Statcounter

Saturday, April 11, 2020

அடக்கம் அமரருள் உய்க்கும்


அடக்கம் அமரருள் உய்க்கும்

இவ்வுலகில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளார்கள். இருபத்தி நான்கு கோடி மக்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமைகளாக (குடிகாரர்களாக) உள்ளார்கள்[1]. ஏறத்தாழ மூன்றரை கோடி மக்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தித் தங்கள் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் கேடு விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்[2]. பலரும் கைப்பேசி இல்லாமல் ஒரு சில மணித்துளிகள்கூட இருப்பதில்லை. இளைஞர்கள் கைப்பேசியில் அல்லது கணினியில் வன்முறைகள் நிறைந்த விளையாட்டுக்களில் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். ஏறத்தாழ 200 கோடி மக்கள் அதிக எடை(overweight) உள்ளவர்களாகவும், அதில் 70 கோடி மக்கள் மிக அதிகமான எடை (obese) உள்ளவர்களாகவும் காணப்படுகிறார்கள்[3]. எடை அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அளவுக்குமீறி உண்பதும் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை மட்டுமல்லாமல், பல்வேறு தீயொழுக்கங்களை விட்டு விலக முடியாமல், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நேரத்தையும், செல்வத்தையும் செலவுசெய்து தமக்குத் தாமே கேடு விளைவித்துக்கொள்கிறார்கள். இது போன்ற செயல்களுக்குக் காரணம் அவர்களால் தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதுதான். நமது மனத்தில் உள்ள எண்ணங்கள்தான் நமது சொற்களாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன. கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐம்பொறிகளின் வழியாக இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தோன்றுவதால்தான் புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருட்களை உட்கொள்ளுதல், தேவைக்கும் அதிகமாக உண்ணுதல், காமவின்பத்தை அதிகமாக நுகர்தல்  போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுகிறார்கள்; மனத்தில் கோபம் தோன்றுவதால்தான் கடுங்சொற்களைக் கூறுகிறார்கள். மற்றும், மனத்தின் தூண்டுதலால்தான் மக்கள் பயனற்ற சொற்களைக் கூறுகிறார்கள்; புறங்கூறுகிறாரகள்; பொய் பேசுகிறார்கள். தீய செயல்களைச் செய்வதற்கும் மனம்தான் காரணம். இது போன்ற புலனடக்கமின்மை, தீய சொற்கள் பேசுதல், தீய செயல்களைச் செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டுமென்றால் மனத்தை அடக்க வேண்டும். மனத்தை மனத்தால் மட்டுமே அடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 அடக்கமுடைமை என்ற அதிகாரத்தில், புலனடக்கம், நாவடக்கம், மெய்யடக்கம், மனவடக்கம் ஆகியவற்றைப் பற்றியும், அத்தகைய அடக்கத்தினால் வரும் நன்மைகளைப் பற்றியும் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார்.

புலனடக்கம்
ஒரு இடரை எதிர்கொள்ள நேர்ந்தால், ஆமை தன்னுடைய நான்கு கால்களையும் தலையையும் உள்ளே இழுத்துக்கொள்வதைப் போல், ஒருவன்  ஒருபிறவியில் தன்னுடைய ஐம்பொறிகளையும் அடக்கிக்கொள்வானாயின், அது அவனுக்கு பின்வரும் ஏழுபிறவிகளிலும் பாதுகாவலாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார் (குறள் – 126).

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு டைத்து.                       (குறள் – 126)

வள்ளுவர் பல குறட்பாக்களில் ”மறுமை”, ”எழுமை” போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருப்பதால், உயிர் மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது. சிலருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்கள், “எழுமை” என்பதற்கு நீண்டகாலம் அல்லது ஏழு தலைமுறைகள் என்று பொருள்கொள்கிறார்கள். மறுமை, எழுமை போன்றவற்றில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஐம்பொறிகளை அடக்கிக்கொள்வதால் அவற்றால் வரும் தீமைகளைத் தவிர்க்கலாம் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஒருவன் தன்னுடைய கண், காது, மூக்கு ஆகியவற்றைத் தவறான முறையில் பயன்படுத்துவதால் தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொள்ள முடியும். ஆனால், அவற்றால் பிறர்க்குத் தீமைகளைச் செய்ய முடியாது. நாவாலும் உடலாலும் மட்டுமே பிறர்க்குத் தீமைகளைச் செய்ய முடியும். கடுஞ்சொற்களைக் கூறுதல், புறங்கூறுதல், பயனில சொல்லுதல், பொய் பேசுதல் ஆகிய செயல்களால் ஒருவன் பிறர் மனத்தைப் புண்படுத்த முடியும்; துன்புறுத்த முடியும். அதனால், ஒருவன் தான் பேசும் சொற்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொற்கள் நாவின் அசைவினால் வருவதால், சொற்களால் வரும் தீமைகளை நாவால் வரும் தீமைகள் என்று கருதுவது மரபு. சொற்களால் வரும் குற்றங்களை இனியவை கூறல், பயனில கூறாமை, புறங்கூறாமை, வாய்மை ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நாவடக்கம்
”பிறர் கூறும் இன்சொற்களால் தனக்கு இன்பம் பிறத்தலை அறிந்தவன் ஏன் பிறரிடத்து கடுஞ்சொற்களைப் பேசுகிறான்? (குறள் – 99[4])” என்று கேட்கிறார் வள்ளுவர். அனைவரும் இன்சொற்களையே பேச வேண்டும் என்பதும், மன்னனாக இருந்தால்கூட கடுஞ்சொல்லனாக இல்லாமல் இருப்பதுவே சிறந்தது என்பதும் வள்ளுவரின் கருத்து (குறள் – 386[5]). ஒருவனது உடலில் தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். ஆனால், பிறர் அவனை நோக்கிக் கூறும் கடுஞ்சொற்கள் அவனுடைய மனத்தில் ஒரு வடுபோல், ஆறாமல், எப்பொழுதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும் (குறள் – 129). ஒருவனுடைய பேச்சில் ஒரு சொல் தீயசொல்லாக இருந்தாலுங்கூட, அது அவனுடைய பேச்சு முழுவதையும்  நன்மை இல்லாததாக்கிவிடும் (குறள் – 128). தீயசொற்கள் பெரும் தீமைகளை உண்டாக்குவதால், ஐம்பொறிகளில் மற்றவற்றை, காக்காவிட்டாலும், நாவையாவது காக்கவேண்டும். நாவைக் காக்க விட்டால் சொற்குற்றத்தால் துன்புறுவர் (குறள் - 127) என்கிறார் வள்ளுவர்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.                                  (குறள் – 129)

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.                                 (குறள் – 128)

யாகாவார் யினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.                (குறள் – 127)

நாவுக்கு எதையும் தானாகப் பேசும் ஆற்றல் இல்லை. மனத்தின் தூண்டுதலால்தான் நாவும் மற்ற பொறிகளும் இயங்குகின்றன. ஆகவே, மனவடக்கம் இருந்தால்தான்  நாவடக்கம் இருக்க முடியும்.

மெய்யடக்கம்
நாவடக்கத்தைப் போல் மெய்யடக்கமும் தேவை. ஒருவருக்கு மெய்யடக்கம் இல்லாவிட்டால் அவர் தன்னுடைய  உடலால் பிறர்க்கு தீமைகளைச் செய்யமுடியும். தீவினைகளைச் செய்வதால் தீமையே விளையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர் வள்ளுவர். தீவினைகளால் வரும் துன்பங்களைத் தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். மனவடக்கம் இருந்தால்தான் மெய்யடக்கமும் இருக்கும். ஆகவே, நாவடக்கத்திற்கும் மெய்யடக்கத்திற்கும் மனவடக்கம் இன்றியமையாது என்பது தெளிவு.

மனவடக்கம்
மனவடக்கத்தைக் கடைப்பிடித்து, மனத்தில் சினம் தோன்றாமல் ஒழுகுபவனைக் காண்பதற்கேற்ற சமயத்தை எதிர்பார்த்து, அவன் வழியில் அறம் நிற்கும் என்கிறார் வள்ளுவர்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.                (குறள் – 130)

அறம் என்பது மனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களின் தொகுதி. அறத்திற்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், “மனத்தில் மாசில்லாமல் இருப்பதே அறம்.” என்கிறார். அவ்வாறாயின், சினத்தை அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணத் தக்க சமயம் பார்த்து அவன் வழியில் அறம் நுழைந்து எதிர் நோக்கும் என்பது எங்ஙனம் பொருந்தும் என்ற கேள்வி எழுகிறது. இந்தக் குறளில் வள்ளுவர் அறத்தை ஒரு தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகப்படுத்துகிறார். இந்தக் குறளில் மட்டுமல்லாமல் வேறு பல குறட்பாக்களிலும், வள்ளுவர் அறத்தைத் தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகப்படுத்துகிறார். எலும்பு இல்லாத உடலோடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப் போல, அன்பு இல்லாத உயிரை அறம் என்னும் ஆற்றல் (அறக்கடவுள்) வருத்தும் (குறள் – 77[6]) என்று அன்புடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார். மற்றும், பிறர்க்குக் கேடு விளைவிக்கும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது என்றும் அவ்வாறு எண்ணினால், தீமை செய்ய நினைத்தவனுக்கு அறமென்னும் ஆற்றல் (அறக்கடவுள்) தீமைசெய்ய நினைக்கும் (குறள் – 204[7]) என்றும் தீவினையச்சம் என்ற அதிகாரத்தில் கூறுகிறார். உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களும் தீமை செய்பவர்களும் தீமைகளைச் சந்திப்பது உறுதி என்பதை வலியுறுத்துவதற்காக வள்ளுவர் அறத்தைத் தனித்து இயங்கும் ஆற்றலாக (அறக்கடவுளாக) உருவகிக்கிறார் என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. 

அடக்கமுடைமையால் வரும் நன்மைகள்
அடக்கமுடைமை ஒருவனை தேவருலகிற்குக் கொண்டு செலுத்தும். அடக்கமின்மை வெளிவருதற்கரிய இருள் சூழ்ந்த உலகத்திற்குச் செலுத்திவிடும் (குறள் – 121). ”அடக்கமுடைமையை ஒரு செல்வமாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு அதைவிடச் சிறந்த செல்வம் வேறெதுவும் இல்லை (குறள் – 122).”, என்கிறார் வள்ளுவர். ஒருவன் அறியவேண்டியதை அறிந்து, முறையோடு அடக்கத்தோடு நடப்பானாயின் அவனுடைய அடக்கம் பிறரால் உணரப்பட்டு மேன்மை உண்டாகும் (குறள் – 123). தனது நிலையிலிருந்து மாறாமல், அடக்கத்தோடு இருப்பவனின் உயர்வு மலையைவிடப் பெரிது (குறள் - 124).

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.                           (குறள் – 121)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு ல்லை உயிர்க்கு.                (குறள் – 122)

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.                           (குறள் – 123)

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.                         (குறள் – 124)

”அடக்கம் தேவருலகிற்குக் கொண்டு செலுத்தும்”, “அடக்கம் ஒரு சிறந்த செல்வம்”, ”அடக்கம்  பிறரால் உணரப்பட்டு மேன்மை உண்டாகும்”, “அடக்கமுடையவனின் உயர்வு மலையைவிடப் பெரிது” என்று அடக்கத்தின் பெருமையை மிகைப்படுத்திக் கூறி, அதன் இன்றியமையாமையையும், அதனால் வரும் நன்மைகளையும் எடுத்துரைத்து அடக்கத்தோடு இருப்பதற்கு வள்ளுவர் மக்களை ஊக்குவிக்கிறார்.

அடக்கம் செல்வர்க்குச் செல்வம்
அடக்கத்தினால் வரும் பணிவு என்னும் பண்பால் அனைவருக்கும் பல நன்மைகள் உண்டு என்று வள்ளுவர் கூறுகிறார். குறிப்பாக, செல்வம் உடையவர்களுக்கு மனவடக்கத்தோடு, பணிவும் இருக்குமானால், அதுவே ஒரு செல்வத்தைப் போன்றது என்கிறார் வள்ளுவர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.                (குறள் – 125)

எல்லோராலும் மதிக்கப்படும் இயல்பும், நினைத்ததைச் செய்து முடிக்கும் திறமையும், ஆடம்பரமான வாழ்க்கையும் உடைய செல்வந்தர்களுக்கு பணிவு என்பது இயற்கையாக அமைவதில்லை. அவர்களுக்கு பணிவு என்னும் பண்பு இருந்தால் அது அவர்களுக்கு மற்றும் ஒரு செல்வத்தைப் போன்றது என்பது வள்ளுவரின் கருத்து.

வள்ளுவர் கூறுவதைப் போல், பணிவு என்பது, செல்வந்தர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஏற்ற உயர்ந்த பண்பு. குறிப்பாக, ஆட்சியில் இருப்பவர்களுக்கும் பணிவு என்னும் பண்பு மிகவும் இன்றியமையாத ஒன்று. அமெரிக்காவில், பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு நடத்தும் பணியில் நான் ஈடுபட்டிருந்தபொழுது, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டிற்கு வருமாறு அவரை அழைப்பதற்காக நான் டில்லிக்குச் சென்று, அவரைச் சந்தித்தேன்.  அவர் வீற்றிருந்த அறைக்குள் நான் சென்றபொழுது, அவர் எழுந்து நின்று எனக்கு வணக்கம் தெரிவித்தார். மாநாட்டைப் பற்றிய விவரங்களைப் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். மாநாட்டிற்கு அவர் வருவதைப் பற்றி இரண்டு வாரங்களில் எனக்குத் தெரிவிப்பதாகக் கூறினார். நான் அவரிடமிருந்து விடைபெற்றபொழுது, அவர் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். மாநாட்டிற்கு அவரால் வர இயலவில்லை. ஆனால், மாநாட்டிற்காகக் காணொளியில் வாழ்த்துரையைப் பதிவு செய்து இணையத்தின் வழியாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார். அவருடைய  பணிவான பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பணிவுக்கும் பண்புக்கும் இலக்கணமாக வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

முடிவுரை
புலனடக்கமும், நாவடக்கமும், மெய்யடக்கமும், மனவடக்கமும் இல்லாதால் விளையும் தீமைகளையும், அவை இருப்பதால் வரும் நன்மைகளையும் கூறுவதோடு மட்டுமல்லாமல் மனவடக்கத்தின் இன்றியமையாமையையும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவரைப் போல் சில மேலைநாட்டு அறிஞர்களும் மனவடக்கத்தைப் போற்றுகிறார்கள். உதாரணமாக, அரிஸ்டாட்டில் (385 கி.மு. – 323 கி.மு.) என்ற கிரேக்கத் தத்துவஞானி, “என்னுடைய கருத்தில், எவனொருவன் தன்னுடைய விருப்பங்களின்மீது வெற்றி காண்கிறானோ அவன் தன்னுடைய பகைவர்களை வெல்பவனைவிடத் துணிச்சலானவன்.” என்று கூறி, மனவடக்கத்தின் சிறப்பைப் புகழ்கிறார். ரோமாபுரியின்  மன்னனாக விளங்கிய தத்துதுவஞானி, மார்க்கஸ் அரேலியஸ் (121 கி.பி. – 180 கி.பி) என்பவன், ”உன்னுடைய மனத்தை அடக்கி ஆளும் ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பதை நீ அறிந்தால், நீ உன்னுடைய வலிமையை உணர்வாய்” என்று கூறியதும் குறிப்பிடத் தக்கது.

துணை நூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மயூரா
வளாகம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்,
சென்னை, 600 017
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால் (உரையும் உரைவும்), தமிழ்ச்சோலை, 5 மூன்றாம்
தெற்குத் தெரு, மதுரை 625021


[4] . இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?            (குறள் – 99)
[5]. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.           (குறள் – 386)

[6]. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.                (குறள் – 77)
[7]. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.     (குறள் – 204)


Thursday, March 12, 2020

பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்


பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்

வேளாண்மை செய்பவன் ஆடிமாதத்தில் நெல்லை விதைத்தால் மார்கழி மாதத்தில்தான் அறுவடை செய்ய முடியும். அவசரப்படுவதால் பயனில்லை. அதுபோல், ஒரு பெண் கருவுற்றால், சுமார் 280 நாட்களுக்குப் பிறகுதான் குழந்தை பிறக்கும். அவசரப்படுவதால் பயனில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் பலரும் அவசரப்படுவதில்லை. ஆனால், அன்றாட வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் மனிதர்கள் அவசரப்படுகிறார்கள்; பொறுமை இழக்கிறார்கள். உதாரணமாக, ஒரு கடையில் பொருளை வாங்குவதற்கு வரிசையில் நிற்கும்பொழுது, அதிக நேரமானால் நம்மில் பலரும் பொறுமையை இழக்கிறோம். பொதுவாக, நாம் எதிர்பார்த்தது எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்த வகையில் நடைபெறாவிட்டால் ஆத்திரப்படுகிறோம்; பொறுமை இழக்கிறோம். நம்மை ஒருவர் அவமதித்தாலோ அல்லது நமக்கு ஒரு தீமை செய்தாலோ நாம் பொறுமை இழக்கிறோம். நமக்குத் தீமை செய்பவர்களுக்குத் திருப்பித் தீமை செய்யத் துடிக்கிறோம்; சில சமயங்களில் நாமும் தீமை செய்கிறோம்.

             மக்களின் பொறுமையின்மையைப் பற்றியும் அதனால் வரும் தீமைகளைப் பற்றியும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள்.  அந்த ஆய்வில் 1158 மாணவர்கள் கலந்துகொண்டார்கள். அந்த ஆய்வில் ஒவ்வொரு மாணவனிடமும், “உனக்கு 100 வெள்ளியைப் (வெள்ளி – Singapore dollar)பரிசாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை இப்பொழுதே பெற்றுக்கொள்ள விரும்பினால் உடனே 100 வெள்ளி கொடுக்கப்படும். ஆனால், ஒரு மாதம் காத்திருந்தால் 101 வெள்ளி கிடைக்கும். பல மாதங்கள் பொறுத்திருந்தால் 128 வெள்ளி கிடைக்கும். இப்பொழுதே 100 வெள்ளி வேண்டுமா? அல்லது பொறுத்திருந்து அதிகமான தொகையை பெற்றுக்கொள்ள விருப்பமா?”, என்று கேட்கப்பட்டது. தங்கள் பரிசுத்தொகையை உடனே பெற்றுக்கொள்ள சிலர் விரும்பினார்கள். சிலர் பொறுத்திருந்து அதிகத் தொகையைப் பெற்றுக்கொண்டார்கள். பின்னர் அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில், பொறுமை இல்லாதவர்களின் கொரொமொசோமில் (Chromosome[1]) உள்ள டெலொமியர்[2] (Telomere) என்பதின் நீளம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. கொரொமொசோமில் உள்ள டெலொமியர் நீளம் குறைவாக இருப்பவர்களுக்கு அறிவாற்றல், சமூகத்தில் பலரோடும் ஒத்து வாழும் இயல்பு, விரக்திகளைச் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் மனநலம் ஆகியவை பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.  இரத்த அழுத்தத்தின் உயர்வு, இதய நோய்கள், புற்று நோய்கள் போன்றவையும் தோன்றுவதற்குப் பொறுமையின்மை வழிவகுக்கும் என்று வேறு சில ஆய்வாளர்களும் கண்டுபிடித்துள்ளனர். மேலும், கடன் மதிப்பெண்ணைக் (கடன் மதிப்பெண் - Credit Score) குறைத்து, நிதிநிலைமையையும் பொறுமையின்மை பாதிக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

             பொறையுடைமை (பொறை - பொறுமை) என்ற அதிகாரத்தில், பொறுமையின்மையினால் வரும் தீமைகளைக் குறிப்பிடாமல், பொறுமையின் சிறப்பையும், பொறுமையோடு இருப்பதினல் வரும் நன்மைகளையும் மட்டுமே வள்ளுவர் குறிப்பிடுகிறார். பொறுமையின்மையினால் வருவது சினம். சினத்தால் வரும் கேடுகளைப் பற்றி வெகுளாமை என்ற அதிகாரத்தில் விளக்கமாகக் கூறுவதால், பொறையுடைமை என்ற அதிகாரத்தில் பொறுமையின்மையினால் விளையும் தீமைகளைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடவில்லை போலும்.

பொறையுடைமையின் சிறப்பு
தன்னை அகழ்வாரையும் வீழ்ந்துவிடாமல் நிலம் காப்பாற்றுகிறது. அதுபோல் தம்மை அவமதித்து இகழ்வாரையும் பொறுத்துக்கொள்ளுதல் மிகச் சிறந்த பண்பு (குறள் – 151). வறுமையில் எல்லாம் கொடிய வறுமை விருந்தினர்களைப் பேணாது புறக்கணித்தல். அதுபோல், அறிவிலாதார் செய்யும் சிறுமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல் வலிமையுள் எல்லாம் மிகுந்த வலிமையாகும் (குறள் – 153).


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.                               (குறள் – 151)

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.                                   (குறள் – 153)

பற்றுக்களை எல்லாம் நீக்கித் துறவறத்தை மேற்கொள்பவர்கள் எல்லா உயிர்களிடத்திலும் கருணை கொண்டவர்களாகவும் எல்லா நற்குணங்களும் உடையவர்களாகவும் கருதப்படுவது வழக்கம். ஆனால், இந்து மதத்தைச் சார்ந்த புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம் காணும் முனிவர்கள் மிகுந்த கோபம் உடையவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். அந்த முனிவர்களின் தவத்தை எவராவது கலைத்தாலோ அல்லது அவர்களுக்கு எவராவது தீங்கிழைத்தாலோ முனிவர்கள் மிகுந்த கோபத்தோடு அவர்களை சபிப்பதாகப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாம் காண்கிறோம். நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில் “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள் – 38)” என்ற குறளில், பற்றுக்களை எல்லாம் நீத்தவர்களின் கோபம் மிகவும் கொடியது என்று வள்ளுவரும் கூறுகிறார். அத்தகைய துறவிகளையும் முனிவர்களையும்விட, பொறுமையை இழக்காதவர்கள் சிறந்தவர்கள் என்ற கருத்து குறளில் காணப்படுகிறது. நெறிதவறி வாழ்பவர்களின் வாயிலிருந்து வரும் தீய சொற்களைப் பொறுத்துக்கொள்பவர்கள் பற்றுக்களைத் துறந்து வாழும் துறவிகளைவிட மிகுதியான மனத்தூய்மை உடையவர்கள் (குறள் – 159). உண்ணாமல் இருந்து, பற்றுக்களை எல்லாம் துறந்து தவம் செய்பவர்கள் பெரியவர்கள். இருப்பினும், அவர்கள் பெரியவராவது பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துகொள்பவர்களுக்குப் பின்பேயாகும் (குறள் – 160). பொறையுடைமையின் சிறப்பைக் கூறும் இந்தக் கருத்துக்களை கீழ்வரும் குறட்பாக்களில் காணலாம்.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.                              (குறள் – 159)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.                          (குறள் – 160)


மற்றவர்கள் செய்யும் தீமைகளைப் பொறுத்துக்கொள்வது எப்படி?
முறையல்லாதவற்றைத் நமக்குப் பிறர் செய்தாலும் அதை நினைத்து நினைத்து வருந்தி அறத்திற்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருப்பது நல்லது (குறள் – 157). சொல்லத்தகாதவற்றைப் பிறர் நம்மிடம் சொன்னாலும், செய்யத்தகாதவற்றைப் பிறர் நமக்குச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொள்வது நல்லது. அவற்றை மறந்துவிடுவது பொறுத்தலைவிட நல்லது (குறள் – 152). செருக்கால் நம்மிடம் வரம்பு கடந்த செயல்களைச் செய்பவர்களை நம்முடைய பொறுமையால் (பொறுமை என்னும் மேன்மையான தகுதியால்) வென்றுவிட வேண்டும் (குறள் – 158).

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.                           (குறள் – 157)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.                                (குறள்- 152)

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.                                (குறள் – 158)


கிறித்துவமதம் இயேசு கிறிஸ்த்துவைப் பொறுமையின் சின்னமாகச் சித்திரிக்கிறது. அவரைச் சிலுவையில் அறைந்தபொழுது, ”தந்தையே! என்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்துவிடுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியாதவர்கள்.”, என்று அவர் கடவுளை வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது (லுயூக் 23:34). “ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனிடம் அடுத்த கன்னத்தையும் காட்டு.” என்று இயேசு கிறிஸ்து கூறியதாகவும் கூறப்படுகிறது (மேத்தேயு 5:39). நமக்குப் பிறர் செய்யும் தீமைகளை நம்முடைய பொறுமையால் எதிர்கொள்ளவேண்டும் என்று வேறு சிலரும் கூறியுள்ளனர். உதாரணமாக, ரோமாபுரியை சார்ந்த செனகா (4. கி.மு – 65 கி.மு) என்ற தத்துவஞானி ”பிறருடைய கருணையற்ற செயல்களை நம்முடைய கருணையால் நாம் எதிர்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார். மார்க்கஸ் அரேலியஸ் (121 கி. பி. – 180 கி. பி.)  என்ற ரோமாபுரியின் மன்னன் “ஒருவன் உனக்குத் தீங்கு செய்தால், அவனைப்போல் நீயும் அவனுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பது நல்லது (மார்க்கஸ் அரேலியஸ் புத்தகம் VI – 6)”  என்று அறிவுரை கூறுகிறான். இவர்களைப்போல், வள்ளுவரும், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் (குறள் – 314)” என்று கூறுவது நினைவுகூரத் தக்கது.  மற்றும், “இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (குறள் – 987)” என்றும் வள்ளுவர் கூறியிருப்பதும் நினைவுகூரத் தக்கதாகும். நமக்கு ஒருவர் தீமை செய்தால், அதைப் பொறுத்துக்கொண்டு, அவர் வெட்கபடுமாறு அவருக்கு நன்மை செய்து, அவர் செய்த தீமையை மறந்துவிட வேண்டும் என்பது வள்ளுவர் கூறும் மிக உயர்ந்த கருத்து. மற்ற அறிஞர்களைவிட வள்ளுவரின் கருத்து மிகச் சிறந்ததாகத் தோன்றுகிறது.


பொறுமையினால் வரும் நன்மை
எல்லா நற்குணங்களும் நிறைந்திருப்பது நிறையுடைமை எனப்படும். அந்த நிறையுடைமை ஒருவரிடம் இருக்குமானால் அவர் தன்னுடைய பொறுமையையும் காத்துக்கொள்ள வேண்டும். பொறுமையின்மையால் ஏற்படும் சினத்தால் தீய செயல்கள் செய்வதற்கும் கடுஞ்சொற்கள் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொறுமையின்மையால் நிறையுடைமையில் குறை ஏற்படுகிறது. ஆனால், பொறுமையிருந்தால் நிறையுடைமையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் (குறள் – 154). தனக்குத் துன்பம் தந்தவர்கள்மீது கோபப்பட்டு, அவர்களைத் தண்டிப்பவர்களை எவரும் ஒருபொருட்டாக மதிக்க மாட்டர்கள். ஆனால், தனக்குத் துன்பம் தந்தவர்களைப் பொறுத்துக்கொள்பவர்களை அனைவரும் பொன்னைப்போல் போற்றுவர். உலோகங்களில் எப்படிப் பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறதோ அதுபோல் பொறுமையுடையவர்கள் மக்களில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் (குறள் – 155). தனக்குத் தீங்கு செய்தவர்களைத் தண்டிப்பவர்களுக்கு அந்த ஒருநாள் மட்டுமே இன்பம் கிடைக்கிறது. அதாவது, தண்டித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி அப்பொழுது மட்டுமே இருக்கும். ஆனால், தனக்குத் தீங்கிழைத்தவர்களிடம் பொறுமையோடு இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்நாள் முடியும் காலம் வரைக்கும் புகழுண்டாகும் (குறள் – 156).

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ழுகப் படும்.                                          (குறள் – 154)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.                    (குறள் -155)

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.                                        (குறள் – 156)

             நிறையுடைமை நீங்காமல் இருப்பதற்கும், பிறரால் மதிக்கப்படுவதற்கும், நிலைத்த புகழுக்கும் காரணமாக அமைவது பொறையுடைமை என்று வள்ளுவர் கூறுவதுபோல், நம்முடைய பொறுமையால் நமக்குப் பல நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர். பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் (University of California, Berkeley) சார்ந்த ”Greater Good Science” என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ”Greater Good Magazine[3]” என்ற  மின்னிதழில், ” பொறுமைக்கும் மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும்  நெருங்கிய தொடர்பு உள்ளது. பொறுமையோடு இருப்பவர்களுக்கு சிறந்த நண்பர்களும் சுற்றத்தார்களும் இருப்பார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் அவருடைய  குறிக்கோளை அடைவதற்குப் பொறுமை உதவி செய்கிறது.” என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுரை
             பல சமயங்களில் பல காரணங்களுக்காக மக்கள் தங்கள் பொறுமையை இழக்கிறார்கள். பொறுமை இழப்பவர்கள் கோபம் அடைகிறார்கள். கோபத்தால் அவர்களுடைய உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படுகின்றன. பொறையுடைமை ஒரு சிறந்த பண்பு. அறிவில்லாதார்கள் செய்யும் சிறுமைகளை பொறுத்துக்கொள்ளுதல் வலிமையில் எல்லாம் வலிமை. அதாவது, ஒருவனுடைய பொறையுடைமை என்னும் பண்பு அவனுடைய மனவலிமையைக் குறிக்கிறது. பொறுமையுடையவர்கள் பற்றுக்களைத் துறந்த துறவிகளைவிட மனத்தூய்மையும் பெருமையும் உடையவர்கள். மனச்செருக்காலோ அல்லது செல்வச் செருக்காலோ நம்மிடம் எவராவது வரம்பு கடந்த செயல்களைச் செய்தால் நம்முடைய பொறுமையால் அவர்களை வெல்ல வேண்டும். பொறையுடைமையினால் நிறையுடைமையைப் பாதுகாக்க முடியும்; பிறருடைய மதிப்பைப் பெற முடியும். பொறையுடைமையால் நிலைத்த புகழையும் அடைய முடியும்.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.
முருகரத்தனம், தி. வள்ளுவர் முப்பால் – அறத்துப் பால்(உரையும் உரைவும்). தமிழ்ச்சோலை, மதுரை 62502




[1]. Chromosome is a threadlike structure of nucleic acids and protein found in the nucleus of most living cells, carrying genetic information in the form of genes.
[2]. A telomere is a region of repetitive nucleotide sequences at each end of a chromosome, which protects the end of the chromosome from deterioration or from fusion with neighboring chromosomes. 

Monday, March 2, 2020

ஊழிற் பெருவலி யாவுள?


ஊழிற் பெருவலி யாவுள?

நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் சில நிகழ்வுகள் நாம் எதிர்பார்க்காமல் ஏதேச்சையாக நடைபெறுபவை. சில நிகழ்வுகள் நாம் திட்டமிட்டபடியே நடைபெறுபவை. சில நிகழ்வுகளை நம்மால் திட்டமிட முடியாது. என்ன நடக்கும் என்று உறுதியாகக் கணிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ”நிர்ணயிக்கக்கூடிய நிகழ்ச்சிகள்” என்று கூறப்படுகின்றன. ஆங்கிலத்தில், இத்தகைய நிகழ்ச்சிகள் ’deterministic events’ என்று அழைக்கப்படுகின்றன. சில நிகழ்வுகள் நம்மால் நிர்ணயிக்க முடியாதவை. அவை ஆங்கிலத்தில் ’stochastic events’ என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒருவன், சனவரி மாதம் 2-ஆம் நாளன்று 1000 வெள்ளிகளை (வெள்ளி - Dollar) ஒருவங்கியில் சேமிப்புக் கணக்கில் (சேமிப்புக் கணக்கு – Savings account) இரண்டு விழுக்காடு வட்டிக்கு முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு சனவரி மாதம் 2- ஆம் நாளன்று அவனுடைய சேமிப்புக் கணக்கில் 1020 வெள்ளிகள் இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கலாம். அவன் எதிர்பார்த்தபடியே 1020 வெள்ளிகள் அவனுடைய சேமிப்புக் கணக்கில் இருக்கும்.  சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்யாமல், அவன் அதே பணத்தைப் பங்குச் சந்தையில் (Stock market) சனவரி 2- ஆம் நாளன்று முதலீடு செய்தால், அடுத்த ஆண்டு சனவரி மாதம் 2-ஆம் நாளன்று அவனுடைய பங்குகளின் மதிப்பு 1000 வெள்ளிகளைவிட அதிகமாக இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். பங்குச் சந்தையின் செயல்திறன் (performance) நிர்ணயிக்க முடியாத ஒன்று. ஒரு நிறுவனத்தின் பங்கின் மதிப்பு, அந்த நிறுவனத்தின் செயல்திறன், அந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் செயல்திறன், நாட்டின் பொருளாதார நிலைமை, உலகப் பொருளாதார நிலைமை போன்ற பல்வேறு நிர்ணயிக்க முடியாத சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், நிறுவனங்களின் பங்குகளின் எதிர்கால மதிப்பைத் துல்லியமாகக் கணிக்க முடியாது என்று புள்ளியியல் (Statistics) அறிஞர்கள் கூறுகின்றனர். பங்குச் சந்தையைப்போல், மனிதர்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் பல நிகழ்ச்சிகள் நிர்ணயிக்க முடியாதவை. சிந்தித்துப் பார்த்தால் மனித வாழ்க்கையே நிர்ணயிக்க முடியாத ஒன்றுதான்(Life itself is a stochastic process.). நேற்று உயிரோடு இருந்தவன் இன்று உயிரோடு இல்லை. “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு(குறள் – 333)” என்று வள்ளுவர் கூறுவதைப்போல், நாளை உயிரோடு இருப்போமா என்று இன்று கூற முடியாது.

நிர்ணயிக்க முடியாத நிகழ்வுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் மனித வாழ்க்கையில் நடைபெறுவது உலக இயற்கை. இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அந்தக் காரணங்களை மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணங்கள் தெரியாவிட்டால் மனிதன் கலக்கமடைகிறான். தனக்குக் காரணங்கள் தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனிதனின் மனம் மறுக்கிறது. ஆகவே, மனிதன் காரணங்களைக் கற்பனை செய்கிறான். உதாரணமாக, சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் எதனால் நடைபெறுகின்றன என்பதற்குக் காரணங்கள் தெரியாதவர்கள் அவை சந்திரனையும் சூரியனையும் இராகு என்னும் பாம்பு விழுங்குவதால் ஏற்படுகின்றன என்று எவரோ சொன்னதை நம்பினார்கள்; இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் அதை நம்புகிறார்கள். இதுபோல், நிர்ணயிக்க முடியாத நிகழ்வுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் மனித வாழ்க்கையில் நடைபெறுவதற்குக் காரணங்கள்  ‘விதி’, ‘கர்மா’ என்று மதங்கள் கூறுகின்றன. ஒருவனுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று இறைவனால் தீர்மானிக்கப் படுகிறது. அதுவே, அவனுடைய விதி. விதி, ‘தலைவிதி’ என்றும் ‘தலையெழுத்து’ என்றும் அழைக்கப்படுகிறது. எவருடைய தலையிலும் எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை! ஒருவன் ஒரு பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அடுத்தப் பிறவியில் நன்மை தீமைகளை அவன் அனுபவிக்கிறான் என்ற கொள்கை ’கர்மா’ அல்லது ’வினைப்பயன்’ என்று அழைக்கப்படுகிறது.

ஊழ் என்ற அதிகாரத்தில், ‘விதி’ ‘கர்மா (வினைப்பயன்)’ போன்ற கருத்துக்களை வள்ளுவர் கூறவில்லை. ”வாய்மை எனப்படுவது யாதெனின்” என்று தொடங்கி வாய்மைக்கு இலக்கணம் வகுத்ததைப்போல் வள்ளுவர் ஊழுக்கு இலக்கணம் வகுக்கவில்லை. நிர்ணயிக்க முடியாத நிகழ்வுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும் மனித வாழ்க்கையில் நடைபெறுவது உலக இயற்கை. அந்த உலக இயற்கையைத்தான் வள்ளுவர் ‘ஊழ்’ என்று குறிப்பிடுகிறார் என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
ஆகூழும் போகூழும்
சில சமயங்களில் நம்முடைய முயற்சி உடனே பலன் அளிக்கலாம்; தேடிய பொருள் எளிதில் கிடைக்கலாம். இது போன்ற சமயங்களில், மனிதர்கள் மனச்சோர்வடையாமல், உற்சாகத்தோடு, கடின உழைப்பால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில், பல காரணங்களினால் மனிதன் மனச்சோர்வு அடையக்கூடும். ஒருவன் பொருள் தேடுவதற்குப் பல முயற்சிகள் செய்தும் பயனில்லாமல் போகலாம்; வேலை தேடுவதற்குப் பல முயற்சிகள் செய்தும் பயனில்லாமல் இருக்கலாம். அவன் முயற்சி செய்கின்றபொழுது அவனுடைய உடல்நிலை சரியில்லாததால் தொடர்ந்து முயற்சி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற சமயங்களில், மனிதன் மனச்சோர்வு அடைவது இயற்கை. ஒருவன் மனச்சோர்வு அடைவதால், அவன் தன்னுடைய முயற்சிகளைக் கைவிடக்கூடிய சூழ்நிலைகூட உருவாகலாம். ஆனால், முயற்சியைக் கைவிட்டால், கையிலுள்ள பொருள் கைவிட்டுப் போகும். சாதகமான சூழ்நிலையை ’ஆகூழ்’ என்றும் பாதகமான சூழ்நிலையை ’போகூழ்’ என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி[1].                                       (குறள் – 371)

மனச்சோர்வின்மைக்கும் மனசோர்வுக்கும் பல காரணங்கள் இருக்கலாம். மனச்சோர்வு அடைவதும் அடையாமல் இருப்பதும் உலக இயற்கை. ஆகவே, ‘ஆகூழ்’ என்பதும் ‘போகூழ்’ என்பதும் உலக இயற்கையைக் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இழவூழும் ஆகலூழும்
மனிதர்கள் மனச்சோர்வின்மையும் மனச்சோர்வும் அடைவது எப்படி உலக இயற்கையோ அதுபோல், சில சமயங்களில் அறிவைப் பயன்படுத்தாமல் செயல்படுவதும், சில சமயங்களில் அறிவைச் சிறப்பாகப் பயன்படுத்துவதும் உலக இயற்கைதான். அறிவைப் பயன்படுத்தாத சூழ்நிலையை  ’இழவூழ்’ என்றும், அறிவைச் சிறப்பாகப் பயன்படுத்தும் சூழ்நிலையை ‘ஆகலூழ்’ என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இழவூழ் வந்தால் அறியாமை வரும் என்பதும் ஆகலூழ் வந்தவிடத்து அறிவைப் பெருக்கும் என்பதும் வள்ளுவரின் கருத்து.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை[2].                                   (குறள் – 372)

நன்றாகப் படித்திருந்தாலும், தற்காலிகமான மறதியால், தேர்வுகளில் சரியான விடை எழுதாமல் தோல்வியுற்றவர்களும், விடை தெரிந்திருந்தாலும், நேர்காணலில் சொல்ல முடியாமல் தோல்வியுற்றவர்களும், நன்றாக வாகனங்களை ஓட்டி அனுபவம் இருந்தாலும், அவசரத்தில், சரியாகச் சிந்திக்காமல் விபத்துகுள்ளானவர்களும் வள்ளுவர் கூறும் இழவூழால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு. அதுபோல், ஒரு ஆபத்தான சூழ்நிலையில் தன் அறிவைப் பயன்படுத்தித் தன்னையோ அல்லது பிறரையோ காப்பாற்றுபவர்கள் ஆகலூழால் பயனடைந்தவர்கள்.


உண்மை அறிவே மிகும்
ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் பல நூல்களைக் கற்றாலும் சில சூழ்நிலைகளில் அந்த நூல்களிலிருந்து தான் கற்றவற்றைப் பயன்படுத்தாமல் தனது இயற்கை அறிவையே பயன்படுத்துவான்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை றிவே மிகும்.                                   (குறள் – 373)

வழக்கறிஞர்கள் குற்றம் புரிவதும், மருத்துவர்கள் தங்கள் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் புகையிலையைப் பயன்படுத்துவதும், மது அருந்துவதும், ஈகை ஒப்புரவு போன்றவற்றைப் பற்றித் திருக்குறளிலிருந்து நன்கு கற்றவர்கள் எவருக்கும் எதையும் அளிக்காமல் இருப்பதும் இந்தக் குறளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டு.

இருவேறு உலகத்து இயற்கை
உலக இயற்கை இரண்டுவிதமாக உள்ளது. செல்வம் உடையவர்களாக இருப்பது ஒருவகை; அறிவுடையவர்களாக இருப்பது மற்றொருவகை.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு[3].                                (குறள் – 374)

ஒருவன் நூல்களைக் கற்றும், கற்றவர்களிடமிருந்து கேட்டும், கல்விக்கூடங்களில் பயின்றும் தெளிந்த அறிவுடையவனாகலாம். ஆனால், ஒருவன் கல்வியும் கேள்வியும் இல்லாமலேயே செல்வந்தனாகலாம். வள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும் அறிஞர்களாக இருந்தவர்கள் பலரும் பொன்னும் பொருளும் பெறுவதற்காகப் புரவலர்களின் கொடையை நம்பி வாழ்ந்ததைக் கண்ட வள்ளுவர் அறிவுடையவனாக இருப்பதும் செல்வந்தனாக இருப்பதும் இருவேறு தன்மைகள் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். அவருடைய கருத்து இன்றும் ஏற்புடையதுதான். கல்லுரிகளுக்குச் சென்று, படித்துப் பட்டங்கள் பெற்றவர்கள் நல்ல பணிகளைப்பெற்று, நல்ல வருமானத்தோடு வசதியாக வாழ்ந்தாலும், அவர்கள் அனைவரும் பெருஞ்செல்வந்தர்கள் என்று கூறமுடியாது. இன்று உலகிலேயே மிகப்பெரிய செல்வந்தர்களாகக் கருதப்படும் மூவர்: ஜெஃப் பேசோஸ்(Jeff Besos), பில் கேட்ஸ்(Bill Gates) மற்றும் மார்க் சக்கர்பர்க்(Mark Zuckerburg). இவர்களுள், ஜெஃப் பேசோஸ் என்பவர் அமேசான்(Amazon) நிறுவனத்தை  நிறுவியவர். இவர் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவர் 121 பில்லியன் டாலர்களுக்குச்($121,000,000,000) சொந்தக்காரர்.  இவரைப்போல் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் பலர். ஆனால், அவர்கள் இவரைப்போல் செல்வந்தர்கள் அல்ல. இளங்கலைப் பட்டப்படிப்பை முடிக்காமலேயே கல்லூரியைவிட்டு வெளியேறி, பில் கேட்ஸ்(Bill Gates) சொந்தமாக மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனத்தை நிறுவி, இன்று 106 பில்லியன் டாலர்களுக்குச்($106,000,000,000) சொந்தக்காரராக உள்ளார். பில் கேட்ஸைப்போல், மார்க் சக்கர்பர்க் இளங்கலைப் பட்டப்படிப்பை முடிக்காமலேயே கல்லூரியைவிட்டு வெளியேறி, ஃபேஸ்புக்(Facebook) நிறுவனத்தை நிறுவி, இன்று 69 பில்லியன் டாலர்களுக்குச்($69,000,000,000) சொந்தக்காரராகத் திகழ்கிறார். இவர்களுடைய சாதனைகளைப் பார்த்தால், ”திருவேறு, தெள்ளியர் ஆதலும் வேறு” என்று வள்ளுவர் கூறுவது முற்றிலும் உண்மை என்பது நன்கு புலனாகிறது.

நல்லவையும் தீயவையும் செல்வமும்
சில சமயங்களில் நன்மைகள் செல்வம் சேகரிப்பதற்குத் தீமையாகவும், தீமைகள் செல்வம் சேகரிப்பதற்கு நன்மையாகவும் (சாதகமாகவும்) அமையும் என்கிறார் வள்ளுவர்.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.                                     (குறள் – 375)


ஒரு நாட்டில் அமைதி நிலவினால், போர்க்கருவிகளும் போருக்குத் தேவையான வாகனங்களையும் உற்பத்தி செய்பவர்களின் வருமானம் குறையும். ஆனால், அந்த நாடு மற்றொரு நாட்டோடு போர்செய்யத் தொடங்கினால், போர்க்கருவிகளும் போருக்குத் தேவையான வாகனங்களையும் உற்பத்தி செய்பவர்களின் வருமானமும் இலாபமும் அதிகரிக்கும். இப்பொழுது (2020 – ஆம் ஆண்டில்), கொரானா என்ற நோய்க்கிருமி உலகெங்கும் பரவிவருகிறது. அதைத் தடுப்பதற்குத் தேவையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்க்கிருமியால் தீமை விளைந்தாலும், அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நிறுவனமும் அதன் பங்குதாரர்களும் மிகப்பெரும் அளவில் இலாபம் அடைவார்கள் என்பது உறுதி.

நமக்குரிய பொருள் நம்மைவிட்டுப் போவதில்லை
ஒருவன் எத்துணை முயற்சி செய்து, அவனுக்கு உரித்தானதல்லாதவற்றைக் காத்தாலும் அவனிடம் அவை தங்கா. ஆனால், அவனுக்கு உரியவற்றை அவன் வெளியே கொண்டுபோய்க் கொட்டினாலும் அவை அவனைவிட்டுப் போகா.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.                                  (குறள் – 376)

ஒருமுறை நான் என்னுடைய குடும்பத்தோடு இந்தியாவிற்கு சென்றபொழுது, எங்களுடைய கடவுச்சீட்டுக்கள்(Passports), பயணச்சீட்டுக்கள்(Arline tickets) ஆகியவற்றை தில்லியில் தொலைத்துவிட்டேன். மறுநாள் என்னை முன்பின் தெரியாத ஒருவர் நான் இருக்குமிடம் தேடிவந்து அவற்றை எங்களிடம் கொடுத்தார். இதுபற்றி விளக்கமாகப் பின்னிணைப்பில்(பின்னிணைப்பு – 1) குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணம் தெரியாததால் அவற்றிற்குக் காரணம் ஊழ் என்று கருதப்படுகிறது போலும்.

தொகுத்தவனும் வகுத்தவனும்
காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாத நிகழ்வுகள் நடைபெறுவது உலக இயற்கை. அந்த உலக இயல்பை ’வகுத்தான்’ என்று உயர்திணையாக உருவகித்து, வகுத்தான் வகுத்த வகைப்படி அல்லாமல் கோடிக்கணக்கில் பொருளை ஈட்டியவர்களும் அப்பொருளால் இன்பம் நுகர இயலாது என்கிறார் வள்ளுவர்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.                      (குறள் – 377)

கோடிக்கணக்கில் பொருள் இருந்தாலும், நோய், மூப்பு, சாக்காடு, கருமித்தனம், களவு போன்ற காரணங்களால் பொருளை அனுபவிக்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். ஆனால், அந்தச் சூழ்நிலை ஏன் உருவாகியது என்பதை அறிய முடியாததால் அதை ஊழ் என்று முடிவு செய்து, ஊழை ’வகுத்தான்’ என்று உருவகிக்கிறார் வள்ளுவர். ஊழை ’வகுத்தான்’ என்று உருவகிப்பது காமத்தை காமன் என்றும், காற்றை வாயு என்று ஒருகடவுளாகவும் உருவகிப்பதைப் போன்றது.

அல்லற் படுவது ஏன்?
நிர்ணயிக்க முடியாத நிகழ்வுகளாலும் எதிர்பாராத நிகழ்வுகளாலும் நன்மைகளும் நடக்கின்றன, தீமைகளும் நடக்கின்றன. அவ்வாறு இருக்கும்பொழுது, ”நன்மைகள் நடக்கும்பொழுது அவற்றை நல்லவை என்று  ஏற்று மனம் மகிழ்பவர்கள், துன்பங்கள் நேரும்பொழுது, அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் துன்பப்படுவது ஏன்?” என்று கேட்கிறார் வள்ளுவர்.


நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?                                (குறள் – 379)

ஊழும் உழைப்பும்
நம்மால் காரணம் காண இயலாத நிகழ்வுகளைவிட (அதாவது ஊழைவிட) வலிமையானவை எவை? அவற்றைத் தடுப்பதற்கு எத்துணை ஆராய்ச்சி செய்தாலும், அவை நம்முன்னே வந்து நிற்கும் என்பது வள்ளுவரின் கருத்து.

ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்[4].                                 (குறள் – 380)


ஊழைத் தடுக்க முயன்றால் அது வந்து முன்னே நிற்கும் என்றுதான் வள்ளுவர் கூறுகிறாரே ஒழிய, அதை வெல்ல முடியாது என்று அவர் கூறவில்லை. தளர்ச்சி இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்தால், வெல்வதற்கரிய ஊழையும் வெல்லலாம் என்று

         ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
         தாழாது உஞற்று பவர்[5].                                    (குறள்- 620)

என்ற குறளில் மனிதனின் விடாமுயற்சியைச் சிறப்பித்துக் கூறுகிறார் வள்ளுவர். “ஊழிற் பெருவலி யாவுள?” என்ற கேள்விக்கு வள்ளுவர் அளிக்கும் விடை, “கடும் உழைப்பு” என்பதுதான்.

முடிவுரை
நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு நம்மால் காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குக் காரணம் தெரியாததால், அவை கடவுளால் நிர்ணயிக்கப்பட்டவை என்றும் அவற்றிற்கு ’ஊழ்’, ‘விதி’, ‘வினைப்பயன்’, ‘கர்மா’ என்றெல்லாம் சிலர் பொருள் கூறுகிறார்கள். ஊழ் என்ற அதிகாரத்தில், ஊழ் என்பது என்ன என்பதற்கு வள்ளுவர் வரையறை எதுவும் கூறவில்லை. அதிலுள்ள குறட்பாக்களை நடுவுநிலையோடு ஆராய்ந்தல், மனித வாழ்க்கையில் எதேச்சையாக, எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடைபெறுவது உலக இயற்கை என்றும், அத்தகைய உலக இயற்கையைத்தான் வள்ளுவர் ‘ஊழ்’ என்று குறிப்பிடுவதாகவும் தோன்றுகிறது. ஊழ் நமக்குச் சாதகமாக இருக்கும்பொழுது  நம்முடைய மனம் சோர்வில்லாமலும், ஊழ் நமக்குப் பாதகமாக இருக்கும்பொழுது நாம் சோம்பலோடு இருந்து பொருளை இழக்கிறோம் என்கிறார் வள்ளுவர். அதுபோல், தீயூழால் நமக்குப் பேதைமை தோன்றுகிறது, நல்லூழால் நமக்கு அறிவு பெருகுகிறது என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஒருவன் எத்துணை நூல்களைக் கற்றிருந்தாலும், ஊழின் தாக்கத்தால், அவனுடைய உண்மையான அறிவே மேம்பட்டுத் தோன்றும் என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது. ஒருவன் அறிவுடையவனாக இருப்பதும் செல்வந்தனாக இருப்பதும் அவனுடைய ஊழைப் பொருத்ததுதான் என்ற கருத்தையும் நாம் குறளில் காண்கிறோம். செல்வத்தைப் பெருக்குவதற்கு  நல்லவை எல்லாம் தீயவையாகவும் தீயவையெல்லாம் நல்லவையாகவும் அமைவது உலக இயற்கை என்று வள்ளுவர் கூறுகிறார். நமக்குச் சொந்தமில்லாத பொருள்களை நம்மால் பாதுகாக்க முடியாது என்றும் நமக்கு உரிய பொருள்களை நாம் வீசி எறிந்தாலும் அவை நம்மைவிட்டுப் போகா என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது. ஒருவன் கோடிக்கணக்கில் பொருள்களைச் சேர்த்தாலும் அவற்றை அவனால் அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதும் உலக இயற்கைதான் என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஊழ் சாதகமாக இருக்கும்பொழுது மகிழ்ச்சி அடைபவர்கள், அது பாதகமாக இருக்கும்பொழுது வருந்துவது ஏன் என்று வள்ளுவர் கேட்கிறார். முடிவாக, எதிர்பாராத நிகழ்ச்சிகளைத் தடுப்பதற்கு எத்துணை முயற்சி செய்தாலும், அவை வந்து நம்முன் நிற்கும் என்று வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார். மற்றொரு குறளில், எதிர்பாராத நிகழ்ச்சிகள் நம் முன்னே வந்து நின்றாலும், இடைவிடாத முயறசியால் வெற்றி பெறலாம் என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது.

துணைநூல்கள்
சாரங்கபாணி, இரா. திருக்குறள் உரைவேற்றுமை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலைநகர்: 1989.
தமிழண்ணல். திருவள்ளுவர் அருளிய திருக்குறள். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை: 1999.
தேவநேயப் பாவாணர், ஞா.  திருக்குறள் தமிழ் மரபுரை. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 600 017.




பின்னிணைப்பு - 1
தொலைந்த பொருள் திரும்பி வந்தது!

1979 – ஆம் ஆண்டு, நான் என் குடும்பத்தோடு அமெரிக்காவிலிருந்து டில்லியில் இருந்த என் அண்ணனை சந்த்திக்கச் சென்றேன். நான் கிளம்புவதற்குச் சில நாட்களுக்குமுன், டில்லி விமான நிலையத்திலிருந்து  டில்லி நகரத்திற்குச் செல்லும் வழியில் உள்ள மரங்களை வெட்டி, சாலையில் குறுக்கே வீழ்த்தி, சீருந்துகளில்(சீருந்து – car) செல்லும் மக்களிடம் உள்ள பொருட்களை கொள்ளைக்காரர்கள், திருடுவதாக தொலைக்காட்சியில் செய்தி வந்தது. என் அண்ணன் இந்திய இராணுவத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார். அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தொலைக்காட்சியில் வந்த செய்தியைப் பற்றிக் கூறினேன். அவர், “அதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை. நான் விமான நிலையத்திற்கு வருகிறேன், என்னுடன் சில இராணுவ வீரர்களும் வருவார்கள். நான் உன்னையும் உன் குடும்பத்தினரையும், எந்தவிதமான தொல்லையும் இல்லாமல் என் வீட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன்.”, என்று கூறி எனக்கு ஆறுதல் அளித்தார்.

நாங்கள் சென்ற விமானம் நள்ளிரவில் டில்லியில் தரையிறங்கியது. நாங்கள், விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தவுடன், என் அண்ணனும் அவரோடு சில இராணுவ வீர்களும் அங்கு நின்று கொண்டிருந்தனர். என் அண்ணன் ஒரு சீருந்தில் வந்திருந்தார். இராணுவ வீரர்கள் இரண்டு ஜீப்பில்(Jeep) வந்திருந்தார்கள். சாமான்களை எல்லாம் ஒரு ஜீப்பில் வைத்துவிட்டு, நானும் என் குடும்பத்தினரும் அண்ணன் வீட்டுக்குச் சென்றோம்.
அன்றிரவு தூக்கம் வரவில்லை. காலை ஐந்துமணி இருக்கும். எங்களுடைய கடவுச்சீட்டுக்கள்(Passports), விமானப் பயணச்சீட்டுக்கள்(Airline Tickets) ஆகியவற்றை ஒரு சிறிய பையில் வைத்திருந்தேன். ஏதோ காரணத்திற்காக, அந்தப் பையைத் தேடினேன். அது கிடைக்கவில்லை. பலமுறை தேடியும் அது கிடைக்கவில்லை. அதைத் தேடும்பொழுது ஏற்பட்ட சத்தத்தினால், என் அண்ணன் விழித்துக்கொண்டார். அவர் என்னிடம் வந்து, “என்ன தேடுகிறாய்?” என்று கேட்டார். நான், “ஒரு பையில், எங்களுடைய கடவுச்சீட்டுக்களையும் பயணச்சீட்டுக்களையும் வைத்திருந்தேன், அந்தப் பையைக் காணவில்லை.”, என்று கூறினேன். என் அண்ணன் எதையும் அதிகமாகப் பொருட்படுத்த மாட்டார். அவர், ”காலையில் தேடிப் பார். கிடைக்கவில்லை என்றால் விமான நிலையத்துக்குப் போய் தேடிப்பார்.” என்று கூறிவிட்டு மீண்டும் உறங்கப் போய்விட்டார்.

மறுநாள் காலை, மீண்டும் தேடியும் அந்தப் பை கிடைக்காததால், விமான நிலையத்திற்குச் சென்றேன். அங்கே சென்று கேட்ட போழுது, அங்குள்ள அதிகாரி ஒருவர், “காணாமற் போன பொருட்கள் கிடைக்குமிடத்திற்குச் (Lost and Found) சென்று, அங்குள்ளவர்களிடம் கேட்குமாறு சொன்னார். அவர் சொன்னபடி, அங்குச் சென்று தேடிப் பார்த்தேன். அங்கும் அந்தப் பை கிடைக்கவில்லை. பின்னர், டில்லி விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அண்ணன் வீட்டுக்குச் சென்றேன்.
நாங்கள் எடுத்துகொண்டு சென்ற பணம் அந்தப் பையில் இல்லை. அது என்னிடமும் என் மனைவியிடமும் இருந்தது. என் மனைவியும் அண்ணியும் டில்லியில் உள்ள கடைகளுக்குச் செல்லவெண்டும் என்று விரும்பினார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். கடையிலிருந்து நாங்கள் மாலை ஆறுமணி அளவில் அண்ணன் வீட்டிற்குத் திரும்பி வந்தோம். என் அண்ணன், மகிழ்ச்சியோடு, “ பிரபாகரன்! உன்னுடைய பை கிடைத்துவிட்டது.” என்று கூறி, என்னிடம் அந்தப் பையைக் கொடுத்தார். அதில் நான் வைத்திருந்த கடவுச்சீட்டுக்களும் பயணச்சீட்டுக்களும் அப்படியே இருந்தன. எனக்கு ஆச்சர்யம் ஒரு பக்கம், மகிழ்ச்சி ஒரு பக்கம். “எப்படிக் கிடைத்தது” என்று அண்ணனிடம் கேட்டேன்.

“நீ அந்தப் பையை ஜீப்பில் உன் பெட்டிகளுக்கு மேல் வைத்துவிட்டாய். ஜீப் ஓடும்பொழுது, அது நழுவி, தெருவில் விழுந்துவிட்டது. அந்த ஜீப்பிற்க்குப் பின்னால் வந்த வாடகைச் சீருந்து ஓட்டுனர்(Taxi Driver) ஒருவர் அது விழுந்ததைப் பார்த்தவுடன், தன்னுடய வாகனத்தை நிறுத்திவிட்டு, இறங்கி, அந்தப் பையை எடுத்தார். அதில் உள்ள பொருள்களைப் பார்த்தார். அவை என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அவர் அந்தப்பையை அவருடையை முதலாளியிடம் கொண்டுபோய் கொடுத்தார். முதலாளி அதிலுள்ள பொருட்களைப் பார்த்தவுடன், அவை யாரோ ஒரு பயணியுடைய ஆவணங்கள்(Documents) என்று புரிந்துகொண்டார். அந்தப்பையை விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் கொடுக்குமாறு அவர் ஓட்டுனரிடம் கூறினார். ஓட்டுனர் அதைக் கொண்டுபோய் காவல் நிலையத்தில் கொடுத்தார். காவல் நிலையத்தில் உள்ளவர்கள், நீ அந்தப்பையைத் தொலைத்துவிட்டதாகவும், நீ என்னோடு தங்கி இருப்பதாகவும் கூறி, என் வீட்டு முகவரியை ஓட்டுனரிடம் கொடுத்தார்கள். அந்த ஓட்டுனர் அந்தப்பையைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்.” என்று என் அண்ணன் விளக்கமாக, நடந்ததைக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை.

நான், “அந்த ஓட்டுனருக்கு ஏதாவது கொடுத்தீர்களா?”, என்று கேட்டேன்.  அண்ணன் மிகவும் தாராள குணம் படைத்தாவர். அவர், “அவருக்கு 200 ரூபாய் பணமும், ஒரு பாட்டில் ஜேக் டேனியலும் (Jack Daniel Whiskey) கொடுத்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறினார்.

என்னுடைய பொருளை நான் என்னுடைய கவனமின்மையால் தொலைத்தாலும், அது என்னைத் தேடிவந்து விட்டது!

இது போன்ற நிகழ்ச்சி மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியைப் பற்றி நினைக்கும்பொழுதெல்லாம், எனக்கு,

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.                              (குறள் – 376)

என்ற குறள்தான் ஞாபகம் வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் அளிக்க முடியாது. இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் ஏதேச்சையாக நடைபெறும் நிகழ்ச்சிகள் (unexpected random events) என்று தான் கூறமுடியும். இது போன்ற நிகழ்ச்சிகளைத்தான் வள்ளுவர் ஊழ் என்கிறார் போலும்.



[1] . அசைவின்மை – தளர்ச்சியின்மை; மடி – சோம்பேறித்தனம்
[2] . அகற்றுதல் – பெருக்குதல்; கடை - இடம்
[3] . திரு – செல்வம்; தெள்ளியர் – அறிவுடையோர்
[4] . சூழ்தல் – ஆராய்தல்
[5] . உப்பக்கம் – முதுகு; உப்பக்கம் காணுதல் – வெல்லுதல்; உலைவு – ஊக்கக் குறைவு; உஞற்றுதல் – ஊக்கி முயலுதல்