Statcounter

Friday, May 15, 2020

மெய்ப்பொருள் காண்பது அறிவு


மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனிதர்களின் ஆழ்மனத்தில், “நாம் ஏன் பிறந்தோம்? பிறந்தவர்கள் அனைவரும் இறக்கத்தான் வேண்டுமா? இறந்த பின்னர் உடலைவிட்டு உயிர் விலகித் தனித்து இயங்குமா? மறுபிறவி என்ற ஒன்று உண்டா? கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா?” போன்ற கேள்விகள் எழுகின்றன. இத்தகைய கேள்விகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கோடிக் கணக்கான மக்களிடம் இருந்துவருகின்றன. இது போன்ற கேள்விகளுக்குத் தங்களிடத்தில் விடைகள் இருப்பதாக மதங்கள் கூறுகின்றன. ஆனால், மதங்கள் கூறும் விடைகளில் கருத்து ஒற்றுமை இல்லை. வள்ளுவரும் இது போன்ற சில கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்.

நிலையாமை
வாழ்க்கை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்பதை பல குறட்பாக்களில் வள்ளுவர் வலியுறுத்துகிறார். ஒருவனிடம் பெருஞ்செல்வம் சேர்தல், கூத்தாடுகின்ற அரங்கில் சிறிது சிறிதாகக் கூட்டம் வந்து சேர்வதைப் போன்றது. அச்செல்வம் கைவிட்டுப் போவது, கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றது. அதாவது, செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். ஆனால், அது போகும்போது விரைவில் சென்றுவிடும்(குறள் – 332). அண்மையில் கொரொனா நோய்க்கிருமியால் உலகெங்கும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதால், பலருடைய செல்வம் வெகுவிரைவில் பெருமளவில் குறைந்தது குறிப்பிடத் தக்கது. நேற்று உயிரோடு இருந்தவர் இன்று உயிரோடு இல்லை என்பதுதான் இவ்வுலகின் பெருமை (குறள் – 336). நாள் என்பதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அது ஒரு கால அளவன்று என்றும், அது உடலிலிருந்து உயிரைச் சிறிது சிறிதாகப் பிரிக்கும் வாள் என்பதையும் உணர்வார்கள் (குறள் – 334).

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.                                         (குறள் – 332)

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.                                   (குறள் – 336)

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.                                      (குறள் – 334)

யாக்கை(உடல்) நிலையாமை, செல்வம் நிலையாமை, மற்றும் இளமை நிலையாமை பற்றிய கருத்துக்களை சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நாலாடியாரிலும், சைவத்திருமுறை பன்னிரண்டில் பத்தாவது திருமுறையாகக் கருதப்படும் திருமூலர் இயற்றிய திருமந்திரத்திலும் காணலாம். யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை போன்றவற்றில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒருவருடைய செல்வம் பெருகுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் சிலருடைய செல்வம் முற்றிலும் அழியலாம். சிலருடைய செல்வம் அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய சந்ததியினருக்குச் சென்றடைவதையும் நாம் காண்கிறோம். அதனால், செல்வம் நிலையில்லாதது என்று உறுதியாகக் கூறுமுடியாது.

உயிர்
உயிர் என்பது நமது உடலை இயக்கும் ஒரு ஆற்றல் என்று கருதப்படுகிறது. உயிர் நிலையானது என்றும், அது மீண்டும் மீண்டும் பல பிறவிகளை எடுக்கிறது என்றும் வள்ளுவர் கருதுகிறார். இவ்வுடம்புக்கும் உயிருக்குமுள்ள நட்பு, முட்டைக்குள் இருந்த பறவை இறக்கை முளைத்தபின் வெளிவந்து, அந்த முட்டையைவிட்டுப் பறந்து போவதைப் போன்றது (குறள் – 338). மற்றும், சாவு என்பது உறக்கத்தைப் போன்றது; பிறப்பு என்பது உறங்கி விழித்தலைப் போன்றது (குறள் – 338). உறங்கியவன் மீண்டும் எழுவதைப்போல், ஒரு உடலில் இருந்த உயிர் அந்த உடலின் மரணத்திற்குப் பிறகு அந்த உடலைவிட்டு வெளியேறி, மீண்டும் மற்றொரு உடலோடு இயங்குகிறது என்பதை உணர்ந்த வள்ளுவர், “உடம்பில் ஒதுக்குக் குடியாயிருந்த உயிர்க்கு புகுந்து தங்குதற்கு நிலையான ஒரு இல்லம் அமைந்திடவில்லையே (குறள் – 340)” என்று வியக்கிறார்.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.                                      (குறள் – 338)

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.                                (குறள் – 339)

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.                             (குறள் – 340)

வள்ளுவர் காலத்தில், இன்றைய இந்து மதத்தின் முன்னோடியாக இருந்த மதம் வைதீக மதம்[1]. அந்த மதத்தில், ஆத்மா என்ற ஒன்று உடலில் இருப்பதாகவும், உயிர் உடலைவிட்டு நீங்கினால் ஆத்மா உடலைவிட்டு நீங்குவதாகவும் கூறப்படுகிறது. மற்றும், ”ஆத்மா நிலையானது. உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாமல் மீண்டும் மீண்டும் பிறவிகளை எடுக்கிறது.”, என்ற கருத்தும் வைதீக மதத்தில் காணப்படுகிறது. சமண மதத்திலும் ஆத்மாவைப் பற்றி இதே கருத்துக்கள் காணப்படுகின்றன. சமண மதம் ’ஆத்மா’ என்ற சொல்லுக்குப் பதிலாக ’ஜீவா’ என்ற வடமொழிச் சொல்லைப் பயன்படுத்துகிறது. ’ஜீவா’ என்ற சொல் தமிழில் உள்ள ‘உயிர்’ என்ற சொல்லுக்கு இணையான வடமொழிச்சொல். ஆத்மா என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் இல்லாததால் உயிர் என்ற சொல் ஆத்மாவைக் குறிக்கும் சொல்லாகத் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. வள்ளுவரும் ஆத்மாவைத்தான் உயிர் என்று குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

வினைப்பயன் (கர்மா)
கர்மா என்ற சொல்லுக்குச் செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்குப் போலவே, வைதீக மதத்தில் ஒவ்வொருவரின் செயலுக்கும் ஏற்றாற்போல் பலன் கிட்டும் என்பதைக் குறிப்பதற்கு வைதீக மதம் 'கர்மா' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. ஒருவருடைய கர்மா என்பது அவரவர் வினைப்பயன். அது அவரவர் செய்யும் செயல்களில்தான் இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்தால் அதன் பயன் நன்மையானதாக இருக்கும். மாறாக தீவினை துன்பம் தரும் என்பது வேதங்களில் காணப்படும் கருத்து. ஒருவரின் அனைத்துச் செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மா தீர்மானிக்கிறது. ஒருவருடைய வினைப்பயன்கள் (கர்மா) அவருடைய ஆத்மாவோடு தொடர்புகொண்டு அவருடைய அடுத்த பிறவியில் அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் முடிவு செய்கிறது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது[2].  வேதாந்தத் தத்துவத்தின்படி தீவினைகள் செய்தவர்கள்மறுபிறவியில் நரகத்தில் உழன்று மீண்டும் பூமியில் இழி பிறப்பாளர்களாகவும், நல்வினைகள் செய்தவர்கள் சொர்க்கலோகம் சென்று, நல்வினைப்பயன்கள் முடிந்தவுடன் மீண்டும் புவியில் உயர்பிறப்பாளர்களாகவும் பிறப்பர். சமண மதத்திலும் கர்மாவைப் பற்றி ஏறத்தாழ இதே கருத்துக்கள் காணப்படுகின்றன.

வள்ளுவரும் வினைப்பயனும்
நற்செயல்களைச் செய்தவர்கள் அவர்களின் செயல்களுக்கேற்ப நற்பயன் அடைவார்கள் என்ற கருத்தும், தீச்செயல்களைச் செய்தவர்கள் அவர்களின் செய்ல்களுக்கேற்ப தீயபயன்களை அடைவார்கள் என்ற கருத்தும் குறளில் காணப்படுகின்றன. அவர்கள் அடையும் பயன் இம்மையிலோ அல்லது மறுமையிலோ இருக்கலாம் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ”பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்(குறள் -319)”, என்ற குறளில், தீவினைகளினால்  வரும் தீயபயன்கள் இப்பிறவியிலேயே வரும் என்ற கருத்து காணப்படுகிறது. ”சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் (குறள் – 98)”, என்ற குறளில், இன்சொற்களால் வரும் இன்பம் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் வரும் என்று வள்ளுவர் கூறுகிறார். ஒருவருடைய நற்செயல்களின் பயன்களும் தீச்செயல்களின் பயன்களும் இம்மையில் அல்லது மறுமையில் அல்லது இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டு நிலைகளிலும் அவரை வந்தடையலாம் என்ற கருத்து குறளில் காணப்பட்டாலும், அவருடைய மறுபிறவி வினைப்பயன்களால் (கர்மாவால்) வருகிறது என்ற கருத்து குறளில் காணப்படவில்லை.

வள்ளுவர் பார்வையில் மறுபிறவி
ஆத்மா மீண்டும் மீண்டும் பிறவிகளை எடுக்கிறது என்பதில் வள்ளுவர் நம்பிக்கை உடையவர் என்பது பல குறட்பாக்களிலிருந்து தெரிகிறது. இப்பிறவிக்குப் பிறகு மற்றுமொரு பிறவியைப் பற்றிப் பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறுகிறார், இப்பிறவியில் மட்டுமல்லாமல் மறுபிறவியிலும் இன்சொல் இன்பம் தரும்(குறள் – 98) என்றும், மனநலத்தால் மறுமையிலும் இன்பம் கிடைக்கும்(குறள் – 459) என்றும், மனைவிக்கு அஞ்சி வாழ்பவன் மறுமையிலும் புகழ் இல்லாதவன் (குறள் – 904) என்றும், வறுமையால் மறுபிறவியிலும் இன்பம் இல்லை(குறள் – 1042) என்றும், வள்ளுவர் மறுமையைப் பற்றிக் கூறுகிறார்..


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.                      (குறள் – 98)
மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு டைத்து.           (குறள் – 459)
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் ன்று.                 (குறள் – 904)
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.                       (குறள் – 1042)

பழியில்லாத மக்களைப் பெற்றால் ஏழு  பிறவிகளிலும் துன்பங்கள் அணுகா(குறள் – 62) என்றும், தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கியவருடைய நட்பை ஏழேழு பிறவிகளிலும் மக்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள்(குறள் – 107) என்றும், ஒருவன் தன் ஐம்புலன்களையும் ஒரு பிறப்பில் ஆமை தன் கால்களையும் முகத்தையும் உள்ளே இழுத்துக் கொள்வதைப்போல் அடக்கிக்கொள்வானானால், அது பின்வரும் ஏழுபிறப்பிலும் அவனுக்குப் பாதுகாவலாக இருக்கும் என்றும்(குறள் – 126), ஒருவன் ஒருபிறப்பின்கண் கற்ற கல்வி அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவியாக இருக்கும்(குறள் – 398) என்றும், பின்வரும் ஏழுபிறப்பிலும் தான் நரகம் என்னும் சேற்றில் அழுந்திக் கிடக்கும் நிலையை, அறிவில்லாத பேதையாகிய ஒருவன் தனது ஒருபிறப்பிலேயே செய்துகொள்ளும் ஆற்றலுடையவன் என்றும்(குறள் - 835) வள்ளுவர் கூறுகிறார், ’இம்மை’ என்பதற்கு ‘இக்காலம்’ என்றும்,, ‘மறுமை’ என்பதற்குப் ‘பிற்காலம் அல்லது எதிர்காலம்’ என்றும்,  ’எழுமை’ என்பதற்கு ‘நீண்ட காலம்’ என்றும் பொருள் கூறுவது இக்காலத்தில் நமக்கு ஏற்றதாகத் தோன்றினாலும், வள்ளுவர் காலத்தில் அவை ‘இப்பிறவி’, ’மறுபிறவி’, ‘ஏழுபிறவிகள்’ ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டன.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.                      (குறள் – 62)
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம்  துடைத்தவர் நட்பு.                              (குறள் – 107)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.                             (குறள் – 126)
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு டைத்து.                          (குறள் – 398)
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.                        (குறள் – 835)

வள்ளுவர் பார்வையில் மறுபிறவிக்குக் காரணம் என்ன? அவற்றைத் தவிர்ப்பது எப்படி?
துன்பத்திற்குக் காரணம் அவா என்பது வள்ளுவரின் கருத்து. அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை என்றும், அவா இருந்தால் துன்பங்கள் மேலும்மேலும் விடாது வந்துகொண்டே இருக்கும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

          அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃ துண்டேல்
         தவாஅது மேன்மேல் வரும்.                               (குறள் – 368)

அவா (ஆசை) என்பது ஒருபொருள்மீது நமக்குள்ள விருப்பம். ஒரு பொருள்மீது நமக்குள்ள விருப்பம் தீவிரமாக மாறும்பொழுது அது பற்று என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, ஒருவன் மது அருந்துவதில் விருப்பம் உள்ளவானாக இருந்து குடிகாரனாக மாறும்பொழுது, அவனுக்கு மதுமீதுள்ள விருப்பம் பற்றாகிறது. பற்று என்ற சொல்லுக்கு ‘பசை’ என்று ஒருபொருள் உண்டு. விரும்பிய பொருளின்மீது உள்ள விருப்பம் நம் மனத்தில் பசைபோல் ஒட்டிக்கொள்ளும்பொழுது விருப்பம் பற்றாக மாறுகிறது. ஒரு பொருளின்மீது நமக்கு உள்ள விருப்பம் பற்றாக மாறும்பொழுது, அந்தப்பொருள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. குடிகாரனுக்கு மது இல்லாமல் இருக்க முடியாது. ஒரு போதைப் பொருளைப் பயன்படுத்துபவனால் அந்தப்பொருள் இல்லாமல் இருக்க முடியாது. அவா என்னும் விதை முளைத்துப் பற்றாக வளர்கிறது. பற்றுக்களால் ஆத்மா மீண்டும் பிறக்கிறது என்பது வள்ளுவரின் கருத்து(குறள் – 361). ஆகவே, பற்றுக்கள்தான் ஆத்மா மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணம். பற்றுக்களைத் தவிர்த்தால்தான் தொடர்ந்து வருகின்ற பிறவிகளிலிருந்து விடுதலை பெறமுடியும். பற்றுக்களை நீக்காவிட்டால் மாறிமாறிப் பிறவிகள் வருகின்ற நிலையாமையே காணப்படும்(குறள் – 349).
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.                                                  (குறள் – 361)

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.                                          (குறள் – 349)

’அவா அறுத்தல்’ என்ற அதிகாரத்தில், பிறப்பிற்குக் காரணம் பற்றுக்கள் என்றும், பற்றுக்களை நீக்கினால் மீண்டும் பிறப்பில்லை என்றும் கூறும் வள்ளுவர்,’கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரத்தில், ”இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பர்; அப்புணையைச் சேராதவர் பிறவியாகிய பெருங்கடலை கடக்க மாட்டார்கள்(குறள் – 10).”, என்று கூறுகிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.                                      (குறள் – 10)

அதாவது, ”இறைவனை இடைவிடாமல் நினத்துத் தொழுது இறைவன் அருள் பெற்றவர்களுக்கு மீண்டும்  பிறவி இல்லை. அவ்வாறு அருள் பெறாதவர்களுக்கு மீண்டும் பிறவி உண்டு.” என்று வள்ளுவர் கூறுவதாகத் தோன்றுகிறது.
”ஒருவன் மீண்டும் பிறவாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், பற்றுக்களை நீக்க வேண்டுமா அல்லது கடவுளைத் தொழ வேண்டுமா?” இந்த இரண்டு அணுகுமுறைகளும் ஒன்றோடு ஒன்று முரணானவையா?” என்ற கேள்விகள் எழுகின்றன. ஒருவன் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல வேண்டுமானால், விமானத்தில் செல்லலாம். அல்லது சீருந்தில் செல்லலாம். இவை இரண்டும் முரணானவை அல்ல. இவை இரண்டும் ஒரு இடத்தை அடைவதற்கான இரண்டு வழிகள். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கடவுளைத் தொழுவதோடு மட்டுமல்லாமல், பற்றுக்களை விலக்கிக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபடலாம். அது, சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல விரும்புபவன், திருச்சிக்கு விமானத்தில் சென்று பிறகு திருச்சியிலிருந்து மதுரைக்குச் சீருந்தில் செல்வது போன்றது. ஆகவே, இரண்டு நெறிகளும் வள்ளுவருக்கு உடன்பாடானவையாகத் தோன்றுகிறது.

அவாவை விலக்கினால் என்ன நடைபெறும்?
அவாவை முற்றிலும் விலக்கினால் இப்பிறவியிலேயே இடையறாத இன்பம் கிடைக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்(குறள் – 369). ஒருபோதும் நிரம்பாத இயல்புடைய அவாவை ஒருவன் விடுவானாயின், அந்த நிலையில் அவன் மாறாத இயல்புடைய இயற்கையான நிலையை அடைவான் (குறள் – 370). அவாவை விடுவதால் இப்பிறவியில் கிடைக்கும் ’இடயறாத இன்பம்’ பிறவாத நிலையிலும் தொடருமா என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.

          இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
         துன்பத்துள் துன்பம் கெடின்.                            (குறள் – 369)

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
         பேரா இயற்கை தரும்.                                      (குறள் – 370)


மெய்ப்பொருள் காண்பது அறிவு
தெய்வம் என்ற சொல்லைப் பல இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார் (குறட்பாக்கள் 43, 50, 55, 619, 702 மற்றும் 1023). இறைவன் என்ற சொல்லை கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் வள்ளுவர் பயன்படுத்துகிறார் (குறட்பாக்கள் 5,10), ‘தாமரைக்கண்ணான்’, ‘வகுத்தான்’, ’பற்றற்றான்’ ‘உலகியற்றியான்’ .ஆகிய சொற்களையும் வள்ளுவர் பயன்படுத்துகிறார். இதுபோன்ற கருத்துக்கள் மக்களிடையே பரவியிருந்ததால், வள்ளுவர் இச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது வள்ளுவர் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்திருக்கலாம். ஆகவே, தெய்வம், கடவுள் ஆகியவற்றில் வள்ளுவர் நம்பிக்கை இல்லாதவர் என்று உறுதியாகக் கூறமுடியாது.  எவ்வாறாயினும், கடவுளைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் குறளில் காணப்படவில்லை என்பது தெளிவு[3].

ஆத்மாவைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்திற்கும் சமண வைதீக மதங்கள் ஆத்மாவைப் பற்றிக் கூறும் கருத்திற்கும் ஓரளவு ஒற்றுமை இருக்கிறது. புத்த மதம் ஆத்மா என்ற ஒன்று இல்லை என்று கூறுகிறது. எது உண்மை? வள்ளுவரும் புத்தரும் பிறவிக்குக் காரணம் ஆசை என்கிறார்கள். சமண மதமும் வைதீக மதமும் பிறவிக்குக் காரணம் கர்மா என்று கூறுகின்றன. எது உண்மை? ஆத்மா மீண்டும் மீண்டும் பிறவிகளை எடுக்கிறது என்று வைதீக, சமண மதங்கள் கூறுகின்றன. ஆத்மா என்ற ஒன்று இருப்பதை புத்த மதம் ஏற்றுக்கொள்ளாதால், ஆத்மாவிற்குப் பதிலாக எந்நேரமும் மாறிக் கொண்டிருக்கும் மனச் சக்தியின் ஓட்டம் (Consciousness) மறுபிறவிகளை எடுப்பதாகப் புத்த மதம் கூறுகிறது. எது உண்மை? வைதீக, சமண, புத்த மதங்கள் ஆத்மா (அல்லது மனச் சக்தி) பல பிறவிகளை எடுக்கிறது என்று கூறுகின்றன. கிறித்துவ, இஸ்லாமிய மதங்கள் ஆத்மா மீண்டும் பிறப்பதில்லை என்று கூறுகின்றன. எது உண்மை? கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்று வைதீக, கிறித்துவ, இஸ்லாமிய மதங்கள் கூறுகின்றன. சமண புத்த மதங்கள் கடவுள் என்ற ஒருவர் இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. எது உண்மை?  இந்து மதத்தின் கடவுட்கொள்கை அதன் முன்னோடியாகிய வைதீக மதத்திலிருந்து வேறுபடுகிறது. எது உண்மை? பிறவிகள் எல்லாம் முடிந்த பிறகு ஆத்மா கடவுளோடு ஒன்றிவிடுவதாக வைதீக மதம் கூறுகிறது(அத்வைதம்). பிறவாத நிலையைப் பற்றிய கருத்துக்களில் சமண, புத்த, கிறித்துவ, இஸ்லாமிய மதங்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கூறுகின்றன. எது உண்மை? உண்மை என்பது ஒவ்வொரு மதத்தினருக்கும் வெவ்வேறாக இருக்க முடியாது. கடவுள் என்ற ஒருவரைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் விஞ்ஞானிகளிடையேயும் காணப்படவில்லை. பல விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவும், பல விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை உடைவர்களாகவும் உள்ளார்கள். கடவுள் இல்லையென்றோ உண்டு என்றோ இதுவரை எந்த விஞ்ஞானியும் திட்டவட்டமாக நிரூபிக்கவில்லை.

இந்தக் குழப்பமான சூழ்நிலையில் நாம் என்ன செய்வது?  மதங்களும் வள்ளுவரும் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதா அல்லது மறுப்பதா? இந்த சிக்கலான கேள்விக்கும் வள்ளுவர் விடை அளிக்கிறார்.

          எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
         மெய்ப்பொருள் காண்பது அறிவு.                      (குறள் – 423)
         
ஒவ்வொருவரும் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி, யார் எதைச் சொன்னாலும் அந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்று ஆராய்ந்து, உண்மையைக் கண்டுபிடிப்பதுதான் உண்மையான அறிவு என்பது வள்ளுவரின் கருத்து. ஆனால், ஆத்மா, கர்மா, மறுபிறவி, பிறவாத நிலை, கடவுள் போன்றவற்றிற்கு மதங்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடுகள் உள்ளன. இவற்றை ஆராய்ந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய - மறுக்க முடியாத - உண்மைகளை இதுவரை எவரும் கூறவில்லை. இந்த நிலையில், சாதாரண மனிதன் எவ்வாறு மெய்ப்பொருளைக் கண்டறிய முடியும்? இதுபோன்ற கருத்துக்களைப் பற்றிக் கவலைப்படுபவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆத்மா, கர்மா, மறுபிறவி, கடவுள், பிறவாத நிலை ஆகியவற்றைப் பற்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மறுக்கமுடியாத  உண்மைகளை அறிஞர்கள் கண்டுபிடிக்கும்வரை நம்மைப் போன்றவர்கள் எவை எல்லாம் மூடநம்பிக்கைகள் என்று நமக்குத் தெளிவாகத் தோன்றுகிறதோ அவற்றைத் தவிர்க்கலாம்.  மற்ற நம்பிக்கைகளைப் பற்றியும் நாம் ஆராயலாம்.  மதங்களும் மதவாதிகளும் கூறும் கருத்துக்களை ஆராயாமல் உண்மை என்று ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

இந்த சூழ்நிலையில், இல்லற வாழ்க்கையில் இருந்து, மனைவி, மக்கள், பெற்றோர், சுற்றத்தார், நண்பர்கள் ஆகியோரோடு அன்போடு பழகி, அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அடக்கத்தையும் ஒழுக்கத்தையும்  கடைப்பிடித்து, பிறர்க்கும் பிறவுயிர்களுக்கும் எவ்விதமான தீமையையும் செய்வதைத் தவிர்த்து,  நம்மால் பிறர்க்கும் பிறவுயிர்களுக்கும் என்ன நன்மைகளைச் செய்ய முடியுமோ அவற்றைச் செய்து, வாய்மை பேசுவதையே நமது கொள்கையாகக் கொண்டு நாம் இறந்த பிறகும் நம்முடைய புகழ் நிலைத்து நிற்குமாறு வாழ முயற்சி செய்வதை நம்முடைய கடமையாகக்கொண்டு வையத்து வாழ்வாங்கு வாழ்வதே சிறந்ததாகத் தோன்றுகிறது.

முடிவுரை
ஆத்மா, கர்மா, மறுபிறவி, பிறவாத நிலை, கடவுள் போன்றவற்றைப் பற்றி மதங்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடுகள் உள்ளன. வள்ளுவருடைய கருத்திற்கும் வைதீக, சமண, புத்த மதங்களின் கருத்திற்கும் சில ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் காணப்படுகின்றன. ஆத்மா, கர்மா, மறுபிறவி, பிறவாத நிலை, கடவுள் போன்றவற்றைப் பற்றி விஞ்ஞானமும் திட்டவட்டமான கருத்துக்களை இதுவரை முன்வைக்கவில்லை. இதுபோன்ற கருத்துக்களை ஆராய்ந்து மெய்ப்பொருளைக் கண்டறியக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் எவரிடத்தும் இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தக் குழப்பமான சூழ்நிலையில், எவையெல்லாம் மூட நம்பிக்கை என்று நம்முடைய பகுத்தறிவுக்குத் தோன்றுகிறதோ அவற்றை விலக்கி, நம்முடைய அன்றாட வாழ்க்கையை அன்போடும் அறத்தோடும் நடத்துவதே சிறந்ததாகத் தோன்றுகிறது.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
சீனிவாசன், காமட்சி. குறள் கூறும் சமயம். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1979
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா
வளாகம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,
சென்னை, 600 017
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால் (உரையும் உரைவும்), தமிழ்ச்சோலை, 5 மூன்றாம்
தெற்குத் தெரு, மதுரை 625021


[3]. ”குறள் கூறும் சமயம்”, முனைவர்  செல்வி. காமாட்சி சீனிவாசன். மதுரை காமராசர்  பல்கலைக்கழகம் (1979)

4 comments:

  1. திருக்குறளில் கடவுள், மறுபிறவி பற்றியெல்லாம் முடிந்த முடிவாக சொல்லவில்லை என்பதை தெளிவாக கட்டுரை விளக்குகிறது. ”கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந்தற்று” குறளுக்கு உதாரணமாக தற்கால கொரோனாவால் பொருளாதார நிலைகள் விரைந்து வீழ்ச்சியடைவதை சொல்லியிருப்பது சிறப்பு

    ReplyDelete
  2. வணக்கம்.

    நன்றி

    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  3. சிந்தனையைத் தூண்டும் நல்ல படைப்பு.

    பொதுவாக, மனிதன் தான் மதங்களைப் படைத்தான். அம் மதங்களுக்கு, தனக்கு இன்னல் ஏற்படுகிற போதெல்லாம், ஓர் வடிகலாக இருப்பதற்கு கடவுளைப் படைத்தான். அக் கடவுளும், மதங்களின் வரையறைக்க்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டான். காலம் செல்லச் செல்ல,சில மதங்கள், கடவுளுக்குக் குடும்பம் இருப்பது போன்ற மாயையும் உருவாக்கினான். இதெல்லாம் மனிதனின் கற்பனையைத் தவிர ஒன்றுமில்லை என்பதை மிக அழகாக தங்களது கட்டுரையின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    குறிப்பாக, இளம் வயதினர் படித்துச் சிந்திக்க வேண்டிய நல்ல கட்டுரை.



    ReplyDelete
  4. அன்பிற்குரிய செந்தில்,

    நன்றி.

    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete