் சிறப்பான கருத்து.  உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கும்பொழுது, இன்னா செய்யாமையைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்து அவரை மிகவும் கவர்ந்தது. அவர் 1906 – ஆம் ஆண்டு, மும்பையில் உள்ள நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கடிதத்தில், வள்ளுவருடைய இன்னா செய்யாமையைப் பற்றிய கருத்துக்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.  அதைப் படித்த காந்தி அடிகள் தானும் திருக்குறளைப் படிக்க விரும்பினார். திருக்குறளை ஆங்கிலத்தில் படித்தவுடன், தமிழ் கற்றுக்கொண்டு, திருக்குறளைத் தமிழில் படிக்க வேண்டும் என்று காந்தி அடிகள் விரும்பினார்.  திருக்குறள் படித்தவுடன் காந்தி அடிகளின் இன்னா செய்யாமையைப் பற்றிய கருத்துக்கள் மேலும் வலிவடைந்தன.  இன்னா செய்யாமையை ஒரு போர்க்கருவியாகக் கையாண்டு, காந்தி அடிகள் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற்றதும், காந்தி அடிகளைப் பின்பற்றி அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் அங்குள்ள ஆப்பிரிக்க இனத்தைச் சார்ந்த அமெரிக்கர்களின் வாக்குரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றதும் உலகறிந்த உண்மை.  ஆகவே, வள்ளுவரின் இன்னா செய்யாமையைப் பற்றிய கருத்து புரட்சிகரமானது மட்டுமல்லாமல் பல புரட்சிகளில் பயனளித்த ஒருசிறந்த கருவியாகவும் விளங்குகிறது

பரத்தையர் தொடர்பு: சங்க இலக்கியத்தில்,மருதத்திணை என்ற பிரிவைச் சார்ந்த பாடல்களின் உரிப்பொருள் (மையக் கருத்து) ஊடல்.  ஊடல் என்றால், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் சிறு பிணக்குகள்.  சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் ஊடலுக்கு முக்கியமான காரணம் ஆணின் பரத்தையர் தொடர்பு.  அதாவது, கணவன் மனைவியைப் பிரிந்து இருந்தபொழுது அவன் பரத்தையரோடு தொடர்பு கொண்டிருந்ததை அறிந்த மனைவி, அவன் திரும்பி வந்தவுடன் அவனோடு கோபித்துக்கொண்டு பிறகு கூடுவதற்குச் சம்மதிப்பாள்.  இதிலிருந்து, சங்க காலத்தில் ஆண்களுடைய  பரத்தையர் தொடர்பு தவறானது என்று கண்டிக்கப்படவில்லை என்று தெரிகிறது.  ஆனால், பரத்தையர் தொடர்பை வன்மையாகக் கண்டித்த முதல் தமிழறிஞர் வள்ளுவர் என்பது அவருடைய நூலிலிருந்து தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.  ஒருவரைப் பரத்தையர் விரும்புவது அவரின் பொருளுக்காகத் தவிர அன்பிற்காக அன்று.  பயனைக் கருதிப் பண்புடைய சொற்களைக் கூறும் பரத்தையருடைய தொடர்பு ஒருவருக்கு இழிவைத் தரும்.  ஒரு பரத்தையைத் தழுவி, இன்பம் அனுபவிப்பது ஒரு அநாதைப் பிணத்தை இருட்டறையில் தழுவுவதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர். இந்தப் புரட்சிகரமான கருத்துக்களை கீழ்வரும் குறட்பாக்களில் காணலாம்.
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.                                                    (குறள் – 911)

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.                                                     (குறள் – 912)

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.                                                       (குறள் – 913)

கள்ளுண்ணாமை: வள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும் கள்ளுண்ணுதல் தமிழ்ச் சமுதாயத்தில் பெருமளவில் வழக்கிலிருந்தது என்பது சங்க இலக்கியத்தில் உள்ள பல  பாடல்களில் காணப்படும் செய்தி.  ஆனால், கள்ளுண்ணுவதை முதன்முதலாகக் கண்டித்த புலவர் வள்ளுவர் என்பது அவருடைய நூலிலிருந்து தெரிகிறது.  கள் குடிக்காதே; சான்றோரால் மதிக்கப்பட விரும்பாதவர்கள் வேண்டுமானால் கள் குடிக்கலாம்.  பொருள் கொடுத்துத் தன்னை மெய்ம்மறக்க வைக்கும் கள்ளை வாங்கிப் பயன்படுத்துவது (கள் குடிப்பது),  என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்கள் செய்யும் செயல்.  தூங்குபவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் பெரிய வேற்றுமை இல்லை; அதுபோல் கள் குடிப்பவர்களுக்கும் நஞ்சு உண்பவர்களுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.” என்று கள்ளுண்ணுவதைப் பலவகையாக எதிர்த்தவர் வள்ளுவர். இதுவும் ஒரு புரட்சிதான்.
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.                                                             (குறள் – 922)

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.                                                              (குறள் – 925)

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.                                                            (குறள் – 926)

வள்ளுவரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன.   புலால் உண்ணுவது வழக்கமாக இருந்த காலத்தில், புலால் உண்ணுவது உயிர்க்கொலை என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உறுதியாகக் கூறியவர் வள்ளுவர் (குறட்பாக்கள் 251 – 259).  வைதீக மதத்தைச் சார்ந்தவர்கள் யாகம் என்ற பெயரில், விலங்குகளைத் தீயிலிடுவதை வள்ளுவர் கண்டித்தார் (குறள் 259). புத்தமதத் துறவிகள் மொட்டை அடித்துக் கொள்வதும் சமண மதத் துறவிகள் முடிவளர்ப்பதும் தேவையற்ற சடங்குகள் என்று வள்ளுவர்கூறுகிறார் (குறள் 280).  உண்மையான அறம் என்பது மனத்தூய்மை.  அதைத் தவிர மற்றெல்லாம் வெறும் ஆரவாரமான செயல்கள்(குறள் 34) என்று கூறுகிறார்.  இவை அனைத்தும் வள்ளுவரின் புரட்சிகரமான கருத்துக்களுக்குச் சான்றுகள்.

வள்ளுவர் கருத்துக்கள் இன்று தேவையா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் சமுதாயத்தில் வழக்கில் இருந்த பழக்க வழக்கங்களுக்கு மாறானவையாக இருந்ததால்,  வள்ளுவரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை என்பது தெளிவு.  ஆனால், இந்தக் கருத்துக்கள் இன்றைய சமுதாயத்திற்குத் தேவையா?  அவை இன்றைய சமுதாயத்திற்குப் பயனுள்ளவையா?  

மனித சமுதாயம் பல துறைகளில் இன்னும் மாறவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்றைய சமுதாயத்தில் சாதி, மதம், குடிப் பிறப்பு, இனம், நிறம், குடிமை ஆகியவற்றால் வேற்றுமைகள் காணப்படுகின்றன.  சண்டைகள், படுகொலைகள், வன்முறைகள், கற்பழிப்பு, வறுமை ஆகியவை கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன.  விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம்; பகுத்தறிவு வளரவில்லை.  மனித முயற்சியைவிட, குறுக்குவழிகளிலும் மூட நம்பிக்கைகளாலும் முன்னேற நினைக்கும் மனிதர்கள் பலர் உள்ளனர். பல நாடுகளில் இல்லறம் நல்லறமாக இல்லை; மணமுறிவு, ஓரினச் சேர்க்கை, ஒழுக்கமின்மை ஆகியவை பெருகிக் கொண்டிருக்கின்றன.  இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் பரத்தையர் எண்ணிக்கை அதிகம்.  பாலியல் நோய்களில் தமிழ்நாடு இந்தியாவில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.  தமிழ்நாட்டில், பல தேநீர்க்கடைகள் டாஸ்மாக் கடைகளாகிவிட்டன; குடிப்பழக்கத்திற்கு அரசு ஆதரவு அளிக்கிறது.  கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளின் வருவாய் 3,000 கோடி ரூபாயிலிருந்து ஏறத்தாழ 33,000 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது.
சமுதாயம் திருந்த வேண்டுமானால் தனி மனிதன் திருந்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, வள்ளுவரால் கூறப்பட்ட புதுமையான, புரட்சிகரமான கருத்துக்கள் அடங்கிய நூல் திருக்குறள்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் கூறிய கருத்துக்கள் இன்றைக்கும் புரட்சிகரமானவைதான்; இன்றைக்கும் தேவையான கருத்துக்கள்தான்.  மனித முன்னேற்றத்திற்குத் திருக்குறள் ஒரு வழிகாட்டி. அது எக்காலத்திற்கும் எந்நாட்டவர்க்கும் ஏற்ற கருத்துக்கள் அடங்கிய கருவூலம்.
துணைநூல்கள்
Sweitzer, Albert. Indian Thought and Its Development. The Beacon press, Boston, USA  1960
சீனிவாசன், காமாட்சி. குறள் கூறும் சமயம். மதுரைகாமராசர் பல்கலைக் கழகம் 1979

3 comments:

  1. 'திருவள்ளுவர் காலத்தில் மூன்று மதங்கள் இருந்தன" என்பது புதிய செய்தி. இச் செய்தி, தாங்கள் குறிப்பிட்ட நூலைத் தவிர வேறெங்கிலும் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதையும் குறிப்பிட்டால் நலமாய் இருக்கும்.

    'இன்னா செய்யாமை' என்ற கருத்திற்கு, கன்பூசியஸ் கருத்தோடு ஒப்பிட்டது மிகவும் அருமை.

    "குடிப்பழக்கத்திற்கு அரசு ஆதரவு அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளின் வருவாய் 3,000 கோடி ரூபாயிலிருந்து ஏறத்தாழ 33,000 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது.'

    இது அரசாங்கத்திற்கு மீது வீசப்படும் சவுக்கடி. இது அரசாளபர்வர்களுக்கு வலித்தால் சரி.

    சிந்தனையைத் தூண்டும் நல்ல கட்டுரை. பாராட்டுகள். நன்றி

    ReplyDelete
  2. திருக்குறள் என்றும் புதுமையானது. அறிதோறும் அறியாமை என்பதே திருக்குறளை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நமக்குப் புலப்படுகிற உண்மை! நல்ல கட்டுரைக்கு நன்றி

    ReplyDelete