Statcounter

Saturday, April 11, 2020

அடக்கம் அமரருள் உய்க்கும்


அடக்கம் அமரருள் உய்க்கும்

இவ்வுலகில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளார்கள். இருபத்தி நான்கு கோடி மக்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமைகளாக (குடிகாரர்களாக) உள்ளார்கள்[1]. ஏறத்தாழ மூன்றரை கோடி மக்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தித் தங்கள் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் கேடு விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்[2]. பலரும் கைப்பேசி இல்லாமல் ஒரு சில மணித்துளிகள்கூட இருப்பதில்லை. இளைஞர்கள் கைப்பேசியில் அல்லது கணினியில் வன்முறைகள் நிறைந்த விளையாட்டுக்களில் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். ஏறத்தாழ 200 கோடி மக்கள் அதிக எடை(overweight) உள்ளவர்களாகவும், அதில் 70 கோடி மக்கள் மிக அதிகமான எடை (obese) உள்ளவர்களாகவும் காணப்படுகிறார்கள்[3]. எடை அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அளவுக்குமீறி உண்பதும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை மட்டுமல்லாமல், பல்வேறு தீயொழுக்கங்களை விட்டு விலக முடியாமல், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நேரத்தையும், செல்வத்தையும் செலவுசெய்து தமக்குத் தாமே கேடு விளைவித்துக்கொள்கிறார்கள். இது போன்ற செயல்களுக்குக் காரணம் அவர்களால் தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதுதான். நமது மனத்தில் உள்ள எண்ணங்கள்தான் நமது சொற்களாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன. கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐம்பொறிகளின் வழியாக இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தோன்றுவதால்தான் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருட்களை உட்கொள்ளுதல், தேவைக்கும் அதிகமாக உண்ணுதல், காமவின்பத்தை அதிகமாக நுகர்தல்  போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுகிறார்கள்; மனத்தில் கோபம் தோன்றுவதால்தான் கடுங்சொற்களைக் கூறுகிறார்கள். மற்றும், மனத்தின் தூண்டுதலால்தான் மக்கள் பயனற்ற சொற்களைக் கூறுகிறார்கள்; புறங்கூறுகிறாரகள்; பொய் பேசுகிறார்கள். தீய செயல்களைச் செய்வதற்கும் மனம்தான் காரணம். இது போன்ற புலனடக்கமின்மை, தீய சொற்கள் பேசுதல், தீய செயல்களைச் செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் மனத்தை அடக்க வேண்டும். மனத்தை மனத்தால் மட்டுமே அடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில், புலனடக்கம், நாவடக்கம், மெய்யடக்கம், மனவடக்கம் ஆகியவற்றைப் பற்றியும், அத்தகைய அடக்கத்தினால் வரும் நன்மைகளைப் பற்றியும் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார்.

புலனடக்கம்
ஒரு இடரை எதிர்கொள்ள நேர்ந்தால், ஆமை தன்னுடைய நான்கு கால்களையும் தலையையும் உள்ளே இழுத்துக்கொள்வதைப் போல், ஒருவன்  ஒருபிறவியில் தன்னுடைய ஐம்பொறிகளையும் அடக்கிக்கொள்வானாயின், அது அவனுக்கு பின்வரும் ஏழுபிறவிகளிலும் பாதுகாவலாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 126).

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு டைத்து.                       (குறள் – 126)

வள்ளுவர் பல குறட்பாக்களில் ”மறுமை”, ”எழுமை” போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருப்பதால், உயிர் மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது. சிலருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்கள், “எழுமை” என்பதற்கு நீண்டகாலம் அல்லது ஏழு தலைமுறைகள் என்று பொருள்கொள்கிறார்கள். மறுமை, எழுமை போன்றவற்றில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஐம்பொறிகளை அடக்கிக்கொள்வதால் அவற்றால் வரும் தீமைகளைத் தவிர்க்கலாம் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஒருவன் தன்னுடைய கண், காது, மூக்கு ஆகியவற்றைத் தவறான முறையில் பயன்படுத்துவதால் தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொள்ள முடியும். ஆனால், அவற்றால் பிறர்க்குத் தீமைகளைச் செய்ய முடியாது. நாவாலும் உடலாலும் மட்டுமே பிறர்க்குத் தீமைகளைச் செய்ய முடியும். கடுஞ்சொற்களைக் கூறுதல், புறங்கூறுதல், பயனில சொல்லுதல், பொய் பேசுதல் ஆகிய செயல்களால் ஒருவன் பிறர் மனத்தைப் புண்படுத்த முடியும்; துன்புறுத்த முடியும். அதனால், ஒருவன் தான் பேசும் சொற்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொற்கள் நாவின் அசைவினால் வருவதால், சொற்களால் வரும் தீமைகளை நாவால் வரும் தீமைகள் என்று கருதுவது மரபு. சொற்களால் வரும் குற்றங்களை இனியவை கூறல், பயனில கூறாமை, புறங்கூறாமை, வாய்மை ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நாவடக்கம்
”பிறர் கூறும் இன்சொற்களால் தனக்கு இன்பம் பிறத்தலை அறிந்தவன் ஏன் பிறரிடத்து கடுஞ்சொற்களைப் பேசுகிறான்? (குறள் – 99[4])” என்று கேட்கிறார் வள்ளுவர். அனைவரும் இன்சொற்களையே பேச வேண்டும் என்பதும், மன்னனாக இருந்தால்கூட கடுஞ்சொல்லனாக இல்லாமல் இருப்பதுவே சிறந்தது என்பதும் வள்ளுவரின் கருத்து (குறள் – 386[5]). ஒருவனது உடலில் தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். ஆனால், பிறர் அவனை நோக்கிக் கூறும் கடுஞ்சொற்கள் அவனுடைய மனத்தில் ஒரு வடுபோல், ஆறாமல், எப்பொழுதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும் (குறள் – 129). ஒருவனுடைய பேச்சில் ஒரு சொல் தீயசொல்லாக இருந்தாலுங்கூட, அது அவனுடைய பேச்சு முழுவதையும்  நன்மை இல்லாததாக்கிவிடும் (குறள் – 128). தீயசொற்கள் பெரும் தீமைகளை உண்டாக்குவதால், ஐம்பொறிகளில் மற்றவற்றை, காக்காவிட்டாலும், நாவையாவது காக்கவேண்டும். நாவைக் காக்க விட்டால் சொற்குற்றத்தால் துன்புறுவர் (குறள் - 127) என்கிறார் வள்ளுவர்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.                                  (குறள் – 129)

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.                                 (குறள் – 128)

யாகாவார் யினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.                (குறள் – 127)

நாவுக்கு எதையும் தானாகப் பேசும் ஆற்றல் இல்லை. மனத்தின் தூண்டுதலால்தான் நாவும் மற்ற பொறிகளும் இயங்குகின்றன. ஆகவே, மனவடக்கம் இருந்தால்தான்  நாவடக்கம் இருக்க முடியும்.

மெய்யடக்கம்
நாவடக்கத்தைப் போல் மெய்யடக்கமும் தேவை. ஒருவருக்கு மெய்யடக்கம் இல்லாவிட்டால் அவர் தன்னுடைய  உடலால் பிறர்க்கு தீமைகளைச் செய்யமுடியும். தீவினைகளைச் செய்வதால் தீமையே விளையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர் வள்ளுவர். தீவினைகளால் வரும் துன்பங்களைத் தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். மனவடக்கம் இருந்தால்தான் மெய்யடக்கமும் இருக்கும். ஆகவே, நாவடக்கத்திற்கும் மெய்யடக்கத்திற்கும் மனவடக்கம் இன்றியமையாது என்பது தெளிவு.

மனவடக்கம்
மனவடக்கத்தைக் கடைப்பிடித்து, மனத்தில் சினம் தோன்றாமல் ஒழுகுபவனைக் காண்பதற்கேற்ற சமயத்தை எதிர்பார்த்து, அவன் வழியில் அறம் நிற்கும் என்கிறார் வள்ளுவர்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.                (குறள் – 130)

அறம் என்பது மனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களின் தொகுதி. அறத்திற்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், “மனத்தில் மாசில்லாமல் இருப்பதே அறம்.” என்கிறார். அவ்வாறாயின், சினத்தை அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணத் தக்க சமயம் பார்த்து அவன் வழியில் அறம் நுழைந்து எதிர் நோக்கும் என்பது எங்ஙனம் பொருந்தும் என்ற கேள்வி எழுகிறது. இந்தக் குறளில் வள்ளுவர் அறத்தை ஒரு தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகப்படுத்துகிறார். இந்தக் குறளில் மட்டுமல்லாமல் வேறு பல குறட்பாக்களிலும், வள்ளுவர் அறத்தைத் தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகப்படுத்துகிறார். எலும்பு இல்லாத உடலோடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப் போல, அன்பு இல்லாத உயிரை அறம் என்னும் ஆற்றல் (அறக்கடவுள்) வருத்தும் (குறள் – 77[6]) என்று அன்புடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார். மற்றும், பிறர்க்குக் கேடு விளைவிக்கும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது என்றும் அவ்வாறு எண்ணினால், தீமை செய்ய நினைத்தவனுக்கு அறமென்னும் ஆற்றல் (அறக்கடவுள்) தீமைசெய்ய நினைக்கும் (குறள் – 204[7]) என்றும் தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் கூறுகிறார். உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களும் தீமை செய்பவர்களும் தீமைகளைச் சந்திப்பது உறுதி என்பதை வலியுறுத்துவதற்காக வள்ளுவர் அறத்தைத் தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகிக்கிறார் என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. 

அடக்கமுடைமையால் வரும் நன்மைகள்
அடக்கமுடைமை ஒருவனை தேவருலகிற்குக் கொண்டு செலுத்தும். அடக்கமின்மை வெளிவருதற்கரிய இருள் சூழ்ந்த உலகத்திற்குச் செலுத்திவிடும் (குறள் – 121). ”அடக்கமுடைமையை ஒரு செல்வமாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு அதைவிடச் சிறந்த செல்வம் வேறெதுவும் இல்லை (குறள் – 122).”, என்கிறார் வள்ளுவர். ஒருவன் அறியவேண்டியதை அறிந்து, முறையோடு அடக்கத்தோடு நடப்பானாயின் அவனுடைய அடக்கம் பிறரால் உணரப்பட்டு மேன்மை உண்டாகும் (குறள் – 123). தனது நிலையிலிருந்து மாறாமல், அடக்கத்தோடு இருப்பவனின் உயர்வு மலையைவிடப் பெரிது (குறள் - 124).

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.                           (குறள் – 121)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு ல்லை உயிர்க்கு.                (குறள் – 122)

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.                           (குறள் – 123)

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.                         (குறள் – 124)

”அடக்கம் தேவருலகிற்குக் கொண்டு செலுத்தும்”, “அடக்கம் ஒரு சிறந்த செல்வம்”, ”அடக்கம்  பிறரால் உணரப்பட்டு மேன்மை உண்டாகும்”, “அடக்கமுடையவனின் உயர்வு மலையைவிடப் பெரிது” என்று அடக்கத்தின் பெருமையை மிகைப்படுத்திக் கூறி, அதன் இன்றியமையாமையையும், அதனால் வரும் நன்மைகளையும் எடுத்துரைத்து அடக்கத்தோடு இருப்பதற்கு வள்ளுவர் மக்களை ஊக்குவிக்கிறார்.

அடக்கம் செல்வர்க்குச் செல்வம்
அடக்கத்தினால் வரும் பணிவு என்னும் பண்பால் அனைவருக்கும் பல நன்மைகள் உண்டு என்று வள்ளுவர் கூறுகிறார். குறிப்பாக, செல்வம் உடையவர்களுக்கு மனவடக்கத்தோடு, பணிவும் இருக்குமானால், அதுவே ஒரு செல்வத்தைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.                (குறள் – 125)

எல்லோராலும் மதிக்கப்படும் இயல்பும், நினைத்ததைச் செய்து முடிக்கும் திறமையும், ஆடம்பரமான வாழ்க்கையும் உடைய செல்வந்தர்களுக்கு பணிவு என்பது இயற்கையாக அமைவதில்லை. அவர்களுக்கு பணிவு என்னும் பண்பு இருந்தால் அது அவர்களுக்கு மற்றும் ஒரு செல்வத்தைப் போன்றது என்பது வள்ளுவரின் கருத்து.

வள்ளுவர் கூறுவதைப் போல், பணிவு என்பது, செல்வந்தர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஏற்ற உயர்ந்த பண்பு. குறிப்பாக, ஆட்சியில் இருப்பவர்களுக்கும் பணிவு என்னும் பண்பு மிகவும் இன்றியமையாத ஒன்று. அமெரிக்காவில், பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடத்தும் பணியில் நான் ஈடுபட்டிருந்தபொழுது, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டிற்கு வருமாறு அவரை அழைப்பதற்காக நான் டில்லிக்குச் சென்று, அவரைச் சந்தித்தேன்.  அவர் வீற்றிருந்த அறைக்குள் நான் சென்றபொழுது, அவர் எழுந்து நின்று எனக்கு வணக்கம் தெரிவித்தார். மாநாட்டைப் பற்றிய விவரங்களைப் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். மாநாட்டிற்கு அவர் வருவதைப் பற்றி இரண்டு வாரங்களில் எனக்குத் தெரிவிப்பதாகக் கூறினார். நான் அவரிடமிருந்து விடைபெற்றபொழுது, அவர் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். மாநாட்டிற்கு அவரால் வர இயலவில்லை. ஆனால், மாநாட்டிற்காகக் காணொளியில் வாழ்த்துரையைப் பதிவு செய்து இணையத்தின் வழியாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார். அவருடைய  பணிவான பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பணிவுக்கும் பண்புக்கும் இலக்கணமாக வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முடிவுரை
புலனடக்கமும், நாவடக்கமும், மெய்யடக்கமும், மனவடக்கமும் இல்லாதால் விளையும் தீமைகளையும், அவை இருப்பதால் வரும் நன்மைகளையும் கூறுவதோடு மட்டுமல்லாமல் மனவடக்கத்தின் இன்றியமையாமையையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவரைப் போல் சில மேலைநாட்டு அறிஞர்களும் மனவடக்கத்தைப் போற்றுகிறார்கள். உதாரணமாக, அரிஸ்டாட்டில் (385 கி.மு. – 323 கி.மு.) என்ற கிரேக்கத் தத்துவஞானி, “என்னுடைய கருத்தில், எவனொருவன் தன்னுடைய விருப்பங்களின்மீது வெற்றி காண்கிறானோ அவன் தன்னுடைய பகைவர்களை வெல்பவனைவிடத் துணிச்சலானவன்.” என்று கூறி, மனவடக்கத்தின் சிறப்பைப் புகழ்கிறார். ரோமாபுரியின்  மன்னனாக விளங்கிய தத்துதுவஞானி, மார்க்கஸ் அரேலியஸ் (121 கி.பி. – 180 கி.பி) என்பவன், ”உன்னுடைய மனத்தை அடக்கி ஆளும் ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பதை நீ அறிந்தால், நீ உன்னுடைய வலிமையை உணர்வாய்” என்று கூறியதும் குறிப்பிடத் தக்கது.

துணை நூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா
வளாகம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,
சென்னை, 600 017
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால் (உரையும் உரைவும்), தமிழ்ச்சோலை, 5 மூன்றாம்
தெற்குத் தெரு, மதுரை 625021


[4] . இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?            (குறள் – 99)
[5]. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.           (குறள் – 386)

[6]. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.                (குறள் – 77)
[7]. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.     (குறள் – 204)


No comments:

Post a Comment