Statcounter

Thursday, October 8, 2020

வள்ளுவர் பார்வையில் நாடு

 

வள்ளுவர் பார்வையில் நாடு

இங்கிலாந்தைச் சார்ந்த சர் தாமஸ் மோர் (Sir Thomas More, 1478 – 1535) என்பவர் குறைகளே இல்லாமால் எல்லா வளமும் நலமும் நிறைந்த உடோபியா என்ற நாட்டைப் பற்றித் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். கோசலை நாட்டில், வறுமை இல்லாததால் ஈகை இல்லை என்றும், பகைகொண்டு போர்புரிபவர் இல்லாததால் வலிமையை எடுத்துக்காட்ட எவருக்கும் வாய்ப்பில்லை என்றும், பொய் பேசுபவர்கள் இல்லாததால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை என்றும் கேள்வி அறிவு மிகுந்திருப்பதால், மக்களிடையே அறியாமை இல்லை என்றும் கம்பர் அந்த நாட்டின் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறார்[1]. ஆனால், உடோபியா நாடு சர் தாமஸ் மோரின் கற்பனை நாடு; கோசலை நாடு கம்பரின் கற்பனை நாடு. இன்று, இவ்வுலகில் ஏறத்தாழ 200 நாடுகள் உள்ளன. இவற்றுள் எந்த நாடும் குறையே இல்லாத உடோபியாவைப் போலவோ கோசலையைப் போலவோ இருப்பதாகத் தெரியவில்லை. இன்றுள்ள நாடுகளுள், சில நாடுகளில் நிலவளமும், நீர்வளமும், மனிதவளமும், செல்வமும், படைவலிமையும் மற்றும் பல சிறப்பான தகுதிகளும் இருந்தாலும், அவற்றில் பல குறைகள் இல்லாமல் இல்லை. ஒரு நாட்டில், எந்தக் குறைகள் இருக்கக்கூடாது என்றும், எந்தச் சிறப்பான தகுதிகள் இருக்கவேண்டும் என்றும் ‘நாடு’ என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். நாட்டைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை இவ்வுலகில் உள்ள சில நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

நாட்டைப் பற்றி வள்ளுவரின் கருத்து

தட்டுப்பாடில்லாத நல்ல விளைச்சலையும், தகுதியுடைய குடிமக்களையும், சோர்வில்லாத செல்வந்தர்களையும் ஒருசேரக் கொண்டிருப்பதுதான் நாடு. (குறள் -731).

 

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.                                        (குறள் – 731)

 

’தள்ளா விளையுள்’ என்பதற்குத் ’தப்பாது விளையும் நிலங்கள்’ அல்லது ’தவறாத விளைச்சல்’ என்று பொருள் கொள்ளலாம். ஆண்டுதோறும் விளைச்சல் தவறாமல் இருக்க வேண்டுமென்றால், நாட்டில் நிலவளமும், நீர்வளமும், அயராது உழைக்கும் உழவர்களும், இருக்க வேண்டும். அத்தோடு, இயற்கைச் சீற்றத்தால் வரும் வெள்ளம், வறட்சி போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும். வள்ளுவர் காலத்தில் ’விளையுள்’ என்ற சொல் வேளாண்பொருள்களை மட்டுமே குறித்தது. இன்றைய சூழ்நிலையில், ’விளையுள்’ என்பதற்கு ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் குறிப்பதாகக் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது. பலவகையான பொருள்களையும் உற்பத்தி செய்தால், பலருக்கும் வேலை வாய்ப்புக்கள் அதிகமாகும். ஒரு நாட்டில் பலரும் பணிபுரிந்தால், அவர்களுடைய வருமானம் அதிகரிக்கும். நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்தால் அரசாங்கத்திற்கு வருவாய் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு வருவாய் அதிகரித்தால், நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் வசதிகளுக்கும் அந்த வருவாயை அரசாங்கம் பயன்படுத்தலாம். பல பொருள்களை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அமெரிக்கா சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (மொத்த உள்நாட்டு உற்பத்தி - Gross Domestic Product) பெருமளவில் பெருக்கிக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

எத்தகைய தகுதியுடையவர்கள் ஒரு நாட்டில் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடவில்லை. ”தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் (குறள் – 114).” என்று நடுவுநிலைமை என்ற அதிகாரத்தில் குறிப்பிடும்பொழுது, தக்கார் என்ற சொல் நடுவுநிலைமை உடையவர்கள் என்பதைக் குறிக்கிறது. ஆனால், பொதுவாக, ’தக்கார்’ என்பது தகுதி உடையவர் என்பதைக் குறிக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒரு நாட்டில், கல்வி, அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம், மேலாண்மை, தலைமைப் பண்பு. கலை போன்ற பல தகுதிகளையுடைய பலரும் இருப்பதுதான் நாட்டிற்குச் சிறப்பு.

தாழ்விலாச் செல்வர் என்பது குறையாது கொடுக்கும் வள்ளல்களைக் குறிப்பிதாகச் சில உரையாசிரியர்கள் கூறுவர். ஒரு நாட்டில் வள்ளல்கள் இருப்பதால் மட்டும், அந்த நாட்டை வளமான நாடாகக் கருத முடியாது. ”ஒரு மனிதனுக்கு ஒரு மீன் கொடுப்பதால் அவனுக்கு ஒரு நாளைக்கு உணவளிக்க முடியும். ஆனால், அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதால், அவனுக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்க முடியும்.”, என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கேற்ப, செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை முதலீடு செய்து, பொருள்களை உற்பத்தி செய்வதாலும், அவற்றை விநியோகம் செய்வதாலும், விற்பனை செய்வதாலும் பலருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, நாட்டின் பொருள்வளத்தைப் பெருக்க முடியும். இந்தக் கருத்தை மனத்தில் கொண்டு, முதறிஞர்கள் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களும், வ. சுப. மாணிக்கம் அவர்களும் ’தாழ்விலாச் செல்வர்’ என்பது வணிகர்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்கின்றனர். ’தாழ்விலாச் செல்வர்’ என்பதற்கு வணிகர் என்று பொருள் கூறுவதைவிடத் தொழில் முனைவோர் என்று பொருள்கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. ஆகவே, தொழில் முனைவோர் தங்கள் செல்வத்தை முதலீடாக வைத்து, தகுதியுடையவர்களைப் பணிகளில் அமர்த்தி, வேளாண்பொருள்கள் மட்டுமல்லாமல், மற்ற பொருள்களையும் உற்பத்தி செய்கின்ற நாடுதான் சிறந்த நாடு என்று இக்குறளுக்கு, இக்காலத்திற்கேற்ப பொருள்கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.

மிகுந்த பொருள்வளம் உடையதாகவும், பிறநாட்டினரால் விரும்பத் தக்கதாகவும், கேடு இல்லாததாகவும், மிகுந்த விளைச்சல் உடையதாகவும் இருப்பதே சிறந்த நாடாகும் (குறள் – 732).

 

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.                                                       (குறள் – 732)

 

’பெரும்பொருள்’ என்பது ஒருநாட்டின் செல்வம், நிலவளம், நீர்வளம், இயற்கைப் பொருள்வளம், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மிகுதி, ஆகிய அனைத்தையும் குறிக்கும்.  ’பெட்டக்கது’ என்பது விரும்பத் தக்கது என்பதைக் குறிக்கிறது. ஒரு நாடு பெரும்பொருள் உடையதாக இருந்தால், அது பிறநாட்டவர்களால் விரும்பப்படுவது இயற்கை. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், பொருள்வளமும் வேலைவாய்ப்புக்களும் மிகுதியாக இருப்பதால் மற்ற நாடுகளில் இருப்பவரகள் அங்கே சென்று வாழ விரும்புகிறார்கள். அமெரிக்கா வளமான நாடாக இருப்பதால், அங்கு வாழ விரும்பி, தென்னமெரிக்காவிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் அமெரிக்காவின் எல்லைக்குள் சட்டத்தை மீறி நுழைகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பெரும்பொருளால் பிறநாட்டு மக்களால் விரும்பப்படுவது மட்டுமல்லாமல், நில நடுக்கம், அதிக மழையினால் வெள்ளப் பெருக்கு, எரிமலை போன்ற இயற்கையால் ஏற்படக்கூடிய பேரிடர்கள் இல்லாமலும், மிகுந்த விளைச்சலும் உள்ளதுவே நாடு என்பது வள்ளுவரின் கருத்தாகத் தோன்றுகிறது.

 

எதிர்பாராத சுமைகள் ஒரே சமயத்தில் வந்தாலும் அவற்றைத் தாங்கிக்கொண்டு, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகள் அனைத்தையும் உடம்பட்டுக் கொடுக்கும் மக்களையுடையதே நாடாகும் (குறள் – 733).

 

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.                                        (குறள் – 733)

 

ஒரு நாட்டில், பொருளாதாரச் சரிவு, பஞ்சம், கொடுங்கோல் ஆட்சி, கலவரங்கள் போன்றவை அதிகமாக இருந்தால், அங்குள்ள மக்கள் செல்வமும் வேலைவாய்ப்புக்களும் உள்ள வளமான நாடுகளுக்குக் குடியேற விரும்புவது இயற்கை. அவ்வாறு குடியேறுபவர்களுக்கு மருத்துவ வசதி, அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி ஆகியவற்றுக்குக்காக, வளமான நாட்டு மக்கள் அதிக வரிச்சுமையை தாங்க நேரிடும். பிறநாட்டு மக்களின் வருகையால் வரிச்சுமை அதிகமானாலும், அதைத் தாங்கிக்கொண்டு தங்கள் வரிகளை முறையாகச் செலுத்தும் மக்கள் உள்ள நாடு சிறந்த நாடு. இவ்வாறு வரிசுமையைத் தாங்கிக்கொண்டு அரசுக்கு தாங்கள் செலுத்த வேண்டிய வரியை அமெரிக்க மக்கள் தவறாது செலுத்துவது குறிப்பிடத் தக்கது.

 

மிகுந்த பசி, தீராத நோய், அழிவை ஏற்படுத்தக்கூடிய பகை ஆகிய மூன்றும் இல்லாமல் இயங்குவதே நல்ல நாடு (குறள் – 734)

 

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.                                                                      (குறள் – 734)

 

இவ்வுலகில் ஒரு சில நாடுகளைத் தவிர, பல நாடுகளில் மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்றும் உலகில் மக்களின் மரணத்திற்கு முதன்மையான காரணம் பசி என்றும் ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. மேலும், உலகில் பசியால் வாடும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள் என்றும், 20 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் இரவில் பசியுடன் உறங்குகிறார்கள் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது[2]. பசியால் வாடும் மக்கள் இந்தியாவில் மட்டும் இல்லை. வளமான நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலும் உள்ளனர். அமெரிக்காவில் ஏறத்தாழ 4 கோடி மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்று மற்றொரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. இவ்வுலகில் வாழும் 700 கோடி மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கேற்ற வளமும் ஆற்றலும் உள்ளன[3], பல நாடுகளின் அரசுகள் தங்கள் மக்களின் பசிப்பிணியைப் போக்குவதில் அக்கறை காட்டாதுதான் இந்த அவலநிலைக்கு முதன்மையான கரணம் என்று கருதப்படுகிறது.

 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், பிணியுள்ள மக்கள் இருக்கிறார்கள். பிணிகள் பலவிதம். சில பிணிகளை எளிதில் குணப்படுத்த முடியும். சில பிணிகள் மக்களின் மரபணுக்களால் வருபவை. இவற்றைக் குணபடுத்துவது கடினம். சில நோய்கள் நுண்கிருமிகளால் தோன்றி ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்றன. உதாரணமாக, கொரொனா (corona/COVID -19) நுண்கிருமியால் ( நுண்கிருமி -Virus) பரவும் நோய் உலகம் முழுதும் பரவி, கடந்த எட்டு மாதங்களில் (மார்ச் 2010 முதல் அக்டோபர் 2020 வரை)  ஏறத்தாழ 3.6 கோடி மக்களைப் பாதித்து 10 இலட்சம் பேர்களைக் கொன்றிருக்கிறது[4]. இந்த நிலை இன்னும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஊட்டச்சத்து குறைபாடு, சுத்தமான தண்ணீர் குறைபாடு, மருத்துவ வசதியின்மை, சுகாதாரமான சுற்றுச் சூழல் இல்லாமை போன்ற காரணங்களால் பல நோய்கள் தோன்றுகின்றன. அரசு செவ்வனே செயல்பட்டால் – மக்களின் உடல் மற்றும் மனநலத்தில் அரசுகள் அக்கறை காட்டினால் - இதுபோன்ற நோய்களைக் குறைக்கவும் தடுக்கவும் முடியும்.

 

மிகுந்த பசி, தீராத பிணிகள் ஆகிய இரண்டும் இல்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், மக்களை அழிக்கின்ற பகையும் ஒரு நாட்டில் இருக்கக்கூடாது என்பது வள்ளுவரின் கருத்து. இந்தியா விடுதலை பெற்றபிறகு, பாகிஸ்தானோடும் சீனாவோடும் சிறுசிறு சண்டைகளில் ஈடுபட்டாலும், பெரிய போர்கள் எதிலும் இந்த்தியா ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், அமெரிக்கா தேவையற்ற பலபோர்களில் தலையிட்டு ஆயிரக்கணக்கான வீரர்களையும் கோடிக்கணக்கான டாலர்களையும் இழந்துள்ளது என்பது வரலாறு. அமெரிக்கா மட்டுமல்லாமல், சிரியா, ஆஃப்கானிஸ்தான், ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீன் மற்றும் பல நாடுகளில் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சுவிட்சர்லாந்து நாடு மட்டுமே நீண்டகாலமாக போர்கள் இல்லாமல் அமைதியாக இருந்துவருவதாகவும், சுவீடன் (Sweden), நியூ சீலாந்து (New Zealand), கோஸ்ட ரிகா (Costa Rica), வனுவடு (Vanuatu) மற்றும் லிக்கின்ஸ்டைன் (Leicheistein) ஆகிய நாடுகள் மிகமிகக் குறைவாகப் போர்களிலோ அல்லது சச்சரவுகளிலோ பங்குகொண்டதாகக் கூறப்படுகிறது[5].

 

தம்முள்ளே கருத்து வேறுபாடுகளைக்கொண்ட பல குழுக்களும், உடனிருந்தே கேடு செய்யும் உட்பகையும், அரசனை அலைத்துத் துன்புறுத்தும் கொலையே தொழிலாகக்கொண்ட வன்முறைக் கூட்டங்களும் இல்லாததே சிறந்த நாடாகும் (குறள் – 735).

 

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.                                                       (குறள் – 735)

 

ஒரு நாட்டில் குடியாட்சி நடைபெற்றால் அங்கு அரசியல் கட்சிகள் இருப்பது இயற்கை. அரசியல் கடசிகள் இருந்தால் கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆளும் கட்சியை வீழ்த்தித் தம் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் விரும்புவார்கள். இதுபோன்ற சூழ்நிலை, நாட்டுக்கு நன்மை பயப்பது அன்று. பல நாடுகளில் அரசியல் கட்சிகளால் நாட்டு நலத்திற்கு கேடு விளைவதை நாம் காண்கிறோம். சில நாடுகளில், சிலர் வன்முறையில் ஈடுபட்டு, மக்களைத் துன்புறுத்துவதும் நடைபெறுகிறது. சிரியா, ஆஃப்கானிஸ்தான், ஈராக், சொமாலியா, லிபியா போன்ற நாடுகளில் வன்முறைக் கூட்டத்தினர் மக்களுக்கும் அரசுக்கும் பெருந்தீங்கு இழைக்கின்றார்கள். அண்மைக்காலமாக, அமெரிக்காவில், இனப்போராட்டம் என்ற பெயரில்,  சிலர் வன்முறைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கொலை, கொளை, திருட்டு போன்ற செயல்களைச் செய்துவருகின்றனர்.  ஆகவே, பல்குழுவும், பாழ்செய்யும் உட்பகையும் ஆட்சி செய்பவர்களை அலைத்துத் துன்புறுத்தும் கூட்டத்தினரும் இல்லாத நாடுதான் சிறந்தது என்பது தெளிவு.

 

 

பகைவரால் கெடுக்கப்படாமல், இயற்கைச் சீற்றத்தால் கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர் (குறள் – 736).

 

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை.                                                 (குறள் – 736)

 

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளால் ஜப்பான் பெருங்கேடடைந்தது. ஆனால், அந்தக் கேடுகளிலிருந்து ஜப்பான் விரைவில் மீண்டது. ஜப்பானில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 1,500 முறை நிலநடுக்கங்கள் எற்படுவதாகவும், நாள்தோறும் சிறுசிறு நில அதிர்வுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 2011 – ஆம் ஆண்டு டொஹோகு (Tohoku) என்ற இடத்தில் தோன்றிய நிலநடுக்கதால் ஏற்பட்ட சுனாமியால்  ஃபுகுஷிமாவில் உள்ள அணு உலையில் (Fukushima Daiichi Nuclear Plant) விபத்து எற்பட்டது. இவ்வாறு நில நடுக்கங்களும் பேரழிவுகளும் ஏற்பட்டாலும் நாட்டின் வளம் குன்றவில்லை; ஏற்றுமதிகள் குறையவில்லை; பொருளாதாரம் சீரழியவில்லை; கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் நடைபெறவில்லை. இந்தக் குறளுக்குச் சிறந்த எடுத்துகாட்டாக ஜப்பான் விளங்குகிறது

 

ஊற்று நீரும் மழை நீரும் செழிப்பு மிகுந்த மலைகளும், அவற்றிலிருந்து வரும் ஆற்று நீரும், வலிய அரணும் ஒரு நாட்டிற்குச் சிறந்த உறுப்புக்களாகும் (குறள் – 737).

 

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.                                            (குறள் – 737)

 

பிரேசில், உருசியா, அமெரிக்கா, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஊற்று நீரும், மழை நீரும் ஆற்று நீரும் மிகுந்து விளங்கும் நாடுகளாகக் கருதப்படுகின்றன. வள்ளுவர் காலத்தில், ஒரு நாட்டிற்கு அரண் என்பது அந்த நாட்டுக்குள் பகைவர் எளிதாக நுழைவதற்குத் தடையாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இக்காலத்தில், ஒரு நாட்டைத் தாக்குவதற்கு, அந்த நாட்டின் பகைவர்கள் விமானங்களைப் பயன்படுத்துவதால், எத்தகைய வலிய அரணும் ஒரு அரிய பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆனால், ஒரு நாட்டுக்குள் வேறு நாடுகளிலிருந்து மக்கள் நுழையாமல் இருப்பதற்கு வலிய அரண்கள் சிறந்த பாதுகாப்பாகும். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் மலை, கடல் போன்ற வலிய அரண்கள் இல்லாததால் மெக்சிகோவிலிருந்தும், தென்னமெரிக்காவிலிருந்தும் வேலைவாய்ப்புக்களைத் தேடி அமெரிக்காவிற்குள் நாள் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக நுழைந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிறநாட்டவர் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக இப்பொழுது தெற்குப் பகுதியில் வலிய, நீண்ட, உயரமான  சுவர்கள் எழுப்பப்படுகின்றன.

 

பிணியின்மை, பொருள்வளம், நல்ல விளைச்சல், இன்பமான வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று சொல்வார்கள் (குறள் – 738).

 

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.                                               (குறள் – 738)

 

ஒரு நாட்டில், மனிதர்கள் அனைவரும் எப்பொழுதும் பிணியில்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், நாட்டில் சுகாதாரமான சுற்றுச் சூழலும், தூய்மையான குடிநீரும், ஊட்டச்சத்துள்ள உணவும், மருத்துவ வசதிகளும் இருந்தால் அந்த நாட்டு மக்கள் பிணியில்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். ஒரு நாட்டினுடைய செல்வம் அரசாங்கத்தில் மட்டுமோ அல்லது ஒரு சிலரிடத்தில் மட்டுமோ இல்லாமல் பொதுவாக மக்கள் அனைவரிடத்திலும் அவரவர்களுக்குத் தேவையான செல்வம் இருந்தால் அந்த நாட்டில் வறுமை இருக்காது. ஒரு நாட்டில் செல்வம் இருந்தால் மட்டும் போதாது; செழிப்பான விளைச்சலும் இருக்க வேண்டும். மக்கள் ஓவ்வொருவரும் தான் எப்படி வாழ வேண்டும் என்ற கனவோடு இருப்பார்கள். அவர்கள் விருப்பத்துக்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு வசதியும், உரிமையும், வாய்ப்புக்களும் இருக்க வேண்டும். மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். குறிப்பாக, கொலை, திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய செயல்களிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். பகைவர்களிடமிருந்தும் மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், பாதுகாப்பு இவை ஐந்தும் ஒரு நாட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறவில்லை. இவை ஐந்தும் இருந்தால் அவை நாட்டிற்கு அழகு என்றுதான் கூறுகிறார்.

ஐக்கிய நாடுகள் அவையில் 193 நாடுகள் உள்ளன. அந்த நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஐ. நா. அவை (United Nations Organization) ஐ. நா அவையின் மனித மேம்பாட்டு அறிக்கையை (United Nation’s Human Development Report) வெளியிடுகிறது[6]. குறிப்பாக, அந்த அறிக்கையில் மக்களின் வாழ்நாட்கள், ஆரோக்கியம், கல்வி, வருமானம் ஆகியவை நுணுக்கமாக ஆராயப்படுகின்றன. இந்த ஆய்வின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மனித மேம்பாட்டுக் குறியீட்டு எண் (Human Development Index) வெளியிடப்படுகிறது. அந்த எண்ணின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த வரிசையில் நார்வே முதலிடத்தில் இருக்கிறது. அதாவது, ஐ. நா. அவையில் உள்ள 193 நாடுகளில் நார்வே நாட்டில் மக்களின் வழ்க்கை மற்ற நாடுகளைவிடச் சிறப்பாக உள்ளது.  இந்த வரிசைப்படி, அமெரிக்கா 15 – ஆம் இடத்திலும், இந்தியா 129- ஆம் இடதிலும் உள்ளன!

பிறநாட்டுப் பொருள்களின் தேவையின்றித் தமக்கு வேண்டிய பொருள்வளமெல்லாம் தம்மிடத்தே கொண்ட நாடுதான் நாடென்று சிறப்பித்துக் கூறப்படும். அவ்வாறன்றி, பிறநாட்டுப் பொருள்களை நாடிப் பெற்று, அதனால் வளம் பெறும் நாடு நாடாகாது (குறள் – 739).  

 

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.                                                             (குறள் – 739)

 

2019 – ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஏற்றுமதி $1.6 டிரில்லியன்; இறக்குமதி $2.5 டிரில்லியன். இறக்குமதி ஏற்றுமதியைவிட பெருமளவில் அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல் மருந்துகள் போன்ற இன்றியமையாத பொருள்களுக்குக்கூட அமெரிக்கா மற்ற நாடுகளை நம்பி இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி $314.31 பில்லியன்; இறக்குமதி $467.19 பில்லியன். இன்றைய சூழ்நிலையில் எந்த நாடும் தனக்கும் தன் மக்களுக்கும் தேவையான பொருள்கள் அனைத்தும் தன்னிடத்தே கொண்டதாக இல்லை.

 

மேற்கூறிய எல்லா நலங்களும் அமைந்திருந்தாலும், நல்லாட்சி இல்லாவிடின் அவை அனைத்தும் இருந்தும் பயனில்லை (குறள் – 740).

 

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு.                                                  (குறள் – 740)

 

இந்தக் குறளுக்கு எடுத்த்துக்காட்டாக இரண்டு நாடுகளைக் குறிப்பிடலாம். ஒன்று வட கொரியா (Democratic People's Republic of Korea). மற்றொரு நாடு வெனிசுவேலா (Venezeula). வட கொரியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பொதுவுடைமைக் கொள்கை பின்பற்றப்படுகிறது. நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதி இராணுவத்திற்காகவும், படைக்கருவிகள் (அணு ஆயுதங்கள்) தயாரிப்பதற்காகவும் செலவழிக்கப்படுகிறது. அங்கு, மக்கள் பசியால் வாடுகிறார்கள்; அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் துன்பப்படுகிறார்கள். கடந்த 72 ஆண்டுகளாக அந்த நாடு கிம் குடும்பத்தாரால் ஆளப்பட்டு வருகிறது (Kim ll – sung 1948 – 1994; Kim Jong – iL, 1994 – 1911; Kim Jong – un, 2011 – present). இவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்து, நாட்டின் செல்வத்தை தங்கள் நலத்திற்காகவும், பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்தவர்களின் நலத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள். அண்டை நாடாகிய தென் கொரியாவில் சீருந்துகள், வீட்டு உபகரணங்கள், மின்னணுக் கருவிகள், கணினிகள் போன்றவற்றை பெருமளவில் உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுமதி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை வட கொரியாவைவிட 54 மடங்கு பெருக்கி உள்ளார்கள்[7]. தென் கொரியாவில் உள்ள மக்கள் வளமாக வாழ்கிறார்கள்.  வட கொரியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கும், மக்களின் வறுமைக்கும் அந்த நாட்டை கொடுங்கோல் ஆட்சிசெய்து மக்களின் வாழ்வைக் கெடுத்த ஆட்சியாளர்கள்தான் காரணம்.

 

ஒருகாலத்தில் லத்தீன்-மெரிக்க நாடுகளிலேயே அதிக எண்ணெய் வளம் மிகுந்து, செல்வம் கொழிக்கும் செழிப்பான நாடாக இருந்த வெனிசுவேலா இன்று சீரழிந்துகொண்டிருக்கிறது. இன்று  அந்த நாட்டில் 90 விழுக்காடு மக்கள் உணவுகூடக் கிடைக்காத நிலையில் வறுமையில் இருக்கிறார்கள். அந்த நாட்டிலிருந்து ஏறத்தாழ 50 இலட்சத்துக்கும் மேலானோர் வெளியேறிவிட்டனர். இந்த அவல நிலைக்குக் காரணம் அந்த நாட்டை ஆண்ட ஹூகோ சாவேஸ் ((Hugo Chavez) என்பவரும், அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த நிகோலஸ் மதுரோ (Nicholas Maduro) ஆகியோரின் கொள்கைகளும் அவர்களின் முறையற்ற, திறமையில்லாத  ஆட்சியும்தான் காரணம்.

 

முடிவுரை

வள்ளுவர் பார்வையில், ஒரு நாடு சிறப்பான நாடாகக் கருத்தப்பட வேண்டுமென்றால், அந்த நாட்டில் இருக்க வேண்டியவை: குறையாத விளையுள், தகுதியுடைய மக்கள், சோர்வில்லாத செல்வந்தர்கள், மிகுந்த பொருள், வரிச்சுமை வந்தாலும் அவற்றைத் தாங்கிகொண்டு வரி செலுத்தும் மக்கள்,  இயற்கைச் சீற்றத்தால் கேடு விளைந்தாலும் வளம் குன்றாமல் இருக்கும் தன்மை, நீர்வளம் (ஊற்றுநீர், மழைநீர், ஆற்றுநீர்) மிகுந்திருப்பது, மக்களுக்குப் பாதுகாப்பு, மக்களின் இன்பமான வாழ்க்கை, எல்லா வளமும் தன்னிடத்தே கொண்டிருப்பது, நல்லாட்சி புரியும் தலைவர்கள்.

 வள்ளுவர் பார்வையில் சிறப்பான நாட்டில் இருக்கக் கூடாதவை: பசி, பிணி பகை, மாறுபட்ட கருத்துடைய பல குழுக்கள், உட்பகை, வன்முறையில் ஈடுபடும் கூட்டங்கள்.

 பல நாடுகளில் இன்றுள்ள அரசியல், பொருளாதார, சமுதாய சூழ்நிலைகளை வள்ளுவரின் கருத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த நாட்டையும் மிகச் சிறந்த நாடாகக் கருத முடியாது. எல்லா நாடுகளிலும் சில சிறப்புக்களும் சில குறைகளும் உள்ளன.

 

துணைநூல்கள்

Prabhakaran, Dr. R. The Ageless Wisdom (As embodied in Thirukkural). Emerald Publishing, Chennai

தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், மதுரை: 1999

தேவநேயப் பாவாணர், ஞா..  திருக்குறள்தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை,



[1] . வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால். (கம்ப இராமயாணம், நாட்டுப் படலம்)

[2] . http://www.bhookh.com/hunger_facts.php

[3] . https://www.actionagainsthunger.org/world-hunger-facts-statistics?gclid=Cj0KCQjw8fr7BRDSARIsAK0Qqr6ZFYXlKdxUCv9m6ElKWKf8zZwoUBASp2iD_Zzr_l3ce854sCWH678aAjfYEALw_wcB

[4]. https://www.google.com/search?q=coronavirus+in+the+world&oq=Coronavirus+in+the+world&aqs=chrome.0.0l8.15263j0j1&sourceid=chrome&ie=UTF-8

[5] . https://borderlessnewsandviews.com/2017/11/22/6-countries-with-the-fewest-wars/

[6]. http://www.hdr.undp.org/

[7]. https://www.statista.com/statistics/1035390/south-korea-gdp-comparison-with-north-korea/#:~:text=In%202019%2C%20South%20Korea's%20nominal,than%20that%20of%20North%20Korea.

No comments:

Post a Comment