வள்ளுவர்
பார்வையில் இன்பம்
தொல்காப்பியம்
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது
தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்.
அஃது ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்குமுன்
எழுதப்பட்டதாக அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். தொல்காப்பியம்
தனிச்சிறப்பு வாய்ந்த இலக்கண நூல். மற்ற மொழிகளில் உள்ள
இலக்கண நூல்கள், அந்த மொழிகளில் உள்ள எழுத்துகளைப்
பற்றியும், சொற்களைப் பற்றியும், சொற்களைப் பயன்படுத்தி எப்படி வாக்கியங்களை அமைப்பது என்பதைப்
பற்றியும், உரைநடை எழுதுவதற்கும் செய்யுள்கள்
இயற்றுவதற்கும் ஏற்ற விதிகளைப் பற்றியும் கூறும். தொல்காப்பியரின்
காலத்திலும் அதற்கு முன்பும் தமிழில் இலக்கியங்கள் இருந்தன. அந்த இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன. மற்ற இலக்கண நூல்களைப்போல், எழுத்துகளுக்கும்
சொற்களுக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், ஒரு
செய்யுள் இயற்றும்பொழுது, அந்தச் செய்யுள் எத்தகைய
பொருளைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதற்கும் இலக்கணம் வகுக்கிறார். இது தொல்காப்பியத்தின் தனிச்சிறப்பு.
தொல்காப்பியத்திலிருந்து
சில செய்திகள்
செய்யுள்களை
அகத்திணைச் செய்யுள்கள் புறத்திணைச் செய்யுள்கள் என்று இருவகையாகத்
தொல்காப்பியம் பிரிக்கிறது.
திணை
என்ற சொல் ‘நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்’ என்ற பல பொருள்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற
சொல் ‘பொருள்’ என்பதைக் குறிக்கும் சொல்லாகப்
பயன்படுத்தப்படுகிறது.
மனித
வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம்,
புறம்
என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு.
ஓர்
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள்
அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள
முடியாதவையாகையால், அவை அகப்பொருள்
எனப்படும். அகப்பொருளைப் பற்றிப்
பாடும் செய்யுள்கள் அகத்திணையில் அடங்கும்.
காதலைத்
தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை, விழுமியங்கள்
முதலியவற்றை மையப்பொருள்களாகக்கொண்ட செய்யுள்கள் புறத்திணையில் அடங்கும்.
அகத்திணைச் செய்யுள்கள் அனைத்தும் காதலன் காதலி அல்லது
கணவன் மனைவி ஆகியோரின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிய கருத்துச் செறிவும், கவிதை நயமும் கலந்த கற்பனைச் செய்யுள்கள். இந்தச் செய்யுள்களில் எவருடைய பெயரையும் குறிப்பிடுவதில்லை. காதலனையும் கணவனையும், தலைவன்
என்றும், காதலியையும்
மனைவியையும் தலைவி என்றும் குறிப்பிடுவதுதான் தமிழ் இலக்கண மரபு.
அகத்திணையை
கைக்கிளை, குறிஞ்சித் திணை, பாலைத் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, பெருந்திணை என்று ஏழு பிரிவுகளாகத் தொல்காப்பியம் வகுத்துள்ளது. அகத்திணைச்
செய்யுள்களுள் பெரும்பாலானவை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்னும்
ஐந்து பிரிவுகளில் அடங்கும்.
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப. (தொல்காப்பியம் - 947)
ஏழுதிணைகளுள் முதலாவதாகக் கூறப்பட்ட கைக்கிளை என்பது ஒருதலைக்
காதலையும், இறுதியில் கூறப்பட்ட
பெருந்திணை என்பது பொருந்தாக் காதலையும் குறிக்கிறது. இடையில்
உள்ள ஐந்து திணைகள் - குறிஞ்சி, முல்லை, பாலை,
மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகள் – அன்புடன் கூடிய காதல் வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதற்கு ஏற்ற திணைகளாகக்
கருதப்பட்டன.
காதல் வாழ்க்கையைப் பற்றிப் பாடப்படும் அகத்திணைச் செய்யுள்களில்
மூன்று வகையான பொருள்களைப் பற்றிப் பாடலாம் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவை முதற்பொருள், கருப்பொருள்
மற்றும் உரிப்பொருள் என்று அழைக்கப்படுகின்றன.
முதல்கரு உரிப்பொருள்
என்ற மூன்றே
நுவலுங் காலை
முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை
நாடுங் காலை (தொல்காப்பியம் - 949)
அகத்திணைச் செய்யுள்களில் வரும் பொருள்களை ஆராயுமிடத்து
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று பொருள்கள் வரும். இவை
ஒன்றோடு ஒன்று சிறந்தவையாக அமையும். முதலைவிடக் கரு சிறந்தது;
கருவைவிட உரி சிறந்தது.
முதற்பொருள் என்பது நிலத்தையும்
காலத்தையும் குறிக்கிறது.
முதலெனப் படுவது
நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப
இயல்புணர்ந்தோரே. (தொல்காப்பியம்
– 950)
தமிழகத்தின் நிலப்பரப்பைத் தொல்காப்பியம் ஐந்தாகப் பிரிக்கிறது. அவை குறிஞ்சி, முல்லை,
பாலை, மருதம் நெய்தல் என்று அழைக்கப்படுகின்றன.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்றும், முல்லை
நிலமும் குறிஞ்சி நிலமும் மழையின்மையால் வறட்சி அடைந்தால் அந்தப் பகுதியைப் பாலை
என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றும்,
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் அழைக்கப்பட்டன. காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்ற இரண்டு
பிரிவாகப் பிரிப்பது வழக்கிலிருந்தது. பெரும்பொழுது என்பது ஓர்
ஆண்டின் ஆறு பிரிவுகளாகிய இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம் முன்பனிக்காலம்,
மற்றும் பின்பனிக்காலம் ஆகியவற்றைக் குறிக்கிறது. ஓர் ஆண்டை ஆறு பிரிவுகளாகப் பிரிப்பதைப் போலவே, ஒரு
நாளை ஆறு பிரிவிகளாகப் பிரிப்பதும் வழக்கிலிருந்தது. ஒரு நாளின்
ஆறு பிரிவுகள் சிறுபொழுது என்று அழைக்கப்பட்டன. ஒரு நாளின்
சிறுபொழுதுகள்: வைகறை, விடியல்,
நண்பகல், எற்பாடு, மாலை,
யாமம்.
கருப்பொருள் என்ன
என்பதற்குத் தொல்காப்பியம் விளக்கம் அளிக்கிறது.
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப. (தொல்காப்பியம் - 964)
தெய்வம், உணவு,
விலங்கு, மரம், பறவை,
பறை, தொழில், யாழ்
(பண்) ஆகியவையும் பிறவும் கருப்பொருள்கள்
எனப்படும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், மற்றும் நெய்தல்
ஆகிய நிலங்களுக்கு, அங்கு வளரும் மரங்களும், செடிகளும், கொடிகளும், விலங்குகளும்,
வாழும் மக்களும், வணங்கப்படும் தெய்வங்களும்
அந்த நிலத்திற்கு உரிய கருப்பொருள்களாகக் கருதப்பட்டன.
ஒவ்வொரு வகை நிலத்திற்கும் குறிப்பிட்ட கருப்பொருள்கள் இருப்பதைப்
போல், உரிப்பொருள்களும்
வகுக்கப்பட்டுள்ளன.
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. (தொல்காப்பியம் - 960)
புணர்தல் என்பதற்குக் கூடுதல்
அல்லது சேர்தல் என்று பொருள்.
பிரிதல் என்பது களவொழுக்கத்தில், காதலன் தன் காதலியைவிட்டுத் திருமணத்திற்குப்
பொருள் தேடுவதற்காகப் பிரிவதையும்,
கற்பொழுக்கத்தில் கணவன், பொருளுக்காகவும்,
போருக்காகவும், கல்விக்காகவும், அரசன் ஏவிய பணிகளுக்காகவும், பரத்தையோடு தொடர்பு
கொள்வதற்காகவும் தன்
மனைவியை விட்டுப் பிரிவதையும் குறிக்கிறது. பிரிதல் என்பது தலைவன் தலைவியைவிட்டுச்
சில மாதங்கள் பிரிந்திருப்பதைக் குறிக்கிறதே ஒழிய நிரந்தரமான பிரிவைப் பற்றியது
அன்று. எல்லாச் சூழ்நிலைகளிலும் பிரிந்தவர் மீண்டும் கூடுவது
இலக்கிய மரபு. உடன்போக்கின்
பொழுது காதலி தன் பெற்றோரையும் உற்றோரையும் விட்டுக் காதலனோடு செல்வதும் ஒருவகைப்
பிரிவாகக் கருதப்பட்டது.
இருத்தல் என்பது காதலன் தன்
காதலியைவிட்டுப் பிரிந்திருக்கும் பொழுதும், கணவன்
மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் பொழுதும், காதலி அல்லது
மனைவி வருத்தத்தோடு, அந்தப் பிரிவின்போது, பொறுமையுடன் தன் காதலன் (கணவன்) வரவுக்காகக் காத்திருத்தல்.
இரங்கல் என்பது தன் காதலன் (கணவன்) குறிப்பிட்ட காலத்தில் வரத் தவறியதால்,
மனம் வருந்தி, உடல் மெலிந்து, அழுது தன் வருத்தத்தை வெளிபடுத்துவதைக் குறிக்கிறது.
ஊடல் என்பது கணவன் மீது
ஏதாவது ஒரு காரணதிற்காக மனைவி விளையாட்டுக்காகக் கோபமாக இருப்பதைக் குறிக்கிறது. கணவன் பரத்தையரோடு தொடர்புகொள்வதுவே ஊடலுக்கு
முக்கியமான காரணம் என்று அகத்திணைச் செய்யுள்களிலிருந்து தெரிகிறது.
குறிஞ்சித்
திணைக்குப் புணர்தலும், பாலைத்
திணைக்குப் பிரிதலும், முல்லைத் திணைக்கு இருத்தலும், நெய்தல் திணைக்கு இரங்கலும், மருதத் திணைக்கு
ஊடலும் உரிப்பொருள்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் மட்டுமல்லாமல் அவற்றோடு தொடர்புடைய கருத்துகளும்
நிகழ்வுகளும்(நிமித்தங்களும்) முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய திணைகளுக்கு உரிய
உரிப்பொருள்களாகும்.
காமத்துப்பால்
திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும்
பொருட்பால் ஆகிய இரண்டு பகுதிகளும் புறப்பொருளைப் பற்றியதாக இருப்பதால் அவை
இரண்டும் புறத்திணையில் அடங்கும்.
காமத்துப்பால் காதலர்களின் திருமணத்திற்கு முந்திய காதல்
வாழ்க்கையைப் பற்றியும் திருமணத்திற்குப் பிந்திய காதல் வாழ்க்கையைப் பற்றியும்
கூறுவதால் அஃது அகத்திணையில் அடங்கும். திருக்குறளில்
உள்ள காமத்துப்பால் என்ற பகுதியைத் தொல்காப்பியத்தில் உள்ள அகத்திணையியல், களவியல் மற்றும் கற்பியல் ஆகிய இயல்களில் தொல்காப்பியர் கூறும்
கருத்துகளுக்கேற்பத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
காமத்துப்பாலா இன்பத்துப்பாலா?
இன்னிசை
கேட்பது செவிக்கு இன்பம். சுவையான உணவை உண்பது வாய்க்கு இன்பம். நறுமணத்தை
நுகர்வது மூக்குக்கு இன்பம். அழகான ஒன்றைக் காண்பது
கண்ணுக்கு இன்பம்.
தென்றல்
தீண்டினால் உடலுக்கு இன்பம்.
”கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.” என்ற
குறளில் வள்ளுவர் குறிப்படுவதைப்போல், திருக்குறளின் இறுதிப் பகுதி, ஒர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளத்தாலும்
உடலாலும் கூடி மகிழ்வதால் ஐம்பொறிகளும் நுகரும் காமவின்பத்தைக் குறிப்பதால், அந்தப் பகுதிக்குக் காமத்துப்பால்
என்பதுதான் பொருத்தமான பெயர் என்று தோன்றுகிறது.
காமத்துப்பாலின் பிரிவுகள்
காமத்துப்பாலில் உள்ள
முதல் ஏழு அதிகாரங்களைக் களவியல் என்ற பிரிவிலும், அடுத்த பதினெட்டு அதிகாரங்களைக் கற்பியல் என்ற
பிரிவிலும் பரிமேலழகர் பகுக்கிறார்.
மணக்குடவர் குறிஞ்சி, பாலை,
முல்லை, நெய்தல், மருதம் என திணைக்கு ஐந்து அதிகாரங்களாகக் காமத்துப்பால் அமையும் என்று கருதியதாகச் சிலர்
கூறுகின்றனர். பரிமேலழகரின்
பகுப்பு முறையைவிட திணைக்கு ஐந்து அதிகாரங்களாகக் காமத்துப்பாலைப் பிரிப்பது
பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
புணர்தல்
தகையணங்குறுத்தல்
(பெண்ணின் அழகு வருத்துதல்)
ஓரு
இளைஞன் வேட்டையாடச் சென்றான். சென்றவிடத்தில் ஓர் அழகான பெண்ணைப் பார்த்தான்.
அவளைக் கண்டவுடன் அவள்மீது காதல்கொண்டான். அவளை அடைய வேண்டுமென்று நினைத்தான். அவளுடைய அழகு அவனை வருத்தியது. அவளைக்
கவனமாகப் பார்த்தவுடன் அவள் ஒரு தெய்வப்பெண்ணோ என்று அவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது.
அவள் நடையைப் பார்த்தால் ஒரு மயில் அசைவதைப்போல் அவனுக்குத் தோன்றியது. அவள்
காதில் அணிந்திருக்கும் பெரிய கனத்த காதணிகளைப் பார்த்தால், அவள் ஒரு தெய்வப்பெண்ணா, அல்லது மயிலா அல்லது
பெரிய காதணிகளை அணிந்த மானுடப் பெண்தானா என்று தன் மனத்தில் ஐயம்கொண்டு கலக்கம்
அடைந்தான்[1]. அவளும் அவனைப் பார்த்தாள். அவள் பார்வை, ஒரு
தெய்வப்பெண் பெரும்படையோடு வந்து, அவனைத் தாக்குவதுபோல்
அவனுக்குத் தோன்றியது[2].
அவளுடைய பார்வையால் அச்சமடைந்த அந்த ஆடவன், “இதுவரை கூற்று என்று சொல்லப்படுகின்ற எமனை நான் அறிந்ததில்லை; ஆனால், இன்று, எமன்
என்பவன் பெண்தன்மையுடன் கூடிப் பெரும்போர் செய்யும் கண்களை உடையவன் என்று
அறிந்தேன்.” என்று எண்ணினான்[3].
அவன் பார்த்த அந்தப் பெண்
மானுடப் பெண்தான் என்று ஓரளவுக்கு மனத்தில் தெளிவடைந்தான். ஆனால், அந்தப் பெண்ணின்
கண்கள் தம்மைக் காண்பவர்களைக் கொல்லும் தோற்றத்தோடு இருப்பது அவளுடைய
பெண்தன்மைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறதே என்று வியந்தான்[4].
அவளுடைய கண்களைப் பற்றிய நினைவு வந்ததால், அவனுக்கு மீண்டும் ஓர் ஐயம் எழுந்தது. “இந்த மெல்லியலாளின் கண்கள்
என்னைப் பார்த்தால், அவை ஒரு பெண்ணின் கண்கள்தான் என்று
தோன்றினாலும், அந்தப் பார்வை என்னை வருத்துவதால், அவை ஒருக்கால் கூற்றுவனின் கண்களோ அல்லது, அந்தப்
பார்வையில் உள்ள மருட்சியைப் பார்த்தால், அவை ஒரு மானின்
கண்களோ என்று தோன்றுகிறது. இவள் பார்வையில் இந்த மூன்று
தன்மைகள் எனக்குத் தோன்றுகின்றனவே!” என்று தனக்குத்தானே
கூறிக்கொண்டான்[5].
அவளுடைய வளைந்த புருவங்கள் கூர்மையான அம்பை எய்வதற்காக
வளைக்கப்பட்ட வில்லைப்போல், அவன்மீது அவளுடைய கூர்மையான
பார்வையைச் செலுத்துவதற்காக வளைந்திருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. அந்தப்
புருவங்கள் வளையாமல் இருக்குமானால், அவள் கண்களால் தனக்கு
நடுங்கத்தக்க துன்பங்கள் வாரா.” என்று அவன் நினைத்தான்[6].
இதுவரை அவளுடைய கண்களில்
மட்டுமே கவனம் செலுத்திய அந்த இளைஞன் அந்த இளம்பெண்ணின் மார்பகங்களை
மறைத்திருக்கும் ஆடையைப் பார்த்தான். அஃது, ஒரு மதயானைக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் முகத்திரையைப்போல் அவனுக்குத்
தோன்றியது[7]. அவளுடைய உறுப்பு நலன்கள் அவனை வருத்தியதால், அவன்,
“என்னுடைய வலிமையைப் பிறர் வாயிலாகக் கேட்டறிந்ததால் என்னுடன்
போர்க்களத்திற்கு வந்து போர்செய்வதற்கு என்னுடய பகைவர்கள் அஞ்சுகிறார்கள்.
என்னுடைய அத்தகைய பெருவலிமை இப்பொழுது இப்பெண்ணின் ஒளிபொருந்திய சிறு நெற்றியின்
அழகிற்குமுன் அழிந்துவிட்டதே[8]!”
என்று எண்ணித் திகைத்தான். அவள்
அணிந்திருக்கும் அணிகலன்களைப் பார்த்தான். அவன் பார்வையால், அவள் நாணினாள். பெண்மானைப் போன்ற இந்தப் பெண்ணுக்குச் செயற்கையாகச்
செய்யப்பட்ட அணிகலன்கள் தேவையா என்று சிந்தித்தான்[9].
“உண்பவர்களுக்குத்தான் கள் மகிழ்ச்சியைத் தரும் தன்மையுடையதே
தவிர, காமத்தைப்போல், கண்டவுடன்
மகிழ்ச்சி தராது[10].”
என்று காமத்தின் தன்மையை நினைத்து வியந்தான்.
குறிப்பறிதல்
(ஒருவர் மனத்தில் எண்ணுவதை மற்றொருவர் அறிந்துகொள்ளுதல்)
முதல் நாள் அந்தப் பெண்ணைச்
சந்தித்த இடத்திற்குச் சென்றால் அவளை மீண்டும் சந்திக்கலாம் என்று எதிர்பார்த்து
அதே இடத்திற்கு அந்த இளைஞன் சென்றான். அவன் எதிர்பார்த்தபடியே, அவளும் அங்கே வந்தாள்.
அவளோடு அவள் தோழியும் இருந்தாள். அவன் அவளுடைய உள்ளத்தில் உள்ள குறிப்பை அறிந்துகொள்ள ஆவலுடையவனாக
இருந்தான். இருவரும் தங்கள் பார்வையைப் பரிமாறிக்கொண்டார்கள்.” இவளுடைய மைதீட்டிய கண்களில் உள்ள
பார்வைகள் இருவகையானவை. அவற்றுள் ஒன்று எனக்குத் துன்பம் தருகின்றது; மற்றொன்று, அந்தத் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துபோல் உள்ளது[11].
நான் காணாதபொழுதில் மறைவாகப் பார்க்கும் இவளுடைய கடைக்கண் பார்வை,
இவளோடு அடையக்கூடிய காம இன்பத்தில் பாதிக்கும் அதிகமானது[12].
நான் பார்க்காதபொழுது, இவள் என்னைப்
பார்க்கிறாள்; நாணத்தால் தலைகுனிகிறாள். அச்செயல் எங்கள்
இருவருக்கும் இடையே அன்பு வளர்வதற்காக அவள் ஊற்றிய நீராகும்[13].
நான் இவளைப் பார்க்கும்போது, இவள்
நிலத்தைப் பார்க்கிறாள்; அதைக் கண்டு நான் இவளைப்
பாராதிருந்தால், இவள் என்னைப் பார்த்துத் தனக்குள்
மகிழ்ந்து புன்னகை புரிகிறாள்[14].
நேருக்கு நேர் பார்க்காமல், ஒரு கண்ணைச்
சுருக்கிக் கடைக்கண்ணால் என்னைப் பார்ப்பதைப்போலப் பார்த்துத் தனக்குள்
மகிழ்கிறாள்[15].”
என்று எண்ணி அந்த இளைஞன் மகிழ்ந்தான். தான் அவளைக்
காதலிப்பதைப்போல் அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என்பதை அவளுடைய பார்வையிலிருந்து
தெரிந்துகொண்டான். இதுவரை இருந்த ஒருதலைக் காதல் இருவருடைய மனம் ஒருமித்த காதலாக
மாறியது.
அந்தப் பெண்ணுக்கும் அந்த
இளைஞனுக்கும் இடையே காதல் மலர்வதை அந்தப் பெண்ணின் தோழி உணர்ந்தாள். அவர்களுடைய
காதல் உண்மையானதா, அந்த இளைஞன் நம்பத் தகுந்தவனா, அந்தப்பெண்
அவசரப்பட்டுக் காதல் வலையில் விழுந்தாளா என்பதையெல்லாம் தோழி அறிந்துகொள்ள
விரும்பினாள். அதனால், அந்தப் பெண்ணிடம், “அவசரப்படாதே. அவன்மீது கோபித்துகொள்வதைப்போல் சற்று நடி. அவன் என்ன
செய்கிறான் என்று பார்ப்போம்.” என்று கூறினாள். அதைக் கேட்ட அந்தப் பெண், அந்த இளைஞனிடம் சற்றுக் கோபமாகப் பேசுவதைப்போல் நடித்தாள். அதைக் கண்ட
இளைஞன், “உள்ளத்தில் உள்ள காதலை மறைத்துக்கொண்டு, புறத்தில் உடன்பாடில்லாதவர்போல அன்பில்லாத சொற்களைக் கூறினாலும்,
உள்ளத்தில் கோபமின்றி, அன்புகொண்டிருப்பது
விரைவில் வெளிப்பட்டுவிடும்[16]. சினமில்லாமல்
சினங்கொண்டதுபோல் பேசும் பேச்சும், பகைவர்போல் பார்க்கும்
பார்வையும், உறவில்லாதவர்போல் காட்டிக்கொண்டு, உள்ளே மனமொன்றிய காதலர்களின் உட்குறிப்புள்ள செயல்கள்தான்[17].
நான் இவளைப் பார்க்கும்பொழுது, இவள்
என்மீது அன்புடன் மெல்லச் சிரிக்கிறாள்; அப்போது, இவள் உடலில் தோன்றும் அசைவுகளால், இவள்
தோற்றத்தில், ஒரு தனித்த அழகு தோன்றுகிறது[18].”
என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு, அவள்
அழகை நினைத்து இன்புற்றான். விளையாட்டுக்காகக் கோபப்படுவதுபோல் சற்று நேரம் அந்தப்
பெண் நடித்தாலும், அவள் கோபம் மறைந்து, அந்த இளைஞனை முன்பின் தெரியாத ஒருவனைப் பார்ப்பதைப்போல், தோழிக்குத் தெரியாமல் பார்த்தாள். அவனும் அவளை மீண்டும் பார்த்தான்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதைக் கண்ட தோழி, “முன்பின்
அறியாதவர் போலப் பொதுப்பார்வையாகப் பார்த்துக்கொள்ளுதல் காதலரிடம் உண்டு[19].
காதலர் இருவருள் ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் ஒன்றுபடின்,
வாயினால் பேசும் பேச்சுக்களால் பயனில்லை[20].”
என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு, அவர்கள்
உண்மையான காதலர்கள்தான் என்று முடிவு செய்தாள்.
புணர்ச்சி
மகிழ்தல் (உள்ளம்
ஒன்றிக் கூடியபின் அந்த இன்பத்தை நினைத்து மகிழ்தல்)
காதலர்கள் இருவரும் எவருக்கும்
தெரியாமல் தனிமையில் சந்தித்தார்கள். அவளோடு உறவுகொள்ளும் பொழுதெல்லாம் அவன்
கண்டும், கேட்டும்,
உண்டும், முகர்ந்தும், தொட்டும் அடைகின்ற ஐம்புல இன்பங்களும் அவளிடத்தில் தான் பெறுவதாக
உணர்ந்தான்[21].
”நோய்க்கு மருந்து நோயைத் தவிர வேறொரு பொருளாகத்தான் இருக்கும்;
ஆனால், அழகிய அணிகலன்களை அணிந்த என்
காதலியால் வந்த நோய்க்கு அவளே மருந்தாவாள்[22].
அவளுடைய மெல்லிய தோள்களில் தூங்குவதைவிட, திருமாலின் உலகில் கிடைக்கும் இன்பம் இனிதாகுமோ? ஆகாது[23].
இவளைவிட்டு விலகினால் சுடுகிறது; நெருங்கினால்
குளிர்ச்சியாக இருக்கிறது; இத்தகைய தீயை அவள் எங்கிருந்து
பெற்றாள்[24]? அழகிய இதழ்கள் உள்ள பூக்களை அணிந்த கூந்தலையுடைய அவள் தோள்கள், விரும்பிய போதெல்லாம் விரும்பிய பொருள்கள் கிடைத்து இன்பம் தருவதுபோல்
எனக்கு இன்பம் அளிக்கின்றன[25].
அவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுவதால்,
அவளுடைய தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டன போலும்[26].
அழகிய மாநிறத்தையுடைய அவளைத் தழுவுவது, என்
வீட்டில் இருந்து என்னுடைய உணவைப் பலரோடும் பகிர்ந்து உண்பதுபோல் உள்ளது[27].
காதலர் இருவர் காற்றுப் புக முடியாதபடி இடைவெளியின்றி இறுகத்
தழுவிக்கொள்வது அவர்கள் இருவருக்கும் இன்பம் தருவதாகும்[28]. ஊடலும், ஊடல் போதுமென்று தெளிதலும், பின்னர் கூடி
மகிழ்தலும் காதலுற்றவர்கள் அடையும் பயன்[29].
இச்சிவந்த அணிகலன்களையுடையவளோடு கூடுந்தோறும், நான் பெறும் காமவின்பம், கற்று அறிய அறிய
முன்னிருந்த அறியாமையைக் கண்டதுபோல் உள்ளது[30].”
என்று அவளோடு உறவுகொள்வதால் அவன் பெறும் இன்பத்தை எண்ணியெண்ணிப்
பெருமகிழ்ச்சி அடைந்தான்.
அந்த இளைஞனும் அவன் காதலியும் வெகுநேரமாகத் தனியே கூடிக்
குலாவினார்கள். இரவு நேரம் வந்தது. அவன் காதலியை அவள் வீட்டார் தேடுவதற்குமுன்
அவள் வீடு போய்ச்சேர வேண்டும். ஆகவே, அவளிடமிருந்து விடைபெற்று, அவனும் தன் வீட்டிற்குச் சென்றான். இரவு வேளை;
நிலவு வெளிச்சம்;
விண்மீன்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவன்
செல்கின்ற பாதையோ சற்றுக் கரடுமுரடான மலைப்பகுதியைச் சார்ந்தது. அங்கே,
எங்குப் பார்த்தாலும் அனிச்சம்,
குவளை, போன்ற நறுமணம் வீசும் நல்ல மலர்கள் நிறைந்திருந்தன. தன்
காதலியின் மேனியின் மென்மை, மலரையொத்த கண்கள், சிற்றிடை, அழகிய முகம், அவளிடத்தில் உள்ள இயற்கையான மணம் இவற்றையெல்லாம் அவனால்
மறக்கவே முடியவில்லை. ஆகவே, அவன் பலவிதமாக அவள் நலன்களை எல்லாம் நினைத்து நினைத்துக்
கற்பனை செய்து மகிழ்ந்தான்.
நலம் புனைந்துரைத்தல் (காதலியின் நலன்களைத்
தலைவன் கற்பனை செய்து பாராட்டுதல்)
அவன் அனிச்சப்பூக்களைப் பார்த்தான். அவற்றைப் பார்த்து,
“அனிச்சமே! நீ வாழ்க! நீ மெல்லிய தன்மை
உடைய பூ; ஆயினும்,
நான் மிகவும் விரும்பும் என் காதலி
உன்னைவிட மென்மையானவள்[31].“
என்று இறுமாப்புடன் கூறினான். அன்று
மாலை, அவன் காதலி
அனிச்சப்பூக்களைக் காம்புகளைக் களையாமல் தன் தலையில் அணிந்திருந்தது அவன்
நினைவிற்கு வந்தது. அந்தக் காம்புகளின் சுமையை அவள் சிற்றிடை தாங்கிக்கொள்ள
முடியாமல் முறிந்துவிடுமோ என்று எண்ணி வருந்தினான்[32].
அவள் மேனியின் மென்மை மீண்டும் அவன்
நினைவிற்கு வந்தது. தான் செல்கின்ற பாதையைப் போல் அவள் செல்கின்ற பாதையும்
கரடுமுரடாக இருக்குமோ என்று எண்ணிப்பார்த்தான். “என் காதலி போன்ற மென்மையான
பெண்களின் மெல்லிய பாதங்களுக்கு, அனிச்சப்பூக்களும் அன்னப்பறவையின் இறகுகளும்கூட நெருஞ்சி
முட்கள் போல் துன்பம் அளிக்குமே” என்று எண்ணி, அவள் எப்படி வீடு போய்ச்சேருவாள் என்று வருத்தப்பட்டான்[33].
மலர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் தன் மனம் மயங்குவது ஏன்
என்று அவன் சிந்தித்தான். அவன் தன் நெஞ்சத்திடம், “என் நெஞ்சமே!
மலர்களைக் கண்டால்,
அவை என் காதலியின் கண்களுக்கு ஒப்பானவை
என்று எண்ணி நீ மயங்குகிறாய். ஆனால், என் காதலியின் கண்களுக்கும் மலர்களுக்கும் ஒரு வேறுபாடு
உண்டு; மலர்கள்
பலராலும் பார்க்கப்படுபவை; என் காதலியின் கண்களைக் காண்பவன் நான் மட்டும்தான்.” என்று
கூறிக்கொண்டான்[34].
அந்த வேறுபாடு மட்டுமல்லாமல்,
அவள் கண்கள்,
உண்மையிலேயே மலர்களைவிட அழகானவை.
ஆகவேதான், “குவளை மலர்கள்
என் காதலியின் கண்களைக் கண்டால், தாம் அவள் கண்களுக்கு ஒப்பானவை அல்ல என்று அறிந்து நாணித்
தலைகுனிகின்றன.” என்று நினைத்தான்[35].
அவள் கண்கள் மட்டும்தான் அழகானவையா?
அவள் உடல் உறுப்புகள் அனைத்துமே
அழகுக்கு இலக்கணமாகத் திகழ்வதை நினைவு கூர்ந்த காதலன்,
“மூங்கிலைப் போன்ற தோளினை உடைய என்
காதலியின் உடல் மாந்தளிர் நிறம், பற்கள் முத்துப் போன்றவை, உடலில் இயற்கையான நறுமணம் மற்றும் அவள் மைதீட்டிய கண்களோ
வேல் போன்றவை.” என்று தனக்குள் கூறி
மகிழ்ச்சி அடைந்தான்[36].
இவ்வாறு காதலியின் நலன்களை எண்ணியெண்ணிப் பெருமகிழ்ச்சி
அடைந்த இளைஞன், ஓரிடத்தில்
சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்துப் படுத்தான். வானத்தில்
விண்மீன்கள் மின்னுவதைப் பார்த்தவுடன், வீட்டிற்குச் சென்றுகொண்டிருக்கும் தன் காதலியை அந்த
விண்மீன்கள் பார்த்து, அவளுடைய முகத்திற்கும் வானத்தில் ஒளிறும் திங்களுக்கும்
வேறுபாடு தெரியாமல் அவை
தமது நிலையிலிருந்து தடுமாறுகின்றனவோ
என்று வியந்தான்[37].
”அந்த விண்மீன்களுக்கு என்ன தெரியும்?
முன்பு குறைந்தும் பின்னர் நிறைந்தும்
விளங்குகின்ற திங்களைப்போல் தன் காதலியின் முகத்தில் களங்கம் இல்லை என்பது அந்த
விண்மீன்களுக்குத் தெரியாத காரணத்தால்தான் அவை தடுமாறுகின்றன,” என்று அவனுக்குத்
தோன்றியது[38]. திங்களைவிடத்
தன் காதலி அழகில் சிறந்தவள் என்பதை அந்தத் திங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற
எண்ணத்தோடு, வானத்தைப்
பார்த்து, “வெண்ணிலவே! நீ
வாழ்க! என் காதலியின் முகம்போல் ஒளி வீசும் வல்லமை பெறுவாயானால்,
நீயும் என்னால் விரும்பப்படுவாய்.”
என்றான்[39]. முடிவாக,
வானத்தில் உள்ள வெண்ணிலவை நோக்கி,
“நிலவே! மலர் போன்ற கண்களையுடைய என்
காதலியின் முகத்தை ஒத்திருக்க நீ விரும்பினால், பலரும் காணுமாறு தோன்றாதே! என் காதலியைப் போல் நான் மட்டும்
காணுமாறு தோன்றுவாயாக!” என்று எச்சரித்தான்[40].
காதற்
சிறப்புரைத்தல் (காதலர்
இருவரும் ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள காதலின் சிறப்பைச் சொல்லுதல்)
தலைவன் தன் காதலியோடு அடைந்த
இன்பத்தை எண்ணிப் பார்த்தான். அவளோடு அவன் கூடியிருந்தபொழுது நிகழ்ந்தவை அனைத்தும்
அவன் மனத்திரையில் கண்டான். குறிப்பாக,
அவளை முத்தமிட்ட காட்சியும், அதனால்
அவன் பெற்ற இன்பமும் அவனால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டதை உணர்ந்தான்.
“அந்த மென்மொழியாளின் வெண்மையான பற்களில் ஊறிய நீர் பாலொடு தேன் கலந்தாற்போல்
இருந்தது.” என்று எண்ணியெண்ணி மகிழ்ந்தான்[41].
தன் காதலியின் உருவத்தை தன் கண்களில் நிரந்தரமாக நிறுத்திக்கொள்ள
வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால், அவ்வாறு செய்வதற்குத் தன் கண்ணின் கருமணியின் நடுவே உள்ள மற்ற
உருவங்கள் தடையாக இருப்பதாக எண்ணி, “என் கண்ணின்
கருமணியில் தங்கியிருக்கும் பாவையே! நீ அங்கிருந்து போய்விடு. ஏனெனில், நான் விரும்பும் அழகிய நெற்றியையுடையவளை நான் என் கண்களில்
வைத்துக்கொள்வதற்கு நீ இருக்கும் இடம் தேவை[42].”
என்றான். அவளைத் தன் கண்களில் வைத்துக்கொண்டால், அவளை அடிக்கடி நினைவு கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால், “அவளை மறந்தால்தானே நினைக்க முடியும்; நான் ஒரு
விநாடிகூட அவளை மறப்பதில்லையே; பின் எப்படி அவளை நினைக்க
முடியும்.” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்[43].
அவன் காதல் சாதரணமானது அன்று. அது மிகவும் உண்மையான காதல்.
அவள்மீது அவனுக்குள்ள காதல், வெறும் காம உணர்ச்சி அன்று.
அஃது அன்பின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த காதல். ஆய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த
அவன் காதலி அவனோடு இருக்கும்பொழுது அவன் வாழ்வது போலவும்,
அவள் அவனை விட்டு நீங்கும்போது உடலிலிருந்து உயிர் நீங்குவது போலவும் அவனுக்குத்
தோன்றியது[44]. அவள் இல்லாமல் அவனால் வாழ முடியாது என்ற அளவுக்கு அவர்களிடையே காதல்
வலிவடைந்துவிட்டது. தன் காதலிக்கும் தனக்கும் இடையே உள்ள காதல் உடம்புக்கும்
உயிருக்கும் உள்ள தொடர்பைப் போன்றது என்று அவன் முடிவு செய்தான்.[45]
தலைவியும் தலைவனைப்போலவே காதல்
மிகுந்தவளாய், அவர்களுக்கிடையே உள்ள காதலின் சிறப்பை எண்ணியெண்ணிப் பெருமைப்பட்டாள்.
காதலன் அவள் கண்களிலிருந்து வெளியே போகாமல் இருப்பதாகவும், அவள் கண்களை இமைத்தால்கூட அவன் துன்பம் அடையாமல் நுட்பமாகத் தன்
கண்களிலேயே இருப்பதாகவும் கற்பனை செய்தாள்[46].
காதலன் அவள் கண்களில் இருப்பதனால், கண்ணை
மூடிக் கண்ணுக்கு மை எழுதினால் அவன் மறைந்துவிடுவானோ என்ற அச்சத்தினால், அவள் தன் கண்ணுக்கு மையெழுதுவதை விட்டுவிட்டாள்[47].
அது மட்டுமல்ல. தன் காதலன் தன் நெஞ்சத்தில் இருப்பதால், தான் வெப்பமான உணவை உண்ணுவதற்கு அவள் அஞ்சினாள்[48].
கண்களை இமைத்தால் அங்கிருக்கும் காதலன் மறைந்துவிடுவான் என்று
அஞ்சி, அவள் கண்களை இமைக்காமல் இருப்பதைப் பார்த்த
அவ்வூர் மக்கள், அவள் காதலனுக்கு அவள்மீது அன்பில்லாத
காரணத்தினால், அவள் தூங்கமல் கண்விழித்தே இருக்கிறாள்
என்று பேச அரம்பித்தார்கள்[49].
அவ்வூர் மக்களுக்கு அவள் காதலைப் பற்றி என்ன தெரியும்? அவள் காதலன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக அவள் உள்ளத்தில் இருப்பதை அறியாத
அவ்வூர் மக்கள், அவன் அவள்மீது அன்பில்லாமல் அவளைப்
பிரிந்து வாழ்கிறான் என்று பிதற்றினார்கள்[50].
பிரிதல்
நாணுத்துறவுரைத்தல்
(காமமிகுதியால்
தலைவன் தன் நாணத்தைத் துறத்தலைக் கூறுதல்)
ஊர்மக்கள் தங்கள் பெண்ணைப்
பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள் என்பதை அறிந்த அந்தப் பெண்ணின் வீட்டார் அவளை
வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே, அந்தக் காதலர்கள் சந்திக்க முடியவில்லை. தன்
காதலியைச் சந்திக்க முடியாததால், அந்த இளைஞன் தன்
காதலியோடு கூடி மகிழ்ச்சியாக இருந்ததை எண்ணிப் பார்த்துக்கொண்டு அவள் நினைவாகவே
இருந்தான். அவளைத் திருமணம் செய்துகொள்வதற்குத் தெளிவான
வழி தெரியாமல் குழப்பத்தோடு வருந்தினான். காமத்தால்
துன்புற்று (காதலியின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல்[51]
அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை என்று நினைத்தான்[52].
காதலியைச் சந்திக்க முடியாததால் நள்ளிரவிலும் உறங்காமல்
மடலூர்தலைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான்[53].
முன்பு நாணமும் நல்ல ஆண்மையும் உடையவனாக இருந்த தான், இப்பொழுது காமம் மிக்கவர்போல் மடலூரத் துணிந்ததை நினைத்து வருந்தினான்[54].
இவ்வாறு அந்த இளைஞன்
ஆற்றாது அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அவன் காதலியும் அவனை நினைத்து வாடினாள். அவள் தன் காதல்மீது
கோபமுற்றாள். “நான் மனத்தை அடக்கிக்கொள்ள முடியாதவள், இரக்கத்திற்கு உரியவள் என்றுகூடக் கருணை
காட்டாமல் என் காதல் இப்படிப்
பலரறிய அம்பலமாகிவிட்டதே[55]!”
என்று தனக்குத்தனே கூறிக்கொண்டாள். ”இந்தக் காமவுணர்வு மிகவும் பொல்லாதது.
என் காதல், தன்னை
இவ்வூரார் எவரும் அறிந்திலர் என்று கருதி,
அவர்களுக்குத் தன்னை அறிவித்துக்கொள்ளவேண்டுமென்று, நாற்சந்தி கூடும் தெருவிற்கு வந்து
மயங்கிச் சுழல்கிறது[56].”
என்று நினைத்து வேதனைப்பட்டாள்.
“இவ்வூர் மக்கள் அறிவில்லாதவர்கள்; நான்
படும் துன்பத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? அவர்கள்
அந்தத் துன்பத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆகவேதான் என் கண்ணெதிரிலேயே
என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.” என்று நினைத்து ஆத்திரப்பட்டாள்[57].
அலர் அறிவுறுத்தல் (தங்களது களவொழுக்கத்தை ஊரார் பழித்துப் பேசுவதைக்
காதலர் அறிதல்)
ஊர்மக்கள் பலரும் பலவிதமாக இக்காதலர்களைப் பழித்துப்
பேசுசினார்கள். இவ்வாறு ஊரார் பேசும் பேச்சிற்கு ”அலர்” என்று பெயர். அலர்தல் என்றால் விரிதல் அல்லது மலர்தல் என்று பொருள். காதல்
வயப்பட்டவர்கள் தங்கள் காதலைப் பற்றி மற்றவர்களிடத்தில் அதிகமாகப் பேச முடியாது.
நெருங்கிய நண்பர்களிடத்தில் ஒரு சில செய்திகளை மட்டுமே நாகரிகமாகக் கூறுவதுதான்
நமது பண்பாடு. ஆனால், ஊர்மக்கள் பேசும் அலர் காதலர்களுக்குக்
கசப்பும் இனிப்பும் கலந்த ஒன்றாகும். மற்றவர்கள் தம்மைப் பற்றித் தாறுமாறாகப்
பேசுகிறார்களே என்ற வருத்தத்தால் கசப்பாகவும், அந்த அலரினால்
தங்கள் காதல் பலருக்கும் தெரியவருவதால், தங்கள் கள்ளக் காதல்
திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கையால் இனிமையானதாகவும் இருந்தது.
”எங்கள் காதலைப் பற்றி
இவ்வூர் மக்கள் அலரெழுப்பிய காரணத்தால் என் உயிர் நிலைபெறும். நான் செய்த
நல்வினையின் பயனால் அதைப் பலரும் அறிந்திலர்[58]. மலர்போன்ற கண்களையுடைய என்
காதலி எனக்குக் கிடைத்தற்கு அருமையானவள் என்பதை இவ்வூரார் அறியாமலே அலரை எழுப்பி
எனக்கு உதவினர்[59].
எங்கள் காதலை இவ்வூரார் அறிந்ததனால் உண்டான அலர் எனக்கு ஏற்றதோ?
ஏற்றதுதான். ஏனெனில், நான் பெற நினைத்த அவளுடைய
உறவைப் பெறாமலே பெற்றதை ஒத்த தன்மையை இந்த அலர் தருகிறது[60].
ஊரார் கூறும் அலரினால் என் காதல் வளர்கிறது; அஃது இல்லையென்றால், என் காதல் சுருங்கிவிடும்[61].
கள்ளுண்பவர்கள் கள்ளுண்டு களிக்கும்போதெல்லாம் கள்ளை மேலும் விரும்புவதுபோல்,
அலர் பரவுந்தோறும், காதலுணர்வு
உடையவர்க்கு அக்காதல் மிகவும் இனியதாகிறது[62].”
என்று அலரைப் பற்றியும் தன் காதலைப் பற்றியும் அந்தக் காதலன்
சிந்தித்தான்.
“நான் காதலரைக் கண்டது ஒரு நாளே; அதனாலாகிய அலர்
திங்களைப் பாம்பு விழுங்கியதைப்போல் அனைவருக்கும் தெரிந்துவிட்டது[63].
என்னுடைய காமநோயாகிய பயிர் இவ்வூர் மக்கள் கூறும் அலரை எருவாகவும்,
அது கேட்டு, என் அன்னை கூறும் சொற்களை
நீராகவும் கொண்டு வளர்கின்றது[64].
ஊரார் கூறுகின்ற அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று
அவர்கள் கருதினால் அது நெருப்பை நெய்யால் அணைத்துவிடலாம் என்று எண்ணுவதைப் போன்றது[65].
அன்று, “நான் உன்னை விட்டுப் பிரியேன். அஞ்சுவதை
விடு.” என்று என் காதலர் சொன்னார். ஆனால், இன்றோ பலரும்
காணும்படி, அவர் என்னைவிட்டு நீங்கியபின், நான் இவ்வூரார் கூறும் அலருக்காக நாணுதல் தகுமோ[66]?
நான் விரும்புகின்ற அலரை இவ்வூரார் கூறுகின்றனர். ஆகவே, என் காதலர், நான் வேண்டுவதற்கு இணங்குவார்[67].”
என்று தன் தோழியிடம் காதலி கூறினாள். அதாவது, தன் காதலன் தன்னை விரைவில் மணந்துகொள்வான் என்ற தன் நம்பிக்கையைத் தன் தோழியிடம்
அந்தக் காதலி தெரிவித்தாள். திருமணம் விரைவில் நடைபெறும் என்பதில் காதலனும்
உறுதியாக இருந்தான்.
பிரிவாற்றாமை
(தலைவன் தலைவியைப் பிரிந்து போருக்குச் செல்லுதல்)
தலைவனுக்கும் தலைவிக்கும்
திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆயின. அவர்கள் வாழும் நாட்டிற்கும்
மற்றொரு நாட்டிற்கும் இடையே போர் தொடங்கியது. இளைஞர்கள் எல்லோரும் போரில்
கலந்துகொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசன் அறிவித்தான். அரசனுக்குத் துணையாகப்
போர்புரிந்து, தன் நாடு வெற்றிபெறத் தன்னால் இயன்றதைச்
செய்ய வேண்டுமென்பதில் தலைவனும் ஆவலாக இருந்தான். ஆனால், தன்
மனைவியைவிட்டுப் பிரிய வேண்டும் என்பதை நினைத்தால் அவனுக்கு மிகுந்த வருத்தமாக
இருந்தது. அவன் போருக்குச் செல்வதை அவனுடைய மனைவி சற்றும் விரும்பமாட்டாள்
என்பதையும், அவள் அளவு கடந்த வருத்தம் அடைவாள் என்பதையும்
நினைத்து அவன் மனம் கலங்கினான். இருப்பினும், அரசனுக்குத்
துணையாகப் போரில் பங்குகொள்வது தன் தலையாய கடமை என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.
போருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை அவன் தன் மனைவிக்குத் தெரியாமல்
செய்துகொண்டிருந்தான்.
ஒரு நாள் தலைவியைப் பார்க்க
அவள் தோழி வந்தாள். தலைவி வருத்தத்தோடு இருப்பதைக் கண்ட அவள், “உனக்குத் திருமணமாகி
இரண்டு மாதங்கள்தான் ஆயின. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உன் முகத்தில் கவலையைக்
காண்கிறேன். ஏன்? என்ன ஆயிற்று?”, என்று கேட்டாள். அதற்குத் தலைவி, “போருக்குப்
போவதற்குத் தேவையான ஏற்பாடுகளை என் கணவர் எனக்குத் தெரியாமல்
செய்துகொண்டிருகிறார். அவர் போருக்குப் போகப்போவது எனக்குத் தெரியாது என்று அவர்
நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இன்னும் சில நாட்களில் என்னைவிட்டுப் பிரிந்து
சென்றுவிடுவார்.” என்று கூறினாள். ”முன்பெல்லாம் அவர் என்னைப் பார்த்தாலே நான்
மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். இப்பொழுது, நாங்கள் கூடி
மகிழ்ந்தாலும், அவர் என்னைவிட்டுப் பிரிந்துபோகப்போகிறாரே
என்பதை நினைத்து அஞ்சுகிறேன்[68].
என்னால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாக அறிந்த
என் கணவர், என்னைவிட்டுப் பிரிவதால், “உன்னைப் பிரியேன்.” என்று அவர் முன்பு சொல்லிய சொல்லை என்னால் நம்ப
முடியவில்லை[69].”
என்று வருத்தத்தோடு தலைவி தோழியிடம் கூறினாள். தலைவியின்
மனநிலையைத் தோழி நன்கு உணர்ந்தாள், “நான் உன்னுடைய
கணவரிடம் பேசுகிறேன். அவர் உன்னைவிட்டுப் பிரிந்தால், நீ
மிகுந்த வருத்தம் அடைவாய் என்றும், போருக்குப் போக
வேண்டாம் என்றும் சொல்கிறேன். நீ கவலைப்படாதே.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல்
கூறினாள். தான் கூறியபடியே, தோழி தலைவனைச் சந்தித்து,
அவனைப் போருக்குப் போக வேண்டாம் என்றும், அவன் போருக்குப் போனால், அவன் மனைவி மிகவும்
வருந்துவாள் என்றும் அவனிடம் கூறினாள். போருக்குச் செல்வது தன்னுடைய தவிர்க்க
முடியாத கடமை என்றும், தான் விரைவில்
திரும்பிவந்துவிடுவதாகவும் அவன் கூறினான். தலைவன் கூறியதைத் தோழி தலைவியிடம் கூறினாள்.
அதற்குத் தலைவி, “என் கணவர், என்னைவிட்டுப்
பிரிந்து போகப்போகிறேன் என்று சொல்லுகின்ற அளவிற்குக் கொடியவராக இருப்பாரானால்,
அவர் திரும்பிவந்து என்னிடம் அன்பு காட்டுவார் என்ற ஆசையை
விட்டுவிட வேண்டியதுதான்[70].”
என்று அழுதுகொண்டே கூறினாள்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, தான் போருக்குப்
போகப்போவதைப் பற்றித் தலைவியிடம் கூற வேண்டும் என்று தலைவன் முடிவு செய்தான். அவன்
தலைவியிடம் வந்து, தான் போருக்குப் போவதைப் பற்றிக் கூற
முயற்சி செய்தான். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை உணர்ந்த தலைவி, “நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து செல்லவில்லை என்ற செய்தி இருந்தால் அதை
என்னிடம் சொல்லுங்கள்; அதை விட்டுவிட்டு, நான் பிரிந்து சென்று விரைவில் திரும்பிவந்துவிடுவேன்.” என்று கூற
விரும்பினால், அதை நீங்கள் திரும்பிவரும்பொழுது யார்
உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் சொல்லுங்கள்[71].”
என்று கோபத்துடன் கூறினாள். மறுநாள், மனத்தில்
கோபம் இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,
தலைவன் போருக்குச் செல்வதற்குச் சம்மதம் அளித்து, அவள் அவனை வாழ்த்தி வழியனுப்பினாள்.
சில நாட்கள் கழித்து, தோழி மீண்டும்
தலைவியைப் பார்க்க வந்தாள். தலைவி வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்து, “கணவர் பிரிந்து செல்வதற்கு உடன்பட்டு, பிரிவால்
வரும் துன்பத்தை நீக்கிப் பிரிவைப் பொறுத்துக்கொண்டு உயிர் வாழ்பவர் பலர்[72].
உன் கணவர் போரில் வெற்றிபெற்று விரைவில் திரும்பிவருவார். நீ உன்
மனதைத் தேற்றிக்கொள்; வருந்தாதே!” என்று கூறித் தலைவிக்கு
ஆறுதல் அளிக்க முயற்சி செய்தாள்.
படர்மெலித்திரங்கல்
(பிரிவாற்றாத தலைவி, தலைவனை நினைந்துத் துன்புற்று
வாடி வருந்திக் கூறல்)
தலைவன் சென்று மேலும் சில
நாட்களாயின. தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து அவளுக்கு ஆறுதலாக ஏதாவது
சொல்லலாம் என்ற நோக்கத்தோடு தோழி வந்தாள். தலைவி தனிமையில் வருத்தத்தோடு
இருப்பதைக் கண்ட தோழி, “ஏன் இந்த வருத்தம்? போர் விரைவில் முடிந்து,
உன் கணவர் வெற்றியுடன் திரும்பிவருவார். மகிழ்ச்சியாக இரு!”
என்று கூறினாள். ”எனக்கு அவர்மீது உள்ள ஆசையை நான் மறைக்கத்தான் பார்க்கிறேன். ஆனால்,
எனக்கு அவர்மீது உள்ள காதலால் வரும் துன்பம், நீரை இறைக்கும்பொழுது ஊற்றிலிருந்து நீர் பெருகுவதுபோல் மேலும் மேலும்
பெருகுகிறது[73].
ஆனால், என்னுடைய நாணத்தால், எனக்கு அவர்மீது உள்ள ஆசையைப் பற்றி எவரிடமும் சொல்ல முடியாமல்
இருக்கிறேன். என்னுடைய உயிர் நாணத்திற்கும் காமத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டு
தவிக்கிறது[74].
காதலால் வருகின்ற ஆசையாகிய கொடிய கடலைக் கடக்க முயற்சி
செய்கிறேன்; ஆனால், கரைசேர
முடியவில்லை. அதனால், நான் இந்த நள்ளிரவில் அக்கடலில்
தனியாக இருக்கிறேன்[75].
என்னுடைய காமநோய் ஒரு கடலைப்போல் பரந்து கிடக்கிறது. ஆனால்,
அதைக் கடந்து செல்வதற்கான தோணி என்னிடம் இல்லை[76].
இந்த இராப்பொழுது இரங்குதற்குரியது. அஃது எல்லோரையும்
தூங்கவைத்துவிட்டு என்னை மட்டும் துணையாகக் கொண்டுள்ளது[77].
நான் ஏன் வருத்தமாக இருக்கிறேன் என்று நீ கேட்கிறாயே? ஏன் தெரியுமா? என் காதலர் இருக்கும்
இடத்திற்கு என் உள்ளம் விரைந்து செல்கிறது. ஆனால், என்
கண்களால் அவ்வாறு விரைந்துசென்று அவரைக் காணமுடியவில்லை. அதனால்தான், என்
கண்கள் வெள்ளம்போல் கண்ணீரைச்
சொரிந்து அதில் நீந்திக்கொண்டிருக்கின்றன[78]. எனக்கு அவரை இப்பொழுதே
காணவேண்டும்போல் இருக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்று
தேம்பித்தேம்பி அழுதுகொண்டு தலைவி தோழியிடம் கூறினாள்.
கண்
விதுப்பழிதல (பிரிந்து
சென்ற கணவரைக் காணக் கண்கள் விரைதலால் உண்டாகும் வருத்தம்)
“உன் கணவர் விரைவில் திரும்பிவருவார் என்பதில் நீ உறுதியாகவும்
மகிழ்ச்சியாகவும் இருந்தால் உன் கண்கள் அழா. நீ அழுவதற்கு நீதான் காரணம். உன்
கண்கள் அல்ல. நீ ஏன் உன் கண்களைக் குறை கூறுகிறாய்? சரி,
சரி. கண்களைத் துடைத்துக்கொள்! அழாதே!” என்று தோழி கூறினாள்.
”உனக்கு என் கண்களைப் பற்றித் தெரியாது. அவைதான் என்னுடைய துன்பத்திற்கெல்லாம்
காரணம். இந்தக் கண்கள் அவரைக் காட்டியதால்தானே எனக்கு இந்தத் தீராத துன்பம்
வந்துசேர்ந்தது. அப்படி இருக்க, இப்போது இந்தக் கண்கள்
அழுவது ஏன்[79]?
அன்றொருநாள், இந்தக் கண்கள் திடீரென்று
அவரை விரும்பிப் பார்த்து, காதலை வளர்த்து, இப்பொழுது அவரைக் காணமுடியவில்லையே என்று அழுவது சிரிக்கத்தக்கதாக
இருக்கிறது[80].
கடலினும் பெரிய காமநோயை உண்டாக்கிய எனது கண்கள் தூங்க முடியாமல்
துன்பத்தை அனுபவிக்கின்றன[81].
சிந்தித்துப் பார்த்தால், எனக்கு
இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக்கொண்டது மிகவும்
இனிமையானதுதான் என்று தோன்றுகிறது[82].
அன்று விரும்பி அவர்மீது ஆசைப்பட்டு அவரைக் கண்ட கண்கள் இன்று
துன்பத்தை அனுபவித்து அனுபவித்துத் தம்மிடம் உள்ள நீர் வற்றிப்போகட்டும்[83].”
என்று தலைவி தன் கண்களைப் பற்றித் தன் தோழியிடம் கூறினாள்.
இருத்தல்
பசப்புறுபருவரல்
(பசலையுற்றதால் வந்த வருத்தம்)
தலைவி தன் கண்களைப் பற்றி
இதுவரை கூறியதைப் பொறுமையாகக் கேட்ட தோழி,
“உன் கண்களால்தான் நீ அவரைக் கண்டாய்; காதல்
கொண்டாய்; திருமணம் செய்து கொண்டாய்; நீங்கள் இருவரும் இதுவரை மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கை நடத்தினீர்கள்.
இப்பொழுது சிறிதுகாலம் பிரிந்திருக்கப் போகிறீர்கள். நான் முன்பே கூறியதுபோல்,
இதுபோல், ஆடவர் அவ்வப்பொழுது
போருக்காகவும் பொருளுக்காகவும் சிலகாலம் பிரிந்து செல்வது இயற்கை. நீ இந்தப் பிரிவைப்
பொறுத்துக்கொள்ள வேண்டும்.” என்று அறிவுரை கூறினாள்.
”நாங்கள் மற்ற கணவன்
மனைவிபோல் இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் அளவு கடந்த காதல் உடையவர்கள்.
நான் உனக்கு ஒன்று சொல்கிறேன், கேள்! ஒரு நாள் நான் என்
கணவரைத் தழுவிக்கொண்டு படுத்திருந்தபொழுது, சிறிது ஒரு
பக்கமாகத் தள்ளிப் படுத்தேன். உடனே, பசலை நோய் என்னை
அள்ளிக்கொள்ளும் அளவிற்கு உடல் முழுதும் பரவத் தொடங்கியது[84].
போருக்காக என் கணவர் என்னைவிட்டுப் பிரிந்து, சிறிது தொலைவுதான் சென்றிருப்பார் என்றாலும், அதற்குள்ளாகவே
இங்கே என் மேனியில் பசலை படரத் தொடங்கியது[85].
இப்பொழுது, என்னுடைய நிலை உனக்குப்
புரிகிறதா?” என்று தலைவி கூறினாள். தோழி, “எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிவிட்டேன். உன் கணவர் உன்னைவிட்டுப்
பிரிந்து போருக்குச் செல்வதற்கு நீ சம்மதம் அளித்தாய். நான் மீண்டும் சொல்கிறேன்.
அவர் விரைவில் திரும்பிவருவார். இந்தப் பிரிவை எப்படிப் பொறுத்துக்கொள்வது என்று
சிந்தித்துப் பார். பொறுமையாக இரு. உன் உடலைக் கவனித்துக்கொள்.” என்று அறிவுரை
கூறித் தலைவியிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள். ”என்
கணவர் போருக்குச் செல்வதற்கு உடன்பட்ட நான் இப்பொழுது என் உடலில் பசலை பரவியதை
எவரிடம் போய்ச் சொல்வேன்[86]?”
என்று தலைவி தன்னையே நொந்துகொண்டாள்.
தனிப்படர்
மிகுதி (தலைவன் வரவுக்காகத் தலைவி காத்திருத்தல்)
சில
நட்களுக்குப் பிறகு, தலைவி எப்படி
இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக, தோழி மீண்டும் வந்தாள்.
தலைவி அமைதியாக, ஆனால் மிகுந்த சோகத்தோடு
இருப்பதைப் பார்த்து, அவள் ”ஏன் இந்தச் சோகம்? என்ன
ஆயிற்று உனக்கு?” என்று தலைவியைப் பார்த்துக் கேட்டாள். அதற்குத் தலைவி, ”அவர் என்னை விட்டுப் பிரிந்து
சென்று பல நாட்கள் ஆயின. நான் ஒன்று சொல்கிறேன், கேள். நாம் விரும்பும் காதலர் நம்மை விரும்பினால்தான் விதையில்லாத
பழத்தைப்போல் இடையறாத இன்பத்தை முழுமையாக அனுப்பவிக்க முடியும்[87].
காதலிப்பவர்க்கு அவர் யாரைக் காதலிக்கிறாரோ அவர் அளிக்கும் அன்பு,
உயிர்வாழும் மக்களுக்குத் தேவையான மழை தேவையானபொழுது பெய்வது
போல்வதாகும்[88].
அவர் என்னைவிட்டுப் பிரிந்திருப்பதால் என் வாழ்க்கையில் இன்பம்
இல்லை. அதனால் தான் இந்தச் சோகம்.” என்று சற்று விரக்தியோடு பதில் அளித்தாள்
தலைவி. “உன் சோகத்திற்குக் காரணம் எனக்குப் புரிகிறது. நான் உனக்கு ஒன்று
சொல்கிறேன், கேள். கணவன் போருக்குப்
போனால், அவன் வரும்வரை அவன் மனைவி
பொறுமையோடு காத்திருப்பதுதான் உலக
இயற்கை.” என்றாள் தோழி.
”நான்
பொறுமையோடுதான் இருக்கிறேன், ஆனால், அவரிடமிருந்து ஒரு செய்தியாவது வந்தால் அஃது
என் செவிக்கு இனிமையானதாக இருக்கும்[89]. பிரிந்து சென்ற கணவரிடமிருந்து ஒரு செய்திகூட
வராமலிருந்தும் உலகத்தில் உயிரோடு இருக்கும் பெண்கள் மிகவும் நெஞ்சழுத்தம்
உள்ளவர்கள்[90]. எனக்கு
அத்தகைய நெஞ்சுரம் இல்லையே!” என்று ஏக்கத்தோடு கூறினாள் தலைவி. தோழி, “மனதைத்
தேற்றிக்கொள். உன் கணவர் விரைவில் வந்துவிடுவார்,” என்று ஆறுதல் கூறினாள். தலைவி, “இவ்வாறு
பிரிந்திருக்கும்பொழுது, அவர் ஒரு செய்தியும் தெரிவிக்காமல் இருப்பதை நினைத்தால்,
நான் காதலிப்பதுபோல் அவர் என்னைக் காதலிக்கிறாரா என்று சந்தேகம் எழுகிறது. ஆண்
பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை.
காவடியின் பாரத்தைப்போல் இருபக்கமும் சமமாக இருந்தால்தான் வாழ்க்கை இனிதாக
இருக்கும்[91].”
என்றாள். தோழி, “உனக்கு அவரை நன்கு தெரியும், தேவையில்லாதவற்றை எல்லாம் கற்பனை
செய்துகொண்டு வருத்தப்படாதே. நான் இன்னும் சில நாட்களில் உன்னை மீண்டும்
சந்திக்கிறேன்.’ என்று சொல்லிவிட்டுத் தோழி தலைவியிடமிருந்து விடைபெற்றுச்
சென்றாள். தோழி சென்ற பிறகு, தலைவி ஆழ்ந்த சிந்தனையோடு தூங்காமல் படுத்திருந்தாள்.
அப்பொழுது, ”மனமே! நீ அடைந்த காம வேதனையைப்போல் அவர்
அடையாததால் அவர் விரைந்து வரவில்லைபோலும். அவர் வந்தபின் நீ அடையும் காம வேதனைகளை
அவரிடம் சொல்லிக்கொள்ளலாம். இப்போது, கடல்போல் உன்னுள் வளர்ந்துவிட்ட காம ஆசையை அடக்கிக் கொள்![92]”
என்று தலைவி தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.
நினைந்தவர் புலம்பல் (முன்பு
கூடிய இன்பத்தினை நினைந்து காதலர் தனிமையில் சொல்லிக் கொள்ளுதல்)
போர் நடந்துகொண்டிருந்தது. தலைவன் பாசறையில்
தனிமையில் இருந்தான். தலைவி தன் வீட்டில் தனிமையில்
இருந்தாள். தனிமையில் இருக்கும்பொழுது இருவரும் தாங்கள்
ஒன்றாக இருந்தபொழுது அனுபவித்த
இன்பத்தையும் இப்போது பிரிவினால் அனுபவிக்கும் துன்பத்தையும் நினைத்துப்
புலம்பிக்கொண்டிருந்தார்கள். தலைவன், “உண்டால்தான் கள் மகிழ்ச்சி
அளிக்கிறது. ஆனால், நினைத்தாலே
காமம் மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால், கள்ளைவிட காமம் இனிமையானது[93].
என் மனைவியைப் பிரிந்திருப்பது வருத்தமானதாகத்தான் இருக்கிறது. ஆனால், அவளை நினைத்தவுடன் பிரிவினால் வரும் துன்பம் இல்லாமல் போகின்றது.[94]
என்று நினைத்தான். தலைவனைப்போலவே
தலைவியும் காமத்தின் இனிமையைப் பற்றிய கருத்து உடையவளாக இருந்தாள்.
இவ்வாறு தலைவி காமத்தைப்
பறறிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்பொழுது,
அவளைப் பார்ப்பதற்குத் தோழி மீண்டும் வந்தாள். தோழி, “என்ன? ஏதோ ஆழ்ந்த சிந்தனையில்
இருக்கிறாய் போலிருக்கிறதே?” என்றாள். “எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்க
மறந்துவிடுவாரோ[95]?”
என்று நினைத்துக்கொண்டிருந்தேன் என்றாள் தலைவி. “நீயும் உன் கணவரும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறீர்கள். நீ அவரை நினைப்பதுபோல் அவரும் உன்னை நினைத்துக்கொண்டுதான் இருப்பார்.”
என்றாள் தோழி. ”நானும் அப்படித்தான்
நினைக்கிறேன். ஆனால், என்
நெஞ்சைவிட்டு நீங்காமல் என் கணவர் இருப்பது போல, அவர்
நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா[96]?
என்பதுதான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. தன் நெஞ்சில் என்னை வரவிடாமல் காவல் செய்துகொண்ட என் கணவர், என் நெஞ்சில் மட்டும் ஓயாமல் வருவதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ[97]?”
என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் தலைவி. ”பிரிவு துன்பமானதுதான். அந்தத் துன்பத்திலும்
நீ உன் கணவரைப் பற்றிய நினைவோடு இருந்து பிரிவினால் வந்த துன்பத்தைச் சமாளிப்பதை
நினைத்து நான் பெருமைப்படுகின்றேன்” என்று கூறித் தலைவியை
ஊக்குவித்தாள் தோழி. ”நானும் அவரும் சேர்ந்திருந்த
நாட்களை நினைவில் கொள்வதால்தான் நான் உயிரோடிருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்[98]?
என் கணவரை மறந்தால் என்னாவேனோ? மறக்கவே மாட்டேன்;
ஆனால், அவரை நினைத்தாலும் உள்ளம் சுடுகிறதே[99]!
என்று கூறித் தன் கண்களில் வரும் கண்ணீரைத் துடைத்துகொண்டாள்
தலைவி.
கனவு
நிலையுரைத்தல் (தான்கண்ட கனவுகளின்
இயல்பைச் சொல்லுதல்)
தோழி, “கவலப்படாதே. நீ உன் கணவரை ஒருநாளும் மறக்க
மாட்டாய். அவரும் உன்னை மறக்க மாட்டார். நீ இரவில் தூங்குகிறாயா அல்லது இப்படிக் கவலைப்பட்டுக் கண்கலங்கி
இரவெல்லாம் தூங்காமல் இருக்கிறாயா?” என்று அக்கறையோடு கேட்டாள். ”நீண்ட நேரம் தூங்காமல்
இருந்து, பின்னர் தூங்குகிறேன். நனவில்
வந்து அன்பு காட்டாத என் கணவரைக் கனவிலாவது காண்பதால்தான் என்னுயிர் இன்னும்
நிலைத்திருக்கிறது[100]. நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டுவந்து
காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது[101]. காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும்பொழுதும் இன்பமாக இருக்கிறது[102]. நான்
தூங்கும்பொழுது, என் கனவில் வந்து, அவர் என் தோள்மீது படுத்திருப்பதுபோல் காண்கிறேன். ஆனால், விழித்தவுடன் அவர் என் நெஞ்சுக்குள் விரைந்து புகுந்துகொள்கிறார்[103].
நான் அவரைக் கனவில் கண்டால், அஃது
அவரிடமிருந்து எனக்குத் தூது வந்ததுபோல் இருக்கிறது. அப்படிப்பட்ட கனவிற்கு நான்
எப்படி விருந்தளித்துப் பாராட்டப் போகிறேன்[104].?”
என்று தன் மனத்தில் தோன்றியவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் தலைவி
தோழியிடம் சொல்லி முடித்தாள்.
பொழுதுகண்டு இரங்கல் (மாலைப்பொழுதின் வரவு கண்டு தலைவி
வருந்துதல்)
சில நட்களுக்குப் பிறகு, தலைவி எப்படி இருக்கிறாள் என்று
பார்ப்பதற்காக, ஒரு நாள் மாலைப்பொழுதில் தோழி மீண்டும்
வந்தாள். தலைவி வருத்தமாக இருப்பதைப் பார்த்து, அவள், “என்ன மீண்டும் சோகமா?” என்று
கேட்டாள். அதற்குத் தலைவி, “ஆம். என் கணவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றதிலிருந்தே சோகத்தோடுதான் நான்
போராடிக்கொண்டிருக்கிறேன். இந்த மாலைபொழுது என்னை மிகவும்
வருத்துகிறது. என்
கணவர் என்னைவிட்டுப் பிரியாமல் இருந்தபொழுது, மாலைப்பொழுது
துன்பம் செய்ததை நான் அறிந்ததில்லை[105]. என் கணவர்மீது நான்கொண்ட காதலால் வந்த இந்த நோய் காலையில் அரும்பாகி, பகல்
முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு
நோயாக உள்ளது[106]. முன்பு
இனிதாய் ஒலித்த இடையனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப்
பொழுதிற்குத் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும்
ஆயுதமுமாகிவிட்டது[107]. இந்த மாலைக்காலம் காதலரோடு
கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக
இருக்கிறது[108]. என்னைப் பிரிந்து சென்ற காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து
போகின்றது.[109]”
என்று மாலைப்பொழுதில் அவள் படும் துன்பத்தைப் பற்றித் தோழியிடம்
விரிவாகக் கூறினாள் தலைவி.
இரங்கல்
உறுப்புநலன் அழிதல் (தலைவியின் உடல் உறுப்புகள் அழகு இழத்தல்)
போருக்குப் போன தலைவன் பலநாட்களுக்குப் பின்னரும்
திரும்பி வரவில்லை. இதுவரை தன் கணவரின் பிரிவை ஓரளவுக்குப் பொறுத்துக்கொண்டிருந்த
தலைவி, கொஞ்சம்
கொஞ்சமாகத் தன் பொறுமை இழந்து மிகுந்த வருத்தத்தோடு அழுதுகொண்டிருந்தாள். தலைவி எப்படி இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ளத் தோழி ஆவலாக
இருந்தாள். ஆகவே, அவள் தலைவியைப் பார்க்க வந்தாள். தலைவி
அழகிழந்து, உடல் மெலிந்து காணப்பட்டாள். ”பிரிவுத்
துன்பத்தை உனக்குத் தந்துவிட்டு, நெடுந்தூரம் சென்ற
தலைவரை நினைத்து நீ அழுவதால், உன்னுடைய கண்கள் அழகிழந்து
காணப்படுகின்றன. முன்பெல்லாம் மலர்கள் உன் கண்களைக் கண்டு, அவற்றைப்போல் தாம் இல்லையே என்று நாணின. இப்பொழுது உன் கண்கள்
மலர்களைப்போல் தாம் இல்லையே என்று நாணுகின்றன[110].
பசலை நிறம் அடைந்து, கண்ணீர் வடிக்கும்
உன் கண்கள், உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிந்து
சென்றிருப்பதைப் பிறர்க்குத் தெரியப்படுத்துகின்றன[111].
உன் கணவர் உன்னைப் பிரிந்திருப்பதால், முன்பு
அழகாக இருந்த உன் தோள்கள் இப்பொழுது மெலிந்து, அங்கிருந்த
வளையல்கள் கழலுகின்றன.[112]
என்று தலைவியின் நிலையைக் கண்ட தோழி வருத்தத்தோடு கூறினாள்.
தோழி கூறியதைக் கேட்ட தலைவி, “நீ
கூறுவது உண்மைதான். என்னுடைய கண்கள் அழகிழந்து, தோள்கள் மெலிந்து நான் இருப்பதைப் பார்த்துப் பிறர் என் கணவரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்[113].” என்றாள் தலைவி.
பிரிவால்
தலைவி வருந்துவதைப்போல் தலைவனும் வருந்தினான். முன்பு ஒரு நாள், அவன் அவளை இறுகத் தழுவியிருந்தான். இறுகத்
தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் மனைவியின் நெற்றி பசலைநிறம்
அடைந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது[114]. இறுகத் தழுவியிருந்த கைகள் தளர்ந்தபொழுது, இடையே
குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதி மனைவியின் நெற்றி
மட்டுமல்லாமல் கண்களும் பசலை நிறம் கொண்டதையும் நினைத்துப் பார்த்தான்[115]. இப்பொழுது இந்த நீண்ட பிரிவைப் பொறுந்துக்கொள்ள முடியாமல் தன் மனைவி
எப்படி வருந்துகிறாளோ என்று எண்ணிப் பாத்தான். இந்தப்
போர் முடிந்து, விரைவில் சென்று, தன் மனைவியை மீண்டும் இறுகத் தழுவ வேண்டும் என்று விரும்பினான்.
நெஞ்சொடு கிளத்தல் (தலைவி தன்
நெஞ்சோடு பேசுதல்)
தலைவி தன் நிலையை நன்கு
உணர்ந்தாள். அவள் தன் நெஞ்சை நோக்கி, பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு
நம்மிடம் இரக்கமில்லாத போது, ”நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்துகொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்[116]? என்
தலைவர் என்மீது காதல் இல்லாதவராக இருக்கும்போது, நீ அவரை எண்ணியெண்ணி வருந்துவது பேதைமையாகும்[117].
நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதை
விட்டுவிடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல்
தடுக்கும் நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் ஒரே
நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது[118]. நெஞ்சே!
எனக்குத் துன்பம் தரும் இந்தக் காமநோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றை,
நீ ஆலோசித்துச் சொல்ல மாட்டாயோ[119]? நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை
விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து
அவர்மீது கொண்ட காதலைக் கைவிட முடியவில்லையே[120]!
நான் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன். நீ
அவரைக் காணச் செல்லும்போது, என் கண்களையும்
அழைத்துக்கொண்டு செல். என் கண்கள் அவரைக் காண விரும்பி என்னைப் பிடுங்கித் தின்னுகின்றன[121].”
என்று முன்னுக்குப்பின் முரணாக தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.
நிறையழிதல் (உள்ளத்தை அடக்கி நிறுத்தும் தன்மை கெடுதல்)
தம் மனத்தில் உள்ள காதல்
எண்ணங்களை மகளிர் வெளிப்படச் சொல்லமாட்டார்கள். அது
பெண்மையின் இயற்கை. ஆனால் தலைவனைக் காணவேண்டும், அவனுடன் சேர்ந்திருக்கவேண்டும் என்ற வேட்கை மிகுதியால், தன் காதல் விருப்பங்களை அடக்கமுடியாமல் வாய்விட்டுத் தலைவி தோழியிடம்
கூறத் தொடங்கினாள். ”தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மனவுறுதியைக் காதல் நோய்
கொண்டவரால் பெற முடியாது[122]. காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில், அஃது என் நெஞ்சில் நள்ளிரவிலும்
ஆதிக்கம் செலுத்தி என்னை அலைக்கழிக்கிறது[123]. எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி
வெளிப்படுகிறதல்லவா? அதைப் போன்றதுதான் காதல்
உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக்
கொடுத்துவிடும்[124]. காதல் வேட்கை இருக்கிறதே, அஃது ஒரு கோடரியாக
மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம்
என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது[125]. இன்றுவரை நான் என்னை மன
அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என்
காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய
வெளிப்பட்டுவிட்டது[126].” என்று
தன் கணவரின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி,
தான் காதலால் படும் துன்பத்தை மறைக்க முடியாமல், நாணத்தைவிட்டுத் தன் தோழியிடம் தன் மனத்தில் உள்ளதை உள்ளவாறு கூறினாள்.
அவர்வயின் விதும்பல் (தலைவி தலைவனைக் காண மனதால் விரைதல்)
தலைவியைப்
பார்க்கத் தோழி மீண்டும் வந்தாள். “நெடுந்தொலைவு
சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாகத் தோன்றும் என்பார்கள்[127].
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்ற
நாட்களைச் சுவரிற் குறித்த குறிகளைத் தொட்டுத்தொட்டு எண்ணுவதால், என் விரல்கள் தேய்ந்து
போயின. அது மட்டுமல்லாமல், அவர் வரும் வழியைப் பார்த்துப்
பார்த்து என் கண்களும் ஒளியிழந்து பூத்துப் போயின[128]. அவர் வருவதற்குமுன் இந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் என் மனமுடைந்துவிட்டால், பின்னர் அவரை அடைவதால் என்ன பயன்? அதற்கும்
மேலாக, அவரோடு கலந்தாலும்தான் என்ன பயன்? ஒரு பயனுமில்லை.[129] நம்
வேந்தன் இந்தப் போரில் விரைவில் வெற்றிபெற வேண்டும்; அவன் வெற்றிபெற்றால், நான் அவரோடு கூடி விருந்தை அனுபவிப்பேன்[130].
அஃது எப்பொழுது நடைபெறும் என்று தெரியவில்லையே!” என்று
தலைவி தோழியிடம் அழுதுகொண்டே கூறினாள்.
தலைவியும்
தோழியும் பேசிக்கொண்டிருந்தபொழுது, ஒருவன் பறை அடித்து, மன்னன் போரில் வெற்றி
பெற்றான் என்ற செய்தியை முழக்கம் செய்தான். அந்த நல்ல செய்தியைக்
கேள்விப்பட்டவுடன், தலைவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
”இப்பொழுது
அவர் வரப்போகிறார். என்னைவிட்டுப் பிரிந்த என் கணவர் மிகுந்த ஆசையோடு வருவதை எண்ணி
என் மனம் (குரங்குபோல்) மரத்தின் கிளைக்குக் கிளை மேலும் மேலும் ஏறி அவர் வருவதைப்
பார்க்கத் துடிக்கிறது[131].
என் கணவரை நான் என் கண்ணாரக் காணப்போகிறேன்; அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோளில் உள்ள பசலை உடனே நீங்கும்[132].
என் கண்போன்ற கணவர் நீண்ட நாட்கள் கழித்து வருவதால், அவரோடு ஊடுவேனோ, அல்லது அவரைத்
தழுவிக்கொள்வேனோ அல்லது அவரைக் கூடுவேனோ? எதைச் செய்வேன்
என்று தெரியவில்லை[133].”
என்று தோழியிடம் தலைவி பெருமகிழ்ச்சியோடு கூறினாள்.
குறிப்பறிவுறுத்தல் (உள்ளத்தில் உள்ளதை
வாயாமல் சொல்லாமல்க் குறிப்பால் வெளிப்படுத்துதல்)
தலைவன்
வீடு வந்துசேர்ந்தான். அவனைக் கண்டதும் தலைவி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அதே
சமயம், அவன் மீண்டும் தன்னை விட்டுப் பிரிந்து
சென்றுவிடுவானோ என்ற அச்சம் ஒரு பக்கம் அவளை வருத்திக்கொண்டிருந்தது. அவள் தன்
உள்ளத்தில் இருந்த அச்சத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் முகத்தில் மகிழ்ச்சியோடு தன்
பணிகளில் கவனம் செலுத்தினாள். ஆனால், தன் மனைவி அவள்
உள்ளத்தில் இருப்பதை மறைத்தாலும் அதையும் மீறி, அவளுடைய
மைதீட்டிய கண்கள் சொல்ல நினைக்கும் செய்தி ஒன்று இருப்பதை அவள் கணவன் உணர்ந்தான்[134].
”கோக்கப்பட்ட மணிகளுக்குள் இருந்து விளங்கித் தோன்றும் நூல்போல
என் மனைவியின் அழகுக்குள்ளிருந்து காணப்படும் குறிப்பு ஒன்று உண்டு[135]”
என்றும், ”அரும்பும் மொட்டினுள் அடங்கியிருக்கின்ற மணத்தைப்போல், என் மனைவியின் புன்முறுவலின் உள்ளேயும் அடங்கியிருக்கும் குறிப்பு
ஒன்று உண்டு[136]”
என்றும் தான் உணர்வதாக மனைவியின் தோழியிடம் அவன் கூறினான்.
அதற்குத் தோழி, “இப்பொழுது அவள் என்ன செய்தாள் பார்த்தீரா?
அவள் தன் வளையல்களைப் பார்த்தாள்; மெலிந்திருக்கும்
தோள்களைப் பார்த்தாள்; இனியும் பிரிந்து செல்வதானால்,
என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்ற நோக்கத்தோடு, தன் கால்களைப் பார்த்தாள்[137].
நீர் அவளை விட்டுப் பிரிவதை அவள் விரும்பவில்லை என்பதைத்தான்
அவள் குறிப்பால் உணர்த்துகிறாள்.” என்று தோழி விளக்கினாள்.
ஊடல்
புணர்ச்சி விதும்பல் (புணர்ச்சியை விரும்புதல்)
தலைவன் வந்து ஓரிரு நாட்களாயின. ஒரு
நாள் தோழியும் தலைவியும் தனியாக இருந்தார்கள். அப்பொழுது தோழி,
”உன் கணவர் வந்தவுடன் அவரோடு ஊடப் போகிறேன் என்று சொன்னாயே! என்ன
ஆயிற்று? அவரைக் கண்டவுடன் ஊடலை மறந்து உன் மனம் கூடலில்
சென்றது போலிருக்கிறதே!”, என்று கூறித் தலைவியை சற்று
உரிமையோடு கிண்டல் செய்தாள். தலைவி வெட்கித் தலைகுனிந்து, ”என்ன செய்வது? பனையளவுக்குக் காமம் இருந்தால், தினையளவுக்குக்கூட ஊடல் கூடாது என்று கேள்விப்பட்டதில்லையா[138]?
என் கதையும் அதுதான். நான் என் கணவருடன் ஊடவேண்டும் என்று
நினைத்துச் சென்றேன். ஆனால், என் நெஞ்சம் அதை மறந்து
கூடுவதற்குச் சென்றது[139].
கண்ணிற்கு மைதீட்டும்பொழுது மைதீட்டும் கோலைக் காணமுடியாத கண்போல,
என் கணவரைக் கண்டவுடன் அவருடைய குற்றங்களை என்னால் காண
முடியவில்லை[140]. நான் என் கணவரைக்
காணும்பொழுது, அவருடைய தவறுகளைக் காண்பதில்லை. ஆனால்,
அவரைக் காணாதபொழுது (என்னைவிட்டுப் பிரிந்திருக்கும்பொழுது)
அவருடைய தவறுகளைத் தவிர பிறவற்றைக் காண்பதில்லை[141].
வெள்ளப் பெருக்கெடுத்தோடும் ஆற்றில் குதித்தால் உயிருக்கு ஆபத்து
என்று தெரிந்தும் குதிப்பதைப்போல், ஊடல் கூடலில் முடியும்
என்று தெரிந்திருந்தும் ஊடுவதால் என்ன பயன்[142]?”
என்று தன்னுடைய ஊடல் செய்ய இயலாத நிலையைப் பற்றித் தோழியிடம்
தலைவி கூறினாள். தோழி, “காதல் வாழ்க்கையில் ஊடலும், ஊடல் கூடலில் முடிவதும் இயற்கை. உன் கணவர்
நீண்டநாட்களாக்குப் பிறகு இப்பொழுது வந்திருக்கிறார். அவரோடு
மகிழ்ச்சியாக இரு. நான் பிறகு வந்து உன்னைச்
சந்திக்கிறேன்.” என்று கூறித் தலைவியிடம் விடைபெற்றுச்
சென்றாள்.
தோழி
சென்ற பிறகு, தலைவி சில நேரம் தனிமையில் இருந்தாள். தன்
கணவனைப் பிரிந்திருந்தபொழுது தான் பட்ட துன்பங்கள் அவள் நினைவுக்கு வந்தன. பிரிந்து சென்றதனால் அவன் அவளுக்குப் பல தீமைகளைச் செய்ததாக நினைத்தாள்.
ஆனால், இப்பொழுது, அவனைக் கட்டித் தழுவ வேண்டும்
என்ற விருப்பம் அவள் மனதில் எழுந்தது. ”என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு
தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை
உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவதுபோல்
என்னை மயங்கச் செய்கிறது உன் மார்பு[143].”
என்று தனக்குத்தானே தலைவி கூறிக்கொண்டாள். தன் மனைவியின் மனதை நன்கு அறிந்தவன் அவள் கணவன். அவள் இப்பொழுது தன்னோடு கூடுவதை மிகவும் விழைகிறாள் என்பதை உணர்ந்தான்.
அப்போழுது, “காமம் மலரைவிட மென்மையானது; பக்குவம் அறிந்து அதனைத் துய்ப்பவர் சிலரே[144].” என்று அவன் நினைத்தான்.
நெஞ்சொடுபுலத்தல்
(தலைவி தன் நெஞ்சோடு
கோபித்துக்கொள்கிறாள்)
பிரிந்து
சென்ற கணவர் வந்தததால் தலைவி பெருமகிழ்ச்சி அடைந்தாலும் பிரிவினால் வந்த
துன்பத்தைத் தலைவியால் மறக்க முடியவில்லை. இப்பொழுது கணவரோடு ஊடுவதா
அல்லது கூடுவதா என்ற எண்ணங்களோடு அவள் போராடிக்கொண்டிருந்த்தாள். தான் ஊட வேண்டும் என்று நினைக்கும்பொழுது, தன்
நெஞ்சம் கணவரோடு கூடவிழைவதாகக் கற்பனை செய்துகொண்டு, தன்
நெஞ்சோடு கோபித்துக்கொண்டாள். “நெஞ்சே! அவரைப் பிரிந்திருந்தபொழுது அவருடைய தவறுகளை நினைத்து, நீ என்னைத் தின்பது போல்
துன்பம் செய்தாய்[145]. அவர் பிரிந்திருந்தபொழுது அவரைக் காணவில்லையே என்று நீ அஞ்சினாய், அவர்
வந்த பிறகு, பிரிந்து செல்வாரே என்று நினைத்து நீ
அஞ்சுகிறாய். துன்பம் உனக்கு ஒரு தொடர்கதையாக இருக்கிறதே![146] நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள
எண்ணவில்லை. அதனால், இனி இது
போன்றவற்றை உன்னோடு நான் ஆலோசனை
செய்யமாட்டேன்[147]. நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனத் தெரிந்த பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என்று நம்பி அவரிடம் செல்கின்றாயே[148]. துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நீ துணையாக இல்லாவிட்டால் பிறகு
யார் எனக்குத் துணையாக இருப்பார்?[149]” என்று தலைவி தன் நெஞ்சிடம் கேட்டாள்.
புலவி (ஊடல்)
இவ்வாறு
தலைவி தன் நெஞ்சோடு போராடிக்கொண்டிருந்தபொழுது, தோழி, “உன்னைப் பார்த்தால் ஆழ்ந்த சிந்தனையில்
இருப்பதுபோல் தோன்றுகிறததே! இப்பொழுது
உன் கணவர் வந்துவிட்டார். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய
நேரத்தில் ஏன் இவ்வாறு தனிமையில் இருந்து எதையோ நினைத்துக்கொண்டு கவலையோடு
இருக்கிறாய்?” என்று தலைவியைக் கேட்டாள். தலைவி, “கவலை ஒன்றுமில்லை. நான் ஊட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால்,
என் நெஞ்சம் கூடுவதில்தான் ஆர்வமாக இருக்கிறது, அதனால், என் நெஞ்சோடு உரையாடிக்கொண்டிருந்தேன்.”
என்றாள். தோழி, “அது சரி. நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்.
கேள்!” என்றாள். தலைவி “ சரி, சொல்.
கேட்கிறேன்.“ என்றாள். தோழி, “இன்று அவர் உன்னைத் தழுவ வரும்பொழுது,
நீ அவரைத் தழுவாமல் இருந்து ஊடல் செய். அவர் படும் துன்பத்தைச்
சிறிது காண்போம்[150].
ஆனால், ஊடலை அதிக நேரம் நீடிக்காதே.
கலவிக்குமுன் ஏற்படக்கூடிய ஊடல், உணவில் உப்பு அளவாக
இருப்பதைப்போல் அளவாக இருக்க வேண்டும். ஊடல் நீடித்தால் அஃது உணவில் உப்பு
மிகுதியாக இருப்பதைப் போன்றது[151].”
என்று தோழி தலைவிக்கு அறிவுரை கூறினாள்.
அன்று
மாலை தலைவன் தலைவியைப் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் வந்தான்.
அவனைக் கண்டவுடன், தலைவி தன்னைத்
தழுவுவாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவளோ அவனைத் தழுவாமல் ஊடலை மேற்கொண்டாள். தலைவன்
தன்னைத் தழுவி இனிய சொற்களைப் பேசித் தன் ஊடலைத் தணிப்பான் என்று தலைவி
எதிர்பார்த்தாள். அவள் ஊடுகிறாள் என்பதை உணர்ந்த தலைவன்,
ஊடலைச் சற்று நீடிக்க விரும்பினான். தலைவன்
தன் ஊடலைத் தணிக்க எந்த முயற்சியும் எடுக்காததால் ஏமாற்றம் அடைந்த தலைவி, “அவர் என் ஊடலை நீக்கித் தழுவாமல் இருப்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்தும் என்னை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி
வருத்துவதுபோல் இருக்கிறது.[152] ஊடல் புரியும் என்னிடம் அவர் அன்பு செலுத்தாமல் விலகியே இருப்பது,
ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது
போன்றதாகும்[153]. என் ஊடலைத் தணிக்காமல், என்னை வாடவிட்டு
வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன்
அடங்காத ஆசையே காரணம்[154].” என்று நினைத்தாள்.
புலவி
நுணுக்கம் (ஊடலின்
நுணுக்கங்கள்)
தலைவன் தலைவியைத் தழுவுவதற்கு அவள் அருகில் வந்தான். ”பல பெண்கள் விரும்பிப்
பார்த்த உங்கள் மார்பை நான் தழுவமாட்டேன்[155]”
என்று கூறிச் சற்று விலகி நின்றாள். கிளையில் மலர்ந்த பூக்களை
அவன் அணிந்திருப்பதைப் பார்த்து, “வேறு எவளோ
ஒருத்திக்குக் காட்டுவதற்காகத்தான்
இதுபோன்ற பூக்களை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்” என்று கூறிச் சினம் கொண்டாள்[156].
தானும் தன் மனைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிப்பதை எண்ணி
மகிழ்ந்து, கணவன் மனைவி ஆகிய இணையர்கள் பலர்
இருந்தாலும், அவர்கள் யாவரினும் தாம் இருவரும் மிக்க
காதலுடையவர்கள் என்ற கருத்தில், “யாரினும் காதலம்” என்று
தலைவன் சொன்னவுடன், தன் கணவனுக்குப் பல காதலியர்
இருப்பதாகவும், அவர்கள் அனைவருள்ளும் ”உன்னையே
மிகுதியாகக் காதலிக்கிறேன்” என்று அவன் கூறியதாகவும் எடுத்துக்கொண்டு, “யாரைக் காட்டிலும்? யாரைக் காட்டிலும்?”
என்று தலைவி ஊடத்தொடங்கிவிட்டாள்[157].
தலைவன், “இப்பிறவியில் நாம் பிரிய
மாட்டோம்” என்று சொன்னவுடன், ”மறுபிறவியில் நாம்
பிரிவோம்” என்று அவன் சொன்னதாகக்கொண்டு அவள் கண்ணீர்விட்டு அழத்தொடங்கினாள்[158].
உன்னைவிட்டுப் பிரிந்திருக்கும்பொழுது, “உன்னையே நினைத்துகொண்டிருந்தேன்.” என்று தலைவன் சொன்னவுடன், “மறந்தால்தானே நினைக்க முடியும்; ஏன் என்னை
மறந்தீர்கள்[159]?,”
என்று தலைவனைத் தழுவாமல் ஊடலைத் தொடர்ந்தாள்.
தலைவனுக்குத்
தும்மல் வந்தது. வழக்கம்போல் தலைவி அவனை ”நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினாள்.
ஆனால், உடனே, “யாரோ
உங்களை நினைத்ததால்தான் உங்களுக்குத் தும்மல் வந்தது. யார் நினைத்ததால்
தும்மினீர்கள்[160]”
என்று கேட்டுத் தலைவி அழுதாள். தலைவனுக்கு மீண்டும் ஒருமுறை
தும்மல் வந்தது. தும்மினால் தலைவி அழுகிறாளே என்று நினைத்து, அவன் தும்மலை அடக்க முயற்சி செய்தான். அதைப் பார்த்த தலைவி, “வேறுயாரோ உங்களை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்கின்றீர்கள்[161].”
என்று சொல்லி மீண்டும் அழுதாள். இவ்வாறு, எதைச் செய்தாலும் தொடர்ந்து ஊடுகிறாளே என்று எண்ணி, இனிய சொற்களைப் பேசி, தலைவியின் ஊடலைத் தலைவன்
தணிக்க முயற்சி செய்தான். அப்பொழுது, தலைவி, “மற்ற பெண்கள் உங்களோடு ஊடும்பொழுது இப்படித்தான் இனிய சொற்களைப் பேசி
ஊடலைத் தீர்ப்பீர்களா[162]?”
என்று சினந்து ஊடலைத் தொடர்ந்தாள். தலைவனுக்கு என்ன செய்வதென்று
தெரியவில்லை. தன்னுடைய பேச்சும் செயலும் தலைவிக்குக் கோபத்தை உண்டாக்குவதால்,
அவள் அழகை நினைத்துத் தலைவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது, “என் அழகை யாரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்[163]?”
என்று கேட்டு மீண்டும் கோபமடைந்தாள்.
இவ்வாறு
ஊடல் சற்று நேரம் நீடித்தது. உணவில் உப்பைப்போல் ஊடல் அளவாக இருக்க வேண்டும் என்று
தோழி கூறியது தலைவியின் நினைவிற்கு வந்தது. ஊடலைத் தொடரலாமா வேண்டாமா என்று
சிந்தித்துக்கொண்டிருந்தாள். அதே சமயம்,
அவளிடம் பணிவாகவும் அன்பாகவும் தலைவன் பேச முயற்சி செய்தான்.
“நாம் தவறே செய்யாத நிலையிலும், நாம்
விரும்பும் காதலியின் மெல்லிய தோள்களைத் தழுவாமல் பிரிந்திருப்பதிலும் இன்பம்
தரக்கூடியது ஒன்று உண்டு[164].”
என்று அந்த ஊடலுக்குப் பின் வரப்போகும் கூடலால் வரும் இன்பத்தை
நினைத்து அவன் மகிழ்ந்தான்.
ஊடலுவகை (ஊடலால்
அடைந்த மகிழ்ச்சி)
எந்தத்
தவறும் செய்யாத தன் கணவரோடு ஊடுவதைப் பற்றிய குற்ற உணர்வு தலைவியின் மனத்தில்
இருந்தது. அவரிடம் தவறு ஒன்றும் இல்லையென்றாலும், தன் கணவரோடு ஊடும்பொழுது, அந்த ஊடல் தன்
கணவரைத் தன்மீது மிகுதியாக அன்பு காட்டத்
தூண்டுகிறது[165] என்று நினைத்து அவள் ஊடலைத் தொடர்ந்தாள். நிலத்தோடு நீர் பொருந்திக்
கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலகம்
இருக்கின்றதோ[166]? என்று அவளுக்குத் தோன்றியது. அவள் ஊடலைத்
தணிப்பதற்காக, அவள் கணவன் அவளோடு இனிய சொற்களைப் பேசி,
அவளை இறுகத் தழுவினான். இறுகத் தழுவி இணை
பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைந்தது. ஊடலைத்
தொடரவேண்டும் என்ற தன் மனவுறுதியைக் குலைக்கும் படைக்கலனாக அந்த ஊடல் இருப்பதாக
அவள் நினைத்தாள்[167].
தான் எந்தத் தவறும் செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை
கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம்
இருக்கிறது என்று தலைவன் நினைத்தான்[168]. ஊடலின்பொழுது, தன் மனைவியிடம் பணிந்து நடந்து அவளை மகிழ்விப்பதில் தலைவன்
மகிழ்ச்சி அடைந்தான். அதனால், இராக்காலம்
நீடிக்க வேண்டும் என்று தலைவன் விரும்பினான்[169]. ஊடல் முடிந்த பின்னர் தலைவனும்
தலைவியும் கூடி மகிழ்ந்தார்கள். ஊடலையும் அதற்குப்பின் கூடி இன்பம் அனுபவத்தையும் எண்ணிப்பர்த்த தலைவன்
“காமத்திற்கு இன்பம் தருவது ஊடல், ஊடலுக்கு
இன்பம் தருவது கூடல்[170].” என்று
நினைத்து மகிழ்ந்தான்.
காமத்துப்பாலின்
சிறப்புகள்
அறத்துப்பாலில் திருவள்ளுவரை
ஓர் அறவோராகக் காண்கிறோம்; பொருட்பாலில் அவரை ஓர் அறிஞராகக் காண்கிறோம். காமத்துப்பாலில்
அவரை ஓர் உளவியல் அறிஞராகவும், நாடக ஆசிரியரகவும்,
தலைசிறந்த கவிஞராகவும் காண்கிறோம்.
காமத்துப்பாலில் திருவள்ளுவர்
காதலர்களின் மனநிலையை ஆண் பெண் ஆகிய இருவர் கண்ணோட்டத்திலிருந்தும் சிந்தித்துப்
பார்த்து எழுதியிருப்பது காமத்துப்பாலின் தனிச்சிறப்பு. காமத்துப்பாலில்
காதலர்களின் காதல் அன்பின் அடிப்படையில் களவொழுக்கத்தில் தொடங்கிக்
கற்பொழுக்கத்தில் தொடர்ந்த கருத்தொருமித்த காதல்.
சங்க இலக்கியத்தில் உள்ள
அகத்திணையைச் சார்ந்த நூல்களில் உள்ள பல பாடல்களில் தலைவியின் ஊடலுக்குக் காரணம்
தலைவனின் பரத்தையர் தொடர்பு.
காமத்துப்பாலில் தலைவியின் ஊடலுக்குக் காரணம் தலைவனின் பரத்தையர்
தொடர்பு அன்று. தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றது
மட்டுமேதான் அவளுடைய ஊடலுக்குக் காரணம்.
திருவள்ளுவர் காமத்துப்பாலில்
காதலைப்பற்றி இத்துணைச் சிறப்பாகவும் நுணுக்கமாகவும் எழுதியிருப்பதைப்போல் வேறு
எவரும் எந்த மொழியிலும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. சிலர் திருக்குறளில்
உள்ள காமத்துப்பால் வாத்சாயனார் எழுதிய காமசூத்ரா என்ற நூலைத் தழுவி
எழுதப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆணும் பெண்ணும்
பல கோணங்களில் உடலுறவு கொள்வதற்கும், ஒருவன் எப்படிப்
பிறன்மனையாளைக் கவரலாம் என்பதற்கும் வழிகாட்டும் நூலாக காமசூத்ரா அமைந்துள்ளது.
“மலரினும் மெல்லிது காமம்” என்று கூறி,
அன்பின் வழிவந்த ஐந்திணையின் அடிப்படையில் அமைந்த
களவொழுக்கத்தையும் கற்பொழுக்கத்தையும் போற்றுவது திருக்குறள். திரைப்படங்களைத் தணிக்கை செய்பவர்கள், திரைப்படத்தில்
ஆபாசமான காட்சிகள் இருந்தால் அந்தப் படத்தை ”வயது வந்தோர்
மட்டுமே பார்க்கலாம்” என்று சான்றிதழ் அளிப்பார்கள்.
ஆபாசாமான காட்சிகள் இல்லையென்றால், ”அனைவரும்
பார்க்கலாம்” என்று சான்றிதழ் வழங்குவார்கள். காமசூத்ராவையும் திருக்குறளையும் திரைப்படங்களாகக் கருதினால், காமசூத்ரா பெறும் சான்றிதழ் “வயது வந்தோர்
மட்டுமே பார்க்கலாம்” என்றும், திருக்குறளுக்குக்
கிடைக்கும் சான்றிதழ், “அனைவரும் பார்க்கலாம்” என்றும் இருக்கும் என்பதில் சற்றேனும் ஐயமில்லை. ஆகவே, திருக்குறளில் உள்ள காமத்துப்பாலுக்கும் வாத்சாயனாரின் காமசூத்ராவுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லை. காமத்துப்பால் காமசூத்ராவைத் தழுவி எழுதப்பட்டது என்பது ஒப்புயர்வற்ற
திருக்குறளை வஞ்சகத்தால் சிறுமைப்படுத்த முயற்சிப்பவர்களின் சூழ்ச்சி.
[1]. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல்
மாலும்என் நெஞ்சு. (குறள் – 1081)
[2]. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண்
டன்ன துடைத்து. (குறள் – 1082)
[3]. பண்டறியேன் கூற்றென் பதனை
இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. (குறள் – 1083)
[4]. கண்டார்
உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். (குறள் – 1084)
[5]. கூற்றமோ கண்ணோ
பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. (குறள் – 1085)
[6]. கொடும்புருவம்
கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். (குறள் – 1086)
[7]. கடாஅக்
களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். (குறள் – 1087)
[8]. ஒண்ணுதற் கோஒ
உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு. (குறள் – 1088)
[9]. பிணையேர்
மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து. (குறள் – 1089)
[10]. உண்டார்கண்
அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. (குறள் – 1090)
[11]. இருநோக்கு
இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (குறள்
– 1091)
[12]. கண்களவு கொள்ளும்
சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம்
அன்று பெரிது. (குறள் – 1092)
[13]. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள்
அட்டிய நீர். (குறள் – 1093)
[14]. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்
நோக்காக்கால்
தான்நோக்கி
மெல்ல நகும். (குறள் – 1094)
[15]. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள்
போல நகும். (குறள் – 1095)
[16]. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை
உணரப் படும். (குறள் – 1096)
[17]. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல்
நோக்கும்
உறாஅர்போன்று
உற்றார் குறிப்பு. (குறள் – 1097)
[18]. அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள்
பைய நகும். (குறள் – 1098)
[19]. ஏதிலார் போலப்
பொதுநோக்கு நோக்குதல்
காதலர் கண்ணே உள. (குறள்
– 1099)
[20]. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன
பயனும் இல. (குறள் – 1100)
[21]. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும்
ஒண்தொடி
கண்ணே உள. (குறள் – 1101)
[22]. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத்
தானே மருந்து. (குறள் – 1102)
[23]. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக்
கண்ணான் உலகு. (குறள் – 1103)
[24]. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால்
தண்ணென்னும்
தீயாண்டுப்
பெற்றாள் இவள்? (குறள் – 1104)
[25]. வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார்
கதுப்பினாள் தோள். (குறள் – 1105)
[26]. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால்
பேதைக்கு
அமிழ்தின்
இயன்றன தோள். (குறள் – 1106)
[27]. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா
அரிவை முயக்கு. (குறள் – 1107)
[28]. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப்
படாஅ முயக்கு. (குறள் – 1108)
[29]. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார்
பெற்ற பயன். (குறள் – 1109)
[30]. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும்
சேயிழை மாட்டு. (குறள் – 1110)
[31]. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள்
யாம்வீழ் பவள். (குறள் – 1111)
[32]. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்
நுசுப்பிற்கு
நல்ல
படாஅ பறை. (குறள் – 1115)
[33]. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு
நெருஞ்சிப் பழம். (குறள் – 1120)
[34]. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும்
பூவொக்கும் என்று. (குறள் – 1112)
[35]. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை
கண்ணொவ்வேம் என்று. (குறள் – 1114)
[36]. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண்
வேய்த்தோ ளவட்கு. (குறள் – 1113)
[37]. மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின்
கலங்கிய மீன். (குறள் – 1116)
[38]. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ
மாதர் முகத்து. (குறள் – 1117)
[39]. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை
வாழி மதி. (குறள் – 1118)
[40]. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத்
தோன்றல் மதி. (குறள் – 1119)
[41]. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு
ஊறிய நீர். (குறள் – 1121)
[42]. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். (குறள்
– 1123)
[43]. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க்
கண்ணாள் குணம். (குறள் – 1125)
[44]. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள்
நீங்கும் இடத்து. (குறள் – 1124)
[45]. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு
எம்மிடை நட்பு. (குறள் – 1122)
[46]. கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரார்
நுண்ணியர்எம்
காத லவர். (குறள் – 1126)
[47]. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம்
கரப்பாக்கு அறிந்து. (குறள் – 1127)
[48]. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும்
வேபாக் கறிந்து. (குறள் – 1128)
[49]. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர்
என்னும் இவ் வூர். (குறள் – 1129)
[50]. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும்
இகந்துறைவர்
ஏதிலர்
என்னும்இவ் வூர். (குறள் – 1130)
[51]. மடலூர்தல்: காதலன்
தன் உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு, தலையில்
எருக்கம் பூவாலான மாலையை அணிந்துகொண்டு, காதலியின் உருவம்
வரைந்த படத்தில் அவள் பெயரை எழுதிக்கொண்டு, அப்படத்தைக்
கையிலேந்தி, பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரை போன்ற
உருவத்தின்மீது ஏறி அமர்ந்துகொள்வான். அவனை
ஊர்ச்சிறுவர்கள் ஊர்வலமாகத் தெருத்தெருவாக இழுத்துச் செல்வார்கள். இந்த நிகழ்ச்சி மடலூர்தல் என்று அழைக்கப்பட்டது. மறைமுகமாக இருந்த காதலர்களின் காதல், காதலன்
மடலூர்வதால் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியவரும். அதனால்,
அவன் காதலி அவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்போ அல்லது அவள்
பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கும் வாய்ப்போ கிடைக்கும்.
மடலூர்தல் என்பது ஒரு நாணத் தகுந்த இழிந்த செயலாகக் கருதப்பட்டது.
[52]. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. (குறள் - 1131)
[53]. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
(குறள் – 1136)
[54]. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். (குறள் – 1133)
[55]. நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
(குறள் –
1138)
[56]. அறிகிலார்
எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
(குறள் -
1139)
[57]. யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட
தாம்படா ஆறு. (குறள் – 1140)
[58]. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார்
பாக்கியத் தால். (குறள் – 1141)
[59]. மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு
ஈந்ததிவ் வூர். (குறள் – 1142
[60]. உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது
பெற்றன்ன நீர்த்து. (குறள் – 1143
[61]. கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும்
தன்மை இழந்து. (குறள் – 1144)
[62]. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந்
தோறும் இனிது. (குறள் – 1145)
[63]. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப்
பாம்புகொண் டற்று. (குறள் – 1146)
[64]. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக
நீளும்இந் நோய். (குறள் – 1147)
[65]. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்
கெளவையால்
காமம்
நுதுப்பேம் எனல். (குறள் – 1148)
[66]. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண
நீத்தக் கடை. (குறள் – 1149)
[67]. தாம்வேண்டின் நல்குவர் காதலர்
யாம்வேண்டும்
கெளவை
எடுக்கும்இவ் வூர். (குறள் – 1150)
[68]. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண்
உடைத்தால் புணர்வு. (குறள் – 1152)
[69]. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ
ரிடத்துண்மை யான். (குறள் – 1153)
[70]. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர்
என்னும் நசை. (குறள் – 1156)
[71]. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு
வாழ்வார்க் குரை. (குறள் – 1151)
[72]. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப்
பிரிவாற்றிப்
பின்இருந்து
வாழ்வார் பலர். (குறள் – 1160)
[74]. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா
உடம்பின் அகத்து. (குறள் – 1163)
[75]. காமக் கடும்புனல்
நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். (குறள் – 1167)
[76]. காமக்
கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். (குறள்
– 1164)
[77]. மன்னுயிர்
எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. (குறள் – 1168)
[78]. உள்ளம்போன்று
உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். (குறள்
- 1170)
[79]. கண்தாம் கலுழ்வ
தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. (குறள் – 1171)
[80]. கதுமெனத்
தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து. (குறள் – 1173)
[81]. படலாற்றா பைதல்
உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். (குறள் – 1175)
[82]. ஓஒ இனிதே
எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. (குறள் – 1176)
[83]. உழந்துழந்
துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். (குறள் – 1177)
[84]. புல்லிக்
கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. (குறள் – 1187)
[85]. உவக்காண்எம்
காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. (குறள் – 1185)
[86]. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்
பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. (குறள் – 1181)
[87]. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக்
காழில் கனி. (குறள் – 1191)
[88]. வாழ்வார்க்கு
வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. (குறள் – 1192)
[89]. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. (குறள் – 1199)
[90]. வீழ்வாரின்
இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
(குறள் – 1198)
[91]. ஒருதலையான்
இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. (குறள் – 1196)
[92]. உறாஅர்க்கு
உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. (குறள் – 1200)
[93]. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. (குறள் – 1201)
[94]. எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.
(குறள் – 1202)
[95]. நினைப்பவர்
போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
(குறள் – 1203)
[96]. யாமும்
உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். (குறள் – 1204)
[97]. தம்நெஞ்சத்து
எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல். (குறள் – 1205)
[98]. மற்றியான்
என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன். (குறள் – 1206)
[99]. மறப்பின்
எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
(குறள் – 1207)
[100]. நனவினால்
நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். (குறள்
– 1213)
[101]. கனவினான்
உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. (குறள் – 1214)
[102]. நனவினால்
கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. (குறள் – 1215)
[103]. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி
விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
(குறள் – 1218)
[104]. காதலர் தூதொடு வந்த
கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
(குறள் – 1211)
[105]. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். (குறள் – 1226)
[106]. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். (குறள் – 1227)
[107]. அழல்போலும்
மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
(குறள் – 1228)
[108]. மாலையோ
அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. (குறள் – 1221)
[110]. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்
உள்ளி
நறுமலர் நாணின கண். (குறள் – 1231)
[111]. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். (குறள் – 1232)
[112]. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணநீங்கித்
தொல்கவின்
வாடிய தோள். (குறள் – 1234)
[113]. தொடியொடு
தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
(குறள் – 1236)
[114]. முயங்கிய
கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். (குறள் – 1238)
[115]. முயக்கிடைத்
தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். (குறள் – 1239)
[116]. இருந்துள்ளி
என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். (குறள் –
1243)
[117]. காதல்
அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. (குறள் – 1242)
[118]. காமம்
விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு. (குறள் – 1247)
[119]. நினைத்தொன்று
சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. (குறள் – 1241)
[120]. செற்றார்
எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். (குறள் – 1245)
[121]. கண்ணும்
கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. (குறள் – 1244)
[122]. செற்றார்பின் செல்லாப்
பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
(குறள்
– 1255)
[123]. காமம் எனவொன்றோ கண்ணின்றென்
நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
(குறள் – 1252)
[124]. மறைப்பேன்மன் காமத்தை யானோ
குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். (குறள் – 1253)
[125]. காமக் கணிச்சி உடைக்கும்
நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
(குறள் – 1251)
[126]. நிறையுடையேன்
என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
(குறள் – 1254)
[127]. ஒருநாள்
எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
(குறள் – 1269)
[128]. வாளற்றுப்
புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(குறள் – 1261)
[129]. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். (குறள் – 1270)
[130]. வினைகலந்து
வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(குறள் – 1268)
[131]. கூடிய
காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
(குறள் –
1264)
[132]. காண்கமன்
கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
(குறள் –
1265)
[133]. புலப்பேன்கொல்
புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன். (குறள் – 1267)
[134]. கரப்பினுங் கையிகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல்
உறுவதொன்று உண்டு.
(குறள் – 1271)
[135]. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில்
திகழ்வதொன்று உண்டு.
(குறள் – 1273)
[136]. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள்
உள்ளதொன்று உண்டு.
(குறள் – 1274)
[137]. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்
டவள்செய் தது. (குறள் – 1279)
[138]. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம்
நிறைய வரின். (குறள் – 1282)
[139]. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண்
சென்றதுஎன் நெஞ்சு. (குறள் – 1284)
[140]. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன்
கண்ட இடத்து. (குறள் – 1285)
[141]. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன்
தவறல் லவை. (குறள் – 1286)
[142]. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல்
அறிந்தென் புலந்து. (குறள் – 1287)
[143]. இளித்தக்க
இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. (குறள் – 1288)
[144]. மலரினும்
மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். (குறள் – 1289)
[145]. தனியே
இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. (குறள் – 1296)
[146]. பெறாஅமை
அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. (குறள் – 1295)
[147]. இனிஅன்ன
நின்னொடு சூழ்வார்யார் நெசே
துனிசெய்து துவ்வாய்காண்
மற்று. (குறள் – 1294)
[148]. உறாஅ
தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. (குறள் – 1292)
[149]. துன்பத்திற்கு
யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி. (குறள் – 1299)
[150]. புல்லா திராஅப்
புலத்தை அவர்உறும
அல்லல்நோய் காண்கம் சிறிது. (குறள் – 1301)
[151]. உப்பமைந் தற்றால்
புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். (குறள் – 1302)
[152]. அலந்தாரை
அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். (குறள் – 1303)
[153]. ஊடி
யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. (குறள் - 1304)
[154]. ஊடல்
உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. (குறள் –
1310)
[155]. பெண்ணியலார்
எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
(குறள் – 1311)
[156]. ஊடி
இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
(குறள் – 1312)
[157]. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும்
யாரினும் என்று. (குறள் – 1314)
[158]. இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
கண்நிறை
நீர்கொண் டனள். (குறள் – 1315)
[159]. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர்
என்றென்னைப்
புல்லாள்
புலத்தக் கனள்.
(குறள் – 1316)
[160]. வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித்
தும்மினீர் என்று.
(குறள் – 1317)
[161]. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை
மறைத்திரோ என்று. (குறள் – 1318)
[162]. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர
இந்நீரர்
ஆகுதிர் என்று.
(குறள் – 1319)
[163]. நினைத்திருந்து
நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. (குறள் – 1320)
[164]. தவறிலர் ஆயினும்
தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து.
(குறள் – 1325)
[165]. இல்லை
தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
(குறள் –
1321)
[166]. புலத்தலின்
புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
(குறள் –
1323)
[167]. புல்லி
விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. (குறள் – 1324)
[168]. தவறிலர்
ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
(குறள் – 1325)
[169]. ஊடுக
மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. (குறள் – 1329)
[170].
ஊடுதல் காமத்திற்கு
இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(குறள் – 1330)