வாய்மையின் நல்ல
பிற இல்லை
அமெரிக்காவில் உள்ள யு. ஸ். நியூஸ்
& வேள்டு ரிபோர்ட் (U.S. News & World Report) என்ற நாளிதழில், 2012 – ஆம்
ஆண்டு ஏஞ்சலா ஹாப்ட் (Angela Haupt) என்ற பெண்மணி எழுதிய கட்டுரையில், அமெரிக்காவில்
உள்ளவர்கள் சராசரியாக ஒருவாரத்திற்கு பதினொருமுறை பொய் சொல்கிறார்கள் என்று கூறுகிறார்[1].
அந்தக் கட்டுரையில், நாட்ர டேம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் உளவியல் (Psychology)
பேராசிரியராகப் பணியாற்றும் அனிதா கெல்லி (Anita Kelly) என்பவர் நடத்திய பரிசோதனையில்
பொய் பேசுபவர்களின் உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படுவதாகவும், பொய்பேசாதவர்களின் உடல்நலத்திலும்
மனநலத்திலும் முன்னேற்றம் இருப்பதாகவும் கண்டறிந்ததாகக் கூறுகிறார். பொய் பேசுபவர்களின்
இதயத் துடிப்பின் வேகம் (Heart Rate), இரத்த அழுத்தம் (Blood Pressure), மன அழுத்தம்
(Depression) ஆகியவை அதிகரிப்பதாகவும், மன அழுத்தம் அதிகரிப்பதால் நோய்களைத் தடுக்கும்
ஆறறல் (Immunity) படைத்த இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் (White Blood Cells) எண்ணிக்கை
குறைவதாகவும், தலைவலி, மலட்டுத் தன்மை (Infertility) போன்றவை தோன்றுவதற்கான வாய்ப்பு
அதிகரிப்பதாகவும் மற்ற அறிஞர்கள் கூறுவதாகத் தன்னுடைய கட்டுரையில் ஏஞ்சலா ஹாப்ட் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் உள்ளவர்கள் பொய்சொல்வதில் தனித்திறமை உடையவர்கள் என்றோ தனித்திறமையற்றவர்கள்
என்றோ கூறுவதற்குச் சான்றுகள் எதுவும் இல்லாதால், இந்தக் கணிப்பு பொதுவாக உலகில் உள்ள
மற்ற நாட்டவர்களுக்கும் பொருந்தும்.
”உண்மை என்றால் என்ன?” என்றும், “மக்கள்
ஏன் பொய் சொல்கிறார்கள்?” என்றும் நெடுங்காலமாகவே பலரும் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கிரேக்கத்தில் வாழ்ந்த சாக்ரடீஸ், பிளேடொ, அரிஸ்டாட்டில்
போன்ற மெய்யியல் அறிஞர்கள் (philosophers) உண்மையைப் பற்றி பல அரிய கருத்துக்களைக்
கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறும் கருத்துக்கள் புரிந்துகொள்வதற்கு எளிமையானவையாகவும்
தெளிவானவையாகவும் இல்லை. உண்மைக்கு இலக்கணமாகக் காந்தியடிகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சத்தியத்தின் (உண்மையின்) அடிப்படையில்தான் அவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தி
வெற்றிபெற்றதாகவும் கூறப்படுகிறது. காந்தியடிகள் முதலில் கடவுள்தான் உண்மை என்றார்.
பின்னர், அதை மாற்றி, உண்மைதான் கடவுள் என்றார்[2]. கடவுள்
என்றால் என்ன என்று மனிதர்கள் நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்தும், இன்னும் தெளிவான முடிவுக்கு
வரமுடியவில்லை. கடவுளைப் பற்றியே தெளிவாகத் தெரியாமல் இருக்கும்பொழுது கடவுள்தான் உண்மை
என்றோ, உண்மைதான் கடவுள் என்றோ கூறுவது குழப்பத்தைத்தான் உண்டாக்குகிறது. தமிழிலும்
உண்மை, மெய், பொய், பொய்யாமை, வாய்மை, போன்ற சொற்களுக்குப் பலரும் பல்வேறு விளக்கங்கள்
அளிக்கின்றனர். இந்தச் சொற்களைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை ஆராய்வதுதான்
இந்தக் கட்டுரையின் நோக்கம்.
’உண்மை’ என்ற சொல்லுக்கு ‘உள்ளது’ என்று
பொருள். ஒருவன் உண்மை பேசுகிறான் என்றால், அவன் உள்ளதை உள்ளவாறு சொல்கிறான் என்று பொருள்.
’உண்மை’ என்ற சொல்லை “உள்ளது’ என்ற பொருளிலும், ’மெய்’ என்ற சொல்லை ‘உடல்’ அல்லது
‘உண்மை’ என்ற பொருளிலும் வள்ளுவர் பயன்படுத்துகிறார். ’பொய்’ என்ற சொல்லை ‘உண்மைக்குப்
புறம்பானது’ என்ற பொருளிலும், ‘பொய்யாமை’ என்ற சொல்லை, ‘பொய் கூறாமல் இருப்பது’ என்ற
பொருளிலும், வள்ளுவர் பயன்படுத்துகிறார். ’வாய்மை’ என்ற சொல்லுக்கு, ‘உண்மை’’ என்பதுதான்
அகராதி கூறும் பொருள். ஆனால், வள்ளுவர், ‘வாய்மை’ என்ற சொல்லுக்கு ஒரு புதுவிளக்கம்
அளிக்கிறார். அவர் கருத்துப்படி, “எவருக்கும் எந்தத் தீமையும் விளைவிக்காத உண்மைதான்
வாய்மை”. சில சமயங்களில், உள்ளதை உள்ளவாறு கூறுவது பிறர் மனத்தைப் புண்படுத்தலாம்;
அவர்களுக்கு வேறுவகைகளில் துன்பங்களையும் தரலாம். ஆகவே, ஒருவன் உண்மை பேசும்பொழுது,
அவனுடைய பேச்சால், எவருக்கும் எந்தத் தீமையும் வராமல் இருக்குமானால் அதுவே வாய்மையாகும்.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். (குறள் – 291)
உதாரணமாக, ஒருசிறுவனுடைய தாய்,
கோபத்தில், அவனுடைய தந்தையைப் பற்றி அவனிடம் ஒரு செய்தியைச் சொன்னால், அவன் தான் கேட்ட
செய்தியைக் கேட்டவாறே தன் தந்தையிடம் உரைப்பதால், தந்தை மன வருத்தம் அடைவதோடு மட்டுமல்லாமல்,
அவனுடைய தாய்க்கும் தந்தைக்கும் இடையே மேலும் சச்சரவு அதிகரிக்கலாம். அவன் கூறியது
உண்மையாக இருக்கலாம். ஆனால், அது வாய்மை அன்று. எவருக்கும் எந்தத் தீமையும் தராத உண்மைதான் வாய்மை.
இதே கருத்தை, சமண மதத்தின் தலைவர்களுள் மிகச் சிறந்தவராகக் கருதப்படும் மகாவீரரும்
கூறியிருப்பதாக, தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறிப்பிடுகிறார்[3].
சில சமயங்களில் பொய்யும் வாய்மையைப்
போன்றதாக இருக்கும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஒரு பொய் கூறுவதினால், குற்றமற்ற
(புரைதீர்ந்த) நன்மை பிறக்குமானால், அந்தப் பொய்யும் வாய்மையைப் போன்றதுதான் என்பது
வள்ளுவரின் கருத்து.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (குறள்
– 292)
உதாரணமாக, ஒருவனுடைய மனைவி, தான்
மிகவும் விரும்பி வாங்கிய புதுப்புடைவையை உடுத்திக்கொண்டு அவனிடம் வந்து, “இந்தப் புடைவையில்
நான் அழகாக இருக்கிறேனா?”, என்று கேட்டால், அந்தப் புடைவையில் அவள் அழகாக இல்லாவிட்டலும்,
அவன், “இந்தப் புடைவையில் நீ மிகவும் அழகாக இருக்கிறாய்.”, என்று கூறினால், அவன் கூறியது
உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும், அவன் அவ்வாறு கூறியதால் அவன் மனைவி மனமகிழ்ச்சி
அடைவாள். அவ்வாறு அவன் கூறியதால் எந்தக் குற்றமும் இல்லாத நன்மை உண்டாவதால், அவன் கூறியது
வாய்மையைப் போன்றதுதான் என்கிறார் வள்ளுவர். அவர் அதை வாய்மை என்று கூறாமல், ‘வாய்மையைப்
போன்றது’ என்று கூறுவது குறிப்பிடத் தக்கது. அந்தக் கணவன் அவ்வாறு கூறுவதால் வரும்
நன்மைக்கும், அவ்வாறு கூறாவிட்டால் வரும் பின்விளைவுகளுக்கும் அதிக விளக்கம் தேவையில்லை.
திருமணமானவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்!
ஆங்கிலத்தில், இதுபோன்ற பொய், ‘White lie’ என்று அழைக்கப்படுகிறது.
தன்நெஞ்சறிவது
பொய்யற்க
”எது உண்மை?, எது பொய்?” என்று நமது மனத்திற்கு நன்கு தெரியும். நம்முடைய
மனத்தில் ஒரு உண்மையை அறிந்திருந்தும், அதற்கு மாறாக, அதை மறைத்துப் பொய் சொன்னால்
நம் மனமே நம்மை வருத்தும் என்கிறார் வள்ளுவர்.
தன்நெஞ்
சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே
தன்னைச் சுடும். (குறள் – 293)
”நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்”
என்று தான் இயற்றிய உலகநீதி[4] என்னும்
நூலில், அதன் ஆசிரியர் உலகநாதர் கூறுவது இங்கு
குறிப்பிடத் தக்கது. பொய்பேசுவதால் ஏற்படும் குற்ற உணர்வால் மன அழுத்தம் ஏற்படுகிறது
என்று தற்கால உளவியல் அறிஞர்களும் தங்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
பொய்யாமையின்
சிறப்பு
ஒருவன் தன்னுடைய உள்ளத்தில் எது
உண்மை என்று கருதுகிறானோ அதற்கு மாறாக நடக்காமல் இருந்தால், அவன் உயர்ந்தோர் அனைவரின்
உள்ளத்திலும் நிலையான இடத்தைப் பெறுவான் (குறள் - 294). காந்தியடிகள் கடவுள்மீது ஆழ்ந்த
பற்றுடையவராக வாழ்ந்தார். அவர் உண்மையும் கடவுளும் ஒன்று என்றே கருதியதால், தன் மனத்தில்
எது உண்மை என்று கருதினாரோ அதையே பேசி, அதற்கேற்ப வாழ்ந்ததால் அவர் இந்த குறளுக்குத்
தக்க எடுத்துக்காட்டாவார்.
உள்ளத்தாற்
பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். (குறள் – 294)
தன் மனத்தோடு பொருந்துமாறு வாய்மையான
சொற்களையே ஒருவன் பேசுவானாயின், அவன் தவமும் தானமும் செய்பவர்களைவிட மேலானவன் ஆவான்
(குறள் – 295). தனக்கு நேர்ந்த துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு, பிற உயிர்கட்குத் துன்பம்
செய்யாமல் வழ்வதே தவத்திற்கு உரிய அடையாளம் என்பது தவத்திற்கு வள்ளுவர் கூறும் இலக்கணம்
(குறள் – 261). தானம் செய்வது தன்னிடமுள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுப்பது. தவமும்
தானமும் சிறந்த பண்புகளாகும். இந்த இரண்டு பண்புகளும் ஒருங்கே கொண்டிருப்பவர்களைவிடத்
தான் அறிந்ததைப் பிறர்க்குத் துன்பம் உண்டாகாதவாறு வாய்மை பேசுபவன் சிறந்தவன் என்று
கூறுகிறார் வள்ளுவர்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. (குறள் – 295)
”பொய் பேசாமல் இருப்பதால் வரும்
புகழுக்கு இணையாக வேறு புகழ் இல்லை. பொய் பேசாதவர்களுக்கு, அவர்கள் அறியாமலேயே அறச்செயல்களால்
வரக்கூடிய நற்பயன்கள் எல்லாம் தானாகவே வரும் (குறள் – 296).”, என்று பொய்யாமையினால்
வரும் பயனைக் கூறிப் பொய் பேசாமல் இருப்பதற்கு ஊக்கம் அளிக்கிறார் வள்ளுவர்.
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். (குறள் – 296)
ஒருவன் பொய் பேசாமல் இருந்தால்
அறத்தினால் வரும் பயன் அனைத்தும் அவனுக்குத் தானாகவே வரும் என்று முந்தைய குறளில் கூறிய
வள்ளுவர், அடுத்தக் குறளில், ஒருவன் இடைவிடாமல் பொய்பேசாமல் இருப்பானானால், அவன் வேறு
அறச்செயல்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று கூறி, பொய்யாமமையை வலியுறுத்துகிறார்
(குறள்- 297).
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (குறள்
– 297)
“பொய்யாமை பொய்யாமை’ என்ற அடுக்குத்தொடர்
’பொய்யாமையை இடைவிடாது கடைப்பிடித்தல்’ என்ற பொருளிலும், ’செய்யாமை செய்யாமை’ என்ற
அடுக்குத்தொடர், ’வேறு அறங்களைச் செய்யத் தேவையில்லை’ என்பதை வலியுறுத்துவதற்காகவும்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வாய்மையால் உள்ளம்
தூய்மை அடைகிறது
ஒருவன் நீரில் குளிப்பதால் அவன்
உடல் தூய்மை அடைகிறது. அதுபோல், வாய்மையால் உள்ளம் தூய்மை அடைகிறது (குறள் – 298) என்கிறார்
வள்ளுவர்.
புறந்தூய்மை நீரான்
அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். (குறள் – 298)
மனிதர்கள் பொய்பேசுவதற்குப் பல
காரணங்கள் உள்ளன. உதாரணமாக, பிறரிடமிருந்து சில செய்திகளை மறைப்பதற்காகவும், தமக்கு
வரக்கூடிய தீமைகளைத் தவிர்ப்பதற்காகவும், தமக்குச் சில நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும்,
பிறர்க்குத் தீமை செய்ய வேண்டும் என்பற்காகவும் மனிதர்கள் பெரும்பாலான பொய்களைக் கூறுகிறார்கள்.
அவர்கள் பொய் பேசுவதற்குக் காரணம் அவர்களுடைய உள்லத்தில் உள்ள தீய எண்ணங்கள். பொய்
பேசுவதைத் தவிர்த்து வாய்மை பேசும்பொழுது, தீமை இல்லாதவற்றையே கூறுகிறார்கள். வாய்மையைத்
தொடர்ந்து பேசும்பொழுது உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்கள் குறைகின்றன அல்லது மறைகின்றன.
அதாவது, மனமாசுக்களை நீக்குவதற்கு வாய்மை பயன்படுகிறது. நீரில் குளிப்பதால், புற அழுக்கு
நீங்குவதுபோல் வாய்மையால் மனம் தூய்மை அடைகிறது. ”மனத்துக்கண் மாசிலனாதல் அறம்” என்பதால், வாய்மை பேசுபவன் தன்
மனத்தூய்மை பெற்று, குறட்பாக்கள் 296 மற்றும் 297 ஆகியவற்றில் வள்ளுவர் கூறியுள்ளதைப்போல்,
அறத்தால் வரும் பயன்கள் அனைத்தையும் அடைவான்.
சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
சான்றோர் எனப்படுபவர் நற்குணங்கள்
அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ள அகவிருளை (மனத்தில்
உள்ள மாசுக்களை) நீக்குவதற்குப் பொய்யாமை என்னும் விளக்கைப் (பண்பைப்) பயன்படுத்துவார்கள்
(குறள் – 299).
எல்லா
விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. (குறள் – 299)
சான்றாண்மை என்ற அதிகாரத்தில்,
ஒரு சான்றோனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத நற்குணங்களைக் கூறும்பொழுது, சான்றாண்மையை
ஒரு மண்டபமாக உருவகித்து, அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும்
அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்கிறார் (குறள் – 983) வள்ளுவர்.
வாய்மையைவிட நல்லது
வேறொன்றும் இல்லை
”யாம் மெய்யாகக் கண்டவற்றுள், வாய்மையைவிடச்
சிறந்தது வேறொன்றும் இல்லை”, என்கிறார் வள்ளுவர் (குறள் – 300).
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. (குறள் – 300)
தன்னை முன்னிலைப்படுத்தித் தன்மைப்
பன்மையில் வள்ளுவர் அழுத்தமாகக் கூறுமிடங்கள் மூன்று, ஒன்று, “அறிய வேண்டியவற்றை அறியும்
அறிவுள்ள மக்களைப் பெறுவதைத் தவிர, ஒருவன் பெறக்கூடிய பேறு வேறு எதையும் யாம் அறியவில்லை
(குறள் – 61)”, என்று மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். இரண்டு, வாய்மையின்
சிறப்பைப் பற்றிக் கூறும்பொழுது, அதைத் தன்மைப் பன்மையில் குறிப்பிடுகிறார். மூன்று,
கயமை என்ற அதிகாரத்தில், “கயவர்கள் வடிவால் மற்ற மக்களை ஒத்திருப்பர். அந்த ஒற்றுமையைப்போல்
வேறு எந்த இரண்டு பொருட்களிடையே ஒப்புமையுள்ளதை யாம் கண்டதில்லை (குறள் – 1071).” என்று
கூறுகிறார். வள்ளுவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கூறுவது, அவருடைய அனுபவத்தின் அடிப்படையில்
அவர் கூறும் கருத்தில் அவருக்கு இருக்கும் ஆழமான நம்பிக்கையைக் குறிக்கிறது.
முடிவுரை
மக்கள் வாரத்திற்கு பதினொரு முறை
பொய்பேசுவதாகவும், பொய்பேசுவதால் உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள்
உள்ளதாகவும் உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ’உண்மை’, ’பொய்’ ’வாய்மை’ போன்றவற்றைப்
பற்றி நெடுங்காலமாகவே அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சி செய்துவருகின்றனர். வள்ளுவரும்,
’வாய்மை’ மற்றும் ‘பொய்யாமை’ ஆகியவற்றைப் பற்றிப் பல அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார்.
எவருக்கும் எந்தத் தீமையும் விளைவிக்காத சொற்களைக் கூறுவது வாய்மை என்றும், குற்றமற்ற
நன்மை விளைவிக்கும் சொற்கள் பொய்யாக இருந்தாலும், அவை வாய்மையைப் போன்றவைதான் என்றும்
வள்ளுவர் கூறுகிறார். தன்னுடைய மனத்தில் உண்மையை அறிந்திருந்தும், அதை மறைத்து ஒருவன்
பொய் சொன்னால் அவனுடைய மனமே அவனை வருத்தும் என்கிறார் வள்ளுவர். பொய் பேசாதவன் உலகத்தார்
உள்ளத்திலெல்லாம் நிலையான இடத்தைப் பெறுவான் என்றும், வாய்மை பேசுபவன் தவம் தானம் ஆகிய
இரண்டையும் செய்பவனைவிடச் சிறந்தவன் என்றும், பொய்யாமையைவிடச் சிறந்த புகழைத் தருவது
வேறொன்றும் இல்லை என்றும், பொய்பேசாதவனுக்கு அவனை அறியாமலேயே அறச்செயல்களால் கிடைக்கக்கூடிய
பயன்கள் எல்லாம் கிடைக்கும் என்றும், பொய்பேசாதவன் வேறு எந்த அறசெயல்களையும் செய்யத்
தேவையில்லை என்றும் பொய்யாமையின் சிறப்பைக் கூறுகிறார் வள்ளுவர். வாய்மையால் உள்ளம்
தூய்மை அடைகிறது என்பதும், சான்றோர்கள் பொய்யாமையைத் தவறாமல் பின்பற்றுவார்கள் என்பதும்
வள்ளுவர் கருத்து. முடிவாக, வாய்மையைவிட நல்லது எதையும் தான் கண்டதில்லை என்று தன்னை
முன்னிலைப்படுத்திக் கூறி வாய்மையின் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறார் வள்ளுவர்.
துணைநூல்கள்
Gandhi, Mohandas K. Gandhi’s
Autobiography: My Experiments with Truth. Public Affairs Press, Washington D.C.
1948
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல்.
திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப்
பாவாணர்,
ஞா. திருக்குறள்
– தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து
பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால்
– அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502
No comments:
Post a Comment