Statcounter

Tuesday, August 11, 2020

குறளும் அறிவும்

 

குறளும் அறிவும்

 

தமிழில் உள்ள அறிவு என்ற சொல் அறிதல் (perception, knowing, understanding), அறிந்தசெய்தி (knowledge), ஓதி (wisdom), மதி (intelligence) என்னும் நாற்பொருளுணர்த்தும் ஒரு சொல் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தன்னுடைய திருக்குறள் மரபுரை என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்தச் சொற்களும், வேறு சில சொற்களும் அறிவைப் பற்றிக் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். முதலில், நாம் அறிவின் பல கூறுபாடுகளைக் குறிக்கும் சொற்களுக்கான வரையறைகளைப் பார்ப்போம்.

கற்றல் (Learning) என்ற சொல், முறையாகப் பள்ளி அல்லது கல்லூரிகளுக்குச் சென்று படிப்பதால் பல செய்திகளைத் தெரிந்துகொள்வதையும், நாமாக நூல்கள், நாளிதழ்கள், வாரயிதழ்கள், மாதயிதழ்கள் மற்றும் முகநூல், கூகுள் போன்ற தொழில்நுட்பக் கருவிகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைப் படிப்பதின் மூலம் செய்திகளைத் தெரிந்துகொள்வதையும் குறிக்கிறது.

கேட்டல் (listening) என்ற சொல், செவிவழியாக நாம் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வதைக் குறிக்கிறது.

அறிதல் (knowing) என்ற சொல், கற்றல், கேட்டல், அனுபவம், ஐம்புலன்களின் வழியாக உணர்தல் ஆகியவற்றால் செய்திகளை அறிந்துகொள்வதைக் குறிக்கிறது.

அறிந்தசெய்தி (knowledge): என்ற சொல், கற்றல், கேட்டல் மற்றும் அறிதல் மூலம் தெரிந்துகொண்ட செய்தியைக் குறிக்கிறது.

புரிதல் (Understanding) என்ற சொல், அறிந்ததின் பொருளை விளங்கிக்கொள்தல் என்பதைக் குறிக்கிறது.

மதி (Intelligence) என்ற சொல், அறிந்ததை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் ஆற்றலைக் குறிக்கிறது.

அறிவு என்ற சொல், அறிந்தசெய்திகளில் பயனுள்ளவற்றைப் பயன்படுத்தி நல்ல வழிகளில் ஒருவரைச் செலுத்தும் ஆற்றலைக் குறிக்கிறது.

பட்டறிவு (knowledge gained from Experience) என்ற சொல், அனுபவத்தால் அறிந்துகொண்ட செய்தியைப் பயன்படுத்தும் ஆற்றலைக் குறிக்கிறது.

இயல்பறிவு (Common Sense) என்ற சொல், எந்தச் சூழ்நிலையில் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் ஆற்றலைக் குறிக்கிறது.

பகுத்தறிவு (Rational thinking ability) என்ற சொல் ஒரு கருத்து அல்லது செயலை உணர்ச்சிபூர்வமாகவோ அல்லது சில நம்பிக்கைகளின் அடிப்படையிலோ ஏற்றுக்கொள்ளாமல் எது சரியானது, எது அறிவுக்குப் பொருத்தமனது என்று பிரித்து ஆராயும் ஆற்றலைக் குறிக்கிறது.

மெய்யறிவு (ஓதி/wisdom) என்ற சொல் அறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, இயல்பறிவு, மற்றும் புரிதல் கியவற்றைப் பயன்படுத்திச் சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றலைக் குறிக்கிறது.

அறிதலும் அறிவும்

நாம் எப்படி ஒன்றை அறிந்துகொள்கிறோம்? கற்றல், கேட்டல், அனுபவம், நமது ஐம்பொறிகளால் உணர்தல் ஆகியவற்றால் ஒன்றைப் பற்றி அறிந்துகொள்கிறோம். பல வகைகளில் நாம் செய்திகளை அறிந்துகொண்டாலும் கல்வி வழியாகத்தான் அறிவியல், வரலாறு, இலக்கியம், கணிதம் போன்றவற்றை அறிந்துகொள்கிறோம். பல செய்திகளை அறிந்துகொள்வதற்குக் கல்விதான் பெருமளவில் உதவியாக இருக்கிறது.

 

நாம் கற்பது அனைத்தும் அறிவு என்னும் ஆற்றலைத் தரும் என்று கூற முடியது. அவை அனைத்தும் அறிந்த செய்தி என்ற பிரிவில் அடங்கும். அறிந்துகொண்டதைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு மூன்றாம் அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் சிறுவனிடம் 12 என்ற எண்ணை 13 என்ற எண்ணால் பெருக்கினால் என்ன எண் கிடைக்கும் என்று கேட்டால், அவன் தயக்கமில்லாமல் 156 என்று சொல்லுவான், அதே மாணவனை, 1234 என்ற எண்ணை 5678 என்ற எண்ணால் பெருக்கினால் என்ன எண் கிடைக்கும் என்று கேட்டால், தனக்குத் தெரியாது என்று கூறுவான். அதற்குக் காரணம் அவன் 12x13 = 156 என்று வாய்ப்பாட்டிலிருந்து மனப்பாடம் செய்து கற்றுக்கொண்டான். அந்தப் பெருக்கலுக்கு விடை எப்படிக் கிடைக்கிறது என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை. அவன் பெருக்கல் கணக்குகளுக்கு எப்படி விடை கண்டுபிடிப்பது என்பதைப் புரிந்துகொண்டிருந்தால், 1234 என்ற எண்ணை 5678 என்ற எண்ணால் பெருக்கினால் கிடைக்கும் விடை 7,006,652 என்று முறையாகப் பெருக்கி விடை அளிப்பான். அறிந்தது அறிவாக மாற வேண்டுமானல், அறிந்ததைப் புரிந்துகொள்ள வேண்டும். பல மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பில் வெற்றி பெறாமல் தோல்வி அடைவதற்கு காரணம் அவர்கள் தாங்கள் அறிந்துகொண்டதைப் புரிந்துகொள்ளாதுதான் என்பது பல கல்வியாளர்களின் கருத்து. வள்ளுவர் கல்வியைப் பற்றிக் கூறும்பொழுது,

 

          கற்க கசடறக் கற்பவை கற்றபின்

         நிற்க அதற்குத் தக.                        (குறள் – 391)

 

என்று கூறுகிறார். கசடற என்பது ஐயம் திரிபறக் கற்பதைக் குறிக்கிறது. அவ்வாறு கற்றால்தான் கற்றபடி நிற்க முடியும். கற்றபடி நிற்க வேண்டுமானால், கற்றது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அறிந்தது அறிவாக மாற வேண்டுமானால், ஒருவன் தன் மனத்தை அது செல்ல விரும்பிய இடங்களுக்கெல்லாம் செல்ல விடாது தடுத்து, தீயவழிகளிலிருந்து நீக்கி, நல்லவற்றில் செலுத்துவது அறிவு என்கிறார் வள்ளுவர் (குறள் – 422)

         

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

         நன்றின்பால் உய்ப்பது அறிவு.                       (குறள் – 422)

 

ஆகவே, அறிந்தது அறிவாக வேண்டுமானால், 1)அறிந்ததை ஐயத்திற்கு இடமின்றிப் புரிந்து கொள்ள வேண்டும். 2)அது பயனுள்ளதாக இருக்க வேண்டும், மேலும், 3)அது நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும்.  இந்த நிபந்தனைகள் இருப்பதால், நாம் முகநூல்(Facebook), கீச்சகம்(Tweeter) போன்ற சமூக வலைத்தளங்களில் படிப்பதெல்லாம், நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்குப் பயன்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

 

பகுத்தறிவு

பகுத்தல் என்றால் பிரித்தல் என்று பொருள். பகுத்தறிதல் என்றால் பிரித்தறிதல் என்று பொருள். பகுத்தறிவு என்பது, ஒரு கருத்து அல்லது ஒரு செயலை உணர்ச்சிபூர்வமாகவோ அல்லது சில நம்பிக்கைகளின் அடிப்படையிலோ ஏற்றுக்கொள்ளாமல், எது சரியானது, எது அறிவுக்குப் பொருத்தமனது என்று பிரித்து ஆராயும் ஆற்றல். ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால், அவர் சொன்னார் என்பதற்காக அதை ஏற்றுக்கொள்ளாமல், அதைச் சிந்தித்து, அக்கருத்து சரியா தவறா, மற்ற கருத்துக்களுக்கு முரணானதா என்று பிரித்து ஆராய வேண்டும் என்பது வள்ளுவரின் அறிவுரை (குறள் - 423).

          எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

         மெய்ப்பொருள் காண்பது அறிவு.                      (குறள் – 423)

 

மதங்கள் கூறும் கருத்துக்களை மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார்கள். தான் கூறும் கருத்துக்களை எவரும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று புத்தர் கூறியதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பகுத்தறிவைப் பரப்பிய தந்தை பெரியாரும் தன் சொற்களை ஆராயாமல் எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

 

வைதீக மதம் (இன்றைய இந்து மதத்தின் முன்னோடி) கூறிய கருத்துக்கள் தம்முடைய அறிவுக்கு ஏற்றதாக இல்லாததால்தான் புத்தர் புத்த மதத்தையும், மகாவீரர் சமண மதத்தையும் தொடங்கினார்கள். கத்தோலிக்கப் பிரிவினைச் சார்ந்த கிறித்துவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாததால்தான் மார்ட்டின் லூதர் கிறித்துவ மதத்தில் ஒரு புதுப்பிரிவைத் தொடங்கினார். அதுபோல், ஒவ்வொருவரும் மற்றவர்கள் கூறும் கருத்துக்களைத் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்வது தவறு அல்லது தேவையற்றது என்று புத்தரும், மகாவீரரும், முகமது நபியும், மார்ட்டின் லூதரும் மற்றவர்களும் நினைத்திருந்தால் இன்று வைதீக மதமும் யூதமதம் மட்டுமே இருந்திருக்கும். தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி மற்றவர்கள் கூறும் கருத்துக்களை ஆராய மனிதர்களுக்கு உரிமை உண்டு; அவர்கள் அவ்வாறு ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால்தான், சமுதாயத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும்.

 

பிறர் சொற்களை ஆராயமல் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறியதைப்போல், ஒரு பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும், அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், அப்பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவாகும் என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 355).

 

         எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

         மெய்ப்பொருள் காண்பது அறிவு.                      (குறள் – 355)

 

பொருள்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதுதான் விஞ்ஞானியின் கடமை. பொருள்களின் உண்மைத் தன்மையை விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்காவிட்டால், நாம் விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது. விஞ்ஞானிகள் பொருள்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதுபோல், ஆத்மா, மறுபிறவி, நரகம், தேவருலகம் கடவுள் போன்றவற்றையும் ஆராய வேண்டும். இவற்றைப் போன்ற கருத்துக்களில் மதங்களிடையே கருத்து ஒற்றுமை இல்லாதால், எந்த மதம் கூறுவது உண்மை என்பதை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராயவிட்டால், இவற்றைப் பற்றிய உண்மைகளை மனித சமுதாயம் கண்டறிய முடியாது.

 

ஆகவே, பகுத்தறிவு என்பது இன்றியமையாதது. பொருள்களின் உண்மைத் தன்மையையும் கருத்துக்களின் உண்மையையும் மனிதர்கள் தொடர்ந்து பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய வேண்டும்.

 

மெய்யறிவு
மெய்யறிவு என்பது ஒருவரின் அறிவு, பட்டறிவு (அனுபவம்), இயல்பறிவு (Common Sense), மற்றும் புரிதல் (understanding) கியவற்றின் அடிப்படையில் நல்ல முடிவுகளை எடுக்கும் ஆற்றல். கற்றல், கேட்டல், கற்றவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆகியவற்றால் மட்டும் ஒருவர் சிறந்த முடிவெடுக்கும் ஆற்றல் உடையவரக முடியாது என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. கல்வி கேள்விகளில் சிறந்த பலர், பல குற்றங்களைச் செய்து தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. உதாரணமாக, அமெரிக்கக் குடியரசின் 42 – ஆவது தலைவராக இருந்த வில்லியம் கிளிண்டன் (William Clinton) என்பவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்; யேல்(Yale) என்ற சிறந்த பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். அவர் ஒரு இளம்பெண்ணுடன் வெள்ளைமாளிகையில் தகாத முறையில் நடந்துகொண்டதற்காகப் பல அவமானங்களையும் ஏளனங்களையும் சந்திக்க நேரிட்டது என்பது வரலாறு. கல்வியால் வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவை அவர் பெறவில்லை என்பதையும், காமத்தின் மிகுதியால், இயல்பறிவைப் பயன்படுத்திச் சரியான முடிவெடுக்கும் ஆற்றலை அவர் இழந்தார் என்பதையும் அவருடைய செயல் வெளிப்படுத்துகிறது. இது அவருடைய மெய்யறிவின்மைக்கு எடுத்துகாட்டு.

 

ஒருவர் முதல்முறையாகச் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்ல வேண்டுமென்றால், அவர் வரைபடத்திலிருந்து சென்னையும் புதுச்சேரியும் எங்கு உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வார். அவ்வாறு தெரிந்துகொள்வது வரைபடத்திலிருந்து அவர் பெறும் முதற்செய்தி (Information 1) அடுத்து, சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே உள்ள தூரம் 150 கிலோ மீட்டர் என்று தெரிந்துகொள்வார். இது அவர் தெரிந்துகொள்ளும் இரண்டாவது செய்தி (information 2). புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் சீருந்து செல்லக்கூடிய சராசரி வேகம் மணிக்கு 60 கி. மீ. என்பதை அவர் தெரிந்திருந்தால் அது மூன்றாவது செய்தி (information 3). இந்த மூன்று செய்திகளையும் இணைத்து  தன்னுடைய ஆராயும் ஆற்றலைப் ( ஆறாயும் ஆற்றல் – Intelligence) பயன்படுத்தி அவர் ஆராய்ந்தால் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக 150 கி.மீ தூரத்தைக் கடந்து செல்வதற்கு இரண்டரை மணிநேரம் ஆகும் என்பது அவர் பெரும் அறிந்த செய்தி (knowledge) ஆகிறது. ஆகவே, அவர் புதுச்சேரியில் காலை ஒன்பது மணியளவில் இருக்க வேண்டுமென்றால் அவர் சென்னையிலிருந்து காலை 6:30 மணிக்குக் கிளம்ப வேண்டும். ஆனால், ஓரிருமுறை சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் பயணத்தை மேற்கொண்ட பிறகு, காலைவேளையில், சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள வாகனப் போக்குவரத்துக்களின் நெருக்கடியால் அவரால் இரண்டரை மணிநேரத்தில் புதிச்சேரிக்குச் செல்ல முடியாது என்பதை அவர் தன் பட்டறிவால் தெரிந்துகொள்வார்.  அறிந்த செய்தியையும் பட்டறிவையும் தொடர்புபடுத்தியதால் அவர் பெற்றது மெய்யறிவு. அடுத்தமுறை சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்ல வேண்டுமானால், முதல் மூன்று செய்திகளையும் மீண்டும் சேகரிக்க வேண்டியதில்லை. சென்னையிலிருந்து புதுச்சேரிக்குக் காலைவேளையில் செல்வதற்கு 3:30 மணி நேரம் ஆகும் என்று அவருடைய மெய்யறிவு அவருக்கு நினைவூட்டும். சில சூழ்நிலைகளில், அறிந்த செய்தியால் மட்டும் பயனில்லை. அத்தோடு பட்டறிவையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 

குறளில் பல இடங்களில், வள்ளுவர் அறிவு என்று குறிப்பிடுவது, அறிந்த செய்தி, பட்டறிவு, இயல்பறிவு ஆகியவற்றின் கலவையாகிய மெய்யறிவைக் குறிப்பதாக உள்ளது என்பதற்கு ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். ”ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.”, என்ற பழமொழிக்கேற்ப எத்தகைய கல்வியாலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் எப்படி நடந்துகொள்வது என்று ஒருவர் கற்றுக்கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்வதற்கு, அவருக்குப் பட்டறிவும், இயல்பறிவும் தேவை. உலகத்தோடு ஒட்ட வாழத் தெரியாதவர்களை “அறிவிலாதார்” என்று குறிப்பிடும்பொழுதும் (குறள் – 140), உலகில் உயர்ந்தோர் எப்படி நடந்துகொள்கிறார்களோ அவ்வாறு நாமும் நடந்துகொள்வதுதான் அறிவு (குறள் – 426) என்று கூறும்பொழுதும் வள்ளுவர் அறிவும், பட்டறிவும் இயல்பறிவும் கலந்த மெய்யறிவைத்தான் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.                                      (குறள் - 140)

 

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.                                                  (குறள் – 426)

 

 

அறிவுடைமை என்ற அதிகாரத்தில், ”எதிர்காலத்தில் நடைபெறக்கூடியது எது என்பதை முன்கூட்டியே அறியக்கூடியவர்களே அறிவுடையவர்கள். அவ்வாறு அறிய மாட்டாதவர்கள் அறிவில்லாதவர்களாவார்கள் (குறள் – 427).”, என்றும், “எதிர்காலத்தில் நடைபெறக்கூடியவற்றை முன்கூட்டியே அறியக்கூடியவர்களுக்கு அதிர்ச்சிதரக்கூடிய துன்பம் ஏதொன்றும் இல்லை (குறள் – 429).”, என்றும், “அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாதிருத்தல் அறிவின்மையாகும்; அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சுவது அறிவுடையோரின் செயலாகும் (குறள் – 428).”, என்றும் வள்ளுவர் கூறும்பொழுது அவர் குறிப்பிடுவது மெய்யறிவுதான். இதுபோன்ற சூழ்நிலைகளில் கல்வி, கேள்வி ஆகியவற்றால் வரும் அறிவு பயன் தருவதில்லை.

 

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.                                                  (குறள் – 427)

 

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.                                  (குறள் – 429)

 

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.                                (குறள் – 428)

 

 

வெஃகாமை என்ற அதிகாரத்தில், பலரிடத்திலும் உள்ள பொருளை விரும்பி, அவர்களால் வெறுக்கத்தக்க செயல்களை ஒருவன் செய்தால் அவனுடைய பரந்த அறிவினால் என்ன பயன் (குறள் – 175) என்று கேட்பதோடு மட்டுமல்லாமல், அறநெறிகளைக் கற்றறிந்து, பிறர் பொருளை விரும்பாத அறிவுடையவர்களின் தகுதியை அறிந்து அவர்களிடம் செல்வம் போய்ச் சேரும் (குறள் – 179) என்றும் வள்ளுவர் கூறுகிறார். இந்தக் குறள்களிலிருந்து, வெஃகாமை போன்ற நன்னடத்தைக்குக் கல்வி கேள்விகளால் வரும் அறிவு பரந்தாக இருந்தாலும்கூட அது போதாது. பட்டறிவும் இயல்பான அறிவும், அஞ்சுவதற்கு அஞ்சும் மெய்யறிவும் தேவை என்று தெரிகிறது.

 

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.                                   (குறள் 175)

 

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு.                                  (குறள் 179)

 

பயனில சொல்லாமை என்ற அதிகாரத்தில், “அரிய பயனை ஆராய்ந்து தேடும் அறிவை உடையவர்கள் ஒருபோதும் மிகுந்த பயன் அளிக்காத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.(குறள் – 198).”, என்று வள்ளுவர் கூறுகிறார்.

 

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.                                     (குறள் - 198)

 

இங்கு வள்ளுவர் குறிப்பிடுவது கல்வி கேள்விகளால் வரும் அறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு அறிவு. ”எது பயனுள்ள சொல்?, எதை, எங்கு, எப்பொழுது சொல்லலாம்.” என்பவற்றை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்கு, இயல்பறிவு, பட்டறிவு ஆகியவற்றோடு கலந்த அறிவு – அதாவது மெய்யறிவு – தேவை என்பது பெறப்படுகிறது. அதுபோல், தீவினையச்சம் என்ற அதிகாரத்தில், பகைமையினால் தமக்குத் தீமை செய்தவர்க்கும் தீமை செய்யாமல் இருப்பதுதான் அறிவினுள் எல்லாம் சிறந்த ஆறிவாகும் (குறள் – 203) என்கிறார் வள்ளுவர். பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிந்திருந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்குப் பயிற்சியும் பட்டறிவும் தேவை. இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில், ”பிறருடைய துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதாவிட்டால், தாம் பெற்ற அறிவினால் என்ன் பயன் (குறள் – 315)?”, என்று வள்ளுவர் கேட்கிறார். பிறர் துன்பதைத் தம் துன்பமாகக் கருத வேண்டும் என்பது பள்ளி அல்லது கல்லூரியில் பெறும் அறிவால் வருவதில்லை.

 

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.                          (குறள் 203)

 

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.                      (குறள் 315)

 

ஒருவரைப் பணிக்குத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று கல்வி கேள்வி ஆகியவற்றால் பெறும் அறிவின் உதவியால் மட்டும் முடிவு செய்ய முடியாது என்பது பலரும் அறிந்த உண்மை. தற்காலத்தில், பல நிறுவனங்களில், ஒருவரை பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்குமுன் அவரைப் பலரும் நேர்காணல் செய்வதும், சில சமயங்களில் உளவியல் அறிஞர்கள் நேர்காணல் செய்வதும், சில உளவியல் சோதனைகள் நடத்துவதும் வழக்கமாக உள்ளது. தெரிந்து தெளிதல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைத்தும் ஒருவரை ஒரு பணிக்குத் தேர்ந்தெடுக்குமுன் மெய்யறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.  அதுபோல், தெரிந்து வினையாடல் என்ற அதிகாரத்திலும் வள்ளுவர் கூறும் அறிவுரைகள் மெய்யறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது. ஒரு உதாரணம்: மன்னரைச் சேர்ந்தொழுகல் என்ற அதிகாரத்தில், வலிமையுள்ள மன்னரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் முதலியோர், அவரிடமிருந்து மிக நீங்காமலும் அவரோடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்காய்வார்போல் இடைப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும் (குறள் – 691) என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.  வள்ளுவர் கூறும் அறிவுரையை நாம் திருக்குறளிலிருந்து கற்றுக்கொள்ளலாம்; புரிந்துகொள்ளலாம். ஆனால் எப்பொழுது நீங்கவேண்டும், எப்பொழுது அணுக வேண்டும் என்பதை நாம் நம்முடைய அனுபவத்தினால் பெற்ற பட்டறிவால்தான் பெறமுடியும். ஆகவே, வலிமையுள்ள பெரியோர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கல்வியறிவும் பட்டறிவும் கலந்த மெய்ய்றிவால்தான் முடிவு செய்ய இயலும்.

 

ஆகவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் பள்ளி அல்லது கல்லூரியில் பெறும் கல்வியினால் பயனில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் எந்தச் சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் கற்பிக்க முடியாது. முறையான கல்வியினால் வரும் அறிவு தேவை. ஆனால், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையும் பயனும் உள்ளது கல்வி கேள்விகளால் பெறும் அறிவு, பட்டறிவு, இயல்பறிவு ஆகியவற்றின் கலவையாகிய மெய்யறிவுதான்.  அறிவு ஒரு சிறந்த ஆற்றல் என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு (Knowledge is Power.). அது உண்மைதான். ஆனால், மெய்யறிவு அறிவைவிடச் சிறந்த ஆற்றல் (Knowleldge is power; but wisdom is more powerful.) என்பது பல குறட்பாக்களிலிருந்து தெரிகிறது.

 

முடிவுரை

அறிவு என்ற சொல் பலபொருள்களைக் குறிக்கும் ஒரு சொல். அறிவு என்பது அறிதல், அறிந்தசெய்தி, ஓதி, மதி, ஆகிய நான்கையும் குறிக்கும் ஒருசொல் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார். திருக்குறளை நன்கு ஆராய்ந்து பார்த்தால், வள்ளுவர் பலகுறட்பாக்களில் குறிப்பிடுவது, அறிவு, பட்டறிவு, இயல்பறிவு ஆகிய அனைத்தையும் கலந்து, சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவெடுக்கும் ஆற்றலாகிய மெய்யறிவைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

 

துணைநூல்கள்

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural)

தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 600 017

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம்,  மதுரை: 1999.

No comments:

Post a Comment