Statcounter

Friday, May 22, 2026

வள்ளுவர் பார்வையில் பொருள்

 

வள்ளுவர் பார்வையில் பொருள்

முனைவர் இர. பிரபாகரன்

 

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையின்  குறிக்கோள்களாகக் கருதினார்கள் என்று ஏறத்தாழ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் கூறுகிறது.  வள்ளுவரும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பகுதிகள் மட்டுமே  அடங்கியதாகத் திருக்குறளை இயற்றியுள்ளார். பொருள் என்ற சொல்லுக்கு அகராதி இருபத்தேழு விளக்கங்கள் அளிக்கிறது. அவற்றுள் ‘செல்வம்’ என்பதும் ஒன்று. பொருட்பாலில் ‘பொருள்’ என்ற சொல்லைச் ‘செல்வம்’ என்பதைக் குறிப்பதற்கு வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

மனித வாழ்க்கைக்குச் செல்வம் இன்றியமையாதது என்பதை வள்ளுவர் ”பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என்று குறிப்பிடுகிறார். உணவு, உடை, உறைவிடம் ஆகிய இன்றியமையாத தேவைகளுக்கு மட்டுமல்லாமல், விருந்தோம்பல், ஈகை, ஒப்புரவு போன்ற அறச்செயல்களைச் செய்வதற்கும், அருள் சேர்ந்த உள்ளத்தோடு அனைத்துயிர்களுக்கும் நன்மை செய்வதற்கும், இன்பமாக வாழ்வதற்கும் பொருள் தேவைப்படுகிறது என்பதைக் குறிப்பதற்காக அறத்துப்பாலுக்கும், இன்பத்துப்பாலுக்கும் நடுவில் பொருட்பால் வைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் ஒருவன் நடுவில் உள்ள பொருளைப் பெற்றால் அறமும் இன்பமும் அடைவான் என்ற கருத்து நாலடியாரிலும் கூறப்பட்டிருப்பது[1] குறிப்பிடத் தக்கது. 

சங்க காலத்தில் பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவர் வயதானவராக இருந்தாலும் அவருடைய தலையில் நரைமுடி இல்லாமல் இளமையான தோற்றத்தோடு இருந்தார். அவருடைய தோற்றத்தைக் கண்டு வியந்த சிலர், “ஐயா, வயதானவராக இருந்தாலும் தலையில் நரைமுடி இல்லாமல் நீங்கள் இளமையான தோற்றத்தோடு இருக்கிறீர்களே! அது எப்படி?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”சிறப்பான என் மனைவியும், என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” என்று விடை அளித்தார்[2].

பிசிராந்தையார் அளித்த விடையில், ஒருவன் மனக்கவலை இல்லாமல் நல்வாழ்வு வாழ்வதற்கு அவன் வாழும் நாட்டில், மன்னன் அறநெறி தவறாமல் நல்லாட்சி புரிவதோடு மட்டுமல்லாமல் குடிமக்களும் நல்லொழுக்கம் உடைய சான்றோர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்து அடங்கியுள்ளது.  பொருட்பாலில் வள்ளுவர் கூறும் கருத்துகள் பிசிராந்தையாரின் பாடலுக்கு விரிவான விளக்கம் அளிப்பதாகத் தோன்றுகிறது. ஒரு நாட்டு மக்கள் பொருளை ஈட்டுவதற்கும், ஈட்டிய பொருளை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் அந்த நாட்டு மன்னன் எத்தகைய குண்நலன்கள் உடையவனாக இருக்க வேண்டும் என்றும், அவன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும்  என்றும், அவன் சிறப்பாக ஆட்சி புரிவதற்கு அவனுக்கு உதவியாக இருப்பவை எவை என்றும் வள்ளுவர் பொருட்பாலில் கூறும் கருத்துகளை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். 

ஒருவன் பொருளை ஈட்டுவதற்கும், ஈட்டிய பொருளை அவன் அனுபவிப்பதற்கும்  அவன் வாழும் நாட்டின் மன்னன் முறையாக ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றுபவனாக இருக்க வேண்டும். மேலும், அந்த நாட்டில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்க வேண்டும். மன்னன் திறமை இல்லாதவனாக இருந்தாலும், அவனுடைய ஆட்சி செம்மையானதாக இல்லாவிட்டாலும், நாட்டில் குழப்பம், வறுமை, குற்றங்கள் ஆகியவை பெருகும். நாட்டில் குழப்பம் மிகுந்து அமைதி குறைந்தால், குடிமக்கள் வளமாகவும் நலமாகவும் வாழ்வது கடினம். நாட்டில் அமைதி குறைந்து, குழப்பம் அதிகரித்தால், அந்த நாட்டின்மீது பகைவர்கள் போரிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நாட்டில் போர் நடைபெற்றால் மக்களின் வாழ்க்கை பல இன்னல்களுக்கு உள்ளாகும். அந்தச் சூழ்நிலையுயில், பொருளை ஈட்டுவதும் ஈட்டிய பொருளை அனுபவிப்பதும் கடினம்.

மன்னன் முறையாக ஆட்சி செய்யாவிட்டால் நாட்டில் பொருளாதர நிலை சீர்குலைந்து வறுமை அதிகமாகும். நாட்டின் பொருளாதார நிலை சரியில்லாமல் வறுமை மிகுதியாக இருந்தால், மக்கள் பொருள்களை வாங்குவது குறையும். மக்கள் பொருள்களை வாங்குவது குறைந்தால் பொருள்களின் உற்பத்தி குறையும். பொருள்களின் உற்பத்தி குறைந்தால், பலருக்கும் வேலைவாய்ப்புகள் குறையும். பலர் வேலையில்லாமல் இருப்பதாலும், வணிகம் தேக்கம் அடைவதாலும், அரசுக்கு வரிகளிலிருந்து கிடைக்கும் வருமானம் குறையும். அரசுக்கு வருமானம் குறைந்தால் அரசு அதிக வரிவிதிக்க நேரிடும். நாட்டின் பணத்தின் மதிப்பு குறைந்து பணவீக்கம் (Inflation) அதிகமாகும். பணவீக்கம் அதிகமானால், பொருள்களின் விலை அதிகமாகும். அந்தச் சூழ்நிலையில் பொருள் ஈட்டுவது கடினம். ஈட்டிய பொருளை அனுபவிப்பதும் கடினம்.

பொருளாதர நிலை சிறப்பாக இருப்பதற்கும், மக்கள் வளமாகவும் நலமாகவும் வாழ்வதற்கும் மன்னன் திறமையுடைவனாகவும் நல்லாட்சி புரிபவனாகவும் இருப்பது இன்றியமையாதது. அதனால்தான் ”மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று சங்க காலப் புலவர் மோசிகீரனார் கூறுகிறர்[3]. அதாவது, மன்னன் ஒரு நாட்டுக்கு உயிர் போன்றவன் என்பது அவருடைய கருத்து.

நாடு என்ற அதிகாரத்தில், ஒரு நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தாலும், சிறப்பாக ஆட்சி புரியும் மன்னன் இல்லாவிட்டால், அந்த வளங்களால் பயனொன்றுமில்லை என்று,

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமைவு இல்லாத நாடு.       (குறள் 740)

என்ற குறளில் வள்ளுவர் கூறுவது  ஒரு நாட்டுக்கு மன்னன் உயிர் போன்றவன் என்ற கருத்தை  வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது. ஒரு நாட்டுக்கு மன்னன் முதன்மையானவனும் உயிர் போன்றவனும் ஆகையால், பொருட்பாலில் உள்ள முதல் 250 குறட்பாக்களில் மன்னன் எத்தகைய குணநலன்கள் உடையவனாக இருக்க வேண்டும் என்பதையும் அவன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதையும் வள்ளுவர் முதலில் விரிவாகக் கூறுகிறார்.

மன்னனுக்குரிய குணநலன்கள் எவை?

மன்னன் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சாமல், அறத்தோடும், விவேகத்தோடும்கூடிய வீரமும் துணிவும் உடையவனாக இருக்கவேண்டும்; ஊக்கத்தோடு, சோம்பலும் மறதியும் இன்றிக் காலம் தாழ்த்தாமல் பணியாற்ற வேண்டும்; கல்வியாலும், கேள்வியாலும் அறியவேண்டியவற்றை அறிந்து, தன்  அனுபவத்தையும் மனத்தில்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்; கண்ணோட்டத்தோடும், தாராளகுணத்தோடும், இரக்கத்தோடு ஈகையிலும், கொடையிலும் சிறந்து விளங்க வேண்டும்; மேலும், காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் கூறாமல் இன்சொல் பேசி, இடித்துரைப்போர் கூறுவனவற்றைப் பொறுமையோடு கேட்கும் பண்புடையவனாக இருக்க வேண்டும்; தன்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரைத் துணையாகக்கொண்டு, சிறியாரோடு சேராமல், தன் சுற்றத்தாரோடு அன்போடு பழகி, அவர்களின் ஆதரவைப் பெறவேண்டும்; இடுக்கண்களைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியோடு துணிந்து செயல்பட வேண்டும்.

 

மன்னன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும்?

பொருட்பாலில் மன்னனுக்குரிய குணநலன்களைக் கூறும் வள்ளுவர், மன்னன் எப்படிச் செயாலாற்ற வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாகக் கூறுகிறார். மன்னன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் அந்தச் செயலைப் பற்றி நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும்; குறிப்பாக, அந்தச் செயலைச் செய்வதற்கேற்ற வலிமை, காலம், இடம் ஆகியவற்றை ஆராய வேண்டும்; தான் முடிவெடுத்த செயலைச் செய்வதற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தச் செயலைச் செய்வதற்குத் தேவையான பொறுப்பையும் உரிமையையும் முழுமையாக அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; பணியாட்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கு ஊதியமும் பரிசுகளும் அளிக்க வேண்டும்; நாட்டில் குற்றம் புரிபவர்களுக்கு அவர்களின் குற்றத்திற்கேற்ற தண்டனைகளை நடுவுநிலையோடு வழங்க வேண்டும்; எந்த வகையிலும் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கொடிய செயல்களைச் செய்யாமல், அவர்களுக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

 

மன்னர்களுள் சிறந்த மன்னன் யார்?

ஒரு மன்னன் மன்னர்களுள் சிங்கம் போன்றவன் – அதாவது மிகச் சிறந்த மன்னன் - என்று கருதப்பட வேண்டுமானால், அவன் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறும் உடையவனாக இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

 

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
                           (குறள் 381)

படை

ஒரு மன்னனிடம் படை இல்லை என்றால் அந்த மன்னனுடைய ஆட்சி நீடிக்காது. பகைவர்கள் அவனை எளிதில் வென்றுவிடுவார்கள்; கொலையும் செய்வார்கள். பகைவர்கள் அவனுடைய நாட்டைக் கைப்பற்றினால், அந்த நாட்டு மக்கள் துன்பத்திற்கு உள்ளாவார்கள். அந்த நாட்டின் பொருளும் வளமும் அந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாமல் பகைவர்களைச் சென்றடையும். படை ஒரு நாட்டுக்கு இன்றியமையாததாகையால், வள்ளுவர் எல்லா உறுப்புகளும் நிறைந்ததாய், இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றிதரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும் என்று கூறுகிறார்.

 

உறுப்பமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
                     (குறள் – 761)

காலத்துக்கேற்ப படையின் உறுப்புகள் மாறிக்கொண்டிருக்கும். வள்ளுவர் காலத்தில் காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை என்ற நான்கும் படையின் உறுப்புகளாக இருந்தன. இன்று பல நாடுகளில் காலாட்படை, விமானப்படை, கப்பற்படை என்று படையில் மூன்றுவகை உறுப்புகள் உள்ளன. அமெரிக்காவின் படையில் ஐந்து உறுப்புகள் உள்ளன. அவை: காலாட்படை(Infantry), கப்பற்படை (Navy), விமானப்படை (Air Force), கடற்படை (Marine), கடலோரக் காவற்படை (Coast Guard), விண்வெளிப்படை (Space Force). இக்குறளில் உள்ள “உறுப்பமைந்து” என்ற சொல், படையின் உறுப்புகளைக் குறிப்பிடாததால், அது எக்காலத்துக்கும் எந்நாட்டுக்கும் ஏற்றதாக உள்ளது.

குடி

குடி என்பது ஒரு நாட்டுக்  குடிமக்களைக் குறிக்கும். குடிமக்கள் இல்லாமல் ஒரு நாடு இல்லை. குடிமக்கள் நாட்டுப் பற்றுடையவர்களாக இருந்தால் அவர்கள் அந்த நாட்டின் நன்மைக்காக உழைப்பார்கள். குடிமக்கள் ஒற்றுமையாகவும், வறுமையில் உள்ளவர்களும் ஆதரவற்றவர்களும் தம்மிடம் வந்து கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களுக்குத் தயங்காமல் உதவி செய்பவர்களாகவும் இருந்தால், நாட்டில் அனைவரும் நலமாக வாழ்வது எளிது. நாடு என்ற அதிகாரத்தில், குறையாத விளைபொருளும், தக்க அறிஞர்களும், குறைவில்லாத செல்வம் உடைய செல்வந்தர்களும் உள்ள நாடே நாடாகும்  என்கிறார் வள்ளுவர்.

 

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
                         (குறள் 731)

இங்கு, தக்கார் என்ற சொல் என்பது அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம், மருத்துவம், கலை, கல்வி போன்ற பல துறைகளிலும் ஆற்றல் மிகுந்த அறிஞர்களையும், திறமையாகவும் கடுமையாகவும் உழைக்கும் தொழிலாளிகளையும் குறிப்பதாகக் கருதலாம். இது போன்ற அறிஞர்களும் தொழிலாளிகளும் ஒரு நாட்டில் இருந்தால், அந்த நாடு பல துறைகளிலும் சிறந்து விளங்கும்; நாடு முன்னேற்றம் அடையும்; நாட்டின் பொருளாதாரம் சிறந்தோங்கும்; பலருக்கும் வேலை வாய்ப்புகள் பெருகும். மக்கள் வளமாக வாழ்வார்கள்.

தாழ்விலாச் செல்வர் என்பது, தங்கள் செல்வத்தை முதலீடாக வைத்துத் தொழில் முனைவோர்களாகச் செயல்பட்டு, பல பொருள்களை உறபத்தி செய்து, வணிகம் செய்து, பலருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களைக் குறிப்பதாகக் கருதலாம். அத்தகைய தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும். உதாரணமாக, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள், செல்வந்தர்களின் செயல்பாடுகளால் பெருமளவில் பொருளாதர முன்னேற்றம் அடைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கூழ்

கூழ் என்ற சொல்லுக்கு மா முதலியவற்றால் குழையச் சமைத்த உணவு என்றும், பொருள் (செல்வம்) என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது. இங்கு (குறள் 381ல்) கூழ் என்ற சொல்லைப் பொருள் (செல்வம்) என்ற பொருளில்தான் வள்ளுவர் பயன்படுத்துகிறார். நாட்டைப் பாதுகாப்பதற்குப் படையும் படைக்கருவிகளும் தேவை. படைவீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கும், படைக்கருவிகளை வாங்குவதற்கும் பொருள் இன்றியமையாதது.  சிறப்பான படையும் படைக்கருவிகளும் இருந்தால்தான் போரில் வெற்றிபெற முடியும். உதாரணமாக, அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகள் தங்கள் பொருள்வளத்தால் படைவலிமை மிக்க நாடுகளாக இருப்பதால், மற்ற நாடுகள் அந்த நாடுகளின்மீது போர் தொடுப்பதற்கு அஞ்சுகின்றன.  அதனால்தான், வள்ளுவர், “பொருளை ஈட்டுக! பகைவரின் செருக்கை அடக்குவதற்குப் பொருளைவிடக் கூர்மையான ஆயுதம் வேறொன்றும் இல்லை.” என்கிறார்.

 

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
                              (குறள் 759)

 

 

நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், நாட்டை ஆட்சிபுரிவதற்கும், மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் பொருள் இன்றியமையாததுதான். மன்னனுக்குப் பொருள் இன்றியமையாதது என்று கூறும் வள்ளுவர் ஒரு மன்னனுக்குரிய வருவாய் எந்தெந்த வழிகளிலிருந்து வருகிறது என்பதையும் கூறுகிறார். மக்கள் செலுத்தும் வரி, சுங்க வரி, தோல்வியுற்ற மன்னர்களிடமிருந்து கிடைக்கும் திறை (கப்பம்) ஆகிய மூன்றும் மன்னனின் பொருள் என்பது வள்ளுவரின் கருத்து. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருள்கள்மீதான வரி (Customs Duty), வணிகர்கள் விற்பனை செய்வதற்காக ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் கொண்டு செல்லும் பொருள்கள்மீதான வரி  ஆகிய இரணடும் சுங்க வரி என்று வள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே அழைக்கப்பட்டன.

 

வருவாய் வரும் துறைகளைக் கூறும் வள்ளுவர், மக்களிடமிருந்து பெறும் வரி, சுங்க வரி, திறை ஆகியவற்றைச் சேகரிக்கும்பொழுது, அவற்றை அறவழியில் சேகரிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். தீமை ஒன்றும் இல்லாமல் சேகரிக்கப்பட்ட பொருள் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் என்பது வள்ளுவரின் கருத்து.

 

அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்.
                           (குறள் 754)

இங்கு, ”தீதின்றி வந்த பொருள்” என்பது ”அறவழியில் சேகரிக்கப்பட்ட பொருள்” என்பதைக் குறிக்கிறது. அறவழியில் சேகரித்த பொருள் இன்பத்தைத் தரும் என்று கூறும் வள்ளுவர், ஒரு மன்னன் மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேகரிப்பது, வேல் ஏந்தி நிற்கும் கள்வன்,”கொடு” என்று கேட்டுத் துன்புறுத்துவதைப் போன்றது என்கிறார்.


வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
                        (குறள் 552)

”கொடுங்கோலனாக, முறையற்ற ஆட்சி செய்து மன்னன் மக்களைத் துன்புறுத்தினால், அத்துன்பத்தால் மக்கள் வருந்தி அழுது  சிந்திய கண்ணீர் அவனுடைய செல்வத்தை  அழிக்கும் படை அல்லாவா” என்று கேட்கிறார் வள்ளுவர்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
                    (குறள் 555)

சுருங்கச் சொன்னால், நாட்டை ஆட்சி செய்வதற்கு மன்னனுக்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் இருந்தால்தான் பகைவர்களை வெல்ல முடியும். ஆனால், அந்தப் பொருள் அறவழியில் சேகரிக்கப்பட வேண்டும். அறமற்ற முறையில் மக்களைத் துன்புறுத்திப் பெற்ற பொருள் மன்னனின் செல்வத்தை அழிக்கும். பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்ஸ் நாட்டை  ஆட்சிசெய்த பதினாறாம் லூயி (Louis XVI, 1774 - 1792) என்ற மன்னனின் வாழ்க்கை வரலாறு,  மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேகரித்தால் அது மன்னனுக்குத்  தீங்கு விளைவிக்கும் என்று வள்ளுவர் கூறுவதற்கு எடுத்துக்காட்டு. பதினாறாம் லூயி, வருமானத்துக்கும் அதிகமாகச் செலவு செய்தான். மற்ற நாடுகளிலிருந்து கடன் வாங்கினான். நாட்டின் பொருளாதர நிலை சீர் குலைந்தது. அளவுக்கு மீறி வரிவிதித்து மக்களைத் துன்புறுத்தினான். மக்கள் கொதித்து எழுந்தனர்; ஃபிரெஞ்சுப் புரட்சி  தோன்றியது. பதினாறாம் லூயியும் அவன் மனைவியும் கொலைசெய்யப்பட்டார்கள். இங்கிலாந்தை ஆட்சி செய்த ஜான் (king John, 1199-1216) என்ற மன்னன் மிக அதிகமாக வரிவிதித்ததால் எழுந்த புரட்சியால் மேக்ன கார்ட்டா (Magna Carta) என்ற சாசனத்தில் கையெழுத்திட்டுத் தன் அதிகரத்தில் பெரும்பங்கைப் பாராளு மன்றத்துக்கு அளிக்க நேரிட்டது. சீனாவின் பேரரசன் கின் ஷி ஹுவாங் (Emperor Qin Shi Huang, 221- 210 BCE) என்பவன் சீனாவின் பெருஞ்சுவர் கட்டுவதற்கும், வேறு சில திட்டங்களுக்கும் தேவையான பொருளுக்காக மக்களுக்கு அதிகமான வரிவிதித்து, மக்களைத் துன்புறுத்தினான். அவன் இறந்த பிறகு, அவன் சந்ததியினரின் ஆட்சி நீடிக்கவில்லை. இவர்களைப் போல், அதிக வரிவிதித்து மக்களைக் கொடுமைப்படுத்திய கொடுங்கோலர்கள் பலரும் நிலைத்து ஆட்சிபுரியவில்லை என்பது வரலாறு கூறும் செய்தி.

பொருளை எப்படி நிர்வகிப்பது என்பதைப் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மன்னன் அல்லது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், பல வழிகளிலும் பொருளைச் சேகரிக்க வேண்டும், சேகரித்த போருளைத் திரட்ட வேண்டும், திரட்டிய பொருளைப் பாதுக்காக்க வேண்டும், பாதுகாத்தப் பொருளை மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு வகுத்து வழங்க வேண்டும் என்பது வள்ளுவரின் அறிவுரை.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
.                        (குறள் 385)

இயற்றல் என்பது பல வழிகளில் வருவாயைப் பெருக்குவதைக் குறிக்கும். உதாரணமாக, தரிசு நிலத்தை விளை நிலமாக ஆக்குவதற்கு அரசு உதவி செய்தால் அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வரி, நாட்டின் வருவாயைப் பெருக்கும். புதுத் தொழிற்சாலைகளை உருவாக்கினால், வருவாயைப் பெருக்கலாம். இதுபோல் புது வருவாய் வரும் வழிகளை ஆராய்ந்து, வருமானத்தைப் பெருக்குவதைத்தான் வள்ளுவர் இயற்றல் என்று குறிப்பிடுகிறார். ஈட்டல் என்பது பல துறைகளிலிருந்து வரும் வருமானம் அனைத்தையும் சேர்த்தல். காத்தல் என்பது, ஈட்டிய பொருளைப் பாதுகாப்பதையும், சேகரித்த பொருளை வீண் செலவு செய்யாமல் பதுகாப்பதையும் குறிக்கும். வகுத்தல் என்பது, மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பொருளைப் பங்கீடு செய்வது. இந்தக் குறளில் வள்ளுவர் கூறும் கருத்துகளுக்கும் இன்று”நிதி இயல்” (Public Fnance) என்ற துறையில் உள்ள கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பது குறிப்பிடத் தக்கது.

அமைச்சு

இங்கு, அமைச்சு என்பது அமைச்சரவையைக் குறிக்கிறது. மன்னனுக்குத் துணையாக இருந்து, அவனுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறுவதும், அவன் எடுத்த முடிவுகளைத் திறமையுடன் செயல்படுத்துவதும் அமைச்சர்களின் தொழில். அமைச்சர்கள் ஒரு செயலைச் செய்யும்பொழுது, அந்தச் செயலை நன்கு திட்டமிட்டு, அதற்கான கருவிகளைச் சேகரித்து, நடைமுறைப்படுத்தும் காலத்தைக் கணித்து, செயல்வகைகளைச் சிந்தித்துச் செய்ய வேண்டும்.  கருவி என்பது பொருள், மனிதவளம் போன்ற வளங்களைக் (ressources) குறிக்கிறது.  காலம் என்பது செயல் தொடங்கி முடிக்குங் காலத்தைக் குறிக்கிறது.

 

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
      (குறள் 631)

இக்குறள் கூறும் கருத்தை மேலாண்மை அறிஞர்கள் ஆதார வளங்களைத் திட்டமிடுதல், தொழில் வளர்ச்சிக்கான கொள்கைகள் வகுத்தல் (Resource Planning & Strategic Business Process Management) என்று குறிப்பிடுவர்.

அமைச்சர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்பொழுது, மன்னனுக்குத் துணையாக இருப்பவர்களிடமும், அவனுக்குப் பகையாக இருப்பவர்களிடமும் மன்னன் சார்பாகப் பேசவேண்டியதாக இருக்கும். சில சமயங்களில் தனி ஒருவரிடமும், சில சமயங்களில் பலர் முன்னிலையில் ஓர் அவையில் பேச வேண்டியதாகவும் இருக்கும். ஆகவே, அமைச்சர்களுக்குச் சொல்லாற்றல் தேவை. தாம் சொல்பவற்றைச் சுருக்கமாகவும், தெளிவாகவும், கேட்பவர்களும் கேட்காதவர்களும் விரும்பும் வண்ணம் கேட்பவர்களின் தகுதி அறிந்து, சொல்ல வேண்டியதை அஞ்சாமல் சொல்ல வேண்டும்.

மன்னனுடைய ஆட்சி சிறப்பாக அமைவதற்கு அமைச்சர்கள் அறிவு, ஆற்றல், மனவுறுதி ஆகியவற்றோடு குற்றமற்ற செயல்களைச் செய்து அரசனுக்குப் புகழும் நன்மையும் பயக்கும் வகையில் தம் கடமைகளைச் செய்யவேண்டும் என்ற கருத்து அமைச்சியலில் உள்ள வினைத்திட்பம், வினைத் தூய்மை, வினைசெயல்வகை என்ற அதிகாரங்களில் காணப்படுகிறது.

மொகலாயப் பேரரசன் அக்பர் முறையாகக் கல்வி கற்காதவனாக இருந்தாலும், அவனுடைய ’நவரத்னா’ என்று அழைக்கப்பட்ட அமைச்சரவையில் இருந்த ஒன்பது அமைச்சர்களின் ஆலோசனகளாலும், திறமையான செயல்களாலும் அவனுடைய ஆட்சி சிறப்பானதாக இருந்தது என்பது, ஒரு மன்னனின் சிறப்பான ஆட்சிக்கு நல்ல அமைச்சர்கள் இன்றியமையாதவர்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

 

நட்பு

ஒருவனுக்கு நல்ல நண்பர்கள் இருந்தால், அவனுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அவனுடைய நண்பர்கள் ”உடுக்கை இழந்தவன் கைபோல்,” சற்றும் தயங்காமல் உதவி செய்வார்கள். அதுபோல், ஒரு நாட்டுக்கு நட்போடு உள்ள நாடுகள் இருந்தால், அந்த நாட்டின்மீது பகைவர்கள் போர் தொடுத்தால் அல்லது ஏதாவது ஒரு கேடு ஏற்பட்டால், நட்பு நாடுகள் உதவி செய்யும். ஐரோப்பாவில் உள்ள 31 நாடுகள் ஒன்று சேர்ந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO - North Atlantaic Treaty Organization)) என்ற ஓர் அமைப்பை உருவாக்கித் தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன. அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளிடையே ஒற்றுமை நிலவுகிறது. அந்த அமைப்பைச் சாராத ஒரு நாடு அந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒரு நட்டின்மீது போர்தொடுத்தால், அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து, அந்த நாட்டுக்குத் துணையாகப் போரிடும். வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பைப்போல், ஐரோப்பாவில் 27 நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்று ஓர் அமைப்பை உருவாக்கி, அந்த நாடுகளிடையே மக்கள் போக்குவரத்து, வணிகம், போன்றவை இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒரேவகையான நாணயங்கள் பயன்பாட்டில் இருப்பது அந்த நாடுகளிடையே வணிகத்துக்கும் மக்கள் போக்குவரத்துக்கும் பேருதவியாக உள்ளது. ஒரு நாட்டுக்கு நட்பு நாடுகள் தேவை என்று வள்ளுவர் கூறும் கருத்துக்கு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு,  ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகள் சிறந்த எட்டுத்துக்காட்டாக உள்ளன.

 

அரண்

குளத்துக்கும் ஏரிக்கும் கரை இருப்பதைபோல், ஒரு நாட்டுக்கும் எல்லை வேண்டும், அந்த எல்லையைப் பாதுகாக்கப்பதற்கு அரண்கள் தேவை. நாட்டுக்கு அரண் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பல அரிய கருத்துகளை அரண் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார், ஒரு நாட்டில் அரண்கள் இல்லையென்றால்  பகைவர்கள் அந்த நாட்டிற்குள் நுழைவது எளிது. சங்க காலத்தில், பாரி என்ற குறுநில மன்னனுக்கு, அவன் நாட்டில் இருந்த பறம்புமலை, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒன்றுசேர்ந்து அவன் நாட்டின்மீது படையெடுத்தபொழுது, அவர்களைத் தடுப்பதற்கேற்ற சிறந்த அரணாக இருந்தது.  ஒரு நாட்டில் வலிமையான அரண் இல்லாவிட்டால், பகைவர்கள் மட்டுமல்லாமல், மற்ற நாட்டு மக்களும் அந்த நாட்டுக்குள் எளிதாக நுழைய முடியும். பகைவர்களைத் தடுப்பதற்கும், அயல் நாட்டு மக்கள் தம் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும் சீனாவில், ஏழாம் நூற்றாண்டில் பெருஞ்சுவர் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுப் பதினேழாம் நூற்றண்டில் முடிவடைந்தது. இன்று, அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக அயல்நாட்டு மக்கள் நுழைவதைத் தடுப்பதற்கு சுவர் எழுப்பப்படுகிறது.

 

பொருட்பாலின் சிறப்புகள்

திருக்குறள் ஒரு நீதிநூல். அது ஒரு நீதிநூலாக இருந்தாலும், அதில், “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு”, “செய்க பொருளை” என்று கூறிப் பொருளின் இன்றியமையாமையை வள்ளுவர் வலியுறுத்துகிறார். மேலும் பொருளைப் பற்றிப் பல அரிய கருத்துகளும் திருக்குறளில் உள்ளன. உலகிலுள்ள வேறு எந்த நீதிநூலிலும் காணமுடியாத அளவுக்குப் பொருளைப் பற்றி இத்துணை விரிவான மற்றும் தெளிவான கருத்துகள் அடங்கியிருப்பது பொருட்பாலின் தனிச்சிறப்பு.

ஒருவன் ஐம்பது வயதுவரை உடற்பயிற்சி மட்டுமல்லாமல் இசை, அளவியல் (Geometry), வானியல் (Astronomy), மற்றும் தர்க்கம் (Logic) போன்றவற்றைக் கற்று, நிர்வாகத்தில் அனுபவமும் பெற்ற பிறகுதான் தத்துவஞானி என்னும் தகுதியைப் பெறுகிறான் என்கிறார் கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ[4].  அவ்வாறு தத்துவஞானியான ஒருவன்தான் நாட்டின் தலைவனாக வேண்டும் என்பது பிளேட்டோவின் கருத்து.  முடியாட்சியிலும், குடியாட்சியிலும் பிளேட்ட்டோவின் கருத்துப்படி தலைவனைத் தேர்ந்தெடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. தலைவனுக்குரிய குணநலன்களையும் அவன் ஆட்சி செய்ய வேண்டிய முறையைப் பற்றியும்  பல கருத்துகளை வள்ளுவர்  கூறினாலும், அத்தகைய தகுதியுடையவன்தான்  தலைவனாக வேண்டும் என்று வள்ளுவர் கூறவில்லை. ஒருவனுக்குத் தலைவனாகும்பொழுது அத்தகைய தகுதிகள் இல்லையென்றால், தலைவனாகப் பதவி ஏற்ற பிறகு அவன் அவற்றைப் பெற்றுக்கொண்டு, அமைச்சர்களின் உதவியோடு ஆட்சிபுரியலாம் என்று வள்ளுவர் கருதுவதாகத் தோன்றுகிறது. வள்ளுவரின் கருத்து முடியாட்சியிலும் குடியாட்சியிலும் நடைமுறையில் சாத்தியமாகக் கூடிய ஒன்று. உதாரணமாக, மொகலாயப் பேரரசன் அக்பர் பதின்மூன்று வயதில் பதவிக்கு வந்து 49 ஆண்டுகள் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தான். இரண்டாம் சொபுசா(Sobhuza II) என்பவன் குழந்தையாக இருக்குபொழுதே மன்னனாகப் பதவி ஏற்று, இப்பொழுது எஸ்வண்டினி (Eswatini) என்று அழைக்கப்படும் சுவாசிலாந்து (Swaziland) என்ற நாட்டை 83 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தான். இவர்களைப்போல், சிறுவயதிலெயே பதவிக்கு வந்து சிறப்பாக ஆட்சி புரிந்தவர்கள் பலர். ஆகவே, பொருட்பாலில் மன்னனைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள் கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோவின் கருத்துகளைவிடச் சிறப்பானவையாகவும், முடியாட்சிக்கும் குடியாட்சிக்கும் ஏற்றவையாகவும் உள்ளன.

 

பொருட்பாலில் வள்ளுவர் கூறும் பல கருத்துகள் மன்னனுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஏற்றவை. உதாரணமாக கல்வி, கேள்வி, பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, சுற்றம்தழால், தெரிந்துசெயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், பொச்சாவாமை, ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை போன்ற அதிகாரங்களில் வள்ளுவர் கூறும் கருத்துகள் மக்கள் அனைவருக்கும் ஏற்றவை.

 

அறத்துபாலில் வள்ளுவரை ஒரு  தத்துவஞானியாகக் காண்கிறோம். பொருட்பாலில் பொருளாதரம்(Economics), அரசியல் அறிவியல்(Political Science), பொது நிதியியல்(Public Finance), பொது நிர்வாகம்(Public Administration), சமூகவியல்(Sociology), மேலாண்மை(Management), வேளாண்மை (Agriculture)போன்ற பல துறைகளிலும் வள்ளுவர் ஓர் அறிஞர் என்பதைக் காண்கிறோம்.

 

பொருளுக்கும் இன்பத்திற்கும் அறம் அடித்தளம் என்பது வள்ளுவரின் கருத்து. அதுபோல், அறத்திற்கும் இன்பத்திற்கும் பொருள் தேவை என்பதும் வள்ளுவரின் கருத்து. அறமும் இன்பமும் இல்லாமல் மனிதன் வாழ முடியும். ஆனால், பொருளில்லாமல் மனிதன் வாழ முடியாது என்பது குறிப்பிடத் தக்கது. 

 

பொருட்பாலில் வள்ளுவர் கூறும் கருத்துகள் அரசுக்கு மட்டுமல்லாமல், தற்கால நிறுவனங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் பொருந்துவதாக அமைந்திருப்பது[5] பொருட்பாலின் சிறப்புகளில் ஒன்று.


பின்னிணைப்பு

பொருட்பாலில் வள்ளுவர் கூறும் கருத்துகள் இன்றைய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

 

அறவழியில் பொருள் சேகரிக்க வேண்டும் என்பதைப் பொருட்பாலில் வள்ளுவர் வலியுறுத்துகிறார். தீமை ஒன்றும் இல்லாமல் சேகரிக்கப்பட்ட பொருள் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் என்பது வள்ளுவரின் கருத்து.

 

அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்.
                           (குறள் 754)

இங்கு, ”தீதின்றி வந்த பொருள்” என்பது ”அறவழியில் சேகரிக்கப்பட்ட பொருள்” என்பதைக் குறிக்கிறது. வள்ளுவரின் இந்த அறிவுரை மன்னனுக்கு மட்டுமல்லாமல்  ஒரு நிறுவனத்தின் தலைவனுக்கும் பொருந்தும். ஒரு நிறுவனம் தரமற்ற பொருள்களைத் தயாரித்து விற்பதும், கொடுக்க வேண்டிய அளவுக்குக் குறைவாகக் கொடுப்பதும், அதிக விலைக்குப் பொருள்களை விற்பதும் நுகர்வோருக்குத் தீங்கு விளைவிப்பதால் அவை அந்த நிறுவனத்தின் அறமற்ற செயல்களாகும். அத்தகைய செய்களைச் செய்யாமல் நிறுவனம் பொருளீட்ட வேண்டும் என்பதை வள்ளுவர் நிறுவனங்களுக்குக் கூறும் அறிவுரையாகக் கருதலாம்.

”கொடுங்கோலனாக, முறையற்ற ஆட்சி செய்து மன்னன் மக்களைத் துன்புறுத்தினால், அத்துன்பத்தால் மக்கள் வருந்தி அழுது  சிந்திய கண்ணீர் அவனுடைய செல்வத்தை  அழிக்கும் படை அல்லாவா” என்று கேட்கிறார் வள்ளுவர்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
                    (குறள் 555)

இந்தக் குறளில் வள்ளுவர் கூறும் எச்சரிக்கை தற்கால நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒரு நிறுவனம் நுகர்வோருக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களைத் தயாரித்து விற்றாலோ, எந்த வகையிலாவது நுகர்வோரை ஏமாற்றினாலோ, அந்த நிறுவனத்தின்மீது அரசு நடவடிக்கை எடுத்துத் தண்டனைகளை விதிக்கும். நுகர்வோர் அந்த நிறுவனத்தின்  பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பார்கள். அதனால், அந்த நிறுவனத்தின் வருமானம் குறையும். வருமானம் குறைந்தால், அந்த நிறுவனம் நிலைத்து நீடிக்க முடியாது.

படை, குடி, கூழ் (செல்வம்), அமைச்சு, நட்பு மற்றும் அரணும் உடைய மன்னன் மன்னர்களுள் சிங்கம் போன்றவன் என்கிறார் வள்ளுவர்.

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
      (குறள் 381)

ஒரு மன்னன் சிறப்பானவனாகக் கருதப்பட வேண்டுமானால் அவன் படை, குடி, செல்வம், அமச்சர்கள், நட்பு நாடுகள் மற்றும் அரண் ஆகிய ஆறும் உடையவனாக இருக்க வேண்டும் என்று  வள்ளுவர் கூறும் கருத்து, தற்காலத்தில் ஒரு நிறுவனத்தின் தலைவனுக்கும் பொருத்தமாக இருக்கிறது என்பது வியக்கத் தக்கதாக உள்ளது.

மன்னன்: நாட்டிற்கு  மன்னன் – நிறுவனத்திற்குத் தலைவன்(President/CEO)

ஒரு நாட்டிற்குத் தலைவன் மன்னன். நிறுவனத்தில் மன்னனுக்கு இணையாக இருப்பவன் அந்த  நிறுவனத்தின் தலைவன் (President/CEO).

படை:   நாட்டிற்கு இராணுவம் – நிறுவனத்திற்கு வழக்கறிஞர்கள் மற்றும் சந்தைப்படுத்தும் உத்திகளில் வல்லுநர்கள்(Marketing Strategists)

 ஒரு நாட்டிற்குப் பகைநாடுகள் இருப்பதைப்போல், ஒரு நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களை அந்த நிறுவனத்தின் பகைநிறுவனங்களாகக் கருதலாம். ஒரு நிறுவனத்தின் பொருள்களைப்போல் ஒரு போட்டி நிறுவனம் பொருள் தயாரித்து அதைக் குறைந்த விலைக்கு விற்றால் அந்த நிறுவனத்தின் வருமானம் குறையும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் பகைநிறுவனத்தின் நுகர்வோராக மாறக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர்கள், பகைநிறுவனம் தங்கள் நிறுவனத்தின் காப்புரிமை உரிமைகளை(காப்புரிமை உரிமைகள் – Patent Rights) மீறியதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வார்கள். பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் உத்திகளில் வல்லுநர்கள் பகை நிறுவனத்தைப் போட்டியில் தோற்கடிப்பதற்கான தந்திரங்களைக் கையாள்வார்கள். ஆகவே, வழக்கறிஞர்களையும் சந்தைப்படுத்தும் உத்திகளில்  வல்லுநர்களையும் ஒரு நிறுவனத்தின் படையாகக் கருதலாம்.

குடி: நாட்டிற்குக் குடிமக்கள் – நிறுவனத்திற்கு நுகர்வோர்

ஒரு மன்னனுக்கு அவன் நாட்டு மக்கள் குடிமக்கள். ஒரு நிறுவனத்தின் தலைவனுக்கு அவனுடைய நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துபவர்களை (நுகர்வோரை) குடிமக்களாகக் கருதலாம்.

 

கூழ் (செல்வம்): ஒரு நாட்டிற்குச் செல்வம் – நிறுவனத்திற்கும் செல்வம்

ஒரு நாட்டுக்குச் செல்வம் இன்றியமையாதது. அதுபோல் ஒரு நிறுவனத்துக்கும் செல்வம் இன்றியமையாதது. ஓர் அரசனுக்கு மக்கள் செலுத்தும்  வரி, சுங்க வரி, தோல்வியுற்ற பகைவர்கள் கொடுக்கும் திறை போன்ற வகைகளில் வருமானம் வருவதைப்போல, பொருள்களை  விற்பதினால் வரும் இலாபம், நிறுவனத்தின் பங்குகளை விற்பதினால் கிடைக்கும் வருமானம், வங்கியில் உள்ள பணத்துக்கு வட்டி போன்ற பல  வகைகளில் ஒரு நிறுவனத்துக்கு வருமானம் வரலாம். ஒரு மன்னன் பொருளை இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் ஆகியவற்றைச்  செய்வதைப்போல், ஒரு நிறுவனத்தின் தலைவனும் பல வகைகளிலும் பொருளை இயற்ற வேண்டும்; இயற்றிய பொருளைச் சேர்க்க வேண்டும்; சேர்த்த பொருளைப் பாதுககாக்க வேண்டும்; பாதுகாத்தப் பொருளை நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், பங்குதாரர்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவும் பயன்படுத்த வேண்டும். செல்வத்தை வகுத்துப் பங்கீடு செய்வதில் ஓர்  அரசனின் நோக்கத்திற்கும், ஒரு நிறுவனத்தின் தலைவனின் நோக்கத்திற்கும் ஒரு  வேற்றுமை உள்ளது. மன்னன் செல்வத்தைக் குடிமக்களின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும். ஆனால், நிறுவனத்தின் தலைவன் நுகர்வோரின் நலத்திற்காகப் பயன்படுத்த வேண்டியதில்லை.

 

அமைச்சு: நாட்டிற்கு அமைச்சர்கள் – நிறுவனத்திற்குத் துணைத்தலைவர்கள்
மன்னன் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்தும் அமைச்சர்களைப்போல், நிறுவனத்தின் தலைவரின் முடிவுகளைச் செயல்படுத்துபவர்கள் அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர்கள் (Vice Presidents). ஆகவே, ஒரு நிறுவனத்தின் துணைத்தலைவர்களை மன்னனின் அமைச்சர்களுக்கு இணையானவர்களாகக் கருதலாம்.

நட்பு: நாட்டிற்கு நட்பு நாடுகள் – நிறுவனக்களுக்கு நட்பு நிறுவனங்கள்

ஒரு நாட்டிற்கு நட்பு நாடுகள் இருந்தால் அந்த நாட்டைப் பகைவர்கள் தாக்கினால் பகைநாடுகள் அந்த நாட்டிற்குத் துணையாகப் போரிடும். ஒரு நாட்டிற்கு இயற்கைச் சீற்றங்களால் கேடு விளைந்தால் நட்பு நாடுகள் உதவி செய்யும். நாட்டிற்கு நட்பு நாடுகள் இருப்பதைப்போல் ஒரு நிறுவனத்திற்கு, அந்த நிறுவனத்திற்குத் தேவையான பொருள்களை  வழங்கும் நிறுவனங்கள் (Suppliers), ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் (contractors) , நிறுவனத்திடமிருந்து பொருளை வாங்கிச் சந்தைக்குக் கொண்டு செல்லும் இடைநிலை வணிக நிறுவனங்கள்(Distributors), நிறுவனத்தோடு தொடர்புள்ள வங்கிகள் ஆகியவற்றை நட்பு நிறுவனங்களாகக் கருதலாம்.

 

அரண்: நாட்டிற்கு மலைகள், காடுகள், கடல்கள், மதிற்சுவர்கள் - நிறுவனங்களுக்குக்  காப்பீடு, காப்புரிமைகள், பாதுகாப்புக் கருவிகள் போன்றவை

ஒரு நாட்டிற்கு மலைகள், கடல்கள், காடுகள் மதிற்சுவர்கள் போன்றவை வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து நாட்டை பாதுகாக்கின்றன. இதேபோல், நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அமைப்புகள் தேவைப்படுகின்றன. இயற்கை அரண்களுக்குப் பதிலாக, நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது வணிகக் காப்பீடு (Business Insurance), காப்புரிமைகள்(copyrights, Patent rights), பகைமை கொண்ட நிறுவனங்களின் கையகப்படுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் விதிமுறைகள்(provisons against hostile takeover), மேலும் நிறுவன வளாகங்களையும் சொத்துகளையும் பாதுகாக்கும் பாதுகாப்பு அமைப்புகள்( security devices)  போன்றவை  ஆகும்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த வள்ளுவர் மன்னனின் குணநலன்களைப் பற்றியும், அவன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் திருக்குறளில் கூறும் கருத்துகள் தற்கால நிறுவனத்தின் தலைவனுக்கும் பொருத்தமானவையாக உள்ளன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக உள்ளது. இத்தகைய சிறப்புகளால்தான் திருக்குறள் எக்காலத்துக்கும் எந்நாட்டவர்க்கும் ஏற்ற நூலாகக் கருதப்படுகிறது.



[1]. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர். (நாலடியார் 114)

உலகில் நில்லைபெற்றிருப்பவை
 அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று. வற்றில் நடுவில் உள்ளதாகிய பொருள் ஒருவனுக்கு இருக்குமாயின், அறம் செய்தலும், இன்பம் துய்த்தலும் பெறலாகும். அந்தப் பொருள் இல்லாதவன் உலை நீரில் இட்டுச் சுடவைத்த ஆமையைப் போன்ற  துயரம் அடைவான். 

 [2] . புறநானூற்றுப் பாடல் 191

[3]. நெல்லும் உயிர்அன்றே; நீரும் உயிர்அன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யான்உயிர் என்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

                                (மோசிகீரனார், புறநானூறு, 186)

 

பொருள்: இவ்வுலகுக்கு நெல்லும் நீரும் உயிரல்ல. இவ்வுலகம் மன்னனையே உயிராக உடையது. அதனால், தான் இந்தப் பரந்த உலகுக்கு உயிர் (போன்றவன்) என்பதை அறிந்து கொள்வது (மிகுந்த வேல்களுடன் கூடிய படைகளையுடைய) மன்னனின் கடமையாகும்.

 [4] . Plato, Republic, trans. C. D. C. Reeve (Indianapolis: Hackett, 2004), 473c–d.

[5] . பொருடபாலில் வள்ளுவர் கூறும் கருத்துகள் எவ்வாறு தற்கால நிறுவனங்களுக்கும் ஏற்றவையாக உள்ளன என்பதைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் பின்னிணைப்பில் கணலாம்.

No comments:

Post a Comment