பெண்ணின்
பெருந்தக்க யாவுள?
தமிழ்ப் பெண்களின் சிறப்பு
சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும்,
வீரத்திலும் சிறந்து விளங்கியதற்குப் பல சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியத்தில் உள்ள
பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 477. அதில் 30 பேர் பெண்பாற் புலவர்கள். உலகில்
எந்த நாகரிகத்திலும், எந்த நாட்டிலும், எந்த மொழியிலும் எக்காலத்திலும், இத்தனைப் பெண்பாற்
புலவர்கள் இருந்ததாக வரலாறு கிடையாது. பெண்கள் பாடினிகளாகவும் விறலியராகவும் பாடலிலும்
ஆடலிலும் சிறந்து விளங்கினர். அவ்வையார், அதியமான் நெடுமான் அஞ்சியின் அவைக்களப் புலவராகவும்
அவருடைய தூதுவராகவும் பணியாற்றினார். போரில் தன் தந்தையையும் கணவனையும் இழந்த வீரப்பெண்
ஒருத்தி, சிறுவனாக இருந்த தன் மகனை அழைத்து, அவனுக்கு வெள்ளை ஆடையை உடுத்தி, வேலைக்
கையில் கொடுத்து, “போருக்குப் போ” என்று கூறியதை ஒக்கூர் மாசாத்தியார் இயற்றிய புறநானூற்றுப்
பாடலில் (பாடல் – 279) காண்கிறோம். மற்றொரு வீரத்தாய், தன் மகன், போரில் முதுகில் புண்பட்டு
இறந்ததாகக் கேள்விப்பட்டவுடன், “முதுகில் புண்பட்டு என் மகன் இறந்திருந்தால், அவன்
பால் குடித்த என்னுடைய முலைகளை அறுத்து எறிவேன்” என்று சூளுரை உரைத்துப் போர்க்களத்திற்குச்
சென்று, அங்குத் தன் மகன் முதுகில் புண்பட்டு இறக்கவில்லை என்பதை அறிந்தவுடன், அவனைப்
பெற்றபொழுதினும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த செய்தியைக் காக்கைபாடினியார்
நச்செள்ளையார் இயற்றிய புறநானூற்றுப் பாடல் (பாடல் – 278) கூறுகிறது.
தமிழ்ப் பெண்களின் சிறப்பியல்புகள்
பழக்க வழக்கங்களும்,
பண்பாட்டுக் கோட்பாடுகளும் காலப்போக்கில் மாறக்கூடியவை. உதாரணமாக, முல்லைநில மகளிர்,
தம்மால் விரும்பி வளர்க்கப்பட்ட காளைகளைத் தழுவுவதற்கு அஞ்சும் இளைஞர்களை இப்பிறவியில்
மட்டுமல்லாமல் மறுபிறவியில்கூடத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்பதை, “கொல்லேற்றுக்
கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்று கலித்தொகைப் பாடல் (கலித்தொகை 103:
63-64) கூறுகிறது. இந்தப் பழக்கம் இப்பொழுது வழக்கில் இல்லை என்பதை நினைத்து இக்காலத்து
இளைஞர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் ஐயமில்லை! அறிவியல், பொருளாதாரம் சமூகம், ஆகியவற்றில் ஏற்படும்
மாற்றங்களின் தாக்கங்களால் பழக்க வழக்கங்கள் மாறுவது இயற்கை.
பல மாற்றங்கள் தவிர்க்க
முடியாதவையாக இருந்தாலும், சில நம்பிக்கைகளும் விழுமியங்களும் தமிழ்ச் சமுதாயத்தில்
தொன்றுதொட்டுத் தொடர்ந்து வழக்கிலிருந்துவருகின்றன. உதாரணமாக, பெண்களுக்கு அச்சம்,
நாணம், மடம் என்பவை இன்றியமையாத நல்லொழுக்கங்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
அச்சமும்
நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும்
பெண்பாற்கு உரிய என்ப. (தொல்காப்பியம்,
களவியல் – 8)
அஞ்சவேண்டியதற்கு அஞ்சுவதும், நாணமும் (வெட்கமும்),
ஒருபொருளை அறிந்திருந்தும் அறியாததுபோல் நடந்துகொள்ளும் அடக்கமும் (மடமும்), பெண்ணுக்கு
என்றென்றும் முதன்மையான நற்பண்புகள் என்று முன்னோர்கள் கூறுவதாகத் தொல்காப்பியர் கூறுகிறார்.
ஆகவே, அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றும் நெடுங்காலமாகவே பெண்களுக்குரிய நல்லொழுக்கங்களாகக்
கருதப்படுகின்றன.
அச்சம், நாணம், மடம்
ஆகிய மூன்றைப்போல் கற்பு என்ற ஒழுக்கமும் ஒருபெண்ணுக்கு இன்றியமையாதது என்று தொல்காப்பியம்
கூறுகிறது. ”உயிரைவிடச் சிறந்தது நாணம். நாணத்தைவிடச் சிறந்தது கற்பு.” என்று முன்னோர்
கூறியதாகத் தொல்காப்பியம் கூறுகிறது.
உயிரினும்
சிறந்தன்று நாணே; நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றுஎனத்
தொல்லோர்
கிளவி . . . . (தொல்காப்பியம்,
களவியல் – 23)
கற்பு என்ற சொல் ‘கல்’ என்ற சொல்லை வேர்ச்சொல்லாகக்
கொண்டுள்ளது.
திருமணத்திற்குமுன் ஒருவனைக் காதலித்தால், அவனோடு உடலுறவு கொள்ளாமல் மனவுறுதியோடு
இருப்பதும், அவனையே மணந்துகொள்வதில் உறுதியாக இருப்பதும், திருமணத்திற்குப் பிறகு,
கணவனைத் தவிர வேறு எவரையும் மனத்தாலும்கூட விரும்பாமலும், உடலுறவு கொள்ளாமல் இருப்பதும்
கற்பு என்று கருதப்படுகிறது.
இத்தகைய மனவுறுதி என்று
கருதப்படும் கற்பு, பெண்ணுக்கு மட்டுமல்லாமல் ஆணுக்கும் இருக்க வேண்டும், சங்க காலத்திலும்
வள்ளுவர் காலத்திலும் தமிழ்ச் சமுதாயத்தில் ஆணுக்குக் கற்பு இன்றியமையாத ஒழுக்கமாகக்
கருதப்படவில்லை. ஆனால், ஆண்கள் பரத்தையரோடு தொடர்புகொள்வதையும், பிறன்மனைவிழைவதையும்
வன்மையாகக் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்ணைப்போல் கற்புநெறியைப் பின்பற்றி வாழ்தலே
ஆணுக்குப் பெருமை என்றும் வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவர் பார்வையில் கற்பு என்பது ஆணுக்கும்
பெண்ணுக்கும் பொதுவான நல்லொழுக்கம். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த புதுமைக் கவிஞர் பாரதியாரும்
வள்ளுவர் கருத்தை வழிமொழிகிறார்.
கற்பு
நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும்
அஃது பொதுவில் வைப்போம்.
(பெண்கள் விடுதலைக்கும்மி, செய்யுள் – 5)
அச்சம்,
நாணம், மடம், கற்பு ஆகிய நல்லொழுக்கங்களோடு மட்டுமல்லாமல், ஒரு மனைவி பின்பற்ற வேண்டிய
நற்குண நற்செய்கைகளை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் தொகுத்துக் கூறுகிறார்.
அந்த அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்களில் பெரும்பாலனவை இன்றும் தமிழ்க் குடும்பங்களில்
பின்பற்றப்படுகின்றன.
வள்ளுவர் பார்வையில் மனைவிக்குரிய மாண்புகள்
மனைவி என்ற சொல்லுக்கு
மனையை உடையவள் என்று பொருள். பொருள் தேடுவதற்காகக்
கணவன் வீட்டுக்கு வெளியே பணியாற்றுகிறான். குழந்தைகளுக்கும் கணவனுக்கும், வீட்டில்
இருக்கும் மற்ற உறவினர்களுக்கும் தேவையான உணவு தயாரிப்பது, அவர்களின் நலத்திற்காக உழைப்பது
போன்ற பணிகளில் ஈடுபட்டு, மனைவி தன் குடும்பத்தைப் பராமரிக்கிறாள். குடும்பத்திற்கு
ஏற்ற நற்குண நற்செய்கைகளோடு இருப்பது மட்டுமல்லாமல், மனைவி தன்னுடைய கணவனின் வருவாய்க்குத்
தகுந்த முறையில் குடும்பச் செலவுகளைக் கண்காணிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும்
வள்ளுவர் கூறுகிறார்.
மனைக்தக்க
மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள்
வாழ்க்கைத் துணை. (குறள் – 51)
ஒருபெண் தன் குடும்பத்தினருக்கு உதவியாகப்
பல பணிகளைச் செய்ய வேண்டுமென்றால், முதலில் அவள் தன் உடல் நலத்தைக் காப்பாற்றி மனவுறுதியுடன்
இருக்க வேண்டும் என்றும், அவள் தன் புகழையும் தன் குடும்பதினரின் புகழையும் காப்பதில்
சோர்வில்லாதவளாகவும் இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
தற்காத்துத்
தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச்
சோர்விலாள் பெண். (குறள் – 56)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய ”குடும்ப விளக்கு”
என்னும் காப்பியத்தின் கதாநாயகியாகிய மனைவி, தன் குழந்தைகளுக்கு ஏற்ற தாயாகவும், ஆசிரியராகவும்,
கணவனுக்கு ஏற்ற காதலியாகவும், அகமும் முகமும் மலர்ந்து உறவினர்களை வரவேற்று விருந்தோம்பல்
செய்வதில் சிறந்தவளாகவும், குடும்பத்தில் நோயுற்றவர்களுக்கு மருத்துவராகவும், செவிலியாகவும்
சேவை செய்பவளாகவும், குடும்பத்தின் வரவு செலவுகளைக் கண்காணிக்கும் கணக்கராகவும், பல
பரிமாணங்களில் பணியாற்றுகிறாள். குடும்ப விளக்கின் கதாநாயகியை, வள்ளுவர் கூறும் வாழ்க்கைத்
துணையின் இலக்கணத்துக்கு ஏற்றவளாகப் பாரதிதாசன் தன் காப்பியத்தில் படைத்திருக்கிறார்
என்பது குறிப்பிடத் தக்கது.
கற்பு என்னும்
மன உறுதியுடைவளாக மனைவி இருப்பதைவிட, ஒருவன் பெறக்கூடியது வேறு எதுவுமில்லை என்கிறார்
வள்ளுவர். மகளிரைச் சிறையில் அடைத்துவைத்ததைப்போல் காவல் காப்பதனால் எந்தப் பயனும்
இல்லை என்றும் அவர்கள் தாமாகவே தங்கள் மனவுறுதியால் தங்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்வதே
மிகவும் சிறந்தது என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
பெண்ணின்
பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண்
டாகப் பெறின். (குறள் – 54)
சிறைகாக்கும்
காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும்
காப்பே தலை. (குறள் – 57)
மனைவியின் நற்குண நற்செய்கைகளின் சிறப்பு
இல்லறத்திற்கு
ஏற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லாவிடின், அவனது வாழ்க்கை வேறு
எந்த வகையில் சிறப்புடையதாக இருந்தாலும் சிறப்புடையதாகாது. ஒருவனுடைய மனைவி நற்குண
நற்செய்கைகள் உடையவளானால் அவனிடம் இல்லாதது எதுவுமில்லை. அந்த மனைவி நற்பண்புகள் உடையவளாக
இல்லையென்றால் அவனிடத்தில் எது இருந்தும் பயனில்லை. தனக்கும் தன் குடும்பத்துக்கும்
புகழை விரும்பும் மனைவி இல்லாதவன் தன்னை இகழ்வார்முன் ஏறுபோல் இறுமாப்புடன் நடக்க முடியாது.
மனைமாட்சி
இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்
தாயினும் இல். (குறள் – 52)
இல்லதென்
இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள்
மாணாக் கடை? (குறள் – 53)
புகழ்புரிந்த
இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல்
பீடு நடை. (குறள் – 59)
சங்க இலக்கியத்தில்,
மனைவியால் கணவன் மதிக்கப்படுவதை,
செயிர்தீர் கற்பிற் சேயிழை
கணவ! (புறநானூறு,
3:6)
சேணாறு நல்லிசைச் சேயிழை
கணவ! (பதிற்றுப்பத்து, 88:36)
போன்ற பாடல் அடிகளால் அறிய முடிகிறது. மனைவியால் கணவனுக்குப்
பெருமை. அதுபோல் கணவனால் மனைவிக்குப் பெருமை. இல்லற வாழ்க்கையில் கணவனும் மனைவியும்
ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து அன்போடு அறநெறியில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதுதான்
வள்ளுவரின் எண்ணமாகத் தோன்றுகிறது. வள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும், தமிழ்ச்
சமுதாயத்தில் மனைவியைக் காட்டிலும் கணவன் பல ஆண்டுகள் மூத்தவனாகவும், அவன் மரியாதைக்கு
உரியவனாகவும் கருதப்படும் வழக்கம் இருந்தது. இன்றும் பல குடும்பங்களில் அத்தகைய வழக்கம்
உள்ளது. தன் கணவன் மரியாதைக்கு உரியவன் என்ற காரணத்தினால், அவன் மனைவி அவனை நாள்தோறும்
தொழுவது வழக்கிலிருந்தாகத் தெரியவில்லை. ஆனால், தெய்வத்தைத் தொழாமல், காலையில் கணவனைத்
தொழுது எழும் மனைவி, “பெய்” என்று கூறினால் மழை பெய்யும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
தெய்வம்
தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப்
பெய்யும் மழை. (குறள் - 55)
வள்ளுவர் காலத்தில்,
“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை (மூதுரை – 10)” என்ற
கருத்தும், ”மன்னன் செங்கோல் செலுத்தினால்
மாதம் மும்முறை மழை பொழியும்” என்ற கருத்தும் நிலவியது. இது போன்ற நம்பிக்கைகளின் அடிப்படையில்
வள்ளுவர் இக்குறளை இயற்றியிருக்கலாம். கணவனை மதித்து வாழும் பெண் மிகுந்த பெருமைக்குரியவள்
என்பதை வலியுறுத்துவதற்காக உயர்வு நவிற்சியாகவும் இவ்வாறு வள்ளுவர் கூறியிருக்கலாம்.
உதாரணமாக, தவத்தின் வலிமையைக் கூறும் பொழுது, தவம் என்னும் அதிகாரத்தில், “தவத்தின்
ஆற்றல் கைவரப் பெற்றவர் மரணத்தையும் வெல்லலாம் (குறள் – 269)” என்று வள்ளுவர் மிகைப்படுத்திக்
கூறுகிறார். இதுவரை எவரும் மரணத்தை வென்றதாகத் தெரியவில்லை! இக்குறளையும் உயர்வு நவிற்சியாகக் கருதுவதில் தவறில்லை.
தெய்வங்களைத் தொழாமல் கணவனைத் தொழுது எழும் மனைவி, ”பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பாவாள்”
என்று இக்குறளுக்குப் பாரதிதாசன் விளக்கம் அளிப்பது குறிப்பிடத் தக்கது.
மிகச் சுருக்கமாக,
டுவீட்(Tweet) போல் குறட்பாக்களைத் திருவள்ளுவர் இயற்றியிருப்பதால், குறட்பாக்களுக்குப்
பலரும் பலவிதமான உரை எழுத வாய்ப்பு உருவாகிறது. உதாரணமாக, “தெய்வத்தைத் தொழமாட்டாள்.
காலையில், கணவன் அவளைத் தொழுதபின் அவள் எழுவாள். அத்தகைய மனைவி, பெய் என்று சொன்னால்
எப்படி மழை பெய்யாதோ, அதைப்போல், அவள் கணவன் சொல்லைக் கேட்காவதவள்.” என்றும் இக்குறளுக்குப்
பொருள்கொள்ளலாம்! ஆனால், இந்த நோக்கத்தோடு இக்குறளை இயற்றியிருக்க மாட்டார் என்பது
உறுதி.
நற்குண நற்செய்கைகளை
உடையவனைக் கணவனாகப் பெற்றால், அவன் மனைவி தேவர் உலகில் வாழ்வதைப் போன்ற பெருஞ்சிறப்பைப்
பெறுவாள் என்று வள்ளுவர் கூறுகிறார். கணவன்
நல்லொழுக்கம் இல்லாதவனாக இருந்தால் பெண்களின் வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருக்கும் என்பது
அனைவரும் அறிந்த உண்மை. அதற்கு மாறாகக் கணவன் நல்லொழுக்கம் உடையவனாக இருந்தால், அவளும்
அவள் கணவனும் அன்பும் அறனும் கூடிய வாழ்க்கையைப் பண்போடு வாழ்ந்து பயன்பெற்று, தேவருலகத்தில்
வாழ்வதைப்போல் வாழலாம் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளத் தகுந்த கருத்து.
பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர்
வாழும் உலகு. (குறள் - 58)
மங்கலமும் அதன் நன்கலமும்
மனைவியின் நற்குண
நற்செய்கைகள் இல்வாழ்க்கைக்கு அழகு. நன்மக்களைப் பெறுவது அந்த அழகுக்கு மேலும் அழகுசெய்யம்
அணிகலனாக அமையும் என்பது வள்ளுவரின் கருத்து.
மங்கலம்
என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம்
நன்மக்கட் பேறு. (குறள் – 60)
சங்க காலத்திலும்
வள்ளுவர் காலத்திலும், புதல்வரைப் பெறுதல் இல்வாழ்க்கையில் இருப்பவர்களின் கடமையாகக்
கருதப்பட்டது. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்று பொன்முடியார் என்ற பெண்பாற்
புலவர் புறநானூற்றில் பாடியிருப்பது (பாடல் 312) புதல்வரைப் பெறுதலின் சிறப்பைக் குறிக்கிறது.
எவ்வளவு செல்வம் இருந்தாலும், குழந்தைகள் இல்லையென்றால் வாழ்நாட்கள் பயனற்றவை என்பதைப்
புறநானூற்றில் பாண்டியன் அறிவுடை நம்பி இயற்றிய பாடலிலிருந்து (பாடல் – 188) உணர முடிகிறது.
பெண்களைப் பற்றி வள்ளுவரும் மனுவும்
ஓருபெண் தன் இல்லற
வாழ்க்கையில் தன் கணவனுக்குத் துணையானவள். அவள் தன் கணவனுக்கு அடிமை அல்ல. கணவனுக்குப்
பலவகைகளிலும் உதவி செய்து அவனுக்கு ஏற்ற துணையாக இருப்பது அவள் கடமை. அந்தக் கடமைகளை
நிறைவேற்றுவதில் அவள் மகிழ்ச்சியோடு பணிபுரிபவள். அவளுடைய நற்குண நற்செய்கைகளுக்கும்
அவள் கற்புக்கும் அவளே பொறுப்பேற்க வேண்டும் என்பதுவே வள்ளுவரின் கருத்து. மகளிரைப்
பற்றிய வள்ளுவரின் கருத்து போற்றுதற்குரியது. அவருடைய கருத்து மனுஸ்மிருதியில் கூறப்பட்டிருக்கும்
கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மகளிரைப் பற்றிய வள்ளுவரின் சிந்தனைக்கும்
மனுவின் கருத்துக்களுக்கும் உள்ள வேற்றுமை, இரவுக்கும் பகலுக்கும் – மலைக்கும் மடுவுக்கும்
– உள்ளதைப் போன்றது என்பது மனுஸ்மிருதியிலிருந்து கீழே கொடுக்கபட்டுள்ள பகுதிகளிருந்து
தெளிவாகத் தெரிகிறது.
- · ஆண்களைத் தவறு செய்யத் தூண்டுவதே பெண்களின் இயல்பு. ஆகவே, அறிவுடையோர்,பெண்களுடன் இருக்கும்போது
கவனக் குறைவாக இருக்கமாட்டார்கள். (எச்சரிக்கையாகவே இருப்பார்கள்) (மனுஸ்மிருதி
- 2:213)
- · பெண்கள் ஆண்களின் அழகைப் பற்றியும், வயதைப் பற்றியும் பொருட்படுத்துவது இல்லை. அவன் ஒரு ஆண் என்பது மட்டுமே போதுமானது. அழகானவர்களாக இருந்தாலும் சரி, விகாரமானவர் களாக இருந்தாலும் சரி எப்படி இருந்தாலும் தங்களை ஒப்படைத்துக் கொண்டு விடுவார்கள்.(மனுஸ்மிருதி - 9:14)
- ·
ஆண்கள் மேலுள்ள
ஆசையினாலும், சலனப்புத்தியினாலும், இயல்பாகவே
இதயமில்லாதவர்களாக இருப்பதனாலும், பெண்களை அவர்களின்
கணவன்மார்கள் எவ்வளவுதான் பாதுகாப்புடன் காத்து வந்தாலும் துரோகமே இழைப்பார்கள். (மனுஸ்மிருதி - 9:15)
- ·
படைக்கும்போது கடவுள்
இத்தகைய இயல்புடன் அவளைப் படைத்துவிட்டான் என்பதை அறிந்து,
ஆண்கள் அவர்களைப் பாதுகாக்க கவனத்துடன் செயல்படவேண்டும்.
(மனுஸ்மிருதி - 9:16)
- ·
பெண்களைப் படைக்கும்போதே
அவர்களுக்கு என்று படுக்கை, இருக்கை, அணிகலன்கள்
ஆகியவற்றில் விருப்பம், கேவலமான ஆசைகள், சினம், நேர்மையின்மை, தீய
நடத்தை ஆகியவற்றையும் படைத்தார். (மனுஸ்மிருதி - 9:17)
- ·
இரவும்,
பகலும் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தங்கள்
கண்காணிப்பிலேயே ஆண்கள் வைத்திருக்கவேண்டும். அவர்கள் புலன் இன்பங்களில்
தோய்ந்தவர்கள் ஆதலால், ஒருவர் கண்காணிப்பின் கீழ்தான்
அவர்கள் இருக்க வேண்டும். (மனுஸ்மிருதி - 9:2)
- ·
பெண்கள் குழந்தையாக
இருக்கும்போது தந்தையின் பாதுகாப்பிலும், திருமணத்திற்குப்
பின் கணவன் பாதுகாப்பிலும்,வயதான காலத்தில் மகனின்
பாதுகாப்பிலும் இருக்கவேண்டும். பெண் ஒரு போதும் சுதந்திரமாக இருக்கத்
தகுதியற்றவள். (மனுஸ்மிருதி - 9:3)
- ·
தீய விருப்பங்களுக்கு
எதிராக - அவை எவ்வளவுதான் சிறியதாகத் தோன்றினாலும் -பெண்களைக் குறிப்பாகப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் அவை இரு குடும்பங்களுக்கும்
துன்பத்தையே தரும். (மனுஸ்மிருதி - 9:5)
- ·
பெண் குழந்தையாக
இருக்கும்போதும், சிறுமியாக இருக்கும்போதும், வயதானவளாக
இருக்கும் போதும் சுயமாக எதையும் செய்யக்கூடாது. தன் சொந்த வீட்டிலும் கூட
அவ்வாறு செய்யக்கூடாது.(மனுஸ்மிருதி - 5:147)
- ·
தன் தந்தை,
கணவன் அல்லது பிள்ளைகளை விட்டுத் தனியே வாழ பெண் முயற்சிக்கக்
கூடாது. காரணம், இவர்களை விட்டுத் தனியே செல்வதின் மூலம் இரு
குடும்பத்தாருக்கும் அவமதிப்பையே உண்டாக்குகிறாள். பெண்ணுக்கு மணவிலக்கு உரிமை
இருக்கக்கூடாது. (மனுஸ்மிருதி - 5:49)
- ·
மனைவி,
மகன், அடிமை, சீடன்,
உடன் பிறந்த தம்பி ஆகிய இவர்கள் தவறு செய்தால் கயிறு அல்லது
பிரம்பின் மூலம் அடிக்கலாம். (மனுஸ்மிருதி - 8:299)
- ·
தந்தை யாரிடம்
ஒப்படைக்கிறாரோ அல்லது தந்தையின் அனுமதியின் பேரில் தன் சகோதரன் யாரிடம் ஒப்படைக்கிறானோ
அவருக்கு சாகும் வரை அவள் கீழ்படிந்து நடக்கவேண்டும். அவர் இறந்து விட்டால் அவர்
பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது.(மனுஸ்மிருதி -
5:151)
பெண்களை ஆண்களுக்கு
அடிமைகளாகவும், தீய எண்ணங்களும் நடத்தையும் உள்ளவர்களாகவும், கற்பொழுக்கம் இல்லாதவர்களாகவும், தனி ஆளுமைக்கும் சுதந்திரத்திற்கும் தகுதி அற்றவர்களாகவும், பாலியல் பொருட்களாகவும் மட்டுமே மனுஸ்மிருதியில்
கூறப்பட்டுள்ளது.
முடிவுரை
மற்ற சமுதாயத்தைச்
சார்ந்த பெண்களைவிடத் தமிழ்ப் பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும்,வீரத்திலும் நெடுங்காலமாகவே
சிறந்து விளங்குகிறார்கள். அச்சம், நாணம், மடம், கற்பு ஆகிய நல்லொழுக்கங்கள் தமிழ்ப்
பெண்களிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. அத்தகைய நல்லொழுக்கங்கள்
பெண்களிடையே இருந்ததாகச் சங்க இலக்கியத்திலிருந்து அறிகிறோம். வள்ளுவர் “வாழ்க்கைத்
துணைநலம்” என்ற அதிகாரத்தில் ஒரு மனைவி பின்பற்ற வேண்டிய நற்குண நற்செய்கைகளை தொகுத்துக்
கூறுகிறார். மனைவியை வாழ்க்கைத் துணை என்றும், ஒருவன் பெறக்கூடிய பேறுகளில் எல்லாம்
தலையாயது குடும்பத்திற்கு ஏற்ற மனைவி என்றும் வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் பார்வையில்,
மனைவியின் மாண்பு குடும்பத்திற்கு அழகு. அந்த அழகுக்கு அணிகலனாக அமைவது, அந்தக் குடும்பத்தின்
குழந்தைகள்.
வள்ளுவரின் கருத்துக்கள்
மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றியும் மனைவியைப் பற்றியும் கூறப்பட்டுள்ள கருத்துக்களைவிட
முற்றிலும் மாறானவை. ”மனைவி என்பவள் குடும்ப விளக்கு. அவள் குடும்பத்திற்கு அச்சாணி
போன்றவள். அவள் இன்றிக் குடும்பத்தில் எதுவுமில்லை.” என்பது வள்ளுவரின் கருத்து. ஆனால்,
“மனைவி என்பவள் கணவனின் அடிமை. அவள் தீயொழுக்கங்கள் உடையவள். அவளை எப்போதும் காவலிலும்
கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும். அவள் தவறு செய்தால் அவளைப் பிரம்பால் அடிக்கலாம்”
என்று மனுஸ்மிருதி கூறுகிறது.
துணை நூல்கள்
Doniger, Wendy. The Laws of Manu,
Penguin Books, India (P) Ltd, Community Centre,
Panchsheel Park,
New Delhi110 017
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய
திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை:
1999.
தமிழண்ணல். தொல்காப்பியம் – பொருளதிகாரம்
(தொகுதி -1). மணிவாசகம் பதிப்பகம்,
சென்னை 600
108
தேவநேயப் பாவாணர்,
ஞா. திருக்குறள்
– தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து
பப்ளிகேஷன்ஸ்,
சென்னை
600 017.
துரைசாமிப் பிள்ளை, சு. பதிற்றுப்பத்து.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
பாரதிதாசன். குடும்ப விளக்கு. மணிவாசகம்
பதிப்பகம், சென்னை 600 108
பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய
உரையும் (பகுதி 2). காவ்யா பதிப்பகம்,
சென்னை
புலியூர் கேசிகன். கலித்தொகை, பாரி நிலையம்,
சென்னை 600 108
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால்
– அறத்துப் பால் (உரையும் உரைவும்),
தமிழ்ச்சோலை,
மதுரை 625021
கட்டுரை மிகச் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteதுவக்கத்திலேயே, சங்ககாலத்தில் பெண் புலவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தது குறிப்பிடப்படுகிறது. இது உலகின் எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு மட்டுமல்லாமல், எந்த காலத்துக்கும் பொருந்தும் சிறப்பு.. இந்த காலத்திலும் பெண் கவிஞர்கள், இலக்கியவாதிகள் எண்ணிக்கை பெரிதும் வளர்ந்துவிட்டதாக சொல்லிவிடமுடியாது. எனவே, சங்க கால பெண் புலவர்கள் எண்ணிக்கை; பெண்மையை தமிழ்ச் சமுதாயம் மதித்ததை குறிக்கிறது.
மேலும், ”நாணுடைமை”, “அச்சம்” போன்ற குணங்கள் பெண்ணுக்குத்தான் உரியது என்பது போன்ற சிந்தனைகள் இன்றும் பரவலாகவே இருந்துவருகிறது. வள்ளுவரோ, “அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு” என்றும் “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்றும் கூறுவதிலிருந்து, ஆண் பெண் இருபாலருக்கும் இக்குணங்களை பொதுவானதாக்குவது புரிகிறது..
மனுஸ்மிருதி பெண்களை எவ்வளவு கீழ்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகளோடு விவரித்து, அதனின்று வள்ளுவர் அடிப்படையாகவே மாறுபடுவதை சிறப்பாக கட்டுரை விவரிக்கிறது. ’கொற்றவை” என்ற பெயரில் பெண்ணை வழிபாட்டிற்குரியவராக்கிய பண்டைத் தமிழ்ச்சமுதாயம், ‘மனுஸ்மிருதி” கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை கட்டுரை வலியுறுத்துகிறது. வள்ளுவருக்கு மதச்சாயம் பூசமுயலும் இக்கால கட்டத்தில், இதுபோன்ற கட்டுரைகள் பலப்பல வெளிவரவேண்டும். பரவலாக அவை படித்தறியப்படவேண்டும்.
- அரசு
அருமையான செய்திகள்.
ReplyDeleteபெண்களைப் பற்றிய தவறான செய்திகளை மனு நீதியும் மட்டும் கூறவில்லை. தையல் சொல் கேளேல்"
'பேதைமை என்பது மாதர்க்கு அணிகலன்"
போன்றவைகளும் இங்கு காணக் கிடக்கின்றன.பொதுவாக, பெரும்பாலான இலக்கியங்கள், பெண்களைப் போகப் பொருளாகவும், அறிவில் குறைந்தவளாகவும் காட்டியதே தவிர, வள்ளுவரைப் போல் மாண்புடையதாகக் காட்டவில்லை என்பதே உண்மை.
பெரியாரின் 'பெண் அடிமை ஆனாள்' என்ற புத்தகத்தில் இடம் பெறும் பெரும்பாலான கருத்துக்கள் தங்கள் குறிப்பிட்ட மனு நீதியில் இடம் பெற்றவைகளைத் தான் பெரியார் சாடியிருந்தார்.
இவ்வாக்கம், காலத்திற்கேற்ற கருத்துப் பெட்டகம்.
மிக்க நன்று.
ReplyDeleteநன்றி!
ReplyDeleteSanskrit text, Unicode transliteration and English translation by Ganganath Jha:
ReplyDeleteअरक्षिता गृहे रुद्धाः पुरुषैराप्तकारिभिः ।
आत्मानमात्मना यास्तु रक्षेयुस्ताः सुरक्षिताः ॥ १२ ॥
arakṣitā gṛhe ruddhāḥ puruṣairāptakāribhiḥ |
ātmānamātmanā yāstu rakṣeyustāḥ surakṣitāḥ || 12 ||
Women confined in the house under trusted servants are not well guarded; really well guarded are those who guard themselves by themselves.—(12)
குறள் 54ம் மனு ஸ்மிரிதி 9.12ம் ஒத்து இருக்கின்றன ஐயா!
நன்றி!
-மணிக்கம் சண்முகம்
இந்தக் கட்டுரை மூலம் மனு ஸ்மிரிதி பல ஸ்லோகங்களைப் படிக்க நேர்ந்தது. நன்றி ஐயா!
ReplyDelete