Statcounter

Monday, December 23, 2019

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று


மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று

கழைதின் யானையார் என்ற புலவர், புறநானூற்றில்[1], “ஈயென இரத்தல் இழிந்த செயல்” என்று கூறுகிறார். துறவியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இரத்தல் ஒரு இழிவான செயல் என்பதில் வள்ளுவரும் உறுதியான கருத்துடையவர் என்பது இரவச்சம் என்ற அதிகாரத்தில் உள்ள சில குறட்பாக்கள் மிகத்தெளிவாகக் கூறுகின்றன.வறுமையால் வரும் கடுந்துன்பங்களை முயன்று உழைத்து நீக்கக் கருதாது, இரந்து நீக்க முயல்வோம் என்று கருதும் கொடுமையைப்போல் கொடுமையானது வேறொன்றுமில்லை (குறள் – 1063). தெளிந்த நீர்போல் சமைக்கப்பட்ட கூழானாலும், தன் முயற்சியால் தான் பெற்றதை உண்ணுவதைப்போல் இனியது வேறொன்றுமில்லை ( குறள் 1065).” என்ற கருத்துக்களை அந்த அதிகாரத்தில் காணலாம்.

          இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
         வன்மையின் வன்பாட்டது இல்.                        (குறள் – 1063)

          தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
         உண்ண்லின் ஊங்கினியது இல்.                       (குறள் – 1065)

உலக இயல்பை வள்ளுவர் நன்கு உணர்ந்தவர். இரத்தல் இழிந்தது என்பதும் உழைப்பால் கிடைத்ததை உண்ணுவதே சிறந்தது என்பதும் நல்ல கொள்கைகளாக இருந்தாலும், சில சூழ்நிலைகளில், சிலர் இரந்து உயிர் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஆகவே, ஒருவன் தன் உயிரை விடுவதற்குத் துணிவில்லாமல், மானத்தைவிட்டு, இரப்பானேயானால், அவனுக்கு அறிவுரை கூறாமல், அவனைக் கடிந்துரைக்காமல், அவன்மீது இரக்கப்பட்டு, நம்மால் இயன்றதைக் கரவாது (இல்லையென்று சொல்லாமல்) கொடுத்து உதவுவதே சிறந்தது என்பது வள்ளுவரின் கருத்தாக ஈகை என்ற அதிகாரத்தில் காண்கிறோம்.


ஈ, தா, கொடு
ஒரு பொருளை ஒருவர் மற்றொருவரிடமிருந்து கேட்டுப் பெறுவதற்குத் தமிழில் ’ஈ’, ’தா’, ‘கொடு’, என்று மூன்று சொற்கள் உள்ளன. இந்த மூன்று சொற்களும் வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் சொற்களாகத் தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்தன.

          ’ஈ’, ’தா’, ’கொடு’ எனக் கிளக்கும் மூன்றும்
         இரவின் கிளவி ஆகு இடன் உடைய
(தொல்காப்பியம், 927)

         அவற்றுள்,’ஈ’ என் கிளவி இழிந்தோன் கூற்றே
         ’தா’ என் கிளவி ஒப்போன் கூற்றே
         ’கொடு’ என் கிளவி உய்ர்ந்தோன் கூற்றே
                                                   (தொல்காப்பியம், 928-930)

‘ஈ’ என்னும் சொல் தாழ்ந்த நிலையில் உள்ளவன் தன்னிலும் உயர்ந்தவனிடம் கேட்டுப் பெறக் கூறுகிற சொல். ‘தா’ என்னும் சொல் தனக்குச் சமமானவனிடம் ஒரு பொருளைக் கேட்கக் கூறும் சொல். ‘கொடு’ என்னும் சொல் உயர்ந்தவன் தன்னிலும் தாழ்ந்த ஒருவனிடம் சென்று, உதவி கேட்கக் கூறும் சொல். உதாரணமாக, மகன் தந்தையிடம் இருந்து ஒரு பொருளைப் பெறவேண்டுமானால், “அப்பா, அதை எனக்கு ஈவாயாக”, என்றும், ஒருவன் தன் நண்பனிடம் இருந்து ஒரு பொருளைப் பெறவேண்டுமானால், “நண்பா, அந்தப் பொருளை எனக்குத் தா”. என்றும், மகனிடம் உள்ள ஒரு பொருளைத் தந்தை தனக்கு வேண்டுமென்று கேட்க விரும்பினால், “மகனே, அந்தப் பொருளை எனக்குக் கொடு.” என்றும் கேட்க வேண்டும்.  இப்பொழுது, ‘ஈ’ என்ற சொல் அதிகமாக வழக்கிலில்லை. இன்றும், தெலுங்கில் ‘ஈ’ என்ற சொல் வழக்கில் உள்ளது. ஆனால், ’ஈ’ என்ற சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட ‘ஈகை’ என்ற சொல்,  உயர்ந்தவனிடம் தாழ்ந்தவன் ஒரு பொருளைக் கேட்டுப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. அதுபோல், கொடு என்னும் சொல்லை வேர்ச்சொல்லாகக்கொண்ட  ‘கொடை’ என்ற சொல்  அறிவிலும், ஆற்றலிலும், கலைகளிலும் சிறந்து விளங்குபவர்களைத் தம்மிலும் உயர்ந்தவர்களாகக் கருதி, அவர்களைப் பாராட்டி, அவர்ளுக்கு மன்னர்களும், வள்ளல்களும் பரிசளிப்பதைக் குறிக்கிறது.

ஈகைக்கு இலக்கணம்
2016 – ஆம் ஆண்டு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Organization for Economic Cooperation and Development – OECD is a Consortium consisting of 36 countries) நடத்திய கருத்துக் கணிப்புப்படி, ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product – GDP) 25 முதல் 31 விழுக்காட்டை சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவழிக்கின்றன. இருப்பினும், அந்த நாடுகளில் 5 முதல் 15 விழுக்காடுவரை உள்ள மக்கள் வறுமைக்கோட்டுக்குள் (வறுமைக் கோடு – Poverty line) வாழ்கிறார்கள். மிகவும் வளமான நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில் 11.8 விழுக்காட்டு மக்கள் வறுமையில் உள்ளார்கள் என்று 2018 – ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது. இத்தனை வளமும், செழிப்பும் உள்ள நாடுகளில், சமூக நலத்திட்டங்கள் இருந்தும், மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் சமூக நலத்திட்டங்கள் எவையும் இல்லாத காலங்களில், தமிழகத்தில் வறுமையில் வாடியவர்கள் இருந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக, ஆதரவற்றோர், அநாதைகள், உடல் ஊனமுற்றோர், வேலை வாய்ப்பு இல்லாதோர், மற்றும் ஏழைகள் வறுமையில் வாடி, பசியோடு வாழ்ந்திருப்பார்கள். அவர்களின் பசியைப் போக்குவதும், வறுமையிலிருந்து அவர்களைக் காப்ப்பாற்றுவதும் மற்றவர்களின் கடமையாகக் கருதப்பட்டது. அதனால்தான், வள்ளுவர். ”வறுமையில் வாடுபவர்களுக்கு வேண்டியவற்றை கொடுப்பதே ஈகையாகும். மற்றதெல்லாம் ஒரு குறிப்பிட்ட கைம்மாறு கருதிக் கொடுக்கும் தன்மையதாகும்.” என்று ஈகைக்கு இலக்கணம் வகுக்கிறார்.

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.                                   (குறள் – 221)


ஏழையின் பசியைத் தீர்த்தல்
ஒரு ஏழைக்கு உதவி செய்யும்பொழுது, அந்த உதவிக்கு கைம்மாறாக அந்த ஏழை எதையும் செய்வான் என்று எதிர்பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். ஒரு ஏழைக்குச் செய்யக்கூடிய உதவிகளில் மிகப்பெரிய உதவி, அந்த ஏழை, பசி என்று வந்து கேட்கும்பொழுது, அவனுக்கு உணவளிப்பதாகும்.  அதனால்தான், “வறியவர்களின் கடும்பசியைத் தீர்த்தலே, செல்வம் பெற்ற ஒருவன் அச்செல்வத்தைச் சேமித்து வைக்குமிடமாகும்.”, என்றும் வள்ளுவர் கூறுகிறார்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.                                     (குறள் – 226)

பசியால், வாடும் ஏழைக்கு உணவளித்து அவன் பசியைப் போக்குவது சிறந்த செயல்.  ஏழைக்கு உதவி செய்வதை ஒரு சிறந்த செயலாக எல்லா மதங்களும் எல்லா சமுதாயங்களும் கருதுகின்றன. ”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.”, என்ற சொற்றொடர், திருகுர்ரானில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் மேனாள் முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களும், ”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.” என்று அடிக்கடிக் கூறுவது வழக்கம்.

சங்க காலத்தில் பண்ணன் என்று ஒரு வள்ளல் இருந்தான். அவனுடைய வள்ளன்மையை குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன், புகழ்ந்து பாடியதாக ஒரு சிறந்த பாடல்[2] புறநானூற்றில் உள்ளது. அப்பாடலில், பண்ணன் பிறரின் பசியைப் போக்குவதில் ஒப்புயர்வற்றவனாக இருந்ததால் அவனை, ’பசிப்பிணி மருத்துவன்’ என்று சோழ மன்னன் புகழ்கிறான். அப்பாடலில், மழைபெய்யும் இடத்திலிருக்கும் எறும்புகள் தம் முட்டைகளைத் தூக்கிக்கொண்டு மேட்டு நிலத்திற்கு வரிசையாகச் செல்வதைப்போல் பண்ணனிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்டு கூட்டம் கூட்டமாகப் பாணர்கள் செல்வதாகக் கூறி, பண்ணன் பிறரின் பசிக்கு உணவளிப்பதைச் சோழ மன்னன் பாராட்டுகிறான்.

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று
வள்ளுவர் காலத்தில், ஆரியர்களின் வேதம், மனுஸ்மிருதி, பகவத் கீதை போன்ற நூல்களின் தாக்கத்தால், சிலர் துறவறம் மேற்கொண்டார்கள். துறவிகளாக வாழ்பவர்கள், இல்லறத்திலிருப்பவர்களிடமிருந்து உணவைப் பெற்றுத் தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்வது வழக்கிலிருந்தது. துறவறம் மேற்கொள்வது உயர்ந்தததாகவும், பிறரிடம் இரந்து (யாசித்து) உணவைப் பெறுவது துறவிகளுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கைமுறையாகவும் கருதப்பட்டது. ஏழைகளும் துறவிகளும் உணவு கேட்கும்பொழுது அவர்களுக்கு உணவளிப்பவர்கள் துறக்க உலகம் (சுவர்க்கலோகம்/மேலுலகம்) செல்வார்கள் என்ற கருத்தும் நிலவியதாகத் தெரிகிறது.  ஆனால், வள்ளுவர் இந்தக் கருத்துக்களை மறுத்து, துறவிகள் இரந்து உணவைப் பெறுவதை  நல்ல வாழ்க்கைமுறையாகக் கருதினாலும், அது தீயது என்று கூறுகிறார். மற்றும், ஈகையால், மேலுலகம் செல்லும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஈதல் ஒரு நல்ல பண்பு என்றும் கூறுகிறார்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.                                 (குறள் – 222)

ஈதலால் இன்பம்
வறுமையில் உள்ளவர்கள் உண்ண உணவில்லாமல் வருந்தினால் அவர்களுக்கு உணவளிப்பது இன்றியமையாதது என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், உணவளிப்பதால் மட்டுமே வறுமையில் இருப்பவனின் வறுமையை நீக்கிவிட முடியாது. அவனுக்கு உடுக்க உடை, இருக்க இடம் போன்ற வேறு தேவைகளும் இருக்கும். ஆகவே, வறுமையில் இருப்பவனுக்குத் தம்மால் இயன்றதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்து, அவனை வறுமையின் பிடியிலிருந்து விலக்குவதை அனைவரும் தம் கடமையாகக் கருத வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. ஒருவன் ஒரு பொருளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டால், அவன் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல், அந்தப் பொருளைக் கொடுத்தவனும் மகிழ்ச்சி அடைவான். ஆகவே, எவருக்கும் எதையும் கொடுக்காமல் தம் செல்வத்தை இழக்கும் கொடியவர்கள், ஈகையால் வரும் இன்பத்தை அறியாதவர்களோ என்று வள்ளுவர் வியக்கிறார்.

          ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.                                       (குறள் – 228)

செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளாதவர்கள் ஈகையால் வரும் இன்பத்தை அனுபவிக்க மாட்டார்கள் என்ற கருத்து புறநானூற்றுப் பாடல் ஒன்றிலும் காணப்படுகிறது. அப்பாடலில், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், “செல்வத்தினால் ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால், அவன் செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழந்தவனாவான்.”, என்று கூறுகிறார்.

          செல்வத்துப் பயனே ஈதல்,
 துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
                                         (புறநானூறு, 189: 7-8)
உயர்குடிப் பிறந்தோரின் ஈதல்
இரப்பவன் தன் வறுமையைக் கூறும்பொழுது, அவன் உள்ளத்தில் வெட்கம், வேதனை, வருத்தம், எதிர்பார்ப்பு போன்ற பல உணர்வுகளோடு போராடிக்கொண்டிருப்பான். அவன் தன் வறுமையைக் கூறுவதற்கு முன்னரே, அவன் தேவையைக் குறிப்பால் உணர்ந்து அவனுக்கு உதவி செய்வது ஒரு அரிய செயல். அதுபோல், ஒருவனுக்கு உதவி செய்யும்பொழுது, இனி அவன் வேறு எவரிடமும் சென்ற இரவாத அளவுக்கு அவனுக்கு உதவி செய்து அவன் வறுமையை முற்றிலும் மாற்றுவதும், ஒரு அரிய செயல்தான். இவ்வாறு உதவி செய்யும் பண்புகள் எல்லோரிடமும் இருப்பதில்லை. மிகுந்த வள்ளன்மை உடைய உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களிடம் மட்டுமே இந்தப் பண்புகள் இயல்பாக இருக்கும் என்று வள்ளுவர் கருதுவதாகத் தோன்றுகிறது. இங்கு, குலம் என்பது சாதியைக் குறிக்காமல் ஈகையிற் சிறந்த குடிவழி வந்த மரபைக் குறிக்கிறது.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.                                   (குறள் – 223)

தங்கள் கற்பனைக்கும் புலமைக்கும் ஏற்றவாறு அறிஞர்கள் பலர் இக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். அவற்றுள் பழைய உரையாசிரியர்களின்[3] இரண்டு உரைகள் குறிப்பிடத் தக்கவை., “இரப்பவன் தன் வறுமைத் துன்பத்தைக் கூறுமுன்னரே அவன் வறுமை தீருமாறு ஈகை செய்யும் பண்புகள் உயர்குடிப் பிறந்தவர்களிடம் மட்டுமே உள்ளன.”, என்று இக்குறளுக்குக் காளிங்கர் என்பவர் உரை எழுதியுள்ளார். ”இரப்பவன் வேறொருவரிடம் சென்று தன் வறுமையைக் கூறி இரவா வண்ணம் அவனுக்கு ஈகை செய்யும் பண்புகள் உயர்குடிப் பிறந்தவர்களிடம் மட்டுமே உள்ளன” என்று பரிதி என்பவர் தன் உரையில் குறிப்பிடுகிறார். இரப்பவன் தன் வறுமையைக் கூறுவதற்கு முன்பே, குறிப்பறிந்து அவனுக்கு ஈவதும், அவன் பிறரிடத்துச் சென்று, மீண்டும் இரவா வண்ணம் அவனுக்கு ஈவதும், சில மன்னர்களிடமும் வள்ளல்களிடமும் இருந்த பண்பு என்பது சில புறநானூற்றுப் பாடல்களிலிலிருந்து தெரியவருகிறது.  இரவலர்களின் உள்ளக் குறிப்பை அவர்கள் முகத்தால் உணர்ந்து அவர்களின் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உடையவன்”, என்று கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்ற பாண்டிய மன்னனின் வள்ளன்மயை  இரும்பிடர்த் தலையார் என்ற புலவர் புகழ்கிறார்[4]. மற்றொரு பாடலில், ”உன்னைப் பாடிய செவ்விய நாவால் பிறர் புகழைப் பாடவேண்டிய தேவை இல்லாதவாறு, குறையாது கொடுக்கும் ஆற்றல் மிகுந்த எம் அரசே!” என்று குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னனைப் புகழ்கிறார்[5]. இது போன்ற கருத்துக்களை வேறுசில புறநானூற்றுப் பாடல்களிலும் காணலாம்[6].

முடிவுரை
இரத்தல் இழிந்த செயல் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது. வள்ளுவரும் அதே கருத்தை இரவச்சம் என்ற அதிகாரத்தில் கூறுகிறார். ஆனால், சில சூழ்நிலைகளில், சிலர் இரந்து வாழ்வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழகத்தில், வறுமையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது அனைவரின் கடமையாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது. வறுமையில் இருப்பவர்களுக்கு, அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து உதவி செய்வதுதான் ஈகை. மற்றவகையில் மற்றவர்களுக்குக் கொடுப்பது அவர்களிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொடுப்பதே தவிர ஈகையாகாது. மற்ற ஈகைகளைவிட, பசியோடு இருப்பவனுக்கு உணவளிப்பதுதான் மிகச் சிறந்த ஈகை. ஈகை ஒரு நல்ல செயலாகையால், அதைச் செய்பவர்கள், தங்கள் மரணத்திற்குப் பிறகு துறக்க உலகம் (சுவர்க்கலோகம்/மேலுலகம்) செல்வார்கள் என்ற நம்பிக்கை வள்ளுவர் காலத்தில் நிலவியது; இன்றும் அந்த நம்பிக்கை நிலவுகிறது. மேலுலகம் செல்லும் வாய்ப்பில்லை என்றாலும், ஈதலே நன்று என்று வள்ளுவர் கூறுகிறார். ஈதலால் ஒரு பொருளைப் பெறுபவனும் அதை அளிப்பவனும்  மகிழ்ச்சி அடைகிறார்கள். ஈதல் செய்யாதவர்கள் ஈதலால் வரும் இன்பத்தை இழந்தவர்களாவார்கள். வறுமையில் உள்ளவன் தன் வறுமையைக் கூறுமுன் அவனுக்கு உதவி செய்வது ஒரு சிறந்த பண்பாகும். அத்தகைய பண்பு ஈகையிற் சிறந்த குடும்பங்களில் பிறந்தவர்களிடமே காணப்படும்.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 1). காவ்யா பதிப்பகம், சென்னை
________________. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம், சென்னை
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502



[1] புறநானூறு - 204
[2] புறநானூறு - 173
[3] பழைய உரையாசிரியர் பதின்மர்: தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், ரிதியார், திருமலையர், மல்லர், லிப்பெருமாள், காளிங்கர். நமக்குக் கிடைதுள்ள உரைகளின் ஆசிரியர் ஐவர்: பரிப்பெருமாள், மணக்குடவர்,  பரிமேலழகர், ரிதியார்,  காளிங்கர்.
[4]. நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே. (புறநானூறு, 3: 24-26)
                 
[5]. நிற்பாடிய அலங்குசெந்நாப்
 பிறர்இசை நுவலாமை
 ஓம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ! (புறநானூறு, 22: 31-33)
[6] புறநானூறு, பாடல்கள் 68, 376

3 comments:

  1. விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்குரிய தனபாலன் அவர்களுக்கு,

      வணக்கம்.

      என் கட்டுரையைப் படித்ததற்கும் அதைப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி. இன்னும் சில நாட்களில், ஒப்புரவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

      அன்புடன்,
      பிரபாகரன்

      Delete
  2. ஆழமான கருத்துக்கள். குறிப்பாக, 'பசிப்பிணி'யைய் போக்குவது குறித்து, இலக்கியத்தில் செய்திகள் பரவலாகக் காணப்படுகிறது. அதனின் தொடர்வாக, நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த வள்ளலாரின் பணிகளும் அளப்பரியது.

    அறச் செயல்களே, தனிப்பட்ட வாழ்விற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் அடிப்படை என்பதைச் சுட்டியதாக இக் கட்டுரை அமைக்கப்பட்டதற்கு நன்றியும், மகிழ்வும்.

    ReplyDelete