Statcounter

Saturday, August 29, 2020

சொல்லாற்றல்

 

சொல்லாற்றல்

 

தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஆற்றல் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடத்திலும் உள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், மனிதர்கள் தகவல் பரிமாறிக்கொள்ளும் முறை விலங்குகள் தகவல் பரிமாறிக்கொள்ளும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. உணவுப் பொருள்களைச் சேகரிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும், தங்களையும் தங்களின் கூட்டத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கும், இனச்சேர்க்கைக்கும் விலங்குகள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. மனிதர்கள் மட்டுமே, மொழியைப் பயன்படுத்தி அன்பு, காதல், கோபம், வியப்பு, வருத்தம், உவகை போன்ற உணர்வுகளையும், தங்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்களையும், அறிவு சார்ந்த கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார்கள். சில சமயங்களில், மொழியின் உதவி இல்லாமலும், தங்கள் கண்களாலும் உடலாலும் தங்கள் உணர்வுகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் ஆற்றலும் மனிதர்களிடம் உள்ளது. மனிதன் மற்றொரு மனிதனோடு தொடர்புகொண்டு தன் மனத்தில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரே சமயத்தில் பலரிடம் தன் கருத்துக்களைக் கூறக்கூடிய ஆற்றலையும் உடையனாக இருக்கிறான். இன்றைய வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற தொழிநுட்பக் கருவிகளின் உதவியால் ஒரே சமயத்தில் எண்ணற்ற மக்களோடு தன் கருத்துக்களைப் பகிர்த்துகொள்ள முடிகிறது. மேலும், ஒருவருடைய சொற்பொழிவு அல்லது பேச்சு, தொழில் நுட்பக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டுக் காலம், இடம் ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எங்கெங்கும், என்றென்றும் கேட்கக்கூடியதாகவும் உள்ளது. மனிதனின் சொல்லாற்றல் என்பது மிக வலிமையான ஒரு ஆற்றல். அதன் சிறப்பைப் பற்றியும், அதனால் வரும் நன்மை தீமைகளைப் பற்றியும், அந்த ஆற்றலைப் பயன்படுத்தி எப்படிச் சொற்போழிவாற்ற வேண்டும் என்பதைப் பற்றியும் சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் விளக்காமாகக் கூறுகிறார்.

 

சொல்லாற்றலின் சிறப்பு

மனிதனுடைய சொல்லாற்றல் என்ற ஆற்றல் ஒரு தனிச்சிறப்பான ஆற்றல்; அது அவனுடைய மற்ற ஆற்றல்களில் அடங்காது (குறள் – 641) என்று வள்ளுவர் கூறுகிறார்.

 

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.                                                                                 (குறள்641)

 

ஒருவன் தன் சொற்களால் பிறரை மகிழ்விக்க முடியும்; துன்புறுத்த முடியும்; ஆத்திரம் அடையச் செய்ய முடியும்; உணர்ச்சிவசப்படுத்த முடியும்; தான் விரும்பும் செயல்களைச் செய்யுமாறு ஊக்குவிக்க முடியும்; கல்வி கற்பிக்க முடியும். பிறரோடு உரையாடுவதால் அவர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். தங்கள் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் வலிமையான ஆற்றல் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது என்பதில் எவருக்கும் கருத்து வெறுபாடு இருக்க முடியாது.

 

சொல்லாற்றலால் விளையும் நன்மையும் தீமையும்

”நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்” என்ற பழமொழிக்கேற்ப, தங்கள் சொல்லாற்றலைப் பயன்படுத்தி மனிதர்கள் நன்மையும் செய்ய முடியும்; தீமையும் செய்ய முடியும். ஒருவனுக்கு மேன்மேலும் உயரும் ஆக்கமும் அழிவும் அவனுடைய சொல்லால் வருவதால், தன்னுடைய சொற்களில் தவறு ஏற்படாதவாறு அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (குறள் – 642) என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.

 

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.                     (குறள் - 642)

 

தங்கள் சொல்லாற்றலைப் பயன்படுத்தி மனிதர்கள் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். சிலர் எண்ணற்ற மக்களுக்கு வேதனைகளையும் அளித்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் நடந்தபொழுது, ஜெர்மனியைச் சார்ந்த அடால்ஃப் ஹிட்ளரும் (Adolf Hitler, 1189 – 1945) இத்தாலியைச் சார்ந்த முசோலினியும் (Benito Musolini, 1883 – 1945) தங்கள் நாவன்மையால் மக்களிடையே யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை எழுப்பி, யூதர்களைக் கொன்று குவித்தார்கள்.  அந்தப் போர் நடந்தபொழுது, இங்கிலாந்தைச் சார்ந்த வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill, 1874 – 1965) தன்னுடைய சொல்லாற்றலால் தன் நாட்டு வீரர்களை ஊக்குவித்துப் போரில் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருடைய புகழ் பெற்ற ‘Never give in” சொற்பொழிவு அவருடைய நாவன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்காவில் உள்ள பேள் ஹார்பர் (Pearl Harbor) துறைமுகத்தின்மீது ஜப்பானியர்கள் 1941 – ஆம் ஆண்டு, சரமாரியாகக் குண்டுகளைப் பொழிந்து அங்கிருந்த பல கப்பல்களையும் விமானங்களையும் அழித்ததோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்களையும் கொன்றார்கள். அப்பொழுது, அமெரிக்கக் குடியரசின் தலைவராக இருந்த ஃபிரேங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt, 1882 – 1945), அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஆற்றிய “Date of Infamy” என்ற சொற்பொழிவு, அமெரிக்கர்களை ஒருங்கிணைத்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கச் செய்தது. அவருடைய சொற்பொழிவு இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்குடைய (Martin Luther King, 1929 – 1968) சொல்லாற்றல்தான் ஆபிரிக்க ஆமெரிக்க மக்களைத் தட்டியெழுப்பி அவர்களின் சமயுரிமைகளுக்காக அவர்களைப் போராடத் தூண்டியது. அவருடைய ”I have a dream” என்ற சொற்பொழிவு மக்களின் மனத்தில் இன்றும் ஒலித்துகொண்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டில், தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று தன் சொற்பொழிவுகளின் மூலம், மக்களிடையே பகுத்தறிவைப் பரப்பி, தமிழ்ச் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை உருவாக்கிய பெருமைக்குரியவர் தந்தை பெரியார் (1879 – 1973).

 

.

அவையில் பேசுதல்

தனியாக ஒருவரோடு உரையாடுவது வேறு. பலர் முன்னிலையில், ஒரு அவையில் சொற்பொழிவாற்றுவது என்பது வேறு. அன்றாட வாழ்க்கையில் அனைவரும் எவரோடாவது பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். சிறு குழந்தையாக இருந்தபொழுதே பேசத் தொடங்கி வாழ்நாள் முழுதும் பேசிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு உரையாடுவதற்குத் தனிப்பயிற்சியோ, சிறந்த கல்வியோ தேவையில்லை.  ஆனால் பலர் முன்னிலையில் சொற்பொழிவாற்றுவது என்பது ஒரு கலை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், சொற்பொழிவு ஆற்றுவது எப்படி என்று கிரேக்க நாட்டைச் சார்ந்த பிளேடோ (Plato, 428/427 B. C. – 348/347 B. C.), அரிஸ்டாட்டில் (Aristotle, 384 B. C. – 322 B. C.) டெமோஸ்தனீஸ்(Demosthenes,  384 B. C. – 322 B. C.) போன்றவர்கள் ஆராய்ச்சி செய்து, சொற்பொழிவாற்றுவதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்காகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார்கள் என்று வரலாறு கூறுகிறது.

 

அவையில் பேசுவதைப் பற்றி அரிஸ்டாட்டில்

அவையில் பேசுவதற்கு ஒரு தகவல் தொடர்பு மாதிரியை அரிஸ்டாட்டில் (அரிஸ்டாட்டிலின் தகவல் தொடர்பு மாதிரி – Aristotle’s Model for Communications) முன்மொழிந்தார். இன்றும் மேலை நாடுகளில், கருத்தரங்குகளிலும், சொற்பொழிவுகளிலும் அரிஸ்டாட்டிலின் மாதிரி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அரிஸ்டாட்டிலின் மாதிரி ஐந்து கூறுகள் அடங்கியது. அவை: 1)பேச்சாளர், 2)பேச்சு, 3)சூழ்நிலை, 4)கேட்பவர்கள், 5)விளைவு (Effect). அரிஸ்டாட்டில் மாதிரிப்படி, தகவல் தொடர்பில் பேச்சாளர்தான் முக்கியமான பங்கு வகிக்கிறார். மேலும், அனைத்துத் தகவல் தொடர்புகளுக்கும் பேச்சாளர்தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சாளர் தனது சொற்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பேசுவதற்குமுன், அவையில் இருப்பவர்களின் தகுதியையும் எதிர்பார்ப்புகளையும் பேச்சாளர் ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். பேச்சு, குழப்பம் இல்லாமல் தெளிவாகவும், புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். பேசும் முறை அவையில் இருப்பவர்களைக் கவர்வதாக இருக்க வேண்டும். பேச்சாளர் நம்பத் தகுந்தவராகவும், எதைப் பற்றிப் பேசுகிறாரோ அதைப் பற்றி நன்கு அறிந்தவராகவும் இருக்க வேண்டும். பேச்சைக் கேட்பவர்கள் ஒவ்வொருவரும், பேச்சாளர் தன்னோடு பேசுவதாக உணரவேண்டும். கேட்பவர்களின் உள்ளத்தைத் தொடும் வகையிலும் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலும் பேச்சு அமைய வேண்டும்.  பேச்சில் நகைச்சுவையைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த உத்தியாகும். பேச்சாளர் கூறும் கருத்துக்கள் உண்மையானவையாகவும், முன்னுக்குப்பின் முரணானவையாக இல்லாமலும் இருக்க வேண்டும். 

 

கிரேக்கத் தத்துவஞானிகளைப்போல், வள்ளுவரும் அவையில் பேசப்படும் பேச்சு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, தன் கருத்துக்களைத் திருக்குறளில் கூறியுள்ளார். அரிஸ்டாட்டிலின் தகவல் தொடர்பு மாதிரிக்கும் அவையில் பேசுவதைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களுக்கும் இடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது.

 

 

அவையில் பேசுவதைப் பற்றி டேல் கார்னிகி (Dale Carnegie, 1888 – 1955)

கடந்த நூற்றாண்டில், அமெரிக்காவில் வாழ்ந்த டேல் கார்னிகி என்பவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தது மட்டுமல்லாமல், சுயமுனேற்றம், மேடைப்பேச்சு, ஆகிய துறைகளில் நூல்கள் எழுதியும் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்தும் சிறப்பாகச் சேவை செய்தவர். மேடையில் சிறப்பாகப் பேசுவது எப்படி என்பதைப் பற்றி, “The Quick and Easy Way to Effective Speaking” என்ற தலைப்பில் அவர் ஒரு அருமையான நூல் எழுதியுள்ளார். பலர் முன்னிலையில் ஒருவன் சிறப்பாக மேடையில் பேச வேண்டுமானால், எதைப் பற்றி பேச விரும்புகிறானோ அதைப் பற்றி அவன் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று அந்த நூலில் அவர் கூறுகிறார். பேச்சாளனுக்குப் பயிற்சி தேவை என்கிறார். மேலும், மேடையில் பேசுவதற்குமுன், ஒருவன் தன்னுடைய பேச்சில் என்ன சொல்லப் போகிறான், அதை எப்படிச் சொல்லப் போகிறான் என்பவற்றை நன்கு சிந்திதுப் பார்க்க வேண்டும். அதாவது, அவன் தன் பேச்சை தயார் செய்துகொள்ள வேண்டும்.  அவர் கருத்துப்படி, பேச்சாளான் என்பவன் ஒரு விற்பனையாளனைப் (விற்பனையாளன் - Salesman) போன்றவன். ஒரு பொருளை நம்மிடம் விற்பனை செய்பவன், எந்தப் பொருளை விற்பனை செய்கிறானோ அந்தப் பொருளைப் பற்றி ஐயந்திரிபறக் கற்றிருக்க வேண்டும்.  அந்தப் பொருளைப் பற்றி யார் என்ன கேள்வி கேட்டாலும் அந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிக்கக் கூடிய ஆற்றல் உடையவனாகவும் இருக்க வேண்டும். அதுபோன்ற ஆற்றலைப் பெறுவதற்கு, அந்தப் பொருளைப் பற்றிய அறிவோடு பயிற்சியும் தேவை. ஒரு அவையில் பலர் முன்னிலையில் பேசுபவனுக்கு, கல்வியும், அறிவும், பயிற்சியும், பேச்சைத் தயாரிப்பதும் தேவை என்று டேல் கார்னிகி கூறுகிறார். மேடைப்பேச்சைப் பற்றிய கருத்துக்களில், வள்ளுவருக்கும் டேல் கார்னிகிக்கும் இடையே ஒற்றுமை காணப்படுகிறது.

 

அவையில் பேசுவதைப் பற்றி வள்ளுவர்

அவையில் பேசுவதற்கு அறிவும் கல்வியும் தேவை:  ஒருவன் எதைப் பற்றிப் பலர் முன்னிலையில் பேச விரும்புகிறானோ அதைப் பற்றி அவன் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் பல குறட்பாக்களில் வலியுறுத்துகிறார். அவையில் பேசுவதற்குத் தன் அறிவு நிரம்புவதற்குரிய நூல்களைக் கல்லாது, ஒருவன் ஒரு அவையில் சொற்பொழிவாற்ற முயற்சி செய்வது, அரங்கத்தை அமைத்துக்கொள்ளாது காய்களை மட்டும் உருட்டி விளையாட நினைப்பதைப் போன்றது (குறள் – 401). கல்லாத ஒருவன், ஒரு அவையில் சொற்பொழிவாற்ற விரும்புதல், முலை இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி காதல் இன்பத்தை பெற விரும்புவதைப் போன்றதாகும் (குறள் – 402). கற்றோர் அவையில் எதையும் சொல்லதிருப்பார்களேயானால், கல்லாதவர்களும் நல்லவர்களாகவே கருதப்படுவார்கள் (குறள் – 403). கல்லாதவனுடைய இயற்கையான அறிவு, சில சமயங்களில் மிகச் சிறந்ததாகத் தோன்றினாலும், அவனைச் சிறந்த அறிவுடையவனாகக் கருதமாட்டார்கள் (குறள் – 404). கல்லாத ஒருவன் தன்னைக் கற்றவன் போலத் தனக்குத் தானே மதிப்பிட்டுகொண்டு கற்றவர்களோடு உரையாடத் தொடங்கினால், அந்த மதிப்பானது கெட்டுப் போய்விடும் (குறள் – 405)

 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.                                                                          (குறள்401)

 

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.                                                                  (குறள்402)

                 

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.                                                                             (குறள்403)

 

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.                                                           

   (குறள்404)

 

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.                                                                            (குறள்405)

 

இந்தக் குறள்களிலிருந்து, ஒருவன் கற்றவர் அவையில் பேச விரும்பினால், அவன் கல்வியும் அறிவும் உடையவனாக இருப்பது இன்றியமையாதது என்பது வள்ளுவரின் கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், வள்ளுவரின் கருத்துக்கும் டேல் கார்னிகி மற்றும் அரிஸ்டாட்டிலின் கருத்துக்கும் இடையே மிகுந்த ஒற்றுமை இருப்பதும் தெரிகிறது.

 

அவையறிதல்: சொற்களைத் தொகுத்துப் பேசுவதை அறிந்த தூய அறிவுடையவர்கள் அவையை அறிந்து, சொல்ல வேண்டியதை ஆராய்ந்து சொல்ல வேண்டும் (குறள் – 711). சொல்லின் வழக்கை அறிந்த நல்லறிவாளர், அவையின் இடம், காலம், நிலைமை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும் (குறள் – 712). அறிவுடையவர்கள் உள்ள அவையில் அறிவில் சிறந்தவர்களைப் போலவும், பாமரமக்கள் உள்ள அவையில் அவர்களில் ஒருவனாகவும், அவர்களுக்குப் புரியுமாறும் பேச வேண்டும் (குறள் – 714). முதிர்ந்த அறிவுடையவர்கள் கூடியுள்ள அவையில், முந்திக்கொண்டு பேசாமல் இருப்பது, நற்பண்புகள் என்று சொல்லப்படும் பண்புகள் எல்லாவற்றிலும் சிறந்த நற்பண்பாகும் (குறள் – 715). பரவலாகப் பலநூல்களையும் கற்று உணர்ந்தவர்கள் உள்ள அவையில், குற்றம் உண்டாகும்படிப் பேசுதல் நல்ல நெறியில் நின்றவன் அந்நெறியிலிருந்து தவறியதற்கு ஒப்பாகும் (குறள் – 716). கருத்துக்களை உணர்ந்துகொள்ளும் அறிவுடையர்கள் முன்னிலையில் பேசுதல் பயிர் விளையும் பாத்தியில் நீர் சொரிந்தைப் போன்றது (குறள் – 718). தம் தகுதியோடு பொருந்தாதவர்முன் சிறந்த கருத்துக்களைப் பேசுதல் சாக்கடையில் அமிழ்தத்தை ஊற்றியது போலாகும் (குறள் – 720).

 

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.                                                                         (குறள் – 711)

 

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.                                                                            (குறள் – 712)

 

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.                                                                      (குறள் – 714)

 

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.                                                                   (குறள் - 715)

 

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.                                                                     (குறள் – 716)

 

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று.                                                  

           (குறள் – 718)

 

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல்.                                                

        (குறள் – 720)

 

 

அவையஞ்சாமையும் தேவை: டேல் கார்னிகியின் கூற்றுப்படி, கல்லூரி மாணவர்களில் எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் பேர் அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். அவையில் பேசுவதற்கு அஞ்சும் பெரியவர்களின் சதவீதம் அவையில் பேசுவதற்கு அஞ்சும் மாணவர்களைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, வள்ளுவர் இதே கருத்தைக் கூறியுள்ளார். அஞ்சாது அவையில் பேசும் ஆற்றல் உடையவர்களைப் பாராட்டியும், அவையில் பேச அஞ்சுபவர்களை வீரமில்லாதவர்களோடு ஒப்பிட்டும் பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறுகிறார்.

 

அவைக்கு அஞ்சாதவர்களின் இயல்பு: பகைவர் இருக்கும் போர்க்களத்தில் போரிட்டுச் சாகின்றவர்கள் பலர். ஆனால், ஒரு அவையில் நின்று அஞ்சாது பேசக்கூடியவர்கள் வெகு சிலரே (குறள் – 723). சொற்களைத் தொகுத்துப் பேசும் தூய அறிவுடையவர்கள், அவருடைய பேச்சைக் கேட்கவிருக்கும் அவையின் தன்மையை அறிந்து, கல்வியில் சிறந்தவர்கள் கூடிய அவையில் சொற்சோர்வு உண்டாகுமாறு பேசமாட்டார்கள் (குறள் – 721).  கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர்களுடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர்கள் கற்றவர்கள் எல்லோரையும்விடச் சிறப்பாகக் கற்றவர்கள் என்று கருதப்படுவார்கள் (குறள் – 722).

 

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.                                                                             (குறள் – 723)

 

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.                                               

            (குறள் – 721)

 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.                                                          

      (குறள் – 722)

 

 

அவைக்கு அஞ்சுபவர்களின் இயல்பு: தாம் கற்றவற்றை பிறர் புரிந்துகொள்ளுமாறு விரித்துரைக்க முடியாதவன், கொத்தாக மலர்ந்திருந்த்தும் மணம் கமழாத மலரைப் போன்றவன் (குறள் – 650). உள்ளத்தில் வீரமில்லாதவர்க்குக் கையில் வாளிருந்து என்ன பயன்? அதுபோல், நுண்ணறிவு படைத்தோர் கூடிய அவையில் பேச அஞ்சுபவர்க்கு, அவர் கற்ற நூலால் என்ன பயன் (குறள் – 726)? கற்க வேண்டியதைக் கற்று அறிந்திருந்தும், அவற்றை நல்லவர் கூடிய அவையில் பேச அஞ்சுபவர்கள் கல்லாதவரைவிடக் கீழானவர்களாகக் கருதப்படுவார்கள் (குறள் – 729).  கற்றறிந்தோர் அவையில் உரையாற்ற அஞ்சுபவன் கற்ற நூலறிவு, பகைவரோடு போரிடும் களத்தில் கோழையின் கையில் உள்ள ஒளிபொருந்திய வாளைப் போன்றது (குறள் – 727).

 

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.                                             (குறள் – 650)

 

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.                                                                           (குறள் – 726)

 

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.                                                                                 (குறள் – 729)

 

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.                                                                                  (குறள் – 727)

 

அவையில் பேசுவதற்கு அஞ்சாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?: அவையோரின் தகுதியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அவையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேச வேண்டும். எதைப் பற்றி பேச வேண்டுமோ அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து, தேவையான செய்திகளைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். அடுத்து, எவ்வளவு நேரம் பேச வண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சேகரித்த செய்திகளை, சரியாக வரிசைப்படுத்தி, அவையோருக்குப் புரியும்படி பேச்சைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். தயாரித்த பேச்சைப் பலமுறைப் பேசிப் பழக வேண்டும். கல்வி அறிவு மட்டுமல்லாமல், பயிற்சியும் தேவை என்று டேல் கார்னிகி வலியுறுத்துகிறார். அவையைப் பற்றிய புரிதல், பேசும் பொருளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தல், பேச்சைத் தயாரித்தல், பேசிப் பயிற்சி பெறுதல் இவை அனைத்தையும் முறையாகச் செய்தால், பேச்சாளனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை இருந்தால், பேச்சாளன் அவையைக் கண்டு அஞ்ச மாட்டான். அவையில் பேசுவதற்குப் பயிற்சி தேவை என்று குறிப்பாகக் கூறாவிட்டாலும், எல்லாச் செயல்களையும் செவ்வனே செய்வதற்கு முயற்சி தேவை என்பதைப் பல குறட்பாக்களில் வள்ளுவர் வலியுறுத்துகிறார். உதாரணமாக, எந்த ஒரு செயலும் செய்வதற்கு அரிய செயல் என்று முடிவு செய்து, மனம் தளர்ந்துவிடாமல், முயற்சி செய்தால், அந்த முயற்சி பெருமையைத் தரும் என்பது வள்ளுவரின் கருத்து என்பது, “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் (குறள் – 611)” என்ற குறளிலிருந்து தெரிகிறது. முயற்சியினால் வருவது பயிற்சி. ஆகவே, ஒருவன் முதலில் அவையில் பேசுவதில் வல்லமை படைத்தவனாக இல்லாவிட்டலும், தொடர்ந்து முயற்சி செய்தால், வெற்றி அடைவான் என்பதுதான் வள்ளுவரின் அறிவுரை. ஆகவே, மீண்டும் டேல்கார்னிகியின் கருத்துக்கும் வள்ளுவரின் கருத்துக்கும் ஒற்றுமை இருப்பது தெரிகிறது.

 

 

சொற்பொழிவைப் பற்றி வள்ளுவர்

சொல்லாட்சி: கேட்பவர்களைக் கவரும் தன்மை உடையதாகவும், கேளாதவரும் கேட்க விரும்பும்படிப் பேசுவதே சிறந்த சொல்வன்மையாகும் (குறள் – 643). கேட்பவரது மனநிலையை அறிந்து, ஒருவர் சொல்லக்கருதும் சொல்லை, முறையாகச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதைவிடச் சிறந்த அறமோ, பொருளோ வேறொன்றும் இல்லை (குறள் – 644). தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக்கூடிய சொல் வேறொன்றும் இல்லை என்பதைத் தெளிவாக அறிந்த பிறகே, அச்சொல்லைச் சொல்ல வேண்டும் (குறள் – 645). தான் சொல்ல விரும்பியதை பிறர் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வதில் வல்லவனாய், அவைக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனை தருக்கத்தாலும் கருத்து மாறுபட்டாலும் வெல்லுதல் எவருக்கும் அரிய செயலாகும் (குறள் – 647).

 

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.                                                                            (குறள் – 643)

 

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.                                                                    (குறள் – 644)

 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.                                                                (குறள் – 645)

 

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.                                                                    (குறள் – 647)

 

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்: தாம் கருதியவற்றைக் குற்றமிலாத சில சொற்களால் தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்லத் தெரியாதவர்கள்தான் வீணாகப் பல சொற்களால் விரித்துக் கூற விரும்புவர் (குறள் – 649).

 

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.                                                                            (குறள் – 649)

 

வள்ளுவர் கூறுவதிற்கிணங்க, உலக வரலாற்றில், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பெருந்தலைவர்கள் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும், தங்கள் சொற்பொழிவுகளின் மூலம் தங்கள் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்தபொழுது, 1863 – ஆம் ஆண்டு, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரஹாம் லிங்கன் (Abraham Lincoln, 1809 – 1865) ஆற்றிய உலகப் புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் (Gettysbugh, Pennsylvania) சொற்பொழிவு மூன்று மணித்துளிகளில் முடிவடைந்தது. 1941 – ஆம் ஆண்டு, ஜப்பானியர்கள் அமெரிக்காவைத் தாக்கியபொழுது, அமெரிக்கக் குடியரசின் தலைவர், ஃபிரேங்க்ளின் டெலனோ ரூரஸ்வெல்ட், அமெரிக்கா ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஆற்றிய “Date of Infamy” என்ற சொற்பொழிவு ஏழு மணித்துளிகளில் முடிவடைந்தது. அதே ஆண்டு, இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்து ஜெர்மனியை எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதற்காக ஆற்றிய உரை மிகச் சுருக்கமாக நான்கு மணித்துளிகளில் முடிவடைந்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமவுரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்குடைய “I have a dream” என்ற சொற்பொழிவு பதினெட்டு மணித்துளிகளில் முடிவடைந்தது.

 

சொல்லாற்றல் மிக்க அறிஞர் அண்ணா

தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிஞர் அண்ணாவைப் பற்றித் தெரியாத தமிழர் எவரும் இருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் வரலாற்றில், தனக்கென்று தனியிடம் படைத்துக்கொண்டவர் அறிஞர் அண்ணா. வள்ளுவர் கூறும் சொல்வன்மைக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அண்ணாவின் சொற்பொழிவில், கருத்துச் செறிவு இருக்கும்; அழகிய தமிழ் இருக்கும்; அடுக்குமொழி இருக்கும்; நகைச் சுவை இருக்கும். ”சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து (குறள் – 647)” என்பதற்கிணங்க, தகுந்த சொற்களைப் பயன்படுத்திப் பேசுவார். அவர் அவையில் பேசுகின்றபொழுது, அவரால் கேட்பவர்களைச் சிந்திக்க வைக்க முடியும்; சிரிக்கவைக்க முடியும்; செயல்செய்யத் தூண்ட முடியும். மாற்றுக் கருத்துடையவர்கள்கூட அவர் பேச்சை விரும்பிக் கேட்டார்கள். அவர் பேச்சைக் கேட்டவர்கள் அவற்றை மறப்பதில்லை. ”நாம் அவருடைய பேச்சைக் கேட்கும் வாய்ப்பை இழந்து விட்டோமே!” என்று வருந்துபவர்கள் இன்றும் உள்ளார்கள். அவருடைய சில சொற்பொழிவுகளை இன்றும் எண்ணற்றவர்கள் வலையொளியில் (வலையொளி – YouTube) கேட்டு மகிழ்கிறார்கள் .”கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் (குறள் – 643)” என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாக அவர் பேச்சு இருக்கும்.  அவர் அவையறிந்து பேசும் ஆற்றல் உடையவர். பாமர மக்களிடமும் பேசுவார்; பாராளுமன்றத்திலும் பேசுவார்; கல்லாதவர்களிடமும் பேசுவார்; கல்லூரிகளிலும் பேசுவார். அரசியல் பேசுவார்; பொருளாதாரம் பேசுவார்; சட்டம் பேசுவார்; இலக்கியம் பேசுவார்; எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசுவார்; எந்தத் தலைப்பும் இல்லாமலும் பேசுவார். அவர் இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையில் ஆற்றிய சொற்பொழிவு, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் (Yale University, New Haven Connecticut) ஆற்றிய சொற்பொழிவு, மற்றும் தமிழ்நாட்டின் முலைமுடுக்குகளில் எல்லாம் அவர் ஆற்றிய ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் கேட்டவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.

 

அண்ணா அவர்கள் மணிக்கணக்கில் மக்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடிய ஆற்றல் மட்டுமல்லாமல் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் ஆற்றலும் உடையவராக இருந்தார்.  ஒரு சமயம், ஒரு ஊரில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டதிற்கு அவர் செல்ல வேண்டியதாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஒன்பது மணிக்கு வரவேண்டியவர் எறத்தாழ பத்தரை மணிக்கு வந்தார். அண்ணா வந்தவுடன், கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள், “ஐயா, பத்தரை மணிவரைதான் கூட்டம் நடத்த நமக்கு அனுமதி அளித்திருகிறார்கள். இப்பொழுது, பத்தரை மணிக்கு இன்னும் ஒரு மணித்துளிதான் உள்ளது. என்ன செய்வது?” என்று அவரைக் கேட்டார்கள். தற்கு அண்ணா,பரவாயில்லை. நான் ஒரு மணித்துளியில் என் பேச்சை முடித்து விடுகிறேன்.”, என்று சொல்லிவிட்டு, மேடைக்குப் போய், “மாதமோ சித்திரை! நேரமோ பத்தரை ! வருவதோ நித்திரை . குத்துங்கள் முத்திரை உதய சூரியனில் !  வணக்கம்." என்று கூறித் தன் பேச்சை முடித்தார். அவர் சுருங்கச் சொல்லி விளங்கவைத்த செய்தி, அந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.

அண்ணாவின் சொற்பொழிவுகளைக் கேட்கும் பேறு பெற்வர்களுள் நானும் ஒருவன். நான் சென்னையில் உள்ள இலயோலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்புப் படிக்கும்பொழுது, கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துகொண்டிருந்தேன். அங்கு, விடுதியில் இருக்கும் மாணவர்கள், இரவு எட்டு மணி முதல் மறுநாள்நாள் காலை ஆறுமணி வரை தங்கள் அறையில் இருக்க வேண்டும்; எவரிடமும் பேசக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால், மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப் படுவார்கள். இது போன்ற கடினமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், நானும் என்னுடைய நண்பர்களில் ஒரு சிலரும், சென்னையில் மெரீனா கடற்கரையில் அண்ணாவின் சொற்பொழிவு நடக்கும் நாட்களில், விடுதியிலிருந்து எவருக்கும் தெரியாமல் வெளியேறி, அண்ணாவின் பேச்சைக் கேட்டுவிட்டு, விடுதிக்கு இரவில் திரும்பி வருவது வழக்கம். மறுநாள் காலை, என்னோடு அண்ணாவின் பேச்சைக் கேட்க வராத நண்பர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, “அண்ணா என்ன பேசினார்?”, “எப்படிப் பேசினார்?” என்று கேட்பார்கள். ”அண்ணா பேசியதைப்போல் பேசிக்காட்டுங்கள்” என்றும் என்னைக் கேட்பார்கள். அண்ணாவைப்போல் எவராலும் பேச முடியாது. இருந்தாலும், நான் என்னால் இயன்றவரை அண்ணா பேசுவதுபோல் பேச முயற்சி செய்வது வழக்கம். நான் பலமுறை அண்ணாவின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இரண்டு முறை அண்ணாவைச் சந்தித்திருக்கிறேன். அந்த நிகழ்வுகள் என் நெஞ்சிலிருந்து நீங்காமல் நிரந்தரமான இடம் பெற்றுள்ளன. என் நெஞ்சில் மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் மனத்திலும் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் அண்ணா எப்பொழுதும் நிலைபெற்றிருப்பார் என்பது உறுதி.

 

முடிவுரை

ஒருவனுடைய சொல்லாற்றல் அவனுடைய மற்ற ஆற்றல்களைவிட வலிமையான ஆற்றல். சொல்லாற்றலைப் பற்றி ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களைக் கூறிய கிரேக்கத் தத்துவஞானிகளைப்போல், வள்ளுவரும் சொல்லாற்றலைப் பற்றி தன்னுடைய அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார். சொல்லாற்றலைப் பற்றிய வள்ளுவரின் கருத்துக்களை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை, ஆகிய அதிகாரங்களில் காணலாம். ஆக்கமும் கேடும் சொல்லால் வருதலால் சொல்லில் தவறு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.  அவையில் பேசுவதற்கு அஞ்சுபவர்கள் பலர். ஆனால், கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் அஞ்சாமல், தங்கள் கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும், அவ்வாறு பகிர்ந்துகொள்ளத் தெரியாதவர்கள் மணமில்லாத மலர்களைப் போன்றவர்கள் என்பதும் வள்ளுவரின் கருத்து. ஒரு அவையில் பேசும்பொழுது, அவையில் இருப்போரின் தன்மையை அறிந்து அதற்கேப்பப் பேச வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஒருவருடைய பேச்சு, கேட்பவர்களைக் கவர்வதாகவும், கேளாதவர்களும் கேட்க விரும்பும் வகையிலும் இருக்கு வேண்டும் என்று வள்ளுவர் அறிவுரை கூறுகிரார். ஒரு அவையில் பேசும்பொழுது, சுருங்கச் சொல்லி விளங்கவைக்க வேண்டும் என்ற கருத்தையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவர் கூறும் சொல்லாற்றலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா.

 

துணைநூல்கள்

Carnegie, Dale. The quick & easy way to effective speaking. Rupa Publications India Pvt. Ltd. 20167/16 Ansari Road, Daryaganj, New Delhi 110 002Diaz, S.M. Thirukkural. Volumes 1 &2.  Ramanandha Adigalar, Foundation, Chennai: 2000.

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural). Emerald Publishing, Chennai

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், மதுரை: 1999

தேவநேயப் பாவாணர், ஞா..  திருக்குறள்தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை,

No comments:

Post a Comment