Statcounter

Thursday, January 23, 2020

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி


சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி

“பிறர் நமக்குத் தீங்கிழைத்தாலோ, நம்மை அவமதித்தாலோ, நம்மிடம் முறைதவறி நடந்துகொண்டாலோ, நம்மீது சினங்கொண்டாலோ, நாம் எதிர்பார்த்தது நடைபெறாவிட்டாலோ நாம் சினமடைகிறோம். சினங்கொள்வது மனித இயல்பு. சினம் என்பது ஒரு வலிமையான உணர்வு. சிலர் மற்றவர்களைவிட அதிகமாகச் சினங்கொள்கிறார்கள்.” என்று ஹெண்டிரிக்ஸ் (L. Hendricks) என்ற உளவயில் அறிஞர் கூறுகிறார். மற்றும், ”சராசரியாக, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஒருமுறை சினங்கொள்கிறான்; மூன்றுமுறை எரிச்சலோ அல்லது சலிப்போ அடைகிறான்.” என்று மில்ஸ் (H. Mills) என்ற உளவியல் அறிஞர் கூறுகிறார். நம்முடைய சினத்தின் வலிமையையும், ஒருநாளைக்கு எத்தனை முறை சினங்கொள்கிறோம் என்பதையும் பொறுத்து நம்முடைய சினம் நமது உடலையும் உள்ளத்தையும் பாதிப்பதாகப் பல மருத்துவர்களும் உளவியல் அறிஞர்களும் கூறுகின்றனர்.

சினத்திற்கு எங்கும் இடமில்லை
நம்மைவிட மெலியவர்கள் (நம் குழந்தைகள், நம்மைவிட இளையவர்கள் அல்லது நம்மிடம் பணிபுரிபவர்கள் போன்றவர்கள்) நாம் விரும்பாத செயல்களைச் செய்தால், நம்மில் பலரும் அவர்களிடம் சினங்கொள்கிறோம்.  இது நமது சமுதாயத்தில் பல குடும்பங்களில் நடைபெறும் நிகழ்ச்சி. தம்மைவிட மெலியவர்களிடம் சினங்கொள்வதற்கு தமக்கு உரிமை இருப்பதாகவே பலரும் கருதுகிறார்கள்.  ஆனால், நம்மைவிட வலியவர்களிடம் (நம்மைவிட மூத்தவர்களிடம், நம்முடைய மேலதிகாரிகளிடம், நம்மைவிட வலிமை மிகுந்தவர்களிடம்) நமது சினத்தைக் காட்டுவது முறையன்று என்று கருதியோ அல்லது நமது சினத்தை வெளிப்படுத்தினால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தாலோ, அவர்களிடம் நம்மில் பலரும் சினங்கொள்வதில்லை. சினங்கொள்வது தவறு என்று உணர்ந்தால், மெலியவர்களிடமும் சினங்கொள்ளாமல் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சினங்கொள்ள முடியாத இடங்களில் நாம் சினங்கொள்ளாமல் இருப்பதால் என்ன பயன் (குறள் – 301) என்று வள்ளுவர் கேட்கிறார். சினங்கொள்ள முடியாத வலியவரிடத்தில் சினங்கொண்டால், அது தனக்குத் தீமையாய் முடியும்; சினம் செல்லக் கூடிய மெலியவரிடத்தில் அது தோன்றினாலும், அதைவிடத் தீமை தருவன பிற எதுவும் இல்லை (குறள் - 302). சினத்தால் தீமைகள் தொடர்ந்து வருவதால், வலியார், மெலியார் என்று கருதாமல், யாரிடத்திலும் சினங்கொள்வதை மறந்துவிட வேண்டும் (குறள் – 303) என்பது வள்ளுவரின் கருத்து.

          செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?                                  (குறள் – 301)

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.                                                (குறள் – 302)

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.                                           (குறள் – 303)

வள்ளுவரைப் போலவே, பிளேடொ (Plato) என்ற கிரேக்கத் தத்துவஞானி, “யாரிடம் சினங்கொள்ள முடியுமோ அவர்களிடத்தும், யாரிடம் சினங்கொள்ள முடியாதோ அவர்களிடத்தும் சினங்கொள்ளக் கூடாது.” என்கிறார்[1]. அதாவது, யாரிடத்தும் சினங்கொள்ளக் கூடாது என்று அவர் கூறுகிறார். வேறு பல அறிஞர்களும் சினங்கொள்வது ஒரு தீய செயல் என்பதில் வள்ளுவரோடு கருத்து ஒற்றுமை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். 

சினத்தால் வரும் தீமைகள்
சினங்கொண்டவனின் செயல், பிறர்மீது எறிவதற்காக கையால் நெருப்பை அள்ளியவனின் செயல் போன்றது.” என்கிறார் புத்தர்[2]. ”மற்றொரு பாத்திரத்தில் ஊற்றுவதற்காக ஒரு பாத்திரத்தில் சேமித்துவைக்கப்பட்ட அமிலத்தைப் போன்றது சினம்.” என்று அமெரிக்காவின் நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் (Mark Twain) கூறுகிறார்[3]. ரால்ஃப் வால்டோ எமர்சன் (Ralph Waldo Emerson)[4] என்ற அமெரிக்கத் தத்துவஞானி, “ஒருவன் சினத்தோடு இருக்கும் ஒவ்வொரு மணித்துளியிலும், அறுபது விநாடிகள் தன் மனநிம்மதியை இழக்கிறான்.” ஒருமணித்துளியில் உள்ளவை அறுபது விநாடிகள் மட்டுமே. ஆகவே, சினத்தோடு இருக்கும் பொழுதெல்லாம் ஒருவன், தன் மனநிம்மதியை இழக்கிறான் என்பதை அவர் நயம்பட உரைக்கிறார். சினங்கொண்டவன் தன் மனநிம்மதியை இழப்பது மட்டுமல்லாமல், பிறரோடு சிரித்துப் பழகுவதையும், மனமகிழ்ச்சியையும் இழக்கிறான். சினங்கொண்டவனுக்குச் சினத்தைவிட வேறு பகையும் உண்டோ என்று வள்ளுவர் கேட்கிறார் (குறள் – 304). சினம் ஒரு நெருப்பைப் போன்றது. அது தன்னைச் சேர்ந்தவர்களைக் கொல்வது மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பாதுகாப்பாகத் துணையாக இருப்பவர்களையும் சுட்டழிக்கும் என்பது வள்ளுவரின் கருத்து (குறள் – 306).

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?                                             (குறள் – 304)

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.                                             (குறள் – 306)

சினத்தால் ஒருவனுக்குக் கேடு வருவது உறுதி என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் வள்ளுவர். நிலத்தை அறைந்தவனுடைய கை தவறாமல் வலிப்பதைப்போல், சினத்தை ஒரு ஆற்றலாகக் கருதி அதைப் பயன்படுத்துபவன் கேடடைவது உறுதி என்கிறார் வள்ளுவர் (307). மற்றும், ஒருவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால், தன் மனத்தில் சினம் வராமல் பதுகாத்துக்கொள்ள வேண்டும். சினம் வராமல் பாதுகாத்துக்கொள்ளாவிட்டால், அவனுடைய சினம் அவனைக் கொல்லும் (குறள் – 305).

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.                         (குறள் – 307)

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.                                   (குறள் – 305)
ஒருவன் சினங்கொண்டால் அது அவனுடைய இதயத்தைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்., “ஒருவன் மிகுந்த சினத்தோடு பொங்கி எழுந்தால், அவன் ஆத்திரமடைந்த இரண்டுமணி நேரத்தில் அவனுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்காகிறது. மற்றும், ஒருவன் தன்னுடைய சினத்தை அடக்கவோ அல்லது அதை மறைமுகமாக வெளிப்படுத்தவோ முயற்சி செய்தால் அது அவனுடைய இதயத்திற்கு இரத்தத்தையும் உயிர்வளியையும் (உயிர்வளி – Oxygen) கொண்டுசெல்லும் இரத்தக் குழாய்களைப் (Coranary arteries) பாதித்து, இதயநோய்க்கான வாய்ப்பை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.”, என்று கிறீஸ் ஐகென் (Chris Aiken) என்னும் உளவியல் மருத்துவர் கூறுகிறார். இது முற்றிலும் உண்மை.  எனக்குத் தெரிந்த ஒருவர், சென்னையிலிருந்து திருச்சிக்குத் தொடர்வண்டியில் தன் மனைவியுடன் சென்றுகொண்டிருந்தார். தொடர்வண்டியிலிருந்த சிலர் அவர் மனைவியிடம் தரக்குறைவாகப் பேசினார்கள். அதனால், ஆத்திரமடைந்த அவர் உடனே, மிகுந்த கோபத்தோடு, தவறாகப் பேசியவர்களிடம் வாக்குவாதம் நடத்தினார்.  இந்த நிகழ்வு நடந்த இரண்டுமணி நேரத்தில், அவர் தொடர்வண்டியிலேயே மாரடைப்பினால் இறந்தார்.
”ஒருவன் மிகுந்த அளவில் சினங்கொள்வதைத் தன் இயல்பாகக் கொண்டவனாக இருந்தால், அவனுடைய மூளைக்கு உயிர்வளியுடன் கூடிய இரத்தத்தைக் கொண்டுசெல்லும் இரத்தக் குழாய்கள் வெடித்து அவன் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதத்ததால் (பக்கவாதம்- Stroke) பாதிக்கப் படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்காக அதிகரிக்கிறது.” என்றும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். பக்கவாதம் மட்டுமல்லாமல், சினத்தால் வேறு பல நோய்களும் வருவதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்து. உதாரணமாக, நோய்களைத் தடுக்கும் ஆற்றலைச் சினம் குறைக்கிறது, பதட்டத்தை(பதட்டம் – anxiety) அதிகரிக்கிறது, மனஅழுத்தத்தை (மன அழுத்தம் - Depression) அதிகரிக்கிறது, நுரையீரலைப் (நுரையீரல் – Lungs) பாதிக்கிறது.  மற்றும் சினம் சினங்கொண்டவனின் வாழ்நாட்களையும் குறைக்கிறது[5].
சினம் உடையவர்களை வெல்லுதல் எளிது
காந்தியடிகள், “சினமும் பொறுமையின்மையும் எதையும் சரியாகப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருக்கின்றன.” என்கிறார்[6]. ஒருவன் சினத்தோடு இருக்கும்பொழுது தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடுகிறான். அவனால் மற்றவர்களுடைய வலிமை, அருமை ஆகியவற்றைக் காணமுடியாது. அதுபோல், மிகுந்த காமமுடையவனும் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடுகிறான். ஆகவே, மிகுந்த சினமுடையனையும் காமமுடையவனையும் வெல்லுதல் எளிது. அவர்களுடைய பகையை விரும்பி ஏற்றுக்கொள்ளலாம் (குறள் – 866) என்றும், சினத்தை விடாதவனாகவும் அடக்கமில்லாதவனாகவும் இருப்பவனை வெல்லுதல் எப்பொழுதும் யார்க்கும் எளிது என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் - 864).

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.                                     (குறள்- 866)

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.                                  (குறள் – 864)

சினம் அறத்துக்குப் புறம்பானது
”ஒருவன் தன் மனத்தில் மாசு இல்லாமல் இருப்பது அறம். மற்றெல்லாம் வெறும் ஆரவாரம் (குறள் – 34).” என்பதுதான் வள்ளுவரின் அறக்கோட்பாடுகளின் அடிப்படையான கருத்து.  அழுக்காறு (பொறாமை), ஆசை, சினம், இன்னாச்சொல் ஆகிய நான்கும் அறத்தோடு தொடர்பில்லாதவை என்கிறார் வள்ளுவர் (குறள் – 35).  மனத்தில் பொறாமை இருந்தால் அது பிறர்க்குத் தீங்கு செய்யத்தூண்டும். ஆசை அதிகமானால், விரும்பியதை அடையும்வரை மனம் நிம்மதியை இழக்கிறது. விரும்பியதைப் பெறுவதற்கு மனம் தீய செயல்களையும்  செய்யத்தூண்டும். சினங்கொண்டவன் பிறர்க்குத் தீங்கு செய்வதோடு மட்டுமல்லாமல், தனக்கும் அழிவைத் தேடிக்கொள்கிறான். இன்னாச்சொல் கூறுபவன் பிறர்க்குத் துன்பம் விளைவிக்கிறான். மனத்தில் பல மாசுகள் இருந்தாலும், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கும் மிக வலிமையான மனமாசுகள் மட்டுமல்லாமல், அறத்திற்கு முற்றிலும் புறம்பானவை. இவை நான்கும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை என்பது வள்ளுவரின் கருத்து. 
மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.                                                          (குறள் – 34)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.                                     (குறள் – 35)

சினங்கொள்ளாமல் இருப்பது நன்று
பல சுடர்களுடன் கொழுந்துவிட்டு எரியும் தீயைப்போல், ஒருவன் நமக்குத் தொடர்ந்து தீமையைச் செய்தாலும், முடியுமாயின் அவனிடம் சினந்துகொள்ளாமல் இருப்பது நன்று. அவனிடம் நாம் தீமையைச் செய்தால், அவன் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் நாமும் கேடடைவோம் (குறள் – 308). ஒருவர் நமக்குத் தீங்கு செய்தால், பழிவாங்கும் நோக்கத்தோடு அவரைத் தண்டிக்கலாம். அவ்வாறு செய்தலுக்கு ஒறுத்தல் என்று பெயர். ஒறுத்தலைவிடச் சிறந்த செயல் பொறுத்தல். அதாவது, அவர் நமக்குச் செய்த தீமையை பொறுத்துக் கொள்ளலாம். பொறுத்தலைவிடச் சிறந்த செயல் மறத்தல். அதாவது, அவர் நமக்குச் செய்த தீமையை மறந்துவிடுவது அதைப் பொறுத்துக்கொள்வதைவிடச் சிறந்தது. இந்தக் கருத்தை பொறையுடைமை என்ற அதிகரத்தில் உள்ள குறளில் காணலாம் (குறள் 152).

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.                                 (குறள் – 308)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின் நன்று.                                        (குறள் - 152)

சினமில்லாமல் இருந்தால் வரும் நன்மைகள்
சினத்தால் வரும் தீமைகளைக் கூறிய வள்ளுவர், சினங்கொள்லாமல் இருப்பாதால் வரும் நன்மைகளைக் கூறத்தவறவில்லை. சினங்கொள்ளாமல் இருப்பதை ஊக்குவிப்பதற்காக, “ஒருவன் தன் மனத்தாலும் வெகுளியை எண்ணாதிருப்பானாயின், அவன் தான் நினைத்ததெல்லாம் பெறுவான் (குறள் – 309). ஒருவன் மற்றவர்களுக்கு மனமுவந்து கொடுக்கும் கொடையாளியாகவும் சினத்தை வெறுப்பவனாகவும் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தையுடையவர்கள் இவ்வுலகத்தில் எவரும் இல்லை (குறள் – 526).” என்று வள்ளுவர் கூறுகிறார்.
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.                            (குறள் – 309)

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.                     (குறள் – 526)

முடிவுரை
சினங்கொள்வது மனித இயல்பு. நம்முடைய சினத்தின் வலிமையையும், ஒருநாளைக்கு எத்தனை முறை சினங்கொள்கிறோம் என்பதையும் பொறுத்து நம்முடைய சினம் நமது உடலையும் உள்ளத்தையும் பாதிப்பதாகப் பல மருத்துவர்களும் உளவியல் அறிஞர்களும் கூறுகின்றனர். தம்மைவிட மெலியவர்களிடம் சினங்கொள்வதைப் பலரும் தம் இயல்பாகக் கொண்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் தம்மைவிட வலியவர்களிடம் சினங்கொள்வதில்லை. வலியார் மெலியார் என்று கருதாமல், யாரிடத்திலும் சினங்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். சினம் நெருப்பைப் போன்றது. பிறர்மீது எறிவதற்காக, ஒருவன் நெருப்பைக் கையெலெடுத்தால், அது அவனுக்கே தீமையாக முடியும். அதனால், சினத்தைச், ’சேர்ந்தாரைக் கொல்லி’ என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். சினமுடையவர்கள் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றலை இழப்பதால், அவர்களை வெல்வது அவர்களுடைய பகைவர்களுக்கு எளிது. மனத்தில் ஏற்படும் மாசுகளில் சினமும் ஒன்று. அறத்தைப் பின்பற்ற விரும்புபவர்கள், மனமாசுகளில் ஒன்றாகிய சினத்தைத் தவிர்க்க வேண்டும். ஆகவே, சினங்கொள்ளாமல் பொறுமையாக இருப்பது நன்று. சினமில்லாதவர்கள் மனமகிழ்ச்சியோடு இருப்பார்கள். ஒருவன் சினமில்லாமலிருந்தால், அவன் விரும்பியவற்றையெல்லம் அவன் அடைவான் என்று கூறி, சினமில்லாமல் இருப்பதற்கு வள்ளுவர் நம்மை ஊக்குவிக்கிறார்.


துணை நூல்கள்
Aslina, Dean; Bore, Sam; Hendrics, LaVelle; Morrisss, Guy. The Effects of Anger on the Brain and Body. (2013) National Forum Journal Counselling and Addiction, Volume 2, Number 1.
 Mills, H. (2005, June 25). Health Cost of Anger. Retrieved from http://www.mentalhelp.net/proc/view_doc.php?type=doc&id=5809&cn=116
சாரங்கபாணி, இரா. (1989) திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைநகர், தமிழ் நாடு, இந்தியா: அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
தமிழண்ணல்.  (1999) திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மயூரா வளாகம், மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
தேவநேயப் பாவாணர், ஞா.  (2000) திருக்குறள் தமிழ் மரபுரை. சென்னை, தமிழ் நாடு: ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்.      

No comments:

Post a Comment