Statcounter

Monday, February 10, 2020

அருளென்னும் அன்பீன் குழவி

அருளென்னும் அன்பீன் குழவி

அன்பு காட்டும் இயல்பு விலங்குகளிடத்தில்கூட இருப்பதாக உயிரியல் அறிஞர்களும் உளவியல் அறிஞர்களும் கூறுகின்றனர்.  விலங்குகள் தங்கள் கன்றுகளிடமும், குட்டிகளிடமும் அன்பு காட்டுகின்றன. பறவைகள் தங்கள் குஞ்சுகளிடம் அன்பு காட்டுகின்றன. தன் குஞ்சுகளைப் பருந்து தாக்கவந்தால், தாய்க்கோழி பறந்துவந்து தன்னைவிட வலிய பருந்தை எதிர்த்துப் போரிடத் தயங்குவதில்லை. சில பறவைகளும் விலங்குகளும் தங்கள் துணை விலங்குகளிடம் அன்பு காட்டுகின்றன; அவைகளைப் பாதுகாக்கின்றன; அவைகளின் துயரத்தில் பங்குகொள்கின்றன. நாய், பூனை போன்ற விலங்குகள் தம்மை வளர்ப்பவர்களிடம் மிகுந்த அன்பு காட்டுகின்றன. நாய்கள் தம்மை வளர்ப்பவர்களிடம் அன்பு காட்டுகின்றன என்பதற்குச் சான்றாக, 19 – ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று குறிப்பிடத் தக்கது. ஸ்காட்லாந்தில் (Scotland) ஜான் கிரே (John Grey) என்பவர் காவல்துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் ஒரு நாயை வளர்த்துவந்தார். அவர் இறந்த பிறகு, தான் இறக்கும்வரை, ஒவ்வொரு நாளும் அவருடைய நாய் அவருடைய கல்லறைக்குச் சென்று இரவைக் கழித்தது. இது தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. விலங்குகளின் அன்புகாட்டும் இயல்பைப் பற்றி ஆய்வு செய்து, அமெரிக்காவில் மையாமி (Miami, Florida) நகரத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் ஆராய்சியாளராகப் பணியாற்றும் பெரிட் ப்ரோகார்ட் (Berit Brogaard) என்ற பெண்மணி Psychology Today என்ற மின்னிதழில், ஒருகட்டுரையில்[1] விலங்குகளின் அன்பு காட்டும் இயல்பைப் பற்றி பல அரிய கருத்துக்களைக் கூறுகிறார்.

அன்பு காட்டும் ஆற்றல் விலங்குகளிடம் இருக்குமானால், அது ஆறறிவு படைத்த மனிதர்களிடமும் கண்டிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்பு என்பது மக்கள் எல்லோரிடத்திலும் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. காதலன் தன் காதலியிடம் அன்பு காட்டுகிறான். காதலி தன் காதலனிடம் அன்பு காட்டுகிறாள். அதுபோல், பல குடும்பங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர், சுற்றத்தார் அனைவரும் ஒருவரோடு ஒருவர் அன்போடு பழகுகிறார்கள். எல்லா மனிதர்களிடமும் அன்பு காட்டும் இயல்பு உள்ளது. ஒருவன் அன்புடையவன் என்றால் அவன் அன்போடுகூடிய செயல்களைச் செய்பவன் என்று பொருள். ஒருவன் அன்பில்லாதவன் என்றால் அவனிடம் அன்பு காட்டும் ஆற்றல் இருந்தும் அவன் பிறரிடம் அன்பு காட்டுவதில்லை என்று பொருள். எப்படி மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரிடமும் அறிவு இருக்கிறதோ அதுபோல் அன்பும் இருக்கிறது.  ஆனால், அவர்கள் அதைக் காட்டும் அளவிலும் முறையிலும்தான் வேறுபடுகிறார்கள்

தொடர்புடையவர்களிடம் ஒருவர் காட்டும் பாசமும் பரிவும் தமிழ் இலக்கியத்தில் அன்பு என்று அழைக்கப்படுகிறது. தொடர்பில்லாதவர்களிடமும் மற்ற உயிரினங்களிடமும் ஒருவர் காட்டும் பாசமும் கருணையும் அருள் என்று அழைக்கப்படுகிறது. அன்பின் முதிர்ச்சிதான் அருளாகப் பரவுகிரது. வள்ளுவர், அருளை அன்பின் குழந்தை (அருளென்னும் அன்பீன் குழவி (குறள் 757)) என்று குறிப்பிடுகிறார். அன்பைப் பற்றியும் அருளைப் பற்றியும் வள்ளுவர் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

அன்பினால் பெறும் பயன்
ஒருவனுடைய அன்போடுகூடிய செயல்களால்தான் அவனுடைய உடலும் உயிரும் தொடர்போடு இருக்கின்றன என்கிறார் வள்ளுவர் (குறள் – 73). அதாவது, ஒருவன் அன்போடுகூடிய செயல்களைச் செய்வதால்தான் அவன் உயிரோடு இருக்கிறான் என்பது வள்ளுவரின் கருத்து.  அதுபோல், அன்போடு பொருந்தி வாழ்வதால் வரும் பயன் இன்பமாக வாழ்பவர்கள் அடையும் சிறப்பு என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது (குறள் – 75).

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.                                    (குறள் – 73)

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.                                        (கு(றள் – 75)

அன்பில்லாதவன் உயிரில்லாதவன்
அன்பு காட்டும் ஆற்றல் இருந்தும், அன்பு காட்டாதவர்கள் பலர் இவ்வுலகில் உள்ளனர். அவர்கள் இறந்தவர்களைப் போன்றவர்கள் என்பது வள்ளுவரின் கருத்து. அன்போடு வாழ்பவன்தான் உண்மையிலேயே உயிரோடு இருக்கிருக்கிறான். அன்பில்லாதவன் எலும்பைத் தோலால் போர்த்திய உயிரற்ற உடல் (குறள் 80).” என்றும், ”அன்பில்லாமல் உயிர் வாழ்வது, பாலைநிலத்தில், பட்டுப்போன மரம் தளிர்த்ததைப் போன்றது (குறள் 78).” என்றும், ”உள்ளத்தில் அன்பில்லாதவர்களுக்கு உடலில் புறவுறுப்புக்கள் இருப்பதால் என்ன பயன்? (குறள் – 79)” என்றும் கூறி அன்போடு வாழ்வது இன்றியமையாதது என்ற கருத்தைப் பல கோணங்களிலிருந்து வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.                                (குறள் – 80)
அன்பகத்து ல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.                                      (குறள் – 78)
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?                                (குறள் – 79)

திருக்குறளில் வேறு சில இடங்களிலும் வள்ளுவர் இதுபோன்ற கருத்தைக் கூறுகிறார். உதாரணமாக, ”ஒப்புரவு செய்து வாழ்பவனே உயிரோடு வாழ்பவன். ஒப்புரவு செய்யாதவன் உயிரோடு இருந்தாலும் செத்தவனாகவே கருதப்படுவான்[2] என்றும், “கள்ளுண்பவன் செத்தவனாகவே கருதப்படுவான்[3]என்றும், “அளவுக்கு மீறிய சினமுடையவன் செத்தவனாகவே கருதப்படுவான்[4]என்றும் வள்ளுவர் கூறுவது குறிப்பிடத் தக்கது. அன்பு ஒரு இயற்கையான உணர்வு. அந்த உணர்வு மனிதனுக்கு உயிரைப்போல் இன்றியமையாது என்று வள்ளுவர் கருதுவதால், அன்பில்லாதவன் உயிரில்லாதவன் போன்றவன் என்று பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறுகிறார்.
  
அன்பும் அறமும்
எலும்பில்லாத புழு, பூச்சி போன்றவை வெயிலால் சுட்டெரிக்கப்படுவதைப்போல் அன்பில்லாத உயிர்களை அறம் சுட்டெரிக்கும் (குறள் – 77).

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.                                                 (குறள் – 77)

அறம் என்பது ஒரு தனித்து இயங்கும் ஆற்றல் இல்லை. அறம் அழிக்கும் வல்லமை பொருந்திய கடவுளும் இல்லை. மனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறி அறம். மனத்தில் மாசுக்கள் இல்லாமல் இருப்பது அறம். ஆனால், அதை ஒரு தனித்து இயங்கும் ஆற்றலாக வள்ளுவர் கற்பனை செய்கிறார். இதுபோல், வேறு சில குறட்பாக்களிலும் வள்ளுவர் அறத்தை ஒரு தனித்து இயங்கும் ஆற்றலாக கற்பனை செய்கிறார். உதாரணமாக, ”மறந்தும் பிறர்க்கு தீவினைகளைச் செய்வதுபற்றித் திட்டமிடக் கூடாது. பிறர்க்கு தீமை செய்யத்திட்டமிட்டால், தீமை செய்யத்திட்டமிட்டவனுக்கு அறம் தீமை செய்யத் திட்டமிடும்[5] (குறள் – 204).” என்றும், “கற்க வேண்டியவற்றைக் கற்று சினம் வராமல் காத்து, அடக்கத்தோடு ஒருவன் ஒழுகவல்லானாயின், அவன் வரும் வழியைக் கண்டறிந்து, அறம் அவனைச் சென்று அடையும்[6] (குறள் – 130)” என்றும் வள்ளுவர் கூறுவது குறிப்பிடத் தக்கது. வள்ளுவரைப்போல், இளங்கோகோவடிகள்,

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
                                         (சிலப்பதிகாரம், பதிகம், 55)
 என்றும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
                                         (சிலப்பதிகாரம், பதிகம், 57)
என்றும் கூறியிருப்பதைக் காண்க. இவை அனைத்தும் வள்ளுவர், இளங்கோவடிகள் போன்ற புலவர்களின் நம்பிக்கை என்று தோன்றுகிறது.

அன்பின் வெளிப்பாடு
தனக்குத் தொடர்புடையவர்களின் துயரத்தைக் கண்டால் அன்போடு வாழ்பவர்களின் கண்களில் வடியும் கண்ணீர் அவர்களின் அன்பை வெளிப்படுத்திவிடும். தொடர்புடையவர்களின் துயரம் அன்புடையவர்களை மிகவும் வருத்துகிறது. அந்த வருத்தம் அவர்களால் மறைக்கமுடியாமல் கண்ணீராக வெளிப்படுகிறது (குறள் 71).

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.                                               (குறள் – 71)

ஒரு குழந்தையின் துயரம் அந்தக் குழந்தையின் தாயை எப்படிப் பாதிக்கிறது என்பதை,

          உன்கண்ணில் நீர்வழிந்தால் – என்னெஞ்சில் உதிரங் கொட்டுதடீ!

என்று, ’கண்ணம்மா – என் குழந்தை’ என்ற பாடலில் பாரதியர் கூறுவது இங்கு நினைவுகூரத் தக்கது.

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
அன்பில்லாதவர்கள் தன்னலம் கருதித் தம்மிடம் உள்ள எல்லாப்பொருள்களையும் தாமே வைத்துகொள்வார்கள். அன்புடையவர்கள் தமது உடலில் உள்ள எலும்பையும் பிறர்க்குக் கொடுத்து உதவுவார்கள் (குறள் 72) என்று வள்ளுவர் கூறுகிறார்.  இங்கு, எலும்பையும் பிறர்க்குத் தருவார்கள் என்பது, தம்மிடம் உள்ள எந்தப் பொருளையும் பிறர்க்குத் தருவார்கள் என்பதைக் குறிக்கிறது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.                                            (குறள் – 72)

தற்காலத்தில், சிலர் தங்கள் சிறுநீரகங்களில் ஒன்றையோ, கல்லீரலில் ஒரு பகுதியையோ உறவினர்களோடோ அல்லது நண்பர்களோடோ பகிர்ந்துகொண்டு, அவர்களைக் காப்பாற்றுவது இக்குறளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சங்க இலக்கியத்திலும், இதுபோன்ற தன்னலமற்ற செயல்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

ஒரு சமயம், அதியமான் என்ற மன்னன் வேட்டைக்குச் சென்றான். சென்றவிடத்து, ஒரு மலை உச்சியில் இருந்த நெல்லிமரத்தில் ஒரேயொரு அருங்கனி இருந்தது. அந்நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்ற நம்பிக்கை அக்காலத்தில் நிலவியது. அதியமான் அந்த அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் ஔவையார்க்கு அளித்து அவரை உண்பித்தான். அந்நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்று தெரிந்திருந்தும், ந்தச் செய்தியை தன்னுள் அடக்கி அக்கனியைத் தான் உண்ணாமல் தனக்கு அளித்ததை ஒளவையார் பாராட்டியதாகப் புறநானூறு கூறுகிறது.
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்                         
சாதல் நீங்க எமக்குஈத் தனையே.
                                         (ஒளவையார், புறநானூறு – 91:8-11)

கடையெழு வள்ளல்களின் காலத்திற்குப் பிறகு, கொடையிற் சிறந்தவனாக விளங்கியவன் வள்ளல் குமணன். அவன் முதிரமலைப் பகுதிக்குத் தலைவன். அவன் பெரும் புகழோடு நல்லாட்சி நடத்தியதைக் கண்டு பொறாமை அடைந்த அவன் இளவல் இளங்குமணன், குமணனோடு போரிட்டான். அப்போரில் தோற்ற குமணன், காட்டிற்குச் சென்று அங்கே வாழ்ந்துவந்தான். அச்சமயம், பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் குமணனைப் பாடிப் பரிசில் பெறச் சென்றார். அவன் அவருக்கு எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். அவ்வாறு இருப்பினும், பெருந்தலைச் சாத்தனார் பரிசு ஒன்றுமில்லாமல் திரும்பிச் செல்வதை அவன் விரும்பவில்லை. ஆகவே, அவன் தன் தலையை வெட்டி, அதைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் அவன் பெருமளவில் பரிசு கொடுப்பான் என்று கூறித் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்தான். அவ்வாளைப் பெற்றுக் கொண்டு, குமணன் சொல்லியவாறு செய்யாமல், இளங்குமணனிடம் சென்று தான் குமணனைச் சந்தித்ததையும் அவன் வாள் கொடுத்ததையும் புறநானூற்றுப் பாடல் 165 -இல் புலவர் பெருந்தலைச் சாத்தனார் கூறுகிறார். 

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்            
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன
வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்
                                         (பெருந்தலைச் சாத்தனார், புறநானூறு, 165: 10-13)
அன்பும் நட்பும்
நாம் நம்மோடு தொடர்புடையவர்களிடம் அன்போடு பழகினால், அதைப் பார்த்து, நம்மோடு தொடர்பில்லாதவர்களுக்கும் நம்மோடு பழக வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.  அவர்கள் காட்டும் ஆர்வம் நாளடைவில், நாம் தேடிப்போகாமல் நட்பு என்னும் சிறப்பு நம்மை வந்தடையச் செய்யும். (குறள் – 74). இதுவே, அன்புக்கும் நட்புக்கும் உள்ள தொடர்பு.

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.                                   (குறள் – 74)


மறத்திற்கும் அன்பே துணை
அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று அறியாதவர்கள் சொல்வார்கள்.  அதுவே, வீரச்செயல்களுக்கும் துணையாகும் என்கிறார் வள்ளுவர்(குறள் – 76).

அறத்திற்கே அன்புசார்பு ன்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.                                   (குறள் – 76)

தன்னுடைய குடும்பத்தினருக்கோ, இனத்தவர்க்கோ, நாட்டிற்கோ அல்லது மொழிக்கோ இழைக்கப்படும் தீமைகளை எதிர்த்து ஒருவன் மேற்கொள்ளும் வீரச்செயல்களும் போராட்டங்களும் அன்பிற்கு முரணானவையாகத் தோன்றினாலும், அவை அன்பின் அடிப்படையில் செய்யப்படுபவைதான். போர்க்களத்தில், தம் நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக எண்ணற்ற வீரர்கள் வீரச்செயல்களைச் செய்வதோடு மட்டுமல்லாமல் தம் உயிரையே தியாகம் செய்கிறார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி. அந்த வீரர்களின் வீரச்செயல்கள் அன்பின் உந்துதலால் செய்யப்படுபவை.

அருளென்னும் அன்பீன் குழவி
அன்பின் இன்றியமையாமையைக் கூறும் அன்புடைமை என்ற அதிகாரம் திருக்குறளில் இல்லறவியல் என்ற பகுதியில் உள்ளது. அன்பின் முதிர்ச்சியாகக் கருதப்படும் அருளைப் பற்றிய குறட்பாக்கள் துறவறவியல் என்ற பகுதியில் உள்ளது. அதனால், அன்பு இல்லறத்தாருக்கும் அருள் துறவறத்தாருக்கும் உரிய பண்புகள் என்று சிலர் கூறுகின்றனர். இல்லறவியல் துறவறவியல் என்ற பிரிவு வள்ளுவரால் ஏற்படுத்தப்பட்டதா என்பது ஆய்வுக்குரியது. துறவறவியலில் உள்ள சில அதிகாரங்கள் (அருளுடைமை, தவம், கூடாவொழுக்கம், துறவு ஆகியவை) வேண்டுமானால் துறவிகளுக்கு மட்டுமே பொருத்தமானவையாகக் கருதப்படலாம். மற்ற அதிகாரங்கள் (புலால் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, மெய்யுணர்தல், அவா அறுத்தல் ஆகியவை) அனைவருக்கும் ஏற்றவை. குறிப்பாக, வாய்மை, கள்ளாமை(திருடுவதைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதும் திருடாமல் இருப்பதும்), வெகுளாமை(சினம் கொள்ளாமல் இருப்பது), இன்னா செய்யாமை போன்ற ஆதிகாரங்களில் உள்ள அரிய கருத்துக்கள் அனைவருக்கும் ஏற்ற கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை.  அதுபோல், அருளுடைமையில் உள்ள கருத்துக்களும் அனைவருக்கும் ஏற்றவைதான். தொடர்பில்லாத மனிதர்களிடமும்மற்ற  உயிரினங்களிடமும் நாம் காட்டும் பாசமும் கருணையும் அருள் என்றால் அதை அனைவரும் தங்கள் குறிக்கோளாகக்கொள்ள வேண்டாமா?

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்
அருளுடைமை என்ற அதிகாரத்தில் அருளைச் சிறப்பித்துக் கூறுவதற்காக, ”பண்பற்ற இழிந்தவர்கள்கூட பொன்னும் பொருளும் பெற்று செல்வந்தராகலாம். பொன் பொருள் போன்ற செல்வங்களைவிடச் சிறந்த செல்வம் அருள் (குறள் – 241)” என்று வள்ளுவர் கூறுகிறார்.  நல்ல வழிகளை எல்லாம் ஆராய்ந்து, அருளோடுகூடிய செயல்களைச் செய்ய வேண்டும்; பலவழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும், அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும் என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 242).

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.                                           (குறள் – 241)

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.                                      (குறள்242)

அருளைச் செல்வத்துள் செல்வம் என்று கூறுவதைப்போல், வேண்டாமையை (எந்தப் பொருளின் மீதும் ஆசைகொள்ளாமையை) விழுச்செல்வம்[7] என்றும், கல்வியைக் கேடில் விழுச்செல்வம்[8] என்றும், கேள்வியை செல்வத்துள் செல்வம்[9] என்றும் வள்ளுவர் கூறுகிறார். கல்வி, கேள்வி, வேண்டாமை, அருள் ஆகிய நான்கும் சிறப்பான செல்வங்கள்தான். ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள கருத்துக்களை வலியுறுத்துவதற்காக, அந்த அதிகாரத்தில் கூறும் கருத்துக்களை மிக உயர்வாகச் சொல்வது வள்ளுவர் கையாளும் உத்தியாகத் தோன்றுகிறது.

அருளுடைமையால் அடையும் பயன்
அருளுடைமையால் ஒருவன் பல நன்மைகளை அடைகிறான் என்கிறார் வள்ளுவர். ”அருளுடையவன் நரகத்திற்குச் செல்ல மாட்டான்[10]. அருளுடையவனுக்கு அவன் உயிர் அஞ்சுவதற்குக் காரணமான தீவினைகள் இரா[11]. அருட்செயல்களைச் செய்து வாழ்கின்றவனுக்குத் துன்பம் இல்லை.[12]” என்றெல்லாம் அருளோடு செயல்படுவதனால் வரும் பயன்களை வள்ளுவர் விரிவாகக் கூறினாலும், கைம்மாறு கருதாமல், மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று என்று வள்ளுவர் கூறியதைப்போல், பயன் கருதாமல், அருளோடு கூடிய செயல்களைச் செய்து அனைத்து உயிர்களையும் ஆதரிப்பதே சிறந்ததாகத் தோன்றுகிறது.

அருளற்ற செயல்கள்
பல அருளற்ற செயல்கள் நெடுங்காலமாகவே உலகில் நடைபெற்றுவருகின்றன. பலர் மற்றவர்களைத் தம் சொற்களாலும் செயல்களாலும் துன்புறத்துவது தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளாகும். பிற மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பிறவுயிர்களுக்கும், மனிதர்கள் தொடர்ந்து கொடுமை செய்துவருகிறார்கள். உணவுக்காக, பசு, பன்றி, ஆடு, கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பவர்கள், அவ்விலங்குகளின் சுதந்திரத்தைப் பறித்து, கூட்டிலடைத்துப் பின்னர் கொலை செய்து அவற்றின் தசைகளை விற்கிறார்கள். புலால் உண்ணுபவர்களின் உணவுக்காக, நாள்தோறும், நிலத்தில் வாழும் விலங்குகளும், நீரில் வாழிம் விலங்குகளும், பறவைகளும் கொல்லப்படுகின்றன. வேட்டையாடும்பொழுது சிங்கம், புலி, யானை, மான் போன்ற விலங்குகளை மக்கள் கொல்கிறார்கள். சிலர் விலங்குகளைத் தெய்வங்களுக்குப் பலிகொடுப்பதற்காகக் கொல்கின்றனர். இவையெல்லாம் அருள் என்னும் உய்ரந்த பண்புக்கு முற்றிலும் முரணான கருணையற்ற செயல்கள்.

அருளுடைமைக்கு எடுத்துக்காட்டு
ஒரு முல்லைக் கொடி படர்வதற்குக் கொழுகொம்பின்றி இருந்ததைக் கண்ட பாரி, அக்கொடி படர்வதற்குத் தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்தான்[13]. குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த மயிலுக்குத் தன் போர்வையை அளித்தான் பேகன்[14]. முல்லைக்கொடியும் மயிலும் எந்தக் கைம்மாறும் செய்யா என்று தெரிந்திருந்தும், அவை துயரப்படுகின்றன என்று நினைத்து உள்ளம் உருகி அவைகளுக்கு கருணையோடு உதவி செய்தது அருளின் சிகரம் போன்ற செயல்கள். எதையும் எதிர்பார்க்காமல், வறியார்க்கொன்று ஈவதும், ஒத்தது அறிந்து, தளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்வதும் அருளோடு கூடிய செயல்களாகும்.

     வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
          வாடினேன் பசியினால் இளைத்தே
     வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
     நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
     ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
                     (இராமலிங்க அடிகளார், திருவருட்பா, ஆறாம் திருமுறை – 3471)

என்ற வள்ளலாரின் பாடல் அவருடைய அருள் நிறைந்த நெஞ்சத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

முடிவுரை
விலங்குகள் தங்களின் குட்டிகளிடமும், குஞ்சுகளிடமும், துணைவிலங்குகளிடமும் அன்பு காட்டுகின்றன என்பதற்குப் பலசான்றுகள் உள்ளன என்று உயிரியல் மற்றும் உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். விலங்குகளிடம் அன்பு என்ற உணர்வு இருக்குமானால், ஆறறிவு படைத்த மனிதனிடம் அன்பு என்னும் உணர்வு இயற்கையாகவே உள்ள உணர்வு என்பதில் ஐயமில்லை. தொடர்புடையவர்களிடம் நாம் காட்டும் பாசமும் பரிவும் அன்பு என்று அழைக்கப்படுகிறது. அன்பு இயற்கையான உணர்வாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் முறையிலும் அளவிலும் மக்கள் வேறுபடுகிறார்கள். உயிரோடு இருப்பதும் இன்பமாக வாழ்வதும் அன்பினால் மக்கள் அடையும் பயன் என்பது வள்ளுவரின் கருத்து. அன்புக்குரியவர்களின் துயரத்தைக் கண்டு அன்புடையவர்களின் கண்களில் அடைக்க முடியாத அளவுக்குக் கண்ணீர் பெருக்கெடுத்து வரும். அன்புடையவர்கள் தம் உயிரைக்கூடப் பிறர்க்கு கொடுத்து உதவுவார்கள் என்று வள்ளுவர் கூறுவதற்கு, தற்காலத்திலும் சங்க காலத்திலும் பல சான்றுகள் உள்ளன. அன்புள்ளவர்களிடம் பழக வேண்டும் என்று தொடர்பில்லாதவர்கள் காட்டும் ஆர்வம் நட்பாக மாறுகிறது. அறச்செயல்கள் மட்டுமல்லாமல் சில வீரச்செயல்களும் அன்பின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

அன்பு வளர்ந்து, தொடர்பில்லாதவர்களிடமும் மற்ற உயிரினங்களிடமும் நாம் காட்டும் பாசமாகவும் கருணையாகவும் மாறினால், அன்பு அருளாகிறது. அருளுடைமையால் பல நன்மைகள் இருந்தாலும், உலகில் பலரிடத்திலும் அருள் என்ற உணர்வு இல்லாததால், பல கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்முறைகளும், மற்ற உயிரினங்களை உணவுக்காகக் கொல்வதும், பொழுதுபோக்குக்காகக் கொல்வதும் காலங்காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வள்ளுவரைப்போல், அருளைப் பின்பற்ற வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் மனமுருகிப் பாடியிருப்பது நினைவுகூரத் தக்கது.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞாதிருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 1). காவ்யா பதிப்பகம், சென்னை
________________. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம், சென்னை
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502


[2]. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்.           (குறள் – 214)
[3]. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.           (குறள் – 310)
[4]. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
   நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.          (குறள் – 926)

[5]. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
   அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.        (குறள் -204)
[6]. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
   அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து . (குறள் – 130)

[7] . வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    யாண்டும் அஃதொப்பது இல்.       (குறள் – 363)
[8] . கேடில் விழுச்செல்வம் கல்வி ருவற்கு
   மாடல்ல மற்றை யவை.                 (குறள் – 400)
[9]. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
   செல்வத்துள் எல்லாந் தலை.          (குறள் – 411)
[10]. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
   இன்னா உலகம் புகல்.                   (குறள் – 243)
[11]. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்ப
   தன்னுயிர் அஞ்சும் வினை.             (குறள் – 244)
[12]. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.                 (குறள் – 245)

[13] . கபிலர், புறநானூறு  201
[14] . பரணர், புறநானூறு, 141

No comments:

Post a Comment