மக்கட்பேறு
பெறுமவற்றுள் பெரும்பேறு
புறநானூற்றில், பொன்முடியார் என்ற பெண்பாற்
புலவர், “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்று கூறுகிறார்[1]., பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போருக்குப் போகும் பொழுது, பகைவருடைய நாட்டில் உள்ளவர்களில்
பிள்ளைகள் இல்லாதவர்களை நோக்கி, ”நீங்கள் பாதுகாவலான இடத்திற்குச் செல்லுங்கள்.”, என்று
கூறியதாகப் புறநானூற்றில், நெட்டிமையார் என்ற புலவர் குறிப்பிடுகிறார்.
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ
தீரும்
எம்அம்பு
கடிவிடுதும் நும்அரண் சேர்மின் . . .
(நெட்டிமையார்,
புறநானூறு, 9, 4-5)
பிள்ளைகள் இல்லாத போர்வீரர்கள் போரில்
இறந்தால், அவர்களுடைய மனைவியருக்குப் பிள்ளைப்பேறு பெறும் வாய்ப்பு இருக்காது என்ற
நோக்கத்தோடு, இவ்வாறு பாண்டிய மன்னன் கூறுகிறான். மனைவியின் நற்குண நற்செய்கைகள் இல்வாழ்க்கைக்கு
அழகு. நன்மக்களைப் பெறுவது அந்த அழகுக்கு மேலும் அழகுசெய்யம் அணிகலனாக அமையும் என்று
மங்கலம்
என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம்
நன்மக்கட் பேறு. (குறள் – 60)
என்ற குறளில் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
ஆகவே, சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும்,
இல்லறத்தில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது இன்றியமையாததாகக் கருதப்பட்டது
என்பதற்குப் பொன்முடியார், நெட்டிமையார் பாடல்களும் திருக்குறளும் சான்றாக உள்ளன.
நன்மக்களைப் பெறுவது
பெரும்பேறு என்பதையும், அதனால் அந்த நன்மக்களின் பெற்றோர் அடையும் நன்மைகளையும் “மக்கட்பேறு”
என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறார். ஒருவன் தன்னுடைய
வாழ்க்கையில் மிகுந்த செல்வத்தைப் பெறலாம்; உயர்ந்த பதவிகளை அடையலாம்; வேறு சிறப்புக்களையும்
பெறலாம். ஆனால் வள்ளுவரைப் பொறுத்தவரை, ஒருவன் பெறக்கூடிய பேறுகளில் எல்லாம், அறிய
வேண்டியவற்றை அறிந்தவர்களாக அவனுடய மக்கள் இருப்பார்களானால், அதுவே மிகச் சிறந்த பேறு.
இந்தக் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக, வள்ளுவர் தான் அறிந்த பேறுகளில் எல்லாம், அறிய
வேண்டியதை அறிந்த மக்கள்தான் ஒருவன் பெறக்கூடிய பெரும்பேறு என்று தன்மையில் கூறுகிறார்.
பெறுமவற்றுள்
யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு
அல்ல பிற.
(குறள் – 61)
இதுபோல், ”யாம்” என்று தன்மையைக் குறிக்கும்
சொல்லைப் பயன்படுத்தித் தான் கண்டதாக அல்லது தான் அறிந்ததாக மூன்று குறட்பாக்களில்
மட்டுமே வள்ளுவர் கூறுகிறார். அந்த மூன்று குறட்பாக்களில் ஒன்று குறள் 61. மற்ற இரண்டு
குறட்பாக்கள்:
யாம்மெய்யாக்
கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின்
நல்ல பிற. (குறள் –
300)
மக்களே
போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி
யாங்கண்ட தில். (குறள் –
1071)
”யாம்” என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்துவதனால்,
அவர் தன்னுடைய சொந்த அனுபவத்தை முன்வைத்து, அவர் சொல்ல வந்த கருத்தை உறுதி செய்வதாகத்
தோன்றுகிறது.
இந்தக் குறளுக்கு
விளக்கம் அளிக்கும்பொழுது ”அறிவறிந்த என்றதனால், ’மக்கள்’ என்னும் பெயர் பெண் ஒழித்து
நின்றது.” என்று பரிமேலழகர் கூறுகிறார். அதாவது, இந்தக் குறளில் ’அறிவறிந்த மக்கள்’
என்று வள்ளுவர் கூறியிருப்பதால், அது பெண்களைக் குறிக்காமல் ஆண்களை மட்டுமே குறிக்கும்
என்பதும் பெண்களுக்கு அறிவில்லை என்பதும் பரிமேலழகரின் கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது!
பரிமேலழகரின் கருத்து பெண்களை இழிவுபடுத்துகிறது. அது ஏற்றுக்கொள்ளத் தக்கது அன்று.
இவ்வுலகில் புகழுடன்
வாழ்ந்து, மறுவுலகிலும் சிறந்த இடத்தைப் பெறுபவர் யார் எனில் பகைவரும் கண்டு விரும்பத்தக்க,
குற்றமற்ற நல்ல பண்புகளை உடைய குழந்தைகளைப் பெற்றவர்களே என்ற கருத்து சங்க காலத்தில்
இருந்ததாகச் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் இயற்றிய அகநானூற்றுப் பாடலிலிருந்து தெரிகிறது.
இம்மை
உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை
உலகமும் மறு இன்று எய்துப,
செறுநரும்
விழையும் செயிர் தீர் காட்சிச்
சிறுவர்ப்
பயந்த செம்மலோர் . . . .
(செல்லூர்க் கோசிகன் கண்ணனார், அகநானூறு, 66: 1-4)
திருக்குறளிலும் இதே கருத்து காணப்படுகிறது.
பிறரால் பழிக்கப்படாமல், நற்குணங்களுடன் கூடிய மக்களைப் பெற்றால், இப்பிறவியில் மட்டுமல்லாமல்
பின்வரும் பிறவிகளிலும் அந்த மக்களின் பெற்றோர்களைத் துன்பங்கள் அணுகா என்று வள்ளுவர் கூறுகிறார்.
எழுபிறப்பும்
தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை
மக்கட் பெறின். (குறள் - 62)
இந்தக் குறளில் உள்ள ”எழுபிறப்பு” என்ற
சொல்லுக்கு உரையாசிரியர்கள் பலவிதமாகப் பொருள் கூறுகின்றனர். எழுபிறப்பு என்பதற்கு
ஏழு பிறவிகள் என்று சிலரும், ஏழு தலைமுறைகள் என்று வேறு சிலரும் பொருள்கொள்கின்றனர்.
மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால் அது அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும்
நன்மை பயக்கும் என்பதை மிகைப்படுத்தி, உயர்வு நவிற்சியாக இவ்வாறு வள்ளுவர் கூறுவதாகத்
தோன்றுகிறது.
நாம் ஒருகருத்தைப்
பிறரிடம் கூறும் பொழுது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினால், அதற்கு
நான்கு அணுகுமுறைகளைப் பின்பற்றலாம். 1) அந்தக் கருத்தை அவர்களிடம் சமாதானமாகவும்,
விளக்கமாகவும் கூறலாம். 2) அந்தக் கருத்தை மற்ற கருத்துக்களோடு ஒப்பிட்டுக் கூறலாம்.
3) அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி அவர்கள் நடப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்
என்று கூறலாம். 4) அந்தக் கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமால் - அதைப் பின்பற்றாமல்
- இருப்பதனால் என்ன தீமைகள் வரலாம் என்று அவர்களிடம் கூறலாம். இந்த நான்கு அணுகுமுறைகளாலும்
மற்றவர்களை நம் கருத்திற்கு இணங்கவைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பல அதிகாரங்களில்,
வள்ளுவர் தன்னுடைய கருத்தை வலியுறுத்துவதற்காக, இந்த அணுகுமுறைகள் அனைத்துயுமோ அல்லது
சிலவற்றையோ பயன்படுத்துவதைக் காணலாம், இந்த அதிகாரத்தில், அறிவுடைய மக்களைப் பெறுவதினால்
வரக்கூடிய நன்மைகளை மிகைப்படுத்தி, உயர்வு நவிற்சியாகக் கூறுவதற்காக, பின்வரும் பலபிறவிகளிலும்
தீமைகள் பெற்றோர்களை அணுகா என்று வள்ளுவர் கூறுகிறார். பின்வரும் பிறவிகளிலோ, ஏழு பிறவிகளிலோ
அல்லது ஏழு தலைமுறைகளுக்கோ தீமைகள் அணுகா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது அக்காலத்தில்
வழக்கிலிருந்த ஒரு நம்பிக்கையாக இருந்திருக்கலாம்.
பெற்றோர்கள் தங்களுடைய
குழந்தைகளைத் தங்களின் செல்வமாகக் கருதுவார்கள் என்றும் அந்தக் குழந்தைகளின் செல்வம்
அவரவர்களின் செயல்களால் அவர்களை வந்தடையும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
தம்பொருள்
என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம்
வினையான் வரும். (குறள் – 63)
பராசக்தியை கண்ணம்மா என்ற பெண்குழந்தையாகக்
கற்பனைசெய்து, பாரதியார் பாடிய பாடலில், குழந்தையைச் செல்வம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்
தக்கது.
சீர்பெற்று
வாழ்வதற்கே – உன்னைப்போல்
செல்வம்
பிறிது முண்டோ?
(பாரதியார்
கவிதைகள், கண்ணம்மா என் குழந்தை, 39 – 40)
குழந்தைகளால் பெறும் இன்பம்
”குழந்தைகளைத்
தொடுவதாலும், அவர்களைத் தழுவுவதாலும் பெற்றோர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களுடைய
மழலைச் சொற்கள் பெற்றோர்களுக்குக் கேட்பதற்கு மிகவும் இனிமையானவையாக இருக்கின்றன. தம்
குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்காதவர்கள்தான் குழலோசையும் யாழோசையும் இனியவை என்று
கூறுவார்கள்.” என்று தானே தன் குழந்தைகளோடு பழகி, அவர்களைத் தழுவியதாலும் அவர்களின்
மழலைச் சொற்களைக் கேட்டதாலும் பெருமகிழ்ச்சி அடைந்ததை உணர்ந்தவர்போல், குழந்தைகளால்
பெறக்கூடிய இன்பத்தை வள்ளுவர் மிக அழகாகச் சித்திரிக்கிறார்.
மக்கள்மெய்
தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல்
இன்பம் செவிக்கு. (குறள் – 65)
குழல்
இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல்
கேளா தவர். (குறள் – 66)
ஒரு சமயம், அதியமான் நெடுமான் அஞ்சி அவ்வையாருக்கு ஒரு அரிய நெல்லிக்கனியைப்
பரிசாக அளித்தான். அதனால், அவர் மனம் மகிழ்ந்து, நாக்குழறிப் பலவாறாக அவனைப்
புகழ்கிறார். அவர் பேசுவது சிறுகுழந்தையின் மழலைச் சொற்களைப்போல் உள்ளது என்றும்,
மழலைச் சொற்கள் யாழிசையோடு ஒத்து வராமல், தாளத்தோடு பொருந்தாமல் இருந்தாலும், தந்தையர்க்கு
அச்சொற்கள் அன்பை வரவழைக்கின்றன என்று ஒரு புறநானூற்றுப் பாடலில் அவ்வையார் மழலைச்சொற்களின்
இனிமையைப் புகழ்ந்து பாடுவது குறிப்பிடத் தக்கது.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா;
ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன;
ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சிநீ அருளல் மாறே.
(அவ்வையார்,
புறநானூறு, 92)
குழந்தைகளைத்
தழுவுவதால் உடலுக்கு இன்பமும் அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்பாதால் செவிக்கு இன்பமும்
உண்டு என்று கூறியதோடு நிறுத்தாமல், அவர்கள் தம் பிஞ்சுக் கைகளால் குழப்பிய உணவை உண்பது
சாவா மருந்தாகிய அமிழ்தத்தைவிட இனிது என்று கூறி, அவர்களால் நாவிற்கும் இன்பம் உண்டு
என்று வள்ளுவர் கூறுகிறார்.
அமிழ்தினும்
ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை
அளாவிய கூழ். (குறள் – 64)
இது போன்ற ஒரு கருத்தை
பாண்டியன் அறிவுடை நம்பி இன்னும் சற்று விரிவாகத் தான் இயற்றிய புறநானூற்றுப் பாடலில்
குறிப்பிடும்பொழுது, தங்கள் செய்கைகளால் தம்மை மகிழ்விக்கும் சிறுகுழந்தைகள் இல்லாத
பெற்றோர்களின் வாழ்நாட்கள் பயனற்றவை என்று கூறுகிறான். ”பலவகையான
செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால்
துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப்
பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாட்கள் பயனற்றவையாகும்.” என்பது பாண்டிய மன்னனின் பாடல்.
படைப்புப்பல படைத்துப் பலரோடு
உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.
(பாண்டியன்
அறிவுடை நம்பி, புறநானூறு – 188)
குழந்தைகளால்
உடலுக்கும், காதுக்கும், நாவிற்கும் மட்டுமல்லாமல், அவர்களைக் காண்பதால் கண்ணுக்கு
இன்பமும் அவர்களை முகர்வதால் மூக்குக் இன்பமும் கிடைப்பதாகப் பாரதியார் பாடுகிறார்.
அள்ளி
அணைத்திடவே – என்முன்னே
ஆடி வருந்தேனே!
ஓடி
வருகையிலே – கண்ணம்மா!
உள்ளங் குளிருதடி!
ஆடித்
திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவி தழுவுதடீ!
உச்சி
தனைமுகந்தால் – கருவம்
ஓங்கி வளருதடீ!
(பாரதியார்
கவிதைகள், கண்ணம்மா என் குழந்தை, 7 – 14)
இவ்வாறு, பெற்றோர்களின்
ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிக்கும் குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மற்றொரு இன்பமும்
உண்டு. தங்கள் குழந்தைகள், தம்மைவிட அறிவிற் சிறந்தவர்களாக இருந்தால், அது எல்லாப்
பெற்றோர்களின் உள்ளத்திற்கும் இன்பம் அளிக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்
கெல்லாம் இனிது. (குறள் – 68)
ஒருதாய், தன்
குழந்தையைப் பத்து மாதம் சுமந்து, பல இன்னல்களைக் கடந்து, முடிவில் அந்தக் குழந்தையைப்
பெற்றவுடன், தான் அடைந்த எல்லாத் துன்பங்களையும் மறந்து, பெருமகிழ்ச்சி அடைகிறாள்.
ஆனால், அவள் குழந்தை வளர்ந்து அறிவிற் சிறந்த சான்றோனாகத் திகழ்கிறான் என்று அவள் கேள்விப்பட்டால்,
தன் குழந்தை பிறந்தபொழுது அவள் பெற்ற மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள் என்று
வள்ளுவர் கூறுகிறார்.
ஈன்ற
பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய். (குறள் – 69)
”பெண்ணியல்பால்
தானாக அறியாமையால், ’கேட்ட தாய்’” என்று இந்தக் குறளுக்குப் பரிமேலழகர் விளக்கம் அளிக்கிறார். அதாவது, ”தாய்
அறிவில்லாதவளாகையால், தன் மகன் சான்றோன் என்பதைப் பிறர் கூறினால்தான் அவளால் அறிந்துகொள்ள
முடியும்” என்பது பரிமேலழகரின் கருத்து. தானே
தன் மகனைச் சான்றோன் என்று எண்ணிக் கொள்வதைவிட, அவனைச் சான்றோன் என்று பிறர் கூறுவதுதான்
சிறப்பு. அதுதான், ஒரு தாய்க்குப் பெருமகிழ்ச்சி அளிக்கும். அதனால்தான், வள்ளுவர்,
’கேட்ட தாய்’ என்று கூறுகிறார். மீண்டும் பரிமேலழகர் பெண்களைச் சிறுமைப்படுத்துவதைக்
காண்கிறோம்.
தந்தையும் மகனும்
ஒருதந்தை தன்
மகனுக்குச் செய்யக்கூடிய நன்மை, அவனை அறிவுடையோர் அவையில் முதன்மையாயிருக்குமாறு செய்தல்.
தந்தை செய்த நன்மைக்கு மகன் செய்ய வேண்டிய கைம்மாறு, “இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு
என்ன தவம் செய்தானோ?” என்று அந்த மகனைக் காண்போர் கூறும் சொல்லாகும்.
தந்தை
மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி
இருப்பச் செயல். (குறள் – 67)
மகன்தந்தைக்கு
ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்
கொல்எனும் சொல். (குறள்
– 70)
இந்த இரண்டு குறட்பாக்களிலும்,
வள்ளுவர் தந்தையைப் பற்றியும் மகனைப் பற்றியும் மட்டுமே கூறியிருக்கிறார். ”தந்தை,
மகனை மட்டுமே அவையில் முந்தியிருக்கச் செய்ய வேண்டுமா? மகளை அவையில் முந்தியிருக்கச்
செய்ய வேண்டாமா? மகனையோ மகளையோ அவையத்து முந்தியிருப்பச் செய்வதில், தாய்க்குப் பங்கு
இல்லையா?” போன்ற வினாக்கள் எழுவது இயற்கை. வள்ளுவர் காலத்தில், வீட்டிலுள்ள பணிகளை
மகளிரும், வீட்டுக்கு வெளியே உள்ள பணிகளை ஆடவரும் கண்காணித்துக் குடும்ப வாழ்க்கையை
நடத்தியிருக்கலாம். அதனால், வள்ளுவர், தந்தையையும் மகனையும் மட்டுமே இந்தக்குறட்பாக்களில்
குறிப்பிட்டிருக்கிறார் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது. ”ஈன்று புறந்தருதல் என்தலைக்
கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்று பொன்முடியார்[2] பாடியிருப்பதும்
இங்கு குறிப்பிடத் தக்கது. இன்றைய சமுதாயத்தில் வள்ளுவர் வாழ்ந்தால் இந்தக் குறட்பாக்களை
மாற்றி,
பெற்றோர்
மக்கட்காற்றும் நன்றி அவையத்து
முந்தி
இருப்பச் செயல்.
மக்கட்தந்தைக்கு
ஆற்றும் உதவி இவர்தந்தை
என்நோற்றார்
கொல்எனும் சொல்.
என்று எழுதியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது!
முடிவுரை
சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும்,
அறிவும் பண்பும் உடைய மக்களைப் பெறுவது ஒருவர் பெறக்கூடிய பேறுகளில் எல்லாம் மிகச்
சிறந்த பேறு என்ற கருத்தும், அத்தகைய மக்களைப் பெற்ற பெற்றோர், இப்பிறவியில் மட்டுமல்லாமல்
மறுபிறவிகளிலும் தங்களைத் தீமைகள் அணுகாமல், சிறப்பாக வாழ்வார்கள் என்ற கருத்தும் சங்க
காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் இருந்ததாகத் தெரிகிறது. குழந்தைகளைக் கட்டித்தழுவுதல்,
அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல், அவர்களின் சிறிய கைகளால் துழாவிய அமிழ்தம் போன்ற
உணவை உண்ணுதல் ஆகியவை முறையே பெற்றோர்களின் உடலுக்கும், செவிக்கும், நாவிற்கும் இனிமையானதாக
இருக்கும். தன் மகனைச் சான்றோன் என்று பிறரால் புகழப்படுவதைக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது
அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைவாள். மகனை அவையத்து முந்தியிருப்பச் செய்வது
தந்தையின் கடமை. தந்தையின் செயலுக்குக் கைம்மாறாக மகன் செய்ய வேண்டியது, “இவனை மகனாகப்
பெறுவதற்கு, இவன் தந்தை என்ன தவம் செய்தானோ!” என்று பிறர் அவனைக் கண்டு வியக்குமாறு
வாழ்தல்.
துணைநூல்கள்
இராமசுப்பிரமணியம், வ. த. அகநானூறு (மூலமும்
தெளிவுரையும்) திருமகள் நிலையம்,
தி. நகர், சென்னை
600 017
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய
திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை:
1999.
தேவநேயப் பாவாணர்,
ஞா. திருக்குறள்
– தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து
பப்ளிகேஷன்ஸ்,
சென்னை
600 017.
பாரதியார், சுப்பிரமணிய. பாரதியார் கவிதைகள்.
பழனியப்பா பிரதர்ஸ். சென்னை
600014
பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய
உரையும் (பகுதி 1). காவ்யா பதிப்பகம்,
சென்னை
________________. புறநானூறு மூலமும் எளிய
உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம்,
சென்னை
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால்
– அறத்துப் பால் (உரையும் உரைவும்),
தமிழ்ச்சோலை,
மதுரை 625021
'சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும், அறிவும் பண்பும் உடைய மக்களைப் பெறுவது ஒருவர் பெறக்கூடிய பேறுகளில் எல்லாம் மிகச் சிறந்த பேறு என்ற கருத்தும், அத்தகைய மக்களைப் பெற்ற பெற்றோர், இப்பிறவியில் மட்டுமல்லாமல் மறுபிறவிகளிலும் தங்களைத் தீமைகள் அணுகாமல், சிறப்பாக வாழ்வார்கள் என்ற கருத்தும் சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் இருந்ததாகத் தெரிகிறது.'
ReplyDeleteஇக் கருத்து இக் காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியுமா என ஐயமேற்படுகிறது. ஏனெனில், நற்பண்புகளை உடைய கணவனுக்கும், மனைவிக்கும் பிறந்த குழந்தைகள் பண்பிழந்தவர்களாகக் காண முடிகிறதே... கல்வியும்,புறச்சூழ்நிலையும், எதனையும் ஆய்ந்து அறிந்து கொள்ளும் அறிவும் மட்டுமே பண்புடையர்களாக்குமே மற்றெதுவும் இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. மேலும், வள்ளுவர் ' மக்கட் பேறு' அதிகாரம் தேவைதானா என்ற சிந்தனையும் ஏற்படுகிறது.
அன்பிற்குரிய செந்தில்,
ReplyDeleteவணக்கம்.
இல்லற வாழ்க்கையில் ஒருவன் பெறக்கூடிய பேறுகளில் பெரும்பேறு, “அறிவறிந்த மக்கட்பேறு” என்பதும், குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டுப் பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைவதும், அவர்களின் சிறுகை அளாவிய கூழைப் பெற்றோர் அமிழ்தாகக் கருதுவதும், தன் மகனைச் சான்றோன் என்று கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுதினும் பெருமகிழ்ச்சி அடைவதும், தன் மகனைக் கண்டோர், “இவன் தந்தை என்நோற்றான்” என்று கூறுவதைக் கேட்ட தந்தை பெருமகிழ்ச்சி அடைவதும், உலகில் நடைபெறுகின்ற – நடைபெறக்கூடிய – நிகழ்ச்சிகள்தான். இந்த நிகழ்ச்சிகளைத்தான் வள்ளுவர் “மக்கட்பேறு“ என்ற அதிகாரத்தில் கூறுகிறார்.
பெற்றோர்கள் நற்குண நற்செய்கைகளோடு கூடிய நல்லொழுக்கம் உடையவர்களாக இருந்தாலும், குழந்தைகள் பண்பிழந்தவர்களாக இருப்பது உலகத்தில் நடைபெறும் நிகழ்வுதான். அதனால்தான், “அறிவறிந்த” நன்மக்களைப் பெறுவது பெரும்பேறு என்றார் வள்ளுவர். பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தும் குழந்தைகள் பண்பிழந்தவர்களாக இருப்பதற்கு என்ன காரணம் என்று எவராலும் கூற முடியாது. அது அவர்களின் வளர்ப்புமுறையால் வந்த குறைபாடுகளாக இருக்கலாம். அறிவியல் அறிஞர்களைக் கேட்டால், அது அந்தக்குழந்தைக்குக் கிடைத்த மரபணுக்களின் கோளாறு என்பார்கள். மதவாதிகளைக் கேட்டால், அது அந்தப் பெற்றோர்களின் முன்வினைப்பயன் என்பார்கள். எது சரியான விடை என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியாது. அது அவரவர் நம்பிக்கைகளைப் பொருத்தது.
நல்ல குழந்தைகளைப் பெற்றால் அடுத்த பிறவிகளில், அந்தக் குழந்தையின் பெற்றோர்களைத் தீமைகள் அணுகா என்று வள்ளுவர் கூறுகிறார். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதை எவராலும் நிரூபிக்கவும் முடியாது. அதுவும் ஒரு நம்பிக்கைதான். நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதும் மறுத்து ஒதுக்குவதும் நம்மைப் பொருத்தது. அதனால் தான், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றார் வள்ளுவர்.
அன்புடன்,
பிரபாகரன்