Statcounter

Sunday, April 19, 2020

அழுக்காறு இலாத இயல்பு


அழுக்காறு இலாத இயல்பு

இன்றைய சமுதாயத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகளை அடைந்திருக்கிறோம். அதே நேரத்தில், சில தீமைகளையும் சந்திக்கிறோம். உதாரணமாக, முகநூல் (Facebook), படவரி (Instagram), கீச்சகம் (Tweeter) போன்ற சமூக வலைத்தளங்களில் (சமூக வலைத்தளம் - Social Media) பலரும் தங்களுடைய புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிடுகிறார்கள். மற்றும், அவர்கள் விடுமுறைக்குச் சென்றபொழுதும் நண்பர்களோடு கூடிக் களித்தபொழுதும் எடுத்த புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவு செய்கிறார்கள். இவற்றைக் காண்பவர்களில் பலர், தாமும் அவர்களைப்போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையே என்று பொறாமை அடைகிறார்கள். தொடர்ந்து சமூக வலைத்தளங்களைப் பார்ப்பவர்களில் சிலர் பொறாமையால் மனவழுத்தம் அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்[1].
பிறருடைய வளர்ச்சி, முன்னேற்றம், செல்வம், செல்வாக்கு, புகழ், நல்வாழ்வு போன்றவற்றைக் கண்டு பொறுக்க முடியாமல், தனக்கு அவை இல்லையே என்று வருந்துவோர் பலர். அவ்வாறு அவர்கள் வருந்துவது பொறாமை என்று அழைக்கப்படுகிறது. பொறாமையால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. பிறருடைய நல்வாழ்வைக் கண்டு, தானும் அது போன்ற வாழ்க்கைக்கு வழி தேடவேண்டும் என்று தீவிரமாக எண்ணி, ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் உழைத்து முன்னேறுவது பொறாமையால் வரக்கூடிய நன்மை. பிறருடைய நல்வாழ்வைக் கண்டு மனம் வருந்தி, மனம் தளர்ந்து, முயற்சிகளைக் கைவிட்டு, வாழ்க்கையில் தோல்வி அடைந்து மனவழுத்தம் போன்ற நோய்களால் துன்பப்படுவது பொறாமை உடையவர்கள் அடையக்கூடிய தீமை. அவர்கள் தீமை அடைவது மட்டுமல்லாமல், பிறரும் நல்வாழ்வை இழந்து துன்பப்பட வேண்டும் என்று எண்ணுவதும், சில சமயங்களில் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதும் ஒருவருடைய பொறாமையால் பிறர்க்கு வரக்கூடிய தீமைகளாகும்.  பொறாமையால் துன்பப்படுபவர்களின் எண்ணிக்கை, பொறாமையால் நன்மை அடைபவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று கருதப்படுகிறது. சிலர் பொறாமையால் நன்மை அடைந்தாலும், பொறாமை ஒரு தீயொழுக்கமாகவே கருதப்படுகிறது. பல மதங்களும் பொறாமையை தியொழுக்கமாகவே கருதுகின்றன.

ஆதாமுக்கும்(Adam) ஏவாளுக்கும்(Eve) பிறந்த மூத்த மகனாகிய கேய்ன்(Cain) என்பவன் தன்னுடைய தம்பியாகிய எபெல் (Abel) என்பவன்மீது பொறாமைகொண்டு அவனைக் கொன்றதற்காகக் கடவுளால் தண்டிக்கப்பட்டான் என்று விவிலியம் கூறுகிறது. கிறித்துவ மதத்தின் பெரும்பிரிவாகிய கத்தோலிக்க மதம் பொறாமையை ஏழு கொடிய பாவங்களில் ஒன்றாகக் கருதுகிறது. இந்து மதத்தின் மிகப்பெரிய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கௌரவர்களுக்குப் பாண்டவர்களின்மீது இருந்த பொறாமையால் எழுந்த போரைப்பற்றி விரிவாகப் பேசுகிறது. புத்த மதம் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்று கூறுகிறது. பொறாமையும் ஆசையின் அடிப்படையில் தோன்றுவதால், புத்த மதமும் பொறாமையை ஒரு தீயொழுக்கமாகவே கருதுவதாகத் தோன்றுகிறது. முகமது நபி அவர்கள், ”பொறாமையை விட்டுவிடுங்கள். அது நெருப்பு விறகைத் தின்பதைப்போல் நன்மைகளை எல்லாம் அழித்துவிடும்.” என்று மக்களை எச்சரிப்பாதாக திருகுர்ரான் கூறுகிறது.

பிறருடைய நல்வாழ்வைக் காணும்பொழுது, “அவை தனக்கு வேண்டும்” என்று ஒருவன் எண்ணுவதால் அவனுக்குத் துன்பம் ஏற்படுகிறது என்றும் அத்தகைய துன்பம் அவனுக்குப் பொறாமை என்னும் மனவலியை உண்டுபண்ணுகிறது என்றும் கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் (Aristotle (384 B.C. – 322 B.C.)) கூறுகிறார். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (Bertrand Russell (1872 A.D – 1970 A.D.)) என்ற இங்கிலாந்தைச் சார்ந்த பேரறிஞர், “ஒருவருடைய மகிழ்ச்சியின்மைக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய பொறாமை என்னும் இயல்புதான்.” என்று கூறுகிறார்.

மதங்களையும், மற்ற அறிஞர்களையும்போல், வள்ளுவரும், பொறாமையை ஒரு தீயொழுக்கமாகவும் அறத்திற்கு முற்றிலும் புறம்பானதாகவும் கருதுகிறார். “மனத்துக்கண் மாசிலானதல் அனைத்து அறன் (குறள் – 34)“ என்று அறத்திற்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், பொறாமை ஒரு மனமாசு என்று கூறுகிறார். மாசுக்கு மற்றொரு பெயர் அழுக்கு. ஆகவே, பொறாமையை ஒரு அழுக்கு என்றும், பொறாமையோடு இருப்பதை அழக்குறுதல் என்றும் கூறலாம். ”’அழுக்குறு’ என்பது மருவி, ’அழுக்கறு’ என்று ஆகியது என்றும், அழுக்கறு என்பது நீண்டு அழுக்காறு ஆயிற்று.”, என்றும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார். தமிழ் இலக்கியத்தில், அழுக்காறு என்ற சொல் பொறாமையையும் அழுக்காறாமை என்ற சொல் பொறாமையில்லாமல் இருப்பதையும் குறிக்கும் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. வள்ளுவரும் பொறாமை என்ற சொல்லுக்குப் பதிலாக, அழுக்காறு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மனத்தில் இருக்கக்கூடிய மாசுகளில் அழுக்காறு, அவா, வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கும் முற்றிலும் விலக்கப்பட வேண்டியவை என்று கூறும்பொழுது, அழுக்காறு (பொறாமை) என்னும் மாசை வள்ளுவர் முதலில் குறிப்பிடுகிறார்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.                      (குறள் – 35)

அழுக்காறு உடையவனின் செயல்கள்
ஆக்கம் என்ற சொல், வளர்ச்சி, முன்னேற்றம், இலாபம், பொன், பொருள், செல்வம், மேம்பாடு, நல்வாழ்வு, வளம், மற்றும் பேறு போன்ற பலவற்றைக் குறிக்கும் ஒருசொல். அறநெறிகளைப் பின்பற்றி வாழ்வதால் வரும் ஆக்கத்தை வேண்டாதவன் என்று சொல்லப்படுபவன் பிறருடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமால் பொறாமை அடைவான் (குறள் -163).

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.                   (குறள் –163)


தனிமனிதர்கள் மட்டுமல்லாமல், ஒரு குழு, கட்சி, இனம் ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் தங்கள் குழு, கட்சி, இனம் ஆகியவற்றிற்குப் போட்டியாக இருப்பவர்கள்மீது பொறாமைகொண்டு அவர்களுக்குத் தீமைகள் வரவேண்டும் என்று விரும்புவதும், அவர்களுக்குத் தீமைகளைச் செய்வதும் உலக இயல்பாக நாம் காண்கிறோம். உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் இருந்த யூதர்களின் வளமான வாழ்க்கையைக் கண்டு, யூதர் அல்லாதவர்கள் பொறாமை அடைந்தனர். அவர்களின் பொறாமையைத் தனக்குச் சாதகமாகக்கொண்டு அடால்ஃப் ஹிட்ளர் (Adolf Hitler) இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தான் என்பது வரலாறு.

பொறாமையால் வரும் தீமைகள்
அறம் அல்லாத தீயநெறிகளைப் பின்பற்றுவதால் துன்பம் தோன்றும் என்பதை அறிந்தவர்கள், அழுக்காறு கொண்டு அறம் அல்லாதவற்றைச் செய்யமாட்டார்கள் (குறள் – 164). பகைவர்கள் கேடு செய்யத் தவறினும், பொறாமை உடையவர்களுக்குப் பொறாமை ஒன்றே போதுமானது; அவர்களுக்கு வேறு பகைவர்கள் வேண்டியதில்லை (குறள் – 165). மற்றவர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவன் தானும் கேடடைவதோடு மட்டுமல்லாமல், அவனுடைய சுற்றத்தாரும் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் கெடுவர் (குறள் – 166). மனக்கோட்டத்தோடு பொறாமை கொள்பவனைத் திருமகள் தன் தமக்கையாகிய மூதேவியிடம் காட்டிவிட்டுத் தான் நீங்கிவிடுவாள் (குறள் – 167). அழுக்காறு என்னும் கொடியவன் (பாவி), தன்னை உடைவனுடைய செல்வத்தை அழித்து அவனைத் தீயவழிகளில் செலுத்திவிடுவான் (குறள் – 168).

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.                        (குறள் – 164)

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.                         (குறள் – 165)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.               (குறள் – 166)

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.                   (குறள் – 167)

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.                              (குறள் – 168)

ஒருவன் பிறர்க்குப் பொருள்களைக் கொடுத்து உதவி செய்வதைக் கண்டு மற்றொருவன் பொறாமை அடைந்தால், பொறாமை அடைபவனும் அவனுடைய சுற்றத்தாரும் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் கெடுவர் என்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. பொறாமையால் விளையும் தீமைகளை மிகைப்படுத்திக் கூறினால், மக்கள் பொறாமை அடையாமல் இருப்பார்கள் என்ற நோக்கத்தோடு வள்ளுவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அடுத்த குறளில், அழுக்காறு உடையவனைத் திருமகள் மூதேவியிடம் செலுத்திவிடுவாள் என்பது அழுக்காறு உடையவன் வறுமை அடைவான் என்பதைக் குறிக்கிறது. இந்தக் குறளிலும், முந்தைய குறளைப்போல், அழுக்காற்றினால் விளையும் தீமைகளை மிகைப்படுத்திக்கூறி, அழக்காறு ஒரு தீயொழுக்கம் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். அடுத்த குறளில், அழுக்காறு என்னும் கொடியவன் (பாவி) தன்னை உடையவனின் செல்வத்தை அழித்து, அவனைத் தீயவழிகளில் செலுத்திவிடும் என்பதும், அழக்காறு ஒரு தீயொழுக்கம் என்பதை வலியுறுத்துவதற்காகவே கூறப்பட்டதாகப் பொருள்கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.

அழுக்காறு உடைவனின் கேடும் அழுக்காறு இல்லாதவனின் ஆக்கமும்
பொறாமையோடு இருப்பவன் வாழ்க்கையில் வளர்ச்சி அடைந்ததில்லை. பொறாமை இல்லாதவன் தன் வள்ரச்சியில் குறைந்ததும் இல்லை (குறள் – 170). இங்கு வளர்ச்சி என்பது செல்வம், செல்வாக்கு, பெருமை, முன்னேற்றம் போன்றவற்றில் எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால், சில சமயங்களில் பொறாமை உடையவர்கள் பல நன்மைகளை அடைவதையும், பொறாமை இல்லாதவர்கள் பல கேடுகளை அடைவதையும் நாம் காண்கிறோம். இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்னவென்று ஆராயவேண்டும் என்கிறார் வள்ளுவர் (குறள் – 169).

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.               (குறள் – 170)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.                       (குறள் – 169)

”அழுக்காறு உடையவன் வறுமை அடைவான்,”  ”அழுக்காறு உடையவன் வாழ்க்கையில் முன்னேறமாட்டான்”, ”அழுக்காறு இல்லாதவன் செல்வந்தனாக இருப்பான்.”, ”அழுக்காறு இல்லாதவன் வாழ்க்கையில் முன்னேறுவான்” போன்ற கருத்துக்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. இவை அறிவியல் கூறும் கருத்துக்களைப் போல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைகளும் அல்ல. இது போன்ற கருத்துக்கள் வெறும் நம்பிக்கைகள்தான். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உள்ளதுபோல், எல்லா நம்பிக்கைகளும் எல்லா சூழ்நிலைகளிலும் சரியானவை என்று கூறமுடியாது. அழுக்காறு உடையவன் தன்னுடைய அயராத உழைப்பு, முயற்சி, அறிவு, ஆற்றல் போன்றவற்றால் வாழ்க்கையில் முன்னேறலாம். அழுக்காறு இல்லாதவன் அயராத உழைப்பு, முயற்சி, அறிவு, ஆற்றல் போன்றவை இல்லாததால் வாழ்க்கையில் முன்னேறாமல் இருக்கலாம். வள்ளுவர் இதை அறியாதவர் இல்லை. அதனால்தான், அழுக்காறு உடையவனின் வளர்ச்சியும் அழுக்காறு இல்லாதவனின் வளர்ச்சியின்மையும் ஆராயத் தக்கவை என்றார்.

அழுக்காறு இலாத இயல்பு
எவரிடத்தும் பொறாமையில்லாமல் ஒருவன் இருப்பானாயின், அவன் பெறும் சிறந்த சிறப்புக்களில் அதைப் போன்றது வேறு எதுவும் இல்லை (குறள் – 162). ஒருவன் அழுக்காறு இல்லாத தன்மையை தன்னுடைய இயல்பாகக் கொள்ள வேண்டும் (குறள் – 161).

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.  (குறள் – 162)

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.           (குறள் – 161)

அழுக்காறு இல்லாமல் இருப்பதால் பல நன்மைகள் இருப்பதால், அதை ஒருவன் தன்னுடைய இயல்பாகக் கொள்ள வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து.

முடிவுரை
அழுக்காறு என்ற சொல் பொறாமையையும், அழுக்காறாமை என்ற சொல் பொறாமையின்மையையும் குறிக்கின்றன. மனத்தின் மாசுக்களில் அழுக்காறும் ஒன்று என்றும், அழுக்காறு அறத்திற்கு முற்றிலும் புறம்பானது என்றும் வள்ளுவர் கூறுகிறார், ”அழுக்காறு உடையவர்கள் பிறருடைய நல்வாழ்க்கையைக் கண்டு மகிழமாட்டார்கள். அழுக்காறு உடையவர்களுக்குப் பகைவர்களே தேவையில்லை. பகைவர்களால் வரும் கேடுகள் அனைத்தையும் பொறாமையாலேயே அவர்கள் அடைவார்கள்.  அழுக்காறு உடைவர்களும் அவர்களுடைய சுற்றத்தாரும் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் துன்பப்படுவார்கள். அழுக்காறு உடையவன் வறுமையில் வாடுவான்; அழுக்காறு அவனைத் தீயவழிகளில் செலுத்திவிடும்.”, என்ற கருத்துக்களை அழுக்காறாமை என்ற அதிகாரத்தில் காண்கிறோம்.  பொதுவாக, அழுக்காறு உடையவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதில்லை என்றும் அழுக்காறு இல்லாதவர்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதில்லை என்றும் கருதப்பட்டாலும், சில சமயங்களில் அழுக்காறு உடையவர்கள் வளமாக வாழ்வதையும் அழுக்காறு இல்லாதவர்கள் அத்தகைய வாழ்க்கை இல்லாதவர்களாக இருப்பதையும் கண்டு வியந்த வள்ளுவர், அவை ஆய்வுக்குரியவை என்கிறார்.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502

4 comments:

  1. நல்லதொரு விளக்கம்..

    அருமை அய்யா. ..



    ReplyDelete
  2. திரு. ஆற்றலரசன் அவர்களுக்கு,

    நன்றி.

    பிரபாகரன்

    ReplyDelete
  3. பொறாமை.. நல்ல கட்டுரை

    அடுத்தவர் நிலை கண்டு மனம் பொறாத தன்மை..
    அடுத்தவர் நிலை கண்டு நான்கு விதமான மாற்றங்கள் ஏற்படலாம்

    1.மனம் பொறுக்காதது பொறாமை
    2.தானும் அவர் போல் உயர வேண்டும் என்ற எண்ணம்
    3.தான் நல்ல நிலையில் உள்ளோம் என மன திருப்தி
    4. தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற வருத்தம்.. மன அழுத்தம்

    Compare and thereafter ...
    (A)Be Happy
    (B)Get Inspired
    (C)Envy
    (D)Grieve ....
    Choice is entirely ours

    சி. இராஜேந்திரன்
    வள்ளுவர் குரல் குடும்பம்
    Voice of Valluvar Family
    VoV Family
    voiceofvalluvar1330@gmail.com


    ReplyDelete