Statcounter

Sunday, December 8, 2019

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்


ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

சங்க இலக்கியமும் திருக்குறளும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைச் சங்க இலக்கிய நூல்கள் கூறுகின்றன. உலகெங்கும் உள்ள மனிதர்கள் எக்காலத்திலும் எப்படி வாழவேண்டும் என்று கூறும் நூல் திருக்குறள். உதாரணமாக, சங்க காலத்துத் தமிழர்களின் வீரம், வெற்றி, ஈகை, கொடை போன்ற பண்புகளையும், “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” போன்ற உயர்ந்த கருத்துக்களையும், மன்னர்களின் ஆட்சிச் சிறப்புக்களையும், சில வரலாற்றுக் குறிப்புக்களையும், தமிழர்களின் வாழ்வியலையும் புறநானூறு, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக் காஞ்சி ஆகிய புறத்திணை நூல்களில் காணலாம். சங்க காலத்துத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றிய அரிய, சுவையான செய்திகளை அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, ஐங்குறுநூறு, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய அகத்திணை நூல்களில் காணலாம். சங்க காலம் என்பது கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை என்றும், சங்கம் மருவிய காலம் என்பது கி.பி.100 முதல் கி,பி. 500 வரை என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்[1]. சங்கம் மருவிய காலத்தில் பல நூல்கள் தோன்றின. அந்த நூல்களில் சிறந்தவைகளாகக் கருதப்படும் பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. அவற்றுள் பதினொரு நூல்கள் நீதிநூல்கள் என்ற வகையைச் சார்ந்தவை. அந்த நீதிநூல்களுள் தலைசிறந்த நூலாகக் கருதப்படும் திருக்குறளில், மனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் பல அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளன. ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில், ஒழுக்கத்தின் உயர்வைப் பற்றியும், அவற்றைப் பின்பற்றுவதினால் வரும் நன்மைகளைப் பற்றியும், அவற்றைப் பின்பற்றாவிட்டல் வரும் தீமைகளைப் பற்றியும் வள்ளுவர் கூறுகிறார்.


 ஒழுக்கத்தின் சிறப்பு
ஒழுக்கம் என்ற சொல்லுக்கு நடத்தை என்று பொருள். அது நல்லொழுக்கம் தீயொழுக்கம் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல்லாக இருந்தாலும், பொதுவாக, நல்லொழுக்கத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக வழக்கில் உள்ளது. வள்ளுவரும் ஒழுக்கம் என்ற சொல்லை நல்லொழுக்கம் என்ற பொருளில்தான் பயன்படுத்துகிறார். தீயொழுக்கத்தையும், நல்லொழுக்கத்திலிருந்து தவறிய நடத்தையையும், வள்ளுவர் இழுக்கம் என்று குறிப்பிடுகிறார். ”எவ்வளவு முயன்று ஆராய்ந்தாலும், ஒவ்வொருவருக்கும் தங்களுடைய வாழ்க்கையில் உதவியாக இருப்பது ஒழுக்கம் மட்டுமே. அதனால், எப்பாடுபட்டாவது ஒவ்வொருவரும் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒழுக்கத்தோடு வாழ்வது இன்றியமையாதது. மற்றும், ஒழுக்கம் மேன்மையைத் தருவதால், ஒழுக்கத்தை உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்க வேண்டும்.” என்று வள்ளுவர் கூறுகிறார்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.                                           (குறள் – 132)

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.                                             (குறள் – 131)

மகளிர்க்குக் கற்பு இன்றியமையாத ஒழுக்கம் என்பதை வலியுறுத்துவதற்காக ”உயிரைவிடச் சிறந்தது நாணம். நாணத்தைவிடச் சிறந்தது கற்பு.” என்று முன்னோர் கூறியதாகத் தொல்காப்பியம் கூறுகிறது[2]. தொல்காப்பியம் கற்பைப் பற்றிக் கூறியதை, எல்லா ஒழுக்கங்களுக்கும் ஏற்ற கருத்தாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஒரு சூழ்நிலையில், ஒருவன் தன் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா அல்லது தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தால், அந்தக் கேள்விக்கு வள்ளுவர் அளிக்கும் விடை, “ஒழுக்கம் உயிரைவிடச் சிறந்ததாகையால், உயிர் போனாலும் பரவாயில்லை, ஒழுக்கத்திலிருந்து தவறக் கூடாது.” என்பதுதான். ”வள்ளுவர் கூறுவது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அதை நடைமுறையில் செயல்படுத்த முடியுமா?” என்பது சிந்திக்க வேண்டிய கருத்து. ஆனால், உயிரைவிட நல்லொழுக்கமே உயர்ந்தது என்று கருதும் சிலர் எப்பொழுதும் இவ்வுலகில் வாழ்ந்துள்ளனர்; இப்பொழுதும் வாழ்கின்றனர்.

இரண்டாம் உலகப் போர் நடந்தபொழுது, 1943 – ஆம் ஆண்டு, டார்ச்செஸ்டர்(Dorchester) என்ற கப்பல் 904 அமெரிக்கப் படைவீரர்களை சுமந்துகொண்டு நியூ யார்க் (New York) நகரத்திலிருந்து கிரீன்லாந்தை(Grrenland) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக, அந்தக் கப்பல், ஜெர்மானியர்களுடைய நீர்மூழ்கிக் கப்பலால்(Submarine) தாக்கப்பட்டது. டார்ச்செஸ்டர் கப்பல் கடலில் மூழ்க ஆரம்பித்தது. அப்பொழுது கப்பலில் இருந்த வீரர்கள், அங்கிருந்த உயிர்காக்கும் அங்கிகளை (Life Jacket) அணிந்துகொண்டு உயிர்காப்புப் படகுகளில் (Life Boat) சென்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அனைவருக்கும் தேவையான எண்ணிக்கையில் உயிர்காக்கும் அங்கிகள் அந்தக் கப்பலில் இல்லை. அந்தக் கப்பலில் பயணம் செய்த நான்கு மதகுருக்கள் (Chaplains) தங்களிடமிருந்த நான்கு உயிர்காக்கும் அங்கிகளை நான்கு வீரர்களுக்கு அளித்துவிட்டு, தங்கள் கைகளை கோத்துக்கொண்டு கடவுளைத் தொழுதுகொண்டு மூழ்கும் கப்பலோடு தாமும் மூழ்கி இறந்தனர். அந்த நான்கு மதக்குருக்களும், பிறர் உயிரைக் காப்பாற்றுவதைத் தம் கடமையாகவும், அதை ஒரு சிறந்த ஒழுக்கமாகவும் கருதித் தம் உயிரையே தியாகம் செய்தனர். அவர்கள் பிறருடைய உயிரைக் காக்கும் நல்லொழுக்கத்தைத் தங்கள் உயிரைவிடச் சிறந்ததாகக் கருதினார்கள். அவர்கள் “காலத்தால் அழியாத மதகுருக்கள் (Immortal Chaplains) என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதக்குருக்களை நினைவில் கொள்வதற்காக அமெரிக்காவின் அஞ்சல் துறை 1948 – ஆம்  ஆண்டு ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

போரில் தோல்வி அடைந்தாலோ, அவமானத்திற்குரிய செயல்களைச் செய்தாலோ, ஜப்பானைச் சார்ந்த சாமுராய் (samurai) வீரர்கள் தங்கள் வயிற்றைக் கூரிய கத்தியால் கிழித்துக்கொண்டு இறப்பது கடந்த நூற்றாண்டுவரை வழக்கிலிருந்தது. போரில் தோற்பதும், மானத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்வதும் ஒழுகக்கேடான செயல்களாகச் சாமுரய் வீரர்கள் கருதியதால், அவர்கள் அவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்கள். அவ்வாறு தற்கொலை செய்துகொள்வது ஜப்பானிய மொழியில் செப்பூகு அல்லது ஹரகிரி (Seppuku or Harakiri)  என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது அது வழக்கில் இல்லை.

மானத்தோடு வாழ்வதே சிறந்த ஒழுக்கம் என்று திருவள்ளுவர் பல குறட்பாக்களில் கூறுகிறார். மானம் என்பதின் பெருமையை உணர்த்துவதற்குத் திருக்குறளில் ஓர் அதிகாரமே (மானம் - அதிகாரம் 97) உள்ளது. மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் உயிரை விடுவதே சிறந்தது என்ற கருத்து அந்த அதிகாரத்தில் காணப்படுகிறது. ஒரு குறளில் (குறள் - 968), ”ஒருவன் தனது பெருந்தன்மைக்குரிய மானம் அழிய வந்த இடத்தில், உடலைப் பேணி வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தாகி விடுமோ? (ஆகாது))” என்றும், மற்றொரு குறளில் (குறள் – 969), தனது உடலிலுள்ள மயிர்த்திரள் நீங்கினால் உயிர் வாழாத கவரிமாவைப்போல் மானத்தைப் பெரிதாகக் கருதும் மனிதர்கள், தங்கள் மானத்திற்குக் கேடு வரின் தம் உயிரை விட்டு மானத்தைக் காத்துக்கொள்வர்.” என்றும் வள்ளுவர் கூறுகிறார்[3].

மானத்தை உயிரினும் பெரிதாகக் கருதி, உயிர் துறந்த மன்னர்களைப் பற்றிய செய்திகள் சில புறநானூற்றுப் பாடல்களில் காணப்படுகின்றன. ஒரு சமயம், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போரில் சேரமான் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒருநாள், சேரமான் நீர் வேட்கையின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் தண்ணீர் அளிக்குமாறு கேட்டதாகவும், அவர்கள் காலம் தாழ்த்தித் தண்ணீர் கொண்டுவந்ததாகவும். அதனால் வெட்கமும் வேதனையும் அடைந்த சேரமான் ஒருபாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகவும், புறநானூற்றில் ப்பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது. எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அஃது ஓர் ஆள் அன்று என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம், மன வலிமையின்றி நீர் வேண்டுமென்று கேட்டதால், அவர்கள் எனக்கு அளித்த நீரைக் குடிக்கும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?” என்று சேரமான் கணைக்கால் இரும்பொறை புறநானூற்றுப் பாடல் ஒன்றில் கூறுகிறான்,

  குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
 ஆள்அன்று என்று வாளின் தப்பார்
 தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
 கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
 மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத்            5
 தாம்இரந்து உண்ணும் அளவை
 ஈன்ம ரோஇவ் உலகத் தானே?
                           (சேரமான் கணைக்கால் இரும்பொறை, புறநானூறு – 74)

போரிடும்பொழுது, வீரன் ஒருவனுக்கு முதுகில் புண்பட்டால், அதைப் பெரிய அவமானமாகவும், அந்த வீரன் தனக்குரிய ஒழுக்கத்திலிருந்து தவறியதாகவும் கருதுவது சங்க காலத்தில் மரபாக இருந்தது. கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில், சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்தச் செய்தியை வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவர் புறநானூற்றில் பதிவு செய்திருக்கிறார்[4].

டார்ச்செஸ்டர் கப்பலில் மூழ்கி உயிர் துறந்த மதக்குருகளின் செயலும், ஜப்பானைச் சார்ந்த சாமுராய் வீரர்களின் செயலும், மானத்தோடு கூடிய வாழ்க்கையே சிறந்தது என்று சேரமான் கணைக்கால் இரும்பொறை மற்றும் சேரமான் பெருஞ்சேரலாதன் ஆகியோர் கருதியதும், வள்ளுவரின் கருத்துக்கு எட்டுத்துக்காட்டாக உள்ளன. வள்ளுவர் கூறும் கருத்துக்களிலிருந்தும், இங்கு குறிப்பிடப்பட்ட உதாரணங்களிலிருந்தும், ஒழுக்கத்திற்கு கேடு வந்தால் உடனே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்யத் தேவையில்லை. சில சமயங்களில், ஒழுக்கத்திற்குக் கேடு விளைந்தால், ஒருவன் மீண்டும் அந்தத் தவறு நடக்காமல், தன்னைத் திருத்திக்கொள்ளலாம். சில சமயங்களில், ஒருவன் ஒழுக்கத்தினின்று தவறுவதால் பிறருக்குத் துன்பம் விளைவித்திருந்தால், அவர்களிடம் மன்னிப்புக் கேட்கலாம் அல்லது நீதித்துறை வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தன்னைத் திருத்திக்கொள்ளலாம். எல்லாச் சூழ்நிலைகளிலும், ஒழுக்கம் தவறினால் அதற்குக் கழுவாய் (பரிகாரம்/பிராயச்சித்தம்) உணர்ச்சி வசப்பட்டு உயிரைத் துறப்பது என்று கருதத் தேவையில்லை. ஒழுக்கத்தின் சிறப்பையும் அதன் இன்றியமையாமையையும் வலியுறுத்துவதற்காக வள்ளுவர் உயர்வு நவிற்சியாக, இங்ஙனம் கூறியிருப்பதாகத் தோன்றுகிறது.

ஒழுக்கத்தால் வருவது உயர்வு
மக்கள் பிறப்பினால் வேறுபடுகிறார்கள் என்பது வருணாசிரமம். பெரும்பாலான மக்களைப் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று நான்கு பிரிவுகளாக வருணாசிரமம் பிரிக்கிறது. இந்த நான்கு பிரிவுகளில், பிராமணர்கள் மேலானவர்கள். அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் சத்திரியர்கள் என்றும், அதற்கும் அடுத்த நிலையில் உள்ளவர்கள் வைசியர்கள் என்றும், கடைநிலையில் உள்ளவர்கள் சூத்திரர்கள் என்றும் வருணாசிரமக் கொள்கை கூறுகிறது.. நான்கு பிரிவுகளுக்கும் அப்பால் உள்ள வேறு சிலர், தீண்டப்படாதவர்கள் என்றும் அவர்கள் சூத்திரரையும்விடக் கீழானவர்கள் என்றும் வருணாசிரமம் கூறுகிறது. வருணாசிரமம் என்னும் கொள்கையை, தான் உருவாக்கியதாகப் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் கூறுகிறார். ஒருவன் எந்தப் பிரிவில் பிறக்கிறான் என்பது அவனுடைய முற்பிறவியின் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் பகவத் கீதை கூறுகிறது. வருணாசிரமத்தைப் பற்றிய கருத்துக்களை மனுஸ்மிருதி (1.31), இரிக்கு வேதம்(10.90) பகவத் கீதை (4.13) போன்ற நூல்களில் காணலாம். மக்களிடையே வருணாசிரமம் காட்டும் வேறுபாடு பிறப்பினால் தோன்றியது. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது வள்ளுவம். வள்ளுவர் காலத்திற்கு முன்பே, தமிழகத்தில் ஆரியர்கள் குடியேறி வாழ்ந்துவந்தார்கள். அவர்களுடைய வருணாசிரமக் கொள்கை மக்களிடையே பரவ ஆரம்பித்தது. வருணசிரமத்தை எதிர்த்து, மக்கள் அனைவரும் பிறப்பால் சமம் என்று முழங்கியவர் வள்ளுவர். பிறப்பினால் சமம் என்றாலும், மக்களுடைய செயல்களாலும் ஒழுக்கங்களாலும் அவர்களிடையே வேறுபாடுகள் தோன்றுகின்றன என்கிறார் வள்ளுவர். அதனால்தான், வள்ளுவர், ”ஓழுக்கத்தின் எய்துவர் மேன்மை” என்கிறார். ஒழுக்கமுடையவன் உயர்ந்தவன். ஒழுக்கமில்லாதவன் தாழ்ந்தவன். பிறப்பினால் ஒருவன் மேலானவனாகக் கருதப்பட்டாலும் அல்லது ஒருவன் தாழ்ந்தவனாகக் கருதப்பட்டாலும், உண்மையான உயர்வும் தாழ்வும் ஒழுக்கத்தால்தான் எழுகிறது. ஆகவேதான்,

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.                                           (குறள் – 973)

என்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே, ஒழுக்கம் மட்டுமே ஒருவனது மேன்மையையும் தாழ்மையையும் அளவிடுவதற்கு ஏற்ற அளவுகோல் என்பது வள்ளுவரின் கருத்து.

வள்ளுவர் காலத்தில், வேதம் கற்பதும், கற்ற வேதத்தை மறவாமல் இருப்பதும் பிராமணனுடைய கடமையாகக் கருதப்பட்டது. பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்துவிட்டால், மீண்டும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒழுக்கம் தவறி நடந்தால், அவன் குடிப்பிறப்பு இழிந்ததாகக் கருதப்படும். தன்னை மேலானவனாகக் கருதும் பிராமணனுக்கு வேதத்தைவிட ஒழுக்கமே உயர்வைத் தரும் என்று  வள்ளுவர் கூறுகிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                                (குறள் -134)




ஒழுக்கமும் குடிப்பெருமையும்
தனிமனிதனுக்கு மட்டுமல்லாமல் அவனுடைய குடும்பத்தின் மேன்மைக்கும் தாழ்மைக்கும் ஏற்ற அளவுகோல் ஒழுக்கம் மட்டுமே. ஒரு குடும்பத்தில் ஒழுக்கம் இல்லையென்றால் அது அந்தக் குடும்பத்திற்கு இழிவைத் தரும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.                                       (குறள் – 133)

ஒருவன் ஒழுக்கத்திலிருந்து தவறினால், அது அவனுக்கு மட்டும் இழிவைத் தராமால் அவனுடைய குடும்பத்திற்கும், வழித்தோன்றல்களுக்கும் இழிவைத் தரும் என்ற கருத்து, புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படுகிறது[5]. 

சங்க காலத்தில், ஒவ்வொரு அரசனும் தன் நாட்டிலுள்ள ஒருமரத்தைக் காவல் மரமாக வைத்திருந்தான். அந்த மரத்தை வெட்டுவது, அந்த மரத்தின் கிளைகளை ஒடிப்பது, அந்த மரத்தின் காய் அல்லது பழங்களை உண்ணுவது போன்ற செயல்கள் பெருங்குற்றங்களாகக் கருதப்பட்டன. அத்தகைய குற்றங்களுக்குக் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. நன்னன் என்ற சிற்றரசனுக்கு மாமரம் ஒன்று காவல் மரமாக இருந்தது. அவனுடைய காவல் மரத்திலிருந்து ஒரு காய் ஆற்று நீரில் விழுந்தது. அங்குக் குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத் தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாட்கள், அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத் தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேள்வியுற்ற நன்னன், அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன் வேலையாட்களைப் பணித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். நன்னன் ஒரு தவறும் செய்யாத ஒரு இளம்பெண்ணை, ஆராயாமல் கொலை செய்தவன் என்று பலராலும் பழிக்கப்பட்டான்.

          ஒரு சமயம், பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இளங்கண்டீரக்கோ என்னும் குறுநில மன்னனைக் காணச் சென்றார். அவனைக் கண்டதும் அவனை அன்போடு தழுவினார். அங்கு, நன்னனின் வழித்தோன்றலாகிய இளவிச்சிக்கோவும் இருந்தான். புலவர் பெருந்தலைச் சாத்தனார் இளவிச்சிக்கோவைத் தழுவவில்லை.  அதைக் கண்டு கலக்கமுற்ற இளவிச்சிக்கோ, பெருந்தலைச் சாத்தனார் ஏன் தன்னைத் தழுவவில்லை என்று கேட்டான். அவனுடைய கேள்விக்கு, ”அரசே, இளங்கண்டீரக்கோ வண்மை மிக்கவன். அவன், வீட்டில் இல்லாவிட்டாலும் அவன் வீட்டுப் பெண்டிர் தம் தகுதிக்கேற்ப இரவலர்க்குப் பரிசளிப்பர். அதனால், இளங்கண்டீரக்கோவைத் தழுவினேன். உன் முன்னோருள் முதல்வன் நன்னன் என்பவன் ஒருபெண்ணைக் கொலை செய்தவன். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில் பாடி வருபவர்களுக்குப் பரிசளிக்காமல் வீட்டுக் கதவை அடைக்கும் வழக்கம் உள்ளது. அதனால் என் போன்ற புலவர்கள் உன் மலையாகிய விச்சி மலையைப் பாடுவதில்லை. அதனால் அம்மலைக்குரிய உன்னைத் தழுவவில்லை”, என்று பெருந்தலைச் சாத்தனார் விடையளித்தார். ஆராயாமல் ஒரு இளம்பெண்ணைக் கொலைசெய்ததால் நன்னனுக்கு ஏற்பட்ட பழியால் அவன் வழித்தோன்றலாகிய இளவிச்சிக்கோவும் பாதிக்கப்பட்டான்.

இழுக்கம் என்றும் இடும்பை தரும்
”ஒழுக்கத்தினால் எல்லோரும் உயர்வடைவர். ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் தாம் அடையக் கூடாத பழியையும் அடைவர். ஒருவனுடைய ஒழுக்கத்தினால் அவனுக்கு நன்மைகள் வந்துசேரும். தீயொழுக்கம் எக்காலத்திலும் துன்பம் தரும். ஒழுக்கத்தில் தவறுவதால், இழிவு, பழி முதலான துன்பங்கள் வந்துசேரும். அதை அறிந்து, மனவலிமை உடையவர்கள், ஒழுக்கத்திலிருந்து சிறிதும் தளரமாட்டார்கள்.” என்ற கருத்துக்களை, கீழே உள்ள குறட்பாக்களில் காணலாம்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.                                          (குறள் – 137)
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.                                       (குறள் – 138)
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.                                           (குறள் – 136)

ஒருவன் எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்தாலும், ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் பல துன்பங்களை அடைவான் என்பதற்கு, அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டு உதாரணங்கள் உள்ளன. அமெரிக்கா ஒரு வல்லரசு என்பதால், அந்த நாட்டின் தலைவராக இருப்பவர், உலகிலேயே மிகுந்த வல்லமை உடையவராகக் கருதப்படுகிறார். இதுவரை, நாற்பத்தி ஐந்து பேர் மட்டுமே அந்தப் பதவியில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ரிச்சர்ட் நிக்சன் (Richard Nixon) என்பவரும் வில்லியம் கிளிண்டன் (Bill Clinton) என்பவரும் தங்களின் தீயொழுக்கங்களால் அவமானத்திற்கும், பிறரின் ஏளனத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள். தன்னை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டவருடைய ஆவணங்களைத் திருடுவதற்காக நிக்சன் சிலரை அனுப்பினார். திருடச் சென்றவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டார்கள். அத்திருடர்களைப் பற்றியோ அல்லது அந்த நிகழ்ச்சியைப் பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது என்று நிக்சன் கூறியது மட்டுமல்லாமல், அந்த நிகழ்ச்சிக்குத் தொடர்பான ஒலிப்பதிவுகளையும் அவர் அழிக்க ஏற்பாடு செய்தார். அத்தகைய தீய செயல்களுக்காக, அமெரிக்க மக்களவை (House of Representatives), அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. தனக்கு மக்களவையிலும் மேலவையிலும் (மேலவை – senate) ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த நிக்சன் பதவியிலிருந்து விலகினார்.

ஒரு இளம்பெண்ணோடு தகாதமுறையில் வெள்ளை மாளிகையில் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதால், அமெரிக்க மக்களவையில் கிளிண்டன்மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், மேலவையில் பெரும்பான்மையோர் மக்களவையின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாததால், அவர் பதவியில் நீடித்தார். அவருடைய தவறான நடத்தைக்காகவும், தான் செய்த குற்றத்தைத் தான் செய்யவில்லை என்று அவர் கூறியதற்காகவும், கிளிண்டன் வழக்கறிஞராகப் பணியாற்றும் தகுதியை இழந்தார்.

எத்தனை வல்லமை பொருந்தியவர்களாக இருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும், நல்லொழுக்கத்தோடு வாழத் தவறினால் அவர்கள் பெருந்துன்பத்திற்கு உள்ளாவர்கள் என்பது நிக்சன் மற்றும் கிளிண்டன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றவர்களுக்குக் கூறும் எச்சரிக்கையாகும்.

ஒழுக்கமும் மதங்களும்
ஒரு மதம் எதைத் தீயொழுக்கம் என்று கூறுகிறதோ அதை மற்றொரு மதம் அனுமதிக்கிறது. உதாரணமாக, ஒருமதம், மது அருந்துவதைத் தீயொழுக்கம் என்று கூறுகிறது. மற்றொரு மதம், மது அருந்துவதை ஒரு சடங்காகவே ஏற்றுக்கொண்டுள்ளது. ஒருமதம், கொல்லாமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் புலால் உண்ணக்கூடாது என்றும் கூறுகிறது. மற்றொரு மதம், கடவுளால் படைக்கப்பட்ட அனைத்தும் மனிதன் அனுபவிப்பதற்காகத்தான் என்றும் புலால் உண்ணுவதால் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறுகிறது. ஒருமதம், ஒருவன் ஒருமனைவியாடு வாழ்வதை நல்லொழுக்கம் என்கிறது. மற்றொரு மதம் ஒருவன் நான்கு பெண்களை மணந்துகொள்ளலாம் என்கிறது. மற்றொரு மதம், ஒருவன் எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் மணந்துகொள்ளலாம் என்கிறது. ஒருமதம், கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குவது தவறு என்கிறது. மற்ற மதங்கள் அவ்வாறு கூறுவதில்லை. ஆகவே, மதங்கள் கூறும் ஒழுக்கங்களை அனைவருக்கும் ஏற்றவையாகக் கருதமுடியாது. இவ்வுலகில், ஏறத்தாழ 780 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 100 கோடி மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள்; எந்த மத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள். அத்தகையவர்களின் எண்ணிக்கை வளர்த்துகொண்டு வருகிறது. மதங்கள் கூறும் நல்லொழுக்கக் கோட்பாடுகளால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அவர்களுக்கு நல்லொழுக்கம் என்பது என்னவென்று சொல்பவர்கள் யார்? ஆகவே, அனைவருக்கும் ஏற்ற நல்லொழுக்கங்கள் எவை என்பது ஆய்வுக்குரியது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகலே ஒழுக்கம்
. ஓழுக்கத்தைப் பற்றிய கருத்துக்களில் மதங்களிடையே ஒற்றுமை இல்லாததால், எது அனைவருக்கும் ஏற்ற ஒழுக்கம் என்பதை மதங்களால் முடிவு செய்ய முடியாது என்பது தெளிவாகப் புலனாகிறது. ஒழுக்கம் என்பது எது என்று ஆராய்ந்தால், அது ஒருவன் வாழும் காலத்தையும் இடத்தையும் பொருத்ததாகத் தோன்றுகிறது. உதாரணமாக, தமிழகத்தில், நூறு ஆண்டுகளுக்குமுன் விதவைகள் மறுமணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை, இக்காலத்தில் அத்தகைய மறுமணம் தவறானதாகக் கருதப்படவில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும், ஓரினச் சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சில இஸ்லாமிய நாடுகளில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது. அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்த நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

ஒழுக்கம் என்பது எது என்ற சிக்கலான கேள்விக்கு வள்ளுவர் ஒரு நல்ல விடை அளிக்கிறார். உலகத்தோர் எதை ஒழுக்கம் என்று கருதுகிறார்களோ அதுவே ஒழுக்கம் என்பது வள்ளுவரின் கருத்து. ஒருவன் எவ்வளவு கற்றவனாக இருந்தாலும், அவன் உலகத்தோடு ஒத்து வாழாவிட்டால் அவன் அறிவில்லாதவனாகவே கருதப்படுவான் என்று,

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.                                              (குறள் – 140)

என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். மற்றொரு குறளிலும் இதே கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். அறிவுடைமை என்ற அதிகாரத்தில், அறிவுடையவர்களின் செயலைப் பற்றிக் கூறும்பொழுது, உலகத்தில் உள்ளவர்கள் எவ்வாறு ஒழுகுகின்றார்களோ அவ்வாறே ஒழுகி அவர்களோடு ஒத்து வாழ்வது அறிவுடைமையாகும் என்று,
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.                                                    (குறள் – 426)

என்ற குறளில் கூறுகிறார். இந்த இரண்டு குறட்பாக்களிலிருந்து, உலகத்தோடு ஒத்து வாழ்வதே ஒழுக்கம் என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது. ஆனால், ”உலகம் என்பது எதைக் குறிக்கிறது?” என்ற கேள்வி எழுகிறது. தமிழ் இலக்கியத்தில் “உலகம்” என்ற சொல், உயர்ந்தோரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ஒருவன் வாழும் காலத்தில் அவன் வாழும் சமுதாயத்தில் (இடத்தில்) எது ழுக்கம் என்று அங்குள்ள உயர்ந்தோர்களால் கருதப்படுகிறதோ அதுவே ழுக்கம் என்று முடிவு செய்வது சிறந்ததாகத் தெரிகிறது.
முடிவுரை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் கூறுவது சங்க இலக்கியம். மனிதன் எக்காலத்தும் வையத்து வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் நூல் திருக்குறள். எவ்வளவு ஆராய்ந்தாலும், ஒருவனுக்கு வாழ்க்கையில் துணையாக இருப்பது அவனுடைய ஒழுக்கமே. ஆகவே, ஒழுக்கத்தை உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கவேண்டும். ஆரியர்களின் வருணாசிரமக் கொள்கைகள் மனிதன் பிறப்பால் வேறுபடுகிறான் என்கின்றன. அந்தக் கருத்துகளை முற்றிலும் மறுத்து, பிறப்பினால் அனைவரும் சமம் என்பது வள்ளுவம். ஒருவனுடைய உயர்வும் தாழ்வும் அவனுடைய ஒழுக்கத்தைப் பொருத்தது. ஒழுக்கமுடையவன் உயர்ந்தவன். ஒழுக்கமில்லாதவன் தாழ்ந்தவன். உயர்ந்தவனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் பார்ப்பனன், தான் கற்ற வேதத்தை மறந்தால் மீண்டும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அவன் ஒழுக்கத்திலிருந்து தவறினால், தாழ்ந்தவனாகவே கருதப்படுவான். ஒருவன் ஒழுக்கத்தில் தவறினால் அது அவனுடைய குடும்பத்திற்கும் வழித்தோன்றல்களுக்கும் இழிவைத் தரும். ஒழுக்கம் தவறினால் தவறாமல் துன்பம் வந்துசேரும். அதனால், மனவலிமை உடையவர்கள் ஒழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள். ஒழுக்கத்தைப் பற்றிய கருத்துக்களில் மதங்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஆகவே, ஒழுக்கம் என்பது, மதங்களால் முடிவு செய்யப்படமுடியாத ஒன்று.  நாம் வாழும் காலத்தில், நாம் வாழும் சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவர்கள் எதை ஒழுக்கம் என்று கருதுகிறார்களோ அதையே ஒழுக்கமாகக் கருதவேண்டும்.

துணைநூல்கள்
Chinmayananda, Swami. The Holy Geeta. Central Chinmaya MissionTrust, Bombay 72
AS
Doniger, Wendy. The Laws of Manu, Penguin Books, India (P) Ltd, Community Centre,
Panchsheel Park, New Delhi 110 017
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
பிரபாகரன், இர. புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி 1). காவ்யா பதிப்பகம், சென்னை
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால். தமிழ்ச்சோலை, மதுரை 62502



[1]. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 25.
[2] .தொல்காப்பியம், களவியல் - 23
[3] மருந்தோமற்று ன்ஓம்பும் வாழ்க்கை, பெருந்தகைமை
 பீடழிய வந்த டத்து.                                                  (குறள் - 968)
 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
 உயிர்நீப்பர் மானம் வரின்.                                            (குறள் - 969)


[4] புறநானூறு - 66
[5] புறநானூறு - 151

4 comments:

  1. ஆழமான செய்திகளை உள்ளடக்கிய கட்டுரை.

    குறிப்பாக, அமெரிக்க குடியரசுத் தலைவர்களில் தங்களது ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, எவ்வளவு வலிமை பெற்றவராய் இருப்பினும், அவர்கள், பெருந்துன்பத்திற்கு ஆட்படுவார்கள் என இங்கு குறிப்பிட்டது சாலப் பொருந்தும்.

    மேலும், டார்ச்செஸ்டர் கப்பலில் பயணம் செய்த வீரர்களுக்காக தங்களது உயிரைத் துச்ச்மென மதித்த மத குருமார்களின் தியாக உணர்வும், அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம், அவர்களுக்காக அஞ்சல் தலையை வெளியிட்டதும் இக் கட்டுரைக்குப் பொருத்தமாகப் படுகிறது.

    நல்ல செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றியும், மகிழ்வும்

    ReplyDelete
  2. அன்பிற்குரிய செந்தில்,

    வணக்கம்.

    நன்றி.

    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  3. *இதிலுள்ள திருக்குறள் விளக்கங்களில சில பிழையான உரையாசிரியர்களின் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.. வள்ளுவ நெறிக்கு முரணான கருத்துக்களை இட்டதாகிவிட்டது. 9791713885*

    ReplyDelete
  4. ஐயா,

    எந்தக் குறளுக்கு விளக்கம் சரியானதாக இல்லை என்று குறிப்பிட்டால், பயனுள்ளதாக இருக்கும். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: prabu0111@gmail.com

    அன்புடன்,
    பிரபாகரன்

    அன்புடன்,
    பிரபாகரன்


    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete