ஊழிற்
பெருவலி யாவுள?
நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் சில
நிகழ்வுகள் நாம் எதிர்பார்க்காமல் ஏதேச்சையாக நடைபெறுபவை. சில நிகழ்வுகள் நாம்
திட்டமிட்டபடியே நடைபெறுபவை. சில நிகழ்வுகளை
நம்மால் திட்டமிட முடியாது. என்ன நடக்கும் என்று உறுதியாகக் கணிக்கக்கூடிய
நிகழ்ச்சிகள் ”நிர்ணயிக்கக்கூடிய நிகழ்ச்சிகள்” என்று கூறப்படுகின்றன.
ஆங்கிலத்தில், இத்தகைய நிகழ்ச்சிகள் ’deterministic
events’ என்று அழைக்கப்படுகின்றன. சில நிகழ்வுகள் நம்மால்
நிர்ணயிக்க முடியாதவை. அவை ஆங்கிலத்தில் ’stochastic events’ என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒருவன், சனவரி மாதம் 2-ஆம் நாளன்று 1000 வெள்ளிகளை (வெள்ளி - Dollar) ஒருவங்கியில் சேமிப்புக்
கணக்கில் (சேமிப்புக் கணக்கு – Savings account) இரண்டு
விழுக்காடு வட்டிக்கு முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு சனவரி மாதம்
2- ஆம் நாளன்று அவனுடைய சேமிப்புக் கணக்கில் 1020 வெள்ளிகள் இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கலாம். அவன் எதிர்பார்த்தபடியே
1020 வெள்ளிகள் அவனுடைய சேமிப்புக் கணக்கில் இருக்கும். சேமிப்புக் கணக்கில் முதலீடு
செய்யாமல், அவன் அதே பணத்தைப் பங்குச்
சந்தையில் (Stock market) சனவரி 2- ஆம்
நாளன்று முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு சனவரி மாதம் 2-ஆம் நாளன்று அவனுடைய பங்குகளின் மதிப்பு 1000 வெள்ளிகளைவிட
அதிகமாக இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். பங்குச் சந்தையின் செயல்திறன்
(performance) நிர்ணயிக்க முடியாத ஒன்று. ஒரு நிறுவனத்தின்
பங்கின் மதிப்பு, அந்த நிறுவனத்தின் செயல்திறன், அந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் செயல்திறன், நாட்டின் பொருளாதார நிலைமை, உலகப் பொருளாதார நிலைமை
போன்ற பல்வேறு நிர்ணயிக்க முடியாத சூழ்நிலைகளால்
பாதிக்கப்படுகிறது. அதனால், நிறுவனங்களின் பங்குகளின்
எதிர்கால மதிப்பைத் துல்லியமாகக் கணிக்க முடியாது என்று
புள்ளியியல் (Statistics) அறிஞர்கள் கூறுகின்றனர். பங்குச்
சந்தையைப்போல், மனிதர்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் பல நிகழ்ச்சிகள் நிர்ணயிக்க முடியாதவை. சிந்தித்துப்
பார்த்தால் மனித வாழ்க்கையே நிர்ணயிக்க முடியாத ஒன்றுதான்(Life itself is a
stochastic process.). நேற்று உயிரோடு இருந்தவன் இன்று உயிரோடு
இல்லை. “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு(குறள்
– 333)” என்று வள்ளுவர் கூறுவதைப்போல், நாளை
உயிரோடு இருப்போமா என்று இன்று கூற முடியாது.
நிர்ணயிக்க முடியாத
நிகழ்வுகளும்
எதிர்பாராத நிகழ்வுகளும் மனித வாழ்க்கையில் நடைபெறுவது உலக இயற்கை.
இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அந்தக் காரணங்களை
மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணங்கள் தெரியாவிட்டால் மனிதன் கலக்கமடைகிறான்.
தனக்குக் காரணங்கள் தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனிதனின் மனம் மறுக்கிறது. ஆகவே,
மனிதன் காரணங்களைக் கற்பனை செய்கிறான். உதாரணமாக, சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும்
எதனால் நடைபெறுகின்றன என்பதற்குக் காரணங்கள் தெரியாதவர்கள் அவை சந்திரனையும் சூரியனையும்
இராகு என்னும் பாம்பு விழுங்குவதால் ஏற்படுகின்றன என்று எவரோ சொன்னதை நம்பினார்கள்;
இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் அதை நம்புகிறார்கள். இதுபோல், நிர்ணயிக்க முடியாத
நிகழ்வுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் மனித வாழ்க்கையில் நடைபெறுவதற்குக் காரணங்கள் ‘விதி’, ‘கர்மா’ என்று மதங்கள் கூறுகின்றன. ஒருவனுடைய
வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று இறைவனால் தீர்மானிக்கப் படுகிறது. அதுவே, அவனுடைய
விதி. விதி, ‘தலைவிதி’ என்றும் ‘தலையெழுத்து’ என்றும் அழைக்கப்படுகிறது. எவருடைய தலையிலும்
எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை! ஒருவன் ஒரு பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு
ஏற்ப அடுத்தப் பிறவியில் நன்மை தீமைகளை அவன் அனுபவிக்கிறான் என்ற கொள்கை ’கர்மா’ அல்லது
’வினைப்பயன்’ என்று அழைக்கப்படுகிறது.
ஊழ் என்ற அதிகாரத்தில்,
‘விதி’ ‘கர்மா (வினைப்பயன்)’ போன்ற கருத்துக்களை வள்ளுவர் கூறவில்லை. ”வாய்மை எனப்படுவது
யாதெனின்” என்று தொடங்கி வாய்மைக்கு இலக்கணம் வகுத்ததைப்போல் வள்ளுவர் ஊழுக்கு இலக்கணம்
வகுக்கவில்லை. நிர்ணயிக்க முடியாத நிகழ்வுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் மனித வாழ்க்கையில் நடைபெறுவது உலக இயற்கை.
அந்த உலக இயற்கையைத்தான் வள்ளுவர் ‘ஊழ்’ என்று குறிப்பிடுகிறார் என்று கருதுவது பொருத்தமானதாகத்
தோன்றுகிறது.
ஆகூழும் போகூழும்
சில சமயங்களில் நம்முடைய முயற்சி உடனே
பலன் அளிக்கலாம்; தேடிய பொருள் எளிதில் கிடைக்கலாம். இது போன்ற சமயங்களில், மனிதர்கள்
மனச்சோர்வடையாமல், உற்சாகத்தோடு, கடின உழைப்பால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில்,
பல காரணங்களினால் மனிதன் மனச்சோர்வு அடையக்கூடும். ஒருவன் பொருள் தேடுவதற்குப் பல முயற்சிகள்
செய்தும் பயனில்லாமல் போகலாம்; வேலை தேடுவதற்குப் பல முயற்சிகள் செய்தும் பயனில்லாமல்
இருக்கலாம். அவன் முயற்சி செய்கின்றபொழுது அவனுடைய உடல்நிலை சரியில்லாததால் தொடர்ந்து
முயற்சி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற சமயங்களில், மனிதன் மனச்சோர்வு அடைவது
இயற்கை. ஒருவன் மனச்சோர்வு அடைவதால், அவன் தன்னுடைய முயற்சிகளைக் கைவிடக்கூடிய சூழ்நிலைகூட
உருவாகலாம். ஆனால், முயற்சியைக் கைவிட்டால், கையிலுள்ள பொருள் கைவிட்டுப் போகும். சாதகமான
சூழ்நிலையை ’ஆகூழ்’ என்றும் பாதகமான சூழ்நிலையை ’போகூழ்’ என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
ஆகூழால்
தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
மனச்சோர்வின்மைக்கும் மனசோர்வுக்கும் பல
காரணங்கள் இருக்கலாம். மனச்சோர்வு அடைவதும் அடையாமல் இருப்பதும் உலக இயற்கை. ஆகவே,
‘ஆகூழ்’ என்பதும் ‘போகூழ்’ என்பதும் உலக இயற்கையைக் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமானதாகத்
தோன்றுகிறது.
இழவூழும் ஆகலூழும்
மனிதர்கள் மனச்சோர்வின்மையும்
மனச்சோர்வும் அடைவது எப்படி உலக இயற்கையோ அதுபோல், சில சமயங்களில் அறிவைப் பயன்படுத்தாமல்
செயல்படுவதும், சில சமயங்களில் அறிவைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும் உலக இயற்கைதான்.
அறிவைப் பயன்படுத்தாத சூழ்நிலையை ’இழவூழ்’
என்றும், அறிவைச் சிறப்பாகப் பயன்படுத்தும் சூழ்நிலையை ‘ஆகலூழ்’ என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
இழவூழ் வந்தால் அறியாமை வரும் என்பதும் ஆகலூழ் வந்தவிடத்து அறிவைப் பெருக்கும் என்பதும்
வள்ளுவரின் கருத்து.
பேதைப்
படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
நன்றாகப் படித்திருந்தாலும், தற்காலிகமான
மறதியால், தேர்வுகளில் சரியான விடை எழுதாமல் தோல்வியுற்றவர்களும், விடை தெரிந்திருந்தாலும்,
நேர்காணலில் சொல்ல முடியாமல் தோல்வியுற்றவர்களும், நன்றாக வாகனங்களை ஓட்டி அனுபவம்
இருந்தாலும், அவசரத்தில், சரியாகச் சிந்திக்காமல் விபத்துகுள்ளானவர்களும் வள்ளுவர்
கூறும் இழவூழால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு. அதுபோல், ஒரு ஆபத்தான
சூழ்நிலையில் தன் அறிவைப் பயன்படுத்தித் தன்னையோ அல்லது பிறரையோ காப்பாற்றுபவர்கள்
ஆகலூழால் பயனடைந்தவர்கள்.
உண்மை அறிவே மிகும்
ஒருவன் நுண்ணிய
பொருள்களை உணர்த்தும் பல நூல்களைக் கற்றாலும் சில சூழ்நிலைகளில் அந்த நூல்களிலிருந்து
தான் கற்றவற்றைப் பயன்படுத்தாமல் தனது இயற்கை அறிவையே பயன்படுத்துவான்.
நுண்ணிய
நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை
அறிவே மிகும். (குறள் – 373)
வழக்கறிஞர்கள் குற்றம் புரிவதும், மருத்துவர்கள்
தங்கள் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் புகையிலையைப் பயன்படுத்துவதும், மது அருந்துவதும்,
ஈகை ஒப்புரவு போன்றவற்றைப் பற்றித் திருக்குறளிலிருந்து நன்கு கற்றவர்கள் எவருக்கும்
எதையும் அளிக்காமல் இருப்பதும் இந்தக் குறளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டு.
இருவேறு உலகத்து இயற்கை
உலக இயற்கை இரண்டுவிதமாக
உள்ளது. செல்வம் உடையவர்களாக இருப்பது ஒருவகை; அறிவுடையவர்களாக இருப்பது மற்றொருவகை.
இருவேறு
உலகத்து இயற்கை திருவேறு
ஒருவன் நூல்களைக் கற்றும்,
கற்றவர்களிடமிருந்து கேட்டும், கல்விக்கூடங்களில் பயின்றும் தெளிந்த அறிவுடையவனாகலாம்.
ஆனால், ஒருவன் கல்வியும் கேள்வியும் இல்லாமலேயே செல்வந்தனாகலாம். வள்ளுவர் காலத்திலும்
அதற்கு முன்பும் அறிஞர்களாக இருந்தவர்கள் பலரும் பொன்னும் பொருளும் பெறுவதற்காகப் புரவலர்களின்
கொடையை நம்பி வாழ்ந்ததைக் கண்ட வள்ளுவர் அறிவுடையவனாக இருப்பதும் செல்வந்தனாக இருப்பதும்
இருவேறு தன்மைகள் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். அவருடைய கருத்து இன்றும் ஏற்புடையதுதான்.
கல்லுரிகளுக்குச் சென்று, படித்துப் பட்டங்கள் பெற்றவர்கள் நல்ல பணிகளைப்பெற்று, நல்ல
வருமானத்தோடு வசதியாக வாழ்ந்தாலும், அவர்கள் அனைவரும் பெருஞ்செல்வந்தர்கள் என்று கூறமுடியாது.
இன்று உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தர்களாகக் கருதப்படும் மூவர்: ஜெஃப் பேசோஸ்(Jeff
Besos), பில் கேட்ஸ்(Bill Gates) மற்றும் மார்க் சக்கர்பர்க்(Mark Zuckerburg). இவர்களுள்,
ஜெஃப் பேசோஸ் என்பவர் அமேசான்(Amazon) நிறுவனத்தை நிறுவியவர். இவர் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம்
பெற்றவர். இவர் 121 பில்லியன் டாலர்களுக்குச்($121,000,000,000) சொந்தக்காரர். இவரைப்போல் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள்
பலர். ஆனால், அவர்கள் இவரைப்போல் செல்வந்தர்கள் அல்ல. இளங்கலைப் பட்டப்படிப்பை முடிக்காமலேயே
கல்லூரியைவிட்டு வெளியேறி, பில் கேட்ஸ்(Bill Gates) சொந்தமாக மைக்ரோசாஃப்ட்(Microsoft)
நிறுவனத்தை நிறுவி, இன்று 106 பில்லியன் டாலர்களுக்குச்($106,000,000,000) சொந்தக்காரராக
உள்ளார். பில் கேட்ஸைப்போல், மார்க் சக்கர்பர்க் இளங்கலைப் பட்டப்படிப்பை முடிக்காமலேயே
கல்லூரியைவிட்டு வெளியேறி, ஃபேஸ்புக்(Facebook) நிறுவனத்தை நிறுவி, இன்று 69 பில்லியன்
டாலர்களுக்குச்($69,000,000,000) சொந்தக்காரராகத் திகழ்கிறார். இவர்களுடைய சாதனைகளைப்
பார்த்தால், ”திருவேறு, தெள்ளியர் ஆதலும் வேறு” என்று வள்ளுவர் கூறுவது முற்றிலும்
உண்மை என்பது நன்கு புலனாகிறது.
நல்லவையும் தீயவையும் செல்வமும்
சில
சமயங்களில் நன்மைகள் செல்வம் சேகரிப்பதற்குத் தீமையாகவும், தீமைகள் செல்வம் சேகரிப்பதற்கு
நன்மையாகவும் (சாதகமாகவும்) அமையும் என்கிறார் வள்ளுவர்.
நல்லவை
எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம்
செல்வம் செயற்கு. (குறள்
– 375)
ஒரு நாட்டில் அமைதி நிலவினால்,
போர்க்கருவிகளும் போருக்குத் தேவையான வாகனங்களையும் உற்பத்தி செய்பவர்களின் வருமானம்
குறையும். ஆனால், அந்த நாடு மற்றொரு நாட்டோடு போர்செய்யத் தொடங்கினால், போர்க்கருவிகளும்
போருக்குத் தேவையான வாகனங்களையும் உற்பத்தி செய்பவர்களின் வருமானமும் இலாபமும் அதிகரிக்கும்.
இப்பொழுது (2020 – ஆம் ஆண்டில்), கொரானா என்ற நோய்க்கிருமி உலகெங்கும் பரவிவருகிறது.
அதைத் தடுப்பதற்குத் தேவையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்க்கிருமியால்
தீமை விளைந்தாலும், அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நிறுவனமும் அதன் பங்குதாரர்களும்
மிகப்பெரும் அளவில் இலாபம் அடைவார்கள் என்பது உறுதி.
நமக்குரிய பொருள் நம்மைவிட்டுப்
போவதில்லை
ஒருவன்
எத்துணை முயற்சி செய்து, அவனுக்கு உரித்தானதல்லாதவற்றைக் காத்தாலும் அவனிடம் அவை தங்கா.
ஆனால், அவனுக்கு உரியவற்றை அவன் வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் அவை அவனைவிட்டுப்
போகா.
பரியினும்
ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும்
போகா தம. (குறள் – 376)
ஒருமுறை நான் என்னுடைய குடும்பத்தோடு இந்தியாவிற்கு
சென்றபொழுது, எங்களுடைய கடவுச்சீட்டுக்கள்(Passports), பயணச்சீட்டுக்கள்(Arline
tickets) ஆகியவற்றை தில்லியில் தொலைத்துவிட்டேன். மறுநாள் என்னை முன்பின் தெரியாத ஒருவர்
நான் இருக்குமிடம் தேடிவந்து அவற்றை எங்களிடம் கொடுத்தார். இதுபற்றி விளக்கமாகப் பின்னிணைப்பில்(பின்னிணைப்பு
– 1) குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணம் தெரியாததால் அவற்றிற்குக்
காரணம் ஊழ் என்று கருதப்படுகிறது போலும்.
தொகுத்தவனும் வகுத்தவனும்
காரணங்களைக் கண்டுபிடிக்க
முடியாத நிகழ்வுகள் நடைபெறுவது உலக இயற்கை. அந்த உலக இயல்பை ’வகுத்தான்’ என்று உயர்திணையாக
உருவகித்து, வகுத்தான் வகுத்த வகைப்படி அல்லாமல் கோடிக்கணக்கில் பொருளை ஈட்டியவர்களும்
அப்பொருளால் இன்பம் நுகர இயலாது என்கிறார் வள்ளுவர்.
வகுத்தான்
வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (குறள் – 377)
கோடிக்கணக்கில் பொருள் இருந்தாலும், நோய்,
மூப்பு, சாக்காடு, கருமித்தனம், களவு போன்ற காரணங்களால் பொருளை அனுபவிக்க முடியாத சூழ்நிலை
உருவாகலாம். ஆனால், அந்தச் சூழ்நிலை ஏன் உருவாகியது என்பதை அறிய முடியாததால் அதை ஊழ்
என்று முடிவு செய்து, ஊழை ’வகுத்தான்’ என்று உருவகிக்கிறார் வள்ளுவர். ஊழை ’வகுத்தான்’
என்று உருவகிப்பது காமத்தை காமன் என்றும், காற்றை வாயு என்று ஒருகடவுளாகவும் உருவகிப்பதைப்
போன்றது.
அல்லற் படுவது ஏன்?
நிர்ணயிக்க முடியாத
நிகழ்வுகளாலும் எதிர்பாராத நிகழ்வுகளாலும் நன்மைகளும் நடக்கின்றன, தீமைகளும் நடக்கின்றன.
அவ்வாறு இருக்கும்பொழுது, ”நன்மைகள் நடக்கும்பொழுது அவற்றை நல்லவை என்று ஏற்று மனம் மகிழ்பவர்கள், துன்பங்கள் நேரும்பொழுது,
அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் துன்பப்படுவது ஏன்?” என்று கேட்கிறார் வள்ளுவர்.
நன்றாங்கால்
நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற்
படுவ தெவன்? (குறள்
– 379)
ஊழும் உழைப்பும்
நம்மால் காரணம்
காண இயலாத நிகழ்வுகளைவிட (அதாவது ஊழைவிட) வலிமையானவை எவை? அவற்றைத் தடுப்பதற்கு எத்துணை
ஆராய்ச்சி செய்தாலும், அவை நம்முன்னே வந்து நிற்கும் என்பது வள்ளுவரின் கருத்து.
ஊழிற்
பெருவலி யாவுள? மற்றொன்று
ஊழைத் தடுக்க முயன்றால் அது வந்து முன்னே
நிற்கும் என்றுதான் வள்ளுவர் கூறுகிறாரே ஒழிய, அதை வெல்ல முடியாது என்று அவர் கூறவில்லை.
தளர்ச்சி இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்தால், வெல்வதற்கரிய ஊழையும் வெல்லலாம் என்று
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்[5].
(குறள்-
620)
என்ற குறளில் மனிதனின் விடாமுயற்சியைச்
சிறப்பித்துக் கூறுகிறார் வள்ளுவர். “ஊழிற் பெருவலி யாவுள?” என்ற கேள்விக்கு வள்ளுவர்
அளிக்கும் விடை, “கடும் உழைப்பு” என்பதுதான்.
முடிவுரை
நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு
நம்மால் காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குக்
காரணம் தெரியாததால், அவை கடவுளால் நிர்ணயிக்கப்பட்டவை என்றும் அவற்றிற்கு ’ஊழ்’, ‘விதி’,
‘வினைப்பயன்’, ‘கர்மா’ என்றெல்லாம் சிலர் பொருள் கூறுகிறார்கள். ஊழ் என்ற அதிகாரத்தில்,
ஊழ் என்பது என்ன என்பதற்கு வள்ளுவர் வரையறை எதுவும் கூறவில்லை. அதிலுள்ள குறட்பாக்களை
நடுவுநிலையோடு ஆராய்ந்தல், மனித வாழ்க்கையில் எதேச்சையாக, எதிர்பாராத நிகழ்ச்சிகள்
நடைபெறுவது உலக இயற்கை என்றும், அத்தகைய உலக இயற்கையைத்தான் வள்ளுவர் ‘ஊழ்’ என்று குறிப்பிடுவதாகவும்
தோன்றுகிறது. ஊழ் நமக்குச் சாதகமாக இருக்கும்பொழுது நம்முடைய மனம் சோர்வில்லாமலும், ஊழ் நமக்குப் பாதகமாக
இருக்கும்பொழுது நாம் சோம்பலோடு இருந்து பொருளை இழக்கிறோம் என்கிறார் வள்ளுவர். அதுபோல்,
தீயூழால் நமக்குப் பேதைமை தோன்றுகிறது, நல்லூழால் நமக்கு அறிவு பெருகுகிறது என்றும்
வள்ளுவர் கூறுகிறார். ஒருவன் எத்துணை நூல்களைக் கற்றிருந்தாலும், ஊழின் தாக்கத்தால்,
அவனுடைய உண்மையான அறிவே மேம்பட்டுத் தோன்றும் என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது.
ஒருவன் அறிவுடையவனாக இருப்பதும் செல்வந்தனாக இருப்பதும் அவனுடைய ஊழைப் பொருத்ததுதான்
என்ற கருத்தையும் நாம் குறளில் காண்கிறோம். செல்வத்தைப் பெருக்குவதற்கு நல்லவை எல்லாம் தீயவையாகவும் தீயவையெல்லாம் நல்லவையாகவும்
அமைவது உலக இயற்கை என்று வள்ளுவர் கூறுகிறார். நமக்குச் சொந்தமில்லாத பொருள்களை நம்மால்
பாதுகாக்க முடியாது என்றும் நமக்கு உரிய பொருள்களை நாம் வீசி எறிந்தாலும் அவை நம்மைவிட்டுப்
போகா என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது. ஒருவன் கோடிக்கணக்கில் பொருள்களைச் சேர்த்தாலும்
அவற்றை அவனால் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதும் உலக இயற்கைதான் என்றும் வள்ளுவர்
கூறுகிறார். ஊழ் சாதகமாக இருக்கும்பொழுது மகிழ்ச்சி அடைபவர்கள், அது பாதகமாக இருக்கும்பொழுது
வருந்துவது ஏன் என்று வள்ளுவர் கேட்கிறார். முடிவாக, எதிர்பாராத நிகழ்ச்சிகளைத் தடுப்பதற்கு
எத்துணை முயற்சி செய்தாலும், அவை வந்து நம்முன் நிற்கும் என்று வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார்.
மற்றொரு குறளில், எதிர்பாராத நிகழ்ச்சிகள் நம் முன்னே வந்து நின்றாலும், இடைவிடாத முயறசியால்
வெற்றி பெறலாம் என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது.
துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய
திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர்,
ஞா. திருக்குறள்
– தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து
பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
பின்னிணைப்பு
- 1
தொலைந்த
பொருள் திரும்பி வந்தது!
1979 – ஆம் ஆண்டு, நான் என் குடும்பத்தோடு அமெரிக்காவிலிருந்து
டில்லியில் இருந்த என் அண்ணனை சந்த்திக்கச் சென்றேன். நான் கிளம்புவதற்குச் சில நாட்களுக்குமுன்,
டில்லி விமான நிலையத்திலிருந்து டில்லி நகரத்திற்குச்
செல்லும் வழியில் உள்ள மரங்களை வெட்டி, சாலையில் குறுக்கே வீழ்த்தி, சீருந்துகளில்(சீருந்து
– car) செல்லும் மக்களிடம் உள்ள பொருட்களை கொள்ளைக்காரர்கள், திருடுவதாக தொலைக்காட்சியில்
செய்தி வந்தது. என் அண்ணன் இந்திய இராணுவத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார். அவரைத்
தொலைபேசியில் தொடர்புகொண்டு, தொலைக்காட்சியில் வந்த செய்தியைப் பற்றிக் கூறினேன். அவர்,
“அதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை. நான் விமான நிலையத்திற்கு வருகிறேன், என்னுடன்
சில இராணுவ வீரர்களும் வருவார்கள். நான் உன்னையும் உன் குடும்பத்தினரையும், எந்தவிதமான
தொல்லையும் இல்லாமல் என் வீட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும்
செய்கிறேன்.”, என்று கூறி எனக்கு ஆறுதல் அளித்தார்.
நாங்கள் சென்ற விமானம் நள்ளிரவில் டில்லியில் தரையிறங்கியது.
நாங்கள், விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தவுடன், என் அண்ணனும் அவரோடு சில இராணுவ
வீர்களும் அங்கு நின்று கொண்டிருந்தனர். என் அண்ணன் ஒரு சீருந்தில் வந்திருந்தார்.
இராணுவ வீரர்கள் இரண்டு ஜீப்பில்(Jeep) வந்திருந்தார்கள். சாமான்களை எல்லாம் ஒரு ஜீப்பில்
வைத்துவிட்டு, நானும் என் குடும்பத்தினரும் அண்ணன் வீட்டுக்குச் சென்றோம்.
அன்றிரவு தூக்கம் வரவில்லை. காலை ஐந்துமணி இருக்கும்.
எங்களுடைய கடவுச்சீட்டுக்கள்(Passports), விமானப் பயணச்சீட்டுக்கள்(Airline Tickets) ஆகியவற்றை ஒரு சிறிய பையில் வைத்திருந்தேன்.
ஏதோ காரணத்திற்காக, அந்தப் பையைத் தேடினேன். அது கிடைக்கவில்லை. பலமுறை தேடியும் அது
கிடைக்கவில்லை. அதைத் தேடும்பொழுது ஏற்பட்ட சத்தத்தினால், என் அண்ணன் விழித்துக்கொண்டார்.
அவர் என்னிடம் வந்து, “என்ன தேடுகிறாய்?” என்று கேட்டார். நான், “ஒரு பையில், எங்களுடைய
கடவுச்சீட்டுக்களையும் பயணச்சீட்டுக்களையும்
வைத்திருந்தேன், அந்தப் பையைக் காணவில்லை.”, என்று கூறினேன். என் அண்ணன் எதையும் அதிகமாகப்
பொருட்படுத்த மாட்டார். அவர், ”காலையில் தேடிப் பார். கிடைக்கவில்லை என்றால் விமான
நிலையத்துக்குப் போய் தேடிப்பார்.” என்று கூறிவிட்டு மீண்டும் உறங்கப் போய்விட்டார்.
மறுநாள் காலை, மீண்டும் தேடியும் அந்தப் பை கிடைக்காததால்,
விமான நிலையத்திற்குச் சென்றேன். அங்கே சென்று கேட்ட போழுது, அங்குள்ள அதிகாரி ஒருவர்,
“காணாமற் போன பொருட்கள் கிடைக்குமிடத்திற்குச் (Lost and Found) சென்று, அங்குள்ளவர்களிடம்
கேட்குமாறு சொன்னார். அவர் சொன்னபடி, அங்குச் சென்று தேடிப் பார்த்தேன். அங்கும் அந்தப்
பை கிடைக்கவில்லை. பின்னர், டில்லி விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார்
கொடுத்துவிட்டு அண்ணன் வீட்டுக்குச் சென்றேன்.
நாங்கள் எடுத்துகொண்டு சென்ற பணம் அந்தப் பையில் இல்லை.
அது என்னிடமும் என் மனைவியிடமும் இருந்தது. என் மனைவியும் அண்ணியும் டில்லியில் உள்ள
கடைகளுக்குச் செல்லவெண்டும் என்று விரும்பினார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். கடையிலிருந்து
நாங்கள் மாலை ஆறுமணி அளவில் அண்ணன் வீட்டிற்குத் திரும்பி வந்தோம். என் அண்ணன், மகிழ்ச்சியோடு,
“ பிரபாகரன்! உன்னுடைய பை கிடைத்துவிட்டது.” என்று கூறி, என்னிடம் அந்தப் பையைக் கொடுத்தார்.
அதில் நான் வைத்திருந்த கடவுச்சீட்டுக்களும் பயணச்சீட்டுக்களும்
அப்படியே இருந்தன. எனக்கு ஆச்சர்யம் ஒரு பக்கம், மகிழ்ச்சி ஒரு பக்கம். “எப்படிக் கிடைத்தது”
என்று அண்ணனிடம் கேட்டேன்.
“நீ அந்தப் பையை ஜீப்பில் உன் பெட்டிகளுக்கு மேல் வைத்துவிட்டாய்.
ஜீப் ஓடும்பொழுது, அது நழுவி, தெருவில் விழுந்துவிட்டது. அந்த ஜீப்பிற்க்குப் பின்னால்
வந்த வாடகைச் சீருந்து ஓட்டுனர்(Taxi Driver) ஒருவர் அது விழுந்ததைப்
பார்த்தவுடன், தன்னுடய வாகனத்தை நிறுத்திவிட்டு, இறங்கி, அந்தப் பையை எடுத்தார். அதில்
உள்ள பொருள்களைப் பார்த்தார். அவை என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அவர் அந்தப்பையை
அவருடையை முதலாளியிடம் கொண்டுபோய் கொடுத்தார். முதலாளி அதிலுள்ள பொருட்களைப் பார்த்தவுடன்,
அவை யாரோ ஒரு பயணியுடைய ஆவணங்கள்(Documents) என்று புரிந்துகொண்டார். அந்தப்பையை விமான
நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் கொடுக்குமாறு அவர் ஓட்டுனரிடம் கூறினார். ஓட்டுனர் அதைக் கொண்டுபோய் காவல் நிலையத்தில் கொடுத்தார். காவல் நிலையத்தில்
உள்ளவர்கள், நீ அந்தப்பையைத் தொலைத்துவிட்டதாகவும், நீ என்னோடு தங்கி இருப்பதாகவும்
கூறி, என் வீட்டு முகவரியை ஓட்டுனரிடம் கொடுத்தார்கள். அந்த ஓட்டுனர்
அந்தப்பையைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்.” என்று என் அண்ணன் விளக்கமாக,
நடந்ததைக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை.
நான், “அந்த ஓட்டுனருக்கு ஏதாவது கொடுத்தீர்களா?”,
என்று கேட்டேன். அண்ணன் மிகவும் தாராள குணம்
படைத்தாவர். அவர், “அவருக்கு 200 ரூபாய் பணமும், ஒரு பாட்டில் ஜேக் டேனியலும் (Jack
Daniel Whiskey) கொடுத்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறினார்.
என்னுடைய பொருளை நான் என்னுடைய கவனமின்மையால் தொலைத்தாலும்,
அது என்னைத் தேடிவந்து விட்டது!
இது போன்ற நிகழ்ச்சி மற்றவர்களுடைய வாழ்க்கையிலும்
நடந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியைப் பற்றி நினைக்கும்பொழுதெல்லாம், எனக்கு,
பரியினும்
ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும்
போகா தம. (குறள்
– 376)
என்ற குறள்தான் ஞாபகம் வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு
விளக்கம் அளிக்க முடியாது. இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் ஏதேச்சையாக நடைபெறும்
நிகழ்ச்சிகள் (unexpected random events) என்று தான் கூறமுடியும். இது போன்ற நிகழ்ச்சிகளைத்தான்
வள்ளுவர் ஊழ் என்கிறார் போலும்.
[1] . அசைவின்மை – தளர்ச்சியின்மை; மடி – சோம்பேறித்தனம்
[2] . அகற்றுதல் – பெருக்குதல்; கடை - இடம்
[3] . திரு – செல்வம்; தெள்ளியர் – அறிவுடையோர்
[4] . சூழ்தல் – ஆராய்தல்
[5] . உப்பக்கம் – முதுகு; உப்பக்கம் காணுதல் – வெல்லுதல்;
உலைவு – ஊக்கக் குறைவு; உஞற்றுதல் – ஊக்கி முயலுதல்
No comments:
Post a Comment