Statcounter

Tuesday, August 18, 2020

வள்ளுவர் பார்வையில் நட்பு

 

வள்ளுவர் பார்வையில் நட்பு

கிரேக்கத்தைச் சார்ந்த அரிஸ்டாட்டில் (Aristotle, 384 B.C. - 322 B.C)  என்ற தத்துவஞானி, “மனிதன் ஒரு சமூக விலங்கு. எவனொருவன் சமூகத்தோடு தொடர்பில்லாமல் வாழ்கிறானோ, அவன் ஒரு விலங்கு அல்லது கடவுள்.”, என்று கூறுகிறார். எல்லா விலங்குகளும் தனித்து வாழ்பவை அல்ல. பல விலங்குகள் தங்கள் சமூகத்தோடு கூடி வாழும் இயல்புடையவை என்று கடந்த நூற்றாண்டில் விலங்குகளின் வாழ்வியலை ஆராய்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக, ஒட்டகச்சிவிங்கி, யானை, மான், சிம்பன்சி (Chimpanzee), டால்ஃபின் (Dolphin), வௌவால் ஆகிய விலங்குகளும் வேறு சில விலங்குகளும் தங்கள் இனத்தோடு கூடி வாழும் இயல்புடையவை என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தச் செய்தியை அரிஸ்டாட்டில் அறிந்திருந்தால், “மனிதன் ஒரு சமூக விலங்கு. சமுதாயத்தோடு தொடர்பில்லாமல் வாழ்பவர்கள் கூட்டமாகக் கூடி வாழும் விலங்குகளைப் பார்த்து, சமூகத்தோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறியிருப்பார் என்று தோன்றுகிறது.

மனிதன் சமூகத்தோடு கூடி வாழும்பொழுது சிலரோடு நட்பு கொள்கிறான். மனிதர்களுக்கிடையே தோன்றும் நட்பைப் பற்றி ஆராய்ச்சி செய்த மேலைநாட்டு அறிஞர்களுள் கிரேக்கத்தைச் சார்ந்த பிளேடொ (Plato, 428/427 BC – 348/347 BC)) மற்றும்  அரிஸ்டாடில், ரோமாபுரியைச் சார்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (Marcus Tullius Cicero, 106 BC – 43 BC), ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த மிச்சல் ஐக்யூம் டி மாண்டெய்ன் (Michel Eyquem de Montaigne, 1533 – 1592), இங்கிலாந்தைச் சார்ந்த சர் ஃபிரேன்சிஸ் பேகன்  (Sir Francis Bacon, 1561 – 1626) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களைப்போல் வள்ளுவரும் நட்பைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறார். நட்பைப் பற்றி ஏறத்தாழ 70 குறட்பாக்களில் வள்ளுவர் தன் கருத்தைக் கூறுகிறார். நட்பைப் பற்றி இந்த மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களையும் வள்ளுவரின் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த பேராசிரியர் ப. மருதநாயகம், “நட்பைப் பற்றிப் பேசும் மேலை அறிஞர்களுள் ஓரளவிற்கு வள்ளுவருக்கு நெருக்கமானவர் அரிஸ்டாட்டிலே.”, என்று கூறுகிறார்.

நட்பைப் பற்றி அரிஸ்டாட்டில்

நட்பை மூன்று வகையாக அரிஸ்டாட்டில் பிரிக்கிறார். அந்த மூன்று வகையான நட்புகள்: மகிழ்ச்சிக்காக நட்பு, பயன் கருதும் நட்பு, அறம் சார்ந்த நட்பு. மகிழ்ச்சிக்காக நட்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதையே நோக்கமாகக் கொண்ட நட்பு. பயன் கருதும் நட்பு என்பது நட்பினால் என்ன பயனடையலாம் என்பதையே நோக்கமாகக் கொண்ட நட்பு. அறம் சார்ந்த நட்பு என்பது நண்பர்களின் அறிவு மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடைப்படையில் தொடங்கி வளரும் நட்பு. இந்த மூன்று வகையான நட்புகளில், மகிழ்ச்சி மற்றும் பயன் கருதும் நட்பு வகைகள் நிரந்தரமானவையாக இருக்க வாய்ப்பில்லை. மகிழ்ச்சியும் பயனும் குறைந்தால் அந்த நட்புகள் முடிவடைந்துவிடும். ஆனால், அறம் சார்ந்த நட்பு நல்லவர்களுக்கிடையே நல்லொழுக்கம் மற்றும் அறிவு சார்ந்ததாக இருப்பதால் அது முழுமையான, நிரந்தரமான நட்பு என்கிறார் அரிஸ்டாட்டில். இந்த மூன்று வகையான நட்புகளில் அறம் சார்ந்த நட்பே சிறந்த நட்பு என்பது அரிஸ்டாட்டிலின் கருத்து. வள்ளுவரும் அறம் சார்ந்த நட்பையே மிகச் சிறந்த நட்பாகவும், மகிழ்ச்சிக்கான நட்பையும், பயன் கருதும் நட்பையும் தீய நட்பாகவும் கருதுகிறார். நட்பைப் பற்றி வள்ளுவரின் கருத்துக்களைப் பார்ப்போம்.

 

நல்ல நட்பின் இலக்கணமும் சிறப்பும்

நட்பைப் பற்றி அரிஸ்டாட்டிலுடைய கருத்துக்களுக்கும் வள்ளுவருடைய கருத்துக்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், வள்ளுவருடைய கருத்துக்கள் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களைவிட முழுமையானதாகவும் விரிவானதாகவும் உள்ளன. பிறரிடம் அன்பு செலுத்துவதுதான் மனித வாழ்க்கையின் நோக்கமும் பயனும் (குறள் – 73) என்கிறார் வள்ளுவர். மற்றும், அன்பின்வழி நிற்பவன்தான் உயிருள்ள மனிதன்; அன்பில்லாத மனிதன் வெறும் எலும்பும் தோலும் போர்த்த உடம்பு (குறள் – 80) என்றும் வள்ளுவர் கூறுகிறார். நாம் அன்புடையவராக இருந்தால், மற்றவர்களுக்கு நம்மோடு பழக வேண்டும் என்ற ஆர்வத்தை நம்முடைய அன்பு உண்டாக்கும். அந்த ஆர்வம் நட்பு என்னும் சிறப்பை, நாம் தேடிப்; போகாமல் தானே நம்மை வந்தடையச் செய்யும். (குறள் – 74). அத்தகைய அன்புதான் நட்புக்கு அடித்தளமாக அமைகிறது என்பது வள்ளுவரின் கருத்து.

 

அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு

என்போடு இயந்த தொடர்பு.                                                         (குறள் – 73)

 

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.                                                       (குறள் – 80)

 

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.                                                       (குறள் – 74)

 

நல்ல நட்பு என்பது அன்பின் அடிப்படையில் நல்லொழுக்கம் உடையவர்களின் நட்பு. ஒரு நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வள்ளுவர் சில அழகான உவமைகளைக் கையாளுகிறார். நல்ல நட்பு என்பது நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மையது.  படிக்கும்பொழுதெல்லாம் ஒரு நல்ல நூல் இனிமையும் நன்மையும் தருவதுபோல், பழகப்பழக, நல்ல நட்பு நண்பர்களுக்கு இனிமையும் நன்மையும் பயக்கும் (குறள் – 783). நட்பு நல்லதாக இல்லாவிட்டால் அது நாளுக்குநாள் குறைந்துகொண்டே போய்க் கடைசியில் இல்லாமலே போய்விடும். எப்படி வளர்பிறையில் திங்கள் வளர்ந்துகொண்டிருக்கிறதோ அதுபோல் நல்லவர்களின் நட்பு வளர்ந்துகொண்டிருக்கும். எப்படித் தேய்பிறையில் நாளுக்குநாள் திங்கள் குறைந்து தோற்றமளிக்கிறதோ அதுபோல் அறிவில்லாதவர்களின் நட்பு குறைந்துக்கோண்டே போய்ச் சிலகாலத்திற்குப் பிறகு அவர்களின் நட்பு முறிந்து போகும் (குறள் – 782).  

 

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.                                                           (குறள் – 783)

 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.                                                  (குறள் – 782)

 

இது போன்ற கருத்து நாலடியார் பாடல் ஒன்றிலும் காணப்படுகிறது. அப்பாடலில், “கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிராக அடியிலிருந்து தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக்கப்படும்.” என்ற கருத்து கூறப்பட்டிருக்கிறது.  

 

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு

எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்

மதுரம் இலாளர் தொடர்பு.                                                 (நாலடியார் – 211)

 

 

நல்ல நட்பு உடைய நண்பர்களில் ஒருவர் ஒரு துன்பம் அடைந்தால், அவருடைய நண்பர் அந்தத் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகக் கருதித் தன்னால் இயன்ற உதவியை எவ்விதத் தயக்கமும் இன்றி உடனே செய்வார். இந்தக் கருத்தை ஒரு சுவையான உவமையின் உதவியால் வள்ளுவர் விளக்குகிறார். ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவிழ்ந்து நெகிழ்ந்து விழும்பொழுது, அதைச் சீர்செய்வதற்கு எப்படி அவனுடைய கை விரைந்து சென்று உதவுகிறதோ அதுபோல் தன் நண்பனுக்குக் கேடு வந்தால் உடனே சென்று உதவி அளிப்பதுதான் நல்ல நட்புக்கு அடையாளம் (குறள் – 788) என்கிறார் வள்ளுவர்.  மேலும், அழிவைத் தருகின்ற தீயவழிகளிலிருந்து தன் நண்பனை விலக்கி, அவனை நல்ல நெறியில் செலுத்தி, அவன் துன்புறும்போது தானும் அவனோடு சேர்ந்து அத்துன்பத்தை அனுபவிப்பதே சிறந்த நட்புக்கு அடையாளம் என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 787).

 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.                                            (குறள் – 788)

 

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.                                     (குறள் – 787)

 

நல்ல நண்பர்களாக இருப்பவர்கள், ஒருவர் துன்பத்தை மற்றொருவர் பகிர்ந்துகொள்வதற்கு உதாரணமாக ஒரு கதை ஒன்று கிரேக்கத்தில் வழக்கில் உள்ளது. கிரேக்கத் தத்துவஞானி பித்தகோரஸின் (Pythagoras) சீடர்களாக இருந்த டாமன் (Damon) மற்றும் பித்தியஸ் (Pythias) ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் டியோனிசியஸ் (Dionysius) என்ற கொடுங்கோலன் ஆட்சி செய்துகொண்டிருக்கும் சிரக்குயூஸ் (Syracuse) என்னும் பகுதிக்குச் சென்று, அவன் ஆட்சியை எதிர்த்துப் போராடினார்கள்.  டியோனிசியஸுக்கு எதிராகச் சதி செய்ததாக பித்தியஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றத்திற்குத் தண்டனையாக, டியோனிசியஸ் பித்தியஸுக்கு மரண தண்டனை விதித்தான்.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை பித்தியஸ் ஏற்றுக்கொண்டான். ஆனால், வயதான தன் தாயைப் பார்க்கவும், அவருக்குச் சில உதவிகளைச் செய்வதற்காகவும், தான் தன்னுடைய தாய் இருக்கும் ஊருக்குச் சென்று அவரைப் பார்க்க அனுமதி வேண்டும் என்று பித்தியஸ் டியோனிசியஸிடம் வேண்டினான். தன் தாயைப் பார்த்துவிட்டு, உடனே திரும்பிவந்து கொலைத்தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினான். பித்தியஸை விடுவித்தால், அவன் ஒருபோதும் திரும்ப மாட்டான் என்று டியோனிசியஸ்  நினைத்தான். ஆகவே, பித்தியஸின் கோரிக்கையை டியோனீசியஸ் ஏற்க மறுத்துவிட்டான். பித்தியஸ் இல்லாதபொழுது, அவனுக்குப் பதிலாகத் தான் சிறையில் இருப்பதாகவும். ஒருகால், பித்தியஸ் திரும்பி வராவிட்டால், அவனுக்குப் பதிலாகக் குறிப்பிட்ட நாளில் தான் கொலைத் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் டாமன் டியோனிசியஸிடம் உறுதி அளித்தான். டாமனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, டியோனிசியஸ் பித்தியஸை விடுதலை செய்தான்.

குறிப்பிட்ட நாளில் பித்தியஸ் திரும்பிவரவில்லை.  டாமனை தூக்கிலிடுமாறு காவலாளிகளுக்கு  டியோனிசியஸ் உத்தரவிட்டான். ஆனால் மரணதண்டனை செய்பவர் டாமனைத் தூக்கிலிடப் போகும்பொழுது, பித்தியஸ் ஓடோடி வந்தான். தான் கடற்கொள்ளையர்களிடம் பிடிபட்டதாகவும், அவர்கள் தன்னைக் கடலில் எறிந்ததாகவும், தான் கரைக்கு நீந்த வேண்டியதாக இருந்ததாகவும், சிரக்குயூஸுக்கு எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக வந்தாகவும் கூறி, பித்தியஸ் டாமனிடம் மன்னிப்புக் கேட்டான். டாமனுக்கும் பித்தியஸுக்கும் இடையிலான நட்பைக் கண்டு டியோனிசியஸ் வியப்படைந்தான்.  அவன் பித்தியஸுக்கும்  டாமனுக்கும் மன்னிப்பு வழங்கினான். இந்த நிகழ்வின் அடிப்படையில், இரண்டு நண்பர்களிடையே உள்ள  நல்ல நெருங்கிய நட்பு, “டாமன் மற்றும் பித்தியஸ்  நட்பு” என்று அழைக்கப்படுகிறது[1].

நல்ல நெருங்கிய நண்பர்கள் நெருங்கிப் பழக வேண்டுமா என்ற கேள்வி எழுவது இயற்கை. ஒருவருடன் ஒருவர் நட்புகொள்வதற்கு ஒரே இடத்தில் கூடி ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்றும், அவர்கள் அடிக்கடி சந்தித்துப் பழக வேண்டியதில்லை என்றும், அவர்களிடம் ஒத்த உணர்ச்சி இருக்குமானால், அவர்களுடைய மனம் பொருந்திய உணர்ச்சியே நட்பு என்னும் உரிமையைப் பயக்கும் என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 785).

 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்.                                                     (குறள் – 785)

 

நேரடியாகச் சந்திக்காமலும் கூடிப் பழகாமலும் நல்ல நண்பர்களாக இருப்பதற்கு இக்காலத்தில் முகநூல் (Facebook), கீச்சகம் (Tweeter) போன்ற தொழில்நுட்பக் கருவிகள் பேருதவியாக உள்ளன. சங்க காலத்தில், கூடிப் பழகாமல் நல்ல நெருங்கிய நண்பர்களாகக் கோபெருஞ்சோழன் என்ற சோழமன்னனும் பிசிராந்தையார் என்ற புலவரும் இருந்ததாகப் புறநானூற்றிலிருந்து தெரிகிறது.

 

கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் சோழநாட்டை ஆண்டுவந்தான். ஆந்தையார் என்ற புலவர் பாண்டிய நாட்டிலிருந்த பிசிர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தார். கோபெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் வேறுவேறு நாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் கருதொருமித்தவர்களாக இருந்ததால், நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் எந்த அளவுக்கு நெருக்காமான நண்பர்களாக இருந்தார்கள் என்றால், பிசிராந்தையார் தன்னைக் கோபெருஞ்சோழனாகவே கருதினார். ஒருபாடலில், “நுங்கோ யார்என வினவின் எங்கோக் கோழி யோனே கோப்பெருஞ் சோழன்” என்று கூறுவேன் என்கிறார்[2]. அதாவது, “என் பெயர் என்னவென்று எவராவது கேட்டால், என் பெயர் உறையூரில் வாழும் கோப்பெருஞ்சோழன் என்று கூறுவேன்.” என்று பிசிராந்தையார் கூறுகிறார். ஒரு சமயம், கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்குமிடையே தோன்றிய பகையால், அவர்களுக்கிடையே போர் மூண்டது. பொத்தியார் என்ற புலவர் கூறிய அறிவுரைக்கேற்ப, கோப்பெருஞ்சோழன் போர் செய்வதை நிறுத்திவிட்டான். ஆனால், தன் மகன்களோடு போர் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டதை நினைத்து, வெட்கப்பட்டு, வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்தான். அவ்வாறு அவன் வடக்கிருக்கும்பொழுது, அவனைக் காணப் பிசிராந்தையார் வரவில்லை. அவனோடு இருந்தவர்கள், ”பிசிரந்தையார் வரவில்லையே என்பதைக் குறித்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம் அவர் வேறு நாட்டில் இருப்பதால் அவர் இப்பொழுது இங்கு வரும் வாய்ப்பில்லை.” என்று அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால், கோப்பெருஞ்சோழன்,

 

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

பிசிரோன் என்பஎன் உயிர்ஓம் புநனே;

செல்வக் காலை நிற்பினும்

அல்லற் காலை நில்லலன் மன்னே.[3]

என்றும்,

 

இன்னதோர் காலை நில்லலன்;

இன்னே வருகுவன்; ஒழிக்கஅவற்கு இடமே![4]

 

என்றும் கூறுகிறான். அதாவது, ”தென்திசையில் உள்ள பொதிகை மலையையுடைய பாண்டிய நன்னாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் உள்ளவர் ஆந்தையார்.  அவர் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும் நான் துன்பத்தில் இருக்கும்பொழுது என்னைப் பார்க்க வராமல் இருக்கமாட்டார். அவர் இப்பொழுதே வருவார்; அவருக்கு ஓரிடம் ஒதுக்கி வையுங்கள்.”, என்று கோப்பெருஞ்சோழன் கூறுகிறான். அவன் இறந்த பிறகு, பிசிராந்தையார் வந்ததாகவும், பின்னர் அவரும் வடக்கிருந்து உயிர் துறந்தாகவும் கூறப்படுகிறது[5]. நெருங்கிப் பழகாமல் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் என்பதற்கு, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு ஒரு எடுத்துக்காட்டு.

நட்பு தங்கியிருக்கும் மிக உயர்வான இடம் எதுவென்றால், மனம் சுழற்சி இன்றி, இயலும் வழியாலெல்லாம் நண்பர் தளர்ச்சியுற்றபோது தாங்கி நிற்கும் மனவலிமை பொருந்திய நிலையேயாகும் (குறள் – 789) என்று வள்ளுவர் கூறுகிறார்.

 

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.                                          (குறள் – 789)

.                                

’கொட்பு’ என்ற சொல்லுக்கு ’மனச் சுழற்சி’ என்று பொருள். ’கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை’ என்பது உதவி செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து, மனத்தைக் குழப்பிக்கொள்ளாமல், இயன்ற வழியெல்லாம் தன் நண்பருக்கு உதவி செய்வதைக் குறிக்கிறது. தன்னுடைய நண்பருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், சிலரால் அந்த உதவியைச் செய்யலாமா வேண்டாமா என்று பலமுறை சிந்தித்த பிறகுதான் செய்ய முடியும். எனக்கு மிக நெருங்கிய உறவினர் ஒருவர் இருந்தார். அவர் வயதில் மூத்தவர்; அறிவிற் சிறந்தவர்; ஆன்மீகக் கருத்துக்களை நன்கு அறிந்தவர்.  திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களை நன்கு கற்றவர். அவரைச் சந்தித்து உரையாடுவதற்கு, பலரும் அவர் வீட்டுக்கு வருவது வழக்கம்.  ஒருநாள், அவருடைய பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.  அவரைப் பார்க்க அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்தார். வந்த நண்பர், “ஐயா, பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமானது குறித்து நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். ஆனாலும், உங்கள் முகத்தில் ஒரு கவலை தோன்றுகிறது. அது ஏன்?”, என்று கேட்டார். அந்தப் பெரியவர், “திருமணம் குறித்து மகிழ்ச்சிதான். ஆனால், அதற்குத் தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். வேறொன்றுமில்ல.” என்றார். பெரியவர் பேச்சைக் கேட்டவுடன், அவரைப் பார்க்க வந்த நண்பர், அவருடைய சீருந்துக்குச் சென்று காசோலைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்தார். நான்கு காசோலைகளில், தொகையும் தேதியும் குறிப்பிடாமல், அந்தப் பெரியவரின் பெயரை மட்டும் எழுதி, கையெழுத்திட்டு, “இதை வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணம் என்னிடம் இருப்பதைவிட, உங்களுக்குப் பயன்பட்டால், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்” என்று கூறி, அந்த நான்கு கசோலைகளை பெரியவரிடம் கொடுத்தார். பெரியவருக்கு அந்தக் காசோலைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி அவற்றைப் பெற்றுக்கொண்டார். பெரியவரின் பெண்ணுக்குத் திருமணம் இனிதே நடைபெற்றது. சில மாதங்களில், பெரியவர் அவர் நண்பருடைய வங்கியிலிருந்து எடுத்துக்கொண்ட தொகையை நண்பரிடம் திருப்பிக் கொடுத்தார். பெரியவரின் நண்பர், அந்தப் பெரியவருக்கு, எவ்விதத் தயக்கமும் இல்லாமல், அவர் கேட்காமலேயே அவருக்கு உதவி செய்தார். இது “கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை” என்று வள்ளுவர் கூறுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

 

நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமாகக் கூறும் வள்ளுவர் நல்ல நட்பு எப்படி இருக்கக் கூடாது என்றும் கூறுகிறார். முகம் மலரும்படியாக நட்புகொள்வது நட்பாகாது; உள்ளுக்குள் மனம் மகிழும்படியாகப் பழகி நட்புக்கொள்வதே நட்பாகும்(குறள் – 786). ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது சிரித்துப்பேசி மகிழ்வதற்கன்று. நண்பர் தகாத செயலை செய்யத் தொடங்குமுன் தாமே முன்னதாகச் சென்று தயங்காமல் கடிந்து கூறித் திருத்துதற் பொருட்டாகும் (குறள் – 784).

 

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.                                                           (குறள் – 786)

 

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.                         (குறள் – 784)

 

நண்பன் தவறு செய்தால் அவனைத் திருத்த வேண்டும் என்ற கருத்தை கிரேக்கத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியரான புளூடார்க் (Plutarch, 45AD – 120AD) என்பவரும் கூறியுள்ளார். “நான் மாறும்போது என்னுடன் மாறி. நான் தலையசைக்கும்போது என்னுடன் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.  என் நிழல் அதைச் சிறப்பாக செய்கிறது.” என்கிறார் புளுடார்க்.

 

நல்ல நட்பின் இயல்பைக் கூறும் வள்ளுவர் அதன் சிறப்பையும் கூறத் தவறவில்லை. நட்பைப்போல், ஒருவன் தனக்குச் செய்துகொள்வதற்கு அருமையான செயல் வேறொன்றுமில்லை என்றும், ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பாதுகாப்பாக அமைவது நட்பைபோல் வேறொன்றுமில்லை என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 781).

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.                                            (குறள் – 781)

 

நட்பாராய்தல்

நம்முடைய பெற்றோர், குழந்தைகள், உடன்பிறந்தோர் ஆகியோரையும் வேறு சில உறவினர்களையும்  நாம் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், நண்பர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்; தெர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்கள் ஒருவரோடு ஒருவர் தங்களுடைய நம்பிக்கைகளை, மறைகளை (மறை – இரகசியம்), கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள். ஆகவே, ஒருவரை நன்றாக ஆரய்ந்த பின்னர்தான் அவரை நண்பராக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் வள்ளுவர் உறுதியான நம்பிக்கை உடையவராகக் காணப்படுகிறார். ஆராயாமல் ஒருவரோடு நட்புக்கொள்வதால் வரும் கேடுகளைப் பற்றியும், எப்படி ஆராய வேண்டும் என்பதைப் பற்றியும் வள்ளுவர் நட்பாராய்தல் என்ற அதிகாரத்தில் விரிவாகக் கூறுகிறார்.

 

ஒருவரை நன்கு ஆராயாமல் நண்பராக்கிக்கொள்வது பல கேடுகளை விளைவிக்கும். உதாரணமாக, மக்களாட்சி நிலவும் நாடுகளில், தேர்தல் காலங்களில், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, ஆராயாமல் கூட்டணி அமைத்துக்கொண்டு, வெற்றிபெற்ற பிறகு, கட்சிகளுக்கிடையே அல்லது கட்சித் தலைவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் கூட்டணி கலைந்து கட்சிகள் ஆட்சியை இழப்பதை நாம் பல நாடுகளில் பல சமயங்களில் காண்கிறோம். தொழிற்துறையில் உள்ளவர்கள் ஆராயமல் நம்பத் தகாதவர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வதால், பல சிக்கல்கள் ஏற்படுவது இயற்கை. அரசியல், தொழில் ஆகியவற்றில் மட்டுமல்லாமல் தனிமனிதர்களும் ஒருவரோடு நட்புக்கொள்வதற்குமுன் அவரைப் பற்றி நன்கு ஆராய வேண்டும். ஒருவரோடு நண்பரான பிறகு, அவருடைய நட்பிலிருந்து விலகுவது எளிதன்று. ஆராயாமல் நட்புச் செய்வதைப்போலக் கேடு தருவது வேறொன்றும் இல்லை (குறள் – 781).

 

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.                                     (குறள் – 791)

 

ஒருவனுடைய குணங்களையும் செயல்களையும் பலமுறை திரும்பத்திரும்ப ஆராய்ந்து அதன்பின் நட்புகொள்ளாதவனுக்கு, அந்த நட்பு அவன் சாகும்வரை துன்பதைத் தரும் (குறள் – 792).

 

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.                                            (குறள் – 792)

 

தற்காலத்தில், சில ஆண்களும் பெண்களும் ஒருவரோடு ஒருவர் சமூக வலைத்தளங்களில் தொடர்புகொண்டு, நன்றாக ஆராயாமல், உணர்ச்சிவசப்பட்டுக் காதலிக்கத் தொடங்கி, திருமணம் செய்துகொள்கிறார்கள். இது போன்ற செயல்களால் அதிகத் துன்பமடைபவர்கள் பெண்கள். திருமணம் செய்துகொண்ட சில ஆண்டுகளுக்குள் அன்பின்மை, கருத்து வேறுபாடு, குடும்பத்துக்குள் வன்முறை போன்றவற்றால் மணமுறிவு ஏற்பட்டுத் தங்கள் வாழ்க்கையை அவர்கள் வீணடித்துக்கொள்கிறார்கள். இவ்வாறு ஆராயமல், அவசரப்பட்டுக் காதலித்ததால் வரும் துன்பம் அவர்கள் சாகும்வரை நீடிக்கும்.

 

’ஆய்ந்தாய்ந்து’ நட்புக்கொள்ள வேண்டும் என்று கூறி, நட்புகொள்வதற்குமுன் நன்கு ஆராயவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய வள்ளுவர், எப்படி ஆராய வேண்டும் என்பதற்குச் சில அறிவுரைகளைக் கூறுகிறார். ஒருவன் தவறு செய்யும்பொழுது கண்டித்து, மனம் வருந்துமாறு அறிவுரை கூறி, உலக வழக்கு என்ன என்பதை அறிந்து அதன்படி அவனை நடப்பிக்கும் திறமை உடையவரை ஆராய்ந்து அவரோடு அவன் நட்புக்கொள்ள வேண்டும் (குறள் – 795). ஒருவனுக்கு கேடுகள் வரும்பொழுது, அவனுக்கு உறுதுணையாக இருப்பவர்கள்தான் அவனுடைய உண்மையான நண்பர்கள். அதனால் கேட்டிலும் ஒரு நன்மை உள்ளது. ஒருவனுடைய நண்பர்களுள் உண்மையான நன்பர்கள் எவர் என்பதைக் கண்டறிவதற்கு கேடு ஒரு அளவுகோல். (குறள் – 796) 

 

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.                               (குறள் – 795)

 

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.                               (குறள் – 796)

 

கேடு வந்தபொழுதுதான் உண்மையான நண்பர்களைக் கண்டுகொள்ள முடியும் என்ற கருத்து நாலடியாரிலும் காணப்படுகிறது.

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து

மேலாடு மீனின் பலராவர் - ஏலா

இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!

தொடர்புடையேம் என்பார் சிலர்.                    (நாலடியார் -113)

 

(பொருள்: குளிர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! செல்வம் உண்டான காலத்தில் மேலே வானத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட நெருங்கிய உறவினர் பலராவர். தகாத, கொடிய வறுமையை ஒருவர் அடைவராயின், அப்போது, 'அவர் எம் உறவினர்' என்று உரிமை பாராட்டுவோர் ஒரு சிலரே ஆவர்.)

பழைமை

பழைமை என்னும் சொல்லை, நெடுங்காலமாகப் பழகிவந்த பழைமையான நட்பு என்ற பொருளில் வள்ளுவர் பயன்படுத்துகிறார். பழைமையால் விளைவது உரிமை. நட்பின் பழக்கத்தினால், உரிமை பாராட்டுவதையே  'பழைமை' என்னும் சொல் குறிக்கிறது. நெடுங்காலமாகத் தொடர்ந்து நண்பர்களாக இருப்பவர்களுள் ஒருவர் உரிமையோடு செய்பவை பிழையானவையாகத் தோன்றினாலும் அவற்றை மற்றவர் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து. ”ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது பழமொழி. ’பழைமை’ என்றால் என்னவென்று கேட்டால், அது பழைமையான நண்பர் தாம் விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் சிதைக்காமல் ஏற்றுக்கொள்ளும் நட்பாகும் (குறள் – 801).

 

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.                                   (குறள் – 801)

 

துரியோதனன் கர்ணன் ஆகிய இருவரின் பழைமையான நட்புக்கு உதாரணமாக மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.  ஒரு நாள் துரியோதனனின் மனைவி பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார்கள். அங்கு, துரியோதனன் வருவதைக் கண்ட பானுமதி திடீரென்று எழுந்தாள். அவள் தோற்கும் நிலையில் இருந்ததால் ஆட்டத்தைவிட்டுப் போக விரும்புகிறாள் என்று நினைத்த கர்ணன் அவள் புடவையைப் பிடித்து இழுத்து அவளை உட்காரவைக்க முயற்சி செய்தான். அப்பொழுது, பானுமதியின் இடுப்பில் இருந்த மேகலையிலிலிருந்து முத்துக்கள் சிதறின. அங்கு வந்த துரியோதனன், தன் மனைவியோடு கர்ணன் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்ததையோ, கர்ணன் பானுமதியின் மேகலையைப் பிடித்து இழுத்ததையோ சிறிதும் பொருட்படுத்தாமல், ”எடுக்கவோ கோக்கவோ என்றான். அதாவது, துரியோதனன் ”முத்துக்களை எடுக்கவா அல்லது மாலையாகக் கோர்த்துத் தரட்டுமா?” என்று கேட்டான்.

மடந்தை பொன்திரு மேகலை மணி உகவே மாசுஅறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ? கோக்கவோ?" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,தருமமும்!

                                                                                                (வில்லிப்புத்தூரார், மகாபாரதம்)

தீ நட்பு

மனிதர்களுடைய வாழ்க்கையில் நட்பு ஒரு இன்றியமையாத உறவு. ஒருவனுடைய நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால், அவர்கள் அவனுக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்வார்கள். அவனுக்குத் துன்பம் நேர்ந்தால் அதைத் தமக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி அவனுடைய துன்பத்தில் பங்கேற்பார்கள். அவன் தவறான வழிகளில் சென்றால் அவனை இடித்துரைத்துத் திருத்த முயற்சி செய்வார்கள். நல்ல நண்பர்கள் இருந்தால் எதையும் எளிதில் சாதிக்க முடியும். நல்ல நண்பர்களால் பல நன்மைகள் உள்ளதைப்போல் தீய நண்பர்களால் பல தீமைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் ஒருவரை நம்முடைய நண்பராக்கிக்கொள்வதற்குமுன் அவரைப் பற்றி நன்கு ஆராய வேண்டும் என்ற கருத்தை நட்பாரய்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், சில சமயங்களில், எவ்வளவு ஆராய்ந்தாலும், ஒருவர் நல்லவரா அல்லது தீயவரா என்று உறுதியாகத் தீர்மானிக்க முடியாது. சிலகாலம் நண்பர்களாகப் பழகினால்தான் ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடியும். ஒருவரோடு நண்பராகப் பழகியபின், அவர் தீயவர் என்று தெரிந்தால், அவருடைய நட்பைக் குறைத்துகொள்ள வேண்டும், முடிந்தால் அவருடைய நட்பைவிட்டு விலக வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.  தீ நட்பு என்ற அதிகாரத்தில், 1)பண்பில்லாதவர்கள், 2)பயன் மட்டுமே கருதுபவர்கள், 3)நம்ப முடியாதவர்கள், 4)பேதைகள், 5)மகிழ்ச்சியை மட்டுமே விரும்புவோர், 6)காரியத்தைக் கெடுப்பவர்கள், மற்றும், 7)தனிமையில் நண்பராக இருந்து பொதுவிடத்தில் பழிப்பவர்கள் ஆகிய ஏழு திறத்தாருடைய நட்பினால் வரும் தீமைகளைப் பற்றியும், அவர்களின் நட்பை விலக்க வேண்டும் என்றும் வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார்.

 

பண்பில்லாதவர்களின் நட்பு: நம்மைக் காணும்போது அன்பின் மிகுதியால் அப்படியே நம்மை விழுங்குவார்போல் காணப்பட்டாலும். பண்பற்றவர்களின் நட்பு மேன்மேலும் வளர்வதைவிடத் தேய்ந்து போதல் நல்லது (குறள் – 811).

 

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.                                             (குறள் – 811)

 

பயன் கருதுபவர்களின் நட்பு: தமக்கொரு பயனுள்ளபோது நட்புச்செய்து, பயனில்லாதபோது நீங்கிவிடுகின்ற, தமக்குப் பொருத்தமில்லாதவரின் நட்பைப் பெற்றால் என்ன? இழந்தால் என்ன? (குறள் – 812). நட்பினால் கிடைக்கும் பயனை அளந்துபார்த்து, நட்புக்கொள்ளும் நண்பர்களும், கொடுப்பவரை விரும்பாமால் அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் விலைமாதரும், பிறருக்கு ஏற்படும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களின் பொருளைத் திருடும் கள்வரும் சமமானவர்கள் (குறள் – 813). இது போன்ற பயன் கருதும் நட்பை, வள்ளுவரைப்போல் அரிஸ்டாட்டிலும் தீய நட்பாகவே கருதுகிறார். ”நட்பு என்பது ஒரு மிகப் பெரிய பொறுப்பு.; அது பயன் அடைவதற்கான வாய்ப்பு அன்று.” என்று கலீல் கிபரன் (Khalil Gibran, 1881 – 1931)) என்ற கவிஞர் கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது.

 

உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்.                                               (குறள் – 812)

 

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.                                             (குறள் – 813)

 

நம்ப முடியாதவர்களின் நட்பு: ஒருவர் நமக்கு உதவி செய்வார் என்று அவரை நாம் நம்பி இருக்கும்பொழுது அவர் உதவி செய்யாமல் நம்மைக் கைவிட்டுவிட்டால், அவரோடு நட்புக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.  அதுபோல், ஒருவர் சொல்வது ஒன்று செய்வது வேறாக இருந்தால் அவரோடும் நட்புக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது போன்றவர்கள் நம்பத் தகுந்தவர்கள் என்று கருத முடியாது என்பது வள்ளுவரின் கருத்து. போர்க்களத்தில், தன்மீது அமர்ந்திருக்கும் வீரனைக் கீiழே தள்ளிவிட்டுவிட்டு ஓடிப்போகும் பயிற்சி போதாத குதிரை போன்றவருடன் பழகி அவருடைய நண்பர் ஆவதைவிடத் தனிமையாக இருப்பதே சிறந்தது (குறள் – 814). செயல் வேறாகவும் சொல் வேறாகவும் இருப்பவர்களின் நட்பு கனவிலும் கூடக் கொடியது (குறள் – 819). இங்கு, “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.” என்று இராமலிங்க அடிகளார் கூறியது நினைவுகூரத் தக்கது.

 

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.                                                      (குறள் – 814)

 

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.                                 (குறள் – 819)

 

பேதைகளின் நட்பு: அறிவில்லாதவருடன் மிகநெருங்கிப் பழகி நண்பர்களாக இருப்பதைவிட, அறிவுடையவர்களின் பகைமை, கோடி மடங்கு நன்மை பயக்கும் (குறள் – 816).

 

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.                                        (குறள் – 816)

 

மகிழ்ச்சியை மட்டும் விரும்புவோரின் நட்பு: மகிச்சிக்காக மட்டுமே ஒருவர் நம்முடையாக நண்பராக இருக்க விரும்பினால், அத்தகைய நட்பும் தீய நட்புதான் என்பது வள்ளுவரின் கருத்து, உள்ளத்தில் அன்பில்லாமல், புறத்தே சிரித்து நடிப்பவர்களின் நட்பைவிட பகைவரால் பத்துக்கோடி மடங்கு நன்மை உண்டாகும்.

 

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.                                          (குறள் – 817)

 

காரியத்தைக் கெடுப்பவர்களின் நட்பு: நாம் செய்ய விரும்பும் நற்செயல்களுக்கு நல்ல துணையாக உள்ளவர்கள்தான் உண்மையான நண்பர்கள். சிலர் நம்மோடு நண்பராக இருந்தாலும், நாம் ஒரு நற்செயலைச் செய்ய நினைக்கும்பொழுது நம்மை ஊக்குவிக்காமால், நம்மை அச்செயலைச் செய்யவிடாமல் இருப்பவர்களின் நட்பையும் தவிர்க்க வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. நம்மால் செய்யக் கூடிய செயலைச் செய்யவிடாமல் நம்மைக் குழப்பி வருத்துபவர்களின் நட்பை, அவரிடம் வெளிப்படையாகச் சொல்லாமல் சிறிதுசிறிதாக விட்டுவிட வேண்டும் (குறள் – 818).

 

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.                                     (குறள் – 818)

 

தனிமையில் நட்பாக இருந்து பொதுவிடத்தில் பழிப்பவர்களின் நட்பு: தனியாக இருக்கும்பொழுது நம்மிடம் நண்பு பாராட்டி, பலர்கூடியுள்ள பொதுவிடத்தில் நம்மைப் பழிப்பவர்களின் நட்பைச் சிறிதளவுகூட நெருங்கவிடாமல் தவிர்க (குறள் – 820) என்கிறார் வள்ளுவர்.

 

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.                                              (குறள் – 820)

 

கூடா நட்பு

தீ நட்பு என்பது தீயவர்களின் நட்பு. எவ்வளவு ஆராய்ந்து நட்புக்கொண்டாலும், சில சமயங்களில், சில நண்பர்களுடைய உண்மையான குணத்தை அறிந்துகொள்ள முடியாது. பழகப்பழகத்தான், அவர்கள் நல்லவர்களா தீயவர்களா என்பது தெரியவரும். நண்பர்களாக இருப்பவர்கள் தீயவர்கள் என்று தெரிந்தவுடன், அவர்களுடைய நட்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். முடியுமானால் அவர்களுடைய நட்பிலிருந்து விலகவேண்டும். நட்பில் மற்றொரு வகையும் உள்ளது. உள்ளத்தில் நட்பில்லாமல் நண்பர்களைப்போல் சிலர் நடிப்பார்கள். இது போன்றவர்களில் சிலர் பகைவர்களாகக்கூட இருக்கலாம். இத்தகைய நட்பு, உள்ளத்தால் பொருந்தாத நட்பாகையால் அதைக் கூடா  நட்பு என்கிறார் வள்ளுவர்.  கூடா நட்பை உரிய நேரத்தில் நயமாக நீக்கிவிட வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.

 

மனம் பொருந்தாமல், சமயம் வாய்க்கும்பொழுது, தீமை செய்யாலாம் என்ற எண்ணத்தோடு நண்பர்போல் நடித்துக் கூடிப்பழகுபவரின் நட்பு கூடா நட்பு. அது இரும்பை சம்மட்டியால் அடிப்பதற்குத் துணையாக இருக்கும் பட்டடையைப் போன்றது (குறள் – 821). நண்பரைப்போல் நல்லவற்றையே நம்மிடம் பேசினாலும், நண்பர்களல்லாத பகைவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும் (குறள் – 826). அம்பை எய்து அதனால் தீமை செய்வதற்காகவே வில் வளைகிறது. அதுபோல் பகைவர்களின் பணிவான சொற்களும் தீமை பயப்பதற்காகவே சொல்லப்பட்டதாக உணர வேண்டும் (குறள் – 827). தொழுவதற்காகப் பகைவர்கள் தங்கள் கைகளை கூப்பினால், அவற்றுக்குள் கொலைக்கருவிகள் மறைந்திருக்கும்; அவர்கள் அழுது கண்ணீர் விட்டாலும், அந்தக் கண்னீரிலும் தீமை மறைந்திருக்கும் (குறள் – 828). நம்முடன் மனத்தால் பொருந்தாதவர்களை, அவர்கள் சொல்லும் சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு, தெளிவடையக் கூடாது (குறள் – 825). 

 

 

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.                                                       (குறள் – 821)

 

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.                                                       (குறள் – 826)

 

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
                                         (குறள் – 827)

 

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.                                            (குறள் – 828)

 

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று.                                 (குறள் – 825)

 

பகைவர்கள் நண்பர்களாக நெருங்கும் காலம் வந்தால், என்ன செய்வது என்பதற்கும் வள்ளுவர் அறிவுரை கூறுகிறார். வெளியே மிகுந்த நட்புடையவர் போல நடந்துகொண்டு, அகத்தே தம்மை இகழும் வஞ்சகப் பகைவர்களை, தாமும் வெளியே சிரித்துப்பேசி, அவர்களை மகிழச் செய்வதுபோல் செய்து அந்த நட்பை அழித்துவிட வேண்டும் (குறள் – 829). நம்முடைய பகைவர் நமக்கு நண்பராகப் பழகவேண்டிய சூழ்நிலை வருமானால், அப்பொழுத் நாமும் அவர்களிடம் முகத்தளவில் நட்புகொண்டு, உள்ளத்தில் நட்புக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்(குறள் – 830),

 

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.                                           (குறள் – 829)

 

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்.                                                        (குறள் – 830)

 

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் நாடுகளுக்கும் நட்பு தேவை

வலிமையான படை, சிறந்த குடிமக்கள், உணவுப் பொருள்கள், அறிவிற் சிறந்த அமைச்சர்கள், நல்ல நண்பர்கள், வலிமையான அரண் ஆகிய ஆறும் உடையவன் அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன் என்று இறைமாட்சி என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 381).

 

            படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

          உடையான் அரசருள் ஏறு.                                     (குறள் – 381)

 

இங்கு நட்பு என்பது, தனிப்பட்ட முறையில் மன்னனுக்கு நண்பர்கள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்காமல் ஒரு நாட்டுக்கு நட்புள்ள நாடுகள் இன்றியமையாதவை என்பதையும் குறிக்கும். தற்காலத்தில், நாடுகள் தங்கள் நட்பு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்கின்றன. ஒரு நாட்டைப் பகைநாடு தாக்கினால், அந்த நாட்டோடு நட்புறவு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட நாடுகள் படையெடுத்து வந்த நாட்டை எதிர்ப்பதற்குத் துணையாக இருக்கும். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, உருசியாவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஐரோப்பாவில் உள்ள நாடுகள் அமெரிக்காவோடு இணைந்து North Atlantic Treaty organization (NATO) என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டன. அந்த ஒப்பந்த்தின் மையக் கருத்து, ”ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதல் ( Attack on one is an attack on all). இது நட்புடைய நாடுகளின் ஒப்பந்தம். மன்னனுக்கு நட்பு தேவை என்று முடியாட்சிக் காலத்தில் வள்ளுவர் கூறியது இக்காலத்தில் நாடுகளுக்கும் பொருந்தும்.

 

முடிவுரை

மனிதன் மற்றவர்களோடு கூடி வாழும் இயல்பும் அன்பும் உடையவன். ஒருவன் தன் உறவினர்களோடும் மற்றவர்களோடும் அன்பாகப் பழகுவதைப் பார்ப்பவர்களுக்கு அவனோடு பழகவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். அந்த ஆர்வத்தால் அவர்களுக்கும் அவனுக்கும் இடையே நட்பு உண்டாகும். நட்பை, அறம் சார்ந்த நட்பு, பயன் கருதும் நட்பு, மகிழ்ச்சிக்கான நட்பு என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்று கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் கூறுகிறார். அறம் சார்ந்த நட்புதான் நல்ல நட்பு என்றும், மற்ற இரண்டுவகையான நட்புக்களும் தீ நட்பு என்று வள்ளுவர் கூறுகிறார். நன்கு ஆராய்ந்த பின்னர்தான் ஒருவரை நண்பராக்கிக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து, எவ்வளவு ஆராய்ந்தாலும், சில சமயங்களில், ஒருவர் நல்லவரா அல்லது தீயவரா என்று கண்டுபிடிக்க முடியாது. சில காலம் பழகிய பின்னர்தான் ஒருவர் நல்லவரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நண்பராக இருப்பவர் தீயவர் என்று தெரிந்தவுடன், அவருடன் உள்ள நட்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால், அந்த நட்பிலிருந்து விலக வேண்டும். சில சூழ்நிலைகளில், பகைவர்கள் நண்பர்களைப்போல் நடிக்கலாம். அத்தகைய நட்பில், உள்ளத்தில் ஒற்றுமை இல்லாததால் அதைக் கூடா நட்பு என்கிறார் வள்ளுவர். கூடா நட்பில், நாமும் நண்பர்களைப்போல் நடித்து உள்ளத்தில் நட்புக்கொள்ளாமல் அவர்களோடு உள்ள நட்பை நீக்கிவிட வேண்டும். தனிமனிதர்களுக்கு எப்படி நட்பு தேவையோ, அதுபோல் நாடுகளுக்கும் நட்பு தேவை.

 

துணைநூல்கள்

Bacon, Francis. Of Friendship. Kessinger Publishing, LLC, Whitefish, MT, USA: 2010

Diaz, S.M. Thirukkural. Volumes 1 &2.  Ramanandha Adigalar Foundation, Chennai: 2000.

Grayling, A.C. Friendship. Yale University Press, New Haven, CT USA and London, UK. 2013.

Marudanayagam, P. Ancient Tamil Poetry and Poetics: New Perspectives. Central Institute of

Classical Tamil, Chennai 2010.

__________________. நட்பாராய்தல்: திருவள்ளுவரும் அரிஸ்டாட்டிலும். The Journal of The International

Society for Tamil Cultural Studies, Vol. 1, Number 1.

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural). Emerald publishers, Chennai.

சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்:

1989.

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், மதுரை:

1999.

தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,

சென்னை, 600 017

பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம், சென்னை

 



[2]. புறநானூறு, பாடல் 212

[3] . புறநானூறு, பாடல் 215

[4] . புறநானூறு, பாடல் 216

[5]. புறநானூறு, பகுதி II, பக்கம் 31

Tuesday, August 11, 2020

குறளும் அறிவும்

 

குறளும் அறிவும்

 

தமிழில் உள்ள அறிவு என்ற சொல் அறிதல் (perception, knowing, understanding), அறிந்தசெய்தி (knowledge), ஓதி (wisdom), மதி (intelligence) என்னும் நாற்பொருளுணர்த்தும் ஒரு சொல் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தன்னுடைய திருக்குறள் மரபுரை என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்தச் சொற்களும், வேறு சில சொற்களும் அறிவைப் பற்றிக் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். முதலில், நாம் அறிவின் பல கூறுபாடுகளைக் குறிக்கும் சொற்களுக்கான வரையறைகளைப் பார்ப்போம்.

கற்றல் (Learning) என்ற சொல், முறையாகப் பள்ளி அல்லது கல்லூரிகளுக்குச் சென்று படிப்பதால் பல செய்திகளைத் தெரிந்துகொள்வதையும், நாமாக நூல்கள், நாளிதழ்கள், வாரயிதழ்கள், மாதயிதழ்கள் மற்றும் முகநூல், கூகுள் போன்ற தொழில்நுட்பக் கருவிகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றைப் படிப்பதின் மூலம் செய்திகளைத் தெரிந்துகொள்வதையும் குறிக்கிறது.

கேட்டல் (listening) என்ற சொல், செவிவழியாக நாம் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வதைக் குறிக்கிறது.

அறிதல் (knowing) என்ற சொல், கற்றல், கேட்டல், அனுபவம், ஐம்புலன்களின் வழியாக உணர்தல் ஆகியவற்றால் செய்திகளை அறிந்துகொள்வதைக் குறிக்கிறது.

அறிந்தசெய்தி (knowledge): என்ற சொல், கற்றல், கேட்டல் மற்றும் அறிதல் மூலம் தெரிந்துகொண்ட செய்தியைக் குறிக்கிறது.

புரிதல் (Understanding) என்ற சொல், அறிந்ததின் பொருளை விளங்கிக்கொள்தல் என்பதைக் குறிக்கிறது.

மதி (Intelligence) என்ற சொல், அறிந்ததை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் ஆற்றலைக் குறிக்கிறது.

அறிவு என்ற சொல், அறிந்தசெய்திகளில் பயனுள்ளவற்றைப் பயன்படுத்தி நல்ல வழிகளில் ஒருவரைச் செலுத்தும் ஆற்றலைக் குறிக்கிறது.

பட்டறிவு (knowledge gained from Experience) என்ற சொல், அனுபவத்தால் அறிந்துகொண்ட செய்தியைப் பயன்படுத்தும் ஆற்றலைக் குறிக்கிறது.

இயல்பறிவு (Common Sense) என்ற சொல், எந்தச் சூழ்நிலையில் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் ஆற்றலைக் குறிக்கிறது.

பகுத்தறிவு (Rational thinking ability) என்ற சொல் ஒரு கருத்து அல்லது செயலை உணர்ச்சிபூர்வமாகவோ அல்லது சில நம்பிக்கைகளின் அடிப்படையிலோ ஏற்றுக்கொள்ளாமல் எது சரியானது, எது அறிவுக்குப் பொருத்தமனது என்று பிரித்து ஆராயும் ஆற்றலைக் குறிக்கிறது.

மெய்யறிவு (ஓதி/wisdom) என்ற சொல் அறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, இயல்பறிவு, மற்றும் புரிதல் கியவற்றைப் பயன்படுத்திச் சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றலைக் குறிக்கிறது.

அறிதலும் அறிவும்

நாம் எப்படி ஒன்றை அறிந்துகொள்கிறோம்? கற்றல், கேட்டல், அனுபவம், நமது ஐம்பொறிகளால் உணர்தல் ஆகியவற்றால் ஒன்றைப் பற்றி அறிந்துகொள்கிறோம். பல வகைகளில் நாம் செய்திகளை அறிந்துகொண்டாலும் கல்வி வழியாகத்தான் அறிவியல், வரலாறு, இலக்கியம், கணிதம் போன்றவற்றை அறிந்துகொள்கிறோம். பல செய்திகளை அறிந்துகொள்வதற்குக் கல்விதான் பெருமளவில் உதவியாக இருக்கிறது.

 

நாம் கற்பது அனைத்தும் அறிவு என்னும் ஆற்றலைத் தரும் என்று கூற முடியது. அவை அனைத்தும் அறிந்த செய்தி என்ற பிரிவில் அடங்கும். அறிந்துகொண்டதைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு மூன்றாம் அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் சிறுவனிடம் 12 என்ற எண்ணை 13 என்ற எண்ணால் பெருக்கினால் என்ன எண் கிடைக்கும் என்று கேட்டால், அவன் தயக்கமில்லாமல் 156 என்று சொல்லுவான், அதே மாணவனை, 1234 என்ற எண்ணை 5678 என்ற எண்ணால் பெருக்கினால் என்ன எண் கிடைக்கும் என்று கேட்டால், தனக்குத் தெரியாது என்று கூறுவான். அதற்குக் காரணம் அவன் 12x13 = 156 என்று வாய்ப்பாட்டிலிருந்து மனப்பாடம் செய்து கற்றுக்கொண்டான். அந்தப் பெருக்கலுக்கு விடை எப்படிக் கிடைக்கிறது என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை. அவன் பெருக்கல் கணக்குகளுக்கு எப்படி விடை கண்டுபிடிப்பது என்பதைப் புரிந்துகொண்டிருந்தால், 1234 என்ற எண்ணை 5678 என்ற எண்ணால் பெருக்கினால் கிடைக்கும் விடை 7,006,652 என்று முறையாகப் பெருக்கி விடை அளிப்பான். அறிந்தது அறிவாக மாற வேண்டுமானல், அறிந்ததைப் புரிந்துகொள்ள வேண்டும். பல மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பில் வெற்றி பெறாமல் தோல்வி அடைவதற்கு காரணம் அவர்கள் தாங்கள் அறிந்துகொண்டதைப் புரிந்துகொள்ளாதுதான் என்பது பல கல்வியாளர்களின் கருத்து. வள்ளுவர் கல்வியைப் பற்றிக் கூறும்பொழுது,

 

          கற்க கசடறக் கற்பவை கற்றபின்

         நிற்க அதற்குத் தக.                        (குறள் – 391)

 

என்று கூறுகிறார். கசடற என்பது ஐயம் திரிபறக் கற்பதைக் குறிக்கிறது. அவ்வாறு கற்றால்தான் கற்றபடி நிற்க முடியும். கற்றபடி நிற்க வேண்டுமானால், கற்றது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அறிந்தது அறிவாக மாற வேண்டுமானால், ஒருவன் தன் மனத்தை அது செல்ல விரும்பிய இடங்களுக்கெல்லாம் செல்ல விடாது தடுத்து, தீயவழிகளிலிருந்து நீக்கி, நல்லவற்றில் செலுத்துவது அறிவு என்கிறார் வள்ளுவர் (குறள் – 422)

         

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

         நன்றின்பால் உய்ப்பது அறிவு.                       (குறள் – 422)

 

ஆகவே, அறிந்தது அறிவாக வேண்டுமானால், 1)அறிந்ததை ஐயத்திற்கு இடமின்றிப் புரிந்து கொள்ள வேண்டும். 2)அது பயனுள்ளதாக இருக்க வேண்டும், மேலும், 3)அது நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும்.  இந்த நிபந்தனைகள் இருப்பதால், நாம் முகநூல்(Facebook), கீச்சகம்(Tweeter) போன்ற சமூக வலைத்தளங்களில் படிப்பதெல்லாம், நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்குப் பயன்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

 

பகுத்தறிவு

பகுத்தல் என்றால் பிரித்தல் என்று பொருள். பகுத்தறிதல் என்றால் பிரித்தறிதல் என்று பொருள். பகுத்தறிவு என்பது, ஒரு கருத்து அல்லது ஒரு செயலை உணர்ச்சிபூர்வமாகவோ அல்லது சில நம்பிக்கைகளின் அடிப்படையிலோ ஏற்றுக்கொள்ளாமல், எது சரியானது, எது அறிவுக்குப் பொருத்தமனது என்று பிரித்து ஆராயும் ஆற்றல். ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால், அவர் சொன்னார் என்பதற்காக அதை ஏற்றுக்கொள்ளாமல், அதைச் சிந்தித்து, அக்கருத்து சரியா தவறா, மற்ற கருத்துக்களுக்கு முரணானதா என்று பிரித்து ஆராய வேண்டும் என்பது வள்ளுவரின் அறிவுரை (குறள் - 423).

          எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

         மெய்ப்பொருள் காண்பது அறிவு.                      (குறள் – 423)

 

மதங்கள் கூறும் கருத்துக்களை மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார்கள். தான் கூறும் கருத்துக்களை எவரும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று புத்தர் கூறியதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பகுத்தறிவைப் பரப்பிய தந்தை பெரியாரும் தன் சொற்களை ஆராயாமல் எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

 

வைதீக மதம் (இன்றைய இந்து மதத்தின் முன்னோடி) கூறிய கருத்துக்கள் தம்முடைய அறிவுக்கு ஏற்றதாக இல்லாததால்தான் புத்தர் புத்த மதத்தையும், மகாவீரர் சமண மதத்தையும் தொடங்கினார்கள். கத்தோலிக்கப் பிரிவினைச் சார்ந்த கிறித்துவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாததால்தான் மார்ட்டின் லூதர் கிறித்துவ மதத்தில் ஒரு புதுப்பிரிவைத் தொடங்கினார். அதுபோல், ஒவ்வொருவரும் மற்றவர்கள் கூறும் கருத்துக்களைத் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்வது தவறு அல்லது தேவையற்றது என்று புத்தரும், மகாவீரரும், முகமது நபியும், மார்ட்டின் லூதரும் மற்றவர்களும் நினைத்திருந்தால் இன்று வைதீக மதமும் யூதமதம் மட்டுமே இருந்திருக்கும். தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி மற்றவர்கள் கூறும் கருத்துக்களை ஆராய மனிதர்களுக்கு உரிமை உண்டு; அவர்கள் அவ்வாறு ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால்தான், சமுதாயத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும்.

 

பிறர் சொற்களை ஆராயமல் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறியதைப்போல், ஒரு பொருள் எத்தன்மை உடையதாகத் தோன்றினாலும், அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், அப்பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவாகும் என்றும் வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 355).

 

         எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

         மெய்ப்பொருள் காண்பது அறிவு.                      (குறள் – 355)

 

பொருள்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதுதான் விஞ்ஞானியின் கடமை. பொருள்களின் உண்மைத் தன்மையை விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்காவிட்டால், நாம் விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது. விஞ்ஞானிகள் பொருள்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதுபோல், ஆத்மா, மறுபிறவி, நரகம், தேவருலகம் கடவுள் போன்றவற்றையும் ஆராய வேண்டும். இவற்றைப் போன்ற கருத்துக்களில் மதங்களிடையே கருத்து ஒற்றுமை இல்லாதால், எந்த மதம் கூறுவது உண்மை என்பதை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராயவிட்டால், இவற்றைப் பற்றிய உண்மைகளை மனித சமுதாயம் கண்டறிய முடியாது.

 

ஆகவே, பகுத்தறிவு என்பது இன்றியமையாதது. பொருள்களின் உண்மைத் தன்மையையும் கருத்துக்களின் உண்மையையும் மனிதர்கள் தொடர்ந்து பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய வேண்டும்.

 

மெய்யறிவு
மெய்யறிவு என்பது ஒருவரின் அறிவு, பட்டறிவு (அனுபவம்), இயல்பறிவு (Common Sense), மற்றும் புரிதல் (understanding) கியவற்றின் அடிப்படையில் நல்ல முடிவுகளை எடுக்கும் ஆற்றல். கற்றல், கேட்டல், கற்றவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆகியவற்றால் மட்டும் ஒருவர் சிறந்த முடிவெடுக்கும் ஆற்றல் உடையவரக முடியாது என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. கல்வி கேள்விகளில் சிறந்த பலர், பல குற்றங்களைச் செய்து தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. உதாரணமாக, அமெரிக்கக் குடியரசின் 42 – ஆவது தலைவராக இருந்த வில்லியம் கிளிண்டன் (William Clinton) என்பவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்; யேல்(Yale) என்ற சிறந்த பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். அவர் ஒரு இளம்பெண்ணுடன் வெள்ளைமாளிகையில் தகாத முறையில் நடந்துகொண்டதற்காகப் பல அவமானங்களையும் ஏளனங்களையும் சந்திக்க நேரிட்டது என்பது வரலாறு. கல்வியால் வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவை அவர் பெறவில்லை என்பதையும், காமத்தின் மிகுதியால், இயல்பறிவைப் பயன்படுத்திச் சரியான முடிவெடுக்கும் ஆற்றலை அவர் இழந்தார் என்பதையும் அவருடைய செயல் வெளிப்படுத்துகிறது. இது அவருடைய மெய்யறிவின்மைக்கு எடுத்துகாட்டு.

 

ஒருவர் முதல்முறையாகச் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்ல வேண்டுமென்றால், அவர் வரைபடத்திலிருந்து சென்னையும் புதுச்சேரியும் எங்கு உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வார். அவ்வாறு தெரிந்துகொள்வது வரைபடத்திலிருந்து அவர் பெறும் முதற்செய்தி (Information 1) அடுத்து, சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே உள்ள தூரம் 150 கிலோ மீட்டர் என்று தெரிந்துகொள்வார். இது அவர் தெரிந்துகொள்ளும் இரண்டாவது செய்தி (information 2). புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் சீருந்து செல்லக்கூடிய சராசரி வேகம் மணிக்கு 60 கி. மீ. என்பதை அவர் தெரிந்திருந்தால் அது மூன்றாவது செய்தி (information 3). இந்த மூன்று செய்திகளையும் இணைத்து  தன்னுடைய ஆராயும் ஆற்றலைப் ( ஆறாயும் ஆற்றல் – Intelligence) பயன்படுத்தி அவர் ஆராய்ந்தால் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக 150 கி.மீ தூரத்தைக் கடந்து செல்வதற்கு இரண்டரை மணிநேரம் ஆகும் என்பது அவர் பெரும் அறிந்த செய்தி (knowledge) ஆகிறது. ஆகவே, அவர் புதுச்சேரியில் காலை ஒன்பது மணியளவில் இருக்க வேண்டுமென்றால் அவர் சென்னையிலிருந்து காலை 6:30 மணிக்குக் கிளம்ப வேண்டும். ஆனால், ஓரிருமுறை சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் பயணத்தை மேற்கொண்ட பிறகு, காலைவேளையில், சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள வாகனப் போக்குவரத்துக்களின் நெருக்கடியால் அவரால் இரண்டரை மணிநேரத்தில் புதிச்சேரிக்குச் செல்ல முடியாது என்பதை அவர் தன் பட்டறிவால் தெரிந்துகொள்வார்.  அறிந்த செய்தியையும் பட்டறிவையும் தொடர்புபடுத்தியதால் அவர் பெற்றது மெய்யறிவு. அடுத்தமுறை சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்ல வேண்டுமானால், முதல் மூன்று செய்திகளையும் மீண்டும் சேகரிக்க வேண்டியதில்லை. சென்னையிலிருந்து புதுச்சேரிக்குக் காலைவேளையில் செல்வதற்கு 3:30 மணி நேரம் ஆகும் என்று அவருடைய மெய்யறிவு அவருக்கு நினைவூட்டும். சில சூழ்நிலைகளில், அறிந்த செய்தியால் மட்டும் பயனில்லை. அத்தோடு பட்டறிவையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 

குறளில் பல இடங்களில், வள்ளுவர் அறிவு என்று குறிப்பிடுவது, அறிந்த செய்தி, பட்டறிவு, இயல்பறிவு ஆகியவற்றின் கலவையாகிய மெய்யறிவைக் குறிப்பதாக உள்ளது என்பதற்கு ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். ”ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.”, என்ற பழமொழிக்கேற்ப எத்தகைய கல்வியாலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் எப்படி நடந்துகொள்வது என்று ஒருவர் கற்றுக்கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்வதற்கு, அவருக்குப் பட்டறிவும், இயல்பறிவும் தேவை. உலகத்தோடு ஒட்ட வாழத் தெரியாதவர்களை “அறிவிலாதார்” என்று குறிப்பிடும்பொழுதும் (குறள் – 140), உலகில் உயர்ந்தோர் எப்படி நடந்துகொள்கிறார்களோ அவ்வாறு நாமும் நடந்துகொள்வதுதான் அறிவு (குறள் – 426) என்று கூறும்பொழுதும் வள்ளுவர் அறிவும், பட்டறிவும் இயல்பறிவும் கலந்த மெய்யறிவைத்தான் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.                                      (குறள் - 140)

 

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.                                                  (குறள் – 426)

 

 

அறிவுடைமை என்ற அதிகாரத்தில், ”எதிர்காலத்தில் நடைபெறக்கூடியது எது என்பதை முன்கூட்டியே அறியக்கூடியவர்களே அறிவுடையவர்கள். அவ்வாறு அறிய மாட்டாதவர்கள் அறிவில்லாதவர்களாவார்கள் (குறள் – 427).”, என்றும், “எதிர்காலத்தில் நடைபெறக்கூடியவற்றை முன்கூட்டியே அறியக்கூடியவர்களுக்கு அதிர்ச்சிதரக்கூடிய துன்பம் ஏதொன்றும் இல்லை (குறள் – 429).”, என்றும், “அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாதிருத்தல் அறிவின்மையாகும்; அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சுவது அறிவுடையோரின் செயலாகும் (குறள் – 428).”, என்றும் வள்ளுவர் கூறும்பொழுது அவர் குறிப்பிடுவது மெய்யறிவுதான். இதுபோன்ற சூழ்நிலைகளில் கல்வி, கேள்வி ஆகியவற்றால் வரும் அறிவு பயன் தருவதில்லை.

 

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.                                                  (குறள் – 427)

 

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.                                  (குறள் – 429)

 

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.                                (குறள் – 428)

 

 

வெஃகாமை என்ற அதிகாரத்தில், பலரிடத்திலும் உள்ள பொருளை விரும்பி, அவர்களால் வெறுக்கத்தக்க செயல்களை ஒருவன் செய்தால் அவனுடைய பரந்த அறிவினால் என்ன பயன் (குறள் – 175) என்று கேட்பதோடு மட்டுமல்லாமல், அறநெறிகளைக் கற்றறிந்து, பிறர் பொருளை விரும்பாத அறிவுடையவர்களின் தகுதியை அறிந்து அவர்களிடம் செல்வம் போய்ச் சேரும் (குறள் – 179) என்றும் வள்ளுவர் கூறுகிறார். இந்தக் குறள்களிலிருந்து, வெஃகாமை போன்ற நன்னடத்தைக்குக் கல்வி கேள்விகளால் வரும் அறிவு பரந்தாக இருந்தாலும்கூட அது போதாது. பட்டறிவும் இயல்பான அறிவும், அஞ்சுவதற்கு அஞ்சும் மெய்யறிவும் தேவை என்று தெரிகிறது.

 

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.                                   (குறள் 175)

 

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு.                                  (குறள் 179)

 

பயனில சொல்லாமை என்ற அதிகாரத்தில், “அரிய பயனை ஆராய்ந்து தேடும் அறிவை உடையவர்கள் ஒருபோதும் மிகுந்த பயன் அளிக்காத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.(குறள் – 198).”, என்று வள்ளுவர் கூறுகிறார்.

 

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.                                     (குறள் - 198)

 

இங்கு வள்ளுவர் குறிப்பிடுவது கல்வி கேள்விகளால் வரும் அறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு அறிவு. ”எது பயனுள்ள சொல்?, எதை, எங்கு, எப்பொழுது சொல்லலாம்.” என்பவற்றை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்கு, இயல்பறிவு, பட்டறிவு ஆகியவற்றோடு கலந்த அறிவு – அதாவது மெய்யறிவு – தேவை என்பது பெறப்படுகிறது. அதுபோல், தீவினையச்சம் என்ற அதிகாரத்தில், பகைமையினால் தமக்குத் தீமை செய்தவர்க்கும் தீமை செய்யாமல் இருப்பதுதான் அறிவினுள் எல்லாம் சிறந்த ஆறிவாகும் (குறள் – 203) என்கிறார் வள்ளுவர். பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிந்திருந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்குப் பயிற்சியும் பட்டறிவும் தேவை. இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில், ”பிறருடைய துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதாவிட்டால், தாம் பெற்ற அறிவினால் என்ன் பயன் (குறள் – 315)?”, என்று வள்ளுவர் கேட்கிறார். பிறர் துன்பதைத் தம் துன்பமாகக் கருத வேண்டும் என்பது பள்ளி அல்லது கல்லூரியில் பெறும் அறிவால் வருவதில்லை.

 

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.                          (குறள் 203)

 

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.                      (குறள் 315)

 

ஒருவரைப் பணிக்குத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று கல்வி கேள்வி ஆகியவற்றால் பெறும் அறிவின் உதவியால் மட்டும் முடிவு செய்ய முடியாது என்பது பலரும் அறிந்த உண்மை. தற்காலத்தில், பல நிறுவனங்களில், ஒருவரை பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்குமுன் அவரைப் பலரும் நேர்காணல் செய்வதும், சில சமயங்களில் உளவியல் அறிஞர்கள் நேர்காணல் செய்வதும், சில உளவியல் சோதனைகள் நடத்துவதும் வழக்கமாக உள்ளது. தெரிந்து தெளிதல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் அறிவுரைகள் அனைத்தும் ஒருவரை ஒரு பணிக்குத் தேர்ந்தெடுக்குமுன் மெய்யறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.  அதுபோல், தெரிந்து வினையாடல் என்ற அதிகாரத்திலும் வள்ளுவர் கூறும் அறிவுரைகள் மெய்யறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது. ஒரு உதாரணம்: மன்னரைச் சேர்ந்தொழுகல் என்ற அதிகாரத்தில், வலிமையுள்ள மன்னரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் முதலியோர், அவரிடமிருந்து மிக நீங்காமலும் அவரோடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்காய்வார்போல் இடைப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும் (குறள் – 691) என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.  வள்ளுவர் கூறும் அறிவுரையை நாம் திருக்குறளிலிருந்து கற்றுக்கொள்ளலாம்; புரிந்துகொள்ளலாம். ஆனால் எப்பொழுது நீங்கவேண்டும், எப்பொழுது அணுக வேண்டும் என்பதை நாம் நம்முடைய அனுபவத்தினால் பெற்ற பட்டறிவால்தான் பெறமுடியும். ஆகவே, வலிமையுள்ள பெரியோர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கல்வியறிவும் பட்டறிவும் கலந்த மெய்ய்றிவால்தான் முடிவு செய்ய இயலும்.

 

ஆகவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் பள்ளி அல்லது கல்லூரியில் பெறும் கல்வியினால் பயனில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் எந்தச் சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் கற்பிக்க முடியாது. முறையான கல்வியினால் வரும் அறிவு தேவை. ஆனால், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையும் பயனும் உள்ளது கல்வி கேள்விகளால் பெறும் அறிவு, பட்டறிவு, இயல்பறிவு ஆகியவற்றின் கலவையாகிய மெய்யறிவுதான்.  அறிவு ஒரு சிறந்த ஆற்றல் என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு (Knowledge is Power.). அது உண்மைதான். ஆனால், மெய்யறிவு அறிவைவிடச் சிறந்த ஆற்றல் (Knowleldge is power; but wisdom is more powerful.) என்பது பல குறட்பாக்களிலிருந்து தெரிகிறது.

 

முடிவுரை

அறிவு என்ற சொல் பலபொருள்களைக் குறிக்கும் ஒரு சொல். அறிவு என்பது அறிதல், அறிந்தசெய்தி, ஓதி, மதி, ஆகிய நான்கையும் குறிக்கும் ஒருசொல் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார். திருக்குறளை நன்கு ஆராய்ந்து பார்த்தால், வள்ளுவர் பலகுறட்பாக்களில் குறிப்பிடுவது, அறிவு, பட்டறிவு, இயல்பறிவு ஆகிய அனைத்தையும் கலந்து, சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவெடுக்கும் ஆற்றலாகிய மெய்யறிவைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

 

துணைநூல்கள்

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural)

தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, 600 017

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம்,  மதுரை: 1999.