Statcounter

Friday, October 25, 2019

திருக்குறளில் மனிதநேயம்


திருக்குறளில் மனிதநேயம்

நேயம் என்ற சொல்லுக்கு அன்பு என்று பொருள். மனிதநேயம் என்ற சொல்லுக்கு மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் காட்டும் அன்பு என்று பொருள். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய வாழ்க்கையில், தன் குடும்பம், உற்றார், உறவினர் போன்ற தொடர்புடையவர்களோடும், தொடர்பில்லாத மற்றவர்களோடும் பழகும் வாய்ப்பு இயற்கையாகவே அமைகிறது. தொடர்புள்ள மனிதர்களோடு ஒரு மனிதன் காட்டும் அன்பையும், தொடர்பில்லாத மற்ற மனிதர்களோடு ஒரு மனிதன் காட்டும் அன்பையும், திருவள்ளுவர் அழகாகவும், விளக்கமாகவும் தெளிவாகவும் பல குறட்பாக்களில் கூறியுள்ளார். மனிதநேயக் கருத்துக்கள் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் ஆகிய திருக்குறளின் மூன்று பகுதிகளிலும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

.நெருங்கிய தொடர்புடையவர்களிடம் காட்டும் அன்பு
தன்னுடைய காதலிக்கும் தனக்கும் உள்ள உறவை, நட்பு என்றும் அது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் போன்றது என்றும் காதலன் கூறுவதாக காமத்துப்பாலில் வள்ளுவர் கூறுகிறார்.

          உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
         மடந்தையொடு எம்மிடை நட்பு.                                       (குறள் – 1122)

அவனுடைய காதலி, தனக்கும் தன் காதலனுக்கும் உள்ள உறவைப் பற்றிக் கூறும்பொழுது, தன் காதலன் தன் கண்ணுக்குள்ளே இருப்பதால், தான் தன் கண்ணுக்கு மையிடுவதில்லை என்றும், அவன் தன் நெஞ்சில் இருப்பதால், தான் சூடான பொருட்களை உண்ணுவதற்கு அஞ்சுவதாகவும் கூறுகிறாள்.

          கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.                                                (குறள் – 1127)

நெஞ்சத்தால் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.                                               (குறள் – 1128)

இந்தக் குறட்பாக்களிலிருந்து, காதலர்களிடையே உள்ள உறவு, அளவு கடந்த அன்பின் அடிப்படையில் அமைந்ததாகத் தெரிகிறது. இந்தக் காதலர்கள், திருமணத்திற்குப் பிறகு, கணவன் மனைவியாக வாழும்பொழுது, அவர்களுடைய இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக இருந்தால்தான் அது பண்பும் பயனும் உள்ளதாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

          அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.                                                           (குறள் – 45)

ஒருவன், அன்போடும் அறத்தோடும் இல்வாழ்க்கை நடத்தும்பொழுது, அவனோடு தொடர்புடைய மனைவி, மக்கள், பெற்றோர் மற்றும் உறவினர் (ஒக்கல்) ஆகியோருக்கு, அவன் உற்ற துணையாகவும் ஆதரவாகவும் இருந்து அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தையும் நாம் திருக்குறளில் காண்கிறோம்.  ஆகவே, தொடர்புடைய அனைவரிடமும் ஒருவன் அன்பாக இருக்க வேண்டும் என்பது திருக்குறளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

          இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
         நல்லாற்றின் நின்ற துணை.                                                   (குறள் – 41)

          தென்புலத்தார் தெய்வம், விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
         ஐம்புலத்தார் ஓம்பல் தலை.                                                    (குறள் – 43)

தன்னுடைய குடியை மேன்மேலும் முன்னேற்றும் முயற்சியைக் கைவிடேன் என்னும் பெருமையைப்போல சிறந்த பெருமை ஒருவனுக்கு வேறு ஒன்றுமில்லை என்று வள்ளுவர் கூறுவது, ஒருவனுக்குத் தன் குடும்பத்தின் மீதுள்ள மனிதநேயத்தின் சிறப்பையும் அதன் பெருமையையும் குறிக்கிறது. 

          கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
         பெருமையின் பீடுடையது இல்.                                            (குறள் – 1021)

ஆகவே, ஒருவன் தன்னோடு நெருங்கிய தொடர்புடைய அனைவரிடத்தும் மனிதநேயத்தோடு இருக்க வேண்டும் என்ற கருத்து திருக்குறளில் வலியுறுத்தப்படுவதைக் காண முடிகிறது.

நெருங்கிய தொடர்பில்லாதவர்களிடம் காட்டும் அன்பு
முதலில் தொடர்பில்லாமலிருந்தாலும், காலப்போக்கில் ஒருவன் சிலரோடு நட்பு கொள்கிறான். நட்பு கொண்டபிறகு, அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்குமிடையே உள்ள உறவு நெருக்கமாகிறது. அந்த நட்பினால், நண்பர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல், தன்னுடைய ஆடை நழுவினால், அதை ஒருவன் உடனே சரிசெய்துகொள்வதைப்போல் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை, வள்ளுவர்

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.                                                (குறள் - 788)

என்ற குறளில் கூறுகிறார். இவ்வாறு உதவி செய்வதும் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டுதான்.

வள்ளுவர் காலத்திற்கு முன்பும், அவர் காலத்திலும் துறவிகளுக்கு உணவளிப்பது இல்வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமையாகக் கருதப்பட்டது. உடல் ஊனமுற்றதால் அல்லது வறுமையால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் வருந்தியவர்கள் துவ்வாதவர் என்று அழைக்கப்பட்டனர். துறவிகளுக்கும், துவ்வாதார்க்கும், வாழ்க்கைப் பாதையில் வழிதவறியவர்களுக்கும் (இறந்தார்க்கும்), இலவாழ்க்கையில் இருப்பவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது தொடர்பில்லாதவர்களிடத்தும் ஒருவன் மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

          துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
         இல்வாழ்வான் என்பான் துணை.                                                    (குறள் – 42)

இக்காலத்தில் இருப்பதுபோல், திருவள்ளுவர் காலத்தில் நாடெங்கிலும் விடுதிகள் இல்லாததால், ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்பவர்களுக்குத் தன் வீட்டில், உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து ஆதரிப்பது இல்வாழ்க்கையில் இருப்பவனின் கடமையாகக் கருதப்பட்டது. இவ்வாறு தொடர்பில்லாதவர்களை ஆதரிப்பது விருந்தோம்பல் என்று அழைக்கப்பட்டது. இல்வாழ்க்கை நெறிநின்று வாழ்வதின் நோக்கம் விருந்தோம்பல் என்று வள்ளுவர் கூறுவது திருக்குறளில் உள்ள மனிதநேயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை.                                                      (குறள் – 43)

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.                                              (குறள் – 81)

மக்கள் அனைவரும் பிறப்பினால் சமம் என்றும், பிறர் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுவதுதான் ஒருவன் அறிவினால் பெற்ற பயன் என்றும் வள்ளுவர் கூறுவது திருக்குறளில் காணப்படும் மனிதநேயத்திற்கு மற்றுமொரு சான்று.

          பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
         செய்தொழில் வேற்றுமை யான்.                                                (குறள் – 972)

         ஆறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
         தன்நோய்போல் போற்றாக் கடை.                                             (குறள் – 315)

மக்கள் அனைவரும் சமம் என்று உணர்வதும், மற்றவர்கள் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதுவதும் உயர்ந்த மனிதநேயக் கோட்பாடுகள்தான்.  ஆனால், அந்தக் கோட்பாடுகளை உள்ளத்தால் உணர்வதுதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவற்றைச் செயலிலும் காட்ட வேண்டும் என்றும், தன்னிடம் உள்ள உணவு, செல்வம் ஆகியவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதுதான் தலையாய செயல் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.                                                      (குறள் - 322)

நாம் பிறருக்கு உதவி செய்வதை வள்ளுவர் இரண்டு வகையாகப் பிரிக்கிறார். ஒன்று, வறுமையில் வாடுபவர்கள் நம்மிடம் வந்து கேட்கும்பொழுது இல்லையென்று கூறாமல், நம்மால் இயன்றதைப் பிறருக்கு அளித்து உதவுவதை வள்ளுவர் ஈகை என்று கூறுகிறார். வறியவர்களுக்குத் தேவையானவற்றை, அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் நாம் கொடுத்து உதவுவதுதான் உண்மையான ஈகை என்ற கருத்தும் திருக்குறளில் காணப்படுகிறது.

          வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.                                                        (குறள் – 221)

வறுமையில் உள்ளவர்களின் நிலையை உணர்ந்து, அவர்கள் வந்து கேட்காமலேயே, அவர்களுக்குப் பலவகைகளிலும் உதவி செய்வது ஒப்புரவு. மற்றவர்களும் தன்னைப் போன்றவர்கள்தான் என்பதை உணர்ந்தவன்தான் உயிரோடு வாழ்பவன் என்றும் அவ்வாறு உணராதவன் செத்தவன் என்றும், ஒருவன் பாடுபட்டுத் தேடிய பொருளெல்லாம் தகுதி உடையவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்குத்தான் என்றும் ஒப்புரவைப் பற்றிய வள்ளுவரின் கருத்துக்கள் திருக்குறளில் காணப்படும் ஒப்புயர்வற்ற மனிதநேயக் கருத்துக்களாகும்.

          ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
         செத்தாருள் வைக்கப் படும்.                                                      (குறள் – 214)

         தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
         வேளாண்மை செய்தற் பொருட்டு.                                            (குறள் – 212)

ஒப்புரவு செய்வதை வள்ளுவர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். ஒன்று, பலகாலம் பலருக்கும் உண்ண நீரளிக்கும் ஊருணிபோல் ஒப்புரவு செய்வது. இது மிகுந்த அறிவுடையவன் ஒப்புரவு செய்யும் முறை. அவன் தன் செல்வத்தைப் பலகாலம் பலருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்தளிப்பான். உதாரணமாக, ஒருவன் தன் பணத்தை வங்கியில் வைத்து, அதிலிருந்து வரும் வட்டியை ஒப்புரவு செய்வதற்குப் பான்படுத்தினால், அவன் பலகாலம் பலருக்கும் உதவ முடியும். பல செல்வந்தர்களும், நிறுவனங்களும் அறக்கட்டளைகளை நிறுவி, வங்கியில் உள்ள பணத்திலிருந்து கிடைக்கும் வட்டியை வைத்துப் பலருக்கும் உதவுவது இந்த வகையைச் சார்ந்தது. மற்றொரு வகையான ஒப்புரவு, உள்ளூரில் உள்ள மரம் தன்னிடம் உள்ள கனிகளைத் தன்னிடம் வருபவர்களுக்கு அளிப்பதைப் போன்றது.  ஒருசில நாட்கள் (அல்லது மாதங்கள்) மட்டுமே மரத்தில் பழங்கள் இருக்கும். தன்னிடம் வருபவர்களுக்குத் தன்னிடம் உள்ள பழங்களை எல்லாம் கொடுத்த பிறகு, அடுத்த ஆண்டு பழங்கள் வரும்வரை அந்த மரம் எவருக்கும் பயனளிக்க முடியாது. இதை அன்புடையவன் செய்யும் ஒப்புரவுக்கு வள்ளுவர் ஒப்பிடுகிறார். செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒப்புரவு இந்த வகையையச் சார்ந்தது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் பணம் இல்லையென்றால், அதன் பொறுப்பாளர்கள் நிதி திரட்ட வேண்டும். நிதி கிடைக்கும்வரை எவருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது. இது சிலகாலம் பலருக்கும் பயன்படும் பழமரத்தைப் போன்றது. மூன்றாவதாக, பிறருக்கு வழங்கி மகிழும் பண்புடைய பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம், தன்னுடைய பட்டை, வேர், இலை, காய், கனி போன்ற எல்லாவற்றையும் பிறருக்குக் கொடுத்துத் தன்னையே அழித்துக்கொள்ளும் மருந்துமரத்தைப் போன்றது என்கிறார் வள்ளுவர். இது சிலருக்குச் சிலகாலம் மட்டுமே பயன்படும் ஒப்புரவு. இந்த மூன்று வகையான ஒப்புரவைப் பற்றிக் கீழ்வரும் குறட்பாக்களில் காணலாம்.

          ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
         பேரறி வாளன் திரு.                                                                (குறள் – 215)

         பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
         நயனுடை யான்கண் படின்.                                                     (குறள் – 216)

         மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
         பெருந்தகை யான்கண் படின்.                                                  (குறள் – 217)

இது போன்ற ஓப்புரவையும் ஈகையையும் அனைவரும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், கைம்மாறு கருதாமல் பெய்யும் மழையைப்போல் செய்ய வேண்டும் (குறள் – 211) என்பதும், பிறருக்கு உதவி செய்வதால் மேலுலகம் செல்லும் வாய்ப்பில்லை என்றாலும், அதைக் கடமையாகக் கருதிச் செய்ய வேண்டும் (குறள் – 222) என்பதும் குறள் கூறும் மனிதநேயக் கருத்துக்கள்.

மன்னனின் மனிதநேயப் பண்புகள்
தனிமனிதன் மட்டுமல்லாமல், நாட்டை ஆளும் மன்னனும் மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது. மன்னன் காட்சிக்கு எளியவனாகவும், கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். மற்றும், மன்னன் நீதி தவறாது, முறைசெய்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தும், மன்னன் கொடை, அன்பு, செங்கோல் செலுத்துதல், குடிகளைக் காப்பாற்றுதல் ஆகிய பண்புகளை உடையவனாக இருக்க வேண்டும் என்ற மனிதநேயக் கருத்துக்களையும் திருக்குறளில் காணலாம். குடிமக்களை அரவணைத்துத் தழுவி வாழும் மன்னனே சிறந்தவன் என்றும், மழைத்துளி இல்லையென்றால் எப்படி உலகம் வாழாதோ அதுபோல் மன்னனின் அருளாட்சி இல்லையென்றால் மக்கள் வாழ முடியாது என்றும் வள்ளுவர் கூறுவது மன்னனுக்கு மனிதநேயத்தின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது.

          காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.                                                        (குறள் – 386)

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.                                                  (குறள் – 388)

கொடயளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தற்க்கு ஒலி.                                               (குறள் – 390)

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.                                                (குறள் – 557)

மன்னனுக்கு மக்கள்மீது மனிதநேயம் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது மன்னனுக்கு மட்டுமல்லாமல் இக்காலத்தில் ஆட்சியில் இருக்கும் அனைவருக்கும், நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பொருந்தும்.

மனிதநேயத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
மனிதநேயத்தால் உந்தப்பட்டு, தன் இனத்தின் முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்விற்காகவும் அயராது உழைத்த பெருமைக்குரியவர் பலர். அவர்களுள் தந்தை பெரியார், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தியடிகள், அன்னை தெரேசா போன்றவர்களின் சிந்தனையும் செயலும் மனிதநேயத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அவையனைத்தும் மனிதநேயத்தின் சிகரம் என்றால் அது மிகையாகாது.  தமிழ்ச் சமுதாயத்தைத் தன் குடும்பமாகக் கருதி, பெண்ணுரிமைக்காகவும்,, தாழ்த்தப்பட்டோரின் சமத்துவத்திற்காகவும், சாதி, மதம், மூடநம்பிக்கை ஆகியவற்றின் தளைகளிலிருந்து தன் சமுதாயத்தை மீட்பதற்காகவும், தமிழர்களிடையே சுயமரியாதைச் சிந்தனையையும் பகுத்தறிவையும் பரப்புவதற்காகவும் தன்னலமின்றித் தன் வாழ்நாள் முழுதும் போரிட்டார் தந்தை பெரியார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரல்லாதாரின் சம உரிமைக்காக, வெள்ளையரின் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடி, இருபத்தேழு ஆண்டுகள் சிறை சென்று, முடிவில் வெற்றிபெற்று, அந்த நாட்டில் குடியாட்சி மலரச்செய்து, தன் இனத்தவருக்குச் சம உரிமை பெற்றுத் தந்த பெருமைக்குரியவர் நெல்சன் மண்டேலா. அவருடைய வெற்றி மனிதநேயத்தின் வெற்றி. காந்தியடிகளின் வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தி, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மனித உரிமைக்காக மனிதநேயத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் போராடி வெற்றிபெற்றவர் நோபல் பரிசு பெற்ற மார்ட்டின் லூதர் கிங். குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு மட்டுமல்லாமல், தன் நாட்டில் உள்ள எல்லா இனத்தவருக்கும் வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுத் தருவதற்காக, வன்முறையற்ற போராட்டத்தை மனிதநேயத்தின் அடிப்படையில்  கையிலெடுத்து  மகாத்மா காந்தியடிகள் பெற்ற வெற்றியும் மனிதநேயத்தின் வெற்றிதான், எங்கோ (அல்பேனியாவில்) பிறந்து, எங்கோ (அயர்லாந்தில்) வளர்ந்து, இனம் நாடு என்ற எல்லைகளைக் கடந்து,  இந்தியாவிற்கு வந்து, அங்குள்ள ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் மனிதநேயத்தோடு தன் வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய அன்னை தெரேசா அவர்களின் மனிதநேயத்தோடு கூடிய சேவை அளப்பரிய பெருமைக்குரியது.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், இந்த உலகம் ஏன் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சிந்தித்தான். ஆழ்ந்து சிந்தித்த பிறகு, அவன் “தனக்கென்று வாழாமல் பிறருக்காக வாழும் தன்னலமற்றவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிகொண்டிருக்கிறது.(புறநானூறு 182)” என்ற முடிவுக்கு வந்தான். தந்தை பெரியார், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தியடிகள் மற்றும் அன்னை தெரேசா போன்றவர்களின் மனிதநேயச் சிந்தனையும் செயல்பாடுகளும் பாண்டிய மன்னனின் முடிவை உறுதிப்படுத்துகின்றன.

அனைவருக்கும் இருக்க வேண்டிய மனிதநேயப் பண்புகள்
அன்பில்லாத மனிதன் உயிரில்லாதவன் என்றும் அவன் வெறும் எலும்பும் தோலும் சேர்ந்த உடம்பு மட்டுமே என்றும் வள்ளுவர் கூறுகிறார்(குறள் - 80). ஆகவே, அன்பில்லாத மனிதனே இல்லை. அன்புதான் மனிதநேயத்தின் அடித்தளம். அதனால், ஒவ்வொருவரும், அன்பை வளர்த்து, மக்கள் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு, அனைவரிடமும் இன்சொல்பேசி, விருந்தோம்பி, அடக்கத்தோடும், ஒழுக்கத்தோடும் பழகி, பொறுமையைப் பேணிக்காத்து, அழுக்காறு இல்லாமல், பிறர் பொருளைக் கவரும் எண்ணம் இல்லாமல், பயனில சொல்லாமல், புறங்கூறாமல், தீவினைகளை விலக்கி, ஈகையும் ஒப்புரவும் செய்து, வாய்மையே பேசி, சினத்தைத் தவிர்த்து, இன்னாசெய்தார்க்கு அவர் நாணூமாறு நன்னயம் செய்து (குறள் - 314), பிறர் நலத்தைத் தன்னலம்போல் கருதி,  எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணா செய்யாமல் அன்போடு வாழ்வதுதான் (குறள் - 317) திருக்குறள் கூறும் மனிதநேயம் என்னும் தலைசிறந்த பண்பு. இத்தகைய மனிதநேயத்தோடு வாழ்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்றும், மனிதநேயம் உள்ளவர்கள் இல்லையென்றால், இவ்வுலகம் மண்ணுக்குள் மறைந்து அழிந்துவிடும் என்றும் வள்ளுவர்,

          பண்புடையர்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
         மண்புக்கு மாய்வது மன்.                                            (குறள் - 996)

என்ற குறளில் கூறி, மனிதநேயத்தின் சிறப்பையும் அதன் இன்றியமையாமையையும் வலியுறுத்துகிறார். மனிதநேயத்தால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதில் பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் கருத்தும் வள்ளுவர் கருத்தும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது

துணைநூல்கள்
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை.
பிரபாகரன், இர. புறநானூறு – மூலமும் எளிய உரையும் (பகுதி – 1), காவ்யா பதிப்பகம், சென்னை,
Prabhakaran, R. Dr., The Ageless Wisdom (As embodied in Thirukkural), Emerald Publishers, Chennai

4 comments: