Statcounter

Friday, January 17, 2020

இன்னா செய்தல் துன்னாமை வேண்டும்


இன்னா செய்தல் துன்னாமை வேண்டும்

’இன்னா’ என்ற சொல்லுக்குத் ‘தீங்கு தருபவை’ என்று பொருள். இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் பிறர்க்குத் துன்பம் தரும் தீய செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். அந்த அதிகாரத்தில் வள்ளுவர் கூறியிருக்கும் கருத்துக்களின் தாக்கம் உலக வரலாற்றில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 1908 – ஆம் ஆண்டு, உருசியப் பேரறிஞர் மற்றும் எழுத்தாளர், லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy), ஃப்ரீ ஹிண்டுஸ்தான் (Free Hindustan) என்ற ஏட்டுக்குத் திருக்குறளைப் பற்றி ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், தான் திருக்குறளைப் படித்ததாகவும், அதில் இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் எழுதியுள்ளார்.  அப்பொழுது, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துகொண்டிருந்த காந்தியடிகள் அந்தக் கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து காந்தியடிகளும் திருக்குறளைப் படிக்கத் தொடங்கினார். இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்கள் காந்தியடிகளையும் மிகவும் கவர்ந்தன. தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நல்வாழ்விற்காகவும் காந்தியடிகள் போராடிக்கொண்டிருந்த அக்காலத்தில், வள்ளுவரின் இன்னா செய்யாமைக் கருத்துக்கள் காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்திற்கு (Non-violence – அஹிம்சை – அறவழி) அடித்தளமாக அமைந்தன. காந்தியடிகள் இந்தியாவிற்குத் திரும்பி வந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தையும் ’கத்தியின்றி, இரத்தமின்றி’ அறவழியில் நடத்தி வெற்றி பெற்றார். காந்தியடிகளின்  வெற்றியைக் கண்டு வியந்த மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King), அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்கர்களின் சமவுரிமைக்காக நடத்திய போராட்டத்திலும், நெல்சன் மாண்டேலா (Nelson Mandela) தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக நடத்திய போராட்டத்திலும் இன்னா செய்யாமை அடிப்படையில் தோன்றிய காந்தியடிகளின் அறவழிக் கொள்கைகளைப் பின்பற்றி வெற்றி அடைந்தார்கள். ஆகவே, வள்ளுவரின் இன்னா செய்யாமையைப் பற்றிய கருத்துக்கள் உலக வரலாற்றுச் சிறப்புடையவை என்றால் அது மிகையாகாது.

நமது சொல்லும் செயலும் நமது மனத்தில் உள்ள எண்ணங்களின் வெளிப்பாடு. நமது மனத்தில் தீய எண்ணங்கள் இல்லையென்றால், சொல்லும் செயலும் தீயவையாக இருக்காது. ஆனால், மனத்தில் தீய எண்ணங்கள் இல்லாமல் – மனத்தில் மாசில்லாமல் – இருப்பது எளிதல்ல. நமது மனத்தில் மாசுக்கள் உள்ளன என்பதை உணர்ந்து, அவற்றால்தான் நமது சொல்லாலும் செயலாலும் பிறர்க்குத் தீமைகளைச் செய்கிறோம் என்பதை அறிந்து, மனம் சொல்லாலும் செயலாலும் தீமை செய்யத் தூண்டும்பொழுது, அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் வள்ளுவர் கூறும் அறிவுரை. சொல்லால் வரும் துன்பங்களாகிய புறங்கூறுதல், பயனில சொல்லுதல், கடுஞ்சொல் கூறுதல், பொய்பேசுதல் என்ற நான்கும் சொற்குற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி ’யாகாவாராயினும் நாகாக்க’ என்ற கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.  பிறர்க்கும், பிறவுயிர்களுக்கும் துன்பம் தரும் செயல்களைப் பற்றி, பல அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்து வழங்குவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.  

தீய செயல்களுக்கு இலக்கணம்
தீய செயல்கள் என்பவை எவை என்று பட்டியல் இட்டால், அந்தப் பட்டியல் மிக நீண்டதாகவும் முடிவில்லாததாகவும் இருக்கும். “தீய செயல்கள் என்பவை எவை?”, என்ற கேள்விக்கு, வள்ளுவர் மிகச் சுருக்கமாக ஒருவிடை அளிக்கிறார். எவையெல்லாம் நமக்குத் துன்பம் தரும் செயல்கள் என்று நாம் உணர்கிறோமோ அவை அனைத்தும் தீய செயல்கள். அத்தகைய செயல்களைப் பிறர்க்குச் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். ஒருவன் நம்மை அடித்தால், நாம் அதைத் துன்பம் தரும் செயலென்று கருதுகிறோம். ஆகவே, நாம் பிறரை அடிக்கக் கூடாது. அதுபோல், எந்தச் செயல்களெல்லாம் நமக்குத் துன்பம் தருகின்றனவோ அவற்றைப் பிறர்க்குச் செய்யக் கூடாது என்பதுதான் இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தின் மையக் கருத்து.

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை[1]
வேண்டும் பிறன்கண் செயல்.                                                (குறள் – 316)

”எவற்றையெல்லாம் பிறர் உனக்குச் செய்யக் கூடாது என்று நீ நினைக்கிறாயோ, அவற்றை நீ பிறர்க்குச் செய்யாதே.” என்று கன்ஃபூசியஸ்[2] என்ற சீனத் தத்துவஞானி கூறியாதாகவும், அது அவருடைய பொன்மொழி[3] என்றும் கருதப்படுகிறது. தீய செயல்களுக்கு வள்ளுவர் வகுத்த இலக்கணமும், அவருக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன், வெகு தொலைவில் உள்ள சீனாவில் பிறந்து வாழ்ந்த கன்ஃபூசியஸ்ஸின் பொன்மொழியும் ஒத்திருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது.

”மற்றவர்கள் செய்யும் தீய செயல்கள் தன் உயிர்க்குத் துன்பம் தருவதைத் தான் அறிந்தவன், பிறவுயிர்களுக்கு அத் தீய செயல்களை ஏன் செய்கிறான்” என்ற கேள்வியை எழுப்பி, எவருக்கும் தீய செயல்களைச் செய்யக்கூடாது என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

தன்னுயிர்க்கு ன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.                                    (குறள்318)


தீமைக்குக் கைம்மாறாக நன்மை செய்தல்
தீமை செய்தவர்களுக்கு, அவர்கள் வெட்கப்படுமாறு நன்மையைச் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் செய்த தீமை, அதற்குப் பதிலாக நாம் செய்த நன்மை ஆகிய இரண்டையும் மறந்துவிட வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.                                             (குறள் – 314)

ஒருவர் நமக்குத் தீமை செய்தால் அதைப் பொறுத்தல், மன்னித்தல் மற்றும் மறத்தல் ஆகிய மூன்று வகைகளில் சமாளிக்கலாம் என்பதுதான் பலரும் கூறும் அறிவுரைகள். உதாரணமாக, “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், நீ அவனுக்கு உன்னுடைய இடது கன்னத்தையும் காண்பி.” என்று ஏசு கிறிஸ்து (Jesus Christ) கூறியதாக விவிலியத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதுபோல், லாவோட்சு (Lao Tzu) என்ற சீனத் தத்துவஞானி, “உனக்குத் துன்பம் செய்பவர்களிடம் அன்பு காட்டு.” என்று கூறுகிறார். வள்ளுவர் மட்டுமே, தீமைக்குக் கைம்மாறாக நன்மையைச் செய்துவிட்டு, பிறர் செய்த தீமையையும் அதற்குக் கைம்மாறாக நாம் செய்த நன்மையையும் மறந்துவிடவேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு மறக்காமல் இருந்தால், பிறர் செய்த தீமையும் நாம் செய்த நன்மையும் நம்மை மனத்தில் உறுத்திக்கொண்டிருக்கும். நமக்குப் பிறர் இழைத்த தீமைகளை மறக்க முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது ஒரு உயர்ந்த கருத்து. இந்தக் குறளுக்கு எடுத்துக்காட்டாக காந்தியடிகளின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று இங்கு குறிப்பிடத் தக்கது. காந்தியடிகள் தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போரடிக்கொண்டிருந்த காலத்தில், தென்னாப்பிரிக்காவில் ஸ்மட்ஸ் என்ற தளபதி (General Smuts) ஒருவர் ஆட்சியில் இருந்தார். அவர் காந்தியடிகளுக்குப் பலமுறை சிறை தண்டனை விதித்தார். சிறையிலிருந்தபொழுது இரண்டு காலணிகளைத் (காலணிகள் – pair of sandals) தானே செய்து, போராட்டத்தில் வெற்றிபெற்று இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதற்கு முன்பு, தளபதி ஸ்மட்ஸ்க்குக் காந்தியடிகள் அவற்றைப் பரிசாக அளித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தளபதி ஸ்மட்ஸ் அந்தக் காலணிகளைக் காந்தியடிகளுக்குத் திருப்பி அனுப்பினார். அத்தோடு ஒரு கடிதமும் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், “நீங்கள் கொடுத்த காலணியை நான் சில ஆண்டுகள் பயன்படுத்தினேன். அவற்றை அணிவதற்கு நான் தகுதி உடையவன் இல்லை என்ற எண்ணம் என்னை எப்பொழுதும் உறுத்திகொண்டே இருந்தது. ஆகவே, நான் அவற்றை உங்களுக்குத் திருப்பி அனுப்புகிறேன்.”, என்று எழுதியிருந்தார். அந்தக் காலணிகள் இப்பொழுது மும்பையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளன. காந்தியடிகளைப்போல் எல்லோராலும் தீமைசெய்தவர்களுக்கு நன்மை செய்ய முடியாது. ஆனால், அவ்வாறு செய்வதை நம்முடைய குறிக்கோளாகக்கொள்ள வேண்டும் என்பதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

பழிக்குப் பழி வங்குதல் தீது
தம்மீது கடுஞ்சீற்றம் கொண்டு தமக்குத் துன்பந்தருபவற்றை ஒருவர் செய்தாலும், தாம் திரும்பவும் அவருக்கு அத்தகைய துன்பச் செயல்களைச் செய்யாதிருப்பது மனத்தில் மாசற்றார் கொள்கையாகும். தான்  முன்பொரு தீமையும் செய்யாமல் இருக்கும்பொழுது, காரணமின்றித் தம்மீது சினங்கொண்டு துன்பம் தரும் தீய செயல்களைச் செய்தவர்க்கும், தாம் தீங்கு செய்யாமல் இருப்பதே நல்லது. அங்ஙனமின்றித் தீய செயல்களைச் செய்தால், அது தவிர்க்க முடியாத துன்பத்தைத் தரும்.


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.                                    (குறள் – 312)

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.                                                (குறள் – 313)

நம்மீது சினங்கொண்டோ அல்லது நாம் எந்தத் தீமையைச் செய்யாதிருந்தாலும் நமக்கு மற்றவர்கள் தீமையைச் செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. தீங்கு செய்தவர்களை மன்னிக்காமல், அதையே நினைத்து நினைத்து அவர்களைப் பழிவாங்கும் எண்ணத்தோடு இருப்பவர்கள் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, வருத்தம் மற்றும் கோபம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தீங்கு செய்தவர்களை மன்னிப்பவர்கள் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள் என்றும் உளவியல் அறிஞர்களும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கூறுவதாக 2011 – ஆம் ஆண்டு வெளிவந்த ”உண்மை” என்ற மின்னிதழில்,  தன்னுடைய கட்டுரை[4] ஒன்றில் மருத்துவர் சோம. இளங்கோவன் குறிப்பிடுகிறார்.

தீமை செய்தவர்களுக்குத் தீமை தனாகவே வரும்
ஒருவன் முற்பகலில் மற்றொருவனுக்குத் தீமை செய்தால், அவனுக்குப் பிற்பகலில் தீமை தானகவே வரும் (குறள் - 319). பிறர்க்குத் தீமை செய்வதைப் பற்றி மறந்தும் எவரும் மனத்தாலும் எண்ணிப்பார்க்கக் கூடாது. தீமை செய்ய எண்ணினால், எண்ணியவனுக்கு கேடு செய்வதற்கு அறம் திட்டமிடும் (குறள் – 204).  எத்துணைப் பெரிய பகையுடையவரும் அதனின்று ஒருவகையால் தப்புவர். ஆனால், தீவினைகளால் வந்த பகை நீங்காமல் சென்றவிடமெல்லாம் சென்று வருத்தும் (குறள் - 207).  ஒருவனது நிழல் அவன் எங்குச் சென்றாலும் உடன் சென்று அவன் காலடியிலேயே தங்கியிருப்பதைப்போல், பிறர்க்குத் தீமை செய்தவர் தாமும் கெடுவது உறுதி (குறள் – 208).” என்று பல குறட்பாக்களில், தீமை செய்தவனுக்குத் தீமை தானே வரும் என்ற கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

          பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.                                                (குறள் – 319)

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.                                     (குறள் – 204)

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.                                          (குறள் – 207)

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.                                          (குறள் – 208)

தீமை செய்தவர்கள் அனைவருக்கும் தீமை தானாகவே வரும் என்பது வள்ளுவரின் ஆணித்தரமான நம்பிக்கையாகத் தோன்றுகிறது. தீமை செய்தவனுக்குத் தீமை தானாகவே வரும் என்ற நம்பிக்கை மதங்களிலும் காணப்படுகிறது. ஆனால், இந்த நம்பிக்கையில் வள்ளுவருக்கும் மதங்களுக்கும் இடையே கருத்து ஒற்றுமையும் வேற்றுமையும் காணப்படுகின்றன. தீமை செய்தவன் இப்பிறவியிலோ அல்லது மறுபிறவியிலோ தண்டிக்கப்படுவான் என்று மறுபிறவியில் நம்பிக்கை உள்ள மதங்கள் (உதாரணம்: இந்து மதம், சமண மதம்) கூறுகின்றன. மறுபிறவியில் நம்பிக்கை இல்லாத மதங்கள் (உதாரணம்: கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம், யூத மதம்), தீமை செய்தவன் இப்பிறவியிலோ அல்லது மரணத்திற்குப் பிறகோ தண்டிக்கப்படுவான் என்று கூறுகின்றன. தீமை செய்தவன் தன் தவற்றை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டாலோ அல்லது கழுவாய்கள் (பரிகாரங்கள்) செய்தாலோ, தீமை செய்தவன் மன்னிக்கப்படுவான் என்றும் மதங்கள் கூறுகின்றன. ஆனால், பாவமன்னிப்பு அல்லது கழுவாய் போன்றவற்றால் தீமை செய்தவன் தனக்கு வரும் தீமையிலிருந்து தப்ப முடியும் என்று வள்ளுவர் கூறவில்லை.

குறள் 204 – இல் “அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு” என்பதற்கு உரையாசிரியர்கள் பலரும் ”அறக்கடவுள் தீமை செய்தவனுக்குத் தீமை செய்வதற்குத் திட்டமிடும்.” என்று பொருள் கூறுகின்றனர். குறள் 207- இல் ”வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.” என்றும், குறள் 208 – இல் “நிழல்தன்னை வீயாது அடிஉறைந்தற்று” என்றும் கூறும் இடங்களில், எப்படி வினைப்பகையையும் நிழலையும் கடவுளாகக் கருதுவதில்லையோ, அதுபோல் குறள் 204 – இல் “அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு” என்பதில் அறத்தை ஒரு கடவுளாகக் கருதத் தேவையில்லை. தீமை செய்தவனுக்குத் தீமை வருவது உலக இயல்பு என்பதை உணர்ந்த வள்ளுவர், அதை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து, கவிதை நயம்பட உரைக்கிறார் என்று பொருள்கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

தீமை செய்தவன் கண்டிப்பாகத் தீமை அடைவான் என்ற நம்பிக்கையால் சில நன்மைகள் உள்ளன. ஒன்று, ஒருவனுக்கு அத்தகைய நம்பிக்கையோ அல்லது அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றும் அச்சமோ இருந்தால், அவன் தீமை செய்ய மாட்டான். மற்றொன்று, தீமை செய்தவனுக்குத் தீமை தானாகவே வரும் என்று தீமை செய்யப்பட்டவன் உறுதியாக நம்பினால், அவன் தனக்குத் தீமை செய்தவனுக்குத் தான் தீமை செய்யத் தேவையில்லை என்பதை உணர்ந்து பழிக்குப் பழி வாங்க நினைக்க மாட்டான்.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கும் இன்னா செய்யாமை
குடுபத்தார் மற்றும் சுற்றத்தாரிடையே நாம் காட்டும் பாசத்தை அன்பு என்றும், மற்றவர்களிடத்தும் மற்ற உயிரினங்களிடமும் நாம் காட்டும் பாசத்தை அருள் என்றும் பிரித்துக் கூறுவது மரபு. ஆனால் அன்பும் அருளும் தொடர்புடையவை. அருள் என்பது ’அன்பீனும் குழவி’ என்கிறார் வள்ளுவர். எல்லா உயிர்களிடத்தும் அருளுடைவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் கருத்து. நமது உணவைப் பசியோடு இருக்கும் பிற உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்துப் பலவகையான உயிர்களையும் பாதுகாத்தல் அறநூல்களில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளவற்றுள் எல்லாம் தலையாயது (குறள் – 322) என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், பிற உயிர்களுக்கு வரும் துன்பங்களைத் தம் உயிருக்கு வந்த துன்பமாகக் கருதி, அவ்வுயிர்களைப் பாதுகாக்காவிட்டால், ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் (குறள் – 315) என்ற கேள்வியையும் கேட்டு, வள்ளுவர் நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.                                 (குறள் – 322)

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.                                (குறள் – 315)

மனிதன் ஆறறிவுடையவன். மனிதன் சிந்தித்துச் செயல்படக்கூடியவன். மனிதன் மற்ற உயிரினங்களின் துன்பங்களை உணரும் ஆற்றல் உடையவன். இருப்பினும், வள்ளுவர் கூறுவதைப்போல், பிறவுயிர்களின் துன்பங்களைத் தன்னுடைய துன்பமாகக் கருதி அவ்வுயிர்களைக் காப்பதில் மனிதன் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. ஒருவன் செய்யக் கூடிய தீய செயல்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிய செயல், பிற உயிர்களைக் கொல்வதுதான். பிறவுயிர்களின் துன்பங்களைத் தம் துன்பமாகக் கருதி, அவற்றைக் பாதுகாப்பதற்குப் பதிலாக, மனிதர்கள் ஈவிரக்கமில்லாமல், நாள்தோறும் கோடிக்கணக்கான உயிர்களைக் கொல்கின்றனர். மனிதன் எங்கெல்லாம் சென்று குடியேறி வாழத் தொடங்கினானோ, அங்கு உள்ள விலங்கினங்களுக்குப் பெருமளவில் கேடு விளைவித்தது மட்டுமல்லாமல் அவற்றின் அழிவுக்கும் காரணமாக இருந்திருக்கிறான் என்று மானிடவியல் அறிஞர்கள்(anthropologists) கூறுகின்றனர்[5]. மனிதர்கள், பொறாமை, கோபம், கருத்து வேறுபாடு, சுயநலம், போர், மதவெறி, இனவெறி, சாதிவெறி, பிறர் நிலம், பொருள் போன்றவற்றைக் கவரும் நோக்கம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மற்ற மனிதர்களைக் கொல்கின்றனர். உதாரணமாக, இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ எட்டுக்  கோடி என்றும், ஜப்பான்மீது அமெரிக்கா வீசிய ஆணுகுண்டுகளால் மட்டுமே இறந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 225,000 பேர் என்றும் வரலாறு கூறுகிறது.  ஹிட்லருடைய இனவெறியால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை ஏற்றத்தாழ ஒருகோடி. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 400,000 பேர், போர் அல்லாத வேறு பல காரணங்களுக்காகக் கொல்லப்படுகிறார்கள். மனிதர்கள் மற்ற மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், வேட்டைக்காகவும், உணவுக்காகவும் ஒவ்வொரு நாளும் பல கோடிக்கணக்கான உயிர்களைக் கொல்கின்றனர். நீரிலும் நிலத்திலும் வாழும் 300 கோடி விலங்குகளை ஒவ்வொரு நாளும் மனிதர்கள் கொல்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன[6]. ஆகவே, கொலை செய்வதில் மற்ற உயிரினங்களைவிட மனிதர்கள் அதிக ஆற்றலும் ஆர்வமும் உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மனிதர்கள் தங்கள் இனத்தை அழிப்பது மட்டுமல்லாமல், பிற உயிரினங்களையும் அழித்துகொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து, எதிர்காலத்தில் வாழப்போகும் மனித இனத்திற்கும் மற்ற உயிரினங்களின் அழிவுக்கும் மனிதர்கள் வழிவகுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

இன்னா செய்வதைத் தடுப்பது எப்படி?
மெசபொட்டோமியா(Mesopotamia) வட்டாரத்தில் பாபிலோன் (Babylon) என்ற நாட்டை ஆண்ட ஹம்முராபி (Hammurabi 1810 BC – 1750 BC) என்ற மன்னன், உலகில் முதன்முறையாக, குற்றங்களையும் அவற்றிற்கு ஏற்ற தண்டனைகளையும பட்டியலிட்டு, பெரிய பாறையில் பொறித்து, மக்களுக்கு அறிவித்துத் தன்நாட்டில் குற்றங்கள் நடைபெறுவதைக் குறைத்ததாக வரலாறு கூறுகிறது[7]. பலநாடுகளில் உள்ள குற்றவியல் சட்டங்கள் (Penal Code) ஹம்முராபியின் பட்டியலின் அடிப்படையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. தண்டனைகளால் குற்றங்களைக் குறைப்பது ஒரு அணுகுமுறை. மக்களைக் குற்றங்கள் செய்யாமல் இருப்பவர்களாக மாற்றுவது மற்றொரு அணுகுமுறை. குற்றங்கள் செய்யாமல் இருப்பவர்களாக மாற்றுவதுதான் வள்ளுவரின் நோக்கமாகத் தோன்றுகிறது. யாருக்கும் எப்பொழுதும் சிறிதளவிலுங்கூடத் தீமைசெய்வதைப் பற்றி மனத்தாலுங்கூட எண்ணிப் பார்க்காமல் இருப்பது தலையாய அறமாகும் என்பது வள்ளுவரின் அறிவுரை.

          எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும்
         மாணாசெய் யாமை தலை.                                (குறள் – 317)

”மனத்தானும் மாணா செய்யாமல் இருக்க முடியுமா?” என்றால், சொல்லும் செயலும் மனத்தில் உள்ள எண்ணங்களின் அடிப்படையில் வெளிப்படுவதால், மனத்தில் மாசில்லாமல் இருந்தால் சொல்லிலும் செயலிலும் தூய்மை இருக்கும். ஆகவே, மனத்தால் மாணா செய்யாமல் இருக்க முடியும் என்பது வள்ளுவரின் கருத்து. அதனால்தான்,

மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற,                                                  (குறள் – 34)

என்று வள்ளுவர் கூறுகிறார். ”மனத்துக்கண் மாசிலனாதல் எப்படி?” என்ற கேள்விக்கு,

          புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.                             (குறள் – 298)

என்பது வள்ளுவரின் விடை.  அதாவது, நீரால் உடல் தூய்மை அடைவதைப்போல் வாய்மையால் உள்ளம் தூய்மை அடைகிறது என்பது வள்ளுவரின் கருத்து. வள்ளுவரின் கருத்துக்கள் மிகச் சிறந்தவை. காந்தியடிகள் “உண்மையே வெல்லும்” என்ற உயர்ந்த கொள்கையைக் கடைப்பிடித்து, வள்ளுவர் கூறுவதைப்போல் உண்மைக்கும், இன்னா செய்யாமைக்கும், இன்னா செய்தவர்க்கு நன்னயம் செய்வதற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். எல்லோராலும் காந்தியைப்போல் வாழமுடியாது. ஆகவே, வள்ளுவருடைய கருத்து மனித இயல்புக்கு மாறானது என்று தோன்றாலாம். மனிதர்களுக்கு வையத்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது வள்ளுவம். தண்டனைகளுக்கு அஞ்சாமல் குற்றம் செய்பவன் கயவன். தண்டனைகளுக்கு அஞ்சிக் குற்றம் செய்யாதிருப்பவன் சாதாரண மனிதன். பிறர் துன்பங்களைத் தன் துன்பமாகக் கருதி, இன்னா செதவர்க்கும் இனியவை செய்பவன் சான்றோன் (குறள் – 987). சாதாரண மனிதனைச் சான்றோன் ஆக்குவதுதான் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் நோக்கம்.

முடிவுரை
இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்கள், காந்தியடிகளின் வன்முறையற்ற அறவழிப் போராட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. காந்தியடிகளைப் பின்பற்றி, மார்ட்டின் லூதர் கிங்  மற்றும் நெல்சன் மாண்டேலா  ஆகியோரும்  இன்னா செய்யாமை அடிப்படையில் தோன்றிய அறவழிப் போர்ராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றனர். ஆகவே, வள்ளுவரின் இன்னா செய்யாமைக் கருத்துக்கள் உலக வரலாற்றுச் சிறப்புடையவை என்பது தெளிவு. ”எவையெல்லாம் நமக்குத் துன்பம் தரும் செயல்கள் என்று நாம் உணர்கிறோமோ அவை அனைத்தும் தீய செயல்கள். அத்தகைய செயல்களைப் பிறர்க்குச் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும்.” என்று வள்ளுவர் இன்னாச் செயல்களுக்கு இலக்கணம் வகுத்துள்ளார். தீமை செய்தவர்களுக்கு, அவர்கள் வெட்கப்படுமாறு நன்மையைச் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் செய்த தீமை, அதற்குப் பதிலாக நாம் செய்த நன்மை ஆகிய இரண்டையும் மறந்துவிட வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.  நம்மீது சினங்கொண்டோ அல்லது நாம் எந்தத் தீமையைச் செய்யாதிருந்தாலும் நமக்கு மற்றவர்கள் தீமையைச் செய்தால், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று நினைக்காமல், அவர்கள் செய்த தீமையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. பொறுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், தீமை செய்தவர்களுக்குத் தீமை தானாக வரும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

மனிதர்கள் மற்ற மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களுக்கும் கொடிய தீமைகளை நெடுங்காலாமாகச் செய்து வருகின்றனர். தீமை செய்பவர்களுக்குத் தகுந்த தண்டனை அளித்தால், அவர்கள் தீய செயல்களைச் செய்யமாட்டர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் குற்றவியல் சட்டங்கள் செயல்படுகின்றன. ஆனால், மனத்தில் மாசில்லாமல் இருந்தால், மனிதர்கள் தீய செயல்களைச் செய்யமாட்டார்கள் என்பது வள்ளுவரின் அறிவுரை.


துணைநூல்கள்
Harari, yuval Noah. Sapiens: A brief History of Mankind. Penguin Random House Company, New York, NY.
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502


[1].துன்னுதல் – செய்தல்; துன்னாமை – செய்யாமை
[2]. Confucius (551 BC – 479 BC)
[3] . Confucius’ Golden Rule: “ Do not do unto others what you do not want others to do unto you.”
[4]. http://www.unmaionline.com/index.php/2011-magazine/26-sep-01-15/

[5]. Sapiens – A Brief History of Mankind by Yual Noah Harari

1 comment:

  1. இனிக்க இனிக்க வாசித்து ரசித்தேன்...

    நன்றி ஐயா...

    ReplyDelete