Statcounter

Friday, July 24, 2020

திருக்குறளில் மேலாண்மை

திருக்குறளில் மேலாண்மை

 

எகிப்தில் மிகப்பெரிய பிரமிடுகள் (Pyramids of Egypt) 4500 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டன. உலகிலேயே மிகப் பழமையானதாகக் கருதப்படும் ஹோம்ஸ் என்னும் அணைக்கட்டு (Homs Dam) சிரியாவில் கி. மு. 14 – ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கி.மு. 7 – ஆம் நூற்றாண்டில் சீனப்பெருஞ்சுவர் (the great wall of China) கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கி.மு. 5 – ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிரேக்கத்தில் உள்ள ஏதன்ஸ் நகரத்தில் எதீனா (Athena) என்ற பெண்தெய்வத்திற்காக, பளிங்குக் கற்களாலான, சிறந்த சிற்ப வேலைப்படுகளுடன்கூடிய பார்த்தனான் (Parthenon) என்ற அழகிய கோயில் ஒன்று கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் கரிகால் பெருவளத்தான் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் கல்லணையைக் கட்டினான். கடந்த ஆயிரம் ஆண்டுகளில், பல பெரிய அரண்மனைகளும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளோடுன்கூடிய அழகிய கோயில்களும், பெரிய தேவாலயங்களும், மசூதிகளும் கட்டப்பட்டன. இவற்றைப் போன்ற பெரிய அமைப்புகள் மன்னர்களின் ஆணைக்கேற்ப பலருடைய  உழைப்பால் தோன்றியவை. பலர் கூடி உழைக்கும்பொழுது மேலாண்மை இல்லாமல் இருந்திருக்குமானால், பணிகளை உரிய காலத்தில், திட்டமிட்டபடி செய்து முடித்திருக்க முடியாது. ஆகவே, நெடுங்காலமாகவே, பலர் கூடி உழைக்கும்பொழுது, திட்டமிடுதல், கண்காணித்தல் போன்ற பணிகளைச் செய்பவர்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

கி.மு. 4 – ஆம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியரின் அமைச்சராக இருந்த கௌடில்யர் (379 BC – 283 BC) எழுதிய அர்த்தசாஸ்த்ரா என்னும் நூலில் பல மேலாண்மைக் (மேலாண்மை – Management) கருத்துக்கள் காணப்படுகின்றன. அதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, வள்ளுவர் மேலாண்மையைப் பற்றிப் பல அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார். 18-ஆம் நூற்றாண்டில் துவங்கிய தொழிற்புரட்சிக்குப் (தொழிற்புரட்சி – Industrial revolution) பிறகு, பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அந்தத் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை பார்த்தார்கள். பல ஊழியர்களின் உதவியால் எப்படி ஒரு தொழிலை நடத்துவது என்பதைப் பற்றிப் பல அறிஞர்கள் ஆராயத் தொடங்கினார்கள். பின்னர், இருபதாம் நூற்றாண்டில், கல்லூரிப் பாடத் திட்டங்களில் மேலாண்மை என்பது ஒரு பாடமாக இடம்பெற்று மேலும் வளர்ச்சி அடைந்தது.

மேலாண்மை என்றால் என்ன? மேலாண்மையைப் பற்றிக் கூறும்பொழுது, பீற்றர் டிரக்கர் (Peter Drucker) என்ற அறிஞர், மேலாண்மை என்பது, “ஒரு குறிக்கோளை நோக்கிப் பலரை உழைக்கும் ஆற்றல் உடையவர்களாக ஆக்குவதுதான்.” என்று கூறுகிறார். இந்த வரையறையின் அடிப்படையில் பார்த்தால், நெடுங்காலமாகவே மேலாண்மை என்ற ஒன்று இருந்துவருகிறது என்பது தெரிகிறது. மேலாண்மை என்பதில் அடங்கிய பணிகள் எவை என்பதில் அறிஞர்களிளிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும், கூன்ட்ஸ் மற்றும் ஓ’டோனல் (Koontz and O’Donnel) என்ற இருவரும் இயற்றிய “Principles of Management: An Analysis of Managerial Functions” என்ற நூலில், அவர்கள் ”திட்டமிடுதல் (Planning), கட்டமைத்தல் (Organiizing), பணியமர்த்தல் (Staffing), நெறிப்படுத்துதல் (Directing), கட்டுப்படுத்துதல் (Controlling)” ஆகியவை ஐந்தும் மேலாண்மையில் அடங்கும் பணிகள் என்று கூறியிருப்பதை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த வரையறையின் அடிப்படையில், வள்ளுவரின் மேலாண்மைக் கருத்துக்களைத் தொகுத்து வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

திட்டமிடுதல்

திட்டமிடுதலின் இன்றியமையாமை: திட்டமிடுதல் என்பது மேலாண்மையில் ஒரு இன்றியமையாத செயல்பாடாகும். கூன்ட்ஸ் மற்றும் ஓ’டோனலின் ஆகியோர், தங்கள் நூலில் “திட்டமிடுதல் என்பது, என்ன செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானிக்கும் செயல். து நாம் இருக்கும் இடத்திற்கும் நாம் செல்ல விரும்பும் இடத்திற்கும் இடையிலான இடைவெளிக்கு ஒரு பாலமாக அமைகிறது[1].” என்று கூறுகின்றனர். திட்டமிடுதல் என்பது முன்னதாகவே முடிவுசெய்யப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்கான எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் செயலாகும். பொருளும் மற்ற வளங்களும் (வளம் – Resource) முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்குத் திட்டமிடுதல் அவசியம். திட்டமிடுதல் என்பது ஒரு அறிவார்ந்த செயலாகும்.

 
”திட்டமிடத் தவறுபவர்கள் தோல்வி அடைவதற்குத் திட்டமிடுகிறார்கள்” என்று பதினெட்டாம்
 நூற்றாண்டில்  அமெரிக்காவில் வாழ்ந்த பெஞ்சமின் ஃபிரேங்க்ளின்
(Benjamin Franklin. 1706 – 1790) என்ற அறிஞர் கூறுகிறார். இது முற்றிலும் உண்மை
என்பதற்குச் சான்றாக வரலாற்றிலும் தற்காலத்திலும் பல நிகழ்வுகளைக் காணாலாம். 
ஃபிரான்சு நாட்டின் தலைவராக இருந்த நெப்போலியன், 1812 – ஆம் ஆண்டு உருசியாமீது
 குளிர்காலத்தில் படையெடுத்துச் சென்றதால், ஆயிரக் கணக்கான படை வீரர்கள் குளிர்
 தாங்க முடியாமலும், சரியான உணவு கிடைக்காததாலும் இறந்ததோடு மட்டுமல்லாமல்
 போரில் தோல்வி அடைந்தான் என்பது வரலாறு. அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும்
 ஏறத்தாழ 500,000 சிறுதொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. சரியாகத் திட்டமிடாததால்,
 அவற்றுள், ஏறத்தாழ 250,000 தொழில்கள் ஐந்து ஆண்டுகளுக்குமேல் நிலைத்து
 நிற்பதில்லை என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஆகவே, போரிலும், தொழிலும்,
 மற்ற துறைகளிலும் திட்டமிடல் என்பது என்றும் இன்றியமையாதது என்பது தெளிவு.
 
திட்டமிடலின் இன்றியமையாமையப் பற்றி வள்ளுவரின் கருத்துக்கள்

எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்குமுன் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து, அதன்பின் தொடங்க வேண்டும். அவ்வாறல்லாமல் தொடங்கியபின் அதுபற்றிச் சிந்திதுக்கொள்ளலாம் என்பது தவறு (குறள் – 467). மேலும், பிறரால் இகழப்படுவதற்கு அஞ்சுபவர்கள் தமக்குத் தெளிவாகத் தெரியாத செயலைச் செய்யத் தொடங்க மாட்டார்கள் (குறள் – 464). சரியான வழியில் செய்யப்படாத முயற்சிக்குப் பலர் துணையாக நின்று, அதைக் காப்பாற்ற முயன்றாலும் அது குறையுடையதாகவே முடிவுறும் (குறள் - .468). ஓரு செயலைச் செய்யக்கூடிய வகைகளையெல்லாம் முற்றும் ஆராயாமல் அச்செயலைத் தொடங்குவது, பகைவரை (போட்டியாளரை) மேன்மேலும் வலிமைப்படுத்த உதவும் வழியாகும்.(குறள் – 465).

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.                                     (குறள் – 467)

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.                                                         (குறள் – 464)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.                                     (குறள் – 468)

வகையறச் சூழாது ழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோர் ஆறு.                                       (குறள் – 465)

 

மேலே குறிப்படப்பட்ட நான்கு குறட்பாக்களிலிருந்து, ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்குமுன், அச்செயலை எப்படிச் செய்யவேண்டும் என்பதைத் தெளிவாகத் திட்டமிட வேண்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துவதைக் காணமுடிகிறது. அடுத்து, எப்படித் திட்டமிடுவது என்பதைப் பற்றிய கருத்துக்களைப் பார்ப்போம். 

திட்டமிடுவது எப்படி?

செயலைப் பற்றித் தெரிந்தவர்களோடு கலந்து ஆலோசித்தல்

செய்ய விரும்பும் செயலைப் பற்றி நன்கு தெரிந்த குழுவினரோடு கலந்து ஆராய்ந்து, தாமும் சிந்த்திதுப் பார்த்துச் செயல்படுவோர்க்கு, செய்வதற்கு அரிய செயல் எதுவும் இல்லை (குறள் – 462). 

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.                           (குறள் – 462)

 

எந்தச் செயலையும் திறமையாகச் செய்வதற்கு அறிவும், அனுபவமும், ஆற்றலும் தேவை. தேவையான அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகிய அனைத்தும் ஒருவரிடத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால், ஒரு செயலைத் தொடங்குமுன் தேவையான துறைகளில் அறிவு, அனுபவம், பயிற்சி, தேர்ச்சி ஆகியவற்றில் சிறந்தவர்களோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது மிகச் சிறந்த கருத்து. இக்கருத்து வள்ளுவர் காலத்தைவிட இக்காலத்துக்கு மிகவும் ஏற்புடையது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், எல்லாத் துறைகளிலும் பெருமளவில் அறிவு வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனால், பல துறைகளிலும் உள்ள அறிஞர்களோடு ஆலோசனை செய்வது இன்றியமையாததாக உள்ளது. அதனால்தான், பல நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், அவர்களோடு பணிபுரிபவர்களும், ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்குமுன் திறமையான அறிஞர்களோடு கலந்து ஆலோசிக்கிறார்கள்.

திட்டமிடுதலில் சிந்திக்க வேண்டிய ஐந்து கருத்துக்கள்

ஒரு செயலைத் தொடங்கும்பொழுது அதற்கு வேண்டிய பொருள், தேவையான கருவி, தக்க காலம், செயல், ஏற்ற இடம் ஆகிய ஐந்தைப் பற்றியும் தெளிவாகச் சிந்தித்துப் பிறகு அச்செயலைத் தொடங்குக (குறள் – 675).

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.                                        குறள் – 675)

 

ஒரு மன்னன் போருக்குப் போவதாக இருந்தால், வீரர்களுக்கும் மற்றவர்களுக்கும் சம்பளம் கொடுப்பதற்குத் தேவையான பொருள், படைக்கருவிகள், போரைத் தொடங்குவதற்குத் தக்க காலம், பகைவரின் வலிமை, போருக்கு ஏற்ற இடம் ஆகியவற்றை மன்னன் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். ஒருவன் ஒரு தொழிலைத் தொடங்குவதாக இருந்தால் அந்தத் தொழிலுக்குத் தேவையான பொருள், தொழிலுக்கேற்ற கருவி, தொழிலைத் தொடங்குவதற்கு ஏற்ற காலம், தொழில், இடம் ஆகிய ஐந்தைப் பற்றியும் தெளிவாகச் சிந்திக்க வேண்டியது இன்றியமையாது. ஒவ்வொரு தொழிலுக்கும் இந்த ஐந்தும் வேறுவேறாக இருக்கலாம். ஆனால், இந்த ஐந்தையும் பற்றிய தெளிவான சிந்தனை தேவை என்பதில் கருத்து வேறபாடு இருக்க முடியாது.

பொருள்: ”பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என்பது வள்ளுவரின் கூற்று. முடியாட்சியாக இருந்தாலும், குடியாட்சியாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வகையான ஆட்சியாக இருந்தாலும், ஆட்சியில் இருப்பவர்கள் பொருளைப் பற்றிச் சிந்திக்காமல் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள்.  பொருளைப் பற்றிச் சிந்திக்கமல் திட்டங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால், திட்டங்களை முடிக்க முடியாமல், நாட்டின் பொருளாதரத்தைச் சீர்குலைப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் ஆட்சியையும் இழக்க நேரிடும். நிறுவனங்களின் நிலையும் அதுதான். நிறுவனங்களின் முதன்மையான கடமை நல்லவழியில் பொருளீட்டி இலாபத்தோடு செயல்படுவதுதான். எந்த நிறுவனமும் நஷ்டதிற்காக நடத்தப்படுவதில்லை. ஆகவே, திட்டங்களைச் செயல்படுத்துவதற்குமுன் அந்தத் திட்டத்தால் வரும் இலாபம், நஷ்டம் ஆகிய  இரண்டையும் கணக்கிட்டு இலாபம் இருந்தால்தான் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து குறளில் காணப்படுகிறது. ஒரு செயலைத் தொடங்குமுன் அதற்காகும் பொருட்செலவையும், அதனால் கிடைக்கும் வருவாயையும் கணக்கிட்டு, இறுதியில் கிடைக்கும் இலாபத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நன்மை மிகுதியாக இருக்குமானால், அச்செயலைத் தொடங்க வேண்டும் (குறள் – 461). உறுதியற்ற எதிர்கால இலாபத்தை கருத்தில்கொண்டு கையில் உள்ள முதலை இழப்பதற்கான முயற்சிகளை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள் (குறள் - 463).

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.                                         (குறள் – 461)

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.                                          (குறள் – 463)

 

பொருள் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. முதன்மையான பொருள் செல்வம். செல்வம் இல்லையென்றால் எந்தச் செயலும் நடைபெறாது. தொழிலுக்குத் தேவையான மூலதனம், ஊழியர்களுக்குச் சம்பளம், தொழிலுக்கேற்ற கருவிகளை வாங்குவதற்குத் தேவையான பொருள், தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான பொருள் ஆகியவை அனைத்தும் பொருள் என்பதில் அடங்கும். அமெரிக்காவில் தொடங்கப்படும் சிறுதொழில்கள் தோல்வி அடைவதற்கு முதன்மையான காரணம் போதுமான மூலதனமும் (sufficient capital), தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான பொருளும் (sufficient funds needed to meet the operating expenses) இல்லாதுதான் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ‘பொருள்’ என்ற சொல்லுக்கு ‘வளம்’ என்றும் பொருள் கொள்ளலாம். வளம் என்று பொருள்கொண்டால், 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆடம் ஸ்மித் (Adam Smith, 1793 – 1790) என்ற பொருளாதார நிபுணர் தன்னுடைய “The Wealth of Nations” என்ற நூலில் கூறுவதைப்போல், பொருள் என்ற சொல் உற்பத்திக்குத் தேவையான காரணிகளாகிய (Factors of Production) நிலவளம் (land), மனிதவளம் (Labor), மூலதனம் (Capital) ஆகிய மூன்றையும் குறிப்பதாகக் கருதலாம்.

கருவி: போருக்குப் போகும் மன்னனுக்கும், படைவீரர்களுக்கும் போர்க்கருவிகள் தேவை. ஒரு தொழிலைத் தொடங்குபவர்களுக்கு அந்தத் தொழிலுக்கேற்ற கருவிகள் தேவை. தற்காலத்தில், அனைவருக்கும் அன்றாட வாழ்க்கைக்குப் பலவகையான கருவிகள் தேவை. ஆகவே, கருவிகள் இன்றியமையாதவை என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

காலம்: எந்தச் செயலைச் செய்வதற்கும் சரியான காலம் என்ற ஒன்று உண்டு.  வெற்றி அடைய வேண்டும் என்று விரும்பினால் அந்தக் காலத்தில் அந்தச் செயலைச் செய்யவேண்டும். சரியான காலம் என்பது சோதிடர்கள் கூறுவதுபோல், திதி, நட்சத்திரம், இராகு காலம் போன்றவற்றைப் பற்றியது அன்று. அது செயலைப் பொறுத்தது. உதாரணமாக, ஒரு மன்னன் போருக்குப் போக வேண்டும் என்று முடிவு செய்தால், பகைவர்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் அவர்களைத் தாக்குவான். அதுபோல், ஒருவன் ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய விரும்பினால், அந்தப் பொருளை உற்பத்திசெய்து விற்பதற்குத் தக்க சமயத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

ஜோசஃப் ஜுரன்(Joseph Moses Juran, 1904 – 2008) என்பவர் அமெரிக்காவில் இருபதாம் நூற்றண்டில் வாழ்ந்தவர். அவர் தரக்கட்டுப்பாடு (Quality Control) என்னும் துறையில் மிகுந்த புகழ் பெற்ற அறிஞர். இவருடைய அறிவுரையைப் பின்பற்றி, ஜப்பானியர்கள் தரக்கட்டுப்பட்டில் மிகுந்த முன்னேற்றம் அடைந்து, இன்று, சீருந்துகளைத் தயாரிப்பதில் அமெரிக்காவைவிடச் சிறந்து விளங்குகிறார்கள். பொதுவாக, ஜப்பானியர்கள் தயாரிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்தாக இருப்பதற்கு ஜூரன் என்பவர் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. ஒருமுறை ஜூரன் அவர்களின் சொற்பொழிவு ஒன்றைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தச் சொற்பொழிவில் அவர் ஒரு சுவையான செய்தியைச் சொன்னார்.

அமெரிக்காவில், பெண்கள் சிகையலங்காரம் செய்துகொண்ட பிறகு, தங்கள் சிகையலங்காரம் கலையாமல் இருப்பதற்காக, ஒரு நுண்மையான வலையைத்(Hair Net) தங்கள் தலையில் அணிந்துகொள்வது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழக்கில் இருந்தது. பெண்கள் தலையில் அணியும் வலையைத் தயாரித்து விற்பனை செய்வதில் ஒரு நிறுவனம் புகழ்பெற்று விளங்கியது. காலப்போக்கில், அந்த வலைகளின் விற்பனை குறையத் தொடங்கியது. வலைகள் நுண்ணியவையாக இல்லாதால் அவற்றை மக்கள் வாங்குவது குறைந்ததாகக் கருதி, மிக நுண்மையான வலைகளைத் தயாரிக்க ஆர்ம்பித்தார்கள். வலைகள் எவ்வளவு நுண்மயானவையாக இருந்தாலும், விற்பனை அதிகரிக்கவில்லை. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மிகவும் குழப்பம் அடைந்தார்கள். விற்பனைச் சரிவுக்குக் காரணம் என்னவென்று ஆராய்ச்சி செய்த பிறகு, சிகையலங்காரம் கலையாமல் இருப்பதற்காகத் தலையில் தெளித்துக்கொள்ளும் பொருள்கள் (Hair Spray) விற்கப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்கள். பின்னர், அந்த நிறுவனம் வலைகளைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டு தலையில் தெளித்துக் கொள்ளும் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். இதுதான் ஜூரன் அவர்கள் சொன்ன செய்தி. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் நூற்பா(462) இங்கு நினைவுகூறத் தக்கது. பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் காலத்திற்கேற்ற பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என்பது ஜூரன் அவர்கள் கூறிய செய்தியிலிருந்து தெரிகிறது.

பகைவர்கள் எதிர்பார்க்காத நேரத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தாக்க வேண்டும் என்பது போர்த்தந்திரங்களில் ஒன்று. இதை 1941 – இல் ஜப்பானியர்கள் கையாண்டு அமெரிக்காவில் உள்ள பேள் ஹார்பர்(Pearl Harfbor) என்ற துறைமுகத்தைத் தாக்கியதால் நான்கு பெரிய கப்பல்கள் கடலில் மூழ்கின; 188 விமானங்கள் அழிந்தன; 2403 அமெரிக்க வீரர்கள் இறந்தனர்; 1178 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். இதுபோல், போர்களில் தக்க காலத்தைத் தேர்ந்தெடுப்பதை ஒரு உத்தியாக மற்ற நாடுகளும் பல போர்களில் கையாண்டிருக்கின்றன என்பது வரலாறு காட்டும் செய்தி.

ஒரு செயலைச் செய்வதற்கு தக்க காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார். தமக்குக் கிடைத்தற்கரிய காலம் வந்து அமையுமானால், அப்பொழுதே, அரிய செயல்களைச் செய்து முடித்துவிட வேண்டும் (குறள் – 489) என்று கூறுவது மட்டுமல்லாமல், அத்தகைய காலம் வரும்வரை காத்திருப்பது அவசியம் என்றும் வள்ளுவர் கூறுகிறார். அவ்வாறு காத்திருப்பதற்கு, வள்ளுவர் ஒரு அருமையான உவமையைக் கையாளுகிறார். ஒருவன் ஒடுங்கி இருக்க வேண்டிய காலத்தில், கொக்கைப் போல் அடங்கி இருக்க வேண்டும். ஏற்ற காலம் வாய்க்கும்பொழுது, கொக்கு எவ்வாறு தப்பாது மீனைக் குத்துகிறதோ, அவ்வாறே குறிப்பிட்ட செயலைச் செய்து முடித்துவிட வேண்டும் (குறள் – 490) என்பதும் குறளில் காணப்படும் கருத்து.

            எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

          செய்தற்கு அரிய செயல்.                                            (குறள் – 489)

            கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

          குத்துஒக்க சீர்த்த இடத்து.                                          (குறள் – 490)

 

”காற்றுள்ளபொழுதே தூற்றிக்கொள்” என்பது தமிழில் உள்ள பழமொழி. அதுபோல், தக்க காலத்தில் தவறாமல் செயலாற்ற வேண்டும் என்று மற்ற அறிஞர்களும் கூறியுள்ளனர். அவற்றுள், ஜூலியஸ் சீசர் என்ற நாடகத்தில், ”வாழ்க்கை என்னும் படகைக் காலம் என்னும் கடலில் செலுத்தும்பொழுது, அலைகள் சாதகமாக இருக்கும்பொழுது அவற்றைப் பயன்படுத்திக்கொண்டால் நன்மைகளை அடையலாம், அவற்றைத் தவறவிட்டால், வாழ்க்கைப் படகு துன்பத்தில் சிக்கிக்கொள்ளும்[2].” என்று ஷேக்ஸ்பியர் (William Shakespeare, 1564 - 1616) கூறுவது இங்கு நினைவுகூறத் தக்கது.

வினை: வினை என்பது ஒருவன் செய்யவிருக்கும் செயலைக் குறிக்கிறது. ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்குமுன் அந்த செயலைப் பற்றி நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். அந்தச் செயலை செய்து முடிப்பதற்கு என்ன தேவை என்பதையும் ஆராய வேண்டும். செயலைச் செய்வதற்குத் தேவையான பொருள், தேவையான கருவி, காலம், செயலைப் பற்றிய அறிவு, ஆற்றல், அந்தச் செயலைப் போன்ற செயல்களை செய்வதில் அனுபவம் ஆகியவை தேவைப்படலாம். பொருள், கருவி, காலம் ஆகியவற்றின் இன்றியமையாமையை முன்பே பார்த்தோம். ஆகவே, இப்பொழுது செயலைச் செய்வதில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அறிவு, ஆற்றல் அனுபவம் ஆகியவற்றைப் பார்ப்போம். ஆற்றல் என்ற சொல் செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான வலிமையைக் குறிக்கிறது. ஒரு செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான  வலிமையைப் பற்றி வலியறிதல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விளக்கமாகக் கூறுகிறார். அந்த அதிகாரத்தில் உள்ள ஒரு குறளில், ஒருசெயலுக்குத் தேவையான வலிமையைப் பற்றிப் பல அரிய கருத்துக்களை வள்ளுவர் கூறுகிறார். அந்தக் குறளில், ஒருவன், தான் செய்யவிருக்கும் செயலுக்குத் தேவையான வலிமையையும், தன் வலிமையையும், தனது பகைவருடைய (போட்டியாக இருப்பவரின்) வலிமையையும் தனக்குத் துணையாக இருப்பவர்களின் வலிமையையும், சீர்தூக்கிப் பார்த்துச் செயலைச் செய்ய வேண்டும் என்ற கருத்து காணப்படுகிறது (குறள் – 471).

 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.                                  (குறள் – 471)

 

மேலைநாடுகளில், ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்குமுன் SWOT Analysis என்ற ஆய்வு நடத்தி அந்த ஆய்வின் முடிவு தமக்குச் சாதகமாக இருந்தால்தான் அந்தத் திட்டத்தைத் தொடங்குகிறார்கள். SWOT என்பதில் உள்ள S என்ற எழுத்து Strength என்பதைக் குறிக்கிறது. Strength என்பது அந்த நிறுவனத்தின் வலிமையைக் குறிக்கிறது. வலிமை என்பது பொருள், கருவி, ஆற்றல், அறிவு அனுபவம் போன்ற அனைத்தையும் குறிக்கும் ஒரு சொல். W என்ற எழுத்து, Weakness என்பதைக் குறிக்கும் சொல். Weakness என்பது அந்த நிறுவனத்தின் பலவீனத்தைக் குறிக்கிறது. O என்ற எழுத்து opportunity என்ற சொல்லைக் குறிக்கிறது. Opportunity என்பது இந்தத் திட்டத்தை செய்து முடிப்பதால் தமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் என்ன வாய்ப்புகள் உண்டு என்பதைப் பற்றிய ஆய்வைக் குறிக்கிறது. T என்ற எழுத்து Threat என்ற சொல்லைக் குறிக்கிறது. Threat என்பது இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு என்ன இடையூறுகள் உண்டு என்பதைப் பற்றிய ஆய்வு.

 

இடம்: பொருள், கருவி, காலம் வினை போன்றவற்றை ஆய்வு செய்வதைப்போல், ஒரு செயலைத்  தொடங்குவதற்கு ஏற்ற இடத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது வள்ளுவரின் அறிவுரை. இடத்தை ஆய்வு செய்வதின் அவசியத்தை வள்ளுவர் இடனறிதல் என்ற அதிகாரத்தில் விளக்கமாகக் கூறுகிறார். ”முழுமையாக வெற்றி அடைவதற்கான இடத்தைக் கண்ட பிறகுதான் ஒரு செயலைத் தொடங்க வேண்டும். அவ்வாறல்லாமல், எங்குத் தொடங்கினால் என்ன என்று இகழாதீர்கள் (குறள் – 491.”, என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். மேலும், சரியான இடத்தைக் கண்டறிய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக இரண்டு பொதுவான கருத்துக்களையும் வள்ளுவர் கூறுகிறார். ஆழமான நீரில் இருக்கும்பொழுது, முதலை பிற உயிர்களைக் கொல்லும். ஆனால், அதே முதலை நீரைவிட்டு நீங்கினால், பிற உயிர்கள் அதை வெல்லும் (குறள் – 495). வலிமைமிக்க உருளைகளையுடைய நெடியதேர் கடலில் ஓடாது. கடலில் ஓடக்கூடிய நாவாய்கள் நிலத்தில் ஓடா (குறள் – 496).

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.                                        (குறள் – 491)

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.                                                          (குறள் – 495) 

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.                                              (குறள்- 496)

 

எந்த இடத்தில் பகைவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை போருக்குப் போகும் மன்னர்கள் ஆய்வு செய்வது வழக்கம். வீடு கட்டுபவர்கள் எங்கு வீடு கட்ட வேண்டும் என்று ஆய்வு செய்வது வழக்கம். எங்குத் தொழிலைத் தொடங்கினால் வரிச்சலுகைகள் கிடைக்கும் என்று நிறுவனங்கள் ஆய்வு செய்கின்றன. ஒரு பொருளை எங்கு உற்பத்தி செய்தால் அதிக இலாபம் அடையலாம் என்று நிறுவனங்கள் ஆய்வு செய்கின்றன. உதாரணமாக, சீனாவில் ஒரு பொருளை உற்பத்தி செய்தால், மிகக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யலாம் என்பதால்தான், அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு ஏற்ற இடமாகச் சீனாவைத் தெர்ந்தெடுக்கின்றன என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஒரு பொருளை சந்தைப்படுத்தும்பொழுது (சந்தைப்படுத்துதல் – Marketing), பொருள் (பொருளின் தன்மையும் தரமும்), பொருளின் விலை, பொருளை விற்பனை செய்யும் இடம், பொருளுக்கான விளம்பரம் ஆகிய நான்கிலும் கவனம் செலுத்த வேண்டும்[3] என்று சந்தைப்படுத்துவதில் வல்லுனர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே, ஒரு செயலைத் தொடங்குமுன் இடத்தையும் ஆய்வு செய்யவேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வள்ளுவர் கூறிய கருத்து இன்றும் ஏற்புடையது என்பது வியக்கத் தக்கது.

கட்டமைத்தல் (Organizing)

ஒரு குறிக்கோளை அடைவதற்கு “என்ன செயல்களைச் செய்ய வேண்டும்?”, ”அந்தச் செயல்களை எப்படிச் செய்ய வேண்டும்?”, “அந்தச் செயல்களை எப்பொழுது செய்ய வேண்டும்?” என்பவற்றைத் திட்டமிட்ட பிறகு, அந்தச் செயல்களை வரிசைப் படுத்த வேண்டும். ஒரு குறிக்கோளை அடைவதற்குப் பல செயல்களைச் செய்ய வேண்டியதாக இருக்கும். அந்தச் செயல்களில் சிலவற்றை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகச் செய்ய வேண்டும்.  சில செயல்களை ஒரே சமயத்தில் செய்யலாம். உதாரணமாக, ஒரு வீடு கட்டும்பொழுது, அடித்தளம் அமைத்த பிறகுதான் மேல்தளம் கட்ட முடியும், ஆனால், மேல்தளம் முடிந்த பிறகு, வீட்டிற்குள்ளே செய்ய வேண்டிய செயல்களையும் வெளியே செய்ய வேண்டிய செயல்களையும் ஒரே சமயத்தில் செய்யலாம். ஆகவே, செயல்களின் தொடர்பை ஆராயவேண்டும். செயல்களுக்குத் தேவையான பணியாட்கள், கருவிகள், பொருள் ஆகியவற்றையும் ஆராய்ந்து ஒருங்கிணைக்க வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் கட்டமைத்தல் என்ற பிரிவில் அடங்கும். இந்தப் பணிகளின் வரிசையையும் தொடர்புகளையும் ஆராய்ந்து ஒருங்கிணைப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும், இக்காலத்தில் மென்பொருள்கள் (உதாரணம்: Micosoft Project) கிடைக்கின்றன. வள்ளுவர் காலத்தில் மென்பொருள் கருவிகள் எவையும் இல்லை. ஆனால், செயல்களை வரிசைப்படுத்துவதைப் பற்றி வள்ளுவர் ஆரய்ந்திருக்கிறார். ஒரு குறளில், செய்ய வேண்டிய செயல்களை செய்யாவிட்டாலும், செய்யக்கூடாத செயல்களைச் செய்தாலும் குறிக்கோளை அடைய முடியாது என்கிறார் வள்ளுவர் (குறள் – 466). மற்றொரு குறளில், காலம் தாழ்த்திச் செய்ய வேண்டிய செயல்களைக் காலம் தாழ்த்தியும், காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டிய செயல்களைக் காலம் தாழ்த்தாமலும் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் - 672).

 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.                                      (குறள் – 466)

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.                                         (குறள் – 672)

 

செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்வதைப் பற்றி ஸ்டீஃபென் கவ்வி (Stephen Covey, 1932 – 2012) என்ற அமெரிக்க அறிஞர், தன்னுடைய “The 7 Habits of Highly Effective People” என்ற நூலில் “Habit Three – Put First Things First” என்று கூறுவதும் வள்ளுவர் கூறுவதும் ஒத்திருப்பது வியக்கத் தக்கதாக உள்ளது. 

பணியமர்த்தல் (Staffing)

பணியமர்த்தல் என்பது மேலாண்மைத்துறையின் பணிகளில் ஒன்றாகும். இது பணிகளைச் செய்வதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதோடு நிறுத்திவிடாமல், அவர்களுடைய வளர்ச்சி, அவர்களைப் பணிகளில் தக்கவைத்தல் ஆகியவற்றையும் குறிக்கும்.  பணியமர்த்தல் என்ற பணியை மேலாளர்கள் சரியாகச் செய்தால், சரியான ஆட்கள் சரியான பதவிகளில் சரியான நேரத்தில் தங்கள் பணிகளை சரியாகச் செய்து முடிக்க முடியும்.

 

பணியாட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?: ஒரு மன்னன் அல்லது ஒரு தலைவன் தன்னுடைய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் பல ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எத்தகையவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி, வள்ளுவர் மிகத் தெளிவாகப் பல கருத்துக்களைக் கூறுகிறார். அன்பை மட்டுமே காரணமாகக் கொண்டு, அறிய வேண்டியவற்றை அறியாதவர்களைப் பணியில் அமர்த்தினால், அது அறியாமையால் விளையுந் தீமைகள் பலவற்றையும் உண்டாக்கும் (குறள் – 507). ஆராயாமல் ஒருவனைப் பதவியில் அமர்த்தினால், அது வரும் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் (குறள் – 508). உற்றார் உறவினர் இல்லாதவரை பணிகளுக்குத் தேர்வு செய்யக்கூடாது. அத்தகையவர்கள் உலகத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்களாக இருப்பார்கள்; மேலும் பழிக்கு நாணவும் மாட்டார்கள்(குறள் – 506).

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாம் தரும்.                                         (குறள் – 507)

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.                                                  (குறள் – 508)

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.                                                 (குறள் – 506)

 

எத்தகையவர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று கூறிய வள்ளுவர், எத்தகையவரைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கூறத் தவறவில்லை. மேலாண்மையில் இருப்பவர்கள் தமக்குக் கீழே பணிபுரிபவர்க்ளைத் தெர்ந்தெடுக்கும்பொழுது, நான்கு வகைகளில் ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் அறநெறிகளைப் பின்பற்றுபவர்களா, பொருள்மீது மிகுந்த பற்றுடையவர்களா, இன்பத்தில் மிகுந்த ஆசை உடையவர்களா, தன் உயிருக்கு அஞ்சுபவர்களா என்ற நான்கையும் ஆராய்ந்த பிறகே அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் (குறள் – 501). அன்பு, அறிவு, ஆசையில்லாத தன்மை, தெளிவான முடிவெடுக்கும் ஆற்றல் ஆகிய நான்கு பண்புகளையும் நன்கு உடையவர்களையே பணிகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் (குறள் – 513). உயர்குடியில் பிறந்து, குற்றங்களிலிருந்து நீங்கி, பழிக்கு அஞ்சுபவர்களாகவும், நாண வேண்டியவற்றிற்கு நாணுபவர்களாகவும் இருப்பவர்களையே பணிகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் (குறள் – 502). வருவாயைப் பெருக்கி, அவற்றால் செல்வத்தை வளர்த்து, இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனையே பணிகளுக்குத் தேந்தெடுக்க வேண்டும் குறள் – 512).

 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்.                                        (குறள் – 501) 

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.                                            (குறள் – 513) 

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் சுட்டே தெளிவு.                                        (குறள் – 502)   

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை.                                       (குறள் – 512)

 

அமைச்சர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் துணைத்தலைவர்கள், இயக்குனர்கள், மேலாளர்கள் போன்ற உயர் பதவிகளுக்குப் பணியாட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வள்ளுவரின் அறிவுரைகள் மிகவும் பொருத்தமானவையாகத் தோன்றுகின்றன. இக்காலத்தில் பெரிய நிறுவனங்கள் உயர் பதவிகளுக்குப் பணியாட்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது பலவிதமான தேர்வுகளையும், உளவியல் சோதனைகளையும்,  நேர்காணல்களையும் நடத்துகிறார்கள். பல ஆண்டுகளுக்குமுன், ஒரு நிறுவனத்தின் தகவல்த்துறை இயக்குனர் (Director, Information Sysstems) பதவிக்கு நான் விண்ணப்பித்திருந்தேன். அந்தப் பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுப்பதற்குமுன், பல நேர்காணல்கள் நடத்தப்பட்டன. பின்னர், ஒரு உளவியல் அறிஞர், என்னைப் பலமணிநேரம் சோதனை செய்தார். மேலும், Briggs-Myers Test என்ற உளவியல் சோதனையும் நடத்தப்பட்டது. எல்லா சோதனைகளுக்கும் பிறகுதான் அந்தப் பதவிக்கு நான் மிகவும் பொருத்தமானவன் என்று முடிவு செய்யப்பட்டது. எனக்கு அந்தப் பதவியும் கிடைத்தது.

 

ஒருவரை அமெரிக்க அரசாங்கத்தில் பொறுப்பான பணிகளில் நியமிப்பதற்குமுன், அவர் நம்பத் தக்கவரா, பேராசை உடையவரா, போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளவரா, மிகுந்த பெண்ணாசை உடையவரா, உயிருக்கு அஞ்சுபவரா என்றெல்லாம் ஆய்வு செய்து ”அரசாங்கத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ளும் தகுதி உடையவர் (eligible for Secret Clearance)” அல்லது “அரசாங்கத்தின் மிகமுக்கியமான ரகசியங்களைத் தெரிந்துகொள்ளும் தகுதி உடையவர் (eligible for Top Secret Clearance)” என்பது முடிவு செய்யப்டுகிறது. வள்ளுவரின் கருத்துக்கள் இன்றும் பயனுள்ளவையாகவும், பலராலும் பல நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றவையாகவும் இருப்பது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

 

இயக்குதல் (Directing)

இயக்குதல் என்பது நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவதற்காக, தங்களிடம் பணிபுரிபவர்களிடம் மேலாளர்கள் முறையாக பணிகளை ஒப்படைத்தல் (delegation), தொழிலாளிகளுக்குத் தேவையான பயிற்சி அளித்தல் (training), அவர்களை ஊக்குவித்தல் (motivating), மற்றும் அவர்களின் பணிகளையும் பணியாற்றும் திறமையையும் மேற்பார்வை செய்தல் (supervising) ஆகிய பணிகளைக் குறிக்கிறது. இயக்குதல் என்னும் செயலைத் திறம்படச் செய்வதற்கு, மேலாளர்களுக்கு நல்ல தகவல் தொடர்புத் திறனும் (Communication skill) இருக்க வேண்டும்.

 

தங்களிடம் பணிபுரிபவர்களிடம் பணிகளை ஒப்படைத்தல்: ஆராயாமல் எவரையும் தேர்ந்தெடுக்கக் கூடாது. நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்த பிறகு, அவரிடம் ஒப்படைக்கக்கூடிய பணிகளைத் தெளிவாக ஒப்படைத்துவிட வேண்டும் (குறள் – 509). திறமையாப் பணிபுரியக்கூடியவனைத் தேடிக்கண்டுபிடித்து, செயலின் தன்மையை ஆராய்ந்து, இன்ன காலத்தில் முடிப்பது என்ற அறிதலோடு அவனை அச்செயலை செய்விக்க வேண்டும் (குறள் – 516). ). ஒருவன் ஒரு செயலைச் செய்வதற்குத் தகுந்தவன் என்பதை நன்கு ஆராய்ந்த பிறகு, அவனை அச்செயலுக்கு உரியவனாக்கிவிட வேண்டும் (குறள் – 518). இச்செயலை இம்முறையால் (அல்லது இக்கருவியால்) இவன் முடிப்பான் என்று ஆரய்ந்து, அச்செயலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும் (குறள் – 517)

 

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.                                           (குறள் – 509) 

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.                                                         (குறள் – 516) 

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரியன் ஆகச் செயல்.                                       (குறள் – 518) 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.                                       (குறள் – 517)

 

”ஒரு மேலாளாராக இருப்பவர், செய்யவேண்டிய செயலைப் பற்றி நன்கு ஆராய வேண்டும். அச்செயலைச் செய்வதற்கு என்ன திறமைகளும் கருவிகளும் வேண்டும் என்று ஆராய வேண்டும். அத்தகைய திறமையுடையவர் யார் என்பதை ஆராய வேண்டும். அந்தத் திறமையுடையவரிடம் அச்செயலை எப்பொழுது செய்து முடிக்க வேண்டும் என்று அறிவித்து அச்செயலை குறித்த காலத்தில் முடிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு பொறுப்பை (பொறுப்பு – responsibility) ஒப்படைக்கும்பொழுது, அதற்கேற்ற அதிகாரத்தையும் (அதிகாரம் – authority) அவருக்கு அளிக்க வேண்டும். அதிகாரத்தை அளிக்காமல் பொறுப்பை மட்டும் ஒப்படைப்பதால் பயனில்லை. அதிகாரத்தையும் பொறுப்பையும் அளித்த பிறகு, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் செய்யும் அன்றாடப் பணிகளில் தலையிடாமல், மேலாளர் மேற்பார்வை செய்ய வேண்டும்.” என்பது குறட்பாக்கள் 509, 516 மற்றும் 518 ஆகியவற்றில் காணப்படும் கருத்துக்கள்.  ஒருவனை நன்கு ஆராய்ந்து பார்க்காமல் நம்புவதும், ஆராய்ந்து பார்த்தபிறகு நம்பியவனை ஐயப்படுதலும், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்(குறள் – 510)  என்று வள்ளுவர் கூறுவது மேலாளர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து.

 

மேற்பார்வை மற்றும் செயல்திறன் மதிப்பீடு (Supervision and Performance Evaluation): கற்றற்கு அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள் என்று கருதப்படுவோரிடத்திலும்கூட, ஆராயும்பொழுது, அறியாமை என்பது சிறிதளவும் இல்லாதிருப்பது அரிது (குறள் – 503). ஒருவனது நற்குணங்களை முதலில் ஆராய்ந்து, பின்னர் அவனிடம் காணப்படும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியாக இருப்பவை எவை என்று கண்டறிந்து, மிகுதியாக இருப்பவையின் அடிப்படையில் அவனது தகுதியை முடிவு செய்ய வேண்டும் (குறள் – 504). எல்லாவகைகளிலும் ஆராய்ந்து தெளிந்த பிறகும், செயலை முறையாகச் செய்யும்பொழுது, அச்செயலின் இயல்பால் மனம் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உள்ளனர் (குறள் – 514). ஒரு தலைவனானவன் (வேந்தனானவன்) அவனிடம் பணிபுரிபவர்கள் அனைவரையும் சமமாகக் கருதாமல், அவரவர் தகுதிக்கேற்ப செய்ய வேண்டிய சிறப்புக்களைச் செய்தால், அந்தச் சிறப்பினைக் கருதி, அவனை விட்டுப்பிரியாமல் அவனைச் சூழ்ந்து வாழ்வோர் பலர் (குறள் – 528).

 

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.                                          (குறள் – 503)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.                                          (குறள் – 504)

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.                                           (குறள் – 514)

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.                                      (குறள் – 528)

 

ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் ஒரே வகையில் பாடம் கற்பித்தாலும் அனைவரும் ஒரே மதிபெண்களைப் பெறுவதில்லை. ஓட்டப் பந்தயங்களில் பங்குபெறுபவர்களுக்கு ஒரே வகையான பயிற்சி அளித்தாலும். பந்தயத்தில் ஒருவன்தான் முதலில் வருகிறான். மற்றவர்கள் அவனைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். அதுபோல், எப்படித் தேர்ந்தெடுத்தாலும், பணிபுரிபவர்கள் அனைவரும் ஒரே முறையில் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு செயலை ஒப்படைத்த பிறகு, ஒருவன் எவ்வாறு அப்பணிகளைச் எப்படிச் செய்வான் என்பதை முன்னதாகவே நிர்ணயிக்க முடியாது. முதலில் சுறுசுறுப்பாக இருந்து பின்னர் ஊக்கம் குறைந்து சிலர் செயல்படுவார்கள். சிலர் ஒரு பணியைக் கற்றுக்கொள்ளும்பொழுது முதலில் சற்றுத் தயக்கத்தோடும், தவறு செய்துவிடக்கூடாது என்ற நோக்கத்தோடும் சற்று மெதுவாகப் பணிபுரிந்து பின்னர் சிறப்பாகப் பணிபுரிவார்கள். ஆகவே, பொறுப்பை ஒப்படைத்த பிறகு, தொழிலாளி எப்படிப் பணிபுரிகிறான் என்பதை மேலாளர் கண்காணிக்க வேண்டும். அவர்களின் செயல்திறனுக்கேற்ப அவர்களுக்கு ஊதியத்தில் உயர்வு, பதவி உயர்வு, வெகுமதிகள் (bonus), பரிசுகள், வழங்க வேண்டும். செயல்திறனை மதிப்பிட்டுப் பணியாளர்களைப் பாராட்டாவிட்டால், அவர்கள் பணியில் உற்சாகம் குறைந்து, சிறப்பாகப் பணிபுரிய மாட்டர்கள். இன்றைய சூழ்நிலையில், பல நிறுவனங்களில், மனிதவளத்தின் சிறப்பைக் கருதி, பணியாட்களின் திறமைக்கேற்ப சம்பள உய்ர்வு, பதவி உயர்வு, வெகுமதிகள் ஆகியவை முடிவு செய்யப்படுகின்றன.

 

தகவல் தொடர்பு (Communication): பணியாட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கேற்ற வேலைகளைப் பகிர்ந்தளித்து, அவர்களை மேற்பார்வை செய்வது மேலாண்மையில் அடங்கும் பணிகள்.  மேலாண்மையின் எல்லா நிலைகளிலும் மேலாளருக்கும் பணியாளர்களுக்கும் தகவல் தொடர்பு இன்றியமையாத ஒன்று. பொதுவாக, அதிகார பூர்வமான அறிக்கைகளும் செய்திகளும் எழுத்து மூலம் அறிவிக்கப்படுவது வழக்கம். பல சமயங்களில், மேலாளர் ஒரு ஊழியரிடம் உரையாட வேண்டியதாக இருக்கும். சில சமயங்களில், மேலாளர் பல ஊழியர்களிடம் ஒரே நேரத்தில், அவையில் பேசுவதுபோல் பேச வேண்டியதாக இருக்கும். ஆகவே, மேலாண்மைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எல்லாச் சூழ்நிலைகளிலும் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் பற்றி நன்கு தெரிந்திருப்பது நல்லது. பேச்சு வன்மை ஒரு நல்ல செல்வம். அதனால் வரும் நலம் மற்ற செல்வங்கள் எவற்றிலும் இல்லை (குறள் – 641) என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு நன்மையும் தீமையும் அவன் சொல்லுகின்ற சொல்லின் மூலம் ஏற்படுவதால், அவன் தன்னுடைய சொல்லில் சோர்வு ஏற்படாமல் கவனமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (குறள் – 642). ஒருவரோடு உரையாடும்பொழுது, தான் சொல்வதைப் பிறர் தொடர்ந்து கேட்க விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும்பொழுது, அவர்களின் சொல்லின் பயனை ஆராய்ந்து தெரிந்துகொள்ளுதல், சிறந்த பண்புகளைக்கொண்ட மாசற்றவர்களின் கொள்கையாகும் (குறள் – 646).

 

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.                          (குறள் – 641)

 

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.                           (குறள் – 642)

 

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.                                       (குறள் – 646)

 

 

பல நேரங்களில், பணியாட்களின் முகத்திலிருந்தும், உடல் மொழியாலும் (உடல் மொழி – Body Language) அவர்களின் உள்ளத்தில் இருப்பதை கண்டுகொள்ள வேண்டியதாக இருக்கும். ஒருவருடைய உள்ளத்தில் உள்ளதை அவருடைய முகத்திலிருந்து நன்கு தெரிந்துகொள்ளலாம் என்பதில் வள்ளுவர் மிகுந்த நம்பிக்கை உடையவராகக் காணப்படுகிறார். தன்னை அடுத்திருக்கும் பொருளின்  உருவத்தைக் காட்டக்கூடிய பளிங்குபோல், ஒருவனது நெஞ்சில் மிகுந்து காணப்படும் எண்ணத்தை அவனது முகமானது, தானே வெளிக்காட்டிவிடும் (குறள் – 646).

 

 

          அடுத்து காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.                                    (குறள் – 706) 

 

இருபதாம் நூற்றாண்டில், அமெரிக்காவில் வாழ்ந்த டேல் கார்னிகி (Dale Carnegie, 1888 –1955) என்னும் அறிஞர், உரையாடல், மற்றும் அவையில் பேசுவதைப் பற்றி மிகச் சிறந்த கருத்துக்களைத் தன்னுடைய  “The Quick and Easy Way to Effective Speaking” என்ற நூலில் கூறியுள்ளார். அவருடைய கருத்துக்களுக்கும் வள்ளுவரின் கருத்துக்களுக்கும் மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் வேறு பலரும் உரையாடல், சொற்பொழிவாற்றல் ஆகியவற்றைப் பற்றிப் பலநூல்கள் எழுதியுள்ளனர். தகவல் தொடர்பைப் பற்றி தற்காலத்து அறிஞர்களின் கருத்தும் வள்ளுவரின் கருத்துக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வியக்கத் தக்கதாக உள்ளது.

 

கட்டுப்படுத்துதல்(Controlling)

திட்டமிடுதல், கட்டமைத்தல், பணியமர்த்தல், நெறிப்படுத்துதல் ஆகிய பணிகளைப்போல் மேலாண்மையில் கட்டுபடுத்துதல் என்பதும் ஒரு பணியாகும். ஒரு பணி திட்டமிட்டபடி சரியான காலத்தில் நடைபெறுகிறதா, திட்டமிடும்பொழுது நிதி ஒதுக்கியபடி நிதி செலவழிக்கப்படுகிறதா என்று ஆராய்வதும், திட்டப்படி நிகழ்வுகள் நடைபெறாவிட்டால் அவற்றை திட்டத்திற்கேற்ப சரிசெய்வதும், திட்டங்களை மாற்றி அமைப்பதும் கட்டுப்படுத்துதல் என்ற கட்டத்தில் நடைபெறும் பணிகளாகும்.

 

ஒரு மன்னன் தன் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், தன் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் மட்டுமல்லாமல், பகைவர்களின் செயல்களையும் முன்னெச்சரிகையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். இவ்வாறு நாட்டு நிகழ்வுகளையும் பகைவர்களின் செயல்களையும் தெரிந்துகொள்வதற்கு மன்னன் எவ்வாறு ஒற்றர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒற்றாடல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார். எல்லோரிடத்திலும் நிகழக்கூடிய எல்லாவற்றையும் மன்னன் விரைந்து அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு ஒற்றர் வழியாக நடப்பவை அனைத்தையும் அறிந்துகொள்வது மன்னனின் தொழில் (குறள் – 582).

 

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.                                            (குறள் – 582)

 

வள்ளுவர் மன்னனுக்குக் கூறும் அறிவுரை மேலாளருக்கும் பொருந்தும். திட்டப்படி அனைத்தும் நடைபெறுகின்றனவா என்பதைத் தெரிந்துகொள்வது மேலாளரின் தொழில். மேலாளருக்கு ஒற்றர்கள் தேவையில்லை. தன்னிடம் பணிபுரிபவகளிடமிருந்தும், தன்னுடைய நுண்ணறிவாலும், கண்காணித்தலாலும், திட்டத்திற்கேற்ப பணிகள் நடைபெறுகின்றனவா என்பதை மேலாளர் அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு அறிந்தகொண்ட பிறகு, திட்டப்படி நடைபெறாதவற்றைச் சரிசெய்வதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பதும் மேலாளரின் கடமையாகும்.

 

தலைமைப் பண்புகள்

கூன்ட்ஸ் மற்றும் ஓ’டோனல் (Koontz and O’Donnel) ஆகிய இருவரும் இயற்றிய “Principles of Management: An Analysis of Managerial Functions” என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைப் போல், திட்டமிடுதல், கட்டமைத்தல், பணியமர்த்தல், நெறிப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய மேலாண்மையில் அடங்கும் பணிகளைப் பற்றி வள்ளுவரின் கருத்துக்களைப் பார்த்தோம். இந்தப் பணிகளைச் செவ்வனே செய்வதற்கு, ஒரு மேலாளருக்குப் பல நற்பண்புகளும் இருக்க வேண்டும்.

 

ஒரு மேலாளரிடம் பணியாற்றுபவர்கள் அவரைத் தங்கள் தலைவராகவே கருதுகிறார்கள். அதனால், ஒவ்வொரு மேலாளரும் ஒரு தலைவர்தான். ஆகவே, ஒரு தலைவருக்குத் தேவையான நற்பண்புகள் அனைத்தும் மேலாளருக்கும் தேவை. திருக்குறளில் அரசியல் (அதிகாரம் 39 – அதிகாரம் 63) என்ற பிரிவில் ஒரு மன்னன் எவ்வாறு ஆட்சி செய்யவேண்டும் என்பதைப் பற்றியும், அவனுக்குத் தேவையான தலைமைப் பண்புகளைப் பற்றியும், வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். குற்றங் கடிதல், தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், செங்கொன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, ஒற்றாடல் ஆகிய பதினொரு அதிகாரங்களில், மன்னன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்த அதிகாரங்களிலிருந்து, மேலாண்மைக்கேற்ற கருத்துக்களைப் பார்த்தோம். இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம் தழால், பொச்சாவாமை, கண்ணோட்டம், ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய பதினான்கு அதிகாரங்களில் மன்னனிடம் இருக்க வேண்டிய தலைமைப் பண்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. அஞ்சாமை, அறம், மறம், துணிவுடைமை, ஊக்கமுடைமை, மடியின்மை, தூங்காமை, பொச்சாவாமை, கல்வி, கேள்வி, அறிவு, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றந் தழால், ஈகை, கொடை, அளி, கண்ணோட்டம், காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் கூறல், செவிகைப்பச் சொற்பொறுத்தல், ஆள்வினையுடைமை இடுக்கண் அழியாமை ஆகியவை வள்ளுவர் கூறும் தலைமைப் பண்புகள்[4]. இப்பண்புகள் அனைத்தும் மேலாண்மைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மிகவும் இன்றியமையாத  நற்பண்புகளாகும்.

 

முடிவுரை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பல அரிய கட்டடங்கள், அணைக்கட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை கட்டப்பட்டுவருகின்றன. முறையான மேலாண்மை இல்லாமல் இதுபோன்ற கட்டுமானப் பணிகள் நடந்திருக்க முடியாது. பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கிய பிறகு, பல தனியார் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. பின்னர், மேலாண்மையைப் பற்றிக் கல்வியாளர்கள் ஆராயத் தொடங்கினர். மேலாண்மையைப் பற்றி நூல்கள் எழுதப்பட்டன. மேலாண்மயைப் பற்றிப் பல கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. கூன்ட்ஸ் மற்றும் ஓ’டோனல் (Koontz and O’Donnel) என்ற இருவரும் இயற்றிய “Principles of Management: An Analysis of Managerial Functions” என்ற நூலில், அவர்கள் ”திட்டமிடுதல் (Planning), கட்டமைத்தல் (Organiizing), பணியமர்த்தல் (Staffing), நெறிப்படுத்துதல் (Directing), கட்டுப்படுத்துதல் (Controlling)” ஆகியவை ஐந்தும் மேலாண்மையில் அடங்கும் பணிகள் என்று கூறியிருப்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த ஐந்து பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றித் திருக்குறளில் பல அரிய கருத்துக்கள் அரசியல், அமைச்சியல் என்ற பிரிவுகளில் காணப்படுகின்றன. வள்ளுவரின் கருத்துக்கள் காலம் நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்கு வழிகாட்டுகின்றன என்பது, ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு என்று கூறிய பாரதியின் கூற்றை உறுதிபடுத்துகிறது.

 

துணைநூல்கள்

Covey, Stephen R. The Seven Habits of Highly Effective People, Simon and Schuster, London; 1989

Diaz, S.M. Thirukkural, Volumes 1 &2.  Ramanandha Adigalar Foundation, Chennai: 2000.

Carnegie, Dale. The Quick & Easy Way to Effective Speaking. Rupa Publications India Pvt. Ltd.

7/16 Ansari Road, Daryaganj, New Delhi 110 002

Drucker, Peter F. The Essential Drucker, HarperCollins Publishers, New York, NY: 2001

Harold Koontz and Cyril O’Donnel. Principles of Management: An analysis of Managerial

Functions, Fifth Edition, McGraw-Hill Book Company, New York 1973

Porter, Michael E. Creating and Sustaining Superior Performance. Free Press, 1985.

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural)

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக

நிலையம், மயூரா வளாகம், மதுரை: 1999.



[1]. Planning is an essential function of management. According to Koontz and O’Donnel, “Planning is deciding in advance - what to do, when to do and how to do. It bridges the gap between where we are and where we want to be.”

 

[2]. There is a tide in the affairs of men.

Which, taken at the flood, leads on to fortune;

Omitted, all the voyage of their life

Is bound in shallows and in miseries.

(Julius Caesar, Act-IV, Scene-III, Lines 249- 252) 

[3]. The 4 Ps of marketing is a famous concept that summarizes the 4 basic pillars of any marketing strategy: product, price, place, and promotion.

 

[4]. “திருக்குறளில் தலைமைப் பண்புகள்” என்ற கட்டுரையில் வள்ளுவர் கூறும் தலைமைப் பண்புகளைப் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையை, https://thirukkuralkatturaikal.blogspot.com என்ற வலைத்தளத்தில் காணலாம்.

 


Sunday, July 12, 2020

திருக்குறளில் தலைமைப் பண்புகள்

திருக்குறளில் தலைமைப் பண்புகள்[1]

 

வியக்கத் தக்க சாதனைகள் புரிந்த பலரைப் பற்றிய செய்திகளை வரலாற்றில் காண்கிறோம். உதாரணமாக, கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னன் வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில், சேர மன்னனாகிய பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும், பல குறுநில மன்னர்களையும் வென்று தமிழகம் முழுவதையும் ஆண்டான். அவனிடம் ஒப்புயர்வற்ற கப்பற்படை இருந்தது.  அவன் தன் கப்பற்படையின் உதவியோடு இலங்கை மன்னனை வென்று, அங்கிருந்து பலரைக் கைது செய்து, தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்து, காவிரிக்கரையைச் செப்பனிடுவதற்குப் பயன்படுத்தினான்.  காவிரியில் கல்லணையைக் கட்டி உழவர்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு வழிவகுத்து அழியாப் புகழ் பெற்றான். கரிகால் சோழனைப்போல், மற்ற நாடுகளிலும் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்தவர் பலர். உதாரணமாக, அலெக்சாண்டர் (Alexander the great of Macedonia), சைரஸ் (Cyrus the great of Persia), ஜெங்கிஸ் கான் (Genghis khan of Mongolia), அசோகச் சக்கரவர்த்தி (Emperor Ashoka the Great of India), நெப்போலியன் போனபார்ட்(Napoleon Bonaparte of France) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மிகப்பெரிய நிறுவனங்களை நிறுவி, பாராட்டத் தக்க தொழில் நுட்பக் கருவிகளைத் தயாரித்து, விற்பனை செய்து, மிகுந்த இலாபம் அடைந்து வரலாற்றில் தடம் பதித்தவர்கள் பலர். அவர்களுள், ஆப்பிள்(Apple.) நிறுவனத்தைத் தொடங்கி, பல அரிய தொழில் நுட்பக் கருவிகளைக் கண்டுபிடித்து, விற்பனை செய்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs) என்பவரும், மைக்ரோசாப்ட்(Microsoft.) நிறுவனத்தின் தலைவராகிய பில் கேட்ஸ்(Billi Gates) என்பவரும், அமேசான் (Amazon) நிறுவனத்தைத் தொடங்கி, வணிகத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களையும் சாதனைகளையும் படைத்து வெற்றிபெற்ற ஜெஃப் பேசோஸ்(Jeff Bezos) என்பவரும் குறிப்பிடத் தக்கவர்கள். தென்னாப்பிரிக்காவில் வழக்கிலிருந்த நிறவெறி, இனவெறி ஆகியவற்றை எதிர்த்துப் போராடி, அங்குள்ள மக்களுக்கு விடுதலைபெற்றுத் தந்த நெல்சன் மண்டெலோ(Nelson Mandela), வெள்ளையர்களிடமிருந்து இந்தியர்களுக்கு விடுதலைபெற்றுத் தந்த காந்தி அடிகள்(Mahatma Gandhi), அமெரிக்காவில், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சம உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்(Martin Luther King) போன்றவர்களும் வரலாறு காணாத சாதனைகளைப் படைத்தவர்களின் பட்டியலில் இடம்பெறத் தக்கவர்கள்தான்.

இவர்கள் தங்கள் சாதனைகளுக்காக சரித்திரத்தில் இடம்பெற்றாலும், இவர்களுடைய சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்து உழைத்தவர்கள் பலர். படைவீரர்கள் இல்லாமல் கரிகால் பெருவளத்தானும் மற்ற மன்னர்களும் வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. தங்கள் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பல்வேறு பணிகளைச் செவ்வனே செய்யும் ஊழியர்கள் இல்லாமல், ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ் போன்றவர்கள் தங்கள் தொழிற்துறைகளில் வெற்றிபெற்றிருக்க முடியாது. அயராது உழைத்து, சிறைக்குச் செல்வதையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த தொண்டர்கள் இல்லாமல் நெல்சன் மண்டெலோ, காந்தி அடிகள், மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் தங்கள் போராட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இத்தனைபேர் பாடுபட்டு உழைத்தாலும் வரலாற்றில் இடம்பெறுபவர்கள் வெற்றிபெற்ற மன்னர்களும், தொழிற்துறைத் தலைவர்களும், விடுதலை என்னும் வித்தை விதைத்த தலைவர்கள் மட்டுமேதான்.

தலைவர் என்பவர் யார்?

பீற்றர் டிரக்கர்(Peter Drucker) என்ற அறிஞர், “சரியான செயல்களைச் செய்பவர் தலைவர்; செயல்களைச் சரியாகச் செய்பவர் மேலாளர்” என்று கூறுகிறார்[2]. எந்தச் செயல்கள் நாட்டிற்குத் தேவையானவை, நன்மை பயப்பவை, தனக்கு வெற்றியைத் தருபவை என்று சிந்தித்து முடிவெடுப்பது ஒரு மன்னனின் கடமை. எந்தத் தொழிலைத் தொடங்கினால் வெற்றிபெற முடியும் என்று முடிவு செய்யவேண்டியது ஒரு நிறுவனத்தின் தலைவரின் பொறுப்பு. எந்தச் செயல்கள் நாட்டுமக்களுக்கு அல்லது தன் இனத்திற்குத் தேவை என்று போராட்டங்களைத் தொடங்குவதற்குமுன் முடிவெடுப்பது மக்களுக்காக உழைக்கும் தலைவர்களுக்குத் தேவை. இவ்வாறு முடிவெடுக்கும்பொழுது, தலைவர்களின் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களின் வெற்றி உயர்ந்ததாக இருக்கும் என்பது வள்ளுவரின் கருத்து. நீரில் உள்ள மலரின் உயரம் அந்த நீரின் ஆழத்தைப் பொருத்தது. நீரின் ஆழம் அதிகமாக அதிகமாக, மலரைத் தாங்கி நிற்கும் தண்டின் நீளமும் அதிகரித்துகொண்டே இருக்கும். அதுபோல், ஒருவனின் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் உயர்வடைகிறான் என்று வள்ளுவர் கூறுகிறார். 

            வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

          உள்ளத்து அனையது உயர்வு.                                         (குறள் – 595) 

உயர்ந்த எண்ணம், பீற்றர் டிரக்கர் கூறும் “சரியான முடிவு”, இலட்சியம் ஆகிய அனைத்தும் ஒன்றுதான். அதைத்தான் ஆங்கிலத்தில் ”vision” என்று கூறுகிறார்கள். அதாவது, தலைவர்கள் உயர்ந்த எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

உயர்ந்த எண்ணத்தைச் செயல்படுத்தினால்தான் வெற்றி அடைய முடியும். அந்த உயர்ந்த எண்ணத்தை செயல்படுத்துவதற்குப் பலருடைய உதவிகள் தேவை. ஒரு தலைவன் என்பவன், தன்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு, மற்றவர்களை ஒருங்கிணைத்து, அவனுடைய இலட்சியத்தைத் மற்றவர்களும் தங்கள் இலட்சியமாகக்கொள்ளுமாறு அவர்களை ஊக்குவித்து, அவர்களுடைய உதவியால் தன் இலட்சியத்தை அடையும் ஆற்றல் உடையவனாக இருக்கவேண்டும்[3]. பலரையும் ஒருங்கிணைத்து, ஊக்குவித்து அவர்களுடைய உதவியாலும் ஒத்துழைப்போடும் தன் இலட்சியத்தை ஒரு தலைவன் அடைய வேண்டுமானால், அவனிடம் பல சிறந்த பண்புகள் இருக்க வேண்டும். அந்தப் பண்புகள் என்னவென்று பார்ப்போம்.

திருக்குறளில் அரசியல் (அதிகாரம் 39 – அதிகாரம் 63) என்ற பிரிவில் ஒரு மன்னன் எவ்வாறு ஆட்சி செய்யவேண்டும் என்பதைப் பற்றியும், அவனுக்குத் தேவையான தலைமைப் பண்புகளைப் பற்றியும், வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். குற்றங் கடிதல், தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், செங்கொன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, ஒற்றாடல் ஆகிய பதினொரு அதிகாரங்களில், மன்னன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடை,மை, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம் தழால், பொச்சாவாமை, கண்ணோட்டம், ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய பதினான்கு அதிகாரங்களில் மன்னனிடம் இருக்க வேண்டிய பண்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. மற்ற அதிகாரங்களைவிட இறைமாட்சி என்ற அதிகாரத்தில் பல பண்புகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.  மன்னனின் பண்புகளைப் பற்றி வள்ளுவரின் கருத்துக்களை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம். 

இறைமாட்சியில் காணப்படும் தலைமைப் பண்புகள்

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.                                          (குறள் – 382)

பொருள்: அஞ்சாமை, ஈகை, அறிவு. ஊக்கம் ஆகிய நான்கு பண்புகளும் வேந்தர்களுக்குச் சிறிதும் குறைவின்றி, இயல்பாக இருக்க வேண்டும் (குறள் – 382). 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு.                                              (குறள் – 383)

பொருள்: அரசன் தன் பணிகளைச் செய்வதில் காலம் தாழ்த்தாமல் செய்யும் ஆற்றல், கல்வி, மனத்திட்பம் ஆகிய நான்கும் நீங்காமல் உடையவனாக இருக்க வேண்டும் (குறள் – 383).

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.                                                    (குறள் – 384)

பொருள்: அறநெறிகளிலிருந்து தவறாமல், மற்றவர்களால் எவ்விதத் தீங்கும் நேராமல் தடுத்து, வீரத்திலிருந்து வழுவாமல் இருப்பவனே பெருமைக்குரிய அரசன் (குறள் – 384).

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்                                               (குறள் – 386)

பொருள்: ஒரு மன்னன் மக்களால் காண்பதற்கு எளியவனாகவும், எவர் மாட்டும் கடுஞ்சொற்கள் பேசாதவனாகவும், இருப்பானானால் அவனது குடிமக்கள். அவனை மிகவும் பாராட்டுவார்கள். (குறள் – 386).

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.                                         (குறள் – 387)

பொருள்: இனிய சொற்களைக் கூறி, வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்து, மக்களைக் காப்பாற்றவல்ல அரசனக்கு, அவனுடைய சொல்லாற்றலாலேயே, இவ்வுலகமானது அவன் கருதுகின்ற அளவுக்கு அவனுடையதாக ஆகிவிடும் (குறள் – 387).

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.                                         (குறள் – 389)

பொருள்: தன் செவிகள் கசக்கும்படி, தன் குற்றங்களை அமைச்சர், மக்கள் முதலியோர் இடித்துக் கூறும்பொழுது, அவர்களுடைய சொற்களைப் பொறுமையோடு கேட்கக் கூடிய பண்புள்ள வேந்தனின் ஆட்சியின் கீழ் இவ்வுலகம் தங்கும் (குறள் – 389).

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.                                    (குறள் – 390)

பொருள்: நன்கொடை வழங்குதல், யாவரிடத்தும் அன்பாக இருத்தல், செங்கோல் செலுத்துதல், குடிமக்களைப் பாதுகாத்தல் ஆகிய நான்கு பண்புகளும் உடைய வேந்தன், பிற வேந்தர்களுக்கெல்லாம் ஒளிதரும் விளக்குப் போன்றவன் ஆவான் (குறள் – 390)

மற்ற அதிகாரங்களில் காணப்படும் தலைமைப் பண்புகள்

மடியின்மை, பொச்சாவாமை, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம் தழால், கண்ணோட்டம், ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய பண்புகளும் தலைவனுக்குத் தேவையான பண்புகள்தான். 

வள்ளுவர் கூறும் தலைமைப் பண்புகளின் தொகுப்பு

இறைமாட்சி என்ற அதிகாரத்தில் காணப்படும் சில பண்புகளும் மற்ற அதிகாரங்களில் காணப்படும் சில பண்புகளும் தொடர்புடையவையாகையால் அவற்றைத் தொடர்புடைய ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

.

1.     அஞ்சாமை, அறமும் மறமும், துணிவுடைமை

2.     ஊக்கமுடைமை, மடியின்மை, தூங்காமை, பொச்சாவாமை

3.     கல்வி, கேள்வி, அறிவு, பெரியாரைத் துணைக்கோடல், (சிற்றினம் சேராமை), சுற்றந் தழால்

4.     ஈகை, கொடை, அளி, கண்ணோட்டம்

5.     காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் கூறல், செவிகைப்பச் சொற்பொறுத்தல்

6.     ஆள்வினையுடைமை இடுக்கண்அழியாமை

அஞ்சாமை, அறமும் மறமும், துணிவுடைமை

அஞ்சாமை: அச்சம் என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் பண்பு. சிலவற்றிற்கு அஞ்ச வேண்டும். சிலவற்றிற்கு அஞ்சத் தேவையில்லை. ”அஞ்சத்தகும் செயலுக்கு அஞ்சாமை அறிவின்மையாம்; அஞ்சத் தகும் செயலுக்கு அஞ்சுதல் அறிவுடையவர் கடமையாம்.” என்பது வள்ளுவரின் கருத்து. 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.                            (குறள் – 428)

 

உதாரணமாக, ஒருவன் பழிபாவங்களுக்கு அஞ்ச வேண்டும். ஆனால், போருக்குச் செல்பவன் பகைவரின் படையைக் கண்டு அஞ்சக் கூடாது. ஒரு தொழிலில் இருப்பவன் தன் தொழிலில் தன்னோடு மற்றவர்கள் போட்டியிட்டால், போட்டியைக் கண்டு அஞ்சாமல் தான் தன் தொழிலில் முன்னேறுவதற்கான செயல்களை விடாமுயற்சியோடு செய்ய வேண்டும்.  இதுபோன்ற சூழ்நிலைகளில் அச்சம் இருக்கலாம். ஆனால், அந்த அச்சத்தால் மனம் தளராமல், அந்த அச்சத்தைக் கடந்து செயல்பட வேண்டும். அச்சத்தைக் கடந்து செயல்படுவதற்கு வீரம் வேண்டும். எப்பொழுது எதற்கு  அஞ்ச வேண்டும், எப்பொழுது எதற்கு அஞ்சக் கூடாது என்பதை அறிந்து  விவேகத்தோடு செயல்பட வேண்டும். இவ்வாறு விவேகத்தோடு கூடிய வீரத்தைத்தான் வள்ளுவர் அஞ்சாமை என்று கூறுவதாகத் தோன்றுகிறது.

அறமும் மறமும்

வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஒருவன் அறத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் திருக்குறளில் நாம் காணும் கருத்து. மன்னனாக இருப்பவன் அறநெறிகளைப் பின்பற்றி, தனக்கும் தன் குடிமக்களுக்கும் நிகழக்கூடிய தீமைகளைத் தவிர்த்து வாழவேண்டும் என்ற கருத்து குறளில் காணப்படுகிறது. அறநெறிகளிலிருந்து தவறாமல், மற்றவர்களால் எவ்விதத் தீங்கும் நேராமல் தடுத்து, வீரத்திலிருந்து வழுவாமல் இருப்பவனே பெருமைக்குரிய அரசன் (குறள் – 384). 

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.                                                    (குறள் – 384)

 

வள்ளுவர் போரை ஆதரிக்கவில்லை. ஆனால், பகைவர் போரிட்டால் தற்காப்புக்காகப் போரிடுவதை அவர் மறுக்கவில்லை. அதனால்தான், படைமாட்சி, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்கள் குறளில் இடம்பெற்றிருக்கின்றன. வள்ளுவர் உலக இயல்பை நன்கு அறிந்தவர். போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆகவே, மன்னனாக இருப்பவன் தானாகப் போரைத் தொடங்காவிட்டாலும், பகைவர் போரிட்டால் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும். அவ்வாறு போரிடுவதற்கு அறம் மட்டும் போதாது; மறம் (வீரம்) தேவை. மன்னனுக்கு மட்டுமல்லாமல், தற்காலத்தில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அறமும் மறமும் தேவை. அவர்களும் அறநெறியில், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தங்கள் நிறுவனத்தை வழிநடத்த வேண்டும். அவர்கள் தங்கள் தொழிலில் பல இடையூறுகளையும் இன்னல்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். அந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் மனம் தளராமல் துணிவோடு பணியாற்ற வீரம் வேண்டும். ஆகவே, அறமும் மறமும் அன்றும் தேவை; இன்றும் தேவை; என்றும் தேவை.

துணிவுடைமை: தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறுவதற்குப் பலர் இருப்பார்கள். அவர்கள் வெவ்வேறு அறிவுரைகள் கூறுவார்கள். ஒரு சூழ்நிலையில் பல விதமாக முடிவெடுக்கும் வாய்ப்புகள் உண்டு.  அப்பொழுது, ஆராய்ந்து தெளிவாக உறுதியான முடிவெடுக்கும் மனத்திட்பம்தான் துணிவுடைமை. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு துணிவுடைமை ஒரு இன்றியமையாத பண்பு.

 

ஊக்கமுடைமை, மடியின்மை, தூங்காமை, பொச்சாவாமை

ஊக்கமுடைமை: ஊக்கமுடைமை என்பது தளராத மனக்கிளர்ச்சியுடனும், விடாமுயற்சியுடனும் பணியாற்றுவதைக் குறிக்கிறது. ”ஒருவர் உடைமைகள் பல உடையவராயினும், ‘உடையவர்’ எனச் சிறப்பித்துக்கூறத் தகுதியுடையது ஊக்கமுடைமையாகும். அவ்வூக்கமுடைமையைப் பெறாதவர்கள் பிற உடைமைகள் பலவற்றைப் பெற்றிருந்தாலும், அவர்கள் ‘உடையர்’ என்று சிறப்பித்துச் சொல்லத்தக்கவர்கள் ஆகமாட்டார்கள்.”, என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 591). 

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்

டையது உடையரோ மற்று.                                                (குறள் – 591)

 

அஞ்சாமையும், ஈகையும், அறிவும், ஊக்கமும் அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டும் (குறள் – 382) என்பது வள்ளுவரின் கருத்து.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.                                          (குறள் – 382)

ஊக்கம்’ என்பதைஆங்கிலத்தில் ‘Energy” என்று ஜி.யு. போப் அவர்களும் மற்றவர்களும் மொழிபெயர்க்கிறார்கள்.  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஊக்கம் என்பது இன்றியமையாது. கடந்த நூற்றாண்டில், ஜெனெரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றி அந்த நிறுவனத்தை மிக இலாபகரமாக வழிநடத்தியவர் ஜேக் வெல்ச்(Jack Welch) என்பவர். ஃபார்ச்சூன் (Fortune)  என்ற மாத இதழ், அவருக்கு “அமெரிக்காவின் மேலாளர் (America;s Manger)” என்று பட்டமளித்து அவரைச் சிறப்பித்தது. அவருடைய வெற்றிக்குக் காரணமாக இருந்தது ஊக்கமுடைமையில் அவருக்கு இருந்த தீவிர நம்பிக்கை என்று ஜெஃப்ரி கிரேமர்(Jeffrey Kramer) என்பவர் தன்னுடைய “ Jack Welch’s 4E’s of Leadership” என்ற நூலில் குறிப்பிடுகிறார். தலைவராக இருப்பவர் மிகுந்த ஊக்கமுடையவராக இருப்பது மட்டுமல்லாமல் தன்னோடு பணிபுரிபவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதில் ஜேக் வெல்ச் உறுதியாக இருந்ததாகவும் அவர் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

மடியின்மை: மடி என்ற சொல்லுக்கு சோம்பல் என்று பொருள். எண்ணியதை முடிக்கும் காலத்துச் சோம்பலின்றி உழைத்தல் மடியின்மை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, தான் செய்யும் பணிகளில் ஊக்கமும் உற்சாகமும் இருப்பவர்கள் சோம்பலின்றி உழைப்பார்கள். சோம்பல் இருந்தால் அது பணிகளைக் காலத்தில் செய்து முடிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் மடியின்மையை வள்ளுவர் வலியுறுத்துகிறார். சோம்பல் இல்லாமல் இருப்பது அரசனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவையான பண்பு. மாவலி என்ற மன்னனிடம் மூன்றடி மண் கேட்டுத் திருமால் இரண்டடியில் உலகம் முழுவதையும் அளந்ததாகப் புராணச் செய்தி ஒன்று கூறுகிறது. அவன் இரண்டடியில் உலகம் முழுவதையும் அளந்ததைபோல், சோம்பல் இல்லாத மன்னன் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொள்ளலாம் என்று வள்ளுவர் மடியின்மையின் சிறப்பைக் கூறுகிறார் (குறள் - 610).

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.     (குறள் – 610)

 

தூங்காமை: தூங்காமை என்பது காலம் தாழ்த்தாமல் செயலாற்றுவதைக் குறிக்கிறது. மடியின்மை என்ற அதிகாரத்தில் சோம்பேறித்தனம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் வள்ளுவர், பணிகளைச் செய்யும்பொழுது அவற்றைக் காலம் தாழ்தாமல் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். அரசன் தன் பணிகளைச் செய்வதில் காலம் தாழ்த்தாமல் செய்யும் ஆற்றலும், கல்வியும், மனத்திட்பமும் நீங்காமல் உடையவனாக இருக்க வேண்டும் (குறள் – 383). என்று வள்ளுவர் கூறுகிறார்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு.                                              (குறள் – 383)

 

 ஒரு செயலைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யாவிட்டால் அதனால் விளையும் தீமைகளால் நாட்டுக்கு (அல்லது நிறுவனத்துக்கு) கேடு வரலாம். காலம் தாழ்த்தாமல் .செய்ய வேண்டியவற்றை காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும் என்பதை, ”தூங்கற்க தூங்காது செய்யும் வினை (குறள் – 672) ” என்று வள்ளுவர் கூறுகிறார். மன்னனைப் போலவே, நிறுவனங்களின் தலைவர்களும் தங்கள் பணிகளைக் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு, தற்காலத்தில் அவர்களுக்கு உதவியாக பல மென்பொருட் கருவிகள் (Software tools) உள்ளன.

பொச்சாவாமை: பொச்சாத்தல் என்றால் மறத்தல் என்றும் பொச்சாவாமை என்றால் மறவாமை என்றும் பொருள். சோம்பேறித்தனத்தால் ஒரு செயலைச் செய்யாமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. காலம் தாழ்த்துவதினால் ஒரு செயலைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாமல் போகலாம். சோம்பேறித்தனம், காலம் தாழ்த்துதல் ஆகியவற்றைப்போல், மறதியும் செயல்களைச் செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், மறதியையும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, அளவு கடந்த கோபத்தைவிட சிறந்த மகிழ்ச்சியால் வரும் மறதி தீமையானது என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் - 531).

            இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியில் சோர்வு.                                    (குறள் – 531)

           

கல்வி, கேள்வி, அறிவு, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம் தழால்

கல்வி, கேள்வி: தூங்காமையைப் போல், கல்வியும் துணிவும் மன்னனுக்குத் தேவை என்று வள்ளுவர். கூறுகிறார் (குறள் – 383). ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றநிலை முனியாது கற்றல் நன்றே” என்று கூறி அனைவருக்கும் கல்வியின் இன்றியமையாமையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றில்[4] வலியுறுத்துகிறான். ”கேடில் விழுச்செல்வம் கல்வி”, என்று வள்ளுவர் கல்வியின் சிறப்பைக் கூறுகிறார். ”செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (குறள் – 411).” என்று கேள்வியின் சிறப்பையும் வள்ளுவர் கூறுகிறார். பல நூற்றாண்டுகளாகக் கல்வி மற்றும் கேள்வி ஆகியவற்றின் சிறப்பையும் பெருமையையும் தமிழர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அனைவருக்கும் கல்வியும் கேள்வியும் தேவை என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மன்னுக்குக் கல்வியும் கேள்வியும் தேவை; மக்களுக்கும் அவை தேவை. இன்றைய சூழ்நிலையில் நிறுவங்களின் பொறுப்பில் இருப்பவர்களுக்குக் கல்வியும் கேள்வியும்  மிகமிக இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்த கருத்து.

 

அறிவு: தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு.”, என்று குறள் – 383ல் வள்ளுவர் கூறுகிறார். ஆனால், ”அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.” .என்று குறள் 382ல் கூறுகிறார். அதனால், கல்வியும் தேவையும் அறிவும் தேவை என்பது புலப்படுகிறது. அறிவு என்பது என்ன? ”அறிவு என்னும் சொல், அறிதல் (perception, learning, understanding) அறிந்த செய்தி (knowledge), ஓதி (wisdom), மதி (intelligence) என்னும் நாற்பொருளுணர்த்தும் ஒரு சொல்.”, என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் கூறுகிறார்.  ஓதி என்ற சொல் இப்பொழுது வழக்கில் இல்லை. ஒருவன் தான் கற்றதாலும், கேட்டதாலும் அறிந்த செய்தியை தன்னுடைய அனுபவத்தோடு சேர்த்துச் சரியான முடிவெடுக்கும் ஆற்றல்தான் ஓதி. ஓதி என்ற சொல்லுக்குப் பதிலாக மெய்யறிவு என்ற சொல்லை முனைவர் வா. செ. குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர். 383- ஆவது குறளில், மன்னனுக்குக் கல்வி தேவை என்று கூறுவதால், இங்கு, அறிவு என்ற சொல் மெய்யறிவைக் குறிப்பதாகக் கருதுவது சிறந்ததாகத் தோன்றுகிறது.

 

முறையாகக் கல்வி கற்காவிட்டாலும், ஆலோசகர்களிடமிருந்து வெவ்வேறு கருத்துக்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தன் சொந்த அறிவையும் அனுபவத்தையும் கலந்து சரியான முடிவெடுக்கும் மெய்யறிவு உடையவர்களாகச் சிலர் இருந்ததை நாம் வரலாற்றில் காண்கிறோம். உதாரணமாக, மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர் பதவிக்கு வந்தபொழுது அவருக்கு வயது பதின்மூன்று. அவர் முறையாக் கல்வி கற்காதவர். ஆனால், நல்லாட்சி புரிய வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு, தன்னுடைய அமைச்சர்களோடு கலந்தாலோசித்துப் பலரும் பாராட்டத் தக்க வகையில் தன்னுடைய மெய்யறிவைப் பயன்படுத்தி அக்பர் ஆட்சிபுரிந்தார்.

கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர் ஒரு படிக்காத மேதை. மக்களின் நலத்தையே மனத்தில்கொண்டு பல நல்ல திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தினார். மற்றும், தமிழர்களின் முன்னேற்றத்தை மனத்தில்கொண்டு, சுயமரியாதையையும், பெண்ணுரிமையையும், பகுத்தறிவையும் தமிழர்களிடையே பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் வாழ்நாள் முழுதும் உழைத்துத் தமிழ்ச் சமுதாயத்தில் பிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கிய தந்தை பெரியார் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. கல்வி கேல்விகளால் பெறும் அறிவு சிறப்பானது. ஆனால், மெய்யறிவு அதைவிடச் சிறப்பானது; தலைவர்களுக்கு மிகமிகத் தேவையானது என்பதற்கு, அக்பர், காமராஜர், பெரியார் போன்றவர்கள் தலைவர்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை: கல்வி, கேள்வி, அறிவுடைமை ஆகியவற்றால், ஒரு தலைவன் சிறந்த முடிவு எடுக்கவும் அவற்றைச் செயல்படுத்தவும் முடியும் என்றாலும், அறிவிலும் ஆற்றலிலும், அனுபவத்திலும் சிறந்த பெரியோரைத் தலைவர்கள் தமக்குத் துணையாகக் கொள்வது மிகவும் இன்றியமையாதது என்பது வள்ளுவரின் கருத்து என்று பெரியாரைத் துணைக்கோடல் வுடைமை என்ற அதிகாரத்திலிருந்து தெரிகிறது. அறிவிலும் ஆற்றலிலும் அனுபவத்திலும் சிறந்த பெரியாரைத் தமக்குத் துணையாகக்கொள்வது, அரியவற்றுள் எல்லாம் அரியது (குறள் – 443) என்றும் அது வலிமையுள் எல்லாம் சிறந்த வலிமை (குறள் – 444) என்றும் வள்ளுவர் கூறுகிறார். இந்தக் கருத்து இன்றும் பயனுள்ளதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகிறது. பல நிறுவனங்களில், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு ஆலோசகர்களும் இயக்குநர்களும் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. பெரியாரைத் துணையாகக்கொள்வது சிறந்தது என்று கூறிய வள்ளுவர் சிறியாரோடு சேரக்கூடாது என்று தலைவர்களுக்கு அறிவுரை கூறத் தவறவில்லை.

”தான் சேர்ந்த நிலத்தின் இயல்புக்கேற்ப நீர் திரிந்து தன் தன்மையிலிருந்து வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையதாகிவிடும். அதுபோல், மக்களின் அறிவும் அவர்கள் சேரும் இனத்தின் தன்மைக்கேற்ப மாறும் (குறள் – 452).”, என்பதால், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சிறியோரோடு தொடர்புகொள்ளக்கூடாது என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.

சுற்றந்தழால்: சுற்றி இருப்பவர்கள் சுற்றம். சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் மன்னனுடைய அமைச்சர்கள், படைத் தளபதிகள், ஆலோசர்கள் மற்றும் அறிவுரை கூறும் பெரியோர்கள் மன்னனுடைய சுற்றத்தாராகக் கருதப்பட்டார்கள். ”அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின், அது அவனுடைய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் (குறள் - 522)”, என்று வள்ளுவர் கூறுகிறார்.  தற்காலத்தில், நிறுவனங்களின் தலைவர்களோடு நெருங்கிப் பணியாற்றும் துணைத் தலைவர்கள் போன்றவர்களை தலைவர்களுக்குச் சுற்றமாகக் கருதலாம். தலைவர்கள் அவர்களுடைய சுற்றத்தோடு அன்போடு பழகினால் பல நன்மைகளைப் பெறலாம்.

ஈகை, கொடை, அளி, கண்ணோட்டம்

ஈகை: வறுமையில் இருப்பவர்களுக்குத் தேவையான பொருளைக் கொடுத்து உதவி செய்வதே ஈகை. சங்க காலத்தில் மன்னர்களும், வள்ளல்களும் வறியவர்களுக்கு வரையாது கொடுத்ததாகப் புறநானூற்றில் காணலாம். சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் ஏழைகளுக்கான சமூகநலத் திட்டங்கள் எவையும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால், மன்னர்களும் வள்ல்களும் எழைகளுக்கு உதவி செய்தார்கள். “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு (குறள் -734)” என்று வள்ளுவர் நாட்டுக்கு இலக்கணம் வகுக்கிறார். மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுவது இன்றியமையாதது என்பது வள்ளுவரின் கருத்து. இன்றைய சூழ்நிலையில், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் குடிமக்களின் நல்வாழ்விலும், நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் ஊழியர்களின் நல்வாழ்விலும் அக்கறை காட்டவேண்டும் என்று வள்ளுவர் கூறுவதாகவும் கருதலாம்.

 

கொடை: ஈகை என்பது வேறு. கொடை என்பது வேறு. ”வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்பது வள்ளுவரின் கருத்து. அறிவிற் சிறந்த புலவர்களுக்கும், சான்றோர்களுக்கும், ஆடல் பாடல் போன்ற கலைகளில் சிறந்து விளங்கிய விறலியர்க்கும் பாணர்களுக்கும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அளிப்பது கொடை என்று சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் கருதப்பட்டது. தற்காலத்தில், போர், கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு அரசுகள் விருதுகள் வழங்குகின்றனர். நிறுவனங்களில், சிறப்பாகப் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகளும் வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன. ஏழைகளுக்கு ஈகையும், தகுதி உடையவர்களுக்குக் கொடையும் அளித்து அவர்களை ஆதரிக்கும் பண்பு தலைவர்களுக்குரிய பண்புகளில் ஒன்று.

 

அளி: அளி என்ற சொல் அன்பு, கொடை, இரக்கம், தலையளி, கருணை போன்ற பலவற்றைக் குறிக்கும் ஒருசொல்.   இவை எல்லவற்றையும் சேர்த்துப் பார்த்தால், தகுதியானவர்களை மதித்து அவர்களுக்கு வேண்டுவனவற்றை அன்போடும் மகிழ்ச்சியோடும் தாரளாமாகக் கொடுக்கும் மனப்பான்மையைத்தான் அளி என்ற சொல் குறிப்பதாகத் தோன்றுகிறது. மன்னனுக்கு அத்தகைய தாராளகுணம் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். அத்தகைய தாரளகுணத்திற்கு இணையான ஆங்கிலச்சொல் ‘Generosity’. அமெரிக்க எழுத்தாளரும் நூலாசிரியருமாகிய ஜான் மேக்ஸ்வெல் என்பவர், தன்னுடைய “The 21 Indispensable Qualities of a Leader, என்ற நூலில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத நற்குணங்களுள் தாராளகுணமும் ஒன்று என்று கூறுகிறார். ஒரு தலைவரிடம் உள்ள தாராள மனப்பான்மையைத் தவிர அவருடைய வேறு எந்தக் குணத்தாலும் அவரைப் பற்றித் தெளிவாகக் கூற முடியாது. மற்றும் தாராளமனப்பான்மையைப் போல் அவருக்கு உதவக் கூடிய பண்பு வேறு எதுவும் இல்லை. தாராளகுணம் என்பது அவ்வப்போது நிகழும் நிகழ்வாக இல்லாமல், அவருடைய இதயத்திலிருந்து வரும் இயற்கையான பண்பாக இருக்க வேண்டும்,” என்று ஜான் மேக்ஸ்வெல் கூறுகிறார், ஸ்டீஃபன் கவ்வி என்ற அறிஞரும் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் தாராளமனப்பன்மையும் ஒன்று என்று தன்னுடைய, ”Principle Centered Leadership” என்ற நூலில் கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த வள்ளுவருடைய கருத்தும் தற்கால அறிஞர்களாகிய ஜான் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டீஃபன் கவ்வி ஆகியோரின் கருத்தும் ஒத்திருப்பது வியக்கத் தக்கது.

 

கண்ணோட்டம்: கண்ணோட்டம் என்பது பிறருடைய துயரத்தைக் கண்டு இரங்கும் பண்பையும் பிறர் குற்றத்தை மன்னிக்கும் பெருந்தன்மையையும் குறிப்பதாகும். இது அனைவரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பு. இப் பண்பு ஒரு மன்னனிடத்தில் இருந்தால் குடிமக்கள் இன்பமாக வாழ்வதற்கும் அவன் ஆட்சி சிறப்பாக அமைவதற்கும் காரணமாக அமையும். இந்த உலகம் ஏன் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சிந்தித்த கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், “தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்பவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிகொண்டிறது.” என்ற முடிவுக்கு வந்தான்[5]. அவன் கூறும் பண்பும் கண்ணோட்டத்தைத்தான் குறிக்கிறது. “கண்ணோட்டம் என்னும் சிறப்புடைய பேரழகு இருக்கின்ற காரணத்தினால்தான் இவ்வுலகம் அழியாது இருந்து வருகின்றது (குறள் – 571)” என்று வள்ளுவர் கூறுகிறார். இன்றைய சூழ்நிலையில், நிறுவனங்களின் தலைவர்களுக்கும் கண்ணோட்டம் ஒரு தேவையான பண்புதான். இப் பண்பு தலைவர்களிடம் இருக்குமானால், அவர்கள் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெறுவர்.

காட்சிக்கு எளிமை, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் கூறல், செவிகைப்பச் சொற்பொறுத்தல்

காட்சிக்கு எளிமை; ஒரு தலைவன் காட்சிக்கு எளியவன் என்றால் அவனை அனைவரும் சென்று காண்பது எளிது என்பதைக் குறிக்கிறது. சங்க காலத்திலும் அதற்குப் பின்பும், புலவர்களும், பாணர்களும் மன்னர்களை எளிதில் சந்திக்க முடிந்ததாக புறநானூற்றுப் பாடல்களிலிருந்து தெரியவருகிறது. அண்மைக் காலத்தில் வாழ்ந்த தமிழகத்தின் முதல்வர் அறிஞர் அண்ணா, இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் ஆகிய இருவரையும் எளிதில் சந்திக்கக்கடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் இருவரும் காட்சிக்கு எளியவர்களாக இருந்ததாகப் பலரும் கருதுகின்றனர். ஆனால், இன்றைய சூழ்நிலையில், ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியைக் காண்பது அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல.

 

கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் கூறல்: தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கடுஞ்சொல் கூறாமல் இருப்பது மிகவும் இன்றையமையாதது. அவர்கள் கடுஞ்சொல் கூறுபவர்களாக இருந்தால் அவர்களிடம் பணிபுரிபவர்கள் அவர்களின் கோபத்திற்கு ஆளாகமல் இருப்பதற்காக, அவர்கள் கேட்க விரும்பாதவற்றை அவர்களிடம் கூறமாட்டார்கள். நிறுவனத்தின் தோல்விகளும் சோதனைகளும் அவர்களிடம் இருந்து மறைக்கப்படும். அதனால், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சரியான நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் தவறான முடிவுகள் எடுத்து நிறுவனத்திற்கும் தங்கள் பதவிக்கும் கேடு விளைவித்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்குமுன், நான் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக கணினித்துறையில் பணிபுரிந்தேன். அந்த நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு 20,000 கோடி டாலர். அந்த நிறுவனத்தில் ஏறத்தாழ 100,000 ஊழியர்கள் பணிபுரிந்தார்கள். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி மிகுந்த கோபக்காரர். நிறுவனத்தின் வருமானம் குறைந்ததாகவோ அல்லது எந்தத் துறையிலாவது நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்ததாகவோ கேள்விப்பட்டால், அந்த செய்தியைக் கூறியவர்களிடம் அவர் மிகுந்த கோபம் அடைந்து, செய்தியைக் கூறியவர்களைக் கடுஞ்சொற்களையும் தகாத சொற்களயும் கூறித் திட்டுவார். பல சமயங்களில், எந்தத் துறைகளில் நிறுவனம் வளர்ச்சி குறைந்ததோ அல்லது நஷ்டம் அடைந்ததோ அந்தத் துறைக்கு பொறுப்பானவர்களைத் கடுமையாகத் திட்டுவது மட்டுமல்லாமல், முன்கோபத்தால், சரியாக விசாரிக்காமல், அவர்களை பணிநீக்கம் செய்துவிடுவார். அவருடைய கோபத்திற்கும் கடுஞ்சொற்களுக்கும் அஞ்சி, பலரும் அவரிடத்திலிருந்து உண்மைகளை மறைக்கவும் பொய்க்கணக்கு எழுதவும் ஆரம்பித்தார்கள். அந்தத் தலைவர் பதவியிலிருந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிறுவனம் பலவகைகளிலும் பின்னடைந்து, 79 டாலராக இருந்த நிறுவனத்தின் பங்கு 17 டாலராகச் சரிந்தது. அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இப்பொழுது, அந்த நிறுவனம் வேறொருவரின் தலைமையில், பெருமளவில் வளர்ச்சி அடைந்து, ஒரு பங்கு ஏறத்தாழ 200 டாலராக உயர்ந்து பலராலும் பாராட்டப்படுகிறது.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கடுஞ்சொற்கள் கூறாமல் இருப்பது மட்டுமல்லாமல், இனிய சொற்களைப் பேசவேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். இனிய சொற்களைப் பேசி, வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்து அன்போடும் அறத்தோடும் ஒரு தலைவன் ஆட்சிபுரிந்தால் அவன் பலராலும் புகழப்படுவதோடு மட்டுமல்லாமல் அவன் விரும்பிய வெற்றிகளை அடைவான் என்பது வள்ளுவரின் கருத்து. இக்கருத்து, வள்ளுவர் காலத்தில் மட்டுமல்லாமல், இக்காலத்திற்கும் ஏற்புடையதுதான்.

செவிகைப்பச் சொற்பொறுத்தல்: சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும், தான் செய்யும் தவறுகளையும், தன் ஆட்சியில் உள்ள குறைகளையும், அமைச்சர்களும் பெரியோரும் தன்னுடைய காது கசக்கும்படியாக (தான் வெறுக்குமாறு) இடித்துரைத்தாலும் அவர்களின் சொற்களை மன்னர்கள் பொறுத்துக்கொள்வது செவிகைப்பச் சொற்பொறுத்தல் என்று அழைக்கப்பட்டது. புறநானூற்றில் எட்டு பாடல்கள் செவியறிவுறூஉ என்ற துறையைச் சார்ந்தவை. அந்த துறையில் உள்ள பாடல்கள் அனைத்தும் புலவர்கள் மன்னர்களுக்கு அறிவுரை வழங்குவனவாக அமைந்துள்ளன. இதிலிருந்து, சங்க காலத்தில் மன்னர்கள் புலவர்களின் அறிவுரையை செவிமடுத்துக் கேட்டு அவர்களுக்குப் பரிசுகளும் வழங்கியதாகத் தெரிகிறது.

இடித்துரைப்போரின் சொற்களைப் பொறுமையாகக் கேட்டுத் தன் தவறுகளையும், தன் ஆட்சியில் உள்ள குறைகளையும் மன்னனாக இருப்பவன் திருத்திக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.  கடிந்து அறிவுரை கூறும் பெரியோரின் துணை இல்லாத, காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் தானாகவே கெடுவான் (குறள் – 448)” என்றும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் நல்லெண்ணம் உடையவர்களின் சொற்களைத் தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் கேட்டுப் பயன்பெறவேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

தற்காலத்தில், ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தங்கள் கருத்துக்களைத் தவறாமல் வழங்குவதற்கு எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தயங்குவதில்லை. பெரிய நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு, ஆலோசகர்கள் உள்ளனர்; இயக்குநர் குழுக்கள் (Board of Difrectors) உள்ளன. மற்றும், பங்குதாரர்களின் வருடாந்திரக் கூட்டங்களில் (Annual Meetings of the Stockholders) பங்குதாரர்கள் தங்கள் நிறுவனத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களைக் கூறுகிறார்கள். மற்றும், நிறுவனங்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும்(Laws and Regulations) உள்ளன. 

ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை

ஆள்வினையுடைமை: ஆள்வினையுடைமை என்பது இடைவிடாது உழைத்து ஒரு செயலை நிறைவேற்றும் ஆற்றலைக் குறிக்கும் சொல். அதாவது, ஆள்வினையுடைமை என்பதை விடாமுயற்சி என்றும் பொருள்கொள்ளலாம், ஒரு செயலை முறையாகச் செய்து முடிப்பதற்கு விடாமுயற்சி தேவை என்பதை வலியுறுத்துவதற்காக, வள்ளுவர் “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (குறள் – 611).” என்றார். அதாவது, ஒரு செயல் செய்து முடிப்பதற்கு அரியது என்று எண்ணி மனம் தளராமல், முயற்சி செய்தால் அதற்கேற்ற பெருமை வந்து சேரும் என்கிறார் வள்ளுவர். செய்யத் தொடங்கிய செயல் தெய்வத்தால் கைகூடாவிட்டாலும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும் என்று கூறி வள்ளுவர் விடாமுயற்சியின் சிறப்பை உறுதிப்படுத்துகிறார் (குறள் – 619). விடாமுயற்சி இல்லாதவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற மாட்டார்கள் என்பதால், விடாமுயற்சியையும் மன்னனுக்குரிய குணநலன்களில் ஒன்றாக வள்ளுவர் கருதுகிறார். மன்னர்களுக்கு மட்டுமல்லாமல், தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பவர்கள் அனைவருக்கும் விடாமுயற்சி என்பது ஒரு இன்றியமையாத பண்பு.

 

இடுக்கண் அழியாமை: ஒரு தலைவனுக்குக் கல்வியும், அறிவும், பெரியோர் துணையும், விடாமுயற்சியும் இருந்தாலும், சில சமயங்களில், அவனுடைய வெற்றிக்குத் தடையும் துன்பங்களும் வருவது இயற்கை. அவ்வாறு ”துன்பங்லள் வருவது இயல்பு என்று உணர்பவன் துன்பங்களால் துன்பப் படமாட்டான் (குறள் – 628).”, என்றும் “தடை ஏற்பட்ட இடங்களிலெல்லாம், அவற்றைக் கடந்து வண்டியை இழுத்துச் செல்லும் எருதுபோல், எடுத்துக்கொண்ட வினையை விடாமுயற்சியுடன் செய்து முடிக்க வல்லவனை அடைந்த துன்பம் தானே துன்பம் அடையும் (குறள் – 624).”, என்றும் கூறி வள்ளுவர் விடாமுயற்சியின் சிறப்பை எடுத்துரைக்கிறார், துன்பங்களை எதிர்கொள்வதற்கு மற்றுமொரு அறிவுரையும் வள்ளுவர் கூறுகிறார். ”துன்பம் வரும்பொழுது, அதற்கு வருந்தாது அதை எள்ளி நகையாடுக; அத்துன்பத்தை வெல்வதற்கு அதுபோன்ற வழி வேறொன்றுமில்லை (குறள் – 621).” என்பது வள்ளுவர் அனைவருக்கும் கூறும் அறிவுரை.  பல அரிய செயல்களைச் செய்யும் மன்னர்களும் தலைவர்களும் இடுக்கண்களைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியுடன் உழைக்கும் பண்பு உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து என்பது நன்கு புலப்படுகிறது.

முடிவுரை:

அறத்துப்பாலில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய அறங்களைக் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் முதல் இருபத்தி ஐந்து அதிகாரங்களில் ஒரு மன்னனுக்குத் தேவையான பண்புகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறார். தலைவர்கள் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சாமல், அறத்தோடும், விவேகத்தோடும்கூடிய வீரமும் துணிவும் உடையவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஊக்கத்தோடு, சோம்பலும் மறதியும் இன்றிக் காலம் தாழ்த்தாமல் பணியாற்ற வேண்டும். அவர்கள் கல்வியாலும் கேள்வியாலும் அறியவேண்டியவற்றை அறிந்து, தம் அனுபவத்தையும் மனத்தில்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றும், தலைவர்கள் தம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரைத் துணையாகக்கொண்டு, சிறியோரடு சேராமல், தம் சுற்றத்தாரோடு அன்போடு பழகி அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். தலைவர்கள் தாராளகுணத்தோடும் இரக்கத்தோடும் ஈகையிலும் கொடையிலும் சிறந்து விளங்க வேண்டும். மேலும், அவர்கள் காட்சிக்கு எளியவர்களாக, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் பேசி, இடித்துரைப்போர் கூறுவனவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடையவர்களாக இருக்க வேண்டும். இடுக்கண்களைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியோடு துணிந்து செயல்பட வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் முடியாட்சிக் காலத்தில் மன்னனுக்காக, வள்ளுவர் தலைமைப் பண்புகளைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் இன்றைய குடியாட்சிக் காலத்திலும், ஆட்சி செய்பவர்களுக்கும், நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்றவையாக உள்ளன என்பது எண்ணி எண்ணி மகிழத் தக்கது.

 

துணைநூல்கள்

சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்:

1989.

தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 600 017

தண்டபாணி தேசிகர். திருக்குறள் உரைக்களஞ்சியம், பதிப்புத் துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,

மதுரை 65021

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், மதுரை:

1999.

Covey, Stephen R. Principle – Centered Leadership. Simon and Schuster, London; 1991

Diaz, S.M. Thirukkural. Volumes 1 &2.  Ramanandha Adigalar Foundation, Chennai: 2000.

Drew, W.H., Lazarus, John, Rev. Thirukkural – English Translation. Asian Educational services,

Madras (Chennai): 1996.

Drucker, Peter F. the Essential Drucker, HarperCollins Publishers, New York, NY: 2001

Harvard Business Review. HBR’s 10 Must reads on Leadership. Harvard Business School

Publishing Corporation, Boston, Massachusetts 02163; 2011

Krames, Jeffrey A. Jack Welch and the 4E’s of leadership, The McGraw Hill Companies, 2005 Maxwell, John C. The 21 Indispensable Qualities of a Leader. Thomas Nelson Publishers,

Nashville, Tennessee. 1999

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural). Emerald publishers, Chennai.



[1]. இந்தக் கட்டுரை, என்னுடைய “The Ageless Wisdom (As embodied in Thirukkural)” என்ற நூலில் உள்ள  ”Valluvar on Leadership” என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

[2] . “Leader is one who does the right thing; manager is the one who does things right” – Peter Drucker

[3]. “Leadership is the ability to achieve the right goals by organizing and motivating other people to work to accomplish those goals.” –  The Ageless Wisdom (As embodied in Thirukkural) by Dr. R. Prabhakaran

[4]. புறநானூறு, பாடல் 183

[5]. புறநானூறு, பாடல் 182