Statcounter

Sunday, July 12, 2020

திருக்குறளில் தலைமைப் பண்புகள்

திருக்குறளில் தலைமைப் பண்புகள்[1]

 

வியக்கத் தக்க சாதனைகள் புரிந்த பலரைப் பற்றிய செய்திகளை வரலாற்றில் காண்கிறோம். உதாரணமாக, கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னன் வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில், சேர மன்னனாகிய பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும், பல குறுநில மன்னர்களையும் வென்று தமிழகம் முழுவதையும் ஆண்டான். அவனிடம் ஒப்புயர்வற்ற கப்பற்படை இருந்தது.  அவன் தன் கப்பற்படையின் உதவியோடு இலங்கை மன்னனை வென்று, அங்கிருந்து பலரைக் கைது செய்து, தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்து, காவிரிக்கரையைச் செப்பனிடுவதற்குப் பயன்படுத்தினான்.  காவிரியில் கல்லணையைக் கட்டி உழவர்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு வழிவகுத்து அழியாப் புகழ் பெற்றான். கரிகால் சோழனைப்போல், மற்ற நாடுகளிலும் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்தவர் பலர். உதாரணமாக, அலெக்சாண்டர் (Alexander the great of Macedonia), சைரஸ் (Cyrus the great of Persia), ஜெங்கிஸ் கான் (Genghis khan of Mongolia), அசோகச் சக்கரவர்த்தி (Emperor Ashoka the Great of India), நெப்போலியன் போனபார்ட்(Napoleon Bonaparte of France) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மிகப்பெரிய நிறுவனங்களை நிறுவி, பாராட்டத் தக்க தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரித்து, விற்பனை செய்து, மிகுந்த இலாபம் அடைந்து வரலாற்றில் தடம் பதித்தவர்கள் பலர். அவர்களுள், ஆப்பிள்(Apple.) நிறுவனத்தைத் தொடங்கி, பல அரிய தொழில் நுட்பக் கருவிகளைக் கண்டுபிடித்து, விற்பனை செய்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs) என்பவரும், மைக்ரோசாப்ட்(Microsoft.) நிறுவனத்தின் தலைவராகிய பில் கேட்ஸ்(Billi Gates) என்பவரும், அமேசான் (Amazon) நிறுவனத்தைத் தொடங்கி, வணிகத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களையும் சாதனைகளையும் படைத்து வெற்றிபெற்ற ஜெஃப் பேசோஸ்(Jeff Bezos) என்பவரும் குறிப்பிடத் தக்கவர்கள். தென்னாப்பிரிக்காவில் வழக்கிலிருந்த நிறவெறி, இனவெறி ஆகியவற்றை எதிர்த்துப் போராடி, அங்குள்ள மக்களுக்கு விடுதலைபெற்றுத் தந்த நெல்சன் மண்டெலோ(Nelson Mandela), வெள்ளையர்களிடமிருந்து இந்தியர்களுக்கு விடுதலைபெற்றுத் தந்த காந்தி அடிகள்(Mahatma Gandhi), அமெரிக்காவில், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சம உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்(Martin Luther King) போன்றவர்களும் வரலாறு காணாத சாதனைகளைப் படைத்தவர்களின் பட்டியலில் இடம்பெறத் தக்கவர்கள்தான்.

இவர்கள் தங்கள் சாதனைகளுக்காக சரித்திரத்தில் இடம்பெற்றாலும், இவர்களுடைய சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்து உழைத்தவர்கள் பலர். படைவீரர்கள் இல்லாமல் கரிகால் பெருவளத்தானும் மற்ற மன்னர்களும் வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. தங்கள் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பல்வேறு பணிகளைச் செவ்வனே செய்யும் ஊழியர்கள் இல்லாமல், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ் போன்றவர்கள் தங்கள் தொழிற்துறைகளில் வெற்றிபெற்றிருக்க முடியாது. அயராது உழைத்து, சிறைக்குச் செல்வதையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த தொண்டர்கள் இல்லாமல் நெல்சன் மண்டெலோ, காந்தி அடிகள், மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் தங்கள் போராட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இத்தனைபேர் பாடுபட்டு உழைத்தாலும் வரலாற்றில் இடம்பெறுபவர்கள் வெற்றிபெற்ற மன்னர்களும், தொழிற்துறைத் தலைவர்களும், விடுதலை என்னும் வித்தை விதைத்த தலைவர்கள் மட்டுமேதான்.

தலைவர் என்பவர் யார்?

பீற்றர் டிரக்கர்(Peter Drucker) என்ற அறிஞர், “சரியான செயல்களைச் செய்பவர் தலைவர்; செயல்களைச் சரியாகச் செய்பவர் மேலாளர்” என்று கூறுகிறார்[2]. எந்தச் செயல்கள் நாட்டிற்குத் தேவையானவை, நன்மை பயப்பவை, தனக்கு வெற்றியைத் தருபவை என்று சிந்தித்து முடிவெடுப்பது ஒரு மன்னனின் கடமை. எந்தத் தொழிலைத் தொடங்கினால் வெற்றிபெற முடியும் என்று முடிவு செய்யவேண்டியது ஒரு நிறுவனத்தின் தலைவரின் பொறுப்பு. எந்தச் செயல்கள் நாட்டுமக்களுக்கு அல்லது தன் இனத்திற்குத் தேவை என்று போராட்டங்களைத் தொடங்குவதற்குமுன் முடிவெடுப்பது மக்களுக்காக உழைக்கும் தலைவர்களுக்குத் தேவை. இவ்வாறு முடிவெடுக்கும்பொழுது, தலைவர்களின் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களின் வெற்றி உயர்ந்ததாக இருக்கும் என்பது வள்ளுவரின் கருத்து. நீரில் உள்ள மலரின் உயரம் அந்த நீரின் ஆழத்தைப் பொருத்தது. நீரின் ஆழம் அதிகமாக அதிகமாக, மலரைத் தாங்கி நிற்கும் தண்டின் நீளமும் அதிகரித்துகொண்டே இருக்கும். அதுபோல், ஒருவனின் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் உயர்வடைகிறான் என்று வள்ளுவர் கூறுகிறார். 

            வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

          உள்ளத்து அனையது உயர்வு.                                         (குறள் – 595) 

உயர்ந்த எண்ணம், பீற்றர் டிரக்கர் கூறும் “சரியான முடிவு”, இலட்சியம் ஆகிய அனைத்தும் ஒன்றுதான். அதைத்தான் ஆங்கிலத்தில் ”vision” என்று கூறுகிறார்கள். அதாவது, தலைவர்கள் உயர்ந்த எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

உயர்ந்த எண்ணத்தைச் செயல்படுத்தினால்தான் வெற்றி அடைய முடியும். அந்த உயர்ந்த எண்ணத்தை செயல்படுத்துவதற்குப் பலருடைய உதவிகள் தேவை. ஒரு தலைவன் என்பவன், தன்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு, மற்றவர்களை ஒருங்கிணைத்து, அவனுடைய இலட்சியத்தைத் மற்றவர்களும் தங்கள் இலட்சியமாகக்கொள்ளுமாறு அவர்களை ஊக்குவித்து, அவர்களுடைய உதவியால் தன் இலட்சியத்தை அடையும் ஆற்றல் உடையவனாக இருக்கவேண்டும்[3]. பலரையும் ஒருங்கிணைத்து, ஊக்குவித்து அவர்களுடைய உதவியாலும் ஒத்துழைப்போடும் தன் இலட்சியத்தை ஒரு தலைவன் அடைய வேண்டுமானால், அவனிடம் பல சிறந்த பண்புகள் இருக்க வேண்டும். அந்தப் பண்புகள் என்னவென்று பார்ப்போம்.

திருக்குறளில் அரசியல் (அதிகாரம் 39 – அதிகாரம் 63) என்ற பிரிவில் ஒரு மன்னன் எவ்வாறு ஆட்சி செய்யவேண்டும் என்பதைப் பற்றியும், அவனுக்குத் தேவையான தலைமைப் பண்புகளைப் பற்றியும், வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். குற்றங் கடிதல், தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், செங்கொன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, ஒற்றாடல் ஆகிய பதினொரு அதிகாரங்களில், மன்னன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடை,மை, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம் தழால், பொச்சாவாமை, கண்ணோட்டம், ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய பதினான்கு அதிகாரங்களில் மன்னனிடம் இருக்க வேண்டிய பண்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. மற்ற அதிகாரங்களைவிட இறைமாட்சி என்ற அதிகாரத்தில் பல பண்புகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.  மன்னனின் பண்புகளைப் பற்றி வள்ளுவரின் கருத்துக்களை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம். 

இறைமாட்சியில் காணப்படும் தலைமைப் பண்புகள்

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.                                          (குறள் – 382)

பொருள்: அஞ்சாமை, ஈகை, அறிவு. ஊக்கம் ஆகிய நான்கு பண்புகளும் வேந்தர்களுக்குச் சிறிதும் குறைவின்றி, இயல்பாக இருக்க வேண்டும் (குறள் – 382). 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு.                                              (குறள் – 383)

பொருள்: அரசன் தன் பணிகளைச் செய்வதில் காலம் தாழ்த்தாமல் செய்யும் ஆற்றல், கல்வி, மனத்திட்பம் ஆகிய நான்கும் நீங்காமல் உடையவனாக இருக்க வேண்டும் (குறள் – 383).

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.                                                    (குறள் – 384)

பொருள்: அறநெறிகளிலிருந்து தவறாமல், மற்றவர்களால் எவ்விதத் தீங்கும் நேராமல் தடுத்து, வீரத்திலிருந்து வழுவாமல் இருப்பவனே பெருமைக்குரிய அரசன் (குறள் – 384).

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்                                               (குறள் – 386)

பொருள்: ஒரு மன்னன் மக்களால் காண்பதற்கு எளியவனாகவும், எவர் மாட்டும் கடுஞ்சொற்கள் பேசாதவனாகவும், இருப்பானானால் அவனது குடிமக்கள். அவனை மிகவும் பாராட்டுவார்கள். (குறள் – 386).

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.                                         (குறள் – 387)

பொருள்: இனிய சொற்களைக் கூறி, வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்து, மக்களைக் காப்பாற்றவல்ல அரசனக்கு, அவனுடைய சொல்லாற்றலாலேயே, இவ்வுலகமானது அவன் கருதுகின்ற அளவுக்கு அவனுடையதாக ஆகிவிடும் (குறள் – 387).

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.                                         (குறள் – 389)

பொருள்: தன் செவிகள் கசக்கும்படி, தன் குற்றங்களை அமைச்சர், மக்கள் முதலியோர் இடித்துக் கூறும்பொழுது, அவர்களுடைய சொற்களைப் பொறுமையோடு கேட்கக் கூடிய பண்புள்ள வேந்தனின் ஆட்சியின் கீழ் இவ்வுலகம் தங்கும் (குறள் – 389).

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.                                    (குறள் – 390)

பொருள்: நன்கொடை வழங்குதல், யாவரிடத்தும் அன்பாக இருத்தல், செங்கோல் செலுத்துதல், குடிமக்களைப் பாதுகாத்தல் ஆகிய நான்கு பண்புகளும் உடைய வேந்தன், பிற வேந்தர்களுக்கெல்லாம் ஒளிதரும் விளக்குப் போன்றவன் ஆவான் (குறள் – 390)

மற்ற அதிகாரங்களில் காணப்படும் தலைமைப் பண்புகள்

மடியின்மை, பொச்சாவாமை, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம் தழால், கண்ணோட்டம், ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய பண்புகளும் தலைவனுக்குத் தேவையான பண்புகள்தான். 

வள்ளுவர் கூறும் தலைமைப் பண்புகளின் தொகுப்பு

இறைமாட்சி என்ற அதிகாரத்தில் காணப்படும் சில பண்புகளும் மற்ற அதிகாரங்களில் காணப்படும் சில பண்புகளும் தொடர்புடையவையாகையால் அவற்றைத் தொடர்புடைய ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

.

1.     அஞ்சாமை, அறமும் மறமும், துணிவுடைமை

2.     ஊக்கமுடைமை, மடியின்மை, தூங்காமை, பொச்சாவாமை

3.     கல்வி, கேள்வி, அறிவு, பெரியாரைத் துணைக்கோடல், (சிற்றினம் சேராமை), சுற்றந் தழால்

4.     ஈகை, கொடை, அளி, கண்ணோட்டம்

5.     காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் கூறல், செவிகைப்பச் சொற்பொறுத்தல்

6.     ஆள்வினையுடைமை இடுக்கண்அழியாமை

அஞ்சாமை, அறமும் மறமும், துணிவுடைமை

அஞ்சாமை: அச்சம் என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் பண்பு. சிலவற்றிற்கு அஞ்ச வேண்டும். சிலவற்றிற்கு அஞ்சத் தேவையில்லை. ”அஞ்சத்தகும் செயலுக்கு அஞ்சாமை அறிவின்மையாம்; அஞ்சத் தகும் செயலுக்கு அஞ்சுதல் அறிவுடையவர் கடமையாம்.” என்பது வள்ளுவரின் கருத்து. 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.                            (குறள் – 428)

 

உதாரணமாக, ஒருவன் பழிபாவங்களுக்கு அஞ்ச வேண்டும். ஆனால், போருக்குச் செல்பவன் பகைவரின் படையைக் கண்டு அஞ்சக் கூடாது. ஒரு தொழிலில் இருப்பவன் தன் தொழிலில் தன்னோடு மற்றவர்கள் போட்டியிட்டால், போட்டியைக் கண்டு அஞ்சாமல் தான் தன் தொழிலில் முன்னேறுவதற்கான செயல்களை விடாமுயற்சியோடு செய்ய வேண்டும்.  இதுபோன்ற சூழ்நிலைகளில் அச்சம் இருக்கலாம். ஆனால், அந்த அச்சத்தால் மனம் தளராமல், அந்த அச்சத்தைக் கடந்து செயல்பட வேண்டும். அச்சத்தைக் கடந்து செயல்படுவதற்கு வீரம் வேண்டும். எப்பொழுது எதற்கு  அஞ்ச வேண்டும், எப்பொழுது எதற்கு அஞ்சக் கூடாது என்பதை அறிந்து  விவேகத்தோடு செயல்பட வேண்டும். இவ்வாறு விவேகத்தோடு கூடிய வீரத்தைத்தான் வள்ளுவர் அஞ்சாமை என்று கூறுவதாகத் தோன்றுகிறது.

அறமும் மறமும்

வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஒருவன் அறத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் திருக்குறளில் நாம் காணும் கருத்து. மன்னனாக இருப்பவன் அறநெறிகளைப் பின்பற்றி, தனக்கும் தன் குடிமக்களுக்கும் நிகழக்கூடிய தீமைகளைத் தவிர்த்து வாழவேண்டும் என்ற கருத்து குறளில் காணப்படுகிறது. அறநெறிகளிலிருந்து தவறாமல், மற்றவர்களால் எவ்விதத் தீங்கும் நேராமல் தடுத்து, வீரத்திலிருந்து வழுவாமல் இருப்பவனே பெருமைக்குரிய அரசன் (குறள் – 384). 

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.                                                    (குறள் – 384)

 

வள்ளுவர் போரை ஆதரிக்கவில்லை. ஆனால், பகைவர் போரிட்டால் தற்காப்புக்காகப் போரிடுவதை அவர் மறுக்கவில்லை. அதனால்தான், படைமாட்சி, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்கள் குறளில் இடம்பெற்றிருக்கின்றன. வள்ளுவர் உலக இயல்பை நன்கு அறிந்தவர். போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆகவே, மன்னனாக இருப்பவன் தானாகப் போரைத் தொடங்காவிட்டாலும், பகைவர் போரிட்டால் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும். அவ்வாறு போரிடுவதற்கு அறம் மட்டும் போதாது; மறம் (வீரம்) தேவை. மன்னனுக்கு மட்டுமல்லாமல், தற்காலத்தில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அறமும் மறமும் தேவை. அவர்களும் அறநெறியில், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தங்கள் நிறுவனத்தை வழிநடத்த வேண்டும். அவர்கள் தங்கள் தொழிலில் பல இடையூறுகளையும் இன்னல்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். அந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் மனம் தளராமல் துணிவோடு பணியாற்ற வீரம் வேண்டும். ஆகவே, அறமும் மறமும் அன்றும் தேவை; இன்றும் தேவை; என்றும் தேவை.

துணிவுடைமை: தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறுவதற்குப் பலர் இருப்பார்கள். அவர்கள் வெவ்வேறு அறிவுரைகள் கூறுவார்கள். ஒரு சூழ்நிலையில் பல விதமாக முடிவெடுக்கும் வாய்ப்புகள் உண்டு.  அப்பொழுது, ஆராய்ந்து தெளிவாக உறுதியான முடிவெடுக்கும் மனத்திட்பம்தான் துணிவுடைமை. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு துணிவுடைமை ஒரு இன்றியமையாத பண்பு.

 

ஊக்கமுடைமை, மடியின்மை, தூங்காமை, பொச்சாவாமை

ஊக்கமுடைமை: ஊக்கமுடைமை என்பது தளராத மனக்கிளர்ச்சியுடனும், விடாமுயற்சியுடனும் பணியாற்றுவதைக் குறிக்கிறது. ”ஒருவர் உடைமைகள் பல உடையவராயினும், ‘உடையவர்’ எனச் சிறப்பித்துக்கூறத் தகுதியுடையது ஊக்கமுடைமையாகும். அவ்வூக்கமுடைமையைப் பெறாதவர்கள் பிற உடைமைகள் பலவற்றைப் பெற்றிருந்தாலும், அவர்கள் ‘உடையர்’ என்று சிறப்பித்துச் சொல்லத்தக்கவர்கள் ஆகமாட்டார்கள்.”, என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 591). 

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்

டையது உடையரோ மற்று.                                                (குறள் – 591)

 

அஞ்சாமையும், ஈகையும், அறிவும், ஊக்கமும் அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டும் (குறள் – 382) என்பது வள்ளுவரின் கருத்து.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.                                          (குறள் – 382)

ஊக்கம்’ என்பதைஆங்கிலத்தில் ‘Energy” என்று ஜி.யு. போப் அவர்களும் மற்றவர்களும் மொழிபெயர்க்கிறார்கள்.  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஊக்கம் என்பது இன்றியமையாது. கடந்த நூற்றாண்டில், ஜெனெரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றி அந்த நிறுவனத்தை மிக இலாபகரமாக வழிநடத்தியவர் ஜேக் வெல்ச்(Jack Welch) என்பவர். ஃபார்ச்சூன் (Fortune)  என்ற மாத இதழ், அவருக்கு “அமெரிக்காவின் மேலாளர் (America;s Manger)” என்று பட்டமளித்து அவரைச் சிறப்பித்தது. அவருடைய வெற்றிக்குக் காரணமாக இருந்தது ஊக்கமுடைமையில் அவருக்கு இருந்த தீவிர நம்பிக்கை என்று ஜெஃப்ரி கிரேமர்(Jeffrey Kramer) என்பவர் தன்னுடைய “ Jack Welch’s 4E’s of Leadership” என்ற நூலில் குறிப்பிடுகிறார். தலைவராக இருப்பவர் மிகுந்த ஊக்கமுடையவராக இருப்பது மட்டுமல்லாமல் தன்னோடு பணிபுரிபவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதில் ஜேக் வெல்ச் உறுதியாக இருந்ததாகவும் அவர் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

மடியின்மை: மடி என்ற சொல்லுக்கு சோம்பல் என்று பொருள். எண்ணியதை முடிக்கும் காலத்துச் சோம்பலின்றி உழைத்தல் மடியின்மை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, தான் செய்யும் பணிகளில் ஊக்கமும் உற்சாகமும் இருப்பவர்கள் சோம்பலின்றி உழைப்பார்கள். சோம்பல் இருந்தால் அது பணிகளைக் காலத்தில் செய்து முடிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் மடியின்மையை வள்ளுவர் வலியுறுத்துகிறார். சோம்பல் இல்லாமல் இருப்பது அரசனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவையான பண்பு. மாவலி என்ற மன்னனிடம் மூன்றடி மண் கேட்டுத் திருமால் இரண்டடியில் உலகம் முழுவதையும் அளந்ததாகப் புராணச் செய்தி ஒன்று கூறுகிறது. அவன் இரண்டடியில் உலகம் முழுவதையும் அளந்ததைபோல், சோம்பல் இல்லாத மன்னன் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொள்ளலாம் என்று வள்ளுவர் மடியின்மையின் சிறப்பைக் கூறுகிறார் (குறள் - 610).

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.     (குறள் – 610)

 

தூங்காமை: தூங்காமை என்பது காலம் தாழ்த்தாமல் செயலாற்றுவதைக் குறிக்கிறது. மடியின்மை என்ற அதிகாரத்தில் சோம்பேறித்தனம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் வள்ளுவர், பணிகளைச் செய்யும்பொழுது அவற்றைக் காலம் தாழ்தாமல் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். அரசன் தன் பணிகளைச் செய்வதில் காலம் தாழ்த்தாமல் செய்யும் ஆற்றலும், கல்வியும், மனத்திட்பமும் நீங்காமல் உடையவனாக இருக்க வேண்டும் (குறள் – 383). என்று வள்ளுவர் கூறுகிறார்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு.                                              (குறள் – 383)

 

 ஒரு செயலைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யாவிட்டால் அதனால் விளையும் தீமைகளால் நாட்டுக்கு (அல்லது நிறுவனத்துக்கு) கேடு வரலாம். காலம் தாழ்த்தாமல் .செய்ய வேண்டியவற்றை காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும் என்பதை, ”தூங்கற்க தூங்காது செய்யும் வினை (குறள் – 672) ” என்று வள்ளுவர் கூறுகிறார். மன்னனைப் போலவே, நிறுவனங்களின் தலைவர்களும் தங்கள் பணிகளைக் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு, தற்காலத்தில் அவர்களுக்கு உதவியாக பல மென்பொருட் கருவிகள் (Software tools) உள்ளன.

பொச்சாவாமை: பொச்சாத்தல் என்றால் மறத்தல் என்றும் பொச்சாவாமை என்றால் மறவாமை என்றும் பொருள். சோம்பேறித்தனத்தால் ஒரு செயலைச் செய்யாமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. காலம் தாழ்த்துவதினால் ஒரு செயலைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாமல் போகலாம். சோம்பேறித்தனம், காலம் தாழ்த்துதல் ஆகியவற்றைப்போல், மறதியும் செயல்களைச் செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், மறதியையும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, அளவு கடந்த கோபத்தைவிட சிறந்த மகிழ்ச்சியால் வரும் மறதி தீமையானது என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் - 531).

            இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியில் சோர்வு.                                    (குறள் – 531)

           

கல்வி, கேள்வி, அறிவு, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம் தழால்

கல்வி, கேள்வி: தூங்காமையைப் போல், கல்வியும் துணிவும் மன்னனுக்குத் தேவை என்று வள்ளுவர். கூறுகிறார் (குறள் – 383). ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றநிலை முனியாது கற்றல் நன்றே” என்று கூறி அனைவருக்கும் கல்வியின் இன்றியமையாமையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றில்[4] வலியுறுத்துகிறான். ”கேடில் விழுச்செல்வம் கல்வி”, என்று வள்ளுவர் கல்வியின் சிறப்பைக் கூறுகிறார். ”செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (குறள் – 411).” என்று கேள்வியின் சிறப்பையும் வள்ளுவர் கூறுகிறார். பல நூற்றாண்டுகளாகக் கல்வி மற்றும் கேள்வி ஆகியவற்றின் சிறப்பையும் பெருமையையும் தமிழர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அனைவருக்கும் கல்வியும் கேள்வியும் தேவை என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மன்னுக்குக் கல்வியும் கேள்வியும் தேவை; மக்களுக்கும் அவை தேவை. இன்றைய சூழ்நிலையில் நிறுவங்களின் பொறுப்பில் இருப்பவர்களுக்குக் கல்வியும் கேள்வியும்  மிகமிக இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்த கருத்து.

 

அறிவு: தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு.”, என்று குறள் – 383ல் வள்ளுவர் கூறுகிறார். ஆனால், ”அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.” .என்று குறள் 382ல் கூறுகிறார். அதனால், கல்வியும் தேவையும் அறிவும் தேவை என்பது புலப்படுகிறது. அறிவு என்பது என்ன? ”அறிவு என்னும் சொல், அறிதல் (perception, learning, understanding) அறிந்த செய்தி (knowledge), ஓதி (wisdom), மதி (intelligence) என்னும் நாற்பொருளுணர்த்தும் ஒரு சொல்.”, என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் கூறுகிறார்.  ஓதி என்ற சொல் இப்பொழுது வழக்கில் இல்லை. ஒருவன் தான் கற்றதாலும், கேட்டதாலும் அறிந்த செய்தியை தன்னுடைய அனுபவத்தோடு சேர்த்துச் சரியான முடிவெடுக்கும் ஆற்றல்தான் ஓதி. ஓதி என்ற சொல்லுக்குப் பதிலாக மெய்யறிவு என்ற சொல்லை முனைவர் வா. செ. குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர். 383- ஆவது குறளில், மன்னனுக்குக் கல்வி தேவை என்று கூறுவதால், இங்கு, அறிவு என்ற சொல் மெய்யறிவைக் குறிப்பதாகக் கருதுவது சிறந்ததாகத் தோன்றுகிறது.

 

முறையாகக் கல்வி கற்காவிட்டாலும், ஆலோசகர்களிடமிருந்து வெவ்வேறு கருத்துக்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தன் சொந்த அறிவையும் அனுபவத்தையும் கலந்து சரியான முடிவெடுக்கும் மெய்யறிவு உடையவர்களாகச் சிலர் இருந்ததை நாம் வரலாற்றில் காண்கிறோம். உதாரணமாக, மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர் பதவிக்கு வந்தபொழுது அவருக்கு வயது பதின்மூன்று. அவர் முறையாக் கல்வி கற்காதவர். ஆனால், நல்லாட்சி புரிய வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு, தன்னுடைய அமைச்சர்களோடு கலந்தாலோசித்துப் பலரும் பாராட்டத் தக்க வகையில் தன்னுடைய மெய்யறிவைப் பயன்படுத்தி அக்பர் ஆட்சிபுரிந்தார்.

கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர் ஒரு படிக்காத மேதை. மக்களின் நலத்தையே மனத்தில்கொண்டு பல நல்ல திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தினார். மற்றும், தமிழர்களின் முன்னேற்றத்தை மனத்தில்கொண்டு, சுயமரியாதையையும், பெண்ணுரிமையையும், பகுத்தறிவையும் தமிழர்களிடையே பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் வாழ்நாள் முழுதும் உழைத்துத் தமிழ்ச் சமுதாயத்தில் பிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கிய தந்தை பெரியார் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. கல்வி கேல்விகளால் பெறும் அறிவு சிறப்பானது. ஆனால், மெய்யறிவு அதைவிடச் சிறப்பானது; தலைவர்களுக்கு மிகமிகத் தேவையானது என்பதற்கு, அக்பர், காமராஜர், பெரியார் போன்றவர்கள் தலைவர்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை: கல்வி, கேள்வி, அறிவுடைமை ஆகியவற்றால், ஒரு தலைவன் சிறந்த முடிவு எடுக்கவும் அவற்றைச் செயல்படுத்தவும் முடியும் என்றாலும், அறிவிலும் ஆற்றலிலும், அனுபவத்திலும் சிறந்த பெரியோரைத் தலைவர்கள் தமக்குத் துணையாகக் கொள்வது மிகவும் இன்றியமையாதது என்பது வள்ளுவரின் கருத்து என்று பெரியாரைத் துணைக்கோடல் வுடைமை என்ற அதிகாரத்திலிருந்து தெரிகிறது. அறிவிலும் ஆற்றலிலும் அனுபவத்திலும் சிறந்த பெரியாரைத் தமக்குத் துணையாகக்கொள்வது, அரியவற்றுள் எல்லாம் அரியது (குறள் – 443) என்றும் அது வலிமையுள் எல்லாம் சிறந்த வலிமை (குறள் – 444) என்றும் வள்ளுவர் கூறுகிறார். இந்தக் கருத்து இன்றும் பயனுள்ளதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகிறது. பல நிறுவனங்களில், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு ஆலோசகர்களும் இயக்குநர்களும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. பெரியாரைத் துணையாகக்கொள்வது சிறந்தது என்று கூறிய வள்ளுவர் சிறியாரோடு சேரக்கூடாது என்று தலைவர்களுக்கு அறிவுரை கூறத் தவறவில்லை.

”தான் சேர்ந்த நிலத்தின் இயல்புக்கேற்ப நீர் திரிந்து தன் தன்மையிலிருந்து வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையதாகிவிடும். அதுபோல், மக்களின் அறிவும் அவர்கள் சேரும் இனத்தின் தன்மைக்கேற்ப மாறும் (குறள் – 452).”, என்பதால், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சிறியோரோடு தொடர்புகொள்ளக்கூடாது என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.

சுற்றந்தழால்: சுற்றி இருப்பவர்கள் சுற்றம். சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் மன்னனுடைய அமைச்சர்கள், படைத் தளபதிகள், ஆலோசர்கள் மற்றும் அறிவுரை கூறும் பெரியோர்கள் மன்னனுடைய சுற்றத்தாராகக் கருதப்பட்டார்கள். ”அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின், அது அவனுடைய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் (குறள் - 522)”, என்று வள்ளுவர் கூறுகிறார்.  தற்காலத்தில், நிறுவனங்களின் தலைவர்களோடு நெருங்கிப் பணியாற்றும் துணைத் தலைவர்கள் போன்றவர்களை தலைவர்களுக்குச் சுற்றமாகக் கருதலாம். தலைவர்கள் அவர்களுடைய சுற்றத்தோடு அன்போடு பழகினால் பல நன்மைகளைப் பெறலாம்.

ஈகை, கொடை, அளி, கண்ணோட்டம்

ஈகை: வறுமையில் இருப்பவர்களுக்குத் தேவையான பொருளைக் கொடுத்து உதவி செய்வதே ஈகை. சங்க காலத்தில் மன்னர்களும், வள்ளல்களும் வறியவர்களுக்கு வரையாது கொடுத்ததாகப் புறநானூற்றில் காணலாம். சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் ஏழைகளுக்கான சமூகநலத் திட்டங்கள் எவையும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால், மன்னர்களும் வள்ல்களும் எழைகளுக்கு உதவி செய்தார்கள். “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு (குறள் -734)” என்று வள்ளுவர் நாட்டுக்கு இலக்கணம் வகுக்கிறார். மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுவது இன்றியமையாதது என்பது வள்ளுவரின் கருத்து. இன்றைய சூழ்நிலையில், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் குடிமக்களின் நல்வாழ்விலும், நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களின் நல்வாழ்விலும் அக்கறை காட்டவேண்டும் என்று வள்ளுவர் கூறுவதாகவும் கருதலாம்.

 

கொடை: ஈகை என்பது வேறு. கொடை என்பது வேறு. ”வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்பது வள்ளுவரின் கருத்து. அறிவிற் சிறந்த புலவர்களுக்கும், சான்றோர்களுக்கும், ஆடல் பாடல் போன்ற கலைகளில் சிறந்து விளங்கிய விறலியர்க்கும் பாணர்களுக்கும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அளிப்பது கொடை என்று சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் கருதப்பட்டது. தற்காலத்தில், போர், கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு அரசுகள் விருதுகள் வழங்குகின்றனர். நிறுவனங்களில், சிறப்பாகப் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகளும் வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன. ஏழைகளுக்கு ஈகையும், தகுதி உடையவர்களுக்குக் கொடையும் அளித்து அவர்களை ஆதரிக்கும் பண்பு தலைவர்களுக்குரிய பண்புகளில் ஒன்று.

 

அளி: அளி என்ற சொல் அன்பு, கொடை, இரக்கம், தலையளி, கருணை போன்ற பலவற்றைக் குறிக்கும் ஒருசொல்.   இவை எல்லவற்றையும் சேர்த்துப் பார்த்தால், தகுதியானவர்களை மதித்து அவர்களுக்கு வேண்டுவனவற்றை அன்போடும் மகிழ்ச்சியோடும் தாரளாமாகக் கொடுக்கும் மனப்பான்மையைத்தான் அளி என்ற சொல் குறிப்பதாகத் தோன்றுகிறது. மன்னனுக்கு அத்தகைய தாராளகுணம் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். அத்தகைய தாரளகுணத்திற்கு இணையான ஆங்கிலச்சொல் ‘Generosity’. அமெரிக்க எழுத்தாளரும் நூலாசிரியருமாகிய ஜான் மேக்ஸ்வெல் என்பவர், தன்னுடைய “The 21 Indispensable Qualities of a Leader, என்ற நூலில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத நற்குணங்களுள் தாராளகுணமும் ஒன்று என்று கூறுகிறார். ஒரு தலைவரிடம் உள்ள தாராள மனப்பான்மையைத் தவிர அவருடைய வேறு எந்தக் குணத்தாலும் அவரைப் பற்றித் தெளிவாகக் கூற முடியாது. மற்றும் தாராளமனப்பான்மையைப் போல் அவருக்கு உதவக் கூடிய பண்பு வேறு எதுவும் இல்லை. தாராளகுணம் என்பது அவ்வப்போது நிகழும் நிகழ்வாக இல்லாமல், அவருடைய இதயத்திலிருந்து வரும் இயற்கையான பண்பாக இருக்க வேண்டும்,” என்று ஜான் மேக்ஸ்வெல் கூறுகிறார், ஸ்டீஃபன் கவ்வி என்ற அறிஞரும் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் தாராளமனப்பன்மையும் ஒன்று என்று தன்னுடைய, ”Principle Centered Leadership” என்ற நூலில் கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த வள்ளுவருடைய கருத்தும் தற்கால அறிஞர்களாகிய ஜான் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டீஃபன் கவ்வி ஆகியோரின் கருத்தும் ஒத்திருப்பது வியக்கத் தக்கது.

 

கண்ணோட்டம்: கண்ணோட்டம் என்பது பிறருடைய துயரத்தைக் கண்டு இரங்கும் பண்பையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் பெருந்தன்மையையும் குறிப்பதாகும். இது அனைவரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பு. இப் பண்பு ஒரு மன்னனிடத்தில் இருந்தால் குடிமக்கள் இன்பமாக வாழ்வதற்கும் அவன் ஆட்சி சிறப்பாக அமைவதற்கும் காரணமாக அமையும். இந்த உலகம் ஏன் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சிந்தித்த கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், “தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்பவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிகொண்டிறது.” என்ற முடிவுக்கு வந்தான்[5]. அவன் கூறும் பண்பும் கண்ணோட்டத்தைத்தான் குறிக்கிறது. “கண்ணோட்டம் என்னும் சிறப்புடைய பேரழகு இருக்கின்ற காரணத்தினால்தான் இவ்வுலகம் அழியாது இருந்து வருகின்றது (குறள் – 571)” என்று வள்ளுவர் கூறுகிறார். இன்றைய சூழ்நிலையில், நிறுவனங்களின் தலைவர்களுக்கும் கண்ணோட்டம் ஒரு தேவையான பண்புதான். இப் பண்பு தலைவர்களிடம் இருக்குமானால், அவர்கள் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெறுவர்.

காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் கூறல், செவிகைப்பச் சொற்பொறுத்தல்

காட்சிக்கு எளிமை; ஒரு தலைவன் காட்சிக்கு எளியவன் என்றால் அவனை அனைவரும் சென்று காண்பது எளிது என்பதைக் குறிக்கிறது. சங்க காலத்திலும் அதற்குப் பின்பும், புலவர்களும், பாணர்களும் மன்னர்களை எளிதில் சந்திக்க முடிந்ததாக புறநானூற்றுப் பாடல்களிலிருந்து தெரியவருகிறது. அண்மைக் காலத்தில் வாழ்ந்த தமிழகத்தின் முதல்வர் அறிஞர் அண்ணா, இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் ஆகிய இருவரையும் எளிதில் சந்திக்கக்கடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் இருவரும் காட்சிக்கு எளியவர்களாக இருந்ததாகப் பலரும் கருதுகின்றனர். ஆனால், இன்றைய சூழ்நிலையில், ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியைக் காண்பது அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல.

 

கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் கூறல்: தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கடுஞ்சொல் கூறாமல் இருப்பது மிகவும் இன்றையமையாதது. அவர்கள் கடுஞ்சொல் கூறுபவர்களாக இருந்தால் அவர்களிடம் பணிபுரிபவர்கள் அவர்களின் கோபத்திற்கு ஆளாகமல் இருப்பதற்காக, அவர்கள் கேட்க விரும்பாதவற்றை அவர்களிடம் கூறமாட்டார்கள். நிறுவனத்தின் தோல்விகளும் சோதனைகளும் அவர்களிடம் இருந்து மறைக்கப்படும். அதனால், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சரியான நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் தவறான முடிவுகள் எடுத்து நிறுவனத்திற்கும் தங்கள் பதவிக்கும் கேடு விளைவித்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்குமுன், நான் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக கணினித்துறையில் பணிபுரிந்தேன். அந்த நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு 20,000 கோடி டாலர். அந்த நிறுவனத்தில் ஏறத்தாழ 100,000 ஊழியர்கள் பணிபுரிந்தார்கள். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி மிகுந்த கோபக்காரர். நிறுவனத்தின் வருமானம் குறைந்ததாகவோ அல்லது எந்தத் துறையிலாவது நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்ததாகவோ கேள்விப்பட்டால், அந்த செய்தியைக் கூறியவர்களிடம் அவர் மிகுந்த கோபம் அடைந்து, செய்தியைக் கூறியவர்களைக் கடுஞ்சொற்களையும் தகாத சொற்களயும் கூறித் திட்டுவார். பல சமயங்களில், எந்தத் துறைகளில் நிறுவனம் வளர்ச்சி குறைந்ததோ அல்லது நஷ்டம் அடைந்ததோ அந்தத் துறைக்கு பொறுப்பானவர்களைத் கடுமையாகத் திட்டுவது மட்டுமல்லாமல், முன்கோபத்தால், சரியாக விசாரிக்காமல், அவர்களை பணிநீக்கம் செய்துவிடுவார். அவருடைய கோபத்திற்கும் கடுஞ்சொற்களுக்கும் அஞ்சி, பலரும் அவரிடத்திலிருந்து உண்மைகளை மறைக்கவும் பொய்க்கணக்கு எழுதவும் ஆரம்பித்தார்கள். அந்தத் தலைவர் பதவியிலிருந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிறுவனம் பலவகைகளிலும் பின்னடைந்து, 79 டாலராக இருந்த நிறுவனத்தின் பங்கு 17 டாலராகச் சரிந்தது. அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இப்பொழுது, அந்த நிறுவனம் வேறொருவரின் தலைமையில், பெருமளவில் வளர்ச்சி அடைந்து, ஒரு பங்கு ஏறத்தாழ 200 டாலராக உயர்ந்து பலராலும் பாராட்டப்படுகிறது.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கடுஞ்சொற்கள் கூறாமல் இருப்பது மட்டுமல்லாமல், இனிய சொற்களைப் பேசவேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். இனிய சொற்களைப் பேசி, வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்து அன்போடும் அறத்தோடும் ஒரு தலைவன் ஆட்சிபுரிந்தால் அவன் பலராலும் புகழப்படுவதோடு மட்டுமல்லாமல் அவன் விரும்பிய வெற்றிகளை அடைவான் என்பது வள்ளுவரின் கருத்து. இக்கருத்து, வள்ளுவர் காலத்தில் மட்டுமல்லாமல், இக்காலத்திற்கும் ஏற்புடையதுதான்.

செவிகைப்பச் சொற்பொறுத்தல்: சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும், தான் செய்யும் தவறுகளையும், தன் ஆட்சியில் உள்ள குறைகளையும், அமைச்சர்களும் பெரியோரும் தன்னுடைய காது கசக்கும்படியாக (தான் வெறுக்குமாறு) இடித்துரைத்தாலும் அவர்களின் சொற்களை மன்னர்கள் பொறுத்துக்கொள்வது செவிகைப்பச் சொற்பொறுத்தல் என்று அழைக்கப்பட்டது. புறநானூற்றில் எட்டு பாடல்கள் செவியறிவுறூஉ என்ற துறையைச் சார்ந்தவை. அந்த துறையில் உள்ள பாடல்கள் அனைத்தும் புலவர்கள் மன்னர்களுக்கு அறிவுரை வழங்குவனவாக அமைந்துள்ளன. இதிலிருந்து, சங்க காலத்தில் மன்னர்கள் புலவர்களின் அறிவுரையை செவிமடுத்துக் கேட்டு அவர்களுக்குப் பரிசுகளும் வழங்கியதாகத் தெரிகிறது.

இடித்துரைப்போரின் சொற்களைப் பொறுமையாகக் கேட்டுத் தன் தவறுகளையும், தன் ஆட்சியில் உள்ள குறைகளையும் மன்னனாக இருப்பவன் திருத்திக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.  கடிந்து அறிவுரை கூறும் பெரியோரின் துணை இல்லாத, காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் தானாகவே கெடுவான் (குறள் – 448)” என்றும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் நல்லெண்ணம் உடையவர்களின் சொற்களைத் தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் கேட்டுப் பயன்பெறவேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

தற்காலத்தில், ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தங்கள் கருத்துக்களைத் தவறாமல் வழங்குவதற்கு எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தயங்குவதில்லை. பெரிய நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு, ஆலோசகர்கள் உள்ளனர்; இயக்குநர் குழுக்கள் (Board of Difrectors) உள்ளன. மற்றும், பங்குதாரர்களின் வருடாந்திரக் கூட்டங்களில் (Annual Meetings of the Stockholders) பங்குதாரர்கள் தங்கள் நிறுவனத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களைக் கூறுகிறார்கள். மற்றும், நிறுவனங்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும்(Laws and Regulations) உள்ளன. 

ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை

ஆள்வினையுடைமை: ஆள்வினையுடைமை என்பது இடைவிடாது உழைத்து ஒரு செயலை நிறைவேற்றும் ஆற்றலைக் குறிக்கும் சொல். அதாவது, ஆள்வினையுடைமை என்பதை விடாமுயற்சி என்றும் பொருள்கொள்ளலாம், ஒரு செயலை முறையாகச் செய்து முடிப்பதற்கு விடாமுயற்சி தேவை என்பதை வலியுறுத்துவதற்காக, வள்ளுவர் “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (குறள் – 611).” என்றார். அதாவது, ஒரு செயல் செய்து முடிப்பதற்கு அரியது என்று எண்ணி மனம் தளராமல், முயற்சி செய்தால் அதற்கேற்ற பெருமை வந்து சேரும் என்கிறார் வள்ளுவர். செய்யத் தொடங்கிய செயல் தெய்வத்தால் கைகூடாவிட்டாலும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும் என்று கூறி வள்ளுவர் விடாமுயற்சியின் சிறப்பை உறுதிப்படுத்துகிறார் (குறள் – 619). விடாமுயற்சி இல்லாதவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற மாட்டார்கள் என்பதால், விடாமுயற்சியையும் மன்னனுக்குரிய குணநலன்களில் ஒன்றாக வள்ளுவர் கருதுகிறார். மன்னர்களுக்கு மட்டுமல்லாமல், தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பவர்கள் அனைவருக்கும் விடாமுயற்சி என்பது ஒரு இன்றியமையாத பண்பு.

 

இடுக்கண் அழியாமை: ஒரு தலைவனுக்குக் கல்வியும், அறிவும், பெரியோர் துணையும், விடாமுயற்சியும் இருந்தாலும், சில சமயங்களில், அவனுடைய வெற்றிக்குத் தடையும் துன்பங்களும் வருவது இயற்கை. அவ்வாறு ”துன்பங்லள் வருவது இயல்பு என்று உணர்பவன் துன்பங்களால் துன்பப் படமாட்டான் (குறள் – 628).”, என்றும் “தடை ஏற்பட்ட இடங்களிலெல்லாம், அவற்றைக் கடந்து வண்டியை இழுத்துச் செல்லும் எருதுபோல், எடுத்துக்கொண்ட வினையை விடாமுயற்சியுடன் செய்து முடிக்க வல்லவனை அடைந்த துன்பம் தானே துன்பம் அடையும் (குறள் – 624).”, என்றும் கூறி வள்ளுவர் விடாமுயற்சியின் சிறப்பை எடுத்துரைக்கிறார், துன்பங்களை எதிர்கொள்வதற்கு மற்றுமொரு அறிவுரையும் வள்ளுவர் கூறுகிறார். ”துன்பம் வரும்பொழுது, அதற்கு வருந்தாது அதை எள்ளி நகையாடுக; அத்துன்பத்தை வெல்வதற்கு அதுபோன்ற வழி வேறொன்றுமில்லை (குறள் – 621).” என்பது வள்ளுவர் அனைவருக்கும் கூறும் அறிவுரை.  பல அரிய செயல்களைச் செய்யும் மன்னர்களும் தலைவர்களும் இடுக்கண்களைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியுடன் உழைக்கும் பண்பு உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து என்பது நன்கு புலப்படுகிறது.

முடிவுரை:

அறத்துப்பாலில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய அறங்களைக் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் முதல் இருபத்தி ஐந்து அதிகாரங்களில் ஒரு மன்னனுக்குத் தேவையான பண்புகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறார். தலைவர்கள் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சாமல், அறத்தோடும், விவேகத்தோடும்கூடிய வீரமும் துணிவும் உடையவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஊக்கத்தோடு, சோம்பலும் மறதியும் இன்றிக் காலம் தாழ்த்தாமல் பணியாற்ற வேண்டும். அவர்கள் கல்வியாலும் கேள்வியாலும் அறியவேண்டியவற்றை அறிந்து, தம் அனுபவத்தையும் மனத்தில்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றும், தலைவர்கள் தம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரைத் துணையாகக்கொண்டு, சிறியோரடு சேராமல், தம் சுற்றத்தாரோடு அன்போடு பழகி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். தலைவர்கள் தாராளகுணத்தோடும் இரக்கத்தோடும் ஈகையிலும் கொடையிலும் சிறந்து விளங்க வேண்டும். மேலும், அவர்கள் காட்சிக்கு எளியவர்களாக, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் பேசி, இடித்துரைப்போர் கூறுவனவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும். இடுக்கண்களைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியோடு துணிந்து செயல்பட வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் முடியாட்சிக் காலத்தில் மன்னனுக்காக, வள்ளுவர் தலைமைப் பண்புகளைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் இன்றைய குடியாட்சிக் காலத்திலும், ஆட்சி செய்பவர்களுக்கும், நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்றவையாக உள்ளன என்பது எண்ணி எண்ணி மகிழத் தக்கது.

 

துணைநூல்கள்

சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்:

1989.

தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 600 017

தண்டபாணி தேசிகர். திருக்குறள் உரைக்களஞ்சியம், பதிப்புத் துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,

மதுரை 65021

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், மதுரை:

1999.

Covey, Stephen R. Principle – Centered Leadership. Simon and Schuster, London; 1991

Diaz, S.M. Thirukkural. Volumes 1 &2.  Ramanandha Adigalar Foundation, Chennai: 2000.

Drew, W.H., Lazarus, John, Rev. Thirukkural – English Translation. Asian Educational services,

Madras (Chennai): 1996.

Drucker, Peter F. the Essential Drucker, HarperCollins Publishers, New York, NY: 2001

Harvard Business Review. HBR’s 10 Must reads on Leadership. Harvard Business School

Publishing Corporation, Boston, Massachusetts 02163; 2011

Krames, Jeffrey A. Jack Welch and the 4E’s of leadership, The McGraw Hill Companies, 2005 Maxwell, John C. The 21 Indispensable Qualities of a Leader. Thomas Nelson Publishers,

Nashville, Tennessee. 1999

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural). Emerald publishers, Chennai.



[1]. இந்தக் கட்டுரை, என்னுடைய “The Ageless Wisdom (As embodied in Thirukkural)” என்ற நூலில் உள்ள  ”Valluvar on Leadership” என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

[2] . “Leader is one who does the right thing; manager is the one who does things right” – Peter Drucker

[3]. “Leadership is the ability to achieve the right goals by organizing and motivating other people to work to accomplish those goals.” –  The Ageless Wisdom (As embodied in Thirukkural) by Dr. R. Prabhakaran

[4]. புறநானூறு, பாடல் 183

[5]. புறநானூறு, பாடல் 182


1 comment:

  1. பிரபாகரன் ஐயா! வணக்கம் _/\_
    மிகவும் அருமையான விரிவான தெளிவான கட்டுரை. வள்ளுவரின் வாய்மொழி பிறழாமல் எடுதுரைத்திருக்கிறீர்கள்.

    பாரதியின் பாடலுக்கு எடுத்துக்காட்டு!

    தெளிவுறவே அறிந்திடுதல்,
    தெளிவுதர மொழிந்திடுதல்;
    சிந்திப்பார்க்கே களிவளர
    உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல
    காட்டல்
    கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்...

    நன்றி!
    சில எழுத்துப் பிழை திருத்தங்கள்:

    குறள் 382’இன் கீழ்:
    மொழியர்க்கிறார்கள் -> மொழிகிறார்கள்? மொழியுரைக்கிறார்கள்
    ஆறிவு: ... கல்வியும் தேவையும் -> தேவை
    முடிவுரை: ... மன்னுக்குத் -> மன்னனுக்குத்

    துணிவுடைமை என்ற பகுதிக்கு முன் பகுதியை:
    ... ஆகவே அறமும் மறமும் அன்றும் தேவை; இன்றும் தேவை; *என்றும் தேவை* என்று நிறைவு செய்தல் தகும்.

    - உங்கள் மாணவன்
    மாணிக்கம் சண்முகம், அட்லாண்டா, ஜியார்ஜியா.

    ReplyDelete