Statcounter

Monday, April 27, 2020

தோன்றின் புகழொடு தோன்றுக!


தோன்றின் புகழொடு தோன்றுக!

ஒருவரின் சிறப்பான சாதனைகள் பலரால் அறியப்பட்டால் அல்லது பேசப்பட்டால் அவர் புகழுடையவராகக் கருதப்படுகிறார். புகழில் பலவிதம் உண்டு. சிலருடைய புகழ் மின்னலைப் போன்றது. அத்தகைய புகழ் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிலகாலம் மட்டுமே தோன்றி, பின்னர் விரைவில் மறைந்துவிடும். சிலருடைய புகழ் கதிரவனைப்போல் நிலம், காலம் போன்றவற்றின் எல்லைகளைக் கடந்து விளங்கும். உதாரணமாக, மெய்யியல் அறிஞர்கள்(Philosophers), அறிவியல் வல்லுநர்கள், பெருமைக்குரிய கலைஞர்கள், சிறந்த  எழுத்தாளர்கள் போன்றவர்களில் உயர்ந்த சாதனை படைத்தவர்கள் பலராலும் பலநாடுகளில், நீண்ட காலமாக அறியப்பட்டும் பாராட்டப்பட்டும் வருவதால் அவர்களுடைய புகழ் என்றென்றும் உலகெங்கும் நிலைத்து நிற்கும் தன்மையது. பலருடைய புகழ் மின்னலைப்போல் விரைவில் மறையாமலும், கதிரவனைப்போல் என்றென்றும் நிலைத்து நிற்கும் தன்மை இல்லாமலும், இரண்டு வகையான புகழுக்கும் இடைப்பட்டதாக இருக்கும். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற முறையில் புகழோடு வாழவேண்டும் என்பது குறளில் காணப்படும் கருத்து.

புகழின் சிறப்பு
ஈகையினால் வரும் புகழைத் தவிர உயிர்க்குப் பயன் அளிக்கக் கூடியது வேறு எதுவுமில்லை (குறள் – 231). புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின்மேல் நிற்கின்ற புகழேயாகும் (குறள் – 232).

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.                                   (குறள் – 231)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.                              (குறள் – 232)

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், உலகில் பல மாற்றங்கள் தோன்றியுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், பெரிய நகரங்கள் இல்லை. அக்காலத்தில், பெரும்பாலான மக்கள் சிற்றூர்களில் வாழ்ந்தார்கள்; ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்கள். இன்று, பலரும் பெரிய நகரங்களில் அடுக்ககங்களில் வாழ்கின்றனர். மக்களிடையே அதிகத் தொடர்பில்லை. பல ஆண்டுகளாக அடுத்த வீட்டிலிலேயே இருப்பவர்களைக்கூட மக்கள் தெரிந்துகொள்வதில்லை; அவர்களோடு பழகுவதில்லை. தொலைத்தொடர்பு (Telecommunication), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), தொலைக்காட்சி (Television), இணையம் (Internet), சமூக வலைத்தளங்கள் (Social Networks), போக்குவரத்து (Transportation) போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் சமுதாயத்தில் பல நிரந்தரமான மாற்றங்கள் தோன்றியுள்ளன. இது போன்ற மாற்றங்களால், மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நேரடித் தொடர்பைவிட தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்கள் வழியாக ஒருவர் மற்றவர்களைப் பற்றித் தெரிந்துகொள்கிறார்கள். ஒருவருடைய ஈகையால் அவரிடம் வந்து இரப்பவனுக்கு நன்மை உண்டு. ஈகையால், கொடுப்பவர் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஈகையால் ஒருவன் புகழடைவதற்கு அதிக வாய்ப்பில்லை. அவனுடைய ஈகை பலருக்கும் தெரிந்து, பலராலும் பாராட்டப்பட்டாலும், அதனால் வரும் புகழ் நிலையானதாக இருப்பதற்கும் வாய்ப்பில்லை. பெருஞ்செல்வந்தர்கள் ஒப்புரவு செய்கிறார்கள். அவர்கள் ஒப்புரவைப் பற்றி வெளிவரும் விளம்பரங்களால் அவர்கள் புகழடைகிறார்கள். இந்தப் புகழும் நிலையானதாக இருப்பதில்லை.

”ஈகையால் வரும் புகழைத் தவிர உயிர்க்குப் பயன் அளிக்கக் கூடியது வேறு எதுவுமில்லை”,  என்றும் ”புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின்மேல் நிற்கின்ற புகழேயாகும்.”, என்றும் வள்ளுவர் கூறுவது இக்காலத்துக்கு ஏற்ற கருத்தாகத் தோன்றாவிட்டாலும், ஈகையின் சிறப்பையும் அதனால் வரும் புகழையும் வலியுறுத்துவதற்காக அவர் இவ்வாறு கூறியதாகக் கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

நிலையற்ற இவ்வுலகில் அழியாமல் நிலைத்து விளங்குவது உயர்ந்த புகழைத் தவிர வேறொன்றுமில்லை (குறள் – 233).

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.                                 (குறள் – 233)

எல்லோருடைய புகழும் நிலைத்து நிற்குமா என்பது ஆய்வுக்குரியது. ஒருவன் தன் வாழ்நாட்களில் ஈகை(Charity), ஒப்புரவு (Philanthropy), கலை, கல்வி, வீரம், இலக்கியம், அரசியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்த விளங்கினால், அவன் சாதனைகளைப் பற்றி அறிந்தவர்கள் அவனைப் பாராட்டுவர்கள். அவன் புகழுடையவனாகக் கருதப்படுவான். அவன் இறந்த பிறகும் சில காலம் அவனைப் புகழ்ந்து பேசுவார்கள். அவனுடைய புகழ், சில ஆண்டுகளில் அல்லது சில தலைமுறைகளுக்குப் பிறகு மக்களுடைய மனத்தில் இருந்து மறையக்கூடும். ஆனால், மிகச் சிறந்த சாதனை புரிந்தவனாக இருந்தால், அவனுடைய ஈடு இணையற்ற உயர்ந்த புகழ் நீண்ட காலம் நாடு, மொழி, இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து, காலத்தையும் கடந்து நிலைத்திருக்கும். புத்தர், சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து, காந்தியடிகள் ஆகியோரின் புகழை வள்ளுவர் கூறும் உயர்ந்த புகழுக்கு எடுத்துக்காட்டாகக் கருதலாம்.

புகழுடையார் எய்தும் மேன்மை
இந்நிலவுலகின் எல்லைக்கண்ணே ஒருவன் நிலைத்துநிற்கும் புகழுக்குரிய செயல்களைச் செய்வானாகில், தேவருலகம் தன்னிடமுள்ள தேவரைப் போற்றாமல் அவனேயே போற்றும் (குறள் – 236). புகழ் பெருகும்பொழுது கேடுறுதலும் புகழ் நிலைக்கச் செய்து சாதலும் பேராற்றல் மிக்கவர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது. (குறள்-235).

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.                            (குறள் – 234)

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.                            (குறள் – 235)

தேவருலகம் தேவர்களைப் போற்றாமல் நிலைத்துநிற்கும் புகழுக்குரிய செயல்களைச் செய்பவர்களையே போற்றும் என்று வள்ளுவர் கூறுவது, நிலையான புகழுக்குரிய செயல்களைச் செய்பவர்களின் பெருமையை அவர் பாராட்டுவதைக் குறிக்கிறது.

சிலர் ஈகை, கொடை போன்றவற்றால் பிறர்க்கு உதவி செய்வதைத் தம் கடமையாகக் கருதி, அவற்றால் தமக்குக் கேடு வந்தாலும், சாவே வந்தாலும் அவற்றைத் தொடர்ந்து செய்யத் தயங்குவதில்லை. உதாரணமாக, கர்ணன் வந்தோர்க்கெல்லாம் வாரிவழங்கும் கொடைவள்ளலாகத் திகழ்ந்ததாக மகாபாரதத்தில் கூறப்படுகிறது. இந்திரன் ஒரு ஏழைப் பார்ப்பனனைப்போல் வந்து, கர்ணனின் உயிருக்குப் பாதுகாவாலக உள்ள கவசத்தையும் காதணியையும் தனக்குக் கொடுக்குமாறு கேட்டவுடன் கர்ணன் எவ்விதத் தயக்கமும் இன்றி, அவற்றை இந்திரனுக்குக் கொடுத்துத் தன்னுடைய அழிவுக்கு வழி தேடிக்கொண்டதாகவும் மகாபாரதம் கூறுகிறது. தனக்குப் புகழ் வேண்டுமென்று கர்ணன் கொடை கொடுக்கவில்லை. கர்ணனின் கொடை அவனுடைய புகழ் வளர்வதற்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது.

 ஒருவனுடைய புகழ் வளரும்பொழுது அவன் கேடடைவதும், இறுதியாக அவனுடைய புகழே அவனுடைய சாவுக்கும் காரணமாக இருப்பதற்குச் சங்க இலக்கியத்தில் ஒரு சான்று உள்ளது[1]. சங்க காலத்தில், பாரி என்று ஒரு குறுநில மன்னன் முன்னூறு ஊர்களைக்கொண்ட பறம்பு நாட்டை ஆட்சி புரிந்தான். அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். கொடையில் சிறந்தவனாக இருந்ததால், அவனுடைய புகழ் தமிழகம் முழுதும் பரவியிருந்தது. அதைக் கண்டு பொறாமை அடைந்த மூவேந்தர்களும் அவனோடு போர்புரிந்து அவனை அழிப்பதற்காக அவன் இருந்த பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல நாட்கள் முற்றுகை இட்டும் அவர்களால் பாரியை வெல்ல முடியவில்லை. அப்பொழுது, பாரியின் நண்பரும் அவைக்களப் புலவராகவும் இருந்த கபிலர், “ நீங்கள் எத்தனை நாட்கள் முற்றுகை இட்டாலும், பாரியை வெல்லமுடியாது. அவன் தன் நாட்டில் இருந்த முன்னூறு ஊர்களையும் வந்து கேட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டான். இப்பொழுது பறம்பு நாட்டில் உள்ளதெல்லாம், பாரியும் எம் போன்ற புலவர்களும்தான். நீங்கள் பரிசிலரைப்போல் பாடி வந்தால் பாரியையும், எம் போன்ற புலவர்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.” என்று கூறினார். அதற்கேற்ப, மூவேந்தர்களும் பாணர்களாக வந்ததாகவும், அவர்களைக் காணவந்த பாரியை அவர்கள் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. பாரி புகழுக்காகக் கொடையை மேற்கொள்ளவில்லை. அவனுடைய கொடையால் அவன் தன்நாட்டை இழந்தான். முடிவில் அவனுடைய இறப்புக்கும் கொடையே காரணமாக அமைந்தது. வள்ளுவர் கூறுவதைப்போல், ” நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்” என்பதற்கு பாரியின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.

கர்ணன் ஒரு கற்பனைக் கதாபாத்திரம். பாரியைப் பற்றிய செய்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. ஆனால், அண்மைக்காலத்தில், தாழ்த்தப்பட்ட தமிழர்களிடையே பகுத்தறிவையும் சுயமரியாதையையும் பெருக்குவதற்காகவும், மகளிரின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடியவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் புகழுக்காக எதையும் செய்யவில்லை. அவருடைய செயல்களால் அவர் புகழ் வளர்ந்தது. அதே சமயம், அவர் தன் செல்வத்தை இழந்தார்; பலமுறை சிறைக்குச் சென்றார். புகழ் வளரும்பொழுது கேடுறுவதற்குத் தந்தை பெரியாரின் வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டு.

புகழ் இல்லாதவர்களின் தாழ்வு
ஒருவன் பிறரால் புகழப்படுவதும் இகழப்படுவதும் அவனுடைய செயல்களால் நடைபெறுபவை. அதனால், தமக்குப் புகழ் உண்டாகுமாறு அதற்கேற்ற செயல்களைச் செய்யாதவர்கள், அதுபற்றித் தம்மைத் தாமே நொந்துகொள்ளாமல் பிறரை நோவது ஏன் (குறள் – 237)?


புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?                                 (குறள் – 237)

புகழ் என்பது ஒருவருடைய செயல்களைப் பொறுத்தது. ஒரு செயலைச் சிறப்பாகச் செய்வதால் ஒருவர் புகழ் பெறுகிறார். உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர், மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தால் அவருடைய மேலதிகாரிகள் அவரைப் பாராட்டுவர்கள். அவருக்குப் பதவி உயர்வும் கிடைக்கலாம். அவருடைய செயலால் அவருக்குப் புகழ் கிடைக்கிறது. அதே அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொருவர் சிறப்பாகப் பணியாற்றாவிட்டால் அவர் கண்டிக்கப்படுவார். அவர் பணியிலிருந்து நீக்கப்படலாம். தனக்குப் புகழ் கிடைக்கவில்லையே என்று சிறப்பாகப் பணிபுரியாதவர் சிறப்பாகப் பணிபுரிந்து புகழ் பெற்றவரையோ அல்லது அவர் பணியாற்றிய நிறுவனத்தில் உள்ள மற்றவர்களையோ நொந்துகொள்வதால் என்ன பயன்? புகழ் கிடைக்க்கும் முறையில் பணியாற்றாததற்காக அவர் தன்னைத்தான் நொந்துகொள்ள வேண்டும். இதைத்தான், வள்ளுவர் ”புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?” என்று கேட்கிறார்.  

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாவிட்டால், உலகத்து மக்கள் அனைவருக்கும் அது ஒரு பழியாகும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். புகழோடு வாழ்வதே மக்களின் கடமை என்பது வள்ளுவரின் கருத்து (குறள் – 238).

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.                                         (குறள் – 238)

எஞ்சி நிற்பது எச்சம். ஒருவன் இறந்த பிறகு எஞ்சி இருப்பது அவனுடைய செல்வம், மக்கள் மற்றும். அவனுடைய புகழ். ஓருவன் புகழோடு வாழாவிட்டால், அவன் இறந்த பிறகு அவனுடைய புகழ் எஞ்சி இருப்பதற்கு வாய்ப்பில்லை. 'இசையென்னும் எச்சம்' என்பதற்குப் 'புகழ் எனப்படும் எஞ்சி நிற்பது' என்று பொருள். ஒருவன் இறந்த பிறகு அவனுடைய புகழ் எஞ்சி நிற்காவிட்டால் அது அவனுக்குப் பழியாகும் என்கிறார் வள்ளுவர்.  ஆகவே, வாழும்பொழுது புகழோடு வாழ வேண்டும் என்பதில் வள்ளுவர் உறுதியான நம்பிக்கை உடையவர் என்பது பெறப்படுகிறது.

வசை (பழி) ஏற்படாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர். புகழ் பெறாமல் வாழ்பவர்கள் உண்மையில் உயிரோடு இருந்தாலும் அவர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர் (குறள் – 240).

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.                               (குறள் – 240)

”வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்பதிலிருந்து பழி இல்லாமல் வாழ்பவர்கள்தான் உண்மையிலேயே வாழ்பவர்கள் என்பது பெறப்படுகிறது. “இசையொழிய வாழ்வாரே வாழாதவர்” என்பதிலிருந்து புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் உண்மையிலேயே வாழாதவர்கள் என்பது தெரிகிறது. இந்த இரண்டு கருத்துக்களையும் இணைத்துப் பார்த்தால், பழியில்லாமல், புகழோடு வாழ்பவர்கள்தான் உண்மையிலேயே வாழ்பவர்கள் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. சிலர் பழி, புகழ் இரண்டும் இல்லாமல் வாழலாம். அத்தகைய வாழ்க்கையை வள்ளுவர் சிறப்பானதாகக் கருதவில்லை  என்பது குறிப்பிடத் தக்கது. இயேசு கிறிஸ்து, காந்தியடிகள் போன்றவர்கள்கூட சிலரால் பழிக்கப்பட்டார்கள். ஆகவே, பழியில்லாமல் வாழமுடியுமா என்பது ஆய்வுக்குரியது.

புகழ் இல்லாத உடலைச் சுமந்த நிலம் தன்னுடைய பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் கெடும் (குறள் – 239).
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.                             (குறள் – 239)

”மன்னன் செங்கோல் செலுத்தினால் மாதம் மும்மாரி மழை பொழியும்”, ”நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் மழை” போன்றவை தமிழ் நாட்டில் நெடுங்காலாமாக நிலவிவரும் நம்பிக்கைகள். பொதுவாக, ”மக்கள் நல்லவர்களாக இருந்தால், அந்த நாடு வளமானதாக இருக்கும். மக்கள் நல்லவர்களாக இல்லாத நாட்டில், நிலம் வளமானதாக இருக்காது.” என்ற கருத்தைச் சில சங்க இலக்கியப் பாடல்களிலும் காணலாம். உதாரணமாக, ஆடவர் நல்லவர்களாக இருந்தால் அந்த நாட்டில் நிலம் நல்ல விளைச்சலைத் தரும் என்ற கருத்தைக் கூறும் ஓளவையார் இயற்றிய பாடல்[2] ஒன்று புறநானூற்றில் உள்ளது. ஆடவர்கள் நிலத்தை உழுது, வேளாண்மை செய்வதால், ஒளவையார் தன்னுடைய பாடலில் ஆடவரை மட்டும் குறிப்பிடுகிறார். ஆண்கள் மட்டுமல்லாமல், பொதுவாக, மக்கள் கடினமாக உழைப்பவர்களாகவும் ஆற்றலும் அறிவும் உள்ளவர்களாகவும் இருந்தால் நிலம் நல்ல விளைச்சலைத் தரும் என்றும் நாடு செழிப்பாக இருக்கும் என்றும் இப்பாடலுக்குப் பொருள் கொள்ளலாம். இதுபோல், கலித்தொகையில் உள்ள ஒருபாடல்[3], ”அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் நிலத்தடியில் வள்ளிக்கொடியின் கிழங்கு தோன்றாது; மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது; கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது” என்று கூறுகிறது. மக்கள் கடின உழைப்பும், ஆற்றலும், விடாமுயற்சியும், தங்கள் பணியாற்றும் துறையில் சிறந்தவர்களாகவும் இல்லாவிட்டால் அவர்களுடைய நாடு வளமானதாக இருக்காது என்பது வள்ளுவருடைய கருத்தாகத் தோன்றுகிறது.

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது (குறள் – 236). (பேராசிரியர் மு. வரதராசனார்)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.                   (குறள் – 236)

இந்தக் குறளுக்கு விளக்கம் அளிப்பதில் உரையாசிரியர்களிடம் கருத்து வேற்றுமைகள் காணப்படுகின்றன. உதாரணமாக, “மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; அக்குணம் இல்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று.” என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார். பழைய உரையாசிர்கள் சிலரும் இதே கருத்தைத் தம் உரைகளில் குறிப்பிடுகின்றனர். நம்முடைய பிறப்பு நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லை. பிறக்கும்பொழுது எவரும் புகழோடு பிறக்க இயலாது. ஆகவே, “பிறக்கும்பொழுது புகழுக்கு ஏதுவாகிய குணங்களோடு பிறக்க.” என்ற பரிமேலழகர் உரையும் அத்தகைய  கருத்துள்ள உரைகளும் பொருத்தமானவையாகத் தோன்றவில்லை. பல உரைகளையும்விட பேராசிரியர் மு. வரதராசனார் அவர்களின் உரை சிறப்பானதாகத் தோன்றுகிறது. அதாவது, ஒரு செயலைச் செய்வதற்கு ஒருவன் முன்வந்தால், அவன் அந்த செயலைச் செய்வதில் புகழ்பெற்றவனாக இருக்க வேண்டும் என்பது ஏற்புடைய கருத்து. எதிலும் எங்கும் தோன்றுங்கால் புகழுடன் தோன்ற வேண்டும் என்பது  இக்குறள் கூறும் கருத்து. இது போன்ற கருத்து, ஒளவையார் இயற்றிய புறநானூற்றுப் பாடல்[4] ஒன்றிலும் காணப்படுகிறது. அப்பாடலில், “போர் இல்லாதபொழுது, அதியமான் அமைதியானவன். வீட்டு இறப்பிலே செருகிய தீக்கடை கோல் போல தன் ஆற்றல் வெளியே தோன்றாது அமைதியாய் அடங்கி இருக்கும் இயல்பு அதியமானிடம் உண்டு. தன் ஆற்றல் வெளிப்படத் தோன்ற வேண்டுமிடத்து, அவன் அக்கோலால் கடையப்பட்ட சுடர்த்தீப் போல வெளிப்படத் தோன்றவும் செய்வான்.” என்று ஒளவையார் கூறுகிறார். அதாவது, போர் இல்லாதபொழுது அமைதியாக இருக்கும் அதியமான், போருக்குச் செல்லும்பொழுது அதற்குரிய ஆற்றலோடும் புகழோடும் தோன்றுவான் என்று ஒளவையார் கூறுகிறார். ஒளவையார் அதியமானைப்பற்றிக் கூறுவது வள்ளுவரின் குறளோடு ஒத்திருப்பது குறிப்பிடத் தகக்கது.

முடிவுரை
ஈகையால் வரும் புகழைவிட மக்களுக்குப் பயனுள்ளது வேறு எதுவுமில்லை. புகழ்ந்து சொல்கின்றவர்கள் புகழ் என்று சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்களுக்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின்மேல் நிற்கின்ற புகழேயாகும். நிலையில்லாத இவ்வுலகில் உய்ரந்த புகழைத் தவிர நிலைத்து நிற்பது வேறொன்றுமில்லை. தேவருலகம் தேவர்களைப் போற்றாமல், புகழடைந்தவர்களையே போற்றும். புகழ் பெருகப்பெருக தான் கேடுறுவதும் சாவதும் பேராற்றல் மிக்கவர்க்கே இயலும். புகழோடு வாழாதவர்கள் பிறரை நொந்துகொள்ளாமல் தன்னையே நொந்துகொள்ள வேண்டும். ஒருவன் இறந்த பிறகு, அவனுடைய புகழ் அவனை எஞ்சி நிற்க வேண்டும். அத்தகைய புகழ் பெறாதவர்களுக்கு அது ஒரு பழியாகும். பழியின்றிப் புகழோடு வாழ்பவர்களே உண்மையிலே வாழ்பவர்கள். புகழ் இல்லாதவர்களைத் தாங்கி நிற்கும் நிலம் தன் வளத்தை இழக்கும். ஒரு செயலைச் செய்ய முன்வந்தால் அதற்குரிய புகழோடு வர வேண்டும். அத்தகைய புகழ் இல்லாவிட்டால், அச்செயலைச் செய்ய முன்வராமல் இருப்பது நல்லது.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 1). காவ்யா பதிப்பகம், சென்னை
________________. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம், சென்னை
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502[1] . கடந்துஅடு தானை மூவிரும் கூடி
 உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே
 முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
 முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
 யாமும் பாரியும் உளமே;                                              5
 குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.    (கபிலர், புறநானூறு – 110)

அருஞ்சொற்பொருள் : 1. கடந்து அடுதல் = வஞ்சியாது எதிர் நின்று போரிடுதல்; தானை = படை. 2. உடன்றல் = போரிடுதல். 3. தண் = குளிர்ந்த.

[2]. நாடா கொன்றோ; காடா கொன்றோ;
     அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
     எவ்வழி நல்லவர் ஆடவர்,
     அவ்வழி நல்லை ; வாழிய நிலனே! (ஒளவையார், புறநானூறு – 187)

[3] . . . . . வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;     
(கபிலர், கலித்தொகை – 39, 12-14)
[4]. . . . . இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போல
தோன்றாது இருக்கவும் வல்லன், மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங் காலே. (ஒளவையார், புறநானூறு 315)

(இல்இறை – வீட்டு இறப்பு; செரீஇய – செருகிய; ஞெலிகோல் – தீக்கடை கோல்; கான்றல் – வெளிப்படுத்துதல்; கனை எரி – கப்பி எரியும் தீ)4 comments:

 1. அருமை ஐயா...

  அடியேனின் சிறு ஆய்வு :

  https://dindiguldhanabalan.blogspot.com/2019/01/KINDNESS.html

  ReplyDelete
 2. அன்பிற்குரிய தனபாலன் அவர்களுக்கு,

  வணக்கம்.

  உங்கள் பாரட்டுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்க்க முடியவில்லை. உங்களுடைய வேறு சில பதிவுகளைப் பார்தேன். புகழ் பற்றிய பதிவுகளையும் பாரத்தேன். அவை அனைத்தும் சிறப்பாக உள்ளன. உங்கள் தமிழ்ப்பணியைத் தொடர்ந்து நடத்துங்கள்.

  ReplyDelete
 3. 236. BIRTH and FAME

  தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
  தோன்றலின் தோன்றாமை நன்று. (236)

  Translation:
  Be born, if you must, for fame; or else better not to be born at all.
  (Kural 236)

  Jayavallabha:
  What is the good of his being born, whose fame does not spread out in the country?
  (Vajjalaggam, 700)

  Napoleon Bonaparte:
  Better not to have been born than to live without glory.

  Walter Raliegh:
  Better were it to be unborn than to be ill-bred.
  (Instructions to his son and posterity, 1632. Chapter II)

  Bhartrihari:
  He alone is truly born whose deeds bring glory and fame upon his family’s name.
  (Nitisatakam, 32)

  Kambar:
  “மறந்தும் நன்புகழல்லான் வாழ்வுவேண்டலன்”

  ReplyDelete
 4. இந்த கட்டுரையை இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற கட்டுரையைப் படித்தேன்.

  தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
  தோன்றலின் தோன்றாமை நன்று.

  என்பதில் ஒரு குழப்பமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. புகழுடன் தோன்றிய உலக தத்துவ ஞானிகள் அப்படித்தான் பிறப்பை ஊதாரித்தனமாக செலவழிக்காமல், பலனுடன் கூடிய வாழ்வாக அமைய வேண்டும் என்பதற்காக இப்படித்தான் கூறுவர் என்பதை நான் பகிர்ந்த ஒப்புமைகளின் மூலம் தெரியலாம்.

  ReplyDelete