Statcounter

Tuesday, November 5, 2019

இல்லறமே நல்லறம்


இல்லறமே நல்லறம்

வாழ்க்கையின் நான்கு நிலைகள் (ஆசிரமங்கள்)
வேதமும் மனுஸ்மிருதியும் மனித வாழ்க்கையை நான்கு நிலைகளாகப் (ஆசிரமங்களாகப்) பிரிக்கின்றன.  அந்த நான்கு நிலைகள் பிரமச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் என்று அழைக்கப்படுகின்றன. முதல் நிலையாகிய பிரமச்சரியம் என்பதில் ஒருவன் தன்னுடைய ஆசிரியரின் (குருவின்) வீட்டில் தங்கியிருந்து தன் குலத்துக்கேற்ற கல்வி கற்கிறான். இந்த நிலை அவனுடைய எட்டு வயதில் தொடங்கி, இருபத்தி நான்கு வயதில் முடிவடைகிறது. பிரமச்சரிய நிலையில் இருக்கும் ஒருவன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. அடுத்த நிலையாகிய கிரஹஸ்தம் என்பது இருபத்தி நான்கு வயதில் தொடங்கி நாற்பத்தி எட்டு வயதில் முடிவடைகிறது. இந்த நிலையில், ஒருவன் திருமணம் செய்துகொண்டு, தன் மனைவி மக்களுடன் வாழ்கிறான். அடுத்த நிலையாகிய வானப்பிரஸ்தம் நாற்பத்தி எட்டு வயதில் தொடங்கி எழுபத்தி நான்கு வயதில் முடிவடைகிறது. இந்த நிலையில், ஒருவன் தன் மனைவியுடன் காட்டுக்குச் சென்று, தன்னுடைய பற்றுக்களைக் குறைத்துக்கொண்டு வாழ்கிறான். கடைசி நிலையாகிய சன்னியாசம் எழுபத்தி நான்கு வயதில் தொடங்கி அவன் வாழ்நாள் முழுதும் நீடிக்கிறது. இந்த நிலையில் உள்ளவன் பற்றுக்களை முற்றிலும் துறந்து, இறைவனை அடைவதற்காகத் தவம் செய்கிறான். ஒருவன் கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம் ஆகிய நிலைகளில் தன் வாழ்நாளைக் கழிக்காமல், பிரமச்சரிய நிலையிலிருந்து நேராக சன்னியாச நிலைக்குச் செல்லலாம். இந்த நான்கு நிலைகளும் பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கு மட்டுமே உரியவை. சூத்திரர்களுக்கும் இந்த நான்கு நிலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகக் கூறப்படவில்லை. சூத்திரர்கள் பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும் பணி செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள்! இந்தக் கருத்துக்களை மனுஸ்மிருதியில் காணலாம்.

இல்லறமே நல்லறம்
தமிழ்ச் சமுதாயத்தில் எவரும் இல்லறவாழ்க்கைக்குப் பிறகு தன்மனைவியோடு காட்டுக்குச் சென்று வாழ்ந்தர்கள் என்பதற்குச் சான்றுகள் இல்லை. சங்க காலத்திலும் அதற்கு முன்பும் சில தெய்வ வழிபாடுகளும் நடுகல் வழிபாடும் இருந்ததற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன. இப்பிறவியில் அறநெறியில் வாழந்தவர்கள், இறந்த பிறகு துறக்கத்திற்குச் (சுவர்க்க உலகத்துக்கு அல்லது விண்ணுலகத்துக்குச்) செல்வார்கள் என்ற கருத்தும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ஆனால், சங்க காலத் தமிழர்களிடையே, துறவறம் மேற்கொண்டு, தவம் புரிந்தால், இறந்த பிறகு, ஆத்மா இறைவனோடு கலந்துவிடுகிறது என்ற கருத்தோ அல்லது இறைவனோடு கலக்காமல் தனித்து, மீண்டும் பிறவாத நிலையை அடைகிறது என்ற கருத்தோ காணப்படவில்லை. அதாவது, சங்க காலத் தமிழர்களிடையே அத்வைத அல்லது துவைதக் கருத்துக்கள் பரவலாக இருந்தததற்குச் சான்றுகள் இல்லை. அத்வைதமும் துவைதமும் வேதத்தின் அடிப்படையில் தோன்றிய ஆரியக் கருத்துக்கள்.

திருக்குறளில், அவாவை அறுத்தால் பிறவாத நிலையை அடையலாம் என்ற கருத்து காணப்படுகிறது. அவாவை அறுப்பதற்குத் துறவறம் துணைபுரியும் என்ற கருத்தும் காணப்படுகிறது. ஆனால், துறவறம் மனிதனின் வாழ்க்கையில் ஒருநிலை என்ற கருத்தோ, அல்லது ஒருவன் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டியது என்ற கருத்தோ திருக்குறளில் இல்லை. ஒருவன் விரும்பினால் துறவறம் மேற்கொள்ளலாம். என்ற கருத்தையே திருக்குறளில் காண்கிறோம்.

வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின்
ஈண்டு இயற்பால பல.                                          (குறள் – 342)

ஆகவே, சங்க காலத்திலும், வள்ளுவர் காலத்திலும், திருமணம் செய்துகொண்டு மனைவி மக்களுடன் இல்லறத்தில் வாழ்வதுதான் தமிழர்களின் வாழ்க்கை நெறி. தமிழர்களிடையே, பிரமச்சரியம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற வாழ்க்கை நிலைகள் இருந்ததாகத் தெரியவில்லை.  அந்த வாழ்க்கை முறைகள் தேவையற்றவை என்ற கருத்தையும், இல்லறமே நல்லறம் என்ற கருத்தையும் திருக்குறளில் காண்கிறோம்.
”ஒருவன் இல்வாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின் அதற்குப் புறம்பாகிய (பிரமச்சரியம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் போன்ற) வேறுநெறிகளைப் பின்பற்றுவதால் பெறும் பயன் என்ன?” என்ற வினாவை வள்ளுவர் எழுப்புகிறார்.

         அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன்?                                             (குறள் – 46)

மற்றவர்களை நல்லநெறியில் ஆற்றுப்படுத்தி, அறம் தவறாத வாழ்க்கை நடத்தும் இல்லறம், தவம் புரிபவர்களின் தவத்தைவிட வலிமையானது.

          ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
         நோற்பாரின் நோன்மை உடைத்து.                                   (குறள் – 48)

மேலே குறிப்பிடப்பட்ட  குறட்பாக்களிலிருந்து, பிரமச்சரியம், வானப்பிரஸ்தம் சன்னியாசம் போன்ற நெறிகளைவிட இல்லறமே சிறந்தது என்பது வள்ளுவரின் கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது. மற்ற நெறிகளைவிட இல்லறம்தான் சிறந்தது என்று கூறுவதோடு நிறுத்தாமல், அறம் என்றாலே இல்லறம்தான் என்றும் வள்ளுவர் கூறுகிறார். அந்த இல்லறமும் பிறரின் பழிக்கு இடமில்லாமல் நடத்தப்பட்டால் மிகச் சிறந்தது என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது. இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், வேறு (வானப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் போன்ற) வழிகளில் வாழ முயல்பவர்களைவிடச் சிறந்தவன் என்ற கருத்தையும் குறளில் காணாலாம். 

அறன்எனப் பட்டதே இல்வாழக்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.                                   (குறள் – 49)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.                                           (குறள் – 47)

இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும் கருத்தொருமித்து அன்போடு வாழ்வதும், அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகள் மற்றும் உற்றார் உறவினர் அனைவரோடும் அன்போடு வாழ்வதும் இல்லறத்தின் பண்பு. இல்லற வாழ்க்கை நடத்துபவர்கள் மற்றவர்களிடம் அன்பு காட்டுவது மட்டுமல்லாமல், விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை. பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புலால் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அறங்களையும் கடைப்பிடித்து வாழ்வார்களானல், அந்த அறங்களினால் வரும் பயன்களையும் அவர்கள் அடைவார்கள். அன்பினால் வருவது இல்லறத்தின் பண்பு. அறத்தினால் வருவது இல்லறத்தின் பயன்.

          அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
         பண்பும் பயனும் அது.                                                    (குறள் – 45)

சிறந்த வாழ்க்கைநெறியாகிய இல்லறத்தைப் பின்பற்றி, இவ்வுலகில் எப்படி வாழவேண்டுமோ அப்படி ஒருவன் வாழ்ந்தால், அவன் வானத்தில் இருப்பதாகக் கருதப்படும் தெய்வத்திற்கு நிகரானவன் என்று வள்ளுவர் இல்லறத்தின் சிறப்பைப் புகழ்கிறார்.

          வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
         தெய்வத்துள் வைக்கப் படும்.                                           (குறள் – 50)

குறளில் கூறப்பட்டுள்ள அறங்களைப் பின்பற்றி, ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் கூடி, பிறரால் பழிக்கப்படாத தூய்மையான இல்லற வாழ்க்கை வாழ்வதுதான்  ”வையத்து வாழ்வாங்கு வாழ்தல்”  என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. அத்தகைய இல்லற வாழ்க்கை, ஆரியக் கருத்துக்களின் அடிப்படையில் தோன்றிய மற்ற வாழ்க்கைநெறிகளைவிடச் சிறந்தது என்பதை வள்ளுவர் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் வலியுறுத்துகிறார்.

இல்வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமைகள்
இல்லறத்தைப் பின்பற்றுபவனின் கடமைகளை இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் முதல் மூன்று குறட்பாக்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். அந்த மூன்று குறட்பாக்களில், இல்லறத்தைக் கடைப்பிடிப்பவன் எவருக்கெல்லாம் துணையாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. அந்த மூன்று குறட்பாக்களும், ஒருஆண்மகனுக்குரிய கருத்துக்களாக, ஆண்பாலில் எழுதப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் குடும்பத்தில் உள்ள கணவனுக்கு மட்டுமல்லாமல் மனைவிக்கும் பொருத்தமானதாகக் கருதுவதே ஏற்றதாகும். மனைவியின்றி, தனித்து இயங்கி, விருந்தோம்பல் போன்ற பல உதவிகளைச் செய்து, பிறருக்குத் துணையாகக் கணவனால் மட்டுமே செய்யமுடியாது.

முதல் குறள்:

          இல்வாழ்வான் என்பான்  இயல்புடைய மூவர்க்கும்
         நல்லாற்றின் நின்ற துணை.                                             (குறள் – 41)

இந்தக் குறளில் கூறப்பட்டுள்ள “இயல்புடைய மூவர்” என்பதற்கு உரையாசிரியர் பலரும் பலவகையான கருத்துக்களை கூறுகின்றனர். திருக்குறளுக்கு வெளிவந்துள்ள பல உரைகளை ஒப்பிட்டு, பேராசிரியர் இரா. சாரங்பாணி அவர்களால் எழுதப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் 1989 – ஆம் ஆண்டு பதிப்பிக்கபட்ட, “திருக்குறள் உரைவேற்றுமை – அறத்துப்பால்” என்ற நூலிலிருந்து. “இயல்புடைய மூவர்” என்பதற்குக் காணப்படும் விளக்கங்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.

பரிமேலழகர்:
ஆசாரியானிடத்தினின்று ஓதுதலும், விரதங் காத்தலுமாகிய பிரமசரிய ஒழுக்கத்தானும் இல்லைவிட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ்செய்யும் ஒழுக்கத்தானும் முற்றும் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்.

வ. உ. சிதம்பரம் பிள்ளை:
இயல்பாக உள்ள தாய், தந்தை, தாரம் என்னும் மூவர்.

திரு. வி. கலியாணசுந்தரனார்:
பண்பு வாய்ந்த ஊர்மன்றத் தலைவராகிய மூவர்.

வ. சுப, மாணிக்கனார்:
மரபான மூவேந்தர்

தேவநேயப் பாவாணர்:
அந்தணர், அரசர், வணிகர்

சி. இலக்குவனார்:
மாணவர், தொண்டர், அறிவர்

கா. அப்ப்பாதுரைப் பிள்ளை:
துறவோர், ஒழுக்கத்து நீத்தார், அந்தணர்

திருக்குறளார் வி. முனிசாமி:
பெற்றோர், மனைவி, மக்கள்


இவ்வாறு, பலரும் இந்தக் குறளுக்குப் பல விளக்கங்களை அளித்திருப்பதைப் பற்றி, ”வள்ளுவர் முப்பால் – அறத்துப்பால் (உரையும் உரைவும்)”  என்ற தன்னுடைய நூலில், “ ’இயல்பு’ யாது, ‘இயல்புடைய மூவர்’ யாவர் என்பன தெளிவுபடவில்லை.” என்று பேராசிரியர் தி. முருகரத்தனம் குறிப்பிடுகிறார். மற்றும், ”இக்குறட்பாவில் உள்ளது தீராச் சிக்கல்” என்று மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தாரல் வெளியிடப்பட்ட ‘திருக்குறள் உரைக்களஞ்சியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் பேராசிரியர் தி. முரகரத்தனம் சுட்டிக்காட்டுகிறார். பல உரைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அவற்றிலுள்ள சில குறைகளைக் கூறாமல் இருக்கமுடியவில்லை.

  • ·       ஆரியக் கருத்துக்களாகிய, பிரமச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம்”என்பனவற்றை வள்ளுவர் ஏற்றுக் கொள்ளாததால், பரிமேலழகர் உரையும் அதை சார்ந்த மற்ற உரைகளும்  ஏற்புடையதாகத் தெரியவில்லை.
  • ·       இல்லறத்தில் இருப்பவன் துறந்தாருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற கருத்து அடுத்த குறட்பாவில் காணப்படுவதால், துறந்தாரைக் குறிப்பிடும் உரைகள் ஏற்றவையாகத் தோன்றவில்லை.
  • ·       தமிழகத்தில் சேர, சோழ பாண்டிய நாடுகளை ஆண்ட மூவேந்தர்கள் மட்டுமல்லாமல் பல குறுநில மன்னர்களும் இருந்தனர். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒரு நாட்டில் இருந்தவன் மற்றொரு நாட்டை ஆண்ட மன்னனுக்குத் துணையாக இருந்திருப்பான் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை.

திருக்குறள் எந்நாட்டவர்க்கும், எக்காலத்துக்கும் ஏற்ற நூல் என்றால், அதில், பிரமச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம், அந்தணர், சத்திரியர், வணிகர், மூவேந்தர் போன்ற கருத்துக்களுக்கு இடம் இருக்கமுடியாது. இயல்பு என்ற சொல்லுக்கு “முறை” என்று ஒரு பொருள் உண்டு. ஒருவனுக்கு முறையாக, நெருங்கிய தொடர்புள்ளவர்கள் அவனுடைய மனைவி, மக்கள் மற்றும் பெற்றோர் ஆகிய மூவர் மட்டுமே. ஆகவே, ”இயல்புடைய மூவர்” என்பதற்குத் திருக்குறளார் வீ. முனிசாமி அவர்களின் விளக்கம் எக்காலத்திற்கும் எந்நாட்டவர்க்கும் ஏற்ற விளக்கமாகவும் சிறப்பானதாகவும் தோன்றுகிறது.

அடுத்த குறள்:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
         இல்வாழ்வான் என்பான் துணை.                                         (குறள் – 42)

வள்ளுவர் காலத்திற்கு முன்பும், அவர் காலத்திலும், துறவிகளுக்கு உதவியாக இருப்பதும் உணவளிப்பதும் இல்வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமையாகக் கருதப்பட்டது. இக்காலத்திலும் அது நடைபெறுகிறது. உடல் ஊனமுற்றதால் அல்லது வறுமையால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் வருந்தியவர்கள் துவ்வாதவர் என்று அழைக்கப்பட்டனர். துறவிகளுக்கும், துவ்வாதார்க்கும், வாழ்க்கைப் பாதையில் வழிதவறியவர்களுக்கும் (இறந்தார்க்கும்), இல்வாழ்க்கையில் இருப்பவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது, தொடர்பில்லாதவர்களிடத்தும் ஒருவன் அன்போடு பழகி அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் மனிதநேயக் கருத்து.

அடுத்த குறள்:

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை.                                                      (குறள் – 43)

தென்புலத்தார் என்பது இறந்த முன்னோர்களைக் குறிக்கும் சொல். அவர்களை நினைவு கூர்வதும் வழிபடுவதும் தமிழர் மரபு. தெய்வங்களுக்குப் பூசனைகள் நடத்துவது சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் வழக்கிலிருந்தது.  இக்காலத்தில் இருப்பதுபோல், திருவள்ளுவர் காலத்தில் நாடெங்கிலும் விடுதிகள் இல்லாததால், ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்பவர்களுக்குத் தன் வீட்டில், உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து ஆதரிப்பது இல்வாழ்க்கையில் இருப்பவனின் கடமையாகக் கருதப்பட்டது. சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் விருந்தினர் என்ற சொல் முன்பின் தெரியாத புதியவர்களைக் குறிக்கும் சொல்லாக வழக்கிலிருந்து. ஒக்கல் என்ற சொல் சுற்றத்தாரைக் குறிக்கிறது. இல்லறத்தில் இருப்பவன் முன்னோர்கள், தெய்வம், புதியவர்கள், சுற்றத்தார் ஆகியோருக்கு உதவி செய்வதும் உறுதுணையாக இருப்பதும் மட்டுமல்லாமல், தன்னையும் பாதுகாத்துகொள்ள வேண்டும். அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாவிட்டால், அவனால் மற்றவர்களுக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாது.
முடிவாக, வள்ளுவர் கருத்துப்படி, பலருக்கும் உறுதுணையாக இருந்து அறத்தோடும் அன்போடும் ஒருவன் வாழும் இல்வாழ்க்கையே மிகச் சிறந்த வாழ்க்கை நெறி என்பது பெறப்படுகிறது.



துணை நூல்கள்
Doniger, Wendy. The Laws of Manu, Penguin Books, India (P) Ltd, Community Centre, Panchsheel
Park, New Delhi9 110 017
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா
வளாகம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,
சென்னை, 600 017
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால் (உரையும் உரைவும்), தமிழ்ச்சோலை, 5 மூன்றாம்
தெற்குத் தெரு, மதுரை 625021

3 comments:

  1. நல்ல கட்டுரை...

    இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை.

    என்பதில், இறந்தவர்க்கு எங்ங்கனம் இல்வாழ்வான் எங்ஙனம் துணையாக இருத்தல் இயலும் என்ற வினா எழுகிறது. இதில், இறந்தவர் என்பதற்கு இவ்விடத்தில் என்ன பொருள் கொள்ளலாம் என்பதையும் அறியச் செயின் மகிழ்வு.

    ReplyDelete
  2. அன்பிற்குரிய செந்தில்,
    வணக்கம்.
    இறத்தல் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. இறத்தல் என்ற சொல்லுக்குக் கழகத் தமிழ் அகராதி தரும் பொருள்கள்: இறத்தல் – சாதல்; மிகுதல்; கடத்தல்; நீங்குதல்; கலுழ்தல்; வரம்பு கடத்தல்

    சிகாகோ பலகலைக் கழகத்தாரின் தமிழ் அகராதி கூறும் பொருள்கள்:
    இற-ததல் iṟa- , 12 v. tr. To go beyond, transcend, pass over; கடத்தல். புலவரை யிறந்த தோன்றல் (புறநா. 21). — intr. 1. To pass by, elapse, as time; கழிதல். இறந்தநாள் யாவர் மீட்பார் (சீவக. 2616). 2. To transgress, trespass, overstep; நெறிகடந்துசெல்லுதல். இல்லிறப்பா னெய்தும் . . . பழி (குறள், 145). 3. To excel, to be preeminent; மிகுதல். இறந்த கற்பினாட்கு (கலித். 9). 4. [M. iṟa.] To die; சாதல். இறந்தாரை யெண்ணிக் கொண் டற்று (குறள், 22). 5. To cease to be current, become obsolete; வழக்குவீழ்தல். இது இறந்தவழக்கு (சீவக. 2108, உரை). 6. To depart, leave; நீங்குதல். உம்ப ரிமைபிறப்ப (பரிபா. 17, 31).
    ஓரு சொல்லுக்குப் பலபொருள்கள் இருந்தால்,குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்தப்பொருள் சரியானது என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு ஆராயும் பொழுது, சங்க இலக்கியத்தில், இறத்தல் என்ற சொல், “சாதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்படாமல், ”கடத்தல்” என்ற பொருளில் பயபடுத்தப்பட்டதாக, “திருக்குறள் உரைவேற்றுமை” என்ற நூலில் இரா. சாரங்கபாணி அவர்கள் குறிப்பிடுகிறார். ஆகவே,
    துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை.
    என்ற குறளில் உள்ள “இறந்தார்” என்ற சொல். ”நெறிகடந்தார்” அல்லது ”வாழ்க்கை நெறிகளைக் கடந்தவர்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. நெறிகடந்தவர்கள் என்பது குடிப்பழக்கத்தால் ஒழுக்க நெறிகளைக் கடந்தவர்கள், சினத்தின் மிகுதியால் வரம்புமீறி நடந்தவர்கள், மிகுதியான காமத்தால் வரம்பு கடந்து தன் வாழ்க்கையைச் சீர்குலைத்துக்கொண்டவர்கள் போன்ற பலரையும் குறிக்கும். இது போன்றவர்கள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இல்வாழ்க்கையில் இருப்பவன் அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது இக்குறளின் கருத்து. இங்கு துணை என்பது உணவு அளிப்பது மட்டுமல்லாமல் பலவிதமான உதவிகளையும் குறிக்கும்.
    ”இறந்தார்” என்ற சொல் “நெறிகடந்தவர்” அல்லது “எல்லை மீறி வாழ்ந்தவர்” என்ற பொருளில் வேறு சில குறட்பாக்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
    உதாரணம்:
    துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர். (குறள் -159)
    எளிதென இல்இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி. (குறள் – 145)
    குறள் 159 – இல், இறந்தார் என்ற சொல், நெறி கடந்தவர் என்ற பொருளிலும், குறள் 145 -இல், மற்றவர்களின் வீட்டு எல்லையைக் கடந்து பிறர் மனைவியிடம் நெறிதவறி நடந்தவர் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படிருப்பதைக் காண்க.

    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  3. அருமையான விளக்கம்.
    தங்களின் விரிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete