பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்
வேளாண்மை செய்பவன் ஆடிமாதத்தில் நெல்லை விதைத்தால் மார்கழி மாதத்தில்தான்
அறுவடை செய்ய முடியும். அவசரப்படுவதால் பயனில்லை. அதுபோல், ஒரு பெண் கருவுற்றால், சுமார்
280 நாட்களுக்குப் பிறகுதான் குழந்தை பிறக்கும். அவசரப்படுவதால் பயனில்லை. இது போன்ற
சூழ்நிலைகளில் பலரும் அவசரப்படுவதில்லை. ஆனால், அன்றாட வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில்
மனிதர்கள் அவசரப்படுகிறார்கள்; பொறுமை இழக்கிறார்கள். உதாரணமாக, ஒரு கடையில் பொருளை
வாங்குவதற்கு வரிசையில் நிற்கும்பொழுது, அதிக நேரமானால் நம்மில் பலரும் பொறுமையை இழக்கிறோம்.
பொதுவாக, நாம் எதிர்பார்த்தது எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்த வகையில் நடைபெறாவிட்டால்
ஆத்திரப்படுகிறோம்; பொறுமை இழக்கிறோம். நம்மை ஒருவர் அவமதித்தாலோ அல்லது நமக்கு ஒரு
தீமை செய்தாலோ நாம் பொறுமை இழக்கிறோம். நமக்குத் தீமை செய்பவர்களுக்குத் திருப்பித்
தீமை செய்யத் துடிக்கிறோம்; சில சமயங்களில் நாமும் தீமை செய்கிறோம்.
மக்களின் பொறுமையின்மையைப்
பற்றியும் அதனால் வரும் தீமைகளைப் பற்றியும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு
நடத்தினார்கள். அந்த ஆய்வில் 1158 மாணவர்கள்
கலந்துகொண்டார்கள். அந்த ஆய்வில் ஒவ்வொரு மாணவனிடமும், “உனக்கு 100 வெள்ளியைப் (வெள்ளி
– Singapore dollar)பரிசாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை இப்பொழுதே பெற்றுக்கொள்ள
விரும்பினால் உடனே 100 வெள்ளி கொடுக்கப்படும். ஆனால், ஒரு மாதம் காத்திருந்தால்
101 வெள்ளி கிடைக்கும். பல மாதங்கள் பொறுத்திருந்தால் 128 வெள்ளி கிடைக்கும். இப்பொழுதே
100 வெள்ளி வேண்டுமா? அல்லது பொறுத்திருந்து அதிகமான தொகையை பெற்றுக்கொள்ள விருப்பமா?”,
என்று கேட்கப்பட்டது. தங்கள் பரிசுத்தொகையை உடனே பெற்றுக்கொள்ள சிலர் விரும்பினார்கள்.
சிலர் பொறுத்திருந்து அதிகத் தொகையைப் பெற்றுக்கொண்டார்கள். பின்னர் அனைவருக்கும் இரத்தப்
பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில், பொறுமை இல்லாதவர்களின் கொரொமொசோமில்
(Chromosome[1]) உள்ள டெலொமியர்[2]
(Telomere) என்பதின் நீளம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. கொரொமொசோமில் உள்ள
டெலொமியர் நீளம் குறைவாக இருப்பவர்களுக்கு அறிவாற்றல், சமூகத்தில் பலரோடும் ஒத்து வாழும்
இயல்பு, விரக்திகளைச் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் மனநலம் ஆகியவை பாதிக்கப்படுவதற்கான
அறிகுறிகள் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இரத்த அழுத்தத்தின் உயர்வு, இதய நோய்கள், புற்று
நோய்கள் போன்றவையும் தோன்றுவதற்குப் பொறுமையின்மை வழிவகுக்கும் என்று வேறு சில ஆய்வாளர்களும்
கண்டுபிடித்துள்ளனர். மேலும், கடன் மதிப்பெண்ணைக் (கடன் மதிப்பெண் - Credit Score)
குறைத்து, நிதிநிலைமையையும் பொறுமையின்மை பாதிக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பொறையுடைமை (பொறை
- பொறுமை) என்ற அதிகாரத்தில், பொறுமையின்மையினால் வரும் தீமைகளைக் குறிப்பிடாமல், பொறுமையின்
சிறப்பையும், பொறுமையோடு இருப்பதினல் வரும் நன்மைகளையும் மட்டுமே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
பொறுமையின்மையினால் வருவது சினம். சினத்தால் வரும் கேடுகளைப் பற்றி வெகுளாமை என்ற அதிகாரத்தில்
விளக்கமாகக் கூறுவதால், பொறையுடைமை என்ற அதிகாரத்தில் பொறுமையின்மையினால் விளையும்
தீமைகளைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடவில்லை போலும்.
பொறையுடைமையின் சிறப்பு
தன்னை அகழ்வாரையும்
வீழ்ந்துவிடாமல் நிலம் காப்பாற்றுகிறது. அதுபோல் தம்மை அவமதித்து இகழ்வாரையும் பொறுத்துக்கொள்ளுதல்
மிகச் சிறந்த பண்பு (குறள் – 151). வறுமையில் எல்லாம் கொடிய வறுமை விருந்தினர்களைப்
பேணாது புறக்கணித்தல். அதுபோல், அறிவிலாதார் செய்யும் சிறுமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
வலிமையுள் எல்லாம் மிகுந்த வலிமையாகும் (குறள் – 153).
அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப்
பொறுத்தல் தலை. (குறள் – 151)
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை
மடவார்ப் பொறை. (குறள் – 153)
பற்றுக்களை எல்லாம்
நீக்கித் துறவறத்தை மேற்கொள்பவர்கள் எல்லா உயிர்களிடத்திலும் கருணை கொண்டவர்களாகவும்
எல்லா நற்குணங்களும் உடையவர்களாகவும் கருதப்படுவது வழக்கம். ஆனால், இந்து மதத்தைச்
சார்ந்த புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம் காணும் முனிவர்கள் மிகுந்த கோபம் உடையவர்களாகச்
சித்திரிக்கப்படுகிறார்கள். அந்த முனிவர்களின் தவத்தை எவராவது கலைத்தாலோ அல்லது அவர்களுக்கு
எவராவது தீங்கிழைத்தாலோ முனிவர்கள் மிகுந்த கோபத்தோடு அவர்களை சபிப்பதாகப் புராணங்களிலும்
இதிகாசங்களிலும் நாம் காண்கிறோம். நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில் “குணமென்னும்
குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள் – 38)” என்ற குறளில், பற்றுக்களை
எல்லாம் நீத்தவர்களின் கோபம் மிகவும் கொடியது என்று வள்ளுவரும் கூறுகிறார். அத்தகைய
துறவிகளையும் முனிவர்களையும்விட, பொறுமையை இழக்காதவர்கள் சிறந்தவர்கள் என்ற கருத்து
குறளில் காணப்படுகிறது. நெறிதவறி வாழ்பவர்களின் வாயிலிருந்து வரும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்பவர்கள்
பற்றுக்களைத் துறந்து வாழும் துறவிகளைவிட மிகுதியான மனத்தூய்மை உடையவர்கள் (குறள்
– 159). உண்ணாமல் இருந்து, பற்றுக்களை எல்லாம் துறந்து தவம் செய்பவர்கள் பெரியவர்கள்.
இருப்பினும், அவர்கள் பெரியவராவது பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துகொள்பவர்களுக்குப்
பின்பேயாகும் (குறள் – 160). பொறையுடைமையின் சிறப்பைக் கூறும் இந்தக் கருத்துக்களை
கீழ்வரும் குறட்பாக்களில் காணலாம்.
துறந்தாரின்
தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல்
நோற்கிற் பவர். (குறள் – 159)
உண்ணாது
நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (குறள்
– 160)
மற்றவர்கள்
செய்யும் தீமைகளைப் பொறுத்துக்கொள்வது எப்படி?
முறையல்லாதவற்றைத் நமக்குப் பிறர் செய்தாலும் அதை நினைத்து நினைத்து வருந்தி அறத்திற்குப்
புறம்பானவற்றைச் செய்யாதிருப்பது நல்லது
(குறள் – 157). சொல்லத்தகாதவற்றைப் பிறர் நம்மிடம் சொன்னாலும், செய்யத்தகாதவற்றைப்
பிறர் நமக்குச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொள்வது நல்லது. அவற்றை மறந்துவிடுவது
பொறுத்தலைவிட நல்லது (குறள் – 152). செருக்கால் நம்மிடம் வரம்பு கடந்த செயல்களைச் செய்பவர்களை
நம்முடைய பொறுமையால் (பொறுமை என்னும் மேன்மையான தகுதியால்) வென்றுவிட வேண்டும் (குறள்
– 158).
திறனல்ல
தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல
செய்யாமை நன்று. (குறள்
– 157)
பொறுத்தல்
இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
(குறள்- 152)
மிகுதியான்
மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான்
வென்று விடல். (குறள் – 158)
கிறித்துவமதம்
இயேசு கிறிஸ்த்துவைப் பொறுமையின் சின்னமாகச் சித்திரிக்கிறது. அவரைச் சிலுவையில் அறைந்தபொழுது,
”தந்தையே! என்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்துவிடுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்
என்பதை அறியாதவர்கள்.”, என்று அவர் கடவுளை வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது (லுயூக்
23:34). “ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனிடம் அடுத்த கன்னத்தையும் காட்டு.”
என்று இயேசு கிறிஸ்து கூறியதாகவும் கூறப்படுகிறது (மேத்தேயு 5:39). நமக்குப் பிறர்
செய்யும் தீமைகளை நம்முடைய பொறுமையால் எதிர்கொள்ளவேண்டும் என்று வேறு சிலரும் கூறியுள்ளனர்.
உதாரணமாக, ரோமாபுரியை சார்ந்த செனகா (4. கி.மு – 65 கி.மு) என்ற தத்துவஞானி ”பிறருடைய
கருணையற்ற செயல்களை நம்முடைய கருணையால் நாம் எதிர்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மார்க்கஸ் அரேலியஸ் (121 கி. பி. – 180 கி. பி.)
என்ற ரோமாபுரியின் மன்னன் “ஒருவன் உனக்குத் தீங்கு செய்தால், அவனைப்போல் நீயும்
அவனுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பது நல்லது (மார்க்கஸ் அரேலியஸ் புத்தகம் VI –
6)” என்று அறிவுரை கூறுகிறான். இவர்களைப்போல்,
வள்ளுவரும், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் (குறள் –
314)” என்று கூறுவது நினைவுகூரத் தக்கது. மற்றும்,
“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (குறள் – 987)” என்றும்
வள்ளுவர் கூறியிருப்பதும் நினைவுகூரத் தக்கதாகும். நமக்கு ஒருவர் தீமை செய்தால், அதைப்
பொறுத்துக்கொண்டு, அவர் வெட்கபடுமாறு அவருக்கு நன்மை செய்து, அவர் செய்த தீமையை மறந்துவிட
வேண்டும் என்பது வள்ளுவர் கூறும் மிக உயர்ந்த கருத்து. மற்ற அறிஞர்களைவிட வள்ளுவரின்
கருத்து மிகச் சிறந்ததாகத் தோன்றுகிறது.
பொறுமையினால் வரும் நன்மை
எல்லா நற்குணங்களும்
நிறைந்திருப்பது நிறையுடைமை எனப்படும். அந்த நிறையுடைமை ஒருவரிடம் இருக்குமானால் அவர்
தன்னுடைய பொறுமையையும் காத்துக்கொள்ள வேண்டும். பொறுமையின்மையால் ஏற்படும் சினத்தால்
தீய செயல்கள் செய்வதற்கும் கடுஞ்சொற்கள் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொறுமையின்மையால்
நிறையுடைமையில் குறை ஏற்படுகிறது. ஆனால், பொறுமையிருந்தால் நிறையுடைமையைக் காப்பாற்றிக்கொள்ள
முடியும் (குறள் – 154). தனக்குத் துன்பம் தந்தவர்கள்மீது கோபப்பட்டு, அவர்களைத் தண்டிப்பவர்களை
எவரும் ஒருபொருட்டாக மதிக்க மாட்டர்கள். ஆனால், தனக்குத் துன்பம் தந்தவர்களைப் பொறுத்துக்கொள்பவர்களை
அனைவரும் பொன்னைப்போல் போற்றுவர். உலோகங்களில் எப்படிப் பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறதோ
அதுபோல் பொறுமையுடையவர்கள் மக்களில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் (குறள் –
155). தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டிப்பவர்களுக்கு அந்த ஒருநாள் மட்டுமே இன்பம்
கிடைக்கிறது. அதாவது, தண்டித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி அப்பொழுது மட்டுமே இருக்கும்.
ஆனால், தனக்குத் தீங்கிழைத்தவர்களிடம் பொறுமையோடு இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்நாள்
முடியும் காலம் வரைக்கும் புகழுண்டாகும் (குறள் – 156).
நிறையுடைமை
நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி
ஒழுகப் படும். (குறள் – 154)
ஒறுத்தாரை
ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப்
பொன்போல் பொதிந்து. (குறள் -155)
ஒறுத்தார்க்கு
ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந்
துணையும் புகழ். (குறள் – 156)
நிறையுடைமை
நீங்காமல் இருப்பதற்கும், பிறரால் மதிக்கப்படுவதற்கும், நிலைத்த புகழுக்கும் காரணமாக
அமைவது பொறையுடைமை என்று வள்ளுவர் கூறுவதுபோல், நம்முடைய பொறுமையால் நமக்குப் பல நன்மைகள்
கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர். பெர்க்லி
பல்கலைக்கழகத்தைச் (University of California, Berkeley) சார்ந்த ”Greater Good
Science” என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ”Greater Good Magazine[3]”
என்ற மின்னிதழில், ”
பொறுமைக்கும் மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும்
நெருங்கிய தொடர்பு உள்ளது. பொறுமையோடு இருப்பவர்களுக்கு சிறந்த நண்பர்களும்
சுற்றத்தார்களும் இருப்பார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் அவருடைய குறிக்கோளை அடைவதற்குப் பொறுமை உதவி செய்கிறது.”
என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முடிவுரை
பல சமயங்களில் பல
காரணங்களுக்காக மக்கள் தங்கள் பொறுமையை இழக்கிறார்கள். பொறுமை இழப்பவர்கள் கோபம் அடைகிறார்கள்.
கோபத்தால் அவர்களுடைய உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படுகின்றன. பொறையுடைமை ஒரு சிறந்த
பண்பு. அறிவில்லாதார்கள் செய்யும் சிறுமைகளை பொறுத்துக்கொள்ளுதல் வலிமையில் எல்லாம்
வலிமை. அதாவது, ஒருவனுடைய பொறையுடைமை என்னும் பண்பு அவனுடைய மனவலிமையைக் குறிக்கிறது.
பொறுமையுடையவர்கள் பற்றுக்களைத் துறந்த துறவிகளைவிட மனத்தூய்மையும் பெருமையும் உடையவர்கள்.
மனச்செருக்காலோ அல்லது செல்வச் செருக்காலோ நம்மிடம் எவராவது வரம்பு கடந்த செயல்களைச்
செய்தால் நம்முடைய பொறுமையால் அவர்களை வெல்ல வேண்டும். பொறையுடைமையினால் நிறையுடைமையைப்
பாதுகாக்க முடியும்; பிறருடைய மதிப்பைப் பெற முடியும். பொறையுடைமையால் நிலைத்த புகழையும்
அடைய முடியும்.
துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய
திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர்,
ஞா. திருக்குறள்
– தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து
பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால்
– அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502
[1]. Chromosome is a threadlike structure of nucleic acids and protein found in
the nucleus of most living cells, carrying genetic information in the form of
genes.
[2]. A telomere is a region of repetitive nucleotide sequences at each end of
a chromosome, which protects the end of the chromosome from deterioration or
from fusion with neighboring chromosomes.
No comments:
Post a Comment